S. Ramakrishnan's Blog, page 10
April 14, 2025
ஸ்வரித்தின் கவிதை
அமெரிக்காவில் வாழும் 13 வயதான ஆட்டிச நிலையாளர் ஸ்வரித் கோபாலன் சிறப்பாகக் கவிதைகள் எழுதுகிறார். அவரது ஆங்கிலக் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘Loud Echoes of the Soul’ என அவரது ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறந்த கவிதைக்காக இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் விருதைப் பெற்றிருக்கிறார்.

அவரது கவிதை ஒன்றின் தமிழாக்கம் பெரியார் பிஞ்சு இதழில் வெளியாகியுள்ளது. நல்ல கவிதை. நேர்த்தியான மொழியாக்கம்


ஸ்வரித் இளையராஜா இசையின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். தனக்கு விருப்பமான திரைப்படங்கள் குறித்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் ஸ்வரித் தொடர்ந்து சிறப்பாக எழுதிவருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
ஸ்வரித் கோபாலன் தன்னைப் பற்றி எழுதிய குறிப்பு
••

நான் ஸ்வரித், 13 வயதான ஆட்டிச நிலையாளர். பேச முடியாத . உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு நான் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்கிறேன்.
எனக்கும் மற்றவர்களைப் போலவே வலுவான உணர்வுத் தேவைகள் இருக்கின்றன. ஆனால் அவை வித்தியாசமாக வெளிப்படுகின்றன. பிறருடன் தொடர்பில்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. எனக்கு நரம்பியல் பொதுவான (நியூரோடிபிகல்) மற்றும் நரம்பியல் வேறுபட்ட (நியூரோடைவர்ஸ்) நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய தொடர்பு முறைகளும் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபட்டவையாக இருந்தாலும், அனைவரும் என்னைச் சம அளவில் புரிந்து கொள்கிறார்கள்; சம அளவில் நட்பையும் அன்பையும் தருகிறார்கள்; என்னை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.
என் போராட்டம், உணர்வுகள் இல்லாமையில் அல்ல; சிந்தனையும் செயலும் ஒருங்கிணையாத வெளிப்பாடே எனது சவால்.
எல்லோரையும் போல் இயல்பாகப் பேசுவதையும் தாண்டி உறவுத் தொடர்புகள் இருக்கின்றன என்பது என் நம்பிக்கை.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஆட்டிச நிலையாளர்களுக்குச் சிக்கல் இருப்பதாக இருக்கும் ஆழமான தவறான புரிதலை பெற்றோரும், எங்களைப் பராமரிப்பவர்களும் எதிர்த்துப் பேசுங்கள்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளைத் தயவுசெய்து உருவாக்குங்கள்.
எங்கள் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படுவதற்கு அவை பேச்சின் மூலம் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமா?
••
எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை ஆட்டிச அனுபவம் கொண்டவர்களே தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும். ஆனால், சமூகம் வகுத்துள்ள “தலைவருக்கான’ வரையறைகள் எங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. தலைமைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பெரும்பாலும் எங்களால் எட்ட முடியாத பண்புகளையும் திறன்களையும் சார்ந்தது. எங்களை உள்ளடக்கி ஏற்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் தவறான பிரதிநிதித்துவத்திற்கே வழிவகுக்கின்றன.
தலைமையை மீண்டும் வரையறுப்போம்! எங்களிடம் அனுபவமும், தெளிவான பார்வையும் இருக்கும்போது – நாங்கள் ஏன் பின்னணியில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதிக்கும் முடிவுகளில் மட்டுமல்ல, எதிலும் நாங்கள் வாகனத்தை ஓட்டுபவர்களாக இருக்க வேண்டும், பயணிகளாக அல்ல.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றியது எதுவும் இல்லை!”
உண்மையான அனுபவங்களை எப்போது தலைமை பிரதிபலிக்கத் தொடங்கும்?
••
தூத்துக்குடியில்
எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார்
நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள்
பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக மனிதர்கள் அமைப்பின் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி





.
நிரந்தர விருந்தாளி
ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை ஒன்றில் ஸோரன்டினோ குடும்பத்தினர் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுடன் நட்பாகப் பழகுவதற்காகச் சிறிய பரிசு ஒன்றை அளிக்கிறார்கள். உடனே பக்கத்துவீட்டு வில்ஹெல்ம் அதை விடப் பெரிய பரிசு ஒன்றை திரும்ப அனுப்பி வைக்கிறார். அது போட்டி மனப்பான்மையை உருவாக்கிடவே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பரிசுகளை மாறி மாறிக் கொடுத்துக் கொள்கிறார்கள். முடிவில் அது பேரழிவினை உருவாக்குகிறது.
பக்கத்துவீட்டுக்காரரின் நட்பு பற்றிய இந்த வேடிக்கையான கதையின் எதிர்வடிவம் போலவே ஜே சாங்கின் 4PM கொரிய திரைப்படத்தினை உணர்ந்தேன். மாறுபட்ட கதைக்களனும் கதாபாத்திரங்களும் கொண்ட திரைப்படம். Amélie Nothomb எழுதிய The Stranger Next Door கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது

ஒய்வு பெற்ற தத்துவப் பேராசிரியர் ஜங்-இன் தனது மனைவி ஹியூன்-சூக்கோடு சியோலின் நகரவாழ்க்கையிலிருந்து விடுபட்டு கிராமப்புறத்திலுள்ள புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார். அழகான மரவீடு. இயற்கையோடு இணைந்த சுற்றுப்புறம். அவர்கள் வீட்டின் அருகே ஒரு பழைய வீடு தென்படுகிறது. அதில் யார் வசிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அந்த வீட்டில் விளக்கு கூட எரிவதில்லை என்பதைக் காணுகிறார்கள்.
மறுநாள் அந்த வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டுவதற்காகச் செல்கிறார்கள். வீடு பூட்டிக்கிடக்கிறது. ஆனால் உள்ளே யாரோ இருப்பதை உணருகிறார்கள். ஆகவே மாலை நான்கு மணிக்கு தேநீர் விருந்திற்கு வரும்படி அழைப்புக் கடிதம் ஒன்றினை கதவிடுக்கில் வைத்துவிட்டு வருகிறார்கள்
அன்று மாலை நான்கு மணிக்கு பேராசிரியரின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. பக்கத்துவீட்டில் வசிக்கும் டாக்டர் பார்க் யூக்-நாம் வெளியே நிற்கிறார். அவரது தோற்றமே விசித்திரமாக உள்ளது.
அவரை வீட்டிற்குள் அழைத்து இருக்கையில் அமர வைத்து தேநீர் தருகிறார்கள். அவர் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. தேநீரை குடிக்கவுமில்லை. ஏதோ யோசனையில் அமர்ந்தபடி அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன கேட்டாலும் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் பேசுகிறார். அவரை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அவரோ இரண்டு மணி நேரம் தியானம் செய்வது போல மௌனமாக அமர்ந்திருந்து விட்டு ஆறுமணிக்கு கிளம்பி போய்விடுகிறார்.
அவர் ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொண்டார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இரவில் அதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள்.

மறுநாளும் அதே நான்கு மணிக்கு அழைப்பு மணி ஒலிக்கிறது. அதே டாக்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். இன்றைக்கும் அதே இருக்கையில் அமர்ந்தபடி தேநீர் கேட்கிறார். அவர்களின் கேள்விக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேசுகிறார். மற்றபடி அதே தியானநிலையில் இரண்டு மணி நேரம் அமர்ந்துவிட்டு புறப்படுகிறார். எதற்காக இரண்டாவது நாள் அவர்களைத் தேடி வந்தார் என்று அவர்களுக்குக் குழப்பமாகிறது
அதன்பிறகு தினமும் மாலை நான்குமணிக்கு டாக்டர் பார்க் யூக்-நாம் அவர்கள் வீட்டுக் கதவை தட்டுகிறார். உரிமையோடு உள்ளே வந்து உட்கார்ந்து கொள்கிறார். வெறித்துப் பார்க்கிறார். இரண்டு மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு வெளியேறி போய்விடுகிறார். . இந்தத் தொல்லையை அவர்களால் சமாளிக்கமுடியவில்லை. அவரை எப்படித் துரத்துவது என்றும் தெரியவில்லை. அவர் நிரந்தர விருந்தாளியாக மாறிவிடுகிறார்.
இந்தத் தொந்தரவால் பேராசிரியரின் மனைவி ஹியூன் பயந்து போகிறார் ஒரு வேளை டாக்டர் ஒரு சைகோவாக இருக்ககூடுமோ என நினைத்துப் புலம்புகிறாள்.

டாக்டர் யூக்-நாமை வெளியே அனுப்பவோ அல்லது வருவதை நிறுத்த சொல்லவோ பேராசிரியர் ஜங்-இன் மிகவும் தயங்குகிறார். எனவே ஒரு நாள் அவர்கள் மதியம் மூன்று மணிக்கு அருகிலுள்ள காட்டிற்குள் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்கிறார்கள். அவர்கள் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொள்கிறது. அவசரமாக வீடு திரும்பும் போது டாக்டர் மழையோடு அவர்கள் வீட்டின் முன்பு காத்துநிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதன் மறுநாள் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் பேராசிரியர் சொன்னாலும் டாக்டர் கேட்பதில்லை. உரிமையோடு அவர்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்கிறார். தேநீர் வேண்டுமெனக் கேட்கிறார். டாக்டரின் அச்சமூட்டும் மௌனத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் பேராசிரியரின் வளர்ப்பு மகள் ஊர் திரும்புகிறாள். அவள் தங்களின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் பார்க் யூக்-நாமின் விநோத நடவடிக்கைகளைக் கண்டு எரிச்சல் அடைகிறாள். தந்தை ஏன் இதனை அனுமதிக்கிறார் எனக் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி போய்விடுகிறாள்.
இதனைத் தாங்க முடியாத பேராசிரியர் ஆத்திரத்தில் பார்க் யூக்-நாமைத் தாக்குகிறார். அப்படியும் டாக்டரின் வருகையைத் தடுக்க முடியவில்லை. இப்போது பேராசிரியர் முழுவதுமாக வன்முறையைக் கையாளத் துவங்குகிறார். அதன் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
நான்கு மணி ஆனவுடன் பேராசிரியரும் அவர் மனைவியும் அடையும் பதட்டத்தைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தனது கோபத்தை வெளிப்படுத்த டாக்டருடன் தொடர்பில்லாத தத்துவ விஷயங்களைப் பேராசிரியர் பேசுகிறார். டாக்டர் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது போலவே கடைசிக்காட்சியில் காரில் வரும் போது வெளிப்படும் டாக்டரின் சிரிப்பு நம்மையும் அச்சப்பட வைக்கிறது. படத்தில் நம்மை அதிகம் கவருபவர் அந்த டாக்டரே.
டாக்டர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கும் சரியான காரணமிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் பேராசிரியரின் வகுப்பறைக்காட்சியும் கார் விபத்தும் ஒட்டுமொத்த படத்திற்கான திறவுகோல் போலிருப்பதாக உணர்ந்தேன். அன்பான விருந்தோம்பல் எப்படித் தொந்தரவான மற்றும் பதட்டமான அனுபவமாக மாறிவிடக்கூடும் என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது.
படத்தில் வரும் பேராசிரியர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் தீவிர வாசகர். போர்ஹெஸ் பற்றி ஒரு காட்சியில் பேசுகிறார். போர்ஹெஸின் கதையில் வரும் புதிர்பாதை போன்றதே டாக்டரின் நான்கு மணி வருகையும்.
••
April 13, 2025
நாவல்வாசிகள் /2
எனது புதிய பத்தியான நாவல்வாசிகளில் புகழ்பெற்ற வங்க நாவலான நீலகண்டப் பறவையைத் தேடி குறித்து எழுதியிருக்கிறேன்.

பிறந்தநாள் விழா/ புகைப்படங்கள்
நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற எனது பிறந்த நாள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நிறைய நண்பர்கள், வாசகர்கள் வந்திருந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி











April 12, 2025
நேர்காணல்
இந்து தமிழ் திசை இதழில் நேற்று வெளியான எனது நேர்காணல்

நன்றி
இந்து தமிழ் திசை நாளிதழ்
மண்குதிரை.
பிறந்தநாள் விழா
நாளைக் காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் மழைமான் சார்பில் எனது பிறந்தநாள் விழா சந்திப்பு நடைபெறுகிறது
இதில் எனது நான்கு நூல்கள் வெளியிடப்படுகின்றன
ரஷ்ய காதல் கதைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன்
வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறுகிறது
அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்


April 11, 2025
நன்றி

பாரதிய பாஷா விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
உங்களின் அன்பும் ஆசியும் தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது.
இந்தத் தருணத்தில் எனது பெற்றோர்கள், மனைவி பிள்ளைகள், ஆசிரியர்கள். சகோதர சகோதரிகள், நண்பர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
உங்களின் குவிந்த கரங்கள் தான் எனது எழுத்தெனும் சுடரைப் பாதுகாக்கிறது.
விருதுச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்டு என்னைக் கௌரவப்படுத்திய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், மற்றும் சமூக ஊடக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
April 10, 2025
முதல்வரின் வாழ்த்துச் செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி


••
தமிழக முதல்வரின் அன்பான வாழ்த்துக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
