S. Ramakrishnan's Blog, page 4
July 10, 2025
கடல் திரும்பும் திமிங்கலம்
ஈரானிய அனிமேஷன் இயக்குனர் ஹொசைன் மொலாயெமி மற்றும் ஷிரின் சோஹானி இயக்கத்தில் வெளியான இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது.

20 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. நான்கு கதாபாத்திரங்கள்.
போரின் பாதிப்பால் மனஅழுத்தம் கொண்ட தந்தை. அவரைக் கவனித்துக் கொள்ளும் மகள். கரையொதுங்கிய ஒரு திமிங்கலம். நான்காவது கதாபாத்திரமாக இருப்பது கடல்.

இந்தப் படத்தை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆனது என்கிறார் இயக்குநர். ஷிரின் சோஹானியின் தந்தை ஒரு சிப்பாய். ஈராக் போரின் காரணமாக அவரது ஒரு கண் பறிபோயிருந்தது. போரின் விளைவாகத் தீவிர மன அழுத்தம் ஏற்பட்டுச் சிகிட்சை எடுத்து வந்தார். ஆகவே அவரது சாயலில் படத்தில் வரும் கேப்டனை உருவாக்கியிருக்கிறார்கள்.
தந்தையும் மகளும் யாருமற்ற கடற்கரையொன்றில் வசிக்கிறார்கள். தந்தையின் அடக்க முடியாத கோபத்துடன் படம் துவங்குகிறது. அந்தக் கோபம் மீன் தொட்டியைச் சிதறடிக்கிறது. மகள் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். அப்போது கடற்கரையில் ஒரு திமிங்கலம் கரையொதுங்கியிருப்பதைக் காணுகிறாள்.

அதை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்காக அதன் மீது தண்ணீர் ஊற்றுகிறாள். தந்தையோ படகில் கயிற்றைக் கட்டி திமிங்கலத்தைக் கடலுக்குள் இழுத்து செல்ல முயன்று தோல்வி அடைகிறார். திமிங்கலம் அசையவேயில்லை. அதனை வெயில் மற்றும் கடற்பறவைகளிடமிருந்து பாதுகாக்க மகள் போராடுகிறாள்.

தந்தை திமிங்கலத்தைக் கடலில் சேர்க்க புதிய வழியைக் கண்டறிகிறார். அபாயமான அந்த வழியினைச் செயல்படுத்துகிறார்.
ஹெமிங்வேயின் The Oldman and the Sea நாவலின் மறுவடிவம் போல இப்படத்தை உணர்ந்தேன். நாவலில் சாண்டியாகோ தனது தூண்டிலில் சிக்கிய மீனுடன் போராடுகிறான். இதிலோ கரையொதுங்கிய மீனை திரும்ப அனுப்பி வைக்கப் போராடுகிறார் கேப்டன். நாவலில் வரும் சிறுவனுக்குப் பதில் இதில் மகள் இடம்பெற்றிருக்கிறாள்.
கரையொதுங்கியிருக்கும் திமிங்கலம் என்பது ஒரு குறியீடு. அவர்களுக்கு வெளியே உள்ள வாழ்க்கை தான் அந்தத் திமிங்கலம். செயலற்றதாக உள்ள திமிங்கலத்தைத் தனது இயல்பு உலகிற்கு அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கும் தேவையானது. இதனைத் தந்தை ஒருவிதமாகவும் மகள் ஒருவிதமாகவும் மேற்கொள்கிறார்கள்,
தந்தையின் கோபம் என்பது போரின் பின்விளைவு என்பதை மகள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாள். தந்தையால் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் கடந்தகாலத்தின் துர்நினைவுகளால் துரத்தப்படுகிறார். நினைவிலிருந்து இடைவெட்டி மின்னும் போர்களக் காட்சிகள் அழகாக உருவாக்கபட்டுள்ளன.
கரையொதுங்கிய திமிங்கலத்தின் மீது வெயில்படுகிறது. அதைத் தடுக்க மகள் அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் குளிர்ச்சிப்படுத்துகிறாள். ஈரமான துணிகளை விரிக்கிறாள். வண்ணத் துணிகளுடன் உள்ள திமிங்கலத்தின் தோற்றம் விநோதமாகவுள்ளது.
தந்தை ஒரு காட்சியில் ஆணி அடித்துப் புகைப்படம் ஒன்றை மாட்ட முயலுகிறார். அப்போது வெளிப்படும் அவரது கோபம். கடந்தகால நினைவுகள் அவரை எந்த அளவிற்குப் பாதித்துள்ளதை என்பதை நன்றாக உணர வைக்கிறது
தந்தை ஒரு சைப்ரஸ் மரத்தைப் போன்றவர், பாரசீகக் கலாச்சாரத்தில் சைப்ரஸ் வலிமை, அழியாமை மற்றும் துக்கத்தின் அடையாளமாகும்.
கடல் தந்தையின் மனநிலையை அடையாளப்படுத்துகிறது. கடலின் கொந்தளிப்பு மற்றும் அமைதி இரண்டும் அவரது வெளிப்பாடே.
படத்தின் அனிமேஷன் பிரமிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படம் கையால் நெய்யப்பட்ட பாரசீக கம்பளம் போன்றது என்கிறார் இயக்குநர். அது உண்மையே.
வண்ணத்தேர்வு மற்றும் கேமிரா கோணங்கள்.கதாபாத்திர வடிவாக்கம், காட்சிகள். வரையப்பட்ட விதம், அஃப்ஷின் அஸிஸியின் இசை, என யாவிலும் மிகுந்த கலை நேர்த்தியைக் காண முடிகிறது.
••
கோவை புத்தகத் திருவிழாவில்
கோவை புத்தகத் திருவிழா 20255 கொடீசியா அரங்கில் ஜுலை பதினெட்டு துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
அரங்கு எண் 67.

ஜுலை 19 சனிக்கிமை முதல் ஜுலை 21 திங்கள் வரை மூன்று நாட்கள் புத்தகத் திருவிழாவில் இருப்பேன்.
விருப்பமான வாசகர்கள். நண்பர்கள் சந்திக்கலாம்


ஜுலை 21 திங்கள் மாலை ஆறுமணிக்கு கொடீசியா அரங்கில் ``புத்தகங்களின் சரித்திரம்`` என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.
ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கி.பி. 1450 ஆம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது ஐரோப்பாவில் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்றைய மின்புத்தகக் காலம் வரை புத்தகங்கள் கடந்து வந்த மாற்றங்களை, வெற்றி தோல்விகளை, தடைகளை, வழக்குகளை, விரிவாகப் பேச இருக்கிறேன்.
அத்தோடு நூலகங்கள் உருவான விதம். உலகப்போரின் போது புத்தகங்களைக் காக்க நடைபெற்ற தீரச்செயல்கள். காலனிய ஆட்சி காலத்தில் இந்தியாவில் புத்தகங்கள் அச்சிடப்பட்ட வரலாறு. புத்தகங்களை கடத்தியவர்கள். அரிய நூல் சேகரிப்பாளர்கள். ரகசியப் புத்தகங்கள் எனப் புத்தகங்களின் அறியப்படாத வரலாற்றையும் நினைவுகளையும் பற்றியதாக எனது உரை அமையும்.
**
July 7, 2025
குற்றமுகங்கள் 18 திருத்தேரி
சந்திரகிரி கொலை வழக்கு என்ற துப்பறியும் நாவல் வெளியான ஆண்டு 1937 ஆக இருக்கலாம். அதை எழுதியவர் சோம.வெங்கடலட்சுமி. எட்டணா விலையில் அந்த நாவல் விற்கபட்டது.
யாரோ ஒரு வழக்கறிஞர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் பெயரில் கதை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள்.

பாண்டுரங்கன் அந்த நாவலை விலை கொடுத்து வாங்கவில்லை. அது போல நாவல் ஒன்றை தான் எழுதியிருப்பதாகவும், அதை அச்சிட வேண்டும் என்றும் கோபால்ராவ் அச்சகத்திற்கு வந்த திருத்தேரி கொடுத்த புத்தகத்தைத் தான் படித்தான்.
திருத்தேரிக்கு நாற்பது வயதிருக்கும். வட இந்தியர்கள் அணிவது போன்ற பைஜாமா ஜிப்பா உடையை அணிந்திருந்தார். வெற்றிலைக்காவி படிந்த பற்கள். இரண்டு கைகளிலும் ஒரே போன்ற பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தார்.
பாண்டுரங்கனுக்கு அவனது அத்தையின் வழியாகவே புத்தகம் படிக்கும் ஏற்பட்டது. வள்ளல் குருநாதன் இலவச நூலகத்தில் நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறான். அந்த ஆசையில் தான் அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியில் சேர்ந்தான்.
அவனது அச்சகத்தில் திருமண அழைப்பிதழ்கள், மருந்துக்கம்பெனி மற்றும் ஏலக்கடை நோட்டீஸ்கள், நாடக விளம்பரங்களை அச்சிட்டார்கள். ஒன்றிரண்டு பக்திபாடல் புத்தகங்களையும் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு துப்பறியும் நாவலை அச்சிட வேண்டும் என ஒருவர் கேட்டு வந்த போது முதலாளிக்கு கொலை, திருட்டு போன்ற புத்தகங்களை அச்சிட்டால் தெய்வகுற்றமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
திருத்தேரி தனது நாவலை அவசரமாக அச்சிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அச்சுக்கூலி இரண்டு மடங்கு அதிகம் தருவதாகவும் சொன்னதால் உடனடியாக அச்சுக்கோர்க்கும்படி பாண்டுரங்கத்திடம் ஒப்படைத்தார்.
அச்சிடக் கொடுத்துள்ள நாவலை விடவும் சந்திரகிரி கொலை வழக்கை படிப்பதில் தான் பாண்டுரங்கனுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. ஆகவே அதனை முதலில் படிக்க ஆரம்பித்தான்.
முதல் பக்கத்திலே அங்குராஜின் கொலை நடந்துவிடுகிறது. அவரைக் கொன்றவர் யார் எனக் கண்டறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வருகிறார். விசாரணை செய்கிறார். சந்தேகத்திற்குரிய நபர்களைப் பின்தொடருகிறார். கடைசியில் குற்றவாளி ஒரு பெண்ணாக இருக்கிறாள். கனகம்மாள் எப்படி அந்தக் கொலையைச் செய்தாள் என்பதை இன்ஸ்பெக்டர் நாவலின் இறுதியில் விவரிக்கிறார்.
நாவலை படித்து முடித்தவுடன் அத்தனையும் கண்முன்னே நடந்தது போல வியப்பாக இருந்தது. எப்படி சோம.வெங்கடலட்சுமியால் இப்படி ஒரு நாவலை எழுத முடிந்தது. இது அவரது கற்பனையா, உண்மைக்கதையா,. அல்லது யாராவது எழுதி அவள் பெயரில் வெளியிட்டு விட்டார்களா எனக் குழப்பமாக இருந்தது.
சோம. வெங்கடலட்சுமி பற்றி தெரிந்து கொள்ள தங்கள் அச்சகத்தின் வாடிக்கையாளரும் ஜோதிடருமான ரங்கம்பிள்ளையைச் சந்தித்தான். அவரும் இந்த நாவலைப் படித்திருந்தார்.
“அந்தம்மா குடியாத்ததுல இருக்காங்க. ராவ்பகதூர் சோமசுந்தரத்தோட மகள். இந்தக் கதையில வர்றது எல்லாம் அவங்க குடும்பத்துல நடந்தது. அங்குராஜ் அந்தம்மாவோட சொந்த அண்ணன்“.
“அப்போ கொலை செய்த கனகம்மா யாரு“ என்று கேட்டான் பாண்டுரங்கன்.
“அது கற்பனை. இன்னைக்கு வரைக்கும் அந்தக் கொலையை யார் செய்ததுனு கண்டுபிடிக்க முடியலை“
“கதையில வர்றது எல்லாம் நிஜமில்லையா“
“அட முட்டாளே. கதையில எது நிஜம் எது பொய்யுனு கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை வெங்கடலட்சுமியே அந்தக் கொலையைச் செய்திருக்கலாம்“
“தானே ஒரு கொலை செய்துட்டு அதை யாராவது கதையா எழுதுவாங்களா“.
“அப்படியும் நடக்கலாம். மனுச மனசை யாராலும் புரிஞ்சிகிட முடியாது. எத்தனை கேஸ்ல இப்படிப் பாத்துருக்கேன் தெரியுமா“
அதைக் கேட்டதும் பாண்டுரங்கனுக்குச் சோம.வெங்கடலட்சுமியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால். குடியாத்தம் வரை போய் வருவதற்கான பணம் அவன் கையில் இல்லை. லீவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் திருத்தேரி அச்சிடுவதற்காகக் கொடுத்த துப்பறியும் நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தான்.
ஆச்சரியம் அதுவும் சந்திரகிரி கொலை வழக்கினைப் பற்றியதே. இந்தக் கதையிலும் அங்குராஜ் கொல்லப்படுகிறான். இன்ஸ்பெக்டர் வருகிறார். கதையின் ஆரம்பத்திலே கனகம்மா மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி அவள் இல்லை என இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்துவிடுகிறார். கொலையைச் செய்தவர் அங்குராஜின் தந்தை ராவ்பகதூர் சோமசுந்தரம் அவர் ஏன் அந்தக் கொலையைச் செய்தார் என்பதை இன்ஸ்பெக்டர் கடைசியில் விளக்குகிறார்.
இதைப்படித்து முடித்தவுடன் பாண்டுரங்கத்திற்கு இரண்டில் எது நிஜம் என்ற கேள்வி எழுந்தது.
சோம.வெங்கடலட்சுமி நாவலுக்குப் போட்டியாக நாவல் எழுதிய திருத்தேரி யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி அவர் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்றான்.
திருவல்லிகேணி கணபதி மெஸ் சந்துக்குள் இருந்த ஒரு வீட்டில் திருத்தேரி குடியிருந்தார். பாண்டுரங்கத்தைப் பார்த்தவுடன் “புக் ரெடியாகிருச்சா“ என்று கேட்டார்.

அவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு “இந்த நாவல் சோம.வெங்கடலட்சுமி. எழுதி ஏற்கனவே வெளியாகியிருக்கு. நாம வேற பேர்ல திரும்பப் போட்டா.. கோர்ட் கேஸ் ஆகிரும்னு முதலாளி பயப்படுறாங்க“ என்றான்
“அது வேற நாவல். இது வேற நாவல்“
“நான் சந்திரகிரி கொலைவழக்குப் படிச்சிருக்கேன். ரெண்டும் ஒண்ணு தான். கனகம்மாவுக்குப் பதிலா உங்க நாவல்ல ராவ்பகதூர் கொலை செய்றார். “
“அது தான் உண்மை. கனகம்மா கொலை செய்யலை. அப்படி ஒரு பொண்ணே அந்த வீட்ல கிடையாது “
“அது உங்களுக்கு எப்படித் தெரியும்“
“இது உண்மையில நடந்த கதை. எனக்கு நல்லா தெரியும். ஏன்னா நான் தான் சோம. வெங்கடலட்சுமியோட புருஷன். அவங்க அப்பாவை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு நாவலை எழுதியிருக்கா.. இப்போ உலகமே கனகம்மாவை கொலையாளியா நினைக்குது.
“நீங்க போலீஸ்ல சொல்ல வேண்டியது தானே“.
“ நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ரெண்டு வருஷம் முன்னாடியே எனக்குச் சித்தபிரம்மைனு வீட்டைவிட்டு துரத்திவிட்டாங்க.. அதான் நாவலா எழுதியிருக்கேன். “
“நீங்க சொல்றது தான் உண்மைனு நாங்க எப்படி நம்புறது. “
“அவ சொன்ன கதையை நம்புறீங்க. நான் சொல்ற உண்மைய நம்பமாட்டீங்களா“
“நீங்களும் கதை தான் எழுதியிருக்கீங்க. “
“அவளோடது கற்பனை.. என்னோடது நிஜம்“
“படிக்கிறவங்களுக்கு ரெண்டு ஒண்ணு தான்“.
“எது நிஜம்னு படிக்கிறவங்க முடிவு செய்யட்டும். நீங்க வெளியிடுங்க. கேஸ் போட்டா நான் நடத்துறேன். “
திருத்தேரியின் நாவலை அவர்கள் அச்சிட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அது வரவேற்பு பெறவில்லை. எந்தப் பத்திரிக்கையிலும் அதற்கு விமர்சனம் வரவில்லை. ஆனால் சோம.வெங்கடலட்சுமியின் நாவல் திரைப்படமாக உருவாக்கபட்டது. பெரிய வெற்றியை அடைந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் திருத்தேரி தனது அறையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். அவரை யார் கொன்றது என்று தெரியவில்லை. அந்த நிகழ்வைத் தனது அடுத்த நாவலாகச் சோம. வெங்கடலட்சுமி எழுதினாள்.
இதில் திருத்தேரியைக் கொன்றது கனகம்மாளின் கணவன் சாம்பசிவம். அவன் கொலையை எப்படித் திட்டமிட்டுச் செய்தான் என்று விரிவாக விளக்கியிருந்தாள். அந்த நாவல் வெற்றிபெறவில்லை. அத்தோடு திருத்தேரி கொலைவழக்கு காவல்துறையின் தீவிர விசாரணைக்கும் உள்ளானது. அதில் சில உண்மைகள் வெளிப்பட்டன.
சொத்தை அடைவதற்காகத் திருத்தேரியும் அவரது மனைவி சோம. வெங்கடலட்சுமியும் இணைந்து அங்குராஜை கொலை செய்திருக்கிறார்கள். அதைத் திசைதிருப்ப அங்குராஜிற்கு ஒரு காதலி இருப்பது போலச் சோம. வெங்கடலட்சுமி நாவல் எழுதி உலகை நம்ப வைத்திருக்கிறாள்.
ராவ் பகதூர் ஊதாரியான தனது மருமகன் திருத்தேரி மீது சந்தேகம் கொண்டு கண்காணிக்கச் செய்திருக்கிறார். ஆகவே சோம. வெங்கடலட்சுமியே தனது தந்தையைக் கொலை வழக்கில் மாட்டிவிட இன்னொரு நாவலை எழுதி அதைத் திருத்தேரி பெயரில் வெளியிட வைத்திருக்கிறாள்.
இந்தச் சதியை அறிந்து ஆத்திரமான ராவ் பகதூர் ஆளை அனுப்பித் திருத்தேரியை கொலை செய்திருக்கிறார். அதை மறைப்பதற்காகத் தனது மகளை வற்புறுத்தி இன்னொரு நாவலையும் எழுத செய்திருப்பதும் தெரிய வந்தது.
நிஜத்தை விடவும் எழுத்தில் குற்றம் பிரம்மாண்டமாகிறது. சிக்கலானதாகிறது. கதையில் இடம்பெறும் ஒரு துளி ரத்தம் ஒளிரும் சூரியனைப் போல உருமாறி விடுகிறது. நடந்து முடிந்தபின்பு விஸ்வரூபமாக வளர்ந்துவிடும் தாவரம் குற்றமே.
காவல்துறை கைது செய்வதற்குள் ராவ்பகதூர் தற்கொலை செய்து கொண்டதோடு தனது எல்லாச் சொத்துகளையும் கூன்போக்கி மடத்திற்கு எழுதி வைத்துவிட்டார்.
குடியிருக்கும் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் வெங்கடலட்சுமி இழந்தாள் . நிழலைப் போல ஒடுங்கிப் போனாள். மூடிய கதவிற்குப் பின்பாக அவளுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதன் பின்பாக அவள் எதையும் எழுதவில்லை.
பாதியில் கைவிடப்பட்ட நாவலின் துணை கதாபாத்திரம் ஒன்றைப் போலானது அவளது வாழ்க்கை.
July 5, 2025
விழித்திரு
குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் ஒருவனின் இரவு வாழ்க்கையை விவரிக்கிறது ஜாக்தே ரஹோ.
1956ல் வெளியான இந்தி திரைப்படம். எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸின் கதை. சோம்பு மித்ரா இயக்கியுள்ளார், ஒற்றை வரிக் கதையைக் கொண்டு மிகச் சிறப்பான படத்தை ராஜ்கபூர் எடுத்திருக்கிறார்.

கல்கத்தாவின் ஒரு இரவில் படம் தொடங்குகிறது
ஏழை விவசாயியான ராஜ்கபூர் வேலை தேடி நகரத்திற்கு வருகிறார். கிராமவாசியான அவருக்குப் பெயர் கிடையாது. அவர் ஒரு அடையாளம் மட்டுமே. அவரது தோற்றத்தைக் கண்டு பலரும் துரத்துகிறார்கள். காவலர் அவரைத் திருடன் என நினைத்து எச்சரிக்கை செய்கிறார். பசியில் வாடி அலையும் அவர் தாகத்தில் எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா எனத் தேடுகிறார். அவ்வளவு பெரிய நகரில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. தெருக்குழாயில் காற்று தான் வருகிறது.

தண்ணீர் கிடைக்ககூடும் எனக் குடியிருப்பு ஒன்றில் ரகசியமாக நுழைந்துவிடுகிறார். குழாயில் தண்ணீர் குடிக்க முயலும் போது அவரைத் திருடன் என நினைத்துக் காவலாளி கூக்குரல் எழுப்புகிறான்.பயந்து தப்பியோடுகிறார் அவரைக் குடியிருப்புவாசிகள் துரத்துகிறார்கள். யாரைத் துரத்துகிறோம் எனத் தெரியாமல் அவர்கள் ஆவேசமாகக் கையில் தடியோடு வரும்காட்சி வேடிக்கையானது. இந்தத் திடீர் திருடன் பிரச்சனையால் ரகசியமாகச் சந்திக்கத் திட்டமிட்ட காதல்ஜோடி பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கிராமவாசி ஒரு வீட்டின் சமையலறையில் ஒளிந்து கொள்கிறார். சில நிகழ்வுகளைச் சந்திக்கிறார். வேறு ஒரு வீட்டில் குடிகாரக் கணவனால் தினமும் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார், அது போலவே மோசடி செய்ய நினைக்கும் பொய்யர்கள். பித்தலாட்ட பேர்வழிகள் எனப் பலரையும் காணுகிறார் அந்தக் குடியிருப்பினுள் இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
சினிமாவிற்குத் தேவை பெரிய கதையில்லை.சிறிய கதைக்கரு. அதன் இணைப்பாக விரியும் நிகழ்வுகள். காட்சிகளின் நம்பகத்தன்மை. மற்றும் சீரான வளர்ச்சி. இவற்றைச் சரியாகப் பின்னிவிட்டால் நல்ல திரைக்கதை வந்துவிடும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.
நகரத்தில் இரவு காவலாளிகள் தெருவில் வலம் வரும்போது ‘ ஜாக்தே ரஹோ, ஜாக்தே ரஹோ!’ என்று சப்தம் எழுப்புகிறார்கள். நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி எதுவும் அறியாமல தூங்கிவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம். இது ஏமாற்றுதனங்கள் நிறைந்த நகரம் என நினைவுபடுத்துவது போலிருக்கிறது அந்த எச்சரிக்கை ஒலி

இரவெல்லாம் தாகம் தீராமல் தவித்த விவசாயி அதிகாலையில் ஒரு இளம்பெண் கோவிலில் பாடுவதைக் காணுகிறார். அந்தப் பெண் கிராமவாசிக்குக் குடிக்கத் தண்ணீர் குடிப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சிறப்பானது. குறிப்பாக விடிகாலை வெளிச்சத்தில் அந்தப் பெண் பாடும் பாடல் காட்சி மறக்கமுடியாதது.
இந்தக் கதையில் வரும் குடிநீருக்கு பதிலாக ஒரு மனிதன் இரவு உறங்குவதற்கு நகரில் இடம் தேடினால் இதே நிகழ்ச்சிகளைத் தான் சந்திக்க வேண்டியது வரும். அந்த வகையில் இப்படம் இன்றும் பொருத்தமாக இருக்கிறது.
ஜாக்தே ரஹோ.திரைப்படம் சோவியத் யூனியனில் சப்டைட்டிலுடன் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் நல்ல பிரதி youtubeல் காணக்கிடைக்கிறது.
July 1, 2025
ஹிந்தி மொழியாக்கம்
ஹிந்தி இலக்கியத்திற்கான சர்வதேச இதழில் எனது சிறுகதை “கேள்வியின் நிழல்“ மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் அலமேலு கிருஷ்ணன்


நன்றி
அலமேலு கிருஷ்ணன்.
தெலுங்கு மொழியாக்கம்
kathavasudha இணைய இதழில் எனது `சிற்றிதழ்` சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது
இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் ஜிலெல்லா பாலாஜி

இணைப்பு
తమిళ కథ : చిరు సంచిక
நன்றி
ஜிலெல்லா பாலாஜி
kathavasudha
June 30, 2025
புதுமைப்பித்தன் உரை
நேற்று நடைபெற்ற புதுமைப்பித்தன் களஞ்சியம் நிகழ்வில் நான் ஆற்றிய உரை. ஸ்ருதி டிவி வெளியிட்டுள்ளது.
நன்றி
கபிலன்/ ஸ்ருதி டிவி
June 29, 2025
புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா
ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்துள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
சென்னை அடையாறில் உள்ள எம்ஐடிஎஸ் அரங்கில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு (30.6.25) இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
புதுமைப்பித்தன் நினைவு நாளில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பு நூல் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின்பு அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள். அஞ்சலிகள் மற்றும் புதுமைப்பித்தன் குடும்ப நிதி குறித்த தகவல்கள். சுந்தர ராமசாமி தொகுத்த புதுமைப்பித்தன் நினைவு மலர். சிங்கப்பூரில் வெளியான புதுமைப்பித்தன் குறித்த விமர்சனக் கட்டுரைகள். மலேயாவில் வெளியான புதுமைப்பித்தன் நினைவு மலர், புதுமைப்பித்தனின் கவிதைகள் குறித்த விவாதங்கள். இடதுசாரிகளின் விமர்சனப் பார்வைகள், கமலா விருத்தாசலம் எழுதிய நினைவுக்குறிப்புகள், புதுமைப்பித்தனோடு பழகியவர்களின் நினைவுப்பதிவுகள் என விரிவான தகவல்களை, அரிய ஆவணங்களைக் கொண்டிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைச் செம்பதிப்பாக கொண்டு வந்து சிறப்பித்த ஆ. இரா. வேங்கடாசலபதி தனது அயராத உழைப்பு மற்றும் தேடலின் விளைவாக இந்த பெருந்தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார். 1167 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.
அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
June 28, 2025
வரலாறும் கவிதையும்
சீனாவின் புகழ்பெற்ற மூன்று கவிஞர்களான வாங் வெய், லி பெய், மற்றும் காவ் ஷி வாழ்வை ஒரே திரைப்படத்தில் காண முடிகிறது. 2023ல் வெளியான Chang An என்ற அனிமேஷன் திரைப்படம் சீனக் கலை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலமான டாங் அரசமரபைக் கொண்டாடுகிறது. இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்திற்குள் ஒரு நூற்றாண்டின் வாழ்வைக் காண முடிகிறது.

எட்டாம் நூற்றாண்டு சீனாவின் துல்லியமான சித்தரிப்பு. அழகிய நிலக்காட்சிகள். விழாக்கள் மற்றும் போட்டிகள். யுத்தம் நடக்கும் விதம். பழைய அரண்மனைகள். நடனப்பெண்கள், அரசியல்மோதல்கள் எனப் படம் டாங் வம்சத்தின் முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
போர்களத்தில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கும் தளபதி காவ் ஷியின் பார்வையில் படம் விரிவடைகிறது.
காவ் ஷி டாங் வம்சத்தில் ஒரு முன்னணி தளபதியாகவும் கவிஞராகவும் இருந்தவர். போர்களத்தில் தோல்வியுற்று தனது வாழ்வை முடித்துக் கொள்ள முயலும் காவ்வைத் தேடி வரும் அரசப் பிரதிநிதி கவிஞர் லி பெய் பற்றி விசாரிக்கிறார்.

தனது நண்பன் லிபெய் பற்றிய கடந்த கால நினைவுகளைக் காவ் ஷி விவரிக்கத் துவங்குகிறார். அவர்களின் நட்பு துவங்கிய விதம். அரசாங்க பணியில் சேருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள். தனது வீரத்தை பயன்படுத்திப் படைப்பிரிவில் சேருவதற்காக முயலும் காவ் ஷியின் போராட்டம், போர்களத்தில் வெளிப்படும் காவ் ஷியின் வீரம் எனப் படம் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை விரிவாகப் பேசுகிறது.
வணிகரின் மகன் என்பதால் லிபெய்யால் அரசாங்க பணியில் சேர இயலவில்லை. அன்றைய சீனாவில் செல்வம் படைத்த வணிகர் என்றாலும் சமூகத்தின் இரண்டாம் தட்டில் இருப்பவராகவே கருதப்பட்டார்கள். ஆகவே அரச பரம்பரையினருக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் பரிந்துரையைப் பெறாமல் அரசாங்க வேலை கிடைக்காது. இந்த இரண்டும் இல்லாத லி பெய் அரண்மனை காவலர்களால் துரத்தியடிக்கபடுகிறார்.

லி பெய்யும் காவ் ஷியும் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். குடிக்கிறார்கள். கவிதை பாடுகிறார்கள். புகழ்பெற்ற சீனக்கவிதைகள் காட்சிகளாக மாறும் அற்புதத்தைத் திரையில் காணுகிறோம்.
ஹாலிவுட் அனிமேஷன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சீன அனிமேஷன். இதில் ஒவியத்திலிருப்பது போன்று வண்ணங்கள் மற்றும் சட்டகங்களை உருவாக்குகிறார்கள். சீன நிலக்காட்சி ஒவியங்கள் உயிர் பெறுவது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த இசை படத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது

சீனாவில் இரவு நேரத்தில் மது அருந்தும் கவிஞர்கள் மகிழ்ச்சியின் ஒரு தருணத்தைப் படம்பிடிக்க அங்கேயே ஒரு கவிதை இயற்றுவார்கள். அதைப் பரிசாக அங்கே விட்டுவிடுவார்கள். அப்படிக் கவிதைகளாகத் தொங்கும் மதுவிடுதி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. மதுவிடுதியில் நிரந்தரமாக உங்கள் கவிதை இடம் பெற வேண்டும் என்றால் உயர்குடி பிறந்தவராக இருக்க வேண்டும். மற்ற கவிஞர்களுக்கு அந்த மரியாதை கிடைக்காது. அப்படி ஒரு மதுவிடுதியில் லிபெய்யின் புகழ்பெற்ற கவிதை பாடப்படுகிறது. அதனை மதுவிடுதி ஏற்கவில்லை. ஆனால் மக்கள் மனதில் அந்தக் கவிதை நிரந்தரமாகி விடுகிறது.
வாங் வெய் சிறந்த கவிஞர் மட்டுமின்றிச் சிறந்த இசைக்கலைஞரும் ஆவார். அரச குடும்பத்தினருக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்தும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கே அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு. மற்றும் பாராட்டு அன்று அவர் பெற்றிருந்த புகழைக் காட்டுகிறது.

தொடர்ந்து போரில் ஈடுபடும் காவ் ஷி தான் ஒராண்டாகக் கவிதை எதையும் எழுதவில்லை என்று கவலைப்படுகிறார். திருமணத்தின் வழியாகத் தனக்கு உயர்குடி அந்தஸ்து கிடைக்க்கூடும் என்பதால் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை லிபெய் திருமணம் செய்து கொள்ள முயலுகிறார். அதைக் காவ் ஷி ஏற்கவில்லை. திருமணத்தின் பின்பு லி பெய் அவமானங்களைச் சந்திக்கிறார். அந்தக் குடும்பம் அவரை வெளியேற்றுகிறது. அரண்மனையிலிருந்து கவிதை பாட அழைப்பு கிடைத்தும் அவரது சுதந்திரமனப்பான்மை காரணமாகத் துரத்தப்படுகிறார். வாழ்வில் பொருளாதார ரீதியாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவர் ஒரு போதும் கவிதையை விற்பனைப் பொருளாகக் கருதவில்லை. முடிவில் ஒரு தாவோயிஸ்ட் ஞானியாக மாறுகிறார்.
லிபெய்யின் வாரிசாகக் கருதப்படும் கவிஞர் டு ஃபூ இதில் சிறுவனாக வருகிறார். அவர் காவ் ஷியோடு கவிதை பேசுகிறார்.
லி பெய் உடனான காவ் ஷியின் உறவு இணைந்தும் முரண்பட்டும் செல்கிறது. தலைமைத்துவத்திற்கான காவோவின் நேர்மையான அணுகுமுறை வேறு. லியின் கவலையற்ற, கலகத்தனமான இயல்பு வேறு. எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அவர்கள் ஆழமான நட்பினைக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதிப் போரின் முடிவில் வெற்றியை அடைந்த, காவோ ஷி தனது ஈட்டியை கீழே போட்டுவிட்டு தனது கவிதைகளுடன் தலைநகருக்குத் திரும்புகிறார். அங்கே தனது கவிதைகளை அவர் வாசிப்பதை ஒரு சிறுவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். கவிதையின் இடம் என்றும் நிரந்தரமானது என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

லிபெய்யின் கவிதைகளை நீங்கள் வாசித்திருந்தால் அந்தக் கவிதைகள் எந்தச் சூழலில் எப்படி எழுதப்பட்டன என்பதை இந்தப் படத்தின் வழியே அறிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவரது கவிதைகள் உங்களுக்கு அறிமுகமாகவில்லை என்றாலும் படத்தின் வழியே அவரது கவிதைகளையும் கவிதை எழுதும் தருணங்களையும் அறிந்து கொள்வீர்கள்.
அனிமேஷன் திரைப்படம் என்ற அளவில் இப்படம் கவிஞர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. அதுவும் போர்களச் சூழலுக்கு நடுவே கதை நடக்கிறது என்பதால் லி பெய்யின் வாழ்வு படத்தில் மிகவும் சுருக்கமாகச் சித்தரிக்கபட்டுள்ளது.
லி பெய்யின் வரலாற்றை The Banished Immortal: A Life of Li Bai எனச் சீன எழுத்தாளர் Ha Jin தனி நூலாக எழுதியிருக்கிறார். அதில் விரிவான தகவல்கள், உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சீனாவில் இந்தப் படத்தைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிடுகிறார்கள். தங்கள் பாடத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கவிஞர்களின் வாழ்க்கையை மாணவர்கள் அனிமேஷன் படமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். தங்கள் வரலாற்றையும் இலக்கியத்தையும் சீனத் திரையுலகம் எளிதாக அடுத்தத் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறது.
மிக அழகான இந்த அனிமேஷன் திரைப்படத்தை LOVE LETTER TO GOLDEN AGE OF POETRY என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அது உண்மையே.
June 25, 2025
உப்பின் குரல்
குஜராத்தின் கட்ச் பாலைவனப்பகுதியில் எப்படி உப்பு விளைவிக்கபடுகிறது என்பதைப் பற்றிய ஆவணப்படம். ஃபரிதா பச்சாவின் மை நேம் இஸ் சால்ட். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. ஆவணமாக்கம் எனப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என அழைக்கபடும் இந்தப் பாலைவனப் பகுதி உப்புக் கனிமங்கள் கொண்ட சதுப்பு நிலமாகும். மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்புகிறது.. அக்டோபரில் தண்ணீர் வடிந்த பிறகு, உப்பு விளைவிக்கும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இங்கே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள்.
கிணறு தோண்டி அதில் சுரக்கும் உப்புத் தண்ணீரை டீசல் பம்பினைப் பயன்படுத்தி வெளியேற்றி தாங்கள் உருவாக்கி வைத்துள்ள உப்புவயலில் செலுத்துகிறார்கள். பின்பு சூரிய வெப்பத்தால் தண்ணீர் தானே ஆவியாகி உப்பு படிகங்களாக மாறும் வரை காத்திருக்கிறார்கள்.

அப்படி உப்பு விளைவிப்பதற்காகச் சனபாய் குடும்பம் தங்கள் துருப்பிடித்த டிராக்டரில் வந்து சேருவதில் படம் துவங்குகிறது.

அவர்கள் பாலைவனத்தில் தற்காலிகமான குடியிருப்பை உருவாக்குகிறார்கள். மின் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு கலந்த களிமண் நிலத்தில் மரபான முறையில் கிணறு தோண்டுகிறார்கள். டீசல் இயந்திரத்தின் மூலம் கிணற்றிலுள்ள உப்புத் தண்ணீரை வெளியே எடுக்கிறார்கள். உப்பு வயலில் தண்ணீரைப் பாய்ச்சுகிறார்கள். உப்பு விளையத் துவங்குகிறது.
சனபாய் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த உப்பு விளைவிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள். பராம்பரியமாக உப்பு விளைக்கும் கலையை அறிந்தவர்கள். அவர்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து உழைக்கும் விதம். தற்காலிக குடியிருப்பில் சிறுவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் பருவகால மாற்றத்தால் ஏற்படும் சிரமங்கள் எனப் பாலைவன வாழ்வினை ஆவணப்படம் உண்மையாக விவரிக்கிறது.
சனபாயின் இரண்டு பிள்ளைகள் தினமும் காலை 11 மணிக்கு, உப்பு வயலில் வேலை முடிந்ததும் பள்ளிக்குச் சைக்கிளில் செல்கிறார்கள். அந்தப் பாலைவனத்தில் அவர்களுடன் விளையாட வேறு யாருமில்லை. ஆகவே காகித பூக்களைச் செய்கிறார்கள். கதை பேசுகிறார்கள்.
சனபாய் குடும்பம் தொலைவில் வசிக்கும் இன்னொரு குடும்பத்துடன் கண்ணாடி சில்லில் சூரிய ஒளியினை ஒளிரச் செய்வதன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். சனபாயின் மனைவி தேவுபென் விறகு வெட்டுவதற்காக வெகு தொலைவு நடந்து செல்கிறார். வாரத்திற்கு ஒரு முறை வரும் ஒரு தனியார் டேங்கரிலிருந்து குடும்பத்திற்கான குடிதண்ணீரை வாங்குகிறார்கள். அங்கே செல்போன் வேலை செய்கிறது ஆனால் சிக்னல் கிடைப்பது எளிதாகயில்லை.
உப்பு விளைவிப்பதற்கு முன்பாகவே சனபாய் ஒரு பெரிய தொகையை உப்பு வியாபாரியிடமிருந்து முன்பணமாக வாங்கியிருக்கிறார்.. டீசல் பம்பிற்குத் தேவையான டீசல் வாங்கவும் அவருக்குப் பணம் தேவை. மற்றும் குடும்பத்தோடு பாலைவனத்தில் வசிக்கத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். எட்டு மாத காலப் பாலைவன வாழ்க்கை எதிர்பாராத சிரமங்களைக் கொண்டது.

யாருமற்ற பாலைவனத்தினுள் டீசல் இயந்திரம் ஒடும் விநோத சப்தம். தொலைவில் வரும் வாகனத்தின் நகர்வு. இரவு வானில் மின்னும் நட்சத்திரங்கள். சனபாயின் காத்திருப்பு, பாலைவன மேகங்கள். சனபாய் குடும்பத்தின் சமய நம்பிக்கைகள், விளைந்த உப்பை அவர் பரிசோதிக்கும் விதம் என இந்த ஆவணப்படம் ஒளிரும் தருணங்களைக் கொண்டிருக்கிறது
ஏப்ரல் மாதத்தில், உப்பு வியாபாரி தனது ஆளை உப்பைப் பரிசோதிக்க அனுப்புகிறார். அவர் உப்பினை பரிசோதனை செய்துவிட்டு அதன் தரம் சரியில்லை என்கிறார். ஆகவே சனபாய் ஒப்புக்கொண்ட விலை கிடைக்காமல் போகிறது. சனபாயிற்கு வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு இதை விடச் சிறந்த உப்பை விளைவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எட்டு மாதகால உழைப்பிற்குப் பின்பு அவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி புறப்படுகிறார்கள். அடுத்த ஆண்டுத் திரும்ப வந்து எடுத்துக் கொள்வதற்காகத் தங்கள் டீசல் இயந்திரத்தை, கருவிகளைப் புதைத்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதே வாழ்க்கை தொடர்கிறது.
உப்பு விளைவிப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக உணர வைத்த விதத்தில் இந்த ஆவணப்படம் முக்கியமானது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
