S. Ramakrishnan's Blog, page 2
August 16, 2025
திரைப்பயணி -6
திரைப்பயணி காணொளித் தொடரின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது.
இதில்12 Angry Men குறித்துப் பேசியிருக்கிறேன்
August 12, 2025
ஆகஸ்ட் 15 – நாயகி
ஆகஸ்ட் 15 மாலை நாயகி 1947 என்ற நிகழ்வு நடைபெறுகிறது
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் களத்தில் நிற்கையில் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர்களது மனைவியரின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி.
அரிதான இந்த நிகழ்வை அகிலா ஸ்ரீதர், ஜா.தீபா,பாலைவன லாந்தர் ,ஆர் காயத்ரி ,ரேவா, சவீதா ஜெயஸ்ரீ, தமிழ் பொன்னி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்
இடம் : கவிக்கோ மன்றம். சிஜடி காலனி. சென்னை 4
நாள் :15. 8.2025
நேரம்: மாலை 4 மணி.


August 8, 2025
திரைப்பயணி – 5
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் ஐந்தாம் பகுதி வெளியாகியுள்ளது.
இதில் ரோமன் ஹாலிடே பற்றி பேசியிருக்கிறேன்
August 5, 2025
திரைப்பயணி – 4
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளி தொடரின் நான்காம் பகுதியில் சைக்கோ திரைப்படம் பற்றி பேசியிருக்கிறேன்
August 4, 2025
தூத்துக்குடியின் பாவோ பாப் மரம்.
தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி வளாகத்தினுள் பாவோ பாப் (Baobab)மரமிருக்கிறது. நானூறு ஆண்டுகள் பழமையான மரம் என்கிறார்கள். ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மரம் தூத்துக்குடிக்கு எப்படி வந்தது எனத்தெரியவில்லை. அராபிய வணிகர்கள் மூலம் வந்திருக்கக் கூடும். அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். பொன் மாரியப்பன். ஞானராஜ், ராம்குமார், ஜெயபால், காசிம் மற்றும் சில நண்பர்கள் உடன்வந்திருந்தார்கள்.

நான்கு யானைகள் ஒன்றாக நிற்பது போன்ற தோற்றத்திலிருந்தது. அதன் பிரம்மாண்டம். உறுதி, அகன்ற கிளைகளின் கம்பீரம் தனித்துவமாக இருந்தது. மரத்தில் காய்ந்து உதிரும் நிலையில் இருந்த ஒரு பூவைக் கண்டேன். சிறிய பிஞ்சு ஒன்றையும் கண்டேன்.

இதன் பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். அவை இரவில் பூக்கும் தன்மை கொண்டவை என்றார்கள். அது போலவே இதன் காய்கள் பலாக்காய் அளவிற்குப் பெரிதாக இருக்கக் கூடியவை. இவை ஆறு மாதங்களுக்குப் பின்பே பழமாகி விழத் தொடங்குகின்றன.


Tree of Life என அழைக்கபடும் இந்த மரத்தை தமிழில் பெருக்க மரம் என்கிறார்கள். உள்ளூர்வாசிகளில் சிலர் இதனைப் பொந்தன் புளி என்றும் சொல்கிறார்கள்.

30 மீட்டர் உயரம் மற்றும் 50 மீட்டர் சுற்றளவு வரை வளரும் பாவோபாப் மரம் தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்கிறது. ஒரு லட்சம் லிட்டருக்கு மேலாகத் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்று படித்திருக்கிறேன். ஆப்பிரிக்காவின் கடுமையான கோடையில் இந்த மரத்திலிருந்து மக்கள் தண்ணீரை பெற்றுக் கொள்கிறார்கள். யானைகள் இந்த மரத்திலிருந்தே தண்ணீர் குடிக்கின்றன .

இந்த மரத்தின் பழம் அசாதாரணமாக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மெக்னீஷியம், பொட்டாஷியம் சத்துகள் மற்றும் அதிகமான விட்டமின் சி உள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கான இயற்கை ஆதாரமாகப் பாவோ பாப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மருத்துவத்திற்காகவும் இதன் பட்டை வேர், இலைகள் மற்றும் கூழ் பயன்படுத்தபடுகிறது. மரத்தின் கிளைகளிலிருந்து புதிய மரம் துளிர்த்து விடும் என்பதால் இந்த மரத்திற்கு அழிவேயில்லை

குட்டி இளவரசன் நாவலிலும் லயன்கிங் படத்திலும் இந்த மரத்தைக் காணலாம்.
ராஜபாளையம் சின்மயா பள்ளி வளாகத்தில் இது போன்ற பாவோ பாப் மரம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். குஜராத்தின் சில இடங்களிலும் இதே மரத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவிற்குப் பாவோ பாப் மரங்கள் வந்தது குறித்து இப்போது விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இணையத்தில் இதற்கெனத் தனியே குழுவினர் இயங்கி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் உள்ள மரம் பள்ளிவளாகத்தினுள் காணப்படுகிறது. சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டுப் பழமையானது. இது வெறும் மரமில்லை. நூற்றாண்டுகளின் சாட்சியம்.
மரத்தின் அடியிலும் பள்ளியின் வெளியிலும் இந்த மரத்தின் சிறப்புகள் குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அத்தோடு இதனைப் பாதுகாப்பாகப் பராமரிப்பு செய்வதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து இதனைக் காணச் செய்யலாம்.
இந்த பாவோ பாப் மரத்தை தூத்துக்குடி புத்தகத் திருவிழா தனது சின்னமாக உருவாக்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
July 31, 2025
விலகும் திரை
ஒரு நடிகர் எப்படி உருவாகிறார் என்பதை அறிந்து கொள்வதற்குச் சரியான திரைப்படம் Mr. Burton. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம். மார்க் எவன்ஸ் இயக்கியுள்ளார்.

ஆசிரியரான பிலிப் பர்ட்டனால் கண்டறியப்பட்டு அவரது ஆதரவு மற்றும் ஊக்கத்தால் எப்படி ரிச்சர்ட் பர்ட்டன் புகழ்பெற்ற நடிகராக மாறினார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது.
1940களின் முற்பகுதியில் போர்ட் டால்போட்டில் கதை நடைபெறுகிறது, தாயை இழந்த ரிச்சர்ட் மூத்த சகோதரி சிஸ் மற்றும் அவரது கணவர் எல்ஃபெட்டால் வளர்க்கப்படுகிறான். தந்தை ஒரு சுரங்கத் தொழிலாளி. குடிகாரர். சகோதரியின் கணவன் எல்ஃபெட்க்கு அவனைப் பிடிக்கவில்லை. படிக்கப் போக வேண்டாம் என வேலைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ரிச்சர்ட்டிற்கு நடிப்பதில் ஆர்வமிருக்கிறது. நடிகனாக வேண்டும் என்று கனவு காணுகிறான். இதை அறிந்து கொண்ட பிலிப் உதவி செய்திட முன்வருகிறார்.

பிலிப் பர்ட்டன் அற்புதமான கதாபாத்திரம். ஆசிரியரான அவர் தனியே வாழுகிறார். ஷேக்ஸ்பியரை அவர் பாடம் நடத்தும் விதம் அழகானது. குறிப்பாகக் கவிதைகளை எப்படி வாசிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார். அவரது நாடக குழுவில் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் இணைந்து கொள்கிறான்.
தனது வீட்டின் ஒரு அறையிலே ரிச்சர்ட்டை தங்க வைத்துத் தேவையான பயிற்சிகள் கொடுத்து நடிகராக்குகிறார். ஆக்ஸ்போர்டில் பயிலுவதற்கான உதவித்தொகை பெறுவதற்காக அவனைத் தத்தெடுத்து தனது சொந்த மகனாக்கிக் கொள்கிறார்.
அப்போது ரிச்சர்ட்டின் தந்தை ஐம்பது பவுண்ட் பணம் வாங்கிக் கொண்டு தனது மகனைத் தத்து கொடுக்கிறார். இன்னும் இது போலப் பிள்ளைகள் இருக்கிறார்கள், வேண்டுமா என்று கேலியாகப் பிலிப்பிடம் கேட்கிறார்.
நாடகம் எழுதும் திறமை கொண்டிருந்தும் பிலிப் பர்ட்டன் அங்கீகாரம் கிடைக்காமலே போகிறார். ஆகவே அவராக நாடகங்கள் நடத்துகிறார். மாணவர்களை நடிகர்களாகப் பயன்படுத்துகிறார்.
திறமையான ரிச்சர்ட்டிற்குப் பிலிப் பர்ட்டன் வழங்கும் பயிற்சிகள் முக்கியமானவை. குறிப்பாகக் குரலை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் சென்று உரத்துச் சப்தமிடச் செய்வது முக்கியமான காட்சியாகும்.

நாடகத்தில் நடித்து ரிச்சர்ட் புகழ் பெறுகிறான். இதனால் ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்டில் நடைபெற இருக்கும் ஹென்றி IV நாடகத்திற்காகத் தேர்வு செய்யப்படுகிறான். அங்கே. குடி, பெண்கள் என அவனது கவனம் திசைமாறிப் போகிறது. தன்னை விடப் பெரிய நடிகன் எவருமில்லை எனக் கர்வம் கொள்கிறான்.
பிலிப் அவனது நடிப்பை விமர்சனம் செய்யும் போது அவருடன் சண்டையிடுகிறான். ஷேக்ஸ்பியர் வசனங்களை அவன் எப்படிப் பேச வேண்டும் எனப் பிலிப் விளக்குகிறார். ரிச்சர்ட் அவரை மோசமாகத் திட்டித் துரத்துகிறான். இது போலவே நாடகத்தின் இயக்குநர் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்க மறுக்கிறான்.
பிலிப் பர்டன் அவனது தவறுகளை மன்னிக்கிறார். அவன் புகழ்பெற்ற நடிகனாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாறாத அன்போடு துணை நிற்கிறார். ஹென்றி IV நாடகம் வெற்றி பெற்ற பின்பு ரிச்சர்ட் பர்டன் நடந்து கொள்ளும் முறையும் பிலிப்பை அவன் சந்தித்து மன்னிப்பு கேட்பதும் அழகான காட்சிகள். தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் பிலிப் முகத்தில் வெளிப்படும் உணர்வு அபாரமானது.

பிலிப் பர்ட்ன் வீட்டின் உரிமையாளரான மா தனித்துவமிக்கக் கதாபாத்திரம். அவர் ரிச்சர்ட் மீது காட்டும் அன்பு. பிலிப்பை புரிந்து கொண்டிருக்கும் விதம் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
பிரிட்டிஷ் திரைப்படங்களுக்கே உரித்தான தயாரிப்பு நேர்த்தி. சிறந்த நடிப்பு. மற்றும் தேர்ந்த கலை இயக்கத்தை இதிலும் காண முடிகிறது.
இந்தப் படம் ரிச்சர்ட் பர்டனைப் பற்றியது என்றாலும் அவரது ஆசிரியர் பிலிப் பற்றிய படமாகவே விரிகிறது. பிலிப் போன்ற ஆசிரியர்கள் உலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி விடுகிறார்கள். படம் அவருக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலி போலவே இருக்கிறது.
ரிச்சர்ட் பர்ட்டனாக ஹாரி லாவ்டி நடித்திருக்கிறார். பிலிப்பாக நடித்திருப்பவர் டோபி ஜோன்ஸ். இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தன்னால் உருவாக்கபட்டவர் என்று ஒரு போதும் ரிச்சர்ட் பர்ட்னைப் பற்றி பிலிப் குறிப்பிடுவதில்லை. தான் நன்றி மறந்தவன். இப்போது உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டேன் என ரிச்சர்ட் தான் மன்னிப்புக் கேட்கிறான். நாடக ஒத்திகையின் போது நடக்கும் பிரச்சனைகள். மௌனமாக அவற்றைப் பிலிப் அவதானித்தபடி இருப்பது. மேடையில் ரிச்சர்ட் வெளிப்படுத்தும் அபாரமான நடிப்பு, இறுதிக்காட்சியில் வெளிப்படும் அன்பு எனப் படம் மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டிருக்கிறது
••
July 28, 2025
குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்
அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள். இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான்.

அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். அதன்பிறகு அவன் நாள் முழுவதும் தெருவில் சுற்றியலைத் துவங்கினான்.
தெருவில் என்பதுகூட தவறு. ஊருக்குள் என்றே சொல்ல வேண்டும். எதற்காக அலைகிறோம் என்ற நோக்கமே இல்லாமல் தெருத்தெருவாகச் சுற்றினான். எங்காவது ஆட்கள் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருந்தால் அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்பான். மீன்சந்தைக்குப் போய் யார் என்ன மீன் வாங்குகிறார்கள் என வேடிக்கை பார்ப்பான். கோவில் யானை வீதிவலம் வரும் போது கூடவே நடப்பான்.
இப்படி இரவிலும் சுற்றியலைந்த போது தான் அவனுக்கு திருடர்களின் சகவாசம் கிடைத்தது. இரவில் முளைக்கும் நட்சத்திரங்களைப் போன்றவர்களே திருடர்கள். அவர்களை பகலில் காண முடியாது. ஒருவேளை பார்க்க முடிந்தாலும் அடையாளம் தெரியாது.
திருடர்கள் அவனிடம் உன்னுடைய குரல் வித்தியாசமாக இருக்கிறது. நீ நாயைப் போல குலைத்துக் காட்டு என்றார்கள். அவன் நாயைப் போல குரைத்தான். நிஜமான நாய் ஒன்று பதில் கொடுத்தது. திருடப் போகிற வீட்டை நம்ப வைப்பதற்காக அவன் நாய் போல பொய்க் குரல் கொடுப்பவனாக மாறினான். அந்த சப்தம் கேட்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என வீட்டோர் நினைத்துக் கொண்டார்கள். அப்படி நாய்க்குரல் கொடுப்பதற்காக அவனுக்கு திருட்டில் சிறுபங்கை அளித்தார்கள். அதுவே அவனுக்கு போதுமானதாகயிருந்தது.
திருடப் போகிற இடம் எது என தெரியாத காரணத்தால் பகலில் அதைப் பற்றி கற்பனை செய்து கொண்டிருப்பான். திருடப் போன வீட்டின் பின்புறம் அமர்ந்து சில நேரம் இருட்டுப்பூச்சியின் குரலை வெளிப்படுத்தினான்.. பொய்க்குரல் திருட்டிற்கு உதவியாக இருந்தது. திருடர்கள் சுவரில் ஏறுவதற்கு உடும்பை கொண்டு செல்வது போல அவனை போகும் இடமெல்லாம் அழைத்துப் போனார்கள்.

அப்படி ஒரு திருட்டிற்குப் போன போது வீட்டிற்குள்ளிருந்து “வந்துட்டயா யாகா.. வந்துட்டயா யாகா“ என்ற பெண்குரலை கேட்டாள். “யார் அந்த யாகா“ எனத் தெரியவில்லை.
திருடர்களின் ஒருவன் சொன்னான்.
“இந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு பார்வை கிடையாது. ஆகவே அவளிடம் இரவில் திருட வேண்டாம். பகலில் திருடுவோம்“.
அது தான் திருடர்களின் இயல்பு.
அவர்கள் புறப்படும் போது மறுபடியும் அதே குரல் கேட்டது “வந்துட்டயா யாகா“. இந்த முறை கட்டைக்கை பரந்தனால் அந்த குரலின் பரிதவிப்பை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
“வந்துட்டேன்“ என்று பதில் சொன்னான்.
இதற்காக திருடர்கள் அவனை கோவித்துக் கொண்டார்கள்.
அந்தப் பெண் “யாகா நீ வெளியே நிக்குறயா“ எனக் குரல் கொடுத்தாள். ஆனால் மறுமொழி சொல்வதற்கு பரந்தன் அங்கேயில்லை. அவனை இழுத்துக் கொண்டு போயிருந்தார்கள்.
மறுநாளின் பகலில் பரந்தன் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொண்டான். உள்ளே பெண் குரல் கேட்கவில்லை. ஒருவேளை உறங்கிக் கொண்டிருக்க கூடும். அவளது வீட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தான். குரல் கேட்கவேயில்லை.
அந்த வீடு பர்மா செட்டியுடையது. அவர்கள் குடும்பத்துடன் மலேயா போயிருக்கிறார்கள். காவலுக்கு வைத்திருந்த ஆளும் தனது சொந்த கிராமத்திற்கு போய்விட்டிருந்தான் என அறிந்து கொண்டான்
இரண்டு நாட்கள் இப்படி காலையும் மதியமும் அந்த வீட்டை சுற்றிவந்தான் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் பின்மதியம் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டில் யாருமில்லை. ஒவ்வொரு அறையாக தேடிய போதும் அங்கே எவருமில்லை. பெண் குரல் கேட்டதே. அவள் எங்கே போயிருப்பாள் என தேடினான். பல மாதமாக பூட்டியிருந்த வீடு போல தூசிபடிந்து போயிருந்தது.
அப்படியானல் உள்ளே இருந்து குரல் கொடுத்து தங்களைப் போல திருட வந்த இன்னொருவன். அவன் தன்னைப் போலவே பொய் குரலில் சப்தம் கொடுத்திருக்கிறான்.
அந்த பெண் குரலில் இருந்த தவிப்பு உண்மையாக இருந்தது. யார் அந்த பொய்க்குரலோன், அவனைப் பார்க்க வேண்டும் என பரந்தனுக்கு ஆசை உருவானது.
பெண்குரல் கேட்ட வீட்டிலிருந்து எந்த பொருளையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெளியேறும் போது ஒருவர் திருடன் திருடன் எனக் கத்திக் கூப்பாடு போடவே பரந்தன் ஒடத்துவங்கினான். மக்கள் சுற்றிவளைத்து பிடித்துவிட்டார்கள். காவல்துறை வீடு புகுந்து திருடினான் என்று கைது செய்தார்கள்.
1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் தேசம் எங்கும் உருவானது. அதை ஒடுக்குவதற்காக காவலர்கள் முழுமுயற்சி எடுத்தார்கள். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நெருக்கடியின் போது சிறிய குற்றங்களை உடனே விசாரித்து தண்டனை கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பரந்தன் விசாரணை கைதியாகவே நீண்டகாலம் சிறையில் இருந்தான்.
இறுதி விசாரணையின் போது அவன் நாயைப் போல குரைத்துக் காட்டினான். பூச்சியினைப் போல சப்தம் எழுப்பினான். நீதிமன்றம் அதனை வேடிக்கை மட்டுமே பார்த்தது. முடிவில் திருட்டிற்காக ஆறுமாதம் சிறைதண்டனை கிடைத்தது.
தண்டனை காலம் முடிந்து வெளிவந்தவுடனே பெண் குரல் கொடுக்கும் திருடனைத் தேட ஆரம்பித்தான். கண்டுபிடிக்க முடியவேயில்லை. ஆண்டுகள் உருண்டோடின. வீதியில் சந்தையில் நின்றபடியே அவன் “வந்துட்டயா யாகா“ என பெண்குரலோனைப் போலவே சப்தமிடத் துவங்கினான். பித்தேறிவிட்டதாக அவனைத் துரத்தினார்கள்.
அதன்பிறகான நாட்களில் ஊரின் ஏதோவொரு தெருவில் “வந்துட்டயா யாகா“ என்ற குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறுவர்கள் அந்தக் குரலை கேலி செய்து விளையாடினார்கள். சில நேரம் அப்படி குரல் கொடுக்கும் பரந்தன் மீது கல்லெறிந்து மகிழ்ந்தார்கள்.
••
குற்றமற்ற மகன்
தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும்.

லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் கேதரின் பெண்கள் உரிமைக்காகப் போராடுகிறாள்.
ஐந்து ஷில்லிங் போஸ்டல் ஆர்டரைத் திருடியதாகக் கூறி ஆஸ்போர்ன் கடற்படைக் கல்லூரியில் இருந்து 14 வயதான ரோனி நீக்கம் செய்யப்படுகிறான். வீடு திரும்பிய மகனிடம் தந்தை ஆர்தர் வின்ஸ்லோ விசாரணை மேற்கொள்கிறார்.

தான் தவறு செய்யவில்லை, தன்னைத் தவறாகத் தண்டித்துள்ளார்கள் என்று ரோனி உறுதியாகச் சொல்கிறான். தனது மகனின் கல்வி மற்றும் தனக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காக ஆர்தர் வின்ஸ்லோ போராடத் துவங்குகிறார்.
பணக்கார குடும்பத்திற்கு ஐந்து ஷில்லிங் பெரிய விஷயமில்லை. ஆனால் பொய் குற்றச்சாட்டு என்பது அழியாத கறை. அது வாழ்க்கை முழுவதும் சிறுவனைப் பின்தொடரும் ஆகவே உண்மையை நிலை நாட்ட வேண்டும் என ஆர்தர் நினைக்கிறார். ஆகவே முறையீடு செய்து கடிதம் அனுப்புகிறார்

கடற்படை கல்லூரியின் முடிவே இறுதியானது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது என்று பதில் அனுப்புகிறார்கள்.
கேதரின் மற்றும் குடும்ப நண்பர் மற்றும் வழக்கறிஞர் டெஸ்மண்ட் கேரி உதவியோடு நீதிமன்றம் செல்கிறார்கள்.. போஸ்டலை ஆர்டரை திருடியது ரோனி தான் என உறுதியான சாட்சிகள் இருப்பதாகச் சொல்லி மேல்முறையீட்டை தடுக்கிறார்கள். அவனைத் தபால் அலுவலகத்தில் நேரில் கண்ட சாட்சி இருக்கிறது. அவனிடம் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அது தன்னுடைய பணம் என ரோனி உறுதியாகச் சொல்கிறான்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சர் ராபர்ட் மோர்டன் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முன்வருகிறார். அவரைச் சந்திக்க வின்ஸ்லோ குடும்பம் செல்லும் காட்சி மிகவும் அழகானது. குறிப்பாக அவர் ரோனியிடம் மேற்கொள்ளும் குறுக்கு விசாரணை. அதில் தந்தை அடையும் ஏமாற்றம். கேதரின் அடையும் எரிச்சல்.
ராபர்ட் மோர்டன் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை பயன்படுத்திக் கொள்வார் எனக் கேதரின் நினைக்கிறாள். ஆகவே அவரைக் கடுமையாக விமர்சனம் செய்கிறாள்.
தனது நேர்மையைக் கேதரின் சந்தேகப்படுவதை ராபர்ட்டும் உணர்ந்து கொள்கிறார். அந்த வழக்கை மிகவும் உண்மையான முன்னெடுக்கிறார்.

வின்ஸ்லோ குடும்பம் இந்த வழக்கின் செலவுகள் காரணமாகப் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கிறார்கள். இதனால் வேலையாட்களைப் பணிநீக்கம் செய்வதற்கும், சொத்துக்கள் விற்கப்படுவதற்குமான நிலை ஏற்படுகிறது.
அரசிற்கு எதிராக வழக்கை தொடுப்பது எளிதானதில்லை என வின்ஸ்லோ உணருகிறார். கேதரின் அன்றாடம் நீதிமன்றம் செல்கிறாள். விசாரணையை நேரடியாகக் காணுகிறாள். தோல்விக்கு மேல் தோல்வி என வழக்கு பின்னடைவை சந்திக்கிறது.
இந்த நிலையில் ஆர்தர் வின்ஸ்லோ தனது வீண்பிடிவாதம் மற்றும் கௌரவம் காரணமாகவே வழக்கைத் தொடுத்திருப்பதாக அவரது மனைவி கிரேஸ் சண்டையிடுகிறாள். அந்தக் காட்சியின் போது ரோனி தனது அறைக்கதவை திறந்து வெளியே எழுந்து வந்து தந்தையிடம் கேட்பதும் அவர் பதில் தரும் விதமும் நேர்த்தியானது. ரோனி வழக்கின் காரணமாகக் கேதரின் திருமணம் தடைபடும் சூழல் ஏற்படுகிறது. அவள் சரியான முடிவை எடுக்கிறாள்.
என்ன நடந்தாலும் வழக்கை நடத்த வேண்டும் எனத் தந்தை மகள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். தீர்ப்பு அறிவிக்கபடுகிறது. வழக்கின் முடிவு என்ன ஆனது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நாடகமாகவும் மேடை நாடகமாகவும் நடத்தப்பட்ட கதை என்பதால் டேவிட் மாமெட் திரைக்கதையில் பெரிய மாற்றம் எதையும் செய்யவில்லை.
வழக்கறிஞர் டெஸ்மெண்ட் சிறப்பான கதாபாத்திரம். கேதரினைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகானது. ராபர்ட்டிற்கும் கேதரினிற்குமான உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக நீதிமன்ற இறுதி வாதம் முடிந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும் போது கேதரின் பேசுவது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.
மேடை நாடக பாணியில் படமும் உரையாடல்களின் வழியே நீள்கிறது. அந்தக் காலக் கட்ட உடைகள். மற்றும் வீடு, நீதிமன்றம், வாகனங்கள், எனத் தேர்ந்த கலை இயக்கம், ஹாதோர்ன், நார்தாம், ரெபேக்கா பிட்ஜியன்,மேத்யூ பிட்ஜியன், நீல் நார்த் என அனைவரின் சிறந்த நடிப்பு படத்தின் தனிச்சிறப்பு என்பேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் ஒப்பனை மற்றும் உடைகளில் கேதரின் மற்றும் கிரேஸ் கொள்ளும் கவனம். வீட்டுப்பணிப்பெண் எடுத்துக் கொள்ளும் உரிமை, என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சின்னச் சின்ன நுணுக்கங்களைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
விருதுநகரில்
ஆகஸ்ட் 3 ஞாயிற்றுகிழமை மாலை விருதுநகரில் நடைபெறும் பேராசிரியர் வினோத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.
JCI மற்றும் விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு ஸ்ரீ அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்வில் அம்பாள் ஆர் முத்துமணி அவர்கள் தலைமை ஏற்கிறார்.
தொழிலதிபர் ஆறுமுகச்சாமி மற்றும் தேன்மொழி அவர்கள் நூலினைப் பெற்றுக் கொள்கிறார்கள்
கல்வி அதிகாரி ஜான் பாக்கியா, முனைவர் ந. அருள்மொழி நூல் குறித்து உரையாற்றுகிறார்கள்.
பேராசிரியர் வினோத் ஏற்புரை வழங்குகிறார்.

July 25, 2025
திரைப்பயணி -3
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் காணொளித் தொடர் திரைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
