S. Ramakrishnan's Blog, page 13
March 11, 2025
நிதானத்தின் பிரபஞ்சம்
கவிஞர் மணி சண்முகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்

ஹைக்கூவின் நால்வராக அறியப்படும் பாஷோ, பூசான், கோபயாஷி இஸ்ஸா, மசோகா ஷிகி ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஜப்பானிய ஹைக்கூ வரிசை என எட்டு நூல்களாக விஜயா பதிப்பகம் அழகிய வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.

ஹைக்கூ கவிதைகள் கூழாங்கற்கள் போன்றவை. அவற்றின் அழகும் தனித்துவமும் முழுமையும் வியப்பூட்டக்கூடியது, எளிய கவிதைகளைப் போலத் தோற்றம் தந்தாலும் இவற்றை மொழியாக்கம் செய்வது சவாலானது. மணி சண்முகம் சிறப்பாக, ஜப்பானியக் கவிதையின் கவித்துவம் மாறாமல் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அத்தோடு ஹைக்கூ கவிதையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார்.
அவசர உலகிலிருந்து மீட்டு நிதானத்தின் பிரபஞ்சத்திற்கு உங்களைக் கொண்டு வருவதே ஹைக்கூவின் பயன்பாடு என்கிறார் மணி சண்முகம். இது மிகச்சரியான புரிதல்.
இயற்கையில் ஒரு அவசரமும் இல்லை. ஒரு புல் தான் வளர்வதற்கு எவ்வளவு காலம் தேவையோ அதையே எடுத்துக் கொள்கிறது. தன்னியல்பில் அது காற்றுடன் கைகோர்த்து நடனமிடுகிறது. புல்லின் நிமிர்வு தனித்துவமானது.
இயற்கையின் முடிவற்ற இயக்கம் மற்றும் இசைவு வியப்பூட்டக்கூடியது. ஹைக்கூ கவிஞர்கள் சொற்களை வண்ணங்களாக்கி இயற்கையின் சலனங்களை பதிவு செய்கிறார்கள். மின்னல்வெட்டு போல ஒரு பளிச்சிடல். ஒரு அதிர்வு அக்கவிதைகளில் வெளிப்படுகிறது.

மழையின் ஒரு துளி வாழை இலையில் பட்டு உருளும் போது ஏற்படும் அதிர்வு போலக் கவிதை நுண்மையை உணர வைக்கிறது. தண்ணீருக்குள் இறங்குவது போல எளிதாக, குளிர்ச்சியாக இந்தக் கவிதைகளுக்குள் நாம் பிரவேசிக்கிறோம். நீந்துகிறோம். ஆம். கவிதை வாசித்தல் என்பது ஒருவகை நீச்சலே.
இயற்கையை நாம் பயனுள்ளது, பயனற்றது, பெரியது, சிறியது எனப் பிரித்து வைத்திருக்கிறோம். ஹைக்கூ கவிதைகள் இந்த வேறுபாட்டினை அழிக்கின்றன. மாறிக் கொண்டேயிருக்கும் இயற்கையின் மாறாத தன்மைகளை, நிரந்தர வசீகரத்தை அடையாளம் காட்டுகின்றன.
குளிர்கால முதல்மழை
குரங்குக்கும் தேவைப்படுகிறது
வைக்கோல் அங்கியொன்று.
-பாஷோ
••
தாடைகளில்
செம்மலர்களை அடக்கிக் கொண்டு
பாடுகிறது வெட்டுக்கிளி
-இஸ்ஸா
••
எங்கும் நிறையும்
தவளையின் ஒசை
தன்னியல்பு பிறழாத நிலவு
-ஷகி
••
அறுவடைக்கால நிலவு
அங்கும் ஒரு பறவை இருக்கிறது
இருளைத் தேடிக் கொண்டு
-சியோ நி
••
வெற்றி பீரங்கி
ஒரு கமேலியா பூ விழுகிறது
அதனுள்
-ஷகி
••
இந்தக் கவிதைகளில் நாம் முன்பே அறிந்து வைத்துள்ள இயற்கை காட்சிகள் அறியாத கோணத்தில் அறியாத பார்வையுடன் வெளிப்படுகின்றன. பீரங்கியினுள் விழும் பூ மறக்க முடியாத காட்சிப்படிமம்.
ஹைக்கூ கவிதைகள் இயற்கையை உணர்வதற்கும் அதன் மாறாத அழகை, உண்மையை, ஒழுங்கை, ஒழுங்கின்மையைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. அதே நேரம் நம்முடைய அகம் இயற்கையோடு இணையும் புள்ளியை, நமது இருப்பின் எடையை, எடையின்மையைப் புரிய வைக்கின்றன. அசைவின்மை குறித்தும் அசைவு குறித்தும் இந்தக் கவிதைகளின் வழியே ஆழமாகப் புரிந்து கொள்கிறோம்.
ஹைக்கூ கவிதைகள் மின்மினியின் மென்னொளியைப் போல வசீகரிக்கின்றன. இதம் தருகின்றன.
ஹைக்கூ கவிதைகளின் மீது மணிசண்முகம் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டிற்கும் அவரது சிறப்பான மொழியாக்கத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு
சீன எழுத்தாளரான யியுன் லி டால்ஸ்டாயுடன் எண்பத்தைந்து நாட்கள் என்றொரு நூலினை எழுதியிருக்கிறார். இது போரும் வாழ்வும் நாவலை வாசித்த கூட்டு அனுபவத்தைப் பற்றியது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்கள் பலரும் ‘ஒன்றாக ஒரு நாவலைப் படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தினை உருவாக்கினார்கள். அதற்காக 1200 பக்கங்களுக்கும் மேலாக உள்ள போரும் வாழ்வும் நாவலை தேர்வு செய்தார்கள். இந்தத் தொடர்வாசிப்பு ஒரு புதிய நிலத்திற்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை உருவாக்கியது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் நாவலின் சில பக்கங்களைப் படிக்க வேண்டும். அது குறித்து யியுன் லி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார் என்பது ஏற்பாடு
மார்ச் 18, 2020 அன்று நாவலைப் படிக்கத் தொடங்கி, எண்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 10, 2020 அன்று, கடைசிப் பக்கங்களைப் படித்தார்கள். இந்தக் கூட்டுவாசிப்பு மகத்தான நாவல்களைப் புரிந்து கொள்ளவும் கொண்டாடவும் வழி செய்தது.
இந்த வாசிப்பின் போது டால்ஸ்டாய் எதனால் மகத்தான நாவலாசிரியராகக் கருதப்படுகிறார் என்பதற்கான சான்றுகளாக அவரது நாவலின் வரிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
டால்ஸ்டாயின் மேதமை பற்றிய பலரது பார்வைகளும் உள்ளடங்கிய இந்த நூல் கூட்டுவாசிப்பின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டுகிறது.
டால்ஸ்டாயின் எழுத்து நுட்பங்களை வியந்து சொல்லும் யியுன் லி இந்த நூலின் முகப்பில் The art of writing depends on the art of reading என்ற மேற்கோளைத் தந்திருக்கிறார்.
நல்ல வாசகரால் தான் நல்ல எழுத்துப் பெருமை கொள்கிறது. அவரே எழுத்தின் நுட்பங்களை ஆழ்ந்து அறிந்து ரசிக்கிறார். சுட்டிக்காட்டுகிறார்.

குதிரைகள் பாலத்தைக் கடந்தன எனப் பொதுவாக டால்ஸ்டாய் எழுதுவதில்லை. பாலத்தைக் கடக்கும் குதிரைகளின் குளம்பொலி எப்படிக் கேட்கிறது என்பதை எழுதுகிறார். இந்தத் துல்லியமே அவரது எழுத்தின் சிறப்பு. காட்சிகளைப் போலவே ஒசையும் நாவலில் மிகத் துல்லியமாக விவரிக்கபடுகிறது.
கதாபாத்திரங்கள் கண்ணீர் வடிப்பதால் வாசிப்பவருக்குக் கண்ணீர் வந்துவிடாது. வாசிப்பவரை கண்ணீர் சிந்த வைப்பது எழுத்தாற்றலின் வெளிப்பாடு. டால்ஸ்டாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இந்தக் கலைமேதமையின் காரணமாக வாசிக்கும் நாம் கதாபாத்திரங்களின் அகத்துயரைப் புரிந்து ஆழ்ந்து கொள்கிறோம். கண்ணீர் வடிக்கிறோம். என்கிறார் யியுன் லி.
டால்ஸ்டாய் ஒரு கதையைச் சொல்லும்போது, மலைவாழ்மக்கள் தங்களின் பூர்வீக மலையில் ஏறுவது போல மெதுவாக, சீரான மூச்சுக்காற்றுடன், படிப்படியாக, அவசரப்படாமல், சோர்வில்லாமல் நடந்து கொள்கிறார். அதன் காரணமாகவே அவரது எழுத்து நம்மை அதிகம் வசீகரிக்கிறது என்கிறார் எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்.
போரும் வாழ்வும் நாவல் ஒரு விருந்தில் துவங்குகிறது. அந்த விருந்தின் ஊடாக முக்கியக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். பிரம்மாண்டமான அந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள். அங்கு வந்தவர்களின் அந்தஸ்து, சமூகப் படிநிலைகள். அவர்கள் பேசும் வம்பு பேச்சுகள். பகட்டான. போலியான உரையாடல்கள். ரஷ்ய உயர்தட்டு வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அந்த ஒரு காட்சியிலே டால்ஸ்டாய் விளக்கிவிடுகிறார்.
இந்த நாவலை ஹோமரின் காவியத்திற்கு ஒப்பிட வேண்டும். அந்த அளவு பிரம்மாண்டமானது என்றும் யியுன் லி குறிப்பிடுகிறார்.
நாவலில் இடம்பெற்றுள்ள சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாகச் சித்தரிக்கபடுகிறார்கள். அவர்கள் நாவலின் வளர்ச்சிக்கு உரிய பங்கினை தருகிறார்கள். இதில் எந்தச் சிறுகதாபாத்திரத்தையும் நம்மால் நாவலை விட்டு விலக்கிவிட முடியாது. ஒன்றிரண்டு வரிகளில் சிறு கதாபாத்திரத்தின் இயல்பை டால்ஸ்டாய் விவரித்துவிடுகிறார்.
டால்ஸ்டாய் 1863 முதல் 1869 வரை போரும் வாழ்வும் நாவலை எழுதினார். இந்தக் காலகட்டத்திற்குள் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். டால்ஸ்டாயின் மனைவி சோபியா குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு அவரது நாவலின் பிரதியை தனித்தனியாக ஏழு முறை நகலெடுத்து திருத்திக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பின்னே சோபியாவின் கரங்களும் மறைந்துள்ளன
போரைப் பற்றி எழுதும்போது, டால்ஸ்டாய் பீரங்கி குண்டுகள் மற்றும் போர் களத்தில் இறந்துகிடக்கும் உடல்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. மாறாக, பீரங்கி குண்டுகள் மற்றும் இறந்த உடல்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் உண்மையாக எழுதுகிறார். அது தான் அவரது சிறப்பு.
Rereading a novel you love is always a special gift to yourself என்கிறார் யியுன் லி. அது முற்றிலும் உண்மையே.
March 10, 2025
ஒற்றைக்குரல்.
எலியா கசானின் வைல்ட் ரிவர் 1960ல் வெளியான திரைப்படம். ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

ஆவணப்படம் போல நிஜமான காட்சிகளுடன் வைல்ட் ரிவர் துவங்குகிறது. டென்னஸி ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்குக் காரணமாக நிறையப் பொருட்சேதங்கள் மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அப்படி வெள்ளப்பெருக்கில் தனது குடும்பத்தை இழந்த ஒருவர் திரையில் தோன்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.
இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றத் தடுப்பணைகள் கட்டுவதோடு நீர்மின்சாரம் தயாரிக்கவும் அரசு திட்டமிடுகிறது. இதற்காக டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். அந்த நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறது. பெரும்பான்மையான இடங்களைக் கையகப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் சிறிய திட்டு போல உள்ள கார்த் தீவை அவர்களால் வாங்க முடியவில்லை.

பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டுத் தர முடியாது என எல்லா கார்த்தின் குடும்பம் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தினர் உள்ளே நுழையக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைத் தீவின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள்
கார்த் தீவை காலி செய்ய வைக்கும் பணிக்காக சக் குளோவர் அங்கே வருகிறார்.
முதன்முறையாக எல்லா கார்த்தைச் சந்திக்கிறார். அரசாங்கத்து நபர்களிடம் தான் பேச விரும்பவில்லை என அவள் துரத்தியடிக்கிறாள். எல்லாவின் மகன்களில் ஒருவன் கோபத்தில் அவரை ஆற்றில் தூக்கி வீசி எறிகிறான்.
காவல்துறையின் உதவியைக் கொண்டு அவர்களைக் காலி செய்துவிடலாம் என உயரதிகாரி ஆலோசனை சொல்கிறார். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் பெரிய பிரச்சனையாக மாறிவிடும். ஆகவே பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களைத் தன்னால் வெளியேற்ற முடியும் எனக் குளோவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
அடுத்த முறை தீவிற்குச் செல்லும் போது அவரிடம் தவறாக நடந்து கொண்ட மகனை மன்னிப்பு கேட்க வைக்கிறார் எல்லா.

அத்தோடு குளோவரை அழைத்துச் சென்று தங்களின் குடும்பக் கல்லறைகளைக் காட்டுகிறார். இறந்தவர்களைத் தண்ணீரில் மூழ்கடித்துவிட்டு நாங்கள் வெளியேற வேண்டுமா எனக் கேட்கிறார்.
தேசத்தின் நலன் கருதியும் மக்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதற்காகவும் அவர்கள் நிலத்தை விட்டுத்தர வேண்டும் என்று சக் குளோவர் மன்றாடுகிறார். எல்லா அதனை ஏற்க மறுக்கிறாள். அவளது ஒற்றைக்குரலும் அதிலுள்ள நீதியுணர்வும் சிறப்பாக வெளிப்படுகிறது
ஒரு காட்சியில் எல்லாத் தனது பண்ணையடிமை வளர்க்கும் நாயை தனக்கு விலைக்கு வேண்டும் எனக் கேட்கிறாள். அவன் தர மறுக்கிறான். உன்னைக் கேட்டு உன் நாயை வாங்க வேண்டிய அவசியமில்லை. நான் உனது எஜமானி என்று உத்தரவிடுகிறாள்.
அந்த வேலையாள் எனது நாயை நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்குத் தர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறான். அதை ஏற்றுக் கொண்ட எல்லா இது போலத் தான் நானும் இந்தத் தீவை எதற்காகவும் விட்டுத் தர மாட்டேன் என்கிறாள். அவளது நியாயத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.
எல்லாவின் பேத்தியான கரோல் தனது கணவன் இறந்த பிறகு அந்தத் தீவுக்குத் திரும்பியிருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவள் சக்கிற்கு உதவி செய்வதற்கு முன்வருகிறாள். சக் அவளுடன் நெருங்கிப் பழகத் துவங்குகிறார். இந்த நட்பு ஒரு நாடகம் என நினைக்கும் எல்லாப் பேத்தியைக் கண்டிக்கிறாள்.

ஆனால் சக் தன்னை உண்மையாகக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கரோல் தெரிவிக்கிறாள்.
எல்லாவிடம் வேலை செய்யப் பண்ணையாட்களைத் தீவை விட்டு வெளியேறச் செய்து புதிய வேலையும் வீடும் பெற்றுத் தருகிறான் சக். இதனால் எல்லா தனிமைப்படுத்தப்படுகிறாள்.
ஒரு நாள் காதலின் தீவிரத்தில் கரோல் சக்கை தீவிற்கு வெளியேயுள்ள தனது பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவர்கள் ஒன்றாக இரவைக் கழிக்கிறார்கள்.
சக் கறுப்பினத்தவரை வேலைக்கு வைப்பதை நகரின் மேயர் விரும்பவில்லை. அத்தோடு அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டாலும் வெள்ளைக்காரர்களை விடவும் குறைவான சம்பளமே தரப்பட வேண்டும் என்கிறார். சக் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இதனால் உள்ளூர் மக்களின் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்திக்கிறான்.
கரோலைத் திருமணம் செய்து கொள்ள முற்படும் சக்கை பெய்லி என்ற முரடன் தாக்கி காயப்படுத்துகிறான். அவரது காரை உள்ளூர் மக்கள் உடைத்து நொறுக்குகிறார்கள்.
எல்லா மனநலமற்றவள். ஆகவே அவளால் எதையும் சரியாக முடிவு செய்ய முடியாது என்று அறிவித்து நிலத்தை விற்பதற்கு அவளது பிள்ளைகளே முன்வருகிறார்கள். அதைச் சக் ஏற்கவில்லை.
முடிவில் எல்லாவை தீவிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற காவற்படை தயாராகிறது. இதற்கிடையில் தானாக முன்வந்து அவள் வெளியேறும்படியான இறுதி முயற்சிகளைச் சக் மேற்கொள்கிறான். அது எப்படி நடைபெற்றது என்பதே படத்தின் இறுதிப்பகுதி
தலைமுறையாகத் தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத்தரமுடியாது என்பதில் எல்லா காட்டும் மனவுறுதியும், அந்த நிலத்தை அரசாங்கத்திற்குப் பெற்றுத் தருவதற்காகச் சக் மேற்கொள்ளும் முயற்சிகளும் படத்தில் உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன இருவரது நியாயங்களையும் கசான் சரியாக வெளிப்படுத்துகிறார். அதிகாரமே முடிவில் வெல்கிறது. எல்லாத் தோற்றுப் போகிறாள். ஆனால் அந்தத் தோல்வியின் வலியை சக் புரிந்து கொள்கிறார்.
எலியா கசான் பிரச்சனைக்கான தீர்வை விடவும் அதில் தொடர்புடையவர்களின் உணர்வுகளை, வலியை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாக் கார்த் தனது புதிய வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. அது போலவே வீடு எரியும் காட்சியும். எல்லாவாக ஜோ வான் ஃப்ளீட் சிறப்பாக நடித்திருக்கிறார். நியோ ரியலிச பாணியில் இப்படத்தை கசான் உருவாக்கியுள்ளார்.
வைல்ட் ரிவர் படத்தின் பாதிப்பை இன்றும் பல திரைப்படங்களில் காணமுடிகிறது.
கரோலின் கதாபாத்திரம் தனித்துவமானது. அவள் சக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் காட்சி சிறப்பானது. எல்லாவை தீவிலிருந்து வெளியேற்ற வந்த சக் அமைதியாக நடந்து கொள்கிறான். அவனது தரப்பை உறுதியாக வெளிப்படுத்துகிறான். அவன் காட்டும் மரியாதையை எல்லா புரிந்து கொள்கிறாள்.
ஆற்றின் குரலைக் கேட்டு வளர்ந்த எல்லாவிற்கு இன்னொரு இடத்தில் வாழுவது ஏற்புடையதாகயில்லை. படத்தின் முடிவு நம்மைக் கலங்கச் செய்துவிடுகிறது.
March 8, 2025
குற்றமுகங்கள்- 1 லான்சர் கீச்சான்.
(காலனிய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள், குற்றவாளிகள், காவலர்களின் உலகம் பற்றிய விசித்திரப் புனைவுகளை எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். குற்றமுகங்களைப் பற்றிய புனைகதைகளாக சிலவற்றை எழுதியிருக்கிறேன். இதில் புனைவும் உண்மையும் கலந்திருக்கின்றன. )

பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸின் ஆவணக்குறிப்பு 1863 வி.12ல் இரண்டு முறையும் குறிப்பேடு எம்.16ல் நான்கு முறையும் குறிப்பிடப்பட்டுள்ள லான்சர் கீச்சான் என்ற மதராஸில் வாழ்ந்த பிக்பாக்கெட் உண்மையில் ஒரு ஆண் இல்லை. அவன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இருந்த திருடன் என்று மெட்ராஸ்காவல் துறையின் துணை ஆணையராகப் பணியாற்றிய தஞ்சை ராமச்சந்திர ராவ் குறிப்பிடுகிறார்.
தனது சர்வீஸில் அவனைப் பிடிப்பதற்காக ஏழு ஆண்டுகளைச் செலவழித்ததாகவும் ஆனால் கடைசி வரை அவனைப் பிடிக்க முடியவேயில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
இதில் அவர் வெட்கத்துடன் ஒத்துக் கொள்ளும் விஷயம் அவரிடமே இரண்டு முறை லான்சர் கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான் என்பதே. இரண்டு முறையும் அவரது பர்ஸிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு காலி பர்ஸினுள் டயமண்ட் குயின் சீட்டு ஒன்றை வைத்து ராமசந்திர ராவ் வீட்டு தோட்டத்திலே போட்டு வந்திருக்கிறான் என்பது அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.
கீச்சான் பெரும்பாலும் வெள்ளைக்கார சீமாட்டி போலவே வேஷம் அணிந்து கொண்டிருந்தான். அவனை நிஜமான பெண் என நினைத்து நீதிபதி வொய்லியின் மனைவி கேதரின் நட்பாகப் பழகியிருக்கிறாள். அவளுடன் ஒன்றாகக் கீச்சான் நாடகம் பார்க்கச் சென்றிருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். வொய்லியின் மனைவியை ராமச்சந்திர ராவ் விசாரணை செய்தபோது அது வீண்சந்தேகம் என்றும் தனது தோழி இசபெல் ஒரு போதும் லான்சர் கீச்சானாக இருக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னாள். அத்துடன் இசபெல் கப்பலில் இங்கிலாந்து புறப்பட்ட போது தானே வழியனுப்பி வைத்ததாகவும் சொன்னாள்.
லான்சர் கீச்சானை பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானே இங்கிலாந்து புறப்பட்டுப் போக முயற்சி செய்தார். ஆனால் காவல் துறைஆணையராக இருந்த சார்லஸ் டெகார்ட் ஒரு பிக்பாக்கெட்டினைப் பிடிக்க லண்டன் போக வேண்டியதில்லை என்று அனுமதி தர மறுத்துவிட்டார்.
கீச்சான் பெண் வேஷமிடுகிறான் என்பது ராமச்சந்திர ராவ் உண்டாக்கிய கதை. உண்மையில் அவருக்குக் கீச்சான் யார் என்பதே தெரியாது. அவனை நேரில் கண்டவரில்லை. மதராஸின் ஆயிரமாயிரம் பொதுமக்களில் அவனும் ஒருவன். அவன் வெள்ளைக்காரர்களிடம் மட்டும் திருடினான் என்பதும் அவன் திருடியவர்களில் இருவர் நீதிபதிகள் என்பதும் ஆறு பேர் கிழக்கிந்திய கம்பெனியின் உயரதிகாரிகள் என்பதும் முக்கியமானது.
இந்தியர்கள் எவரும் கலந்து கொள்ள முடியாத விருந்தில் இந்தத் திருட்டு நடந்திருக்கிறது என்பதே அவன் பெண் வேஷமிட்டான் என்ற கதை உருவானதற்கான காரணமாக இருக்கக் கூடும்
பிடிபடாத திருடன் மெல்ல கதையாக மாறுவது காலத்தின் வழக்கம். லான்சர் கீச்சான் பற்றிய கதைகளும் அப்படித்தான் உருவானது. உண்மையில் இந்தக் கதைகளை உருவாக்கியதில் பிரிட்டிஷ்கார்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அவர்கள் ஒன்று கூடும் போதெல்லாம் லான்சர் கீச்சானைப் பற்றிப் பேசினார்கள். பயந்தார்கள்.
விக்டோரியா கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அங்கும் இரண்டு முறை கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான். அப்படியானால் அவன் பெண் வேஷமிட்டு வரவில்லை என்று தானே அர்த்தம் என்றார் ஹெபர்ட். ஒருவேளை அங்கு மட்டும் அவன் கப்பற்படை அதிகாரியின் தோற்றத்தில் வந்திருக்கக் கூடும் என்றார்கள். காரணம் திருட்டு நடந்த நாளில் நிறையக் கப்பற்படை அதிகாரிகள் வந்திருந்தார்கள்.
கீச்சானுக்கு எப்படி இது போன்ற விருந்துகள். நிகழ்ச்சிகள் நடப்பது தெரிகிறது. யார் அவன் பின்னால் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் காவல்துறை ஆணையர் விசாரிக்க ஆள் அனுப்பினார். ஆனால் அவர்களால் ஒரு தகவலையும் கண்டறியமுடியவில்லை
லான்சர் கீச்சானைப் பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானும் பெண்வேஷமிட்டுச் சுற்றியலைந்தார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிக் காவல்துறையில் எந்த ஆவணப்பதிவுமில்லை.
லான்சர் கீச்சான் எந்த ஊரில் பிறந்தான் என்றோ, அவனது பெற்றோர் யார் என்றோ தெரியவில்லை. ஆனால் அவன் எஸ்.எஸ். பாசில்டன் என்ற ஆங்கிலேயக் கப்பலில் மதுக்கோப்பைகள் மற்றும் சமையற்பாத்திரங்களைக் கழுவும் வேலையில் இருந்தான் என்றும். அந்தக் கப்பலில் இருந்த யாரோ ஒருவர் தான் அவனுக்குத் திருட்டுத் தொழிலை கற்றுத் தந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
நிலத்தில் திருட்டுக் கற்றுக் கொள்பவர்களை விடவும் நீரில் திருடக் கற்றுக் கொள்பவர்கள் திறமைசாலிகள். அவர்களை எளிதில் பிடிக்க முடியாது என்பார்கள்.. கப்பலில் வரும் வணிகர்கள். பிரபுகள், ராணுவ அதிகாரிகளின் பர்ஸை திருடிவிட்டு கப்பலிலே ஒளிந்து கொள்வது எளிதானதில்லை. ஆனால் கீச்சான் ஒருமுறையும் பிடிபடவில்லை. அவன் எப்படித் திருடுகிறான் என்பதோ, திருடிய பணத்தை என்ன செய்தான் என்றே யாருக்கும் தெரியவில்லை
குற்றவாளிகள் தங்களுக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். பயன்படுத்துகிறார்கள் அதைக் கண்டறிந்துவிட்டால் கீச்சானைப் பிடித்துவிடலாம் என ராமசந்திர ராவ் நம்பினார். இதற்காகப் பலவகையிலும் முயற்சி செய்தார். ரகசிய எழுத்துக்களை ஆராயத் துவங்கிய ராமசந்திர ராவிற்கு அது முடிவில்லாத புனைவுலகம் என்று தெரிந்திருக்கவில்லை. அது போலவே ரகசிய எழுத்துகளைத் தேடிய தான் எதற்காகத் தீவிரமான ஆன்மீக நாட்டம் கொள்ளத் துவங்கினோம் என்றும் புரியவில்லை. ராமசந்திர ராவ் திடீரென எண்களைக் கடவுளாகக் கருதத் துவங்கினார். உலகம் ஒரு ரகசிய கணக்கின்படி இயங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். கடவுள் என்பது யாரும் அறியாத ஒரு விநோத எண் என்று அவர் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை..
கீச்சானைப் பற்றிய கதைகளை மக்கள் மிகவும் ரசித்தார்கள். உண்மையில் எவர் எங்கே பிக்பாக்கெட் அடித்தாலும் அது கீச்சானின் வேலையாகவே கருதப்பட்டது. இதனால் அவன் திருடர்களால் நேசிக்கப்பட்டான். அவனைக் குற்றத்தின் கடவுளாக வணங்கினார்கள். கீச்சானின் பெயரை சிலர் கைகளில் பச்சை குத்திக் கொண்டார்கள். தப்பிச்செல்லும் போது அவன் சிகரெட் புகையாக மறைந்துவிடக் கூடியவன் என்று மக்கள் நம்பினார்கள்.
கீச்சானின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அவனது கதையை முடித்துவிட முடியும் எனக் காவல்துறை நம்பியது. இதனால் அடையாளம் தெரியாத உடல் ஒன்றை கடலில் மிதக்கவிட்டு அது கீச்சானின் உடல் என்று அறிவித்தார்கள். கீச்சானை யார் கொன்றார்கள் என்று விசாரணை செய்வது போலப் போலீஸ் நாடகம் நிகழ்த்தினார்கள். ஆனாலும் லான்சர் கீச்சான் யார் என்று கடைசிவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
அதன்பிறகான ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஏதாவது ஒரு பொருள் தொலைந்து போனால் அதனைக் கீச்சான் என்று குறிப்பிடும் பழக்கம் உருவானது. கீச்சானின் பெயரை ஆங்கில அகராதியில் கூடச் சேர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள். கப்பலில் நடக்கும் விருந்தில் ஒரு இருக்கை காலியாக விடப்பட்டது. அது கீச்சானுக்கானது. அங்கே ஒரு குவளை மது வைக்கபடுவதும் வழக்கமானது.
நோரா அலெக்சாண்டர் என்ற ஆங்கிலேயப் பெண்மணி தனது இந்தியப் பயணம் பற்றிய நூலில் தான் கீச்சானின் காதலியாக இருந்தேன் என்று ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். அதில் கீச்சான் ஒரு காஸனோவா போல விவரிக்கபடுகிறார். அவர் முத்தமிடுவதால் பெண்ணின் உதட்டு நிறம் மாறிவிடும் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஜே. எவிங் ரிச்சி எழுதிய தி நைட் சைட் ஆஃப் லண்டன் நூலில் கீச்சானைப் பற்றிய ஒரு குறிப்பும் காணப்படுகிறது. இதன் பிறகான காலத்தில் இங்கிலாந்தில் கீச்சான் ரகசியக் காதலன் கதாபாத்திரமாக மாறினான்.
காவல்துறை அதிகாரியான ராமசந்திர ராவ் ஓய்வு பெற்று ஞானதேசிகர் என்ற பெயரில் சாதுவாக வாழத் துவங்கிய போது சில நேரங்களில் அவரது மனதில் கீச்சான் என்பது குற்றத்தின் அழிவற்ற குமிழ் என்று தோன்றுவதுண்டு.
எப்படியோ, உலகம் கண்டிராத கீச்சான் ஒரு சொல்லாக நிலைபெற்றுவிட்டான். திருடனின் வாழ்க்கை என்பதே சொற்களாக மிஞ்சுவது தானே.
March 7, 2025
சாய்ந்து கிடக்கும் டம்ளர்
வீட்டில் உள்ளவர்கள் பகலில் உறங்கும் போது சிறுவர்கள் உறங்குவதில்லை. பெரியவர்கள் உறங்குகிற நேரத்தில் சிறார்கள் மிகுந்த சுதந்திரமாக உணருகிறார்கள்.

கையில் கிடைத்த துணியைப் போலப் பகலைச் சுருட்டி எறிந்து விளையாடுகிறார்கள். நிழலைப் போல வீட்டிற்குள் சப்தமில்லாமல் நடக்கிறார்கள்.
பிரிட்ஜை சப்தமில்லாமல் திறந்து குளிர்ந்திருந்த கேக்கை எடுத்து ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடுகிறார்கள். உறங்குகிறவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய சந்தோஷம்.
உறங்கும் போது பெரியவர்கள் சிறுவர்களாகி விடுகிறார்கள். குறிப்பாக அவர்களின் திறந்த வாய் பசித்த சிறுவர்களின் வாய்ப் போலிருக்கிறது.
தரையில் உறங்குபவர்களைத் தாண்டி நடப்பது ஆனந்தமானது. உறங்குகிறவர்களின் மீது அடிப்பது போல சிறார்கள் பொய்யாகக் கையை ஒங்குவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
உறங்குகிறவர்கள் ஏணியின் மீதேறி நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். விழிப்பு வந்தவுடன் கிழே வந்துவிடுவார்கள்.
பகல் நேர உறக்கத்திலிருக்கும் வீடு என்பது சாய்ந்து கிடக்கும் டம்ளர் போன்றது என்பது சிறுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
••
இது போன்ற புனைவற்ற குறிப்புகளாக நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.
இதனை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் Micro essays, Micro memoirs, Micro stories எனப் பல்வேறு வகைமைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் நிறைய இளம்படைப்பாளிகள் 100 சொற்களுக்குள் இந்த வகைமையில எழுதுகிறார்கள்.
தமிழில் இதை நுண்ணெழுத்து என்று சொல்லலாம்.
March 6, 2025
தூத்துக்குடியில் ஒரு விழா
எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கான அறிமுகவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது

தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்துறையும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வாசிப்பு மன்ற பொறுப்பாளர் ரவி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.




சலூன் நூலகம் மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், ஆ. மாரிமுத்து, ப.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



இந்த நிகழ்வில் ஆரோக்கியபுரம் தபால்காரர் காளிமுத்து கௌரவிக்கபட்டிருக்கிறார்.

நிகழ்வில் இருபது மாணவர்கள் தபால் பெட்டி எழுதிய கடிதம் குறித்த தங்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நூலை வாசித்து முடித்த 100 மாணவர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகம் படித்துப் பாராட்டுக் கடிதம் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிகழ்வு சிறக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.
March 5, 2025
சென்னை இலக்கியத் திருவிழா 2025
சென்னை இலக்கியத் திருவிழா 2025 காஞ்சிபுரத்தில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்ச் 8 மதியம் 12.30 மணிக்கு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு குறித்து உரையாற்றுகிறேன்

காஞ்சிபுரம் அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த நெ.து.சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர்.
தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராகவும் பொது நூலக இயக்குராகவும் பதவி வகித்தவர்.
காமராஜர் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்.
பெரியாரின் தொண்டர். அண்ணாவின் விருப்பத்திற்குரிய கல்வியாளர். சென்னை பல்கலைகழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர்.
சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்து அங்குள்ள கல்விச்சூழல் பற்றி நூல் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு கல்விக்கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதற்கு காரணமாக விளங்கியவர்.

நெ.து.சுந்தரவடிவேலு தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் அவரைப் பற்றி பேசுவது பொருத்தமானது.
February 28, 2025
அன்றாடம் – 3 திரும்பக் கேட்டவர்
நகைச்சுவையே முழு உண்மை என்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் ஃபிரிட்ஸ் கரிந்தி, இதே கருத்தையே மிலன் குந்தேராவும் கொண்டிருந்தார். இவர்கள் நகைச்சுவை என்பதை அசட்டுத்தனமான ஒன்றாகக் கருதவில்லை. உயர்ந்த கலைவெளிப்பாடாகக் கருதினார்கள்.


நகைச்சுவை தனது வெளிப்பாடு முறையால் சிரிக்க வைத்தாலும் அதனுள் உண்மை புதைந்திருக்கிறது என்கிறார் கரிந்தி.
இவரது The Refund என்ற ஒரங்க நாடகத்தில் தனது பள்ளிபடிப்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என உணரும் வாஸர்கோஃப் தான் படித்த பள்ளியிடம் கல்விக் கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று வாதிடுகிறான்.
பள்ளிக்கூடத்திற்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேடிக்கையானவை.
1938 ஆம் ஆண்டு வெளியான இந்த நாடகம் ஹங்கேரியில் மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளிலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
நாற்பது வயதான. வாஸர்கோஃப்பிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, அவர் எந்த வேலைக்குச் சென்றாலும் எதற்கும் தகுதியற்றவர் என்று துரத்திவிடுகிறார்கள். ஒரு நாள் அவரது வகுப்புத் தோழர் ஒருவரைச் சந்திக்கிறார். பள்ளியில் படித்த படிப்பால் பிரயோசனமில்லை என்பதால் அவர் தனது தனது கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது நல்லது என்று நண்பர் ஆலோசனை சொல்கிறார் அதை ஏற்றுக் கொண்ட வாஸர்கோஃப் . இதற்காக தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டிய பள்ளிக்கட்டணத்தைத் திரும்பத் தரும்படி கேட்கிறார். இதைக் கேட்ட பள்ளி முதல்வர் அதிர்ச்சி அடைகிறார். என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் பள்ளியின் மற்ற ஆசிரியர்களை அழைத்து அவசரக் கூட்டம் நடத்துகிறார்

கணித ஆசிரியர் இதற்கு ஒரு தீர்வை முன்மொழிகிறார். அதன்படி நாம் வாஸர்கோஃப்பிடம் சில கேள்விகள் கேட்போம். அதற்கு அவர் எந்தப் பதில் சொன்னாலும் அது சரியானது என்று வாதிடுவோம். இதன் மூலம் அவர் அறிவாளி என்பது நிரூபணமாகிவிடும். இதற்குக் காரணம் அவரது படிப்பு, ஆகவே அவரது பள்ளிக்கட்டணத்தைத் திருப்பத் தர முடியாது என்போம் என்கிறார்.
ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை ஏற்கிறார்கள். வாஸர்கோஃப் வாய்மொழித் தேர்விற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.
சரித்திர ஆசிரியர் அவரிடம் முப்பது ஆண்டுகாலப் போர் எத்தனை வருஷம நடந்தது என்று கேட்கிறார். இதற்கு வாஸர்கோஃப், ‘முப்பது வருடப் போர்’ ஏழு மீட்டர் நீடித்தது என்று பதில் சொல்கிறார். வரலாற்று ஆசிரியருக்கு இந்தப் பதிலை எப்படிச் சரியென்று நிரூபிப்பது எனத் தெரியவில்லை
ஆனால் கணித ஆசிரியர் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் வாஸர்கோஃப், அளித்த பதில் சரியானது என்பதை நிரூபித்துவிடுகிறார்.
இப்படியாக இயற்பியல் ஆசிரியர், புவியியல் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கும் வாஸர்கோஃப் முட்டாள்தனமாகப் பதில் தருகிறார். அதைக் கணித ஆசிரியர் தனது திறமையால் சரியான பதில் என விளக்குகிறார்.
முடிவில் கணித ஆசிரியர் அவரிடம் ஒரு கடினமான கேள்வியையும் ஒரு எளிதான கேள்வியையும் கேட்கிறார்.
வாஸர்கோஃப். எளிதான கேள்விக்குத் தவறான பதிலைக் கொடுக்கிறார், கணித தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், அவர் கேட்ட கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம் என்கிறார் ஆசிரியர்
அதன்படி அவருக்குப் பள்ளிக்கூடம் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்கிறார். , வாஸர்கோஃப் சரியான தொகையின் பட்டியலைக் கொடுக்கிறார். கணித ஆசிரியர் இதுவே அவருடைய கடினமான கேள்வி என்றும், அவர் சரியான பதிலைக் கொடுத்தார் என்றும் பாராட்டுகிறார்.
ஆகவே வாஸர்கோஃப் கணித தேர்வில் வெற்றி பெற்றதால் பள்ளிக்கட்டணத்தைத் திரும்பித்தரத் தேவையில்லை என அனைவரும் முடிவு செய்கிறார்கள்.
வாஸர்கோஃப் என்றால் விசித்திரமான நபர் என்று பொருள். கல்வியின் தரம் மற்றும் படிப்பு வேலைக்குப் பயனற்று போய்விட்ட சூழலை விமர்சனம் செய்யும் இந்த நாடகம் எழுப்பும் கேள்விகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.
February 27, 2025
மகிழ்ச்சியின் அடையாளம்
டெட்சுகோ குரோயநாகி எழுதிய டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி 1981ல் வெளியான புத்தகம் ஜப்பானில் இந்த புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

ரயில் பெட்டிகளை வகுப்பறையாகக் கொண்ட டோமாயி பள்ளியில் படித்த டோட்டோ சானின் நினைவுகளை விவரிக்கும் இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வள்ளிநாயகம். பிரபாகரன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.
இப்போது டோட்டோ சானை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஷின்னோசுகே யாகுவா இயக்கியுள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் காண வேண்டிய படம்.

டோட்டோ சான் பொதுப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படிக்கிறாள். வகுப்பறையில் பல நூறு தடவைகள் அவள் மேஜையைத் திறந்தும் மூடவும் செய்கிறாள். அப்படிச் செய்யக்கூடாது. ஏதாவது ஒரு பொருளை வைக்கவோ, எடுப்பதாகவோ இருந்தால் மட்டுமே மேஜையைத் திறக்க வேண்டும் என அவளது ஆசிரியர் கண்டிக்கிறார்.

இப்போது டோட்டோ சான் புத்தகம் பென்சில் நோட்டு என எதையாவது உள்ளே வைக்கிறாள். அல்லது வெளியே எடுக்கிறாள். அவளுக்கு மேஜையின் வாயை திறந்து திறந்து மூடுவது சந்தோஷமளிக்கிறது. ஆனால் ஆசிரியரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலடைகிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி முதல்வரிடம் புகார் சொல்கிறார்.
இன்னொரு நாள் டோட்டோ சான் வகுப்பின் ஜன்னல் வழியாகச் சாலையில் செல்லும் வீதி இசைக்கலைஞர்களைக் காணுகிறாள். அவர்களைக் கைதட்டி அழைத்துத் தங்களுக்காகப் பாட்டு பாடும்படி வேண்டுகிறாள். அவர்களும் இன்னிசையோடு பாடுகிறார்கள். வகுப்பை மறந்து பிள்ளைகள் யாவரும் அந்த இசையைக் கேட்டு மகிழுகிறார்கள். இது ஒழுங்கீனம் என டோட்டோ சான் மீது ஆசிரியர் புகார் அளிக்கவே அவளைப் பள்ளியைவிட்டு விலக்குகிறார்கள்.
டோட்டோ சானின் அம்மா அவளைப் புதிய பள்ளியில் சேர்த்து விடுகிறாள். அது தான் ரயில் பெட்டிகளை வகுப்பறையாக் கொண்ட டோமாயி பள்ளி. படத்தில் அந்தப் பள்ளியும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளும் மிக அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளன.

குறிப்பாக டோட்டோ சான் ஆறு ரயில் பெட்டிகளைப் பார்த்தவுடன் தான் பயணம் செல்லப் போவதாக மகிழ்ச்சி அடைகிறாள். பள்ளியின் நிர்வாகி கோபயாஷியை சந்திக்கும் போது நீங்கள் பள்ளியின் நிர்வாகியா அல்லது ஸ்டேஷன் மாஸ்டரா என்று கேட்கிறாள். அதைக் கேட்டு அவர் சிரிக்கிறார். அவள் சொல்ல விரும்பிய எதையும் சொல்லலாம் எனக் கோபயாஷி அனுமதித்த உடனே அவள் கடகடவெனத் தன்னைப் பற்றிய விஷயங்களைக் கொட்டுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் பள்ளி எப்படிப்பட்டது என்பதன் முதற்புள்ளியாக இருக்கிறது.
இயற்கையான சூழலில், புதுமையான முறையில், அப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறது. வெறும் பாடத்தை மட்டுன்றி சரிவிகித உணவை, நட்பை, கவிதையை. இசையை, குழு நடவடிக்கைகள் மூலம் இயற்கையோடு இணைந்து வாழும் முறையைக் கற்றுத் தருகிறது.
பள்ளியில் டோட்டோ சான் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறாள். அந்த சிரிப்பு தீராத மகிழ்ச்சியின் அடையாளம்.
இந்தப் படம் டெட்சுகோ குரோயனகியின் பள்ளி வாழ்க்கையை மிகுந்த அழகுடன் சித்தரிக்கிறது. அத்தோடு மாற்றுக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சிறப்பாக அடையாளம் காட்டுகிறது.

டோடோ சானை அவளது பெற்றோர் புரிந்து கொள்கிறார்கள். அவளைத் தண்டிக்கவோ, அடக்கி ஒடுக்கவோ அவர்கள் முனைவதில்லை. பொதுப்பள்ளியில் அவளது விருப்பங்கள் யாவும் ஒடுக்கப்படுகின்றன. அவளை ஆசிரியர் வெறுக்கிறார். அவளைப் பார்த்து மற்ற மாணவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார். அங்கே வகுப்பறை என்பது ராணுவ பயிற்சி நிலையம் போலச் செயல்படுகிறது. ஆனால் டோமாயி பள்ளியில் வகுப்பறை என்பது கற்றுக் கொள்வதற்கான சூழல். ஆகவே அது உருமாறிக் கொண்டேயிருக்கிறது. மாணவர்கள் ஒன்றிணைந்து கற்கிறார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் வழிகாட்டியாகச் செயல்படுகிறார்கள்.
டோமாயி பள்ளியை கோபயாஷி நடத்துகிறார் என்றாலும் பள்ளியினை மாணவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். தங்கள் பள்ளிக்கான பாடலை அவர்களே உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் மரமேறி விளையாட பள்ளி அனுமதிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகத் தோக்கியோவில் செயல்பட்ட டோமாயி பள்ளி யுத்தகாலத்தில் குண்டுவீச்சில் பாதிக்கபட்டு மூடப்பட்டது.
ஜப்பானிய அனிமேஷன் படங்கள் குழந்தைகள் பார்ப்பதற்காக மட்டும் உருவாக்கபடுவதில்லை. மாறாக எல்லா வயதினருக்குமான படமாகவே தயாரிக்கப்படுகின்றன.
ஹயாவோ மியாசாகியின் அனிமேஷன் படங்களைப் போல அடர்வண்ண சித்திரங்கள். விசித்திர நிகழ்வுகள். சாகசங்கள் கொண்ட கதையாக இல்லாமல் இப்படம் நீர்வண்ண ஓவியங்களைப் போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பானது.
••
February 25, 2025
அன்றாடம் -2 தந்தை அறியாதவள்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அவருக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ரகசிய உறவின் மூலம் பிறந்த அவரது மகளின் பெயர் இந்திரா கேட்டோ.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கதையை மார்க்வெஸ் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அவருக்கு, ரோட்ரிகோ மற்றும் கோன்சாலோ என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
சுசானா கேட்டோ என்ற பத்திரிக்கையாளரை மார்க்வெஸ் ரகசியமாகக் காதலித்திருக்கிறார். அவள் வழியாகப் பிறந்த குழந்தை தான் இந்திரா.

இப்படி ஒரு மகள் இருப்பதை வாழ்நாளின் கடைசிவரை உலகம் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் மார்க்வெஸ். அவரது மறைவின் போது இப்படி ஒரு செய்தி ஊடகங்களில் அடிபட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று அவரது இரண்டு மகன்களும் மறுத்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ் இறந்த பின்பு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு இந்திராவை தங்களின் சகோதரியாக அங்கீகரித்திருக்கிறார்கள்.
மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பத்தில் அப்படிக் கள்ளஉறவில் பிறந்த குழந்தை வளர்க்கபட்டது என்று மார்க்வெஸ் நினைவு கொள்கிறார். புனைவை நிஜமாக்குவது போலவே அமைந்திருக்கிறது மார்க்வெஸின் ரகசியக் காதல்.
1982 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது மார்க்வெஸை வாழ்த்திய முதல் நபர் இந்திரா காந்தி என்கிறார்கள். அதன் காரணமாகவே அவரது பெயரை தனது மகளுக்கு மார்க்வெஸ் வைத்திருக்கிறார்.
தந்தை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று வெளியே சொல்ல முடியாதபடி தந்தையற்ற பெண்ணாக வளர்ந்திருக்கிறார் இந்திரா கோட்டே. தற்போது 32 வயதில் இருக்கும் இந்திரா மெக்சிகோ நகரில் ஆவணப்பட இயக்குநராக உள்ளார். அவரது முகச்சாயல் அப்படியே மார்க்வெஸ் போலிருக்கிறது. குறிப்பாகக் கண்கள் மற்றும் மூக்கு.
தான் யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டவில்லையே தவிரத் தன் மீது தந்தை மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்கிறார் இந்திரா.
மார்க்வெஸின் ரகசியகாதலியாக இருந்த சூசனா ஒரு பத்திரிக்கையாளர். அவர் மார்க்வெஸ் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது
அம்மா உயிரோடு இருக்கும்வரை இந்த உண்மையை நாங்கள் மறைத்து வைத்திருந்தோம். இப்போது இந்திரா எங்கள் குடும்ப உறுப்பினர் என்று சொல்கிறார் மார்க்வெஸின் மகன் ரோட்ரிகோ
இப்படி லியோ டால்ஸ்டாயின் கள்ளஉறவில் பிறந்த மகனான டிபோபியின் பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கை மற்றும் அவரது குடும்பத்தின் நிகழ்வுகளைத் தான் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலாக எழுதினேன். அதில் வரும் டிமோபியும் இந்திராவும் வேறுவேறில்லை.
மார்க்வெஸ் தனக்கு ஒரு மகள் இருப்பதை ஏன் மறைத்தார். அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன பிரச்சனை. அவர் தனது மனைவிக்குப் பயந்து அதை வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள். இப்படி ஒரு உறவை பற்றி அவரது மனைவி அறிந்திருக்க மாட்டார் என்பது பொய். மார்க்வெஸின் உறவினர்கள் சிலர் இந்த உறவை பற்றி எங்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சூசனாவைத் தேடி மார்க்வெஸ் செல்வது வழக்கம் என்கிறார் அவரது உறவினரான கேப்ரியல் எலிஜியோ. மார்க்வெஸின் வாழ்க்கை ரகசியம் அவரது புனைவைப் போலவே விசித்திரமாகவுள்ளது.
••
லியோ டால்ஸ்டாயின் சகோதரி மரியா தனது கணவனைப் பிரிந்து ஸ்வீடீஷ் காதலனுடன் வாழத் துவங்கினார். அந்த நாட்களில் விவாகரத்துக் கிடைப்பது கடினமானது. அதிலும் மரியா கள்ள உறவில் குழந்தையைப் பெற்றுக் கொண்டார் என்பது சர்ச்சையை உருவாக்கியது. தனது சகோதரிக்கு விவாகரத்து பெற்றுத் தருவதற்காக டால்ஸ்டாய் பல்வேறு சட்ட நூல்களைப் படித்தார்ர். அத்துடன் அது போன்ற வழக்கு விபரங்களை ஆராய்ந்திருக்கிறார். அவள் விவாகரத்துப் பெறுவதற்குப் பெரிதும் உதவி செய்திருக்கிறார்.

அந்தப் பாதிப்பில் தான் அன்னாகரீனினா நாவல் எழுதினார் என்கிறார்கள். அதில் அன்னா தனது கணவரை விட்டு விரான்ஸ்கியின் மீது காதல் கொள்கிறாள். கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவது அவளது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

திருமணத்திற்கு முன்பாகவே, அல்லது பின்பாகவே கள்ளஉறவில் குழந்தைகள் பிறப்பது டால்ஸ்டாய் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. அவரது தந்தை அப்படி ஒரு மகனைப் பெற்றிருக்கிறார். டால்ஸ்டாயின் சகோதரனும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பிள்ளைக்குத் தந்தையாகியிருக்கிறார். டால்ஸ்டாய் திருமணத்திற்கு முன்பாக அக்சின்யா என்ற வேலைக்காரப் பெண்ணுடன் பழகியிருக்கிறார். அவள் மூலமாக டிமோபி என்ற பையன் பிறந்திருக்கிறான். அவனைக் கடைசிவரை தனது மகனாக அவர் ஏற்கவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் மரணத்திற்குப் பின்பு அவரது மூத்த மகன் செர்ஜி டிமோபியை தங்கள் சகோதரன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறான்.
“All human beings have three lives: public, private, and secret.” என்று சொல்கிறார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொன்னது என இப்போது தெரிந்திருக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
