தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி.
தி காட் ஃபாதர் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. நேற்று இரவு அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம். பெரிதும் இளைஞர்கள். அதிலும் திரைத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள். தி காட் ஃபாதர் படத்தை எல்டி, ப்ளூ ரே டிஸ்க் வழியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆயினும் அதனைத் திரையில் காணுவது பரவசமளிக்கும் அனுபவம்.

1972ல் வெளியான இப்படம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததை முன்னிட்டு 2022ல் சிறப்புக்காட்சிகளைத் திரையிட்டார்கள். அன்றும் இதே அளவு வரவேற்பும் கூட்டமும் இருந்தது. அப்போதும் திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். மூன்று மணி நேரத் திரைப்படம்.
நேற்று திரையில் மார்லன் பிராண்டோ பெயர் ஒளிரும் போது அரங்கில் விசில் சப்தமும் கைதட்டுகளும் ஒங்கி ஒலித்தன. விட்டோ கோர்லியோனாக அவரைத் தவிர யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவரது உடல்மொழி, உடை. பேசும் விதம். கண்களில் உணர்ச்சியைக் காட்டும் அழகு என அற்புதம் செய்திருக்கிறார்.
படத்தின் துவக்க காட்சியில் எழும் நினோ ரோட்டாவின் இசை நிகரற்றது. படத்தின் தனிச்சிறப்புகளில் முக்கியமானது நினோ ரோட்டாவின் இசை. மனதை விட்டு நீங்காத இசைக்கோர்வைகள்.
கார்டன் வில்லிஸ் ஒளிப்பதிவு அபாரம். கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒளியும் இருளும் கலந்த காட்சிகள் மூலம் தனித்த அழகியலை உருவாக்கியுள்ளார்.
அல் பசினோ, ஜேம்ஸ் கேன், ராபர்ட் டுவால், ஸ்டெர்லிங் ஹேடன், டயானா கீட்டன் எனத் தேர்ந்த நடிகர்கள். சிறந்த கலை இயக்கம். நேர்த்தியான இசை, படத்தொகுப்பு. கொப்போலாவின் இயக்கம் என ஹாலிவுட் சினிமாவிற்குத் தி காட் ஃபாதர் புதிய பாதையை உருவாக்கியது.

இத்தாலிய பண்பாட்டினையும் உணவினையும் வழிபாட்டு முறையினையும் படம் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் வரலாறும் பங்களிப்பும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் இந்தக் குற்றவுலகம் எப்படி உருவானது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
குற்றவுலகிற்கும் அறம் தேவைப்படுகிறது. விசுவாசத்தை பிரதானமாக நினைக்கிறார்கள். ஐந்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் அந்த அறம் குறித்து விவாதிக்கபடுகிறது. பகையை கைவிடுவது எளிதானதில்லை. மகனை இழந்த இரண்டு தந்தைகள் பேசிக் கொள்வது அழகான காட்சி.
குற்றவுலகின் நாயகர்கள் எதிர்பாராத மரணத்தை சந்திக்கிறார்கள். அவர்கள் சாவு மின்சாரம் துண்டிக்கபடுவது போல சட்டென நடந்து முடிந்துவிடுகிறது. படத்தின் முடிவில் அப்படியான உணர்வே ஏற்படுகிறது.
கோர்லியோன் குடும்பத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார். குடும்ப உறவுகளின் நெருக்கம் மற்றும் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. தனது தங்கை அடிபட்டதைக் கண்டு சன்னி ஆவேசமடைவது, சன்னியின் இறப்பு செய்தியை அவனது அம்மாவிடம் எப்படி சொல்வது என்ற தயக்கம். மகள் மீது கோர்லியோன் காட்டும் அன்பு, பேரனுடன் அவர் விளையாடுவது என குடும்ப உறவுகளை படம் அழகாக சித்தரித்துள்ளது.
பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் பூர்வீகம் இத்தாலி. அவரது தந்தை ஒரு இசைக்கலைஞர். அவர் அமெரிக்காவில் குடியேறி இசைத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆகவே தான் கொப்போலாவை இந்தப் படத்தின் இயக்குநராகத் தேர்வு செய்தார்கள்
இதன் திரைக்கதையை எப்படி எழுதினோம் என மரியோ புசோ ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
இயக்குநருக்கான சம்பளத்துடன் படத்தின் வசூலில் ஆறு சதவீதம் தருவதாகக் கொப்போலாவுடன் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள்.ஆகவே படம் அடைந்த வெற்றி அவருக்குப் பெரிய பணத்தை அள்ளிக் கொடுத்தது.
நேற்று இந்தப் படத்தினைப் பார்த்தபோது நியூயார்க் நகரில் செயல்பட்ட ஐந்து இத்தாலிய அமெரிக்க மாஃபியா குடும்பங்களைப் பற்றிப் படம் அதிகமாக விவரிக்கவில்லை என்பது புரிந்தது.
போர்ஹெஸ் தனது புனைவில் நியூயார் கேங்ஸ்டர் மாங்க் ஈஸ்ட்மேன் குறித்தும் அவனுக்கும் போட்டியாளரான இருந்த பால் கெல்லியின் ஃபைவ் பாயிண்ட்ஸ் கும்பலைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதனை மையமாகக் கொண்டே Gangs Of New York படம் உருவாக்கபட்டிருக்கிறது.
குற்றவுலகமான போதை மருந்து, கடத்தல். மது, சூதாட்டம், அரசியல், மோசமான காவல்துறை, பேராசை கொண்ட வணிகர்கள் என யாவும் இந்தப் படத்தில் ஒன்று கலந்துள்ளன.
தி காட்பாதர் படத்திற்கு முன்னோடியாக உள்ளவை ஹாலிவுட்டின் Film noir படங்களே. அவை குற்றவுலகை, அதன் மனிதர்களை நிஜமாகச் சித்தரித்தன. Film noir படங்களிலிருந்து தி காட்பாதர் பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் வேறுபட்டிருக்கிறது. இதில் வரும் பெண்கள் குற்றவாளியைக் காதலிப்பவர்கள். தியாகம் செய்பவர்கள். அல்லது அந்த உலகை பற்றி அறிந்து கொள்ளாமல் குழந்தை, குடும்பம் என வாழ்க்கையை நடத்துகிறவர்கள். கோர்லியோனின் மனைவி. மைக்கேலின் மனைவி, மைக்கேலின் தங்கை என எல்லாப் பெண்களும் குற்றவுலகால் விழுங்கப்பட்டவர்களே.
படத்தின் துணைகதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறார்கள். மனதில் நிற்கும்படியாக நடிப்பும் அமைந்துள்ளது. பெரிதும் அரங்கிற்குள்ளாகப் படமாக்கபட்டிருந்தாலும் 1940களின் காலகட்டத்தை மறுஉருவாக்கம் செய்வதில் துல்லியமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
போலீஸ் மைக்கேல் மீது கைவைக்கும் போது தான் கதை உண்மையான திருப்பத்தைத் துவங்குகிறது. அங்கிருந்து மைக்கேல் உருமாறிவிடுகிறான்.
படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்களைத் திரையரங்கில் கைதட்டிக் கொண்டாடினார்கள். இந்தியத் தணிக்கை காரணமாகப் படத்தில் சில காட்சிகளைத் துண்டித்திருக்கிறார்கள்.
சிறிய அரங்கில் திரையிடுவதற்குப் பதிலாகப் பெரிய அரங்கில் இதனைத் திரையிட்டிருந்தால் இன்னும் அதிகமானோர் பார்த்திருக்க முடியும். செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

