S. Ramakrishnan's Blog, page 9
June 3, 2025
குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா
கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.
ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்
ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.
“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.
அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.
சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.
புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.
திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.
ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.
“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.
இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.
அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.
அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.
அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.
செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.
••
May 30, 2025
குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்
அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.
ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.
ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.
பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.
அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.
ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.
அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.
அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.
நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.
அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.
அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள். அதன்பிறகு துலாலை கங்கையில் காணமுடியவில்லை. . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.
பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.
அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.
வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.
துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.
ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.
நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.
இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.
••
May 29, 2025
புவனாவின் சமையலறை
குறுங்கதை
••

கண்ணாடி முன்னால் நின்றபடியே ஸ்ரீநாத் சப்தமாகச் சொல்வது கேட்டது.
“ நேரமாகிருச்சி.. லஞ்ச் பேக் பண்ணிட்டயா.. சாப்பிட டிபன் ரெடியா“
புவனா ரசம் வைப்பதற்காகக் கொத்தமல்லி தழைகளும் தக்காளியும் எடுத்து சமையல்மேடையின் மீது வைத்திருந்தாள். பத்து நிமிஷம் இருந்தால் ரசம் ரெடியாகிவிடும். ஆனால் நேரமாகிவிட்டது என அவசரப்படுத்துகிறார். ரசம் வைக்க வேண்டாம் என முடிவு செய்தபடியே லஞ்ச்பாக்ஸில் அவசரமாகச் சோறு, குழம்பு, முட்டைக்கோஸ் பொறியல். வெண்டைக்காய் பச்சடியை, எடுத்து வைத்தாள். மோரை பாட்டிலில் ஊற்றினாள்.
சாப்பிடுவதற்காக இட்லியும் தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து டேனிங் டேபிளில் கொண்டு போய் வைத்தாள். ஸ்ரீநாத் தட்டைக் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.
அலாரம் அடித்து நின்று போனது போலானது வீடு. டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தபடியே விரல்நுனியால் தேங்காய் சட்னியை தொட்டு ருசித்தாள். உப்பு குறைவாக இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி பதினாலு வருஷங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு. ஸ்ரீநாத் விடுமுறை நாளில் கூட குறித்த நேரத்தில் தான் சாப்பிடுவார். ஆகவே அவசரமில்லாமல் ஒரு நாள் கூட அவளால் சமைக்க முடியவில்லை. அடிப்பிடித்துக் கொண்ட குக்கரை கழுவும் போது தனது வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதோ என அவளுக்குத் தோன்றும்.
ஸ்ரீநாத் படிப்பதற்காக வாங்கி வெறுமனே புரட்டிவிட்டு போட்ட தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேப்பர் படித்தாள். இனிமேல் தான் குளிக்க வேண்டும்.
பத்தரை மணிக்கு தான் டிபன் சாப்பிடுவாள். மதிய உணவைச் சாப்பிட மூன்று மணியாகிவிடும். அதுவும் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள். சில சமயம் ஜன்னலோரமாகத் தரையிலே படுத்து பகல் உறக்கம் கொள்வதும் உண்டு.
அன்றைய மாலையில் இரவுக்கான சப்பாத்தி செய்வதற்காகக் கோதுமை மாவு எடுக்கப் போகும் போது தக்காளியும் கொத்துமல்லியும் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே இருப்பதைக் கவனித்தாள். கழுவிய ஈரம் கூட மாறாமல் புதிதாக இருப்பது எப்படி என யோசித்தபடியே அதைச் சமையல் மேடையிலே விட்டுவைத்தாள். அன்றிலிருந்து அவளது சமையலறையினுள் ஒரு மாற்றம் உருவானது.
கீரையோ, காய்கறியோ எதுவும் சமையலறைக்குள் வந்துவிட்டால் வாடுவதில்லை. பழங்கள் கெட்டுப் போகாமல் இருந்தன. கறிவேப்பிலை வாடவில்லை. தோசை மாவு கெட்டுப்போகவில்லை. கேரட் நிறம் இழக்கவில்லை. தனது பிரிட்ஜில் இருந்த பொருட்கள் அத்தனையும் வெளியே எடுத்து போட்டுவைத்தாள். எதுவும் கெடவில்லை. எதுவும் அழுகிப்போகவில்லை. இந்த உலகிலிருந்து சமையலறை துண்டிக்கப்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது.
தனது சமையலறை இப்படி மாறிப்போனதை நினைத்துப் புவனா சந்தோஷம் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தின் அடுத்த நிலையைப் போல அவளுக்குச் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பாடிக் கொண்டிருப்பது கேட்கத் துவங்கியது.
டம்ளரின் பாடலும் கரண்டியின் பாடலும் வேறு வேறாக ஒலித்தன. கண்ணாடி பாட்டில்கள் கனத்த குரலில் பாடின. வெட்டுக்கத்தியின் குரல் விநோதமாகயிருந்தது. மாபெரும் இசைக்கூடம் ஒன்றினுள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.
வீட்டின் சமையலறை அற்புதத்தின் நிகழ்வெளியாக மாறிவிட்டதை ஸ்ரீநாத்திடம் சொன்ன போது அவன் கோபித்துக் கொண்டான். இதெல்லாம் அவளது பகற்கனவு எனத் திட்டினான். அத்தோடு இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என எச்சரிக்கையும் செய்தான். புவனா தலையாட்டிக் கொண்டான்.
ஒவ்வொரு நாளும் சமையலறைக்குள் நுழைந்தவுடன் அவள் பரவசமடைந்தாள். தேநீர்குவளையுடன் சேர்ந்து பாடினாள். தண்ணீர் பானையின் சங்கீதத்தைக் கேட்டு ரசித்தாள். வெண்கல ஸ்பூனின் உரத்த குரல் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதன் பிந்திய நாட்களில் தன்னிடம் ஒரு மாற்றம் உருவாகிவருவதை உணர்ந்தாள். சமையல் அறைக்கு வெளியே ஒரு வயதிலும் சமையலறைக்குள் இன்னொரு வயதிலும் இருப்பது போன்ற உணர்வது. அது நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு அவளுக்குச் சந்தோஷத்தையும் தந்தது. சங்கடத்தையும் தந்தது. சமையலறைப் பொருட்களைப் போலத் தானும் மாறாத இளமையுடன் இருக்க முடியுமா என ஏங்கினாள். அந்த ஏக்கம் வாடாத கீரைகளை, அழுகாத பழங்களைத் தொடும் போது வளர்ந்தது.
இந்த ஏக்கம் முற்றிய ஒரு நாளில் ஹோல்டரில் வைத்திருந்த ஒரு முட்டை தவறி தரையில் விழுந்து உடைந்து போனது. குனிந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய போது பச்சைக்காய்கறிகள் அவள் கண்முன்னால் வாட ஆரம்பித்தன. அவசரமாகத் தண்டுக்கீரை வாடிப்போனது. கறிவேப்பிலையின் இலைகள் உதிர்ந்து போயின. பாத்திரங்கள் வாய் மூடி மௌனமாகின.
வாடிக் கொண்டிருக்கும் காய்கறிகள் பழங்களிடம் என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள். பதிலற்ற மௌனம் சமையலறையில் நிரம்பியது.
அடுத்த நாளில் அது வழக்கமான சமையலறையாக மாறியது. புவனா அதைப் பற்றி ஸ்ரீநாத்திடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை
•
May 28, 2025
தாகூரின் ஓவியங்கள்
தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath.
இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார்.
பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது.

அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
May 27, 2025
இசையே வாழ்க்கை
சிறந்த இசைக்காக ஐந்து ஆஸ்கார் விருதுகள், 26 கிராமி விருதுகள் , ஏழு பாஃப்டா விருதுகள் , மூன்று எம்மி விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் குளோப் விருதுகள் பெற்றுள்ள இசைக்கலைஞர் ஜான் வில்லியம்ஸ் பற்றிய ஆவணப்படம் Music By John Williams. இதனை லாரன்ட் பௌசெரியோ இயக்கியுள்ளார்.

92 வயதான ஜான் வில்லியம்ஸ் தனது பெற்றோர் மற்றும் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஜாஸ் இசை மீதான அவரது தீராத ஆர்வம். மற்றும் பியானோ நிகழ்ச்சிகளை நடத்திய நாட்களைப் படம் அழகாக விவரிக்கிறது.
ஜான் வில்லியம்ஸின் தந்தை ஒரு இசைக்கலைஞர். ஹாலிவுட் திரைப்பட இசைக்குழுவில் பணியாற்றியவர். ஆகவே தனது மகனை சிறந்த பியானோ இசைக்கலைஞராக உருவாக்க சிறுவயது முதலே பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்.
திரையுலகில் ஜான் வில்லியம்ஸ் அறிமுகமான போது சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் நட்பு அவரைத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக மாற்றியது. அவர் வழியாகவே இயக்குநர் லூகாஸ் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்டார் வார்ஸ் உருவாகியிருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திற்கு அவர் எவ்வாறு தனித்துவமாக இசையமைக்கிறார் என்பதை விவரிப்பது சுவாரஸ்யமானது. Superman, Harry Potter, ET, Jaws, Indiana Jones, Schindler’s List, Saving Private Ryan, Harry Potter series. போன்ற படங்களின் இசையமைப்பு குறித்து ஜான் வில்லியம்ஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இசையமைப்பதற்காக வீட்டில் தனியறை இல்லாத காலங்களில் ஸ்டுடியோவிலே நாள் முழுவதையும் கழித்தேன். எனது மனைவி பார்பரா ரூயிக் ஒரு பாடகி. ஆகவே அவர் எனது இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். பரபரப்பான திரையிசைப் பணிகளுக்கு நடுவே 41வயதில் திடீரென மனைவியை இழந்த போது வாழ்க்கை முற்றிலும் வெறுமையாகிப் போனது. அப்போது என்னை மீட்டது இசையே. இசை தான் எனது வாழ்க்கை. எனது மீட்சி என்கிறார் ஜான் வில்லியம்ஸ்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தான் மிகவும் குறைவாகவே சினிமா பார்க்க கூடியவன் என்கிறார். ஜான் வில்லியம்ஸின் சிரிப்பு அத்தனை அழகானது. அவரும் ஸ்பீல்பெர்க்கும் சந்தித்துக் கொள்ளும் போது வயதைக் கடந்து இருவரும் பதின்வயது நண்பர்களாகி விடுகிறார்கள்.
கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி. புகழ்பெற்ற இசைக்க்குழுவை வழிநடத்தும் இசை நடத்துனர் பணி என அவரது பன்முகத்திறமையை ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையை அவர் மக்கள் முன்பாக நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு சிலிர்ப்பூட்டுகிறது.
“Music is enough for a lifetime, but a lifetime is not enough for music.”என்கிறார் ஜான் வில்லியம்ஸ். நிகரற்ற இசையமைப்பாளரின் ஆளுமையை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரித்துள்ளது.
May 26, 2025
சமையற்கலைஞரின் ஞானம்.
நீங்கள் விரும்பும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து உச்சநிலையை அடைய முடிந்தால் அதுவே வாழ்வின் உண்மையான வெற்றி என்கிறார் சமையற்கலைஞர் ஜிரோ ஓனோ.

ஜப்பானின் புகழ்பெற்ற உணவகம் சுகியாபாஷி ஜிரோ. தோக்கியோவில் உள்ளது. பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறியதொரு உணவகம். அங்கே சுஷி எனப்படும் மீன் உணவு புகழ்பெற்றது. ஒரு மாதகாலத்திற்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே சாப்பிட இடம் கிடைக்கும்.
அங்கே உணவிற்கான கட்டணம் அதிகம். ஆனால் அதன் தரத்திற்காக அவ்வளவு பணம் கொடுக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஜிரோ தனது உணவகம் பற்றிய அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அதில் வெளிப்படும் ஞானம் நம் அனைவருக்கும் பொதுவானது. அவர் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எதுவென அடையாளம் காட்டுகிறார். தனது வேலையை ஒருவர் எவ்வளவு நேசமிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்.
ஜப்பானின் உயரிய விருதுகளில் ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் ஜிரோ ஓனோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுவழங்கும் நாளில் கூட அவரது உணவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. காலையில் விருது பெற்றுவிட்டு மதியம் தனது உணவகத்திற்க்கு வந்துவிட்டார்.
எண்பது வயதைக் கடந்த அவரது அனுபவங்களையும் அவரது இரண்டு மகன்களையும் பற்றிய ஆவணப்படம் Jiro Dreams of Sushi மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது

இது சுஷி உணவகம் பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும் ஜிரோ ஓனோவின் வாழ்க்கை மற்றும் ஜப்பானிய உணவு முறைகள், சந்தை மற்றும் மாறிவரும் உணவுப்பழக்கம். தந்தை மகன் உறவு பற்றியதாகவும் விரிகிறது. புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளரும் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அவரது இரண்டு மகன்களும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.
தனது உணவகத்திற்கு ஒருவர் பயிற்சியாளராக வந்தால் பத்தாண்டுகளுக்கு பின்பே அவருக்கான பதவி கிடைக்கும். அதுவரை அவர் உணவு தயாரிப்பதில் தனது ஈடுபாட்டினைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஜிரோ.
சமைப்பதில் காட்டும் அவரது ஆர்வத்தை அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதிலும் காட்டுகிறார். சாப்பிடுகிறவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அவரை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. தியானப்பயிற்சி அளிக்கும் குருவைப் போலவே அவர் நடந்து கொள்கிறார்.
மீன் உணவுகளை சமைக்கும் அந்த உணவகத்திற்குத் தேவையான மீன்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் டூனா மீன்களை விற்பனை செய்பவரின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. இது போல அவர்கள் பயன்படுத்தும் அரிசி. அதை வேக வைக்கும் விதம். உணவு சமைப்பதற்கான மரபான முறைகள், பரிமாறும் விதம் ஆகியவையும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடல் உணவுகளை மட்டுமே அவர் தனது உணவகத்தில் வழங்குகிறார். மதுவோ, வேறு சிற்றுண்டிகளோ அங்கு வழங்கப்படுவதில்லை. எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் அதிக இருக்கைகளை அவர் உணவகத்தில் ஏற்படுத்தவில்லை. இசை நிகழ்ச்சியின் நடத்துனர் எவ்வளவு கவனமாக இசையை நிகழ்த்துவாரோ அது போலவே உணவகத்தை நடத்துகிறார். இதன் மாறாத தரத்தின் காரணமாக உலகின் 6வது சிறந்த உணவகமாக தரவரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தனது வேலையில் முழுமையாக மூழ்குதல் வேண்டும். அதன் வழியே தனது திறமையை மேம்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு இல்லாத எவராலும் உச்சநிலையை அடைய முடியாது. ஆகவே வணிக வெற்றிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தனது திறமைகளை ஒருவர் இடைவிடாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அயாரத உழைப்பும் புதியன செய்வதில் நாட்டமும் முழுமையான ஈடுபாடும் தேவை.
ஒவ்வொரு நாளும் தனது தரத்தை விட்டுக் கொடுக்காமல் உணவு தயாரிப்பது எளிதானதில்லை. ஆனால் அதில் வெற்றி அடைவதன் மூலமே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்கிறார் ஜிரோ. தனது வேலையின் மீது ஒருவர் சலிப்படைந்து அதை பற்றி புகார் சொல்லிக் கொண்டேயிருந்தால் அவரால் வெற்றியை அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் அன்பை பெறுவதற்கு அவர்களுக்கான இருக்கை துவங்கி அவர்கள் வலது கை பழக்கம் கொண்டவர்களா இடது கை பழக்கம் கொண்டவர்களா என்பது வரை அறிந்து வைத்து அதற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்றும் சொல்கிறார்.
வெப்பநிலையைப் பொறுத்து மணமும் சுவையும் மாறுபடக்கூடியது. ஆகவே சூடான உணவை எப்படி வழங்குவது என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும். உணவகத்தில் அனைவரும் இணைந்து ஒரே அலைவரிசையில் வேலை செய்யும் போது தான் சாத்தியமாகும், என்று சொல்கிறார் ஜிரோ
ஜிரோவின் மூத்த மகன் யோஷிகாசுவுடனான அவரது உறவு மற்றும் இளையமகனின் ஆதங்கம், தனது மரபை பிள்ளைகள் தொடர்வதில் உள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 85 வயதான ஜிரோ ஓனோ, உணவு சமைப்பதை கலைப்படைப்பாக மாற்றுகிறார். அதை ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
••
மண்டியிடுங்கள் தந்தையே மொழியாக்கம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.
May 23, 2025
வழிவிடும் வானம்
குட்டி இளவரசன் நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர். அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ( Antoine de Saint-Exupery) வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு Saint-Exupéry திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் பாப்லோ அகுவேரோ. 2024ல் வெளியான திரைப்படம்.

எக்சுபெரி தபால்கள் கொண்டு செல்லும் விமானத்தின் விமானியாகப் பணியாற்றியவர். ஏர்மெயிலில் தான் பணியாற்றிய அனுபவங்களை இரண்டு நாவல்களாக எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை 1930ல் நிகழ்கிறது. பிரெஞ்சு நிறுவனமான ஏரோபோஸ்டெலின் அர்ஜென்டினா கிளையில் விமானிகளாக ஹென்றி குய்லூமெட் மற்றும் எக்சுபெரி பணியாற்றுகிறார்கள்.
ஒருமுறை தபால் கொண்டு செல்லும் விமானம் கடுமையான புயல்மழைக்குள் சிக்கிக் கொள்கிறது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் விமானி எக்சுபெரி தடுமாறுகிறார். இன்றிருப்பது போல அன்று நவீன உபகரணங்கள் விமானத்தில் கிடையாது. அவரது நண்பரான ஹென்றி குய்லூமெட் இன்னொரு விமானத்தில் பறந்தபடியே உதவிகள் செய்கிறார். இருவரும் இணைந்து முடிவில் தரையிறங்கும் பாதையைக் கண்டறிகிறார்கள். விமானம் பத்திரமாகத் தரையிறங்குகிறது. மனிதர்களை விடவும் அவர்கள் கொண்டு வந்த தபால்களே முக்கியமானது எனச் சொல்கிறது விமான நிறுவனம்.

படத்தின் இந்தத் துவக்க காட்சிகள் சிறப்பாக உள்ளன. விமான நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஆட்குறைப்பில் ஈடுபட முனைகிறது. இதனை ஏற்க மறுத்த எக்சுபெரி ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து வருவதற்கான மாற்றுவான்வழியை உருவாக்க முனைகிறார். விமானத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படுகின்றன. புதிய வழித்தடம் திட்டமிடப்படுகிறது.
அர்ஜென்டினாவிற்கும் சிலிக்கும் இடையில் தபால்பைகளைக் கொண்டு செல்வதற்காக ஹென்றி குய்லூமெட் விமானத்தில் புறப்படுகிறார். 1930 ஜூன் 13 வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாக விமானம் ஆண்டிஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிறது.

மனித நடமாட்டமேயில்லாத பகுதியில் உறைபனியின் ஊடாக உயிருக்கு போராடிய நிலையில் ஹென்றி குய்லூமெட் நடக்கிறார். அவரைக் கண்டறிந்து மீட்பதற்காக எக்சுபெரி அதே பாதையில் பயணிக்கிறார். Wind, Sand and Stars புத்தகத்தில் அந்த அனுபவம் விவரிக்கபட்டிருக்கிறது
சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தத் தேடலில் எப்படி எக்சுபெரி ஈடுபடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.
அந்தக் கால விமானப்போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள். மின்விளக்குகள் இல்லாத ஒடுதளங்கள் மற்றும் விமான நிலையத்தின் தொடர்பு அறை, என நூற்றாண்டுகளுக்கு முந்தைய விமானசேவையைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள்.

1929 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்த, செந்த்-எக்சுபெரி, அங்குப் பிரெஞ்சு விமான அஞ்சல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சதர்ன் மெயில் மற்றும் நைட் ஃப்ளைட் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழில் விடியலைத் தேடிய விமானம் என வெளியாகியுள்ளது. பறத்தலின் இன்பத்தை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.
இதில் இரவுநேர விமானப்பயணத்தின் நிஜமான சவால்களை எழுதியிருக்கிறார். மேலும் விமானியின் மனநிலை மற்றும் வானிலிருந்து காணும் அழகிய காட்சிகள். விமானிகளுக்குள் உருவாகும் நட்பு மற்றும் நிர்வாகத்தின் கெடுபிடிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த அனுபவங்களையே இப்படமும் விவரிக்கிறது.
குறிப்பாக நண்பரைத் தேடி மேற்கொள்ளும் ஆண்டிஸ் மலைப் பயணத்தின் போது வெளிப்படும் நிலவெளிக்காட்சிகள் அபாரமானவை. விமானத்துடன் நாமும் கூடவே பறப்பது போன்று அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கிளேர் மாதன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எக்சுபெரியின் எழுத்துலகம் பற்றியோ, சொந்த வாழ்க்கை பற்றியோ படம் அதிகம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அவரது நட்பு மற்றும் துணிச்சலான பறத்தலை மட்டுமே விவரிக்கிறது. விமானியான எக்சுபெரியின் உலகை மட்டுமே நாம் காணுகிறோம்.
விமானத்தில் பறந்தபடியே அவர் கனவு காணுகிறார். அல்லது உலகம் கனவில் வெளிப்படும் காட்சிகள் போன்று தோற்றமளிக்கிறது. தனது சொந்த உடலை இயக்குவது போலவே விமானத்தைக் கையாளுகிறார். உறுதியான நம்பிக்கையும் தைரியமும் ஆழ்ந்த அன்புமே அவரை இயக்குகிறது.
நட்பின் பல்வேறு பரிமாணங்களையே குட்டி இளவரசனிலும் காணுகிறோம். அவன் எல்லோருடன் நட்பு பாராட்டுகிறான். அவனால் நரியுடன் கூட நட்பாகப் பழக முடிகிறது. ஹென்றி குய்லூமெட்டின் கதை நம்ப முடியாத நிஜம். ஒருவகையில் அவரும் ஒரு குட்டி இளவரசனே.
May 20, 2025
எஸ்.ரா 100 இணைய நிகழ்வு
நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.
யாத்ரிக்
இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது.
மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது.
இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

இணைப்பு :
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

