வழிவிடும் வானம்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர். அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ( Antoine de Saint-Exupery) வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு Saint-Exupéry திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் பாப்லோ அகுவேரோ. 2024ல் வெளியான திரைப்படம்.

எக்சுபெரி தபால்கள் கொண்டு செல்லும் விமானத்தின் விமானியாகப் பணியாற்றியவர். ஏர்மெயிலில் தான் பணியாற்றிய அனுபவங்களை இரண்டு நாவல்களாக எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை 1930ல் நிகழ்கிறது. பிரெஞ்சு நிறுவனமான ஏரோபோஸ்டெலின் அர்ஜென்டினா கிளையில் விமானிகளாக ஹென்றி குய்லூமெட் மற்றும் எக்சுபெரி பணியாற்றுகிறார்கள்.

ஒருமுறை தபால் கொண்டு செல்லும் விமானம் கடுமையான புயல்மழைக்குள் சிக்கிக் கொள்கிறது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் விமானி எக்சுபெரி தடுமாறுகிறார். இன்றிருப்பது போல அன்று நவீன உபகரணங்கள் விமானத்தில் கிடையாது. அவரது நண்பரான ஹென்றி குய்லூமெட் இன்னொரு விமானத்தில் பறந்தபடியே உதவிகள் செய்கிறார். இருவரும் இணைந்து முடிவில் தரையிறங்கும் பாதையைக் கண்டறிகிறார்கள். விமானம் பத்திரமாகத் தரையிறங்குகிறது. மனிதர்களை விடவும் அவர்கள் கொண்டு வந்த தபால்களே முக்கியமானது எனச் சொல்கிறது விமான நிறுவனம்.

படத்தின் இந்தத் துவக்க காட்சிகள் சிறப்பாக உள்ளன. விமான நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஆட்குறைப்பில் ஈடுபட முனைகிறது. இதனை ஏற்க மறுத்த எக்சுபெரி ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து வருவதற்கான மாற்றுவான்வழியை உருவாக்க முனைகிறார். விமானத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படுகின்றன. புதிய வழித்தடம் திட்டமிடப்படுகிறது.

அர்ஜென்டினாவிற்கும் சிலிக்கும் இடையில் தபால்பைகளைக் கொண்டு செல்வதற்காக ஹென்றி குய்லூமெட் விமானத்தில் புறப்படுகிறார். 1930 ஜூன் 13 வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாக விமானம் ஆண்டிஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிறது.

மனித நடமாட்டமேயில்லாத பகுதியில் உறைபனியின் ஊடாக உயிருக்கு போராடிய நிலையில் ஹென்றி குய்லூமெட் நடக்கிறார். அவரைக் கண்டறிந்து மீட்பதற்காக எக்சுபெரி அதே பாதையில் பயணிக்கிறார். Wind, Sand and Stars புத்தகத்தில் அந்த அனுபவம் விவரிக்கபட்டிருக்கிறது

சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தத் தேடலில் எப்படி எக்சுபெரி ஈடுபடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.

அந்தக் கால விமானப்போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள். மின்விளக்குகள் இல்லாத ஒடுதளங்கள் மற்றும் விமான நிலையத்தின் தொடர்பு அறை, என நூற்றாண்டுகளுக்கு முந்தைய விமானசேவையைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள்.

1929 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்த, செந்த்-எக்சுபெரி, அங்குப் பிரெஞ்சு விமான அஞ்சல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சதர்ன் மெயில் மற்றும் நைட் ஃப்ளைட் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழில் விடியலைத் தேடிய விமானம் என வெளியாகியுள்ளது. பறத்தலின் இன்பத்தை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

இதில் இரவுநேர விமானப்பயணத்தின் நிஜமான சவால்களை எழுதியிருக்கிறார். மேலும் விமானியின் மனநிலை மற்றும் வானிலிருந்து காணும் அழகிய காட்சிகள். விமானிகளுக்குள் உருவாகும் நட்பு மற்றும் நிர்வாகத்தின் கெடுபிடிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த அனுபவங்களையே இப்படமும் விவரிக்கிறது.

குறிப்பாக நண்பரைத் தேடி மேற்கொள்ளும் ஆண்டிஸ் மலைப் பயணத்தின் போது வெளிப்படும் நிலவெளிக்காட்சிகள் அபாரமானவை. விமானத்துடன் நாமும் கூடவே பறப்பது போன்று அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கிளேர் மாதன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எக்சுபெரியின் எழுத்துலகம் பற்றியோ, சொந்த வாழ்க்கை பற்றியோ படம் அதிகம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அவரது நட்பு மற்றும் துணிச்சலான பறத்தலை மட்டுமே விவரிக்கிறது.  விமானியான எக்சுபெரியின் உலகை மட்டுமே நாம் காணுகிறோம்.

விமானத்தில் பறந்தபடியே அவர் கனவு காணுகிறார். அல்லது உலகம் கனவில் வெளிப்படும் காட்சிகள் போன்று தோற்றமளிக்கிறது.  தனது சொந்த உடலை இயக்குவது போலவே விமானத்தைக் கையாளுகிறார். உறுதியான நம்பிக்கையும் தைரியமும் ஆழ்ந்த அன்புமே அவரை இயக்குகிறது.

நட்பின் பல்வேறு பரிமாணங்களையே குட்டி இளவரசனிலும் காணுகிறோம். அவன் எல்லோருடன் நட்பு பாராட்டுகிறான். அவனால் நரியுடன் கூட நட்பாகப் பழக முடிகிறது. ஹென்றி குய்லூமெட்டின் கதை நம்ப முடியாத நிஜம். ஒருவகையில் அவரும் ஒரு குட்டி இளவரசனே.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2025 05:36
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.