S. Ramakrishnan's Blog, page 11

April 10, 2025

பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எனக்கு வழங்கப்படுகிறது.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்திய அளவில் சிறந்த இலக்கிய வாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கிறது.

2025ம் ஆண்டிற்கான விருதிற்கு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றேன். 

இது எனது வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ 1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2025 04:02

பிறந்த நாள் கொண்டாட்டம்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 13 ஞாயிறு காலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நண்பர்கள் ஒன்று கூடும் விழா நடைபெறுகிறது.

இதில் எனது மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன

பிரையில் வடிவில் தபால்பெட்டி எழுதிய கடிதம் நூல் வெளியாகிறது.

இந்த நிகழ்வை முன்னிட்டு ரஷ்ய காதல் கதைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறேன்.

வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறுகிறது.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2025 02:57

April 8, 2025

குற்றமுகங்கள் -8 லாந்தம் எனும் இரட்டை தழும்பன்

1838ம் ஆண்டின் கிறிஸ்துமஸிற்கு முந்திய நாள் காலையில் ஜோசப் லாந்தம் ஹோல்போர்னின் கேரி தெருவில் இருந்த தி செவன் ஸ்டார்ஸ் பப்பிற்குக் குடிப்பதற்காகச் சென்றான். அப்போது அவனுக்கு வயது முப்பத்திரெண்டு.

அவன் குட்டையாகவும், தடிமனாகவும், செம்பட்டை தாடியுடனும், சதைப்பற்றுள்ள முகத்துடனும் இருந்தான். லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிய ஒரே பப் அதுவே.

அந்த மதுவிடுதி போட்டிகளுக்குப் பெயர் போனது. குடிகாரர்களின் புதைகுழி என்று அதனை அழைத்தார்கள்.

ஜோசப் லாந்தம் நாய்களுக்கான கழுத்துபட்டிகளை விற்கும் தெருவோர விற்பனையாளன். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் குடிப்பதிலே செலவழித்துவிடுவான். அவனுக்கு ஆறு குழந்தைகள் இருந்தார்கள். அவரது மனைவி கிளாராவுக்குக் கண்பார்வை கிடையாது. அவனை விடவும் ஐந்து வயது மூத்தவள். அவளது அண்ணன் துணிகளுக்குச் சாயமிடும் பட்டறை வைத்திருந்தார். சாயமிட்ட துணிகளை அலசிப் போடும் வேலையைக் கிளாரா செய்து வந்தாள். கிளாராவின் அண்ணன் உதவியால் தான் லாந்தமின் குடும்பம் நடந்து வந்தது.

ஜோசப் லாந்தம் சேணம் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவன். ஆகவே சிறுவயதிலே தோல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தான். பதினாறு வயதில் அவனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. தினந்தோறும் மயங்கி விழும் வரை குடிப்பான். ஓட்டகச்சிவிங்கிகள் நின்று கொண்டு உறங்குவதைப் போதை மிகுதியில் விளக்குக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு லாந்தம் உறங்கிவிடுவதுண்டு.

ஐரீஷ் மதுவிடுதிகளில் பியர் குடிக்கும் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் எப்போதும் லாந்தம் தான் வெல்லுவான்.

மணற்கடிகாரத்தினுள் மேலிருந்து கீழாக விழுந்து கொண்டிருக்கும் மணல்துகளின் விதியைப் போன்றதே அவனது வாழ்க்கை.

ஒரு நாள் குடிச்சண்டை ஒன்றில் அவனது இடது புருவத்தில் ஒருவன் கத்தியால் வெட்டினான். அந்தக் காயம் ஆழமானது. பெரிய வடுவை உருவாக்கியது. லாந்தம் தனது புருவத்தைத் துண்டித்த ஆளுடன் சமரசம் செய்து கொண்டு அவனது தயவிலே குடிக்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் போதை மிகுதியில் ஒரு பாட்டில் மதுவிற்காகத் தனது வலது புருவத்தையும் வெட்டிக் கொள்ள லாந்தம் சம்மதம் தெரிவித்தான்.

இடது புருவத்தைத் துண்டித்தவனே வலது புருவத்தினையும் குறுவாளால் வெட்டினான். தனது காயத்தை மறந்து போட்டியில் வென்ற மதுவை லாந்தம் ஆசையாகக் குடித்துவிட்டு நடனமாடினான்.

போதை முற்றியபடி பின்னிரவில் அவன் தனது வீட்டுக்கதவை தட்டும் போது அவனது மனைவி “ஒரு நாள் நீ காற்றில் மறைந்து போய்விடுவாய்“ என்று சபித்தபடியே கதவை திறந்துவிடுவாள். அவளது பருத்த கைகளைப் பற்றிக் கொண்டு “பொன்னிற அழகியே“ என்று முத்தமிட முயலுவான். அவளோ “தொடாதே பன்றியே“ என்றபடியே அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்லுவாள்.

கிறிஸ்துமஸிற்கு முந்திய தினம் ஆப்பிரிக்கப் பயணி ஒருவனுக்கும் அவனுக்கும் மதுவிடுதியில் போட்டி உருவானது. அந்த ஆப்பிரிக்கப் பயணியை விடத் தன்னால் அதிகம் குடிக்க முடியும் என்பதை லாந்தம் நிரூபித்துக் காட்டினான். நான்கு வெள்ளிக்காசுகள் அவன் கையில் கிடைத்தன. தனது பிள்ளைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என நாணயங்களைத் தனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ஆனால் அன்று அவன் வீடு திரும்பவில்லை.

மிதமிஞ்சிய போதையில் விளக்குகம்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டபடி உறங்கிப் போனான். அவனை எப்படிக் கப்பலுக்குக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் லாந்தம் கண்விழித்த போது கிழக்கந்திய கம்பெனியின் சார்பில் இந்தியாவிற்குச் செல்லும் சிசிலியா கப்பலில் இருந்தான். போதையில் அது கனவா அல்லது நிஜமா எனப் புரியவில்லை. எழுந்து கொள்ள முயன்ற போது தனது கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதனை உதற முடியவில்லை. அவனைப் போலவே சிலர் அந்த இருட்டறையில் கட்டிப்போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. எங்கே கொண்டு செல்கிறார்கள் எனப் புரியாமல் குழப்பம் அடைந்தான்.

தனது கோபத்தை வெளிப்படுத்தப் பலமாகக் கூச்சலிட்டான். யாரும் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை

இரவில் ஒரு கிழவன் மரத்தாலான தள்ளுவண்டி ஒன்றை உருட்டியபடி அவர்களை நோக்கி வந்தான். தேவதை கதைகளில் அது போன்ற உருவம் குகையில் வசிப்பதாக லாந்தம் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறான். கிழவனின் மூக்குக் கிழிபட்டிருந்தது. கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். தள்ளுவண்டியிலிருந்து உலர்ந்த ரொட்டிதுண்டுகளில் ஒன்றையும் ஒரு குவளை மதுவையும் லாந்தமிற்குக் கொடுத்தான். பெரும்பசியும் நாவறட்சியும் கொண்டிருந்த லாந்தம் அந்த மதுவை குடித்துத் தீர்த்துவிட்டு இன்னும் வேண்டுமென்றான். கிழவன் அக்குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.

“இந்தக் கப்பல் எங்கே போகிறது“ எனக் கிழவனிடம் லாந்தம் கேட்டான்

“இந்தியா.“

“அது எங்கேயிருக்கிறது“

“எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே கோழிகள் பொன்முட்டையிடும் என்கிறார்கள்“.

“அது நிஜம் தான் என்றால் அந்தத் தங்க முட்டைகளைத் திருடிக் கொண்டு விடுவேன்“

“உன்னால் ஒருபோதும் வீடு திரும்ப முடியாது. குருட்டுவிதியால் உன் வாழ்க்கை எழுதப்பட்டுவிட்டது“ என்றபடி அந்தக் கிழவன் தனது மரவண்டியை தள்ளிக் கொண்டு சென்றான்.

பிடிக்காத பயணத்தில் தொலைவு நீண்டுவிடுகிறது. திடீரெனத் தனது வீடு நட்சத்திரங்களுக்கு அப்பால் எங்கோ மறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கல்கத்தா துறைமுகத்திற்குச் சிசிலியா கப்பல் வந்து நின்றபோது தொலைவில் தெரியும் கட்டிடங்களையும் எண்ணிக்கையற்ற காகங்களையும் ஒரே நேரத்தில் லாந்தம் பார்த்தான். அத்தனை காகங்களையும் கொல்ல வேண்டும் போலிருந்தது. துறைமுகத்தில் அவனது பெயரையும் அங்க அடையாளங்களையும் பதிவேட்டில் குறித்துக் கொண்டார்கள்.

இந்தியாவிலிருந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்குத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் அவனைப் போலப் பலரையும் இங்கிலாந்திலிருந்து கடத்திக் கொண்டு சிப்பாயாக மாற்றுகிறார்கள் என்பதை லாந்தம் தெரிந்து கொண்டான்.

இனி இங்கிலாந்து திரும்பிச் செல்வது எளிதானதில்லை. அதற்குப் பதிலாகச் சிப்பாயாக மாறி தங்க முட்டையிடும் கோழிகளை வேட்டையாடலாம் என முடிவு செய்து கொண்டான்.

லாந்தம் கல்கத்தாவின் இரண்டாவது ராணுவ பிரிவில் சேர்க்கப்பட்டான். சிப்பாய்களுக்கு அளிக்கபடும் கடுமையான உடற்பயிற்சிகளை அவனால் செய்ய முடியவில்லை. ராணுவ கட்டுபாடும் தண்டனைகளும் அவனை ஆத்திரப்படுத்தின. ராணுவத்திலிருந்து தப்பியோட முயன்று பிடிபட்ட போது அடியும் உதையும் கிடைத்தது. பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாகியது. வயிறு அவனது மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டது. எட்டுமாதப் பயிற்சிக்கு பின்பு அவன் சிட்டகாங் காலாட்படையின் பணிக்கு அனுப்பி வைக்கபட்டான்.

குல்னா என்ற வங்காளியின் நட்பு அங்கே தான் கிடைத்தது. அவன் தான் லாந்தமை குற்றம் செய்யத் தூண்டியவன். இருவரும் இணைந்து சிப்பாய்களுக்கான போர்வை, சோப் மற்றும் உணவுப் பொருட்களைத் திருடி விற்றார்கள். கிடைத்த பணத்தைக் கொண்டு சூதாடினார்கள். குடித்தார்கள். ஒரு நாள் அவர்கள் கண்டுபிடிக்கபட்டதோடு உயிரோடு புதைக்கும்படியாகத் தண்டனை விதிக்கபட்டார்கள்.

இருவரையும் ஆற்றோரப்பகுதியில் தலைமட்டும் வெளியே தெரிய மணலில் புதைத்தார்கள். லாந்தம் ஒரு நாயால் காப்பாற்றபட்டான் என்றார்கள். அதன்பிறகு அவனது வாழ்க்கை திசைமாறியது.

தன்னைப் போலவே இந்தியாவிற்கு ஏமாற்றி அழைத்துவரப்பட்ட சிப்பாய்கள் பலரையும் லாந்தம் ஒன்று சேர்ந்தான். அவர்கள் ஒரு குற்றகும்பலாக உருவெடுத்தார்கள்.

லாந்தனும் அவனது கும்பலும் தபால் அலுவலங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். அந்த நாட்களில் தபால் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு வசதி குறைவாக இருந்தது. ஆனால் சிப்பாய்களுக்கான சம்பளம் மற்றும் கட்டுமானங்களுக்கான பொருட்கள் வாங்குவதற்கான பணம் தபால் மூலமே அனுப்பி வைக்கபட்டது. ஆகவே லாந்தமும் அவனது கும்பலும் தபால் அலுவலகத்தை எளிதாகக் கொள்ளையிட்டுப் பணத்தை அள்ளிச் சென்றார்கள்.

லாந்தம் ஒவ்வொரு கொள்ளையின் போதும் அங்கிருந்த தபால்கள் எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்தினான். அதில் சில ராணுவ அதிகாரிகள் லண்டனில் வாழும் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதங்கள். அவற்றை எரிப்பதன் மூலம் தன்னைப் போலவே அவர்களும் மனைவி பிள்ளைகளிடமிருந்து துண்டிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுவே அவர்களுக்குத் தரும் தண்டனையாகக் கருதினான்.

தபால் அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கபட்ட பணத்தில் லாந்தம் தெருநாய்களுக்கு உணவளித்தான். நூறு நாய்கள் கொண்ட பெரிய நாய்கூட்டத்தையே உருவாக்கினான் என்றார்கள். நாய்களின் கால்களில் சலங்கை கட்டியிருந்தான். அவை மணியோசையுடன் தெருவில் அலைந்தன என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்

ஜாதவ்பூர் தபால் அலுவலகக் கொள்ளையிடச் சென்ற போது லாந்தம் பிடிபட்டான். அவனுடன் இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டார்கள். தான் அதுவரை கொள்ளையடித்த பணத்தைப் புதைமேடு ஒன்றினுள் புதைத்து வைத்துள்ளதாகச் சொல்லி காவலர்களைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றான். அவன் சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. உடைந்த கபாலம் மட்டுமே கிடைத்தது. அவனை மிரட்டிக் கேட்டதும் போதையில் அந்தப் பணத்தை எங்கே புதைத்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தான் லாந்தம்.

விசாரணை தேவையில்லை எனக் கர்னல் ஜேம்ஸ் முடிவு செய்து அங்கேயே அவர்களைத் தூக்கிலிட ஆணையிட்டார். தூக்கிலிடுவதற்கு முன்பாக அவன் குடிப்பதற்கு ஒரு குவளை மது வேண்டும் என்று கேட்டான். அவனது கோரிக்கையைக் கர்னல் ஏற்கவில்லை.

ஆறு வேப்பமரங்களில் ஆளுக்கு ஒருவராகத் தூக்கிலிட நிறுத்தப்பட்டார்கள். தூக்குகயிறு கிடைக்கவில்லை என்பதால் காளை மாடுகளைக் கட்டும் கயிற்றைப் பயன்படுத்தினார்கள்.

தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டும் போது லாந்தம் “தங்க முட்டையிடும் கோழி உண்மையில் இருக்கிறதா“ என்று கேட்டான்.

“நீ செத்து பாதாள லோகத்திற்குப் போ. அங்கே அந்தக் கோழியைக் காண முடியும்“ என்று தூக்கிலிடுபவன் கேலியாகச் சொன்னான்

லாந்தம் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கில் போடும் போது நின்றபடியே உறங்கிவிட்டான் என்றார்கள். ஒருவேளை லாந்தம் தனது கனவில் தங்க முட்டையிடும் கோழியைத் துரத்திக் கொண்டிருக்கக் கூடும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2025 02:46

April 4, 2025

நிமித்தம் / ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது நிமித்தம் நாவலை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

Unremembered நூல் ஏப்ரல் 13 ஞாயிறு காலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2025 00:45

April 3, 2025

தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் The Browless Dolls வெளியாகிறது.

இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

இந்தக் கதைகள் பல்வேறு இணைய இதழ்களிலும் ஆங்கில இலக்கிய இதழ்களிலும் வெளியானவை.

இந்த நூலின் வெளியீட்டு விழா ஏப்ரல் 13 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2025 01:08

April 2, 2025

அனுபவங்களும் அறிவாற்றலும்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கட்டுரைகளைக் காலச்சுவடு மற்றும் காலம் இதழ்களில் படித்திருக்கிறேன்.

அந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அப்படியே நியூயார்க்கரிலோ அல்லது தி கார்டியன் இதழிலோ வெளியிட்டிருப்பார்கள். அபாரமான எழுத்து. குறிப்பாக அவரது புலமை மற்றும் எழுத்து நடை வியப்பூட்டக்கூடியது. மெல்லிய கேலியோடு ஒன்றைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது.

அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு முக்கியக் காரணம் அவரும் ஒரு புத்தக விரும்பி.

இலக்கியம், கலை, மொழி, பண்பாடு, வரலாறு எனப் பல்வேறு துறை சார்ந்து படிக்கக் கூடியவர். படித்த புத்தகங்கள் மற்றும் சர்வதேச இலக்கியப் போக்குகள், விருதுகள் குறித்துச் சிறப்பாக எழுதுகிறவர். அவரது தமிழ் புலமையும் நிகரற்றது.

இங்கிலாந்தின் அரசியல், பண்பாடு பற்றிய கட்டுரையாக இருந்தாலும் சமகால ஆங்கிலப் படைப்புகள், விருதுகள் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் அவர் குறிப்பிடும் அரிய தகவல்கள் மற்றும் புத்தகங்கள் அவரது ஆழ்ந்த வாசிப்பின் வெளிப்பாடு என்றே சொல்வேன்.

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு 2021ல் வெளியானது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். இதனை 2023ல் ஒரு புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். மூன்று முறை படித்துவிட்டேன். ஆனாலும் பழைய புத்தகமாகவில்லை. இப்போதும் அதிலுள்ள ஏதாவது ஒரு கட்டுரையை ரசித்துப் படிக்கிறேன்.

இதில் 23 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் புத்தகங்களின் பெயர்களை மட்டும் தனியே வரிசைப்படுத்தினால் நிச்சயம் நூறுக்கும் அதிகமாகயிருக்கும். அத்தனையும் அபூர்வமான புத்தகங்கள்.

ஆறுதல் அணங்குகள் பற்றிய கட்டுரையில் ஜப்பானிய சுகப்பெண்களைப் பற்றியும் அவர்களின் பின்னுள்ள கசப்பான வரலாற்று உண்மைகளையும் எழுதியிருக்கிறார்.

இது போன்றதே ஆக்ஸ்போர்ட் அகராதி உருவான விதம் பற்றிய கட்டுரை. அதில் குறிப்பிடப்படும் The Professor and the Madman என்ற புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன்.

அகராதியியல் குறித்த சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் அந்தக் கட்டுரையில் “அகராதிகளின் ஆக்கமே ஒரு காலனியச் செயல்பாடு தான். நாடுகள், மக்களுக்குப் பதிலாக வார்த்தைகள் காலனியமாக்கபடுகின்றன“ என்று குறிப்பிடுகிறார். இந்தப் பார்வையே அவரை முக்கியமானவராக்குகிறது.  

ஆங்கில அகராதியை உருவாக்கும் போது சொற்களஞ்சியப் பணியில் ஈடுபட்ட பெண்களின் பங்களிப்பு பற்றியும், ஜான்சன் அகராதியில் அவருடன் இணைந்து பணியாற்றிய ஹெஸ்டர் பியோசி என்ற பெண்ணைப் பற்றியும்  குறிப்பிடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆண்களின் பெயரிலே அகராதிகள் வெளியானதன் பின்னுள்ள அரசியலைச் சுட்டிக்காட்டுகிறார்

அசோகமித்ரனை சந்தித்த நிகழ்வைப் பற்றிய கட்டுரையில் வெளிப்படும் அவரது கேலியின் சிறிய உதாரணமிது

“சும்மா தான் வந்தேன்’ என்பது யாழ்ப்பாணத் தமிழரின் கலாசாரக் கூறுபாடுகளில் ஒன்று. இந்தச் சொல் சார்ந்த உத்தியின் தாற்பரியத்தை மானிடவியலாளர்கள் கட்டயம் ஆராய வேண்டும்“

No One writes Back என்ற கொரிய நாவலை பற்றிய அறிமுகத்தில் இரண்டு பக்கத்திற்குள்ளாக நாவலின் சாரத்தைத் தெளிவாக விளக்கிவிடுகிறார். பல்கலைகழகத்தில் இவரிடம் பாடம் கற்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்தத் தொகுப்பிலுள்ள எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரையும் இருபெண்கள் இரு நாவல்கள் கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

எழுத்தாளர்கள். இலக்கிய வாசகர்கள் இவரது எல்லா நூல்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் புரட்டும் போது விருப்பமான பேராசிரியரிடம் பாடம் கற்பது போன்ற மகிழ்ச்சி உருவாகும் என்பது உறுதி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 06:32

April 1, 2025

துயரை ஆடையாக நெய்பவள்

ஹோமரின் இதிகாசங்களான இலியட் மற்றும் ஒடிஸி ஆகிய இரண்டும் பல்வேறு முறை திரைப்படமாக்கபட்டுள்ளன.

டிராய் வீழ்ச்சிக்குப் பிறகு இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்பும் நீண்ட கடற்பயணத்தையும் அதில் சந்தித்த இன்னல்களையும் ஒடிஸி விவரிக்கிறது

1955 இல் கிர்க் டக்ளஸ் நடித்த யுலிஸஸில் இருந்து மாறுபட்டு தி ரிட்டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. உபெர்டோ பசோலினி இயக்கிய இந்தப் படத்தில் முந்தைய யுலிஸஸில் இருந்த கடலின் சீற்றம் மற்றும் அரக்கர்கள். சூனியக்காரிகள். போதை தரும் தாவரங்கள், நரமாமிசம் உண்பவர்களை எதிர்த்த சாகசங்கள் எதுவும் கிடையாது.

மாறாக இப்படத்தில் கடற்பயணத்தில் ஏற்பட்ட இடர்களால் உருக்குலைந்துப் போன ஒடிஸியஸ் வீழ்ச்சியுற்றவனாக இத்தாகா வந்து சேருகிறான். போரின் காரணமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த நாட்களை நினைத்து வருந்துகிறான். டிராயின் வெற்றி உண்மையில் அவனுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை.

இன்னொரு புறம் அவனது மனைவி பெனிலோப் கணவனின் வருகைக்காக நீண்டகாலம் காத்திருக்கிறாள். துயரை மறைத்துக் கொண்ட அவளது மனவுறுதியை படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வது எப்போதும் சினிமாவிற்கான வெற்றிகரமான கதையாகக் கருதப்படுகிறது. அதைத் தான் உபெர்டோ பசோலினியும் முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

ஒடிஸியஸ் இதிகாச வீரனாக மட்டுமின்றி வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்லும் மனிதனின் அடையாளமாகவும் மாறிவிடுகிறான். பெனிலோப் தனித்து வாழும் பெண் எதிர்கொள்ளும் நெருக்கடியின் அடையாளமாக இருக்கிறாள். அது தான் இந்த இதிகாச கதாபாத்திரங்களை இன்றைய மனிதர்களைப் போல புரிந்து கொள்ள வைக்கிறது.

குடும்பத்தைப் பிரிந்து சென்று பல ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பி வருகிறவனின் மனநிலையை இந்திய இலக்கியங்கள் நிறையவே பேசியிருக்கின்றன. குறிப்பாக சாமியார் ஆவதற்காக வீட்டை விட்டுச் சென்றவன் பல ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்புவதை பல கதைகளில் காண முடிகிறது. புதுமைப்பித்தனின் கதை ஒன்றிலும் இது போன்ற நிகழ்வு சித்தரிக்கபடுகிறது

இதில் வரும் ஒடிஸியஸ் ஒரு மாவீரன். போரே அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. ஆனால் வீடு திரும்பும் போது அவன் தனக்காக காத்திருப்பவர்களின் அன்பை உணரத் துவங்குகிறான். வெறுமையும் வலியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருக்கின்றன.

இழந்த அனைத்தையும் மீண்டும் பெற தனது பலத்தை ஒடிஸியஸ் நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கான போராட்டமே படத்தின் மையக்கதை.

ஒடிஸியஸ் நிர்வாணமாக, காயமடைந்த நிலையில் இத்தாக்கா தீவில் கரையொதுங்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. ஒளிரும் கடலும் அலைகளின் சீற்றமும் அடையாளம் தெரியாத மனிதனாக மணலில் ஒதுங்கி கிடப்பதும் அத்தனை அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது.

இத்தாகாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசமே மன்னருக்காகக் காத்திருக்கிறது. ஆனால் காப்பற்றப்பட்ட ஒடிஸியஸ் அரண்மனைக்குச் செல்லவில்லை. தனது உடலும் மனமும் நலமடையும் வரை பாதுகாப்பாகக் குகையில் வசிக்கிறான். எதிரிகளிடமிருந்து தனது தேசத்தைக் காப்பதற்காகப் பிச்சைக்காரனாக வேடமிடுகிறான்.

போரில் ஒடிஸியஸ் இறந்துவிட்டான் என ஊரார் சொல்வதை ராணி பெனிலோப் நம்ப மறுக்கிறாள் ஒடிஸியஸ் நிச்சயம் வீடு திரும்புவான் என்று காத்திருக்கிறாள்

அவளை மறுமணம் செய்து கொள்ள விரும்பிய வீர்ர்கள் பலரும் அவளது அரண்மனையினுள் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கணவராகத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவளையும் இத்தாக்காவையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப் போவதாக மிரட்டுகிறார்கள்.

பெனிலோப் தனது சொந்த வீட்டில் கைதியைப் போலிருக்கிறாள். தனது மகனுடன் சேர்ந்து கொண்டு அரியணையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

பெனிலோப் தனது மாமனார் லார்ட்டஸுக்கு அளிப்பதற்காக இறுதிச் சடங்கில் சுற்றப்படும் ஒரு ஆடையை நெய்து கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகள் அந்த நெசவுப்பணி நடக்கிறது. அந்தப் பணி முடிந்தபிறகே அவள் மறுமணம் செய்து கொள்வதாக அறிவித்திருக்கிறாள்.

பெனிலோப்பின் நெசவு எதிர்ப்பின் வடிவமாக மாறுகிறது: ஒவ்வொரு நாளும், பகலில் அந்த ஆடையை நெய்கிறாள், இரவில் நெய்த இழைகளை அவிழ்த்துப் பிரித்து விடுகிறாள். இப்படியாக அவள் தனது திருமணத்தை மூன்று ஆண்டுகள் தள்ளிப் போட்டு வருகிறாள்.

வேற்றுருவில் வந்தாலும் பணிப்பெண் ஒடிஸியஸை அடையாளம் கண்டுவிடுகிறாள். பெனிலோப்பின் காத்திருப்பையும் மனத்துயரையும் அவருக்கு உணர்த்துகிறாள். தனது வளர்ந்த மகனையும் மனைவியையும் ஒடிஸியஸ் சந்திக்கிறான். ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

ஒடிஸியஸாக ரால்ஃப் ஃபியன்னெஸ், பெனிலோப்பாக ஜூலியட் பினோ சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மரியஸ் பாண்டுருவின் ஒளிப்பதிவு அபாரமானது.

ஒடிஸியஸின் கதையை விடவும் தனது துயரத்தை ஆடையாக நெய்யும் பெனிலோப்பின் தனிமையே நம்மை அதிகம் கவருகிறது. இதிகாசத்தை இன்றும் நமக்கு நெருக்கமாக்குவது அதில் வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாடும், தனித்துவமான நிகழ்வுகளுமே. அதில் ஒன்றே பெனிலோப்பின் விசித்திரமான நெசவு .

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 05:18

March 31, 2025

பிரெய்லி புத்தகம்

எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூலை வாசித்த மாணவர்கள் நிறைய பாராட்டுக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

இந்த நூல் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று பார்வையற்றவர்களுக்காகப் பிரெய்லி வடிவில் வெளியாகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஆடிட்டர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 05:33

March 28, 2025

சிறந்த கதை

Borderless இலக்கிய இதழ் கடந்த ஆண்டில் வெளியான படைப்புகளில் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்து பாராட்டியிருக்கிறார்கள்

எனது The Browless Dolls சிறுகதை அதில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

இதன் மொழிபெயர்ப்பாளர் டாக்டர் சந்திரமௌலிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 00:21

March 27, 2025

இரு சகோதரர்கள்

அழிசி வலைப்பக்கத்தில் அ.கி. கோபாலன் மற்றும் அ.கி. ஜயராமன் நேர்காணலை ஸ்ரீநிவாச கோபாலன் வெளியிட்டுள்ளார்.

1995ல் புதிய பார்வையில் வெளியான இந்த நேர்காணலை எடுத்தவர் குரு. புகைப்படங்களை எடுத்தவர் சுதாகர்

ஸ்ரீநிவாச கோபாலன் இதனை மீள்பிரசுரம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில வேட்டை’, ‘அவமானச் சின்னம்’ (அமெரிக்கா) போன்ற உலகின் சிறந்த நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழ்ச்சுடர் நிலையம் மூலம் வெளியிட்டவர் அ.கி. கோபாலன்.

உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தன என்ற வரலாற்றை கோபாலன் இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வறுமையுடன் போராடிய படி எவ்வாறு பதிப்புப் பணியை மேற்கொண்டார் என்பதையும் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்

சரத் சந்திரர் நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் அ.கி. ஜெயராமன். சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த போதும் சரத் சந்திரரை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

இந்த இருவரின் புகைப்படங்களையும் இப்போது தான் பார்க்கிறேன். நீண்டகாலம் பழகியவர்கள் போன்ற நெருக்கம் உண்டாகிறது.

தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ந்த முன்னோடிகளைக் கொண்டாடி வரும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இவரது முயற்சியால் தான் க.நா.சுவின் நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ராணிதிலக் இதனை தொகுத்துள்ளார்.

இந்த நேர்காணல் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். அழிசி வலைப்பக்கத்திற்கு சென்று இதனை வாசிக்கலாம்.

இணைப்பு.

https://www.azhisi.in/2025/03/blog-post.html

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 23:21

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.