S. Ramakrishnan's Blog, page 16
March 5, 2025
சென்னை இலக்கியத் திருவிழா 2025
சென்னை இலக்கியத் திருவிழா 2025 காஞ்சிபுரத்தில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்ச் 8 மதியம் 12.30 மணிக்கு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு குறித்து உரையாற்றுகிறேன்

காஞ்சிபுரம் அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த நெ.து.சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர்.
தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராகவும் பொது நூலக இயக்குராகவும் பதவி வகித்தவர்.
காமராஜர் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்.
பெரியாரின் தொண்டர். அண்ணாவின் விருப்பத்திற்குரிய கல்வியாளர். சென்னை பல்கலைகழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர்.
சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்து அங்குள்ள கல்விச்சூழல் பற்றி நூல் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு கல்விக்கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதற்கு காரணமாக விளங்கியவர்.

நெ.து.சுந்தரவடிவேலு தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் அவரைப் பற்றி பேசுவது பொருத்தமானது.
February 28, 2025
அன்றாடம் – 3 திரும்பக் கேட்டவர்
நகைச்சுவையே முழு உண்மை என்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் ஃபிரிட்ஸ் கரிந்தி, இதே கருத்தையே மிலன் குந்தேராவும் கொண்டிருந்தார். இவர்கள் நகைச்சுவை என்பதை அசட்டுத்தனமான ஒன்றாகக் கருதவில்லை. உயர்ந்த கலைவெளிப்பாடாகக் கருதினார்கள்.
Fritz Karinthy
நகைச்சுவை தனது வெளிப்பாடு முறையால் சிரிக்க வைத்தாலும் அதனுள் உண்மை புதைந்திருக்கிறது என்கிறார் கரிந்தி.
இவரது The Refund என்ற ஒரங்க நாடகத்தில் தனது பள்ளிபடிப்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என உணரும் வாஸர்கோஃப் தான் படித்த பள்ளியிடம் கல்விக் கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று வாதிடுகிறான்.
பள்ளிக்கூடத்திற்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேடிக்கையானவை.
1938 ஆம் ஆண்டு வெளியான இந்த நாடகம் ஹங்கேரியில் மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளிலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
நாற்பது வயதான. வாஸர்கோஃப்பிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, அவர் எந்த வேலைக்குச் சென்றாலும் எதற்கும் தகுதியற்றவர் என்று துரத்திவிடுகிறார்கள். ஒரு நாள் அவரது வகுப்புத் தோழர் ஒருவரைச் சந்திக்கிறார். பள்ளியில் படித்த படிப்பால் பிரயோசனமில்லை என்பதால் அவர் தனது தனது கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது நல்லது என்று நண்பர் ஆலோசனை சொல்கிறார் அதை ஏற்றுக் கொண்ட வாஸர்கோஃப் . இதற்காக தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டிய பள்ளிக்கட்டணத்தைத் திரும்பத் தரும்படி கேட்கிறார். இதைக் கேட்ட பள்ளி முதல்வர் அதிர்ச்சி அடைகிறார். என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் பள்ளியின் மற்ற ஆசிரியர்களை அழைத்து அவசரக் கூட்டம் நடத்துகிறார்

கணித ஆசிரியர் இதற்கு ஒரு தீர்வை முன்மொழிகிறார். அதன்படி நாம் வாஸர்கோஃப்பிடம் சில கேள்விகள் கேட்போம். அதற்கு அவர் எந்தப் பதில் சொன்னாலும் அது சரியானது என்று வாதிடுவோம். இதன் மூலம் அவர் அறிவாளி என்பது நிரூபணமாகிவிடும். இதற்குக் காரணம் அவரது படிப்பு, ஆகவே அவரது பள்ளிக்கட்டணத்தைத் திருப்பத் தர முடியாது என்போம் என்கிறார்.
ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை ஏற்கிறார்கள். வாஸர்கோஃப் வாய்மொழித் தேர்விற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.
சரித்திர ஆசிரியர் அவரிடம் முப்பது ஆண்டுகாலப் போர் எத்தனை வருஷம நடந்தது என்று கேட்கிறார். இதற்கு வாஸர்கோஃப், ‘முப்பது வருடப் போர்’ ஏழு மீட்டர் நீடித்தது என்று பதில் சொல்கிறார். வரலாற்று ஆசிரியருக்கு இந்தப் பதிலை எப்படிச் சரியென்று நிரூபிப்பது எனத் தெரியவில்லை
ஆனால் கணித ஆசிரியர் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் வாஸர்கோஃப், அளித்த பதில் சரியானது என்பதை நிரூபித்துவிடுகிறார்.
இப்படியாக இயற்பியல் ஆசிரியர், புவியியல் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கும் வாஸர்கோஃப் முட்டாள்தனமாகப் பதில் தருகிறார். அதைக் கணித ஆசிரியர் தனது திறமையால் சரியான பதில் என விளக்குகிறார்.
முடிவில் கணித ஆசிரியர் அவரிடம் ஒரு கடினமான கேள்வியையும் ஒரு எளிதான கேள்வியையும் கேட்கிறார்.
வாஸர்கோஃப். எளிதான கேள்விக்குத் தவறான பதிலைக் கொடுக்கிறார், கணித தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், அவர் கேட்ட கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம் என்கிறார் ஆசிரியர்
அதன்படி அவருக்குப் பள்ளிக்கூடம் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்கிறார். , வாஸர்கோஃப் சரியான தொகையின் பட்டியலைக் கொடுக்கிறார். கணித ஆசிரியர் இதுவே அவருடைய கடினமான கேள்வி என்றும், அவர் சரியான பதிலைக் கொடுத்தார் என்றும் பாராட்டுகிறார்.
ஆகவே வாஸர்கோஃப் கணித தேர்வில் வெற்றி பெற்றதால் பள்ளிக்கட்டணத்தைத் திரும்பித்தரத் தேவையில்லை என அனைவரும் முடிவு செய்கிறார்கள்.
வாஸர்கோஃப் என்றால் விசித்திரமான நபர் என்று பொருள். கல்வியின் தரம் மற்றும் படிப்பு வேலைக்குப் பயனற்று போய்விட்ட சூழலை விமர்சனம் செய்யும் இந்த நாடகம் எழுப்பும் கேள்விகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.
February 27, 2025
மகிழ்ச்சியின் அடையாளம்
டெட்சுகோ குரோயநாகி எழுதிய டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி 1981ல் வெளியான புத்தகம் ஜப்பானில் இந்த புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

ரயில் பெட்டிகளை வகுப்பறையாகக் கொண்ட டோமாயி பள்ளியில் படித்த டோட்டோ சானின் நினைவுகளை விவரிக்கும் இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வள்ளிநாயகம். பிரபாகரன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.
இப்போது டோட்டோ சானை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஷின்னோசுகே யாகுவா இயக்கியுள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் காண வேண்டிய படம்.

டோட்டோ சான் பொதுப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படிக்கிறாள். வகுப்பறையில் பல நூறு தடவைகள் அவள் மேஜையைத் திறந்தும் மூடவும் செய்கிறாள். அப்படிச் செய்யக்கூடாது. ஏதாவது ஒரு பொருளை வைக்கவோ, எடுப்பதாகவோ இருந்தால் மட்டுமே மேஜையைத் திறக்க வேண்டும் என அவளது ஆசிரியர் கண்டிக்கிறார்.

இப்போது டோட்டோ சான் புத்தகம் பென்சில் நோட்டு என எதையாவது உள்ளே வைக்கிறாள். அல்லது வெளியே எடுக்கிறாள். அவளுக்கு மேஜையின் வாயை திறந்து திறந்து மூடுவது சந்தோஷமளிக்கிறது. ஆனால் ஆசிரியரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலடைகிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி முதல்வரிடம் புகார் சொல்கிறார்.
இன்னொரு நாள் டோட்டோ சான் வகுப்பின் ஜன்னல் வழியாகச் சாலையில் செல்லும் வீதி இசைக்கலைஞர்களைக் காணுகிறாள். அவர்களைக் கைதட்டி அழைத்துத் தங்களுக்காகப் பாட்டு பாடும்படி வேண்டுகிறாள். அவர்களும் இன்னிசையோடு பாடுகிறார்கள். வகுப்பை மறந்து பிள்ளைகள் யாவரும் அந்த இசையைக் கேட்டு மகிழுகிறார்கள். இது ஒழுங்கீனம் என டோட்டோ சான் மீது ஆசிரியர் புகார் அளிக்கவே அவளைப் பள்ளியைவிட்டு விலக்குகிறார்கள்.
டோட்டோ சானின் அம்மா அவளைப் புதிய பள்ளியில் சேர்த்து விடுகிறாள். அது தான் ரயில் பெட்டிகளை வகுப்பறையாக் கொண்ட டோமாயி பள்ளி. படத்தில் அந்தப் பள்ளியும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளும் மிக அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளன.
பள்ளியின் புகைப்படம்.குறிப்பாக டோட்டோ சான் ஆறு ரயில் பெட்டிகளைப் பார்த்தவுடன் தான் பயணம் செல்லப் போவதாக மகிழ்ச்சி அடைகிறாள். பள்ளியின் நிர்வாகி கோபயாஷியை சந்திக்கும் போது நீங்கள் பள்ளியின் நிர்வாகியா அல்லது ஸ்டேஷன் மாஸ்டரா என்று கேட்கிறாள். அதைக் கேட்டு அவர் சிரிக்கிறார். அவள் சொல்ல விரும்பிய எதையும் சொல்லலாம் எனக் கோபயாஷி அனுமதித்த உடனே அவள் கடகடவெனத் தன்னைப் பற்றிய விஷயங்களைக் கொட்டுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் பள்ளி எப்படிப்பட்டது என்பதன் முதற்புள்ளியாக இருக்கிறது.
இயற்கையான சூழலில், புதுமையான முறையில், அப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறது. வெறும் பாடத்தை மட்டுன்றி சரிவிகித உணவை, நட்பை, கவிதையை. இசையை, குழு நடவடிக்கைகள் மூலம் இயற்கையோடு இணைந்து வாழும் முறையைக் கற்றுத் தருகிறது.
பள்ளியில் டோட்டோ சான் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறாள். அந்த சிரிப்பு தீராத மகிழ்ச்சியின் அடையாளம்.
இந்தப் படம் டெட்சுகோ குரோயனகியின் பள்ளி வாழ்க்கையை மிகுந்த அழகுடன் சித்தரிக்கிறது. அத்தோடு மாற்றுக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சிறப்பாக அடையாளம் காட்டுகிறது.
JADWAL TAYANG TOTTO – 1டோடோ சானை அவளது பெற்றோர் புரிந்து கொள்கிறார்கள். அவளைத் தண்டிக்கவோ, அடக்கி ஒடுக்கவோ அவர்கள் முனைவதில்லை. பொதுப்பள்ளியில் அவளது விருப்பங்கள் யாவும் ஒடுக்கப்படுகின்றன. அவளை ஆசிரியர் வெறுக்கிறார். அவளைப் பார்த்து மற்ற மாணவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார். அங்கே வகுப்பறை என்பது ராணுவ பயிற்சி நிலையம் போலச் செயல்படுகிறது. ஆனால் டோமாயி பள்ளியில் வகுப்பறை என்பது கற்றுக் கொள்வதற்கான சூழல். ஆகவே அது உருமாறிக் கொண்டேயிருக்கிறது. மாணவர்கள் ஒன்றிணைந்து கற்கிறார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் வழிகாட்டியாகச் செயல்படுகிறார்கள்.
டோமாயி பள்ளியை கோபயாஷி நடத்துகிறார் என்றாலும் பள்ளியினை மாணவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். தங்கள் பள்ளிக்கான பாடலை அவர்களே உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் மரமேறி விளையாட பள்ளி அனுமதிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகத் தோக்கியோவில் செயல்பட்ட டோமாயி பள்ளி யுத்தகாலத்தில் குண்டுவீச்சில் பாதிக்கபட்டு மூடப்பட்டது.
ஜப்பானிய அனிமேஷன் படங்கள் குழந்தைகள் பார்ப்பதற்காக மட்டும் உருவாக்கபடுவதில்லை. மாறாக எல்லா வயதினருக்குமான படமாகவே தயாரிக்கப்படுகின்றன.
ஹயாவோ மியாசாகியின் அனிமேஷன் படங்களைப் போல அடர்வண்ண சித்திரங்கள். விசித்திர நிகழ்வுகள். சாகசங்கள் கொண்ட கதையாக இல்லாமல் இப்படம் நீர்வண்ண ஓவியங்களைப் போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பானது.
••
February 25, 2025
அன்றாடம் -2 தந்தை அறியாதவள்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அவருக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ரகசிய உறவின் மூலம் பிறந்த அவரது மகளின் பெயர் இந்திரா கேட்டோ.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கதையை மார்க்வெஸ் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அவருக்கு, ரோட்ரிகோ மற்றும் கோன்சாலோ என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
சுசானா கேட்டோ என்ற பத்திரிக்கையாளரை மார்க்வெஸ் ரகசியமாகக் காதலித்திருக்கிறார். அவள் வழியாகப் பிறந்த குழந்தை தான் இந்திரா.

இப்படி ஒரு மகள் இருப்பதை வாழ்நாளின் கடைசிவரை உலகம் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் மார்க்வெஸ். அவரது மறைவின் போது இப்படி ஒரு செய்தி ஊடகங்களில் அடிபட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று அவரது இரண்டு மகன்களும் மறுத்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ் இறந்த பின்பு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு இந்திராவை தங்களின் சகோதரியாக அங்கீகரித்திருக்கிறார்கள்.
மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பத்தில் அப்படிக் கள்ளஉறவில் பிறந்த குழந்தை வளர்க்கபட்டது என்று மார்க்வெஸ் நினைவு கொள்கிறார். புனைவை நிஜமாக்குவது போலவே அமைந்திருக்கிறது மார்க்வெஸின் ரகசியக் காதல்.
1982 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது மார்க்வெஸை வாழ்த்திய முதல் நபர் இந்திரா காந்தி என்கிறார்கள். அதன் காரணமாகவே அவரது பெயரை தனது மகளுக்கு மார்க்வெஸ் வைத்திருக்கிறார்.
தந்தை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று வெளியே சொல்ல முடியாதபடி தந்தையற்ற பெண்ணாக வளர்ந்திருக்கிறார் இந்திரா கோட்டே. தற்போது 32 வயதில் இருக்கும் இந்திரா மெக்சிகோ நகரில் ஆவணப்பட இயக்குநராக உள்ளார். அவரது முகச்சாயல் அப்படியே மார்க்வெஸ் போலிருக்கிறது. குறிப்பாகக் கண்கள் மற்றும் மூக்கு.
தான் யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டவில்லையே தவிரத் தன் மீது தந்தை மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்கிறார் இந்திரா.
மார்க்வெஸின் ரகசியகாதலியாக இருந்த சூசனா ஒரு பத்திரிக்கையாளர். அவர் மார்க்வெஸ் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது
அம்மா உயிரோடு இருக்கும்வரை இந்த உண்மையை நாங்கள் மறைத்து வைத்திருந்தோம். இப்போது இந்திரா எங்கள் குடும்ப உறுப்பினர் என்று சொல்கிறார் மார்க்வெஸின் மகன் ரோட்ரிகோ
இப்படி லியோ டால்ஸ்டாயின் கள்ளஉறவில் பிறந்த மகனான டிபோபியின் பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கை மற்றும் அவரது குடும்பத்தின் நிகழ்வுகளைத் தான் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலாக எழுதினேன். அதில் வரும் டிமோபியும் இந்திராவும் வேறுவேறில்லை.
மார்க்வெஸ் தனக்கு ஒரு மகள் இருப்பதை ஏன் மறைத்தார். அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன பிரச்சனை. அவர் தனது மனைவிக்குப் பயந்து அதை வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள். இப்படி ஒரு உறவை பற்றி அவரது மனைவி அறிந்திருக்க மாட்டார் என்பது பொய். மார்க்வெஸின் உறவினர்கள் சிலர் இந்த உறவை பற்றி எங்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சூசனாவைத் தேடி மார்க்வெஸ் செல்வது வழக்கம் என்கிறார் அவரது உறவினரான கேப்ரியல் எலிஜியோ. மார்க்வெஸின் வாழ்க்கை ரகசியம் அவரது புனைவைப் போலவே விசித்திரமாகவுள்ளது.
••
லியோ டால்ஸ்டாயின் சகோதரி மரியா தனது கணவனைப் பிரிந்து ஸ்வீடீஷ் காதலனுடன் வாழத் துவங்கினார். அந்த நாட்களில் விவாகரத்துக் கிடைப்பது கடினமானது. அதிலும் மரியா கள்ள உறவில் குழந்தையைப் பெற்றுக் கொண்டார் என்பது சர்ச்சையை உருவாக்கியது. தனது சகோதரிக்கு விவாகரத்து பெற்றுத் தருவதற்காக டால்ஸ்டாய் பல்வேறு சட்ட நூல்களைப் படித்தார்ர். அத்துடன் அது போன்ற வழக்கு விபரங்களை ஆராய்ந்திருக்கிறார். அவள் விவாகரத்துப் பெறுவதற்குப் பெரிதும் உதவி செய்திருக்கிறார்.

அந்தப் பாதிப்பில் தான் அன்னாகரீனினா நாவல் எழுதினார் என்கிறார்கள். அதில் அன்னா தனது கணவரை விட்டு விரான்ஸ்கியின் மீது காதல் கொள்கிறாள். கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவது அவளது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
மரியாதிருமணத்திற்கு முன்பாகவே, அல்லது பின்பாகவே கள்ளஉறவில் குழந்தைகள் பிறப்பது டால்ஸ்டாய் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. அவரது தந்தை அப்படி ஒரு மகனைப் பெற்றிருக்கிறார். டால்ஸ்டாயின் சகோதரனும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பிள்ளைக்குத் தந்தையாகியிருக்கிறார். டால்ஸ்டாய் திருமணத்திற்கு முன்பாக அக்சின்யா என்ற வேலைக்காரப் பெண்ணுடன் பழகியிருக்கிறார். அவள் மூலமாக டிமோபி என்ற பையன் பிறந்திருக்கிறான். அவனைக் கடைசிவரை தனது மகனாக அவர் ஏற்கவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் மரணத்திற்குப் பின்பு அவரது மூத்த மகன் செர்ஜி டிமோபியை தங்கள் சகோதரன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறான்.
“All human beings have three lives: public, private, and secret.” என்று சொல்கிறார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொன்னது என இப்போது தெரிந்திருக்கிறது.
February 23, 2025
அன்றாடம் 1 நினைவின் பாடல்
அன்றாடம் ஏதோவொரு செய்தியோ, நிகழ்வோ மறக்கமுடியாதபடி மனதில் பதிந்துவிடுகிறது. சில நாட்கள் காலையில் தூங்கி எழுந்து கொள்ளும் போதே மனதில் ஒரு குறிப்பிட்ட திரைப்படப் பாடலின் வரி தோன்றி அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்ற ஆசையை உருவாக்குகிறது. எதற்காக அப்பாடல் மனதில் தோன்றியது என அறிய முடியாது. ஆனால் பாடலைக் கேட்கும் போது மனது சந்தோஷம் கொள்கிறது. அப்போதேல்லாம் நிகழ்காலத்தில் ஒரு காலும் கடந்தகாலத்தில் ஒரு காலும் வைத்து நடப்பது போலவே தோன்றுகிறது.
இன்று காலையில் அப்படி தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க என்ற வரிகள் வந்து போயின. தண்ணிலவு என்ற சொல்லே குளிர்ச்சியாக இருந்தது. பாடலைக் கேட்டு முடியும் போது தாழை விழுது அசையும் காட்சி மனதில் தோன்றி மறைந்தது. மனதில் தண்ணிலவு தேனிறைக்க என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சுவைத்தபடியே இருந்தேன்.

எனது நடைப்பயிற்சியின் போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்திலுள்ள வீட்டின் பால்கனியில் கட்டிப்போடப்பட்டிருந்த நாயைக் கண்டேன். அந்த நாய் மண்தரை அறியாதது. தொட்டிச்செடியை போலவே அந்த நாயும் பால்கனியில் வளர்க்கிறது. ஆனால் தொட்டிச் செடியினைப் போல நாய் மௌனமாக இருக்க மறுக்கிறது. சாலையில் செல்லும் வாகனங்களை, பள்ளி சிறார்களை, வாக்கிங் போகிறவர்களை, பறக்கும் காகங்களைப் பார்த்து குரைத்தபடியே உள்ளது. அந்த நாயைப் பார்க்க மிகவும் பாவமாக உள்ளது. உணவு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நாய் பால்கனியில் வாழுகிறது. அதற்குத் தான் ஒரு நாய் என்பதே மறந்து போயிருக்கவும் கூடும். தெரு நாய்கள் எதுவும் பால்கனியில் வாழும் நாயைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை. யாரோ ஒரு வயதானவரின் துணையாக உடனிருக்கும் அந்த நாய் அந்தரத்தில் வாழுகிறது. பறவைகளைப் பார்த்துக் குரைக்கிறது பாவம். நகரம் மனிதர்களை மட்டுமில்லை நாய்களையும் அந்தரத்தில் நிறுத்தியிருக்கிறது.
••
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியனின் நேர்காணல் ஒன்றினைப் பார்த்தேன். 91 வயதைக் கடந்தவர். தனது அரசியல்வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது தான் இதுவரை பத்து லட்சம் பேருக்கும் மேலாகக் கைகுலுக்கியிருக்கிறேன் என்கிறார். நம் ஊரில் கைகுலுக்கும் பழக்கம் குறைவு. ஆனால் அரசியல்தலைவர்கள் பலருக்கும் வணக்கம் சொல்லியிருப்பார்கள். ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை என்பது இது போலப் பல்லாயிரக்கணக்கான முறை கைகூப்பி வணக்கம் செய்வது என்பது வியப்பளிக்கிறது.
எந்த அரசனும் எந்தக் கதவையும் தட்டியதேயில்லை. அதற்கான தேவையே கிடையாது. கதவை திறந்துவிட எப்போதும் சேவகர்கள் இருப்பார்கள் என்று படித்த போது அரசனைப் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பம் மாறியது.. அரசனின் தனிமையும் அரசனின் பயமும் சாமான்யன் அறியாதது. சாமானியனின் விலையற்ற சந்தோஷங்களைக் கொண்டவன்.
கனேடிய பிரதமர் பத்து லட்சம் கைகுலுக்கலில் எந்தக் கையை அவசரமாக உதறியிருப்பார். எந்தக் கையைப் பற்றிக் கொண்டதற்காக வருத்தப்பட்டிருப்பார். எந்தக் கைகுலுக்கல் மறையாத நினைவாக மிஞ்சியிருக்கும். எல்லாவற்றுக்கும் பின்னும் சொல்லப்படாத கதை ஒன்று ஒளிந்திருக்கிறது
•••
February 21, 2025
கற்பனை அலைகள்
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் கற்பனை அலைகள் குறித்த அறிமுகம் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில்
பிப்ரவரி 22 சனிக்கிழமை புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் மாரீஸ்வரி எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்
வெயில் வரைந்த ஓவியம்
புதிய சிறுகதை
சாலை ஓவியன் இறந்து கிடந்தான். அருகில் அவன் வரைந்த யானை ஒவியமிருந்தது. ஒவியனுக்கு நாற்பது வயதிருக்ககூடும். கோரையான தாடி. கழுத்துவரை நீண்ட தலைமயிர்.. அழுக்கடைந்து போன காக்கி பேண்டும், கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவன் விழுந்துகிடந்த நிலை சாலையில் அவனே ஒவியமாகக் கிடப்பது போலிருந்தது.
பரபரப்பான மாநகரின் காலை நேரத்தில் அவனைக் கவனிக்க யாருமில்லை. பள்ளிச்சிறுவர்களில் இருவர் இறந்தவனின் அருகே குனிந்து பார்த்துவிட்டு செத்துப்போயிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இறந்தவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பையன் தான் சவைத்துக் கொண்டிருந்த பபிள்கம்மை வாயிலிருந்து வெளியே எடுத்து இறந்தவனின் மீது ஒட்டினான்.
மற்ற சிறுவன் இறந்தவன் வரைவதற்காக வைத்த கலர் சாக்பீஸ்களில் ஒன்றை எடுத்து டவுசர் பையில் போட்டுக் கொண்டான். எதற்காகவும் இறந்தவன் கோவித்துக் கொள்ள முடியாதே என்பது போலிருந்தது அவர்களின் செய்கை.
அநேகமாக ஒவியன் இறந்தது விடிகாலையாக இருக்கக் கூடும். அவன் எப்போதும் பின்னிரவில் தான் ஓவியம் வரைவான். அதுவும் சாலையில் தபால்பெட்டி இருந்த இடத்தை ஒட்டி படம் வரைவதற்கான சட்டகம் போல ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தான். பெரும்பாலும் இயற்கை காட்சிகளையே அவன் வரைவதுண்டு. வண்ணசாக்பீஸ் கொண்டு வரைந்த ஒவியம் என்றாலும் புகைப்படத்தை விடத் துல்லியமாக இருக்கும்.

சிலர் அவசரமாகக் கடந்து செல்லும் போது ஓவியத்தை மிதித்துப் போவதும் உண்டு. அவர்களைக் கோவித்துக் கொள்ள மாட்டான்.
டெலிபோன் அலுவலகத்தில் வேலை செய்யும் சரளா என்ற கண்ணாடி அணிந்த பெண் மட்டும் அன்றாடம் அவன் வரையும் ஓவியங்களை நின்று ரசித்துப் பார்த்துவிட்டு சில்லறைக்குப் பதிலாக ஒரு சாக்லேட்டை வைத்துவிட்டுச் செல்வாள்.
ஓவியன் அந்தச் சாக்லேட்டை சாலையின் எதிர்புறத்தில் இருந்த பிளாட்பாரத்தில் வசித்த ஒரு சிறுமியிடம் கொடுப்பதற்காக அழைப்பான்.
மீனா என்ற அந்தச் சிறுமிக்கு பத்து வயதிருக்கும். கூழாங்கற்கள் போல வாளிப்பான கண்கள். வட்டமுகம். ரெட்டைச்சடை போட்டிருப்பாள். அவளது அப்பாவும் அம்மாவும் அதே சாலையில் பிச்சை எடுக்கிறவர்கள். சில நேரம் மீனாவும் சாலையில் நிற்கும் கார்களின் கதவை தட்டி கையேந்துவாள். அவர்கள் பிளாட்பாரத்திலே வசித்தார்கள்.
ஒரு மரப்பெட்டி. பத்து பனிரெண்டு அலுமினிய பாத்திரங்கள். கிழிந்து போன கம்பளி. இரண்டு போர்வைகள். யாரோ வீசி எறிந்த ஒரு தலையணை. சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி. பிளாஸ்டிக் டம்ளர். ஒரு மண்ணெண்ணெய் பம்பிங் ஸ்டவ். சினிமா போஸ்டர் ஒட்டிய தட்டி. இவ்வளவு தான் அவர்கள் வசிப்பிடம்.
மீனா ஒருத்தி தான் ஓவியனை மாமா என்று அழைப்பாள்
அவன் தரும் சாக்லேட்டை சுவைத்தபடி எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.
“ஏன் மாமா தரையில படம் வரையுறே. பேப்பர்ல வரையலாம்லே“ என்று மீனா கேட்டிருக்கிறாள்
“எனக்கு பேப்பர்ல வரைய பிடிக்காது. இந்த வெயில் மாதிரி நானும் தரையில வரைவேன். இதுக்கு ஒண்ணும் விலை கிடையாது “ என்பான் ஓவியன்
“நீங்க ஏன் படம் வரைஞ்சிகிட்டே இருக்கீங்க. வேற வேலை பாக்கலாம்லே“ என்பாள் சிறுமி
“இதான் என் வேலை. சின்னவயசில சுவத்துல கிறுக்கிட்டு இருந்தப்ப பிடிச்ச கிறுக்கு. விட மாட்டேங்குது. நீயும் படம் வரைந்து பாக்குறயா. நான் கத்து தர்றேன்“
“வேணாம் மாமா. அப்பா அடிப்பாரு.. நான் படிச்சி வேலைக்குப் போய் நிறையச் சம்பாதிக்கப் போறேன்“
“அது சரி,, படம் வரைந்தா சம்பாதிக்க முடியாதுல்லே. ஆனா சந்தோஷமா இருக்க முடியும்“
“ நீங்க எப்பவும் இதே அழுக்குச் சட்டை பேண்ட் போட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க குளிக்கவே மாட்டீங்களா “
“இப்படியிருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.. நானும் குளிப்பேன். ஆனா.. நடுராத்திரில. அந்தா இருக்கே.. அந்தப் பார்க். அதோட கேட்டை தாண்டி குதிச்சி. தண்ணிகுழாயை திருக்கிவிட்டு ரப்பர் டியூப் வழியா அடிக்கிற தண்ணிய உடம்புல அடிச்சி ஜாலியா குளிப்பேன். “
“அய்யே.. அது செடிக்கு தண்ணிவிடுற பைப்பு. “
“நானும் செடி தான். செடி பூ பூக்குறது மாதிரி தான் படம் வரையுறது“
“சோப்பு போட மாட்டீங்களா“
“மண்ணு தான் என் சோப்பு. “
“உங்க ஊரு எது மாமா“
“மறந்து போச்சி.. “
“உங்க அப்பா அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க“
“வானத்துல“ என்று ஆகாசத்தை நோக்கி கைகாட்டுவான்
“நீங்க நிறையப் பீடி குடிக்கிறீங்க. உங்க கிட்ட வந்தா பீடி வாடை அடிக்குது“
“என் கோபத்தை எல்லாம் பீடி புகை வழியா வெளியே விடுறேன்.. அதெல்லாம் உனக்குப் புரியாது“
“எங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்காது. உங்க கூடப் பேசுனா திட்டும்“
“என்னை எனக்கே பிடிக்காது. நானே என்னைத் திட்டிகிடுவேன். “
அதைக்கேட்டு சிறுமி சிரித்தாள்.
ஓவியன் அவள் சிரிப்பதை ரசித்தபடியே சொல்வான்.
“நீ சிரிக்குறப்போ உன் கண்ணு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா“
“அதை நான் பாக்க முடியாதுல்லே“
“எவ்வளவு அழகா சொல்லிட்டே. நம்ம கண்ணாலே நம்மை அழகை பாத்துகிட முடியாதுல்லே“
“ஆனா கண்ணாடி பாத்தா தெரியும்லே“
“கண்ணாடி பொய் சொல்லும். உன் வலது கையை ஆட்டு கண்ணாடில இடது கையா தெரியும்“
“ஆனா முகம் அப்படி மாறாதுல்லே“
“முகம் நடிக்கும் பாப்பா.. அதுவும் கண்ணாடி முன்னாடி நிக்கும் போது முகம் பாசாங்கு பண்ணும். தூங்கும் போது தான் முகம் நிஜமா இருக்கும். யாரும் தான் தூங்குறதை தானே பாக்க முடியாதுல்லே“
“நீங்க பேசுறது ஒண்ணுமே புரியலை“
“உனக்கு நான் வரையுற படம் பிடிக்குமா“
“ரொம்பப் பிடிக்கும். அன்னைக்கு ஒரு யானை வரைந்தீங்களே. நிஜமா யானை படுத்துகிடக்கிறது மாதிரி இருந்துச்சி“
“அப்படியா. நீ அந்த யானை மேல ஏறி உட்காந்துகிட வேண்டியது தானே“
“அது நிஜ யானை இல்லையே“
“நீ தானே சொன்னே நிஜ யானை மாதிரி இருக்குனு“
“அது படம் தானே மாமா. அதுல எப்படி ஏறி உட்கார முடியும்“
“அப்போ நாளைக்கு அந்த யானை மேல நீ உட்கார்ந்து இருக்கிற மாதிரி வரைந்திருறேன். “.
“வேணாம் மாமா. அம்மா திட்டும்“
“ஆமா.. போறவர்ற ஆட்கள் உன் முகத்தை மிதிச்சிருவாங்க “
“ஏன் எப்பவும் யானையா வரயுறீங்க“
“யானையோட அழகை பாத்துகிட்டே இருக்கலாம்.. நீ காட்டுக்குள்ளே போயிருக்கியா.. “
“இல்லே“
“நிஜயானை அங்கே தான் இருக்கு“
“ஏன் கோவில்ல யானை இருக்கே“
“அது சங்கிலி போட்ட யானை. காட்டுல இருக்கிற யானை தான் நிஜ யானை“
“அதை நான் பாக்கணும்“
“நான் உன்னை அழைச்சிட்டுப் போய்க் காட்டுறேன்“
“காட்டுக்குள்ளே போனா பயமா இருக்காதா“
“ஒரு பயமும் இருக்காது. மனுசங்க தான் எப்போ என்ன செய்வாங்கன்னு தெரியாது. மிருகம் அப்படியில்லே. “
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிறுமியின் அம்மா பிளாஸ்டிக் குடம் ஒன்றில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.. அம்மாவைப் பார்த்த மறுநிமிஷம் மீனா பேச்சை துண்டித்துவிட்டு ஒடிப் போனாள்.
மீனாவின் அம்மா ஓவியனை முறைத்தபடி சப்தமாகச் சொன்னாள்
“ஒரு நா இல்லே ஒரு நா நீ என் கையாலே செருப்படி வாங்க போற பாரு…“
ஓவியன் சிரித்துக் கொண்டே “நல்லா இரு“ என அவளை வாழ்த்தினாள். காரணமேயில்லாமல் அவளுக்கு ஒவியனைப் பிடிக்கவில்லை. அது போல அவள் எவ்வளவு கோவித்துக் கொண்டாலும் ஒவியனுக்குக் கோபம் வருவதேயில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் பிளாட்பாரத்தில் வசித்த மீனாவின் குடும்பம் இடத்தைக் காலி செய்து போயிருந்தார்கள். மீனா அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. அது வருத்தமாக இருந்தது. எங்கே போயிருப்பார்கள். ஊரைவிட்டே போய்விட்டார்களா. அந்தச் சிறுமியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். மீனாவின் விளையாட்டு பேச்சு மனதில் நிழலாடியபடி இருந்தது.
அதன்பிறகு அவனது ஒவியத்திற்குப் பரிசாகக் கிடைக்கும் சாக்லேட்டினை சாலையில் வீசி எறிந்துவிடுவான். யாருக்கும் கொடுக்கக் கூடாது. எந்த உறவும் உருவாகக் கூடாது. என்பதில் கவனமாக இருந்தான்.
அந்த ஓவியனை தேடி யாரும் வருவதில்லை. இவ்வளவு பெரிய நகரில் அவனைத் தெரிந்தவர் என யாருமில்லை.
தனக்குக் கிடைக்கும் சில்லறைகளை வைத்து அவன் வண்ணசாக்பீஸ்கள் வாங்குவான். அருகிலுள்ள கையேந்தி உணவகத்தில் சாப்பிடுவான். அபூர்வமாகச் சில நாட்கள் யாராவது அவனுக்குப் பணம் தருவதுண்டு. அப்படி ஒரு வெள்ளைக்காரன் அவன் வரைந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக நூறு ரூபாய் கொடுத்தான்.
அந்த நூறு ரூபாயில் ஒரு பலூன் பாக்கெட் வாங்கி நாள் முழுவதும் ஒவ்வொரு பலூனாக ஊதி வானில் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ஒரு ஆனந்தம். பரவசம்.
நாள் முழுவதும் தான் வரைந்த ஓவியத்தின் அருகில் அவன் உட்கார்ந்திருப்பான். மதிய நேரம் ஓவியத்தின் அருகிலே சுருண்டு படுத்துக் கொள்வான். எப்போதாவது காவலர்கள் அவனைக் கோவித்துக் கொண்டு திட்டுவார்கள்.
“படம் தானே சார் வரையுறேன்“ என்று சொல்வான்
“ரோட்டுல ஏன்டா படம் வரையுறே“. என்று காவலர் திட்டுவார்
“ரோட்டை அழகாக்குறேன் சார்.. அது தப்பா“
“தப்பில்லை. தொந்தரவு.. ஆள் நடக்கவே ரோடு பத்தமாட்டேங்குது“
“ஒரு நாளைக்கு இந்த ஊருக்கு லட்சம் பேரு புதுசா வர்றாங்களாம்“
“இந்த கணக்கை எல்லாம் கேட்டனா.. உன்னை மாதிரி வெட்டிபயகளுக்கு இந்த ஊர்ல என்ன வேலை,. நீயெல்லாம் எங்காவது காடு கரைனு போயி இருக்கலாம்லே“
“இவ்வளவு பெரிய ஊர்ல நான் ஒரு எறும்பு. என்னாலே எந்தத் தொந்தரவும் வராது சார்“
“உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சில்லறை கிடைக்குது“.
“பத்து இருபது.. கிடைக்கும். சில நாள் எதுவும் கிடைக்காமலும் போகும்“
“படம் வரையுறேனு சொல்லிட்டுக் கஞ்சா பொட்டலம் விக்கிற பய தானேடா நீ.. “
“அதெல்லாம் கிடையாது சார்.. நான் பீடி மட்டும் தான் பிடிப்பேன்“
“அதான் கெட்டவாடை அடிக்குதே.. இதை நீ சொல்லணுமாக்கும்“ என்றார் காவலர்
அதைக்கேட்டு ஒவியன் சிரித்தான். காவலர்களுக்கு அவனை நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படியான கோபம். சண்டைகள் வருவதுண்டு.
••
இறந்துகிடந்த ஒவியனின் அருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வீசி சென்றான் ஒருவன். இதுவரை அவனது ஒவியங்களின் மீது தான் சில்லறைகள் சிதறிகிடக்கும். இன்றைக்கு அவனைச் சுற்றிலும் கிடந்தன.
ஒவியத்திலிருந்த யானையின் மீது சூரிய வெளிச்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் இருந்த இன்னொரு பிச்சைக்காரன் இறந்தவனைச் சுற்றிகிடந்த நாணயங்களைச் சேகரித்துத் தனதாக்கிக் கொண்டான். யார் காவலர்களிடம் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் காவலர் வந்தபோது வெயிலேறியிருந்தது. அவனது உடலை காவலர் புரட்டிப்பார்த்தார். ஒவியனின் விரல்நகத்தில் சாக்பீஸ் துகள் ஒட்டியிருந்தது. பாதிக்கனவில் இறந்தவன் போல அவனது முகத்தில் சாந்தம். காவலர் அந்த ஓவியனின் உடலை பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
எப்போதும் அவன் ஓவியத்தை ரசிப்பதற்காக வரும் டெலிபோன் ஊழியரான சரளா அன்றைக்கும் வந்திருந்தாள். அவளால் ஓவியன் இறந்து போனதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை மீறி கசியும் கண்களைத் துடைத்தபடியே அவள் காவலரிடம் கிரேட் ஆர்டிஸ்ட் என்றாள்
“இந்த ஆளுக்குச் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா.. எந்த ஊருனு ஏதாவது தெரியுமா“ எனக் காவலர் கேட்டார்
“எனக்கு தெரியலை சார். எனக்கு இவர் வரையுற படம் பிடிக்கும்.. நான் அவரோட ஒரு வார்த்தை கூடப் பேசுனதில்லை.. “
“நீங்க எங்க வேலை பாக்குறீங்க“
அவள் எதிரே தெரியும் டெலிபோன் அலுவலகத்தைக் கையைக் காட்டினாள்
பிறகு அவர் கேட்காமலே சொன்னாள்
“ ஏதாவது பார்ம்லே கையெழுத்து போடணும்னா. நான் போடுறேன் சார்.. ரிலேடிவ்னு என் பெயரை போட்டுக்கோங்க “
“உங்க போன் நம்பர் சொல்லுங்க“
அவள் தனது அலைபேசி எண்ணை சொல்லிக் கொண்டிருந்தாள். சாலையில் வரையப்பட்டிருந்த யானையின் கண்கள் அவளேயே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. இறந்த உடலை ஏற்றிச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. ரப்பர் செருப்பு அணிந்த ஊழியர்கள் யானை ஒவியத்தை அழித்து நடந்தபடியே ஓவியனின் விறைத்த உடலைத் தூக்கி வேனில் ஏற்றினார்கள். பாதி அழிந்த யானையின் தோற்றம் நீருக்குள் அமிழ்ந்த யானையை நினைவூட்டியது.
••
February 19, 2025
பேசும் சித்திரங்கள்
மும்பையில் சினிமா பேனர்களை வரையும் ஷேக் ரஹ்மான் என்ற ஓவியரின் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் Original Copy. 2016ல் வெளியாகியுள்ளது.

இதனை ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ளோரியன் ஹெய்ன்சென்-ஜியோப் மற்றும் ஜார்ஜ் ஹெய்ன்சென் இணைந்து இயக்கியுள்ளார்கள். இப்படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளது
சென்னைக்கு வந்த நாட்களில் அண்ணசாலையில் வைக்கபட்டிருந்த சினிமா பேனர்களை வியப்போடு பார்த்தபடி நடந்திருக்கிறேன். பிரம்மாண்டமான சினிமா பேனர்களை நின்று பார்த்து சுவரொட்டியிலிருந்து படத்தின் கதையை யூகித்துச் சொல்லும் ரசிகர்களை அறிவேன்.
இரவில் அந்தச் சுவரொட்டிகளின் கீழே வசிக்கும் நடைபாதை வாசிகளையும் பேனர்கள் வரைந்த ஆர்டிஸ்ட்களையும் அறிவேன். இந்த ஆவணப்படம் அந்த நினைவுகளைத் தூண்டிவிட்டது.

சினிமாவிற்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதில் பேனர்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. சாமி படங்களுக்கு வரையப்பட்ட பேனர்களுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வணங்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்குப் பேனர் வைப்பதில் பெரிய போட்டியே இருந்தது. இந்தி, மலையாள, ஆங்கிலப் படங்களின் சினிமா பேனர்கள் மொழி தெரியாத மக்களையும் படம் பார்க்க வைத்தன.
மும்பையின் மையப்பகுதியில் ஆல்ஃபிரட் டாக்கீஸ் உள்ளது. அந்தத் திரையரங்கம் உருவான வரலாற்றையும் அதன் நிர்வாகி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகளையும் இந்த ஆவணப்படம் இணைத்தே விவரிக்கிறது.
சினிமா பேனர் வரையும் ஷேக் ரஹ்மான், தியேட்டர் ஆபரேட்டர் நசீர், உரிமையாளர் நஜ்மா, தியேட்டரின் காவலாளி. அரங்க மேலாளர் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஆல்ஃபிரட் டாக்கீஸின் கதையைச் சொல்கிறார்கள்.
திரைப்படப் பேனர்களை வரைவதற்காக ஆல்ஃபிரட் டாக்கீஸிலே ஷேக் ரஹ்மான் வசிக்கிறார். அங்கே வாரம் இரண்டு படங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காக அவரும் அவரது குழுவினரும் பிரம்மாண்டமான பேனர்களைக் கையால் வரைகிறார்கள்.
அவர்கள் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம். உருவங்களை அளவெடுத்து வரையும் தனித்துவம் மற்றும் அவர்களுக்கான அழகியல் ஆகியவற்றை ரஹ்மான் சிறப்பாக விளக்குகிறார்.
ரஹ்மானின் தந்தை மும்பையின் புகழ் பெற்ற பேனர் ஆர்டிஸ்ட். அவரது காலத்தில் எண்ணிக்கையற்ற சினிமா பேனர்களை வரைந்திருக்கிறார். பள்ளிவயதில் தந்தைக்கு உதவி செய்ய வந்த ரஹ்மான் சினிமா பேனர் மீது ஆர்வம் கொண்டு தந்தையின் உதவியாளராகப் பணியைத் துவங்கியிருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேனர் ஆர்டிஸ்ட்டாகத் திகழுகிறார்.
ரஹ்மானுக்குப் பிடித்தமான இந்தி சினிமா நடிகர் நடிகைகள். சினிமா பேனர் வரைவதில் அவர் உருவாக்கிய புதிய பாணி மற்றும் இளம்தலைமுறைக்கு அந்தக் கலையை அவர் கற்றுத் தரும் விதத்தைப் படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது.

மொகலே ஆசம் படத்தின் பேனரைக் காட்டி அதன் கதையைத் தான் எவ்வாறு ஓவியமாக வரைந்திருக்கிறேன் என ரஹ்மான் விவரிக்கும் காட்சி அபாரமானது.
திரையரங்கின் மேலாளர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்துகிறார். அவரைப் போலவே தியேட்டர் உரிமையாளரான நஜ்மா பேகமும் தனது வாழ்வினை சினிமா எந்த அளவு பாதித்துள்ளது என்பதை உண்மையாக விவரிக்கிறார். நஷ்டத்தில் இயங்கிய போது அந்தத் தியேட்டரை மூட மனது வரவில்லை என்கிறார்.
பேனர் வரைவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தனது பிள்ளைகள் படித்தார்கள். வீட்டுவாடகை தரப்பட்டது. அன்றாடச் செலவுகள் யாவும் கவனிக்கப்பட்டன. ஆனாலும் வீட்டில் தனது மனைவி பிள்ளைகளுக்குப் பெயிண்ட் என்றாலே அலர்ஜி. வீட்டில் ஒரு சுவரொட்டி கூட வைக்க விடமாட்டார்கள். தனது இளமைக்காலப் போட்டோ, பழைய சினிமா ஸ்டில்கள், ஓவியங்கள் உள்ளிட்ட தான் வரைந்தவற்றைக் குப்பையாக நினைத்து வீசி எறிந்துவிட்டார்கள். இந்தக் கலையின் மூலம் சோறு சாப்பிடும் அவர்களுக்கே இதன் மதிப்பு தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் ஷேக் ரஹ்மான்
இது ரஹ்மானின் கதை மட்டுமில்லை. இந்தியா முழுவதும் இருந்த சினிமா பேனர் ஆர்டிஸ்ட்டுகளின் கதை. புதிய படம் வெளியாகும் நாளில் இவர்கள் வரைந்து வைத்த பேனர்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த ரசிகர்கள் அதனை வரைந்தவர்களை அறிந்து கொள்ளவில்லை. சினிமா ஓவியங்களை எவரும் ஆவணப்படுத்தவில்லை. சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் ஒன்றாகத் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அது மறக்க முடியாத காட்சி. சினிமா தியேட்டர் என்பது ஒரு தனியுலகம். அதற்குள் உலகம் அறியாத ஒரு வாழ்க்கை தன்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நவீன ஓவியர்கள் பெரிய கேலரிகளில் கண்காட்சிகள் நடத்தி ஆங்கிலப் பத்திரிக்கைகளால் பாராட்டப்படும் போது அதே திறமையுள்ள பேனர் ஆர்டிஸ்ட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் போனது துயரமானது எனக் கோபத்துடன் சொல்கிறார் ரஹ்மான்.
சினிமா பேனர்களை வரையும் போது தனக்குக் கிடைக்கும் அகமகிழ்ச்சியே போதுமானது எனக் கூறும் ரஹ்மான் தனது பேனர்களின் மூலம் ஒடாத படத்திற்குக் கூடப் பார்வையாளர்களை வரவழைக்க முடிந்திருக்கிறது என்பதை வேடிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

இந்தி திரையுலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர்கள். இயக்குநர்கள் மக்கள் மனதில் அழியாத நினைவுச்சின்னமாக மாறியிருக்கிறார்கள். நவீன வாழ்க்கையின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்தபின்பு சினிமா பேனர் போன்ற மரபான கலைகள் கைவிடப்பட்டன. அதை நம்பிய கலைஞர்கள் மறைந்து போனார்கள்.
மும்பையின் மையப்பகுதியில் இருந்தாலும் இந்தத் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உறங்க இடமில்லாமல் தியேட்டருக்கு வரும் ஆட்கள். சினிமா பார்த்துக் கண்ணீர் சிந்தும் பெண்மணி. நகர நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகும் மனிதர்கள் எனச் சினிமா இருளில் தன்னைக் கரைத்துக் கொள்பவர்களைப் படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
பழைய சினிமா போஸ்டர் மீதே புதிய சினிமா போஸ்டரை வரைகிறார்கள். தான் ஆசையாக வரைந்த பேனரை தானே ரஹ்மான் அழிக்கிறார். அவரது பெயரை அவரே அழிக்கும் காட்சி படத்தில் உள்ளது. தங்கள் வாழ்க்கையும் அப்படிபட்டது தான் என்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் அவர் தனது கடந்தகால நினைவுகளைப் பேசுகிறார். வாழ்க்கை தத்துவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். உறவுகள் ஏற்படுத்திய கசப்பை பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார். நட்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கடவுளின் சினிமா தியேட்டர் தான் நமது உலகம். நமது வாழ்க்கை, அங்கே படம் ஒடுவது முடிவதேயில்லை. ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தப் படம் ஆரம்பமாகி விடுகிறது. முடிவில்லாமல் கடவுள் சினிமா காட்டிக் கொண்டேயிருக்கிறார் என்கிறார் ரஹ்மான்.
தான் வரைந்த சினிமா பேனரை தியேட்டரின் முன்பாக உயர்த்திக் கட்டிவிட்டு சற்றே விலகி நின்று பார்வையாளராக அதைப் பார்த்து ரசிக்கிறார் ரஹ்மான். அப்போது அவரது கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. அது தான் அவரை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
February 17, 2025
காமிக்ஸ் நூலகம்
விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென்று சிறப்பு நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.






விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் காமிக்ஸ் நூலகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் காமிக் புத்தகங்களுடன் நான்கு தனிப்பட்ட கணினிகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவிலே காமிக்ஸ் புத்தகங்களுக்கென உருவாக்கபட்ட முதல் நூலகம் இதுவே.

1972ல் சிவகாசியில் சௌந்தபாண்டியன் அவர்கள் முத்துகாமிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். அவர்களின் முதல் வெளியீடு இரும்புக்கை மாயாவி. அது பெற்ற வெற்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுக்கான புதிய வாசலைத் திறந்துவிட்டது.
இந்த ஐம்பது வருஷங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் காமிக்ஸ் நூல்கள் வெளியாகியுள்ளன. இன்று வண்ணத்தில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் நூல்களில் சில ஆசிய அளவில் தமிழில் மட்டுமே வெளியாகின்றன என்பது பாராட்டிற்குரியது.
சென்னை புத்தகத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென விற்பனை அரங்குகள் அமைக்கபடுகின்றன. வயது வேறுபாடின்றிக் காமிக்ஸ் ரசிகர்கள் விருப்பமான காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
காமிக்ஸ் புத்தகங்களுக்னெ தனியே ஒரு நூலகம் உருவாக்கபட வேண்டும் என்பது காமிக்ஸ் ரசிகர்களின் நீண்டநாள் கனவு.
அதனை நிறைவேற்றிக் காட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

காமிக்ஸ் நூலகத்தினைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 15 மற்றும் 16 இரண்டு நாட்கள் சித்திரக்கதைகள் திருவிழா ராஜபாளையத்தில் நடைபெற்றது
இதில் பள்ளி மாணவர்களுக்குக் காமிக்ஸ் வரைவதற்குக் கற்றுத்தருதல். சித்திரக்கதை வாசிப்பு. முகமூடி தயாரிப்பது, டிஜிட்டில் காமிக்ஸ் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகள் தரப்பட்டன.
அத்துடன் தமிழ் சித்திரக்கதைகள் பற்றிய சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு நான் தமிழ் சித்திரக்கதைகள் பற்றி உரையாற்றினேன்.
எனது பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்த அனுபவம். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரத்தொடர், வாண்டுமாமா, மற்றும் இன்று சர்வதேச அளவில் காமிக்ஸ் புத்தகங்கள் பெற்றுள்ள முக்கியத்துவம். ஜப்பானிய மாங்கா காமிக்ஸ். அமெரிக்காவின் டிசி மற்றும் மார்வெல் காமிக்ஸ் உலகம், அதன் சூப்பர் ஹீரோக்கள் உருவான விதம். கிராபிக் நாவல்களின் எதிர்காலம். டிஜிட்டல் காமிக்ஸ் பற்றிய அறிமுகம் என விரிவாக உரையாற்றினேன்..

இளம்தலைமுறையினர் காமிக்ஸ் புத்தகங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயசீலன் ஐஏஎஸ் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.
ஓவியரும் திரைப்பட இயக்குநருமான சிம்புதேவன் காமிக்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம் மற்றும் தனது காமிக்ஸ் புத்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை ஓவியக்கல்லூரி பேராசிரியர் வில்வம் காமிக்ஸ் புத்தகங்களின் தேவை மற்றும் அதன் எதிர்காலம் பற்றி உரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்களில் முத்துக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் விஜயன் கலந்து கொண்டு சிறப்பான உரையை வழங்கினார்.
வகம் காமிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கலீல் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் உதவி பேராசிரியர் பிரபாவதி தனது ஆய்வு மற்றும் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்
வே.சங்கர் ராமு நிகழ்வில் கோமாளி வேஷமிட்டு அழகான கதை ஒன்றைச் சொல்லி அரங்கை மகிழ்வித்தார்.
இந்த நிகழ்வில் விருதுநகர் துணை ஆட்சியர் அனிதா மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் என். பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அரங்கு நிறைந்த கூட்டம். காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றிக் கேட்கவும் பேசவும் மக்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியமாக இருந்தது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

