குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்
கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.
கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.
கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.
கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.
கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.
உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.
அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.
அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்
கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.
ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.
இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.
கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.
முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.
ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்
கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
