S. Ramakrishnan's Blog, page 5

July 28, 2025

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்

அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள்.  இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான்.

அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். அதன்பிறகு அவன் நாள் முழுவதும் தெருவில் சுற்றியலைத் துவங்கினான்.

தெருவில் என்பதுகூட தவறு. ஊருக்குள் என்றே சொல்ல வேண்டும். எதற்காக அலைகிறோம் என்ற நோக்கமே இல்லாமல் தெருத்தெருவாகச் சுற்றினான். எங்காவது ஆட்கள் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருந்தால் அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்பான். மீன்சந்தைக்குப் போய் யார் என்ன மீன் வாங்குகிறார்கள் என வேடிக்கை பார்ப்பான். கோவில் யானை வீதிவலம் வரும் போது கூடவே நடப்பான்.

இப்படி இரவிலும் சுற்றியலைந்த போது தான் அவனுக்கு திருடர்களின் சகவாசம் கிடைத்தது.  இரவில் முளைக்கும் நட்சத்திரங்களைப் போன்றவர்களே திருடர்கள். அவர்களை பகலில் காண முடியாது. ஒருவேளை பார்க்க முடிந்தாலும் அடையாளம் தெரியாது.

திருடர்கள் அவனிடம் உன்னுடைய குரல் வித்தியாசமாக இருக்கிறது. நீ நாயைப் போல குலைத்துக் காட்டு என்றார்கள். அவன் நாயைப் போல குரைத்தான். நிஜமான நாய் ஒன்று பதில் கொடுத்தது. திருடப் போகிற வீட்டை நம்ப வைப்பதற்காக அவன் நாய் போல பொய்க் குரல் கொடுப்பவனாக மாறினான். அந்த சப்தம் கேட்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என வீட்டோர் நினைத்துக் கொண்டார்கள். அப்படி நாய்க்குரல் கொடுப்பதற்காக அவனுக்கு திருட்டில் சிறுபங்கை அளித்தார்கள். அதுவே அவனுக்கு போதுமானதாகயிருந்தது.

திருடப் போகிற இடம் எது என தெரியாத காரணத்தால் பகலில் அதைப் பற்றி கற்பனை செய்து கொண்டிருப்பான். திருடப் போன வீட்டின் பின்புறம் அமர்ந்து சில நேரம்  இருட்டுப்பூச்சியின் குரலை வெளிப்படுத்தினான்.. பொய்க்குரல் திருட்டிற்கு உதவியாக இருந்தது. திருடர்கள் சுவரில் ஏறுவதற்கு உடும்பை கொண்டு செல்வது போல அவனை போகும் இடமெல்லாம் அழைத்துப் போனார்கள்.

அப்படி ஒரு திருட்டிற்குப் போன போது வீட்டிற்குள்ளிருந்து “வந்துட்டயா யாகா.. வந்துட்டயா யாகா“ என்ற பெண்குரலை கேட்டாள். “யார் அந்த யாகா“ எனத் தெரியவில்லை.

திருடர்களின் ஒருவன் சொன்னான்.

“இந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு பார்வை கிடையாது. ஆகவே அவளிடம் இரவில் திருட வேண்டாம். பகலில் திருடுவோம்“.

அது தான் திருடர்களின் இயல்பு.

அவர்கள் புறப்படும் போது மறுபடியும் அதே குரல் கேட்டது “வந்துட்டயா யாகா“. இந்த முறை கட்டைக்கை பரந்தனால் அந்த குரலின் பரிதவிப்பை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“வந்துட்டேன்“ என்று பதில் சொன்னான்.

இதற்காக திருடர்கள் அவனை கோவித்துக் கொண்டார்கள்.

அந்தப்  பெண் “யாகா நீ வெளியே நிக்குறயா“ எனக் குரல் கொடுத்தாள். ஆனால் மறுமொழி சொல்வதற்கு பரந்தன் அங்கேயில்லை. அவனை இழுத்துக் கொண்டு போயிருந்தார்கள்.

மறுநாளின் பகலில் பரந்தன் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொண்டான். உள்ளே பெண் குரல் கேட்கவில்லை.  ஒருவேளை உறங்கிக் கொண்டிருக்க கூடும். அவளது வீட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தான். குரல் கேட்கவேயில்லை.

அந்த வீடு பர்மா செட்டியுடையது. அவர்கள் குடும்பத்துடன் மலேயா போயிருக்கிறார்கள். காவலுக்கு வைத்திருந்த ஆளும் தனது சொந்த கிராமத்திற்கு போய்விட்டிருந்தான் என அறிந்து கொண்டான்  

இரண்டு நாட்கள் இப்படி காலையும் மதியமும் அந்த வீட்டை சுற்றிவந்தான் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் பின்மதியம் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டில் யாருமில்லை. ஒவ்வொரு அறையாக தேடிய போதும் அங்கே எவருமில்லை. பெண் குரல் கேட்டதே. அவள் எங்கே போயிருப்பாள் என தேடினான். பல மாதமாக பூட்டியிருந்த வீடு போல தூசிபடிந்து போயிருந்தது.

அப்படியானல் உள்ளே இருந்து குரல் கொடுத்து தங்களைப் போல திருட வந்த இன்னொருவன். அவன் தன்னைப் போலவே பொய் குரலில் சப்தம் கொடுத்திருக்கிறான்.

அந்த பெண் குரலில் இருந்த தவிப்பு உண்மையாக இருந்தது. யார் அந்த பொய்க்குரலோன், அவனைப் பார்க்க வேண்டும் என பரந்தனுக்கு ஆசை உருவானது.

பெண்குரல் கேட்ட வீட்டிலிருந்து எந்த பொருளையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெளியேறும் போது ஒருவர் திருடன் திருடன் எனக் கத்திக் கூப்பாடு போடவே பரந்தன் ஒடத்துவங்கினான். மக்கள் சுற்றிவளைத்து பிடித்துவிட்டார்கள். காவல்துறை வீடு புகுந்து திருடினான் என்று  கைது செய்தார்கள்.

1919 ஆம் ஆண்டில்  ரௌலட்  சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் தேசம் எங்கும் உருவானது. அதை ஒடுக்குவதற்காக காவலர்கள் முழுமுயற்சி எடுத்தார்கள். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நெருக்கடியின் போது சிறிய குற்றங்களை உடனே விசாரித்து தண்டனை கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பரந்தன் விசாரணை கைதியாகவே நீண்டகாலம் சிறையில் இருந்தான்.  

இறுதி விசாரணையின் போது  அவன் நாயைப் போல குரைத்துக் காட்டினான். பூச்சியினைப் போல சப்தம் எழுப்பினான். நீதிமன்றம் அதனை வேடிக்கை மட்டுமே பார்த்தது. முடிவில் திருட்டிற்காக  ஆறுமாதம் சிறைதண்டனை கிடைத்தது.

தண்டனை காலம் முடிந்து வெளிவந்தவுடனே பெண் குரல் கொடுக்கும் திருடனைத் தேட ஆரம்பித்தான். கண்டுபிடிக்க முடியவேயில்லை. ஆண்டுகள் உருண்டோடின. வீதியில் சந்தையில் நின்றபடியே அவன் “வந்துட்டயா யாகா“ என பெண்குரலோனைப் போலவே சப்தமிடத் துவங்கினான். பித்தேறிவிட்டதாக அவனைத் துரத்தினார்கள்.

அதன்பிறகான நாட்களில் ஊரின் ஏதோவொரு தெருவில் “வந்துட்டயா யாகா“ என்ற குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறுவர்கள் அந்தக் குரலை கேலி செய்து விளையாடினார்கள். சில நேரம் அப்படி குரல் கொடுக்கும் பரந்தன் மீது கல்லெறிந்து மகிழ்ந்தார்கள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 23:11

குற்றமற்ற மகன்

தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும்.

லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் கேதரின் பெண்கள் உரிமைக்காகப் போராடுகிறாள்.

ஐந்து ஷில்லிங் போஸ்டல் ஆர்டரைத் திருடியதாகக் கூறி ஆஸ்போர்ன் கடற்படைக் கல்லூரியில் இருந்து 14 வயதான ரோனி நீக்கம் செய்யப்படுகிறான். வீடு திரும்பிய மகனிடம் தந்தை ஆர்தர் வின்ஸ்லோ விசாரணை மேற்கொள்கிறார்.

தான் தவறு செய்யவில்லை, தன்னைத் தவறாகத் தண்டித்துள்ளார்கள் என்று ரோனி உறுதியாகச் சொல்கிறான். தனது மகனின் கல்வி மற்றும் தனக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காக ஆர்தர் வின்ஸ்லோ போராடத் துவங்குகிறார்.

பணக்கார குடும்பத்திற்கு ஐந்து ஷில்லிங் பெரிய விஷயமில்லை. ஆனால் பொய் குற்றச்சாட்டு என்பது அழியாத கறை. அது வாழ்க்கை முழுவதும் சிறுவனைப் பின்தொடரும் ஆகவே உண்மையை நிலை நாட்ட வேண்டும் என ஆர்தர் நினைக்கிறார். ஆகவே முறையீடு செய்து கடிதம் அனுப்புகிறார்

கடற்படை கல்லூரியின் முடிவே இறுதியானது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது என்று பதில் அனுப்புகிறார்கள்.

கேதரின் மற்றும் குடும்ப நண்பர் மற்றும் வழக்கறிஞர் டெஸ்மண்ட் கேரி உதவியோடு நீதிமன்றம் செல்கிறார்கள்.. போஸ்டலை ஆர்டரை திருடியது ரோனி தான் என உறுதியான சாட்சிகள் இருப்பதாகச் சொல்லி மேல்முறையீட்டை தடுக்கிறார்கள். அவனைத் தபால் அலுவலகத்தில் நேரில் கண்ட சாட்சி இருக்கிறது. அவனிடம் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அது தன்னுடைய பணம் என ரோனி உறுதியாகச் சொல்கிறான்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சர் ராபர்ட் மோர்டன் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முன்வருகிறார். அவரைச் சந்திக்க வின்ஸ்லோ குடும்பம் செல்லும் காட்சி மிகவும் அழகானது. குறிப்பாக அவர் ரோனியிடம் மேற்கொள்ளும் குறுக்கு விசாரணை. அதில் தந்தை அடையும் ஏமாற்றம். கேதரின் அடையும் எரிச்சல்.

ராபர்ட் மோர்டன் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை பயன்படுத்திக் கொள்வார் எனக் கேதரின் நினைக்கிறாள். ஆகவே அவரைக் கடுமையாக விமர்சனம் செய்கிறாள்.

தனது நேர்மையைக் கேதரின் சந்தேகப்படுவதை ராபர்ட்டும் உணர்ந்து கொள்கிறார். அந்த வழக்கை மிகவும் உண்மையான முன்னெடுக்கிறார்.

வின்ஸ்லோ குடும்பம் இந்த வழக்கின் செலவுகள் காரணமாகப் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கிறார்கள். இதனால் வேலையாட்களைப் பணிநீக்கம் செய்வதற்கும், சொத்துக்கள் விற்கப்படுவதற்குமான நிலை ஏற்படுகிறது.

அரசிற்கு எதிராக வழக்கை தொடுப்பது எளிதானதில்லை என வின்ஸ்லோ உணருகிறார். கேதரின் அன்றாடம் நீதிமன்றம் செல்கிறாள். விசாரணையை நேரடியாகக் காணுகிறாள். தோல்விக்கு மேல் தோல்வி என வழக்கு பின்னடைவை சந்திக்கிறது.

இந்த நிலையில் ஆர்தர் வின்ஸ்லோ தனது வீண்பிடிவாதம் மற்றும் கௌரவம் காரணமாகவே வழக்கைத் தொடுத்திருப்பதாக அவரது மனைவி கிரேஸ் சண்டையிடுகிறாள். அந்தக் காட்சியின் போது ரோனி தனது அறைக்கதவை திறந்து வெளியே எழுந்து வந்து தந்தையிடம் கேட்பதும் அவர் பதில் தரும் விதமும் நேர்த்தியானது. ரோனி வழக்கின் காரணமாகக் கேதரின் திருமணம் தடைபடும் சூழல் ஏற்படுகிறது. அவள் சரியான முடிவை எடுக்கிறாள்.

என்ன நடந்தாலும் வழக்கை நடத்த வேண்டும் எனத் தந்தை மகள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். தீர்ப்பு அறிவிக்கபடுகிறது. வழக்கின் முடிவு என்ன ஆனது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நாடகமாகவும் மேடை நாடகமாகவும் நடத்தப்பட்ட கதை என்பதால் டேவிட் மாமெட் திரைக்கதையில் பெரிய மாற்றம் எதையும் செய்யவில்லை.

வழக்கறிஞர் டெஸ்மெண்ட் சிறப்பான கதாபாத்திரம். கேதரினைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகானது. ராபர்ட்டிற்கும் கேதரினிற்குமான உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக நீதிமன்ற இறுதி வாதம் முடிந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும் போது கேதரின் பேசுவது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

மேடை நாடக பாணியில் படமும் உரையாடல்களின் வழியே நீள்கிறது. அந்தக் காலக் கட்ட உடைகள். மற்றும் வீடு, நீதிமன்றம், வாகனங்கள், எனத் தேர்ந்த கலை இயக்கம், ஹாதோர்ன், நார்தாம், ரெபேக்கா பிட்ஜியன்,மேத்யூ பிட்ஜியன், நீல் நார்த் என அனைவரின் சிறந்த நடிப்பு படத்தின் தனிச்சிறப்பு என்பேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் ஒப்பனை மற்றும் உடைகளில் கேதரின் மற்றும் கிரேஸ் கொள்ளும் கவனம். வீட்டுப்பணிப்பெண் எடுத்துக் கொள்ளும் உரிமை, என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சின்னச் சின்ன நுணுக்கங்களைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 05:24

விருதுநகரில்

ஆகஸ்ட் 3 ஞாயிற்றுகிழமை மாலை விருதுநகரில் நடைபெறும் பேராசிரியர் வினோத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.

JCI மற்றும் விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு ஸ்ரீ அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்வில் அம்பாள் ஆர் முத்துமணி அவர்கள் தலைமை ஏற்கிறார்.

தொழிலதிபர் ஆறுமுகச்சாமி மற்றும் தேன்மொழி அவர்கள் நூலினைப் பெற்றுக் கொள்கிறார்கள்

கல்வி அதிகாரி ஜான் பாக்கியா, முனைவர் ந. அருள்மொழி நூல் குறித்து உரையாற்றுகிறார்கள்.

பேராசிரியர் வினோத் ஏற்புரை வழங்குகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 04:10

July 25, 2025

திரைப்பயணி -3

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் காணொளித் தொடர் திரைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 23:17

சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை.July25.

அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன..

விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. சுருண்டு படுத்துக்கொண்டிருக்கும் நாய்கள் கூடப் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு லேசாகக் காதை அசைத்துக் கொள்ளும். குரைக்காது.

அந்தச் சாலையில் இருந்த கிரௌன் தியேட்டர் இப்போது செயல்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கிறது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்கள் கிழிக்கபட்டிருந்தன. தியேட்டரின் பெரிய இரும்புக்கேட்டை இழுத்துமூடி மூன்று பூட்டுகள் பூட்டியிருந்தார்கள்.

ஆனாலும் வைத்தியநாதன் தினமும் தியேட்டர் வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்க்கவே செய்வான். அந்தத் தியேட்டரில் அவன் படம் பார்த்தது கிடையாது. அவன் அந்த நகருக்கு வருவதற்கு முன்பே மூடியிருந்தார்கள். அவனது ஹவுஸ் ஒனர் ஜோசப் அந்தத் தியேட்டரில் படம் பார்த்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அந்தத் தியேட்டரில் கிறிஸ்துமஸ் இரவு மட்டும் இலவசமாகச் சினிமா காட்டினார்கள் என்பதைப் பலமுறை நினைவுபடுத்தியிருக்கிறார். தியேட்டரின் உரிமையாளரான மார்டின் முதலாளி அன்று கேடிலாக் காரில் தியேட்டருக்கு வந்திறங்கி பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்குவார் என்றும், தியேட்டர் முழுவதும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்கும். இலவசமான சினிமா பார்க்க பெருந்திரளாக மக்கள் வருவார்கள். விசில் பறக்கும் என்று அவர் சொல்லும் போது முகத்தில் அந்த நாள் மலர்வதைக் கண்டிருக்கிறான். உலகிலிருந்து மறைந்த நாட்கள். தருணங்கள் மனதில் அப்படியே உறைந்துவிடுகின்றன. அதனைப் புத்தகத்தைப் புரட்டுவது போல நினைத்த நேரம் புரட்டிக் கொள்ள முடிகிறது.

வைத்தியநாதன் அந்தத் தியேட்டரின் முன்பாக நிற்கும் போது வண்ணவிளக்குகள் எரிந்த கிறிஸ்துமஸ் தினத்தை நினைத்துக் கொள்வான். மார்டின் முதலாளியின் கெடிலாக் கார் தியேட்டரில் நுழையும் காட்சி மனதில் வந்து போகும். தான் ஏன் அதை எல்லாம் கற்பனை செய்கிறேன் என வேடிக்கையாகவும் இருக்கும்

வைத்தியநாதன் கூரியர் அலுவலகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்தான். அவனது அலுவலகம் ஐயப்பன் கோவிலின் எதிரில் இருந்தது. இந்தியா முழுவதும் அவர்களின் கிளைகள் இயங்கின. பார்சல் வேன் வந்து செல்லும் வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆகவே தினமும் வேலை முடிவதற்கு இரவு பத்தாகிவிடும்.

நடந்து சென்று பார்க் அருகிலுள்ள தள்ளுவண்டி கடையில் பிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் சாப்பிடுவான். வாகினி அபார்ட்மெண்டின் இரண்டாவது தளத்தில் வீடு எடுத்திருந்தான். முப்பத்தைந்து வயதைக் கடந்த போதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணைக் காதலித்தான். வேலை இல்லாத அவனை ஏற்க மாட்டார்கள் எனப் பெண் வீட்டில் பேசவேயில்லை. ஸ்ரீசாந்திக்குத் திருமணமாகிவிட்டது. பெங்களூரில் வசிக்கிறாள். அவனும் அவளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இப்போதும் பர்ஸில் வைத்திருக்கிறான். புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்மதியம் அவனை விட்டு நீங்கவேயில்லை.

தனியே வசிப்பவர்கள் தங்களைச் சுற்றிய சிலந்தியைப் போல வலைபின்னிக் கொள்கிறார்கள். வைத்தியநாதனும் அப்படியே இருந்தான். அவனைத் தேடி அறைக்கு யாரும் வர மாட்டார்கள். அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களைத் தவிர வேறு நண்பர்கள் கிடையாது. குடியிருப்பில் மாதம் ஒருமுறை கூட்டம் நடக்கும். அதில் கூடக் கலந்து கொள்ள மாட்டான்

அவனது எட்டாவது வயதிலே அப்பா இறந்துவிட்டார். அம்மா தான் அவர்களை வளர்த்தாள். அவனது அக்காவிற்குத் திருமணமாகி பட்டுக்கோட்டையில் வசித்தாள்.

அம்மா மட்டும் ஊரில் இருந்தாள். வைத்தியநாதன் எதற்காகப் பிஎஸ்சி பிசிக்ஸ் படித்தான் என்று அவனுக்கே புரியவில்லை. படிப்பை முடித்துவிட்டு உள்ளூர் பெட்ரோல் பங்கில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தான். அந்த வேலை பிடிக்காமல் ஆறு மாதம் சேல்ஸ்மேனாக இருந்தான். உரம் விற்கும் வேலை. அதையும் கைவிட்டுக் கேரளாவில் எட்டு மாதங்கள் ஷிப்பிங்கில் வேலை செய்தான். அங்கே இருந்த நாட்களில் அறிமுகமான திரிவிக்ரமன் உதவியால் தான் கூரியர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

எட்டு ஆண்டுகளில் கிளை அலுவலகத்தின் மேலாளராக மாறியிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் தலைக்கிறுகிறுப்பு அதிகமாகி மயங்கி விழுந்து விட்டான். மருத்துவரிடம் சென்ற போது அவனுக்கு ரத்தக்கொதிப்பு இருப்பதாகவும் தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றும் சொன்னார். அப்படித் தான் அதிகாலை நடைப்பயிற்சி துவங்கியது.

இந்த ஒன்றரை வருஷங்களில் அவனுக்குப் பிடித்தமான விஷயமாக நடைபயிற்சி மாறியிருந்தது. காலை ஐந்து மணிக்கு எழுந்து காலில் ஷுவை மாட்டிக் கொண்டு கலையாத இருளுக்குள் நடக்க ஆரம்பிப்பான்.

மூடிய கடைகள். உறக்கம் கலையாத வீடுகள். யாருமற்ற தள்ளுவண்டிகடைகள். காலியான பேருந்து நிறுத்தம், கூட்டமாக நடப்பவர்களின் பேச்சுக்குரல்கள். டியூசனுக்குச் செல்லும் மாணவியின் தூக்கம் படிந்த முகம், வெளியூரில் இருந்து வந்திறங்கியவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும் வேகமான ஆட்டோக்கள்.

அவன் தனக்கென ஒரு வரைபடத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தான். அந்தப் பாதைகள் வழியாகவே நடப்பான். அதுவும் இரவில் மழைபெய்திருந்தால் சாலையில் தேங்கிய தண்ணீரில் தெருவிளக்கின் வெளிச்சம் மிதந்து கொண்டிருக்கும். அதை ரசித்தபடியே நடப்பான்.

அவனது நடைப்பயிற்சியின் எல்லை கீர்த்தனா டீ ஸ்டால். அங்கே நின்று டீ குடிப்பான். பின்பு வீடு திரும்பும் போது வேகமாக நடந்து வருவான். எதையும் கவனித்துப் பார்க்க மாட்டான். எந்த முகமும் நினைவில் இருக்காது.

அன்றைக்கும் அப்படிதான் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு கீர்த்தனா கடையில் டீ குடித்துவிட்டுத் திரும்பினான். பழைய மரசாமான்கள் விற்கும் ஒரு கடையின் வாசலில் சாய்ந்தாடும் மரக்குதிரை ஒன்றைக் கண்டான். இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணமடிக்கபட்டிருந்தது. வயிற்றில் நீல நிற பூ வேலைப்பாடு. முகத்தில் கறுப்புப் பட்டை சந்தன நிறப் புள்ளிகள். கால் குளம்பில் கறுப்பு வண்ணம். மூக்கும் கண்ணும் அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தன.

இப்போது தான் கடையைத் திறந்திருக்கிறார்கள். தள்ளுவண்டி ஒன்று வாசலில் நின்றிருந்தது. கடைக்குள் மஞ்சள் நிற சேலை அணிந்த பருத்த உடல் கொண்ட ஒரு பெண்ணும் சிறுவனும் தெரிந்தார்கள். வண்டிக்காரன் சிம்மாசனம் போன்ற உயரமான குஷன் நாற்காலி ஒன்றை உள்ளிருந்து எடுத்து வந்து வண்டியில் ஏற்றினான்.

வைத்தியநாதன் நிற்பதைக் கண்ட வண்டிக்காரன் அவன் கேட்காமலே சொன்னான்

“சினிமா ஷுட்டிங்க்கு போகுது“…

வைத்தியநாதன் குதிரையைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த கடைப்பெண் அவனிடம் கேட்டாள்

“குதிரை வேணுமா தம்பி. “.

வேண்டாம் எனத் தலையாட்டினான்.

“நல்ல வேலைப்பாடுள்ள குதிரை. இப்போ இதை எல்லாம் செய்ய ஆள் கிடையாது. நீங்க தான் முதல்போணி… வாங்கிட்டு போங்க“ என்றாள்

“வேணாக்கா“ என்றபடியே நின்றிருந்தான்,

“குடுக்கிற விலையைக் குடுத்துட்டு எடுத்துக்கோங்க“. என்றாள்

அவளுக்கு அவசரமான பணத்தேவை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன் போலச் சொன்னான்

“இதை வாங்கி நான் என்ன செய்றது“

“வீட்ல பிள்ளைகளுக்குக் குடுங்க“

“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே“ என்றான்

“பொறக்கப்போற பிள்ளைக்கு இப்பவே வாங்கி வச்சிக்கோங்க“ எனச் சொல்லி சிரித்தாள்

அந்தச் சிரிப்பு தான் அவனை மரக்குதிரையை வாங்க வைத்தது. பர்ஸில் இருந்து அவன் எடுத்துக் கொடுத்த பணத்தைக் கையில் வாங்கியவள் அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு “இன்னும் நூறு ரூபாய் குடுங்க“ என உரிமையாகக் கேட்டாள். வைத்தியநாதனும் மறுக்கவில்லை.

எதற்காக மரக்குதிரையை வாங்கினான் என்று புரியாமலே அதைக் கையால் தூக்கிப் பார்த்தான்.

“ஈஸியா தூக்கிட்டு போயிரலாம்“ என்று கடைக்காரப் பெண் சொன்னாள்

கையில் மரக்குதிரையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் போது வேடிக்கையாக இருந்தது. தெருநாய் ஒன்று அவனைப் பார்த்துக் குரைத்தது. ஏற முடியாத குதிரை ஒன்றை கூட்டிச் செல்வது கூச்சமாக இருந்தது. தன்னைக் கடந்து செல்கிறவர்களில் யாரேனும் அதைப் பார்க்கிறார்களா எனக் கவனித்தான். ஒருவரும் அதைக் கவனிக்கவில்லை. கேட்கவில்லை. நகரம் அப்படிபட்டது தான்.

குதிரையுடன் அறைக்குத் திரும்பிய போது குடியிருப்பில் யாரும் அதனைக் கவனிக்கவில்லை. கதவின் முன்னால் குதிரையை வைத்துவிட்டு அவசரமாகப் பூட்டைத் திறந்தான். வீட்டிற்குள் குதிரையைக் கொண்டு வந்தவுடன் அதை எங்கே வைப்பது என யோசித்தான்.

படுக்கை அறையில் குதிரையை வைத்துக் கொள்ள முடியாது. சிறிய இடம். பால்கனியில் வைத்தால் வெளியே இருந்து வேடிக்கை பார்த்து சிரிப்பார்கள். ஹாலில் டிவி இருப்பதால் வைக்க இடமில்லை. சமையலறையில் வைத்துவிடலாம் என முடிவு செய்தான்.

சமையலறைக்குள் குதிரை நுழைவது என்பது விநோதமான உணர்வை தந்தது. எப்போதும் அவனுக்கு வீட்டிற்கு வந்துவிட்டோம் என்ற உணர்வை தருவது சமையலறை தான்.

அதுவும் சிறுவயதில் அவனது வீட்டின் சமையலறையில் அமர்ந்து தான் சாப்பிடுவான். நின்று சமைக்கும் உயரமான அடுப்புமேடை. புகைக்குள் நின்றபடியே அம்மா தேசையைச் சுட்டு கிழே அமர்ந்து சாப்பிடும் அவனது தட்டில் போடுவாள். தோசை பறந்துவரும் அந்த நிமிஷம் அழகானது.

அம்மா சமையலறையில் தான் படுத்துக் கொள்வாள். சமையலறைக்கெனத் தனி வாசனையும் நெருக்கமும் இருந்தது. சமையலறையில் தண்ணீர் குடிப்பதும் ஹாலில் தண்ணீர் குடிப்பதும் ஒன்றில்லை.

அன்றாடம் பள்ளிவிட்டு வந்தவுடன் பையை ஹாலில் இருந்த பிரம்பு நாற்காலியில் போட்டுவிட்டு நேராகச் சமையலறைக்குள் போய் உட்கார்ந்து கொள்வான். அப்போது தான் வீடு திரும்பிய உணர்வு ஏற்படும்.

அப்பா ஒரு போதும் சமையலறையில் சாப்பிட மாட்டார். அவருக்கு ஹாலில் தான் சாப்பிட வேண்டும். அதுவும் கிழக்கு பார்த்து அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். அவர் சாப்பிடுவதற்கெனத் தனியே தட்டு இருந்தது. வெண்கல டம்ளரில் தான் தண்ணீர் குடிப்பார்.

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டு அவன் பார்த்தேயில்லை. கல்யாண வீட்டிற்குப் போனால் கூட அப்பா தனியே தான் சாப்பிடுவார். அவர் சாப்பிட்டு வந்த பின்பு அம்மாவும் அவனும் அக்காவும் அடுத்தப் பந்திக்குப் போவார்கள். அப்பா மறைந்தபின்பும் அவர் மீதான வருத்தம் மறையவில்லை.

••

சமையலறைக்குள் ஒரு குதிரை நிற்பது அவனை மகிழ்ச்சி படுத்தியது. குதிரைக்கென எதையும் சமைக்க வேண்டியதில்லை. ஆனால் அது ஒரு துணை. அவன் காலையில் சப்பாத்தி அல்லது தோசை செய்து கொள்வான். மதியம் அலுவலகத்தின் அருகிலுள்ள மெஸ்ஸில் சாப்பாடு. இரவு சாலையோர தள்ளுவண்டி கடைகள். மரக்குதிரையின் வருகை அவனுக்குச் சமையலில் ஆர்வத்தை அதிகமாகியது. தொலைவில் உள்ள ஊர்களைப் பற்றி நினைக்கத் தூண்டியது. செய்திதாளில் தினமும் இந்தியாவின் எத்தனையோ ஊர்கள் இடம்பெறுகின்றன. அந்தப் பெயர்களைக் கூட முன்பு கவனமாகப் படிக்க மாட்டான். குதிரை வந்தபின்பு ஒவ்வொரு ஊர் பெயரையும் கவனமாகப் படித்தான். அந்த ஊர் எப்படியிருக்கும் என அவனாகக் கற்பனை செய்து கொண்டான்.

அந்த மரக்குதிரை பால்ய காலத்திற்குள் திரும்பிவிட்டது போன்ற உணர்வை அளித்தது. நினைத்துச் சந்தோஷப்படும் அளவு அவனது சிறுவயதில் எதுவும் நடந்திடவில்லை. மாறாக நினைத்துப் பார்க்கவே கூடாது எனும் அளவு வறுமை, ஏமாற்றங்கள். கண்ணீர் சிந்திய நாட்களைக் கடந்து வந்திருந்தான். ஆனாலும் மாலைவெயிலின் மினுமினுப்பை போலச் சிறுவயதின் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நினைக்கும் போது சந்தோஷம் தந்தன. அதில் ஒன்று அம்மாவின் தோசை. அக்கா அவன் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுவது.

சாய்ந்தாடும் குதிரை என்பதால் கையால் அசைத்து அதை ஆடவைப்பான். சில நேரம் அதன் அருகில் அமர்ந்து கொண்டு அதை ஆசையாகத் தடவிக் கொண்டிருப்பான்.

கடைப்பெண் சொன்னது போல நாளை நமக்கு ஒரு பையனோ, பெண்ணோ பிறந்தால் அவர்கள் இந்தக் குதிரையில் ஏறி விளையாட்டும் என நினைத்துக் கொள்வான். அப்படி நினைக்கும் போது தனக்கு நடக்கப்போகும் கல்யாணம், மணப்பெண் எப்படியிருப்பாள் என்றெல்லாம் கற்பனை பீறிடும். அவற்றை எல்லாம் இத்தனை காலமாக அவன் மறந்திருந்தான்.

அவனது அலுவலகத்தில் மூன்று இளம்பெண்கள் வேலை செய்தார்கள். அதில் சித்ரா மட்டும் அவனை நாதன் சார் என்று அழைப்பாள். அவள் அப்படிக் கூப்பிடும் போது மிகவும் உரிமையாக அழைப்பது போலிருக்கும். அவளுடன் பேச வேண்டும். ஒன்றாகச் சாப்பிட போக வேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால் அவள் மறுத்துவிடுவாளோ எனப் பயமாகவும் இருந்தது. அதைவிடவும் அவன் வருவதற்கு முன்னால் மேலாளராக வேலை செய்த ஜீவராஜன் மீது ஒரு பெண் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தார்கள். அந்தப் பயம் அவன் மீதும் படிந்திருந்தது.

சில நாட்கள் பின்னிரவில் விழித்துக் கொண்டு சமையலறைக்குள் தண்ணீர் குடிக்கச் செல்லும் போது குதிரை அசைவற்று நிற்பதைக் காணுவான். சட்டென ஊரில் உள்ள அம்மாவின் நினைவு வந்துவிடும். எவ்வளவோ முறை அழைத்தும் கூட அவள் தன்னோடு வந்து இருக்க மறுக்கிறாள். பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழும் பெற்றோர்கள் வீட்டிற்குள்ளாக வேர்விட்டு விடுகிறார்கள். அவர்களின் மௌனம் கனத்த இரும்பை போலாகிவிடுகிறது என்று வைத்தியநாதன் உணர்ந்திருந்தான்.

ஊருக்குப் போகும் நாட்களில் கூட அம்மா அவனிடம் அதிகம் பேச மாட்டாள். எச்சிலை விழுங்கிக் கொள்வதைப் போலப் பேச்சையும் விழுங்கிக் கொண்டுவிடுவாள்.

“ஏதாவது வேணுமாம்மா“ எனக் கேட்கும் போதெல்லாம் “எனக்கு ஒண்ணும் வேணாம்“ என்று தான் சொல்லுவாள். அந்த மறுப்புப் பொருட்கள் மீதானதில்லை. சுயவெறுப்பு. கோபம். விரக்தி. யாவும் இணைந்த வெளிப்பாடு.

அவனது சிறுவயதில் இது போன்ற மரக்குதிரையில் ஆடியதில்லை. ஆனால் போட்டோ ஸ்டுடியோவில் பார்த்திருக்கிறான். இரட்டை ஜடை போட்ட சிறுமி ஒருத்தி மரக்குதிரையில் ஆடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று நியூட்டன் ஸ்டுடியோ முகப்பில் மாட்டி வைக்கபட்டிருந்தது

அந்தச் சிறுமியைப் போலத் தனது மகனோ, மகளோ போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள்.

அக்காவும் அவனும் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து கொண்டு நியூட்டன் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

அதைப் பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என அக்கா ஆசைப்பட்டாள். அம்மா விடவில்லை

“இதை யார் வந்து பார்க்க போறா“ என அக்காவை திட்டினாள்

அதைக் கேட்டு அக்கா அழுதாள்.

“எல்லா வீட்லயும் போட்டோ மாட்டி வச்சிருக்காங்கள்ளே“ என்றாள்

“எல்லா வீடும் நாமளும் ஒண்ணுல்லே“ என்று கோபத்துடன் சொன்னாள் அம்மா.

அந்த வார்த்தைகள் அவனது மனதில் ஆழமாகப் பதிந்து போய்விட்டன. அப்பா இல்லாத குடும்பத்தின் குரலது. அவர்கள் படிப்பதற்காக அம்மா யாரிடம், எப்படிக் கடன் வாங்கினாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அக்காவிற்குத் தெரியும். அவளும் அம்மாவும் சில நாட்கள் இரவில் சமையலறையில் உட்கார்ந்து ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பாள். அப்போது அம்மா அழுவாள். எதற்காக அழுகிறாள் என அவனுக்குத் தெரியாது.

அம்மாவிடமிருந்து அக்கா நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அதுவும் திருமணமான பின்பு அக்காவின் பேச்சு அப்படியே அம்மாவை போல மாறியிருந்தது. அம்மாவும் அவளும் ஒரே போன்ற புடவையைக் கட்டிக் கொண்டிருக்கும் போது சகோதரிகள் போலத் தோன்றினார்கள்.

அப்பா இருந்திருந்தாலும் மரக்குதிரையை வாங்கிக் கொடுத்திருக்க மாட்டார். அவனும் கேட்டிருக்கவே மாட்டான். நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்துப் பழகியிருந்தான்.

மரக்குதிரையைப் பார்த்தவுடன் தான் விலைக்கு வாங்கியது அப்பாவிற்கு எதிராகத் தானோ என்றும் நினைத்தான்.

அம்மாவிடம் தான் ஒரு மரக்குதிரையை விலைக்கு வாங்கியிருப்பதாகச் சொன்னால் கோவித்துக் கொள்வாள்

“காசை ஏன்டா வீணா கரியாக்குறே“ எனத் திட்டுவாள்

சிறுவயதில் வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைக் கைவிட்ட வளர்ந்தவர்கள் உலகையே விளையாட்டு பொருளாக்கி விடுகிறார்கள். மனிதனுக்கு எத்தனை வயதானாலும் விளையாட ஏதாவது ஒன்று தேவை.

மரக்குதிரையைப் பற்றிச் சித்ராவிடம் பேச வேண்டும் என்று நினைத்தான். அலுவலகத்தின் உணவு வேளையில் சித்ரா மேஜைக்குச் சென்று சிரித்தான்

“என்ன நாதன் சார். ஒரு வாரமா.. உங்க முகம் ரொம்பப் பிரைட்டா இருக்கு“

“அப்படியா மேடம் “

“நீங்க என்னைச் சித்ராண்ணே கூப்பிடலாம்“.

“நான் ஒண்ணு சொன்னா நீங்க கேலி பண்ணக்கூடாது “

“எல்லாத்தையும் கேலி பண்ண மாட்டேன் சார். சொல்லுங்க “

“நான் ஒரு மரக்குதிரை வாங்கியிருக்கேன். பழைய சாமான் கடைல கிடைச்சது“

“எப்போ“

“ஒரு வாரம் இருக்கும். வீட்ல வச்சிருக்கேன். “

“சூப்பர் சார். நான் அதைப் பார்க்க வரலாமா“ எனக்கேட்டாள்

அதை வைத்தியநாதன் எதிர்பார்க்கவில்லை.

“எப்போ வேணும்னாலும் வரலாம். ஆனா உங்களாலே அந்தக் குதிரைல ஏறி ஆட முடியாது “

“சார் என்னைச் சொல்லிட்டு நீங்க கேலி பண்ணுறீங்க “ என அவள் சொல்லும் போது அவளது கண்கள் விரிந்திருந்தன. ரப்பர் பேண்ட் ஒன்றை விரலில் கொடுத்து இழுத்தபடியே சித்ரா சொன்னாள்

“முதல்ல குதிரை. அப்புறம் கல்யாணம். குழந்தை.. அதானே உங்க பிளான்“

இதே போலத் தான் கடைக்காரப் பெண்ணும் சொன்னாள். காரணமில்லாமல் எதையும் வாங்கவோ வைத்துக் கொள்ளவோ கூடாதா என்ன.

“அப்படி எல்லாம் ஐடியா இல்லை.. நீங்க எப்போ வீட்டுக்கு வர்றீங்க. சண்டே ஒகேவா. “

“பாக்குறேன். சின்னவயசிலே நானும் மரக்குதிரை வச்சிருந்தேன். அதுல என் பெயர் கூட எழுதியிருந்தேன். அந்தக் குதிரைல உட்கார்ந்து போட்டோ எடுத்துருக்கேன். “

“அப்போ ரெட்டை ஜடை போட்டு இருந்தீங்களா. பஃப் கைவச்ச சட்டை. பட்டுபாவாடை.. கரெக்டா“

“உங்களுக்கு எப்படித் தெரியும்“ என ஆச்சரியமாகக் கேட்டாள்

“அது மாதிரி ஒரு போட்டோ எங்க ஊர் ஸ்டுடியோவில பாத்துருக்கேன்“

“என்னோட போட்டோ வீடு மாறும் போது தொலைஞ்சி போச்சு. அந்தக் குதிரை ரொம்ப நாளா எங்க வீட்ல இருந்துச்சி. வெள்ளம் வந்துச்சில்லே.. அப்போ தண்ணீலே போயிருச்சி. “

“நான் வாங்கியிருக்கிறது சிவப்பு கலர் குதிரை. அழகா இருக்கு“

“எப்படி சார் அந்த ஆசை வந்துச்சி. “

“தெரியலை. வாங்கின குதிரையை என்ன பண்ணுறதுனு தெரியாம கிச்சன்ல வச்சிருக்கேன்“

“நான் வந்து பாக்குறேன். வீட்டுக்கு வந்தா என்ன ட்ரீட் குடுப்பீங்க“

“பிலால் ஹோட்டல்ல போயி சாப்பிடுவோம்“ என்றான்

“நானே சமைச்சி எடுத்துட்டு வர்றேன். உங்க வீட்ல வச்சி சாப்பிடுவோம்“ என்றாள்

அவனால் நம்ப முடியவேயில்லை. அவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருப்பதை அலுவலகத்தில் சிலர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனது இருக்கைக்குத் திரும்பிய பிறகும் வைத்தியநாதன் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தான்.

அறைக்குத் திரும்பிய பிறகு மரக்குதிரையைத் துடைத்துச் சுத்தம் செய்தான். சித்ராவிற்குப் பிடிக்கக் கூடும் என மாங்கோ ட்ரிங்ஸ் வாங்கி வைத்தான். ரூம் ஸ்பிரே அடித்து வீட்டை மணமூட்டினான். எப்படியாவது அவளிடம் தனது மனதின் ஆசைகளைப் பேசிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

ஞாயிற்றுகிழமை பனிரெண்டு மணிக்கு சித்ரா வந்திருந்தாள். ஆரஞ்சு வண்ண காட்டன் புடவை. கழுத்தில் முத்துமாலை. அலைபாயும் கூந்தல். அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் மதிய உணவு. டிவி அருகே வைத்திருந்த ஆஷ்ட்ரேவைப் பார்த்துக் கேட்டாள்

“நீங்க சிகரெட் எல்லாம் பிடிப்பீங்களா“

“எப்போவாவது“

“ஆபிஸ்ல நல்ல பையன் மாதிரி இருக்கீங்க“ எனச்சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்

அவளைக் கிச்சனுக்குள் அழைத்துச் சென்று மரக்குதிரையைக் காட்டினான். அவனைப் போல அவளும் அதை ஆடச்செய்தாள். குதிரை ஆடிக்கொண்டிருக்கும் போது கேட்டாள்

“தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கும்லே“

“பழகிருச்சி. அதான் கூட ஒரு மரக்குதிரை இருக்கே“ என்று சொல்லி சிரித்தான்

“சிரிச்சா உங்க முகம் நல்லா இருக்கும். ஆனா.. எப்பவும் கவலையா இருக்கீங்க. ஏதாவது பிராப்ளமா சார்“

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நான் எப்பவும் அப்படிதான். “

“நீங்க காலையில சாப்பிட்டீங்களா.. நான் ஒண்ணுமே சாப்பிடலை. “.

“அப்போ சாப்பிட்டிருவோம்“

“கிச்சன்ல உட்கார்ந்து சாப்பிடலாமா“

அது தான் அவன் ஆசைப்பட்டதும். மகிழ்ச்சியோடு தலையாட்டினான். அவள் வீட்டிலிருந்து வாழை இலை கூடக் கொண்டுவந்திருந்தாள். அவள் சமைத்துக் கொண்டுவந்திருந்ததை இருவரும் ருசித்துச் சாப்பிட்டார்கள். அவன் சாப்பிடுவதை அவள் வேடிக்கை பார்த்தபடியும் இருந்தாள்..

ஒரு வாய் சோற்றை அள்ளியபடியே சித்ரா கேட்டாள்

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சார்“

“சொல்லுங்க சித்ரா“

“என்னை லட்சுமிநகர் பிராஞ்சுக்கு மாற்ற முடியுமா “.

“ஏன் இங்கே என்ன பிரச்சனை“

“நான் லவ் பண்ற சுதாகர் அந்த ஏரியால இருக்கார். நாங்க கல்யாணம் பண்ணிகிடலாம்னு இருக்கோம். வீட்ல ஒகே சொல்லிட்டாங்க. அங்கே வேலை மாறிட்டா.. ஈஸியா இருக்கும். “

தண்ணீர் டம்ளரை எடுத்துக் குடித்தான் வைத்தியநாதன்

“சுதாகர் என்ன பண்ணுறார். “

“ஷேர் மார்க்கெட்.. சின்னதா ஆபீஸ் வச்சிருக்கார். “

“நான் ஹெட் ஆபீஸ்ல பேசி பாக்குறேன் சித்ரா. “

“நானே அந்தப் பிராஞ்சில கேட்டேன். வேகன்சி இல்லைனு சொல்லிட்டாங்க. ஆனா நீங்க நினைச்சா முடியும் சார். எனக்காக இதைச் செய்யமாட்டீங்களா “

“டிரான்ஸ்பர் வாங்கிடலாம்“ என்று உறுதியாகச் சொன்னான்.

“தேங்ஸ் சார்“ என்றாள்.

இதைக் கேட்பதற்காகத் தான் வீட்டுக்கு வந்திருக்கிறாள். மரக்குதிரை என்பது வெறும் சாக்கு. எவ்வளவு எளிதாகத் தன்னைக் கையாண்டிருக்கிறாள்.

“எப்போ கல்யாணம்“ எனக்கேட்டான்

“ஏன் சார். இந்த மரக்குதிரையைக் கிப்டா குடுக்கப் போறீங்களா“ எனக்கேட்டாள்

“ஆமாம்“ எனத் தலையாட்டினான். அதைக்கேட்டு சித்ராவும் சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்.

அவள் விடைபெற்றுச் சென்றபிறகு அறையில் வெளிச்சமேயில்லாதது போல உணர்ந்தான். நாவறட்சியாக இருந்தது, அவள் அளித்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமையலறைக்குச் சென்று மரக்குதிரையின் அருகில் உட்கார்ந்து கொண்டான். அம்மாவைப் போலச் சமையலறையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. இரவாகும் வரை அங்கேயே படுத்துகிடந்தான். இருட்டியபிறகும் விளக்கைப் போடவில்லை. இருட்டு வீடெங்கும் நிரம்பியது.

அந்த வீட்டில் இரண்டு மரக்குதிரைகள் இருப்பதைப் போல அப்போது உணர்ந்தான்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 01:00

July 24, 2025

மண்டியிடுங்கள் தந்தையே – இணைய நிகழ்ச்சி

நூல் வாசிப்பு முற்றம் சார்பில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலிற்கான அறிமுகவுரை நடைபெறவுள்ளது.

ஜுலை 24 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இணைய வழியில் நிகழ்வு நடைபெறுகிறது

மண்டியிடுங்கள் தந்தையே குறித்து இரா. ஜெயபால் உரையாற்றுகிறார்.

நூல் வாசிப்பு முற்றம் – 237′
நாள் : 24.07.2025
வியாழக்கிழமை

நேரம் : இரவு 7.00 – 7.30 மணி

நிகழ்விற்கான இணைப்பு : https://meet.google.com/pfw-tcoy-xxb

நூல் கருத்துரை வழங்க விரும்புவோருக்கான
விண்ணப்பப் படிவம் :
https://forms.gle/kVqEwX9uqrGYqv2a8

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 05:13

July 23, 2025

என்றென்றும் புத்தகங்கள்

புத்தகங்களின் சரித்திரம் என்ற தலைப்பில் கோவையில் நான் நிகழ்த்திய உரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 10:24

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.

திங்கள்கிழமை எனது உரையின் போது நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம்.

கோவை புத்தகத் திருவிழாவின் போது உடனிருந்து உறுதுணைகள் செய்த அன்பு நண்பர் மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி.

உபசரித்து மகிழ்ந்த அம்பாள் முத்துமணி , நிலக்கோட்டை ஸ்ரீதர், தேன்மொழி, டாக்டர் சந்திரமௌலி, வசந்த், கொடீசியா நடராஜ், அழகிரி, கோவை ஷபி, ஸ்ருதி டிவி கபிலன், பத்திரிக்கை, மற்றும் சமூக ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

கொடீசியா சார்பில் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அதன் தலைவர் ராஜேஷ் மற்றும் விழாக்குழுவினர்களுக்கு நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 10:21

July 22, 2025

பாராட்டுவிழா

நான் பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது


ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மாலை காமராஜ் கல்லூரி அரங்கில் விழா நடைபெறுகிறது

நூலக மனிதர்கள் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 05:40

July 17, 2025

கோவையில்

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள கோவை வருகிறேன்.

ஜுலை 19, 20,21 மூன்று நாட்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கு 67ல் என்னைச் சந்திக்கலாம்.“

ஜுலை 21 திஙகள் கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 05:23

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.