விலகும் திரை
ஒரு நடிகர் எப்படி உருவாகிறார் என்பதை அறிந்து கொள்வதற்குச் சரியான திரைப்படம் Mr. Burton. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம். மார்க் எவன்ஸ் இயக்கியுள்ளார்.

ஆசிரியரான பிலிப் பர்ட்டனால் கண்டறியப்பட்டு அவரது ஆதரவு மற்றும் ஊக்கத்தால் எப்படி ரிச்சர்ட் பர்ட்டன் புகழ்பெற்ற நடிகராக மாறினார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது.
1940களின் முற்பகுதியில் போர்ட் டால்போட்டில் கதை நடைபெறுகிறது, தாயை இழந்த ரிச்சர்ட் மூத்த சகோதரி சிஸ் மற்றும் அவரது கணவர் எல்ஃபெட்டால் வளர்க்கப்படுகிறான். தந்தை ஒரு சுரங்கத் தொழிலாளி. குடிகாரர். சகோதரியின் கணவன் எல்ஃபெட்க்கு அவனைப் பிடிக்கவில்லை. படிக்கப் போக வேண்டாம் என வேலைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ரிச்சர்ட்டிற்கு நடிப்பதில் ஆர்வமிருக்கிறது. நடிகனாக வேண்டும் என்று கனவு காணுகிறான். இதை அறிந்து கொண்ட பிலிப் உதவி செய்திட முன்வருகிறார்.

பிலிப் பர்ட்டன் அற்புதமான கதாபாத்திரம். ஆசிரியரான அவர் தனியே வாழுகிறார். ஷேக்ஸ்பியரை அவர் பாடம் நடத்தும் விதம் அழகானது. குறிப்பாகக் கவிதைகளை எப்படி வாசிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார். அவரது நாடக குழுவில் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் இணைந்து கொள்கிறான்.
தனது வீட்டின் ஒரு அறையிலே ரிச்சர்ட்டை தங்க வைத்துத் தேவையான பயிற்சிகள் கொடுத்து நடிகராக்குகிறார். ஆக்ஸ்போர்டில் பயிலுவதற்கான உதவித்தொகை பெறுவதற்காக அவனைத் தத்தெடுத்து தனது சொந்த மகனாக்கிக் கொள்கிறார்.
அப்போது ரிச்சர்ட்டின் தந்தை ஐம்பது பவுண்ட் பணம் வாங்கிக் கொண்டு தனது மகனைத் தத்து கொடுக்கிறார். இன்னும் இது போலப் பிள்ளைகள் இருக்கிறார்கள், வேண்டுமா என்று கேலியாகப் பிலிப்பிடம் கேட்கிறார்.
நாடகம் எழுதும் திறமை கொண்டிருந்தும் பிலிப் பர்ட்டன் அங்கீகாரம் கிடைக்காமலே போகிறார். ஆகவே அவராக நாடகங்கள் நடத்துகிறார். மாணவர்களை நடிகர்களாகப் பயன்படுத்துகிறார்.
திறமையான ரிச்சர்ட்டிற்குப் பிலிப் பர்ட்டன் வழங்கும் பயிற்சிகள் முக்கியமானவை. குறிப்பாகக் குரலை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் சென்று உரத்துச் சப்தமிடச் செய்வது முக்கியமான காட்சியாகும்.

நாடகத்தில் நடித்து ரிச்சர்ட் புகழ் பெறுகிறான். இதனால் ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்டில் நடைபெற இருக்கும் ஹென்றி IV நாடகத்திற்காகத் தேர்வு செய்யப்படுகிறான். அங்கே. குடி, பெண்கள் என அவனது கவனம் திசைமாறிப் போகிறது. தன்னை விடப் பெரிய நடிகன் எவருமில்லை எனக் கர்வம் கொள்கிறான்.
பிலிப் அவனது நடிப்பை விமர்சனம் செய்யும் போது அவருடன் சண்டையிடுகிறான். ஷேக்ஸ்பியர் வசனங்களை அவன் எப்படிப் பேச வேண்டும் எனப் பிலிப் விளக்குகிறார். ரிச்சர்ட் அவரை மோசமாகத் திட்டித் துரத்துகிறான். இது போலவே நாடகத்தின் இயக்குநர் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்க மறுக்கிறான்.
பிலிப் பர்டன் அவனது தவறுகளை மன்னிக்கிறார். அவன் புகழ்பெற்ற நடிகனாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாறாத அன்போடு துணை நிற்கிறார். ஹென்றி IV நாடகம் வெற்றி பெற்ற பின்பு ரிச்சர்ட் பர்டன் நடந்து கொள்ளும் முறையும் பிலிப்பை அவன் சந்தித்து மன்னிப்பு கேட்பதும் அழகான காட்சிகள். தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் பிலிப் முகத்தில் வெளிப்படும் உணர்வு அபாரமானது.

பிலிப் பர்ட்ன் வீட்டின் உரிமையாளரான மா தனித்துவமிக்கக் கதாபாத்திரம். அவர் ரிச்சர்ட் மீது காட்டும் அன்பு. பிலிப்பை புரிந்து கொண்டிருக்கும் விதம் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
பிரிட்டிஷ் திரைப்படங்களுக்கே உரித்தான தயாரிப்பு நேர்த்தி. சிறந்த நடிப்பு. மற்றும் தேர்ந்த கலை இயக்கத்தை இதிலும் காண முடிகிறது.
இந்தப் படம் ரிச்சர்ட் பர்டனைப் பற்றியது என்றாலும் அவரது ஆசிரியர் பிலிப் பற்றிய படமாகவே விரிகிறது. பிலிப் போன்ற ஆசிரியர்கள் உலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி விடுகிறார்கள். படம் அவருக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலி போலவே இருக்கிறது.
ரிச்சர்ட் பர்ட்டனாக ஹாரி லாவ்டி நடித்திருக்கிறார். பிலிப்பாக நடித்திருப்பவர் டோபி ஜோன்ஸ். இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தன்னால் உருவாக்கபட்டவர் என்று ஒரு போதும் ரிச்சர்ட் பர்ட்னைப் பற்றி பிலிப் குறிப்பிடுவதில்லை. தான் நன்றி மறந்தவன். இப்போது உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டேன் என ரிச்சர்ட் தான் மன்னிப்புக் கேட்கிறான். நாடக ஒத்திகையின் போது நடக்கும் பிரச்சனைகள். மௌனமாக அவற்றைப் பிலிப் அவதானித்தபடி இருப்பது. மேடையில் ரிச்சர்ட் வெளிப்படுத்தும் அபாரமான நடிப்பு, இறுதிக்காட்சியில் வெளிப்படும் அன்பு எனப் படம் மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டிருக்கிறது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
