S. Ramakrishnan's Blog
October 17, 2025
திரைப்பயணி 15
திரைப்பயணி தொடரின் 15வது பகுதியில் Gone with the wind திரைப்படம் குறித்து உரையாற்றியிருக்கிறேன்
October 15, 2025
குலேர் நுண்ணோவியங்கள்
குலேர் நுண்ணோவியங்கள் தனித்த மரபைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகக் கிருஷ்ணன் ராதையின் காதலைச் சித்தரிக்கும் இந்த வகை ஓவியங்கள் அடர் வண்ணத்தாலும் சித்திரம் வரையப்பட்ட முறையாலும் புதிய பாணியைக் கொண்டிருக்கின்றன.


குலேர் ராஜ்ஜியம் உருவானது விசித்திரமான கதை.
1405 இல் பஞ்சாப்பின் காங்க்ரா ஆட்சியாளராக இருந்த ராஜா ஹரிசந்த் வேட்டைக்குச் போது தனது குழுவிலிருந்து பிரிந்து போனார். வழிதெரியாமல் அலைந்த அவர் கால்தவறி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். வேட்டைக்குழுவினர் அவரைத் தேடிச்சலித்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் ராஜா இறந்துவிட்டதாகக் கருதி, ராஜாவின் தம்பி கரம்சந்த் அரியணை ஏறினார்.
ஆனால் கிணற்றில் விழுந்த ராஜா ஹரிசந்த் பசி தாகத்துடன் வாடியபடி 22 நாட்கள் கிணற்றிலேயே உயிர் பிழைத்திருந்தார். மாடு மேய்க்கும் ஒருவர் அவரைக் கண்டுபிடித்து மீட்டார்.
தம்பியிடமிருந்து தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறுவதற்கு விரும்பால் ஹரிசந் தனது புதிய ராஜ்யத்தின் இடமாகக் ‘குலேர்’ நகரத்தை கட்டியெழுப்பினார். குலேர் என்றால் மாடு மேய்ப்பவர்களின் இடம் என்றே பொருள். இன்றைக்கும் அந்தக் கிணறு நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கபட்டு வருகிறது. இன்று குலேர் கோட்டையும் நகரமும் இடிபாடுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. குலேர் நுண்ணோவிய மரபு துண்டிக்கபடவில்லை. இன்றைக்கும் அந்த மரபில் நுண்ணோவியம் வரையும் கலைஞர்கள் தொடர்கிறார்கள்.


ராஜா ஹரிசந்த் குலேரை கலைகளின் தாயகமாக மாற்றினார். இசை ஓவியம் கவிதை மூன்றிலும் சிறந்தவர்களை வரவழைத்துக் கௌரவித்துத் தனது அரச சபை கலைஞர்களாக நியமித்தார். அவர்களைக் கொண்டாடினார். அந்த வரிசையில் வந்த ஓவியர் பண்டிட் சியூ தலைசிறந்த நுண்ணோவியக் கலைஞர். இவரது பிள்ளைகள் தான் மனாகு மற்றும் நைன்சுக். இவர்கள் இருவரும் இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர்களாக விளங்கியவர்கள்.
ராஜா பல்வந்த் சிங்கிற்கும் நைன்சுக்கும் நெருக்கமான நட்பு உருவாகியிருந்தது. பல்வந்த் இறந்த பின்பு அவரது அஸ்தியை கங்கையில் கரைக்கச் சென்ற போதும் நைன்சுக் உடன் சென்றிருக்கிறார் இதனைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது
பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோவர்தன் சந்த் ஆட்சிக் காலத்தில் குலேரில் ஓவியப் பள்ளி உருவாக்கப்பட்டது. அது புகழ்பெற்ற ஓவியர்களை உருவாக்கியது.
குலேரின் ஓவியங்களில் பச்சை வண்ணம் பிரதானமாக வெளிப்பபடுகிறது. அவர்கள் உருவங்களைச் சித்தரிக்கும் விதமும் மிகுந்த லயத்துடன் காணப்படுகிறது. இந்தப் பாணியில் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்ட ஓவியங்கள் நிறைய வரையப்பட்டுள்ளன, மொகலாயக் கலையில் வெளிப்படாத ஆன்மீக உணர்வை தங்கள் ஓவியங்கள் வெளிப்படுத்துவதாகக் குலேர் ஓவியர்கள் தெரிவிக்கிறார்கள்
நைன்சுக்நைன்சுக் ஓவியர் சியூவின் இளைய மகன். மிகச்சிறந்த நுண்ணோவியக் கலைஞர். அவரது படைப்புகளில் பெரும்பகுதி தொலைந்து போய்விட்டன. இன்று எஞ்சியிருப்பது சுமார் நூறு ஓவியங்கள் மட்டுமே அவற்றில் பல இந்திய மற்றும் மேற்கத்திய அருங்காட்சியகங்களில் உள்ளன. 2010 ஆம் ஆண்டு அமித் தத்தா நைன்சுக் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
தனது சகோதரர் மற்றும் தந்தையைப் போலல்லாமல், நைன்சுக் அன்றாட வாழ்க்கை காட்சிகளை நுண்ணோவியங்களாக வரைந்திருக்கிறார். மன்னர் பல்வந்த் சிங் தனது தாடியை சீராக்குவது, ஹூக்கா புகைத்தல், கடிதங்கள் எழுதுதல், படுக்கைக்குத் தயாராகுதல் போன்றவற்றை நைன்சுக் அழகாக வரைந்திருக்கிறார்.
ஓவியர் தனது கலையில் முழுமையான திறமையைப் பெற வேண்டுமென்றால் அவருக்கு நடனமும் இசையும் தெரிந்திருக்க வேண்டும் என்று சித்ர சூத்திரம் குறிப்பிடுகிறது. நைன்சுக் இவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். நைன்சுக்கின் தூரிகை வரையப்படும் உருவங்களின் மனநிலை மற்றும் சூழலின் அமைதியை முழுமையாக வெளிப்படுத்துகிறது
ராஜா சிம்மாசனத்தில் இருப்பது போன்ற அலங்காரமான காட்சிகளை அவர் வரைவதில்லை. மாறாக யதார்த்தமான சூழலில் அவர் மன்னரின் செயல்களை வரைந்திருக்கிறார். அதிலும் உருவங்களைச் சிறியதாகவும் பின்புலத்தின் அமைதியை பிரதானமாகவும் வரைந்திருப்பது அவரது மேதமையின் அடையாளம்.
நைன்சுக் வரைந்த ராஜா துருப் தேவ் குதிரையை மதிப்பிடும் ஓவியத்தில் இரவில் மன்னர் குதிரையை மதிப்பிடுகிறார். குதிரையின் நிறம் மற்றும் உடலமைப்பு தெளிவாகப் புலப்படுவதற்காக அதன் பின்புறம் வெள்ளைதுணி ஒன்றை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இதில் இரவு வரையப்பட்ட விதம் ஆச்சரியமளிக்கிறது. இரவின் கருமையில்லை. சிறிய தீற்றலில் மேகங்கள். பிறைநிலவு மட்டுமே சித்தரிக்கபடுகிறது. குதிரையின் கருமை நிறம். அதற்குப் பொருத்தமான பணியாளர்களின் உடையின் வண்ணம் வரையப்பட்டுள்ளது. மன்னர் கையில் பிரார்த்தனை மாலை வைத்திருக்கிறார். அவரது முகபாவத்தில் குதிரையைப் பற்றிய வியப்பு வெளிப்படவில்லை.

இந்திய நுண்ணோவியங்களில் குதிரை, யானை, காளை மூன்றும் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் இத்தனை விதமான, இவ்வளவு அழகாகக் குதிரைகள் வரையப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. மொகலாய ஓவியங்களிலிருந்து பஹாரி ஓவியங்களை வேறுபடுத்திக் காட்டுவது அதன் நுண்மையான சித்தரிப்பு. அதிலும் பச்சை வண்ணத்தை அவர்கள் பயன்படுத்தும் விதம். நைன்சுக் பச்சை மற்றும் வெள்ளையை அமைதியின் அடையாளத்தைப் போலவே சித்தரிக்கிறார். ராஜா குதிரையைக் காணும் ஓவியத்திலும் வெண்மை இரவின் சாந்தம் போலவே வெளிப்படுகிறது

பெரும்பான்மையான நுண்ணோவியர்கள் அரண்மனை சார்ந்து வாழ்ந்த காரணத்தால் மன்னரின் உருவப்படங்கள். மற்றும் வேட்டைக்காட்சிகளை வரைந்திருக்கிறார். ஆனால் குலேர் மரபில் அது போன்ற காட்சிகள் அதிகமாக வரையப்படவில்லை. மாறாகக் கீதகோவிந்தம். ராமாயணம் போன்ற பிரதிகளைத் தொடர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.
ராமாயணம்இதிகாசங்கள் இந்தியா முழுவதும் பரவியதற்கு அவை ஓவியம் மற்றும் சிற்பங்களின் வழியாக முன்னெடுக்கபட்டது ஒரு முக்கியக் காரணம். சொற்கள் காட்சிகளாக விரியும் போது உருவாக்கும் அனுபவம் வேறுவிதமானது. குலேர் ராமாயண ஓவியங்களைக் காணுகிறவர்கள் இந்த வியப்பை உணர முடியும்.
October 14, 2025
ஒளிரும் வானவேடிக்கைகள்
வானவேடிக்கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, பிரமாண்டமான விழாக்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை விளக்கும் அரிய ஓவியங்களைக் காண முடிகிறது.
தாரா திருமண ஊர்வலம்முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் திருமணத்தைச் சித்தரிக்கும் 1633ல் வரையப்பட்ட ஓவியத்தில் இரவு வானத்தில் ஒளிரும் வானவேடிக்கைகளைக் காண முடிகிறது.






ஓவியத்தில் மணமகன் தாராவும் அவரது குழுவினரும் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை நதிரா பானுவின் குடும்பத்தினர் எதிர் கொண்டு வரவேற்கிறார்கள்.
தாரா ஷிகோ மற்றும் நதிரா பானு பேகத்தின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தேறியது. ஷாஜகான் நாமா புத்தகத்தில் இந்தத் திருமணத்திற்கான பிரம்மாண்ட செலவைப் பற்றிய விரிவான கணக்கு குறிப்பிடப்பட்டுள்ளது
பேரழகுடன் வரையப்பட்ட இந்த ஓவியத்தினை நுண்மையாகக் காணும் போது அதன் சிறப்புகள் வியப்பளிக்கின்றன. எத்தனை விதமான குதிரைகளை வரைந்திருக்கிறார்கள். அவற்றின் தனித்துவமிக்க முகபாவம்..யானைகளின் கண்கள் வரையப்பட்டுள்ள அழகு, ஊர்வலத்திற்காக எடுத்துவரப்படும் பந்தங்களின் அமைப்பு, மெழுகுவர்த்திகளைக் கூண்டுகளுக்கு வைத்துக் கொண்டு வருவது. நீண்ட தீப்பந்தங்கள். வாசனை திரவியங்கள். எதிர்கொண்டு அழைக்கும் பெண்களின் முகங்கள் மற்றும் உடை, மணமகனின் முகத்திரை, அவரது அலங்கார உடை. வழி எங்கும் வானவேடிக்கைகள் ஒளிர்கின்றன.
ஆங்கிலேய வர்த்தகர் பீட்டர் முண்டி இந்தத் திருமணத்தை நேரில் கண்டு குறிப்பு எழுதியுள்ளார் அதில் ஆக்ரா வானத்தில் அரை மைல் நீளத்திற்கு வாணவேடிக்கை ஒளிர்ந்தன என்கிறார்
பேரரசரின் வாரிசான தாரா தங்கள் குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொள்வதும் வினோதமாகக் கருதப்பட்டது, காரணம் பாபரின் காலத்திலிருந்தே இந்த நடைமுறை தவிர்க்கப்பட்டது. ஷாஜகான் தனது ஆட்சியின் வலிமையைத் தக்கவைத்துக் கொள்ள இந்தத் திருமணத்தை நடத்தினார் என்கிறார்கள்,
Men with fireworksராஜஸ்தானிய ஓவியமான .Men with fireworks ல் பல்வேறு வகையான வானவேடிக்கைகளை மக்கள் வெடிப்பதை சித்தரிக்கிறது. பட்டாசு வெடிப்பவர்களின் வேடிக்கையான செயல்களை ஓவியம் அழகாகச் சித்தரித்துள்ளது.
சீனாவிலிருந்து வாணவேடிக்கைகள் உலகெங்கும் பரவின.. ஐரோப்பாவிற்கு 13 ஆம் நூற்றாண்டில் பட்டாசுகள் வந்தன. இத்தாலியர்களே முதலில் பட்டாசு தயாரித்த ஐரோப்பியர்கள்.
Tarikh-i Firishta நூலில், ஹுலேகு கானின் தூதர் கி.பி 1258 இல் டெல்லிக்கு வந்தபோது வாணவேடிக்கை கண்காட்சியுடன் வரவேற்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. முகலாய இந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன
சீன ஓவியம்சீனாவின் பண்டைய ஓவியங்களில் வானவேடிக்கைகள் ஒளிர்வதைச் சித்தரித்துள்ளார். அதே பாணியில் தான் இந்திய ஓவியங்களிலும் பட்டாசு ஒளிர்வது வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியங்களில் வானவேடிக்கை சித்தரிக்கபட்டதற்கும் இன்றைக்கும் பெரிய மாற்றமில்லை.
வானவேடிக்களைச் சித்தரிக்கும் ஓவியம் எதிலும் சிறுவர்கள் பட்டாசு வெடிப்பதைக் காண முடியவில்லை.

1760 லக்னோவில் வரையப்பட்ட ஓவியத்தில் அரண்மனையில் பெண்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இந்த ஓவியத்தில் மாடத்தில் நின்றபடி பெண்கள் மத்தாப்பூ வெடிப்பதை சிறப்பாக வரைந்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள புத்தாடைகளை வரைந்துள்ள விதம் வியப்பூட்டுகிறது இந்த ஓவியத்திலும் ஆற்றங்கரையில் வானவேடிக்கைகள் நடக்கின்றன. படகில் இருந்தபடியே சிலர் பட்டாசு வெடிக்கிறார்கள்.

The History of Fireworks in India Between AD 1400 and 1900”, என்றொரு புத்தகத்தை Parashuram Krishna Gode எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் பட்டாசு அறிமுகமான வரலாறு பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
October 11, 2025
திரைப்பயணி 14
திரைப்பயணி தொடரில் Once Upon a Time in the West திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
October 9, 2025
லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்
“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“
– லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்

ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கிறார். பேலா தாரின் திரைப்படங்களின் வழியாகவே அவரை அறிந்து கொண்டிருந்தேன்.
நேற்று நோபல்கமிட்டி அவருடன் ஒரு நடத்திய தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளது. அதில் தனது நோயுற்ற நண்பரைக் காணுவதற்காக ஃபிராங்பெர்ட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்த லாஸ்லோவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தி தெரிவிக்கபடுகிறது.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தடுமாறுகிறார். அப்போது அவர் சாமுவேல் பெக்கெட்டினை நினைவு கொள்கிறார். பெக்கெட்டின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்டவர் லாஸ்லோ. இருவரது மொழிநடைக்கும் நெருக்கமான தொடர்புள்ளது. முற்றுப்புள்ளியில்லாத நீண்ட வாக்கியங்களை எழுதக்கூடியவர் லாஸ்லோ. முந்தைய நேர்காணல் ஒன்றில் தன்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களாக ஷேக்ஸ்பியரையும் தஸ்தாயெவ்ஸ்கியினையும் குறிப்பிட்டுள்ளார்.
நோயுற்ற நிலையில் உள்ள நண்பரைக் காணச் சென்ற போது ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கபடுவது சிறுகதையின் கருவைப் போலவே உள்ளது. வீடு திரும்புதலை தனது படைப்புகளின் மையக்கருவாகக் கொண்ட லாஸ்லோ இந்த அறிவிப்பின் பின்பு வீடு திரும்புவதைப் பற்றியே பேசுகிறார்.

இந்தத் தருணத்தில் மொழிபெயர்ப்பாளர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கொள்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் லாஸ்லோ போல மொழிபெயர்க்கச் சிரமமான படைப்பாளிகள் நோபல் பரிசைப் பெற முடியாது.
ஒரு கடிதம்
எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும்

தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை.
••
October 7, 2025
அற்ப வாழ்க்கை
.
ஃபெடெரிகோ ஃபெலினியின் Il bidone அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம்.

மதகுரு போல வேஷம் போட்டுக் கொண்டு கிராமப்புற விவசாயிகளை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பலைப் பற்றியது.
ஒரு காரில் கிராமப்புறத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கும்பல் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்று அவர்கள் நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக நம்ப வைத்து நாடகம் ஆடுகிறது.
அந்தச் செல்வத்தைப் புதைத்து வைத்தவன் போரில் இறந்து போய்விட்டதாகவும் புதையலை நிலத்தின் உரிமையாளரே தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றும் கதை கட்டுகிறார்கள்.
இதனை நம்பிய விவசாயி அவர்கள் சொல்லும் அடையாளம் கொண்ட இடத்தைத் தோண்டி புதையல் உள்ள பெட்டியை கண்டுபிடிக்கிறான்.
அந்தப் புதையலை அடைவதற்கு விவசாயி ஒரு சிறப்புப் பிரார்த்தனை நடத்தி ஏழை எளியவர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். அதற்கான பணத்தைக் கொடுத்தால் புதையலை அடைந்து கொள்ளலாம் என்கிறார் மதகுரு.

விவசாயி அதனை நம்பி தனது சேமிப்பில் உள்ள பணம் முழுவதையும் தருகிறான். அதனைக் கொள்ளை அடித்துவிட்டு மோசடி கும்பல் தப்பிப் போகிறார்கள். அவர்கள் போன பிறகு புதையல் பெட்டியில் உள்ளது யாவும் போலி நகைகள் என விவசாயி அறிந்து ஏமாந்து போகிறான்
இது போலவே ரோமின் புறநகருக்குச் செல்லும் இந்தக் கும்பல் மக்களுக்கு இலவச வீடு அளிக்கும் அதிகாரிகள் போல நடித்து ஏழை எளியவர்களிடம் முன்பணம் வசூலித்து ஒடிவிடுகிறார்கள்.
ஏமாற்றிக் கிடைத்த பணத்தைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தக் கும்பலின் ஒரு உறுப்பினரான கார்லோ தனது மனைவியிடம் தான் விற்பனை பிரதிநிதி எனப் பொய் சொல்லியிருக்கிறான். அடிக்கடி இதற்காகப் பயணம் போவது போல நடிக்கிறான்.
மதகுருவாக நடிக்கும் அகஸ்டோ குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழுகிறார். நீண்ட காலத்தின் பின்பு தனது மகள் பாட்ரிசியாவை தற்செயலாகச் சந்திக்கிறார்
மகள் மிகுந்த பாசத்த்துடன் நடந்து கொள்கிறாள். அது அவரது மனசாட்சியை உறுத்துகிறது. மகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என அகஸ்டோ விரும்புகிறார். மகள் ஆசைப்பட்ட கல்வியைப் பெற தான் பணம் தருவதாகச் சொல்கிறார்.

இந்நிலையில் அவர்கள் ஒரு கிராமத்து விவசாயியை ஏமாற்றச் செல்கிறார்கள். அந்த வீட்டில் ஊனமுற்ற ஒரு இளம்பெண்ணைக் காணுகிறார் அகஸ்டோ. நோயுற்ற அவள் கடவுளின் பிரதிநிதியாக அகஸ்டோவை நினைக்கிறாள். அவர் முன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்கிறாள். அது அகஸ்டோ மனதை வேதனை கொள்ள வைக்கிறது. அவர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடிக்க தயங்குகிறார்.
முடிவில் தனது கும்பலுக்குத் தெரியாமல் அவர் பணத்தைத் திருடி ஒளித்து வைத்துக் கொள்கிறார். அதனைக் கும்பல் அறிந்து கொள்ளும் போது அவரது வாழ்க்கை மாறிப் போகிறது
படத்தின் இறுதிக்காட்சி துயரமானது. அகஸ்டோவின் தவிப்பும் வீழ்ச்சியும் மறக்க முடியாதது.
அகஸ்டோவிற்கும் அவரது மகளுக்கும் இடையில் உணவகத்தில் நடக்கும் உரையாடல், அவர் அன்பை வெளிப்படுத்தும் விதம். அது போலவே கார்லோவின் மனைவி அவனைச் சந்தேகம் கொண்டு விசாரணை செய்யும் இடம், காவலர்களிடம் அகஸ்டோ நடந்து கொள்ளும் முறை எனப் பல அற்புதமான காட்சிகள் உள்ளன.
ப்ரெடெரிக் க்ராபோர்ட் அகஸ்டோவாக சிறப்பாக நடித்திருக்கிறார். குயிலியேட்டாவும் ரிச்சர்ட் பேஸ்ஹார்ட்டும் லா ஸ்ட்ரடாவிற்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ளார்கள்.
உண்மைச் சம்பவம் ஒன்றிலிருந்து இந்தக் கதையை எழுதியதாக ஃபெலினி குறிப்பிடுகிறார்.. படத்தின் ஒளிப்பதிவு அபாரம். போருக்குப் பிந்தைய இத்தாலியில் இது போன்ற மோசடிகள் அதிகரித்தது உண்மையே.
••
October 5, 2025
குற்றமுகங்கள் 25 சோனாபானி
இரண்டு ஆண்டுகள் நாற்பத்தி மூன்று நாட்கள் தேடி அலைந்த பிறகு சோனாபானியை துல்ஜாபூரில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.
சோனாபானி ஒரு நாய். அதுவும் திருடர்களின் தூதுவனைப் போலச் செயல்பட்ட நாய். கைபா என்ற குற்றக்கும்பல் அதனைப் பழக்கியிருந்தார்கள்.

சோனாபானியின் கழுத்தில் ஒரு தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு இலையைக் கட்டி அனுப்பி வைப்பார்கள். என்ன இலை. எத்தனை இலைகள் என்பதைப் பொறுத்து தகவல் மாறக்கூடியது.
ஒளிந்து வாழ்ந்து வந்த கைபா கும்பல் தங்கள் வீட்டிற்குத் தகவல் தருவதற்கும், திருட்டு நடக்க இருக்கும் இடத்தை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதற்கும் சோனாபானியைப் பயன்படுத்தினார்கள். பழுப்பு நிறத்தில் இருந்த நாயின் முகத்தில் வெள்ளை விழுந்திருந்தது. சோனா மிகவும் புத்திசாலியாகவும் எளிதில் பயிற்சி பெறக்கூடியதாகவும் இருந்தது,
கைபா கும்பலின் தலைவனாக இருந்த ரட்டன் தான் இதனைப் பழக்கியவன். செத்துப் போகட்டும் என யாரோ கிணற்றில் வீசி எறிந்த நாய்க்குட்டிகளில் ஒன்றாக இருந்த சோனாபானியை கண்டுபிடித்துத் தன்னுடையதாக்கிக் கொண்டான். குதிரையில் பயணம் செய்யும் போதும் கூடவே வைத்துக் கொண்டான். சோனாபானி எனப் பெயர் வைத்ததும் அவனே.
திருடிய நகைகளைச் சில நேரம் சோனாபானியின் கழுத்தில் துணியில் கட்டி அனுப்பி வைப்பார்கள். வழியில் எவரும் அதனைத் தடுத்தோ, தாக்கியோ நகையைப் பறிக்க முடியாது. இருளிலும் தனக்கான பாதையைச் சோனாபானி தேர்வு செய்து கொண்டு ஒடி நகைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும். இது போலவே திருட்டில் காயம்பட்டவர்களுக்கான மருந்துப்பொருட்களை வைத்தியர் வீட்டில் சோனாபானி கழுத்தில் கட்டி அனுப்பி வைப்பார்கள். சரியாகக் கொண்டு வந்து சேர்க்கும். அடைமழையிலும் சோனாபானியை நம்பி அனுப்பி வைக்கலாம். தகவலை சரியாகச் சேர்த்துவிடும்.
ரட்டன் குகையில் உறங்கும் போது அதனைக் காவலுக்கு நிற்கச் செய்வான். அதன் காவலை மீறி ரட்டத்தை யாரும் நெருங்கிவிட முடியாது.
சோனாபானியைப் பற்றிக் கேள்விபட்ட பத்தொன்பதாம் காவல்பிரிவு அதனையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்தது. சுட்டுக் கொல்வதற்காகத் தீவிரமாகத் தேடியது.
சோனாபானிக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதற்கு மணமகளாக மித்னாவிலிருந்து ஒரு பெண் நாயைத் தேர்வு செய்திருக்கிறார்கள். மலர்மாலை அணியப்பட்ட பெண் நாயை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இரவில் நடந்த அந்தத் திருமணத்தை ரட்டன் நடத்தியிருக்கிறான். மணமகனாக இருந்த சோனாபானிக்கு தங்கச் சங்கிலியை அணிவித்து மகிழ்ந்திருக்கிறான் ரட்டன்.
சோனாபானியை திருமணம் செய்து கொண்ட பெட்டை நாய் சில நாட்களிலே ஒடிப்போய்விட்டது. அதனைத் திருடர்கள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்

ரட்டன் திருடப்போகும் நாளை குறிப்பதற்கு முன்பாகச் சோனாபானியின் காதில் அதனை ரகசியம் போலச் சொல்லுவான். அதன் வால் ஆட்டப்படுவதை வைத்துத் திருட்டைச் செய்வதா, வேண்டாமா என முடிவு செய்வான். ஒரு போதும் அதனை மீறியதில்லை
ரட்டனைப் பிடிப்பதற்காகக் காவல்வீரர்கள் துல்ஜாபூரில் முகாமிட்டிருந்த போது அந்தக் கூடாரத்தின் மீது அரிக்கேன் விளக்கை வீசி தீப்பிடிக்க வைத்தது சோனாபானியே என்று பேசிக் கொள்கிறார்கள்.
ஒருமுறை பத்தொன்பதாம் காவல்படையின் துப்பாக்கி வீரர்கள் சோனாபானியை சந்தையில் தேடிய போது அது உடைந்த காலுடன் நடப்பது போல நொண்டிக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. நிச்சயம் அது சோனாபானியில்லை என வீரர்கள் வேடிக்கை பார்த்து ஏமாந்தார்கள்.
அடைமழைக்காலத்தில் விஷக்காய்ச்சல் கண்ட ரட்டனுக்கு மருந்து பெற்றுவருவதற்காக வைத்தியர் வீட்டிற்குச் சோனாபானி வந்த போது பத்தொன்பதாவது காவல்படை அதனைச் சுற்றி வளைத்தது. சோனா ஆவேசமாகப் பாய்ந்து தாக்கியது. ஆறு துப்பாக்கி வீரர்கள் அதனைச் சுட்டார்கள். வைத்தியர் வீட்டின் வாசலில் காதிலிருந்து ரத்தம் பீறிட சோனாபானி செத்துக் கிடந்தது.
அதே நாளில் அதே நேரம் ரட்டன் காய்ச்சலில் இறந்து போனான் என்பது தற்செயலானதில்லை. சோனாபானி இல்லாமல் ரட்டன் தனியாக வாழமாட்டான் என்பதால் அப்படி நடந்தது என்கிறார்கள். ஒருவேளை அது கதையாகவும் இருக்கலாம். குற்றத்தில் முளைக்கும் கதைகள் வலிமையானவை. விரைந்து பரவக்கூடியவை..
October 4, 2025
அந்திமழை தீபாவளி மலரில்
அந்திமழை தீபாவளி மலரில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது
October 3, 2025
திரைப்பயணி 13
திரைப்பயணி தொடரின் 13 வது பகுதியில் Casablanca திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

