சமையற்கலைஞரின் ஞானம்.
நீங்கள் விரும்பும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து உச்சநிலையை அடைய முடிந்தால் அதுவே வாழ்வின் உண்மையான வெற்றி என்கிறார் சமையற்கலைஞர் ஜிரோ ஓனோ.

ஜப்பானின் புகழ்பெற்ற உணவகம் சுகியாபாஷி ஜிரோ. தோக்கியோவில் உள்ளது. பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறியதொரு உணவகம். அங்கே சுஷி எனப்படும் மீன் உணவு புகழ்பெற்றது. ஒரு மாதகாலத்திற்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே சாப்பிட இடம் கிடைக்கும்.
அங்கே உணவிற்கான கட்டணம் அதிகம். ஆனால் அதன் தரத்திற்காக அவ்வளவு பணம் கொடுக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஜிரோ தனது உணவகம் பற்றிய அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அதில் வெளிப்படும் ஞானம் நம் அனைவருக்கும் பொதுவானது. அவர் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எதுவென அடையாளம் காட்டுகிறார். தனது வேலையை ஒருவர் எவ்வளவு நேசமிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்.
ஜப்பானின் உயரிய விருதுகளில் ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் ஜிரோ ஓனோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுவழங்கும் நாளில் கூட அவரது உணவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. காலையில் விருது பெற்றுவிட்டு மதியம் தனது உணவகத்திற்க்கு வந்துவிட்டார்.
எண்பது வயதைக் கடந்த அவரது அனுபவங்களையும் அவரது இரண்டு மகன்களையும் பற்றிய ஆவணப்படம் Jiro Dreams of Sushi மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது

இது சுஷி உணவகம் பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும் ஜிரோ ஓனோவின் வாழ்க்கை மற்றும் ஜப்பானிய உணவு முறைகள், சந்தை மற்றும் மாறிவரும் உணவுப்பழக்கம். தந்தை மகன் உறவு பற்றியதாகவும் விரிகிறது. புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளரும் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அவரது இரண்டு மகன்களும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.
தனது உணவகத்திற்கு ஒருவர் பயிற்சியாளராக வந்தால் பத்தாண்டுகளுக்கு பின்பே அவருக்கான பதவி கிடைக்கும். அதுவரை அவர் உணவு தயாரிப்பதில் தனது ஈடுபாட்டினைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஜிரோ.
சமைப்பதில் காட்டும் அவரது ஆர்வத்தை அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதிலும் காட்டுகிறார். சாப்பிடுகிறவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அவரை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. தியானப்பயிற்சி அளிக்கும் குருவைப் போலவே அவர் நடந்து கொள்கிறார்.
மீன் உணவுகளை சமைக்கும் அந்த உணவகத்திற்குத் தேவையான மீன்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் டூனா மீன்களை விற்பனை செய்பவரின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. இது போல அவர்கள் பயன்படுத்தும் அரிசி. அதை வேக வைக்கும் விதம். உணவு சமைப்பதற்கான மரபான முறைகள், பரிமாறும் விதம் ஆகியவையும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடல் உணவுகளை மட்டுமே அவர் தனது உணவகத்தில் வழங்குகிறார். மதுவோ, வேறு சிற்றுண்டிகளோ அங்கு வழங்கப்படுவதில்லை. எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் அதிக இருக்கைகளை அவர் உணவகத்தில் ஏற்படுத்தவில்லை. இசை நிகழ்ச்சியின் நடத்துனர் எவ்வளவு கவனமாக இசையை நிகழ்த்துவாரோ அது போலவே உணவகத்தை நடத்துகிறார். இதன் மாறாத தரத்தின் காரணமாக உலகின் 6வது சிறந்த உணவகமாக தரவரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தனது வேலையில் முழுமையாக மூழ்குதல் வேண்டும். அதன் வழியே தனது திறமையை மேம்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு இல்லாத எவராலும் உச்சநிலையை அடைய முடியாது. ஆகவே வணிக வெற்றிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தனது திறமைகளை ஒருவர் இடைவிடாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அயாரத உழைப்பும் புதியன செய்வதில் நாட்டமும் முழுமையான ஈடுபாடும் தேவை.
ஒவ்வொரு நாளும் தனது தரத்தை விட்டுக் கொடுக்காமல் உணவு தயாரிப்பது எளிதானதில்லை. ஆனால் அதில் வெற்றி அடைவதன் மூலமே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்கிறார் ஜிரோ. தனது வேலையின் மீது ஒருவர் சலிப்படைந்து அதை பற்றி புகார் சொல்லிக் கொண்டேயிருந்தால் அவரால் வெற்றியை அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் அன்பை பெறுவதற்கு அவர்களுக்கான இருக்கை துவங்கி அவர்கள் வலது கை பழக்கம் கொண்டவர்களா இடது கை பழக்கம் கொண்டவர்களா என்பது வரை அறிந்து வைத்து அதற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்றும் சொல்கிறார்.
வெப்பநிலையைப் பொறுத்து மணமும் சுவையும் மாறுபடக்கூடியது. ஆகவே சூடான உணவை எப்படி வழங்குவது என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும். உணவகத்தில் அனைவரும் இணைந்து ஒரே அலைவரிசையில் வேலை செய்யும் போது தான் சாத்தியமாகும், என்று சொல்கிறார் ஜிரோ
ஜிரோவின் மூத்த மகன் யோஷிகாசுவுடனான அவரது உறவு மற்றும் இளையமகனின் ஆதங்கம், தனது மரபை பிள்ளைகள் தொடர்வதில் உள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 85 வயதான ஜிரோ ஓனோ, உணவு சமைப்பதை கலைப்படைப்பாக மாற்றுகிறார். அதை ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
