S. Ramakrishnan's Blog, page 19
December 6, 2024
கவளம்
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது.

இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன்.
ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.

December 4, 2024
மதார் கவிதை நூல் வெளியீடு
கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது,
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.


யாமம் – இணைய வழி கருத்துரை
நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

வெற்றியின் பின்னால்
.
1952ல் வெளியான திரைப்படம் The Bad and the Beautiful. வின்சென்ட் மின்னெல்லி இயக்கியுள்ளார்.

இது சினிமாவைப் பற்றிய சினிமா. பொதுவாகச் சினிமா எடுப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. Sunset Boulevard, Day for Night 8½ போல அபூர்வமாகச் சில படங்கள் பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் படமிது.
1950களின் ஹாலிவுட் ஸ்டுடியோ இயங்கும் முறையினையும், அந்தக் காலத் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகள். மற்றும் நடிகர் நடிகைகளின் ஈகோ, சினிமா எடுப்பதன் பின்னுள்ள நிஜங்களை படம் சிறப்பாகப் பேசுகிறது.
“Don’t worry. Some of the best movies are made by people working together who hate each other’s guts. ” என்றொரு வசனம் படத்திலுள்ளது. அது இன்றைய சில வெற்றிப்படங்களுக்கும் பொருந்தக்கூடியதே.
“மெமோரியல் டு எப் பேட் மேன்” என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதாபாத்திரத்தில் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். அவரது திரைவாழ்வில் மறக்க முடியாத கதாபாத்திரமிது.

படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் இயக்குனர் ஃப்ரெட் அமீல் வீட்டில் தொலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் ஜொனாதன் ஷீல்ட்ஸ் பேசுகிறார். ஆனால் பிரெட் அவருடன் உரையாட விருப்பமின்றிப் போனை துண்டிக்கிறார். அதே அழைப்பு இப்போது நடிகை ஜார்ஜியா வீட்டில் ஒலிக்கிறது. அவளது பணிப்பெண் போனை எடுக்கிறாள். ஜார்ஜியா பேசவிருப்பமில்லை என்றதும் அழைப்பை துண்டிக்கிறாள்.
இப்போது ஜொனாதன் ஷீல்ட்ஸ் திரைக்கதை எழுத்தாளர் ஜேம்ஸ் லீ பார்ட்லோவிற்குப் போன் செய்கிறார். அவர் இணைப்பில் வருகிறார். ஆனால் உரையாடலை துவங்கும் முன்பு போன் இணைப்பு துண்டிக்கபட்டு விடுகிறது.
அந்த மூவரையும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹாரி ஸ்டுடியோவிற்கு வரவழைக்கிறார். ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஜொனாதன் ஷீல்ட்ஸ் அவர்களிடம் பேச விரும்புவதாகச் சொல்கிறார். மூவரும் விருப்பமில்லை என்று மறுக்கிறார்கள்.
அந்த மூவரின் கடந்தகாலமும் விவரிக்கபடுகிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் தான் அவர்கள் மூவரையும் உருவாக்கியவர். புகழ்பெற வைத்தவர். ஷீல்ட்ஸுடனான அவர்களின் நட்பு மற்றும் உறவு குறித்த கடந்தகால நினைவுகள் ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கபடுகின்றன.

ஒரு புதுமுக நடிகை எப்படித் தேர்வு செய்யப்படுகிறார். எப்படித் திரைக்கதை உருவாகிறது. எப்படிப் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நடிகர்களின் ஈகோ என அந்தக் கால ஹாலிவுட் ஸ்டுடியோ வாழ்க்கையைப் படம் அசலாகச் சித்தரித்துள்ளது.
போதைக்கு அடிமையாகி தனது தந்தையின் இடிந்த மாளிகை ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்ணான ஜார்ஜியா லொரிசனை தற்செயலாக ஒரு நாள் சந்திக்கிறார் ஷீல்ட்ஸ். சினிமாவில் துணை நடிகையாக அவள் பணியாற்றுகிறாள். அவளை தனது படத்தின் புதிய கதாநாயகியாக தேர்வு செய்து எப்படிப் புகழ்பெறச் செய்கிறார் என்பதே படத்தின் மையக்கதை.
துணை நடிகையாக வாழ்ந்து வரும் அவளுக்கே தனது வெற்றியின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் ஷீல்ட்ஸ் அவளது திறமையை நம்புகிறார். ஒரு நாள் அவள் குடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வரவில்லை. அனைவரும் அவளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள். அவளைத் தேடிச் செல்லும் ஷீல்ட்ஸ் அவள் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துச் சொல்லி நடிக்க மறுக்கும் அவளைத் தேற்றுகிறார்.
‘When you’re on the screen, no matter who you’re with, what you’re doing, the audience is looking at you. That’s star quality. எனச் சொல்கிறார் ஷீல்ட்ஸ்.
அப்போது அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஷீல்ட்ஸிடம் கேட்கிறாள். தனக்குத் தேவை நடிகை தானே தவிர மனைவியில்லை என்று மறுக்கிறார்.

ஒரே படம் அவளைச் சினிமா உலகின் ராணியாக மாற்றுகிறது. வெற்றியைக் கொண்டாடும் இரவில் அவள் கையில் மதுப்புட்டியோடு அந்த விழாவிற்கு வராமல் ஒதுங்கிய ஷீல்ட்ஸை காண அவரது வீட்டிற்கு வருகிறாள். மிகவும் அழகான காட்சியது. அதில் ஒரு படம் முடிந்தவுடன் ஏற்படும் வெறுமை குறித்து ஷீல்ட்ஸ் பேசுவது முக்கியமானது.
இது போலவே ஷீல்ட்ஸ் தற்செயலாகச் சந்தித்த பேராசிரியரான ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைத்து திரைக்கதை எழுதுவதில் உறுதுணை செய்ய வைத்து அவரை புகழ்பெற்ற திரைக்கதையாசிரியராக மாற்றுகிறார் என்பதும் சிறப்பானதே
குறிப்பாக ஜேம்ஸ் லீயின் மனைவியான ரோஸ்மேரி ஒரு தனித்துவமிக்கக் கதாபாத்திரம். பணம், ஆடம்பரமான வீடு. வசதி என ஏங்கும் அவளது ஆசைகளைப் புரிந்து கொண்ட ஷீல்ட்ஸ் அவளைப் பயன்படுத்தி ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைக்கிறார். தனது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
தான் எழுதிய எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. திரைக்கதை எழுதுவது என்பதே தயாரிப்பாளரின் விருப்பத்தை எழுதிக் கொடுப்பது தான் என ஜேம்ஸ் லீ புரிந்து கொள்கிறார். ஜேம்ஸ் லீ கதாபாத்திரம் எழுத்தாளர் பிட்ஜெரால்ட்டின் சாயலில் உருவாக்கபட்டுள்ளார்
படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் சினிமாவின் உடைகள் மற்றும் அரங்கப் பொருட்களைப் கேலி செய்யும் ஷீல்ட்ஸ் சினிமா தயாரிப்பாளராகும் தனது கனவை நோக்கி செல்லும் விதமும். அதில் அடையும் வெற்றிகளும் நிஜமாகச் சித்தரிக்கபட்டுள்ளன.
ஷீல்ட்ஸ் தனது புதிய படத்திற்கு நெருங்கிய நண்பரான இயக்குநர் ஃபிரெட்டிற்குப் பதிலாக புகழ்பெற்ற இயக்குநரை நியமிக்கிறார். படம் பெரிய வெற்றியை அடைய எதையும் செய்யலாம் என நினைக்கிறார். இதை ஏற்க முடியாத ஃபிரெட் முகத்திற்கு நேராகக் கோவித்துக் கொண்டு பிரிகிறார்.
ஷீல்ட்ஸ் படத்தின் இயக்குநருடன் படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிடுகிறார். அப்போது இயக்குநர் உங்கள் விருப்பப்படி நான் படம் எடுக்க முடியாது. வேண்டும் என்றால் நீங்களே படத்தை இயக்கிக் கொள்ளுங்கள் என்று விலகிவிடுகிறார். நெருக்கடியை சமாளிக்கத் தானே படத்தை இயக்குகிறார். ஆனால் அது எளிதான விஷயமில்லை என்பதைப் படம் எடுத்து முடித்தபின்பு உணருகிறார். தனது தோல்வியை ஷீல்ட்ஸ் ஒத்துக் கொள்ளும் இடம் பிரமாதமானது.

படத்தின் துவக்கத்தில் சூதாடி பணத்தைத் தோற்கிறார் ஷீல்ட்ஸ். வெற்றிக்கான அவரது வெறித்தனமான தேடலில் அந்தச் சூதாட்ட மனப்பான்மையே வெளிப்படுகிறது
சினிமா எடுப்பது வெறும் சூதாட்டமில்லை. அது ஒரு கலை, சிருஷ்டி என்பதை முடிவில் ஷீல்ட்ஸ் புரிந்து கொள்கிறார். கிர்க் டக்ளஸின் அற்புதமான நடிப்பு ஷீல்ட்ஸை மறக்க முடியாத கதாபாத்திரமாக்குகிறது.
‘She doesn’t speak. We move the camera in close on her. She opens her mouth to talk, but she can’t. And what she’s feeling we’ll leave for the audience to imagine. Believe me, Jim, they’ll imagine it better than any words you and I could ever write.’ என்று ஒரு காட்சியில் ஷீல்ட்ஸ் சொல்கிறார்.
அப்படிச் சொல்லாமல்விடப்பட்ட மௌனம் கொண்டிருப்பதே இதனைச் சிறந்த திரைப்படமாக இன்றும் பேசவைக்கிறது.
••
December 3, 2024
பெயரும் முகமும்
குறுங்கதை
அந்த அரண்மனை இப்போது மியூசியமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலும் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள்.
அலங்காரத்தையும், ஆடம்பரமான பொருட்களை இழந்த அரண்மனையைக் காணுவதற்கு யார் வரப்போகிறார்கள். ஒரு நாளுக்குப் பத்துப் பதினைந்து பார்வையாளர்கள் வருவதே அபூர்வம் என்றார்கள்.
மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் இப்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகச் சொன்னார்கள். முன்பு தர்பார் ஹாலாக இருந்த அறையை இப்போது ஓவியக் கூடமாக மாற்றியிருந்தார்கள். பல்வேறு ஐரோப்பிய ஒவியர்கள் மன்னர் குடும்பத்தை வரைந்திருக்கிறார்கள். சில ஓவியர்களைக் குடும்பத்துடன் வரவழைத்து அரண்மனையிலே தங்க வைத்திருக்கிறார்கள். அன்றாடம் மன்னர் குடும்பத்தை வரைவது அவர்களின் வேலை.
மன்னரின் பவனி. போர்களக் காட்சிகள் பெரிதாக வரையப்பட்டிருந்தன. மன்னரின் குதிரை, நாய், பூனை கூட வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியர்களின் பெயர்களைத் தவிர உருச்சித்திரம் எதுவும் அங்கே காணப்படவில்லை. ஒருவேளை அவர்கள் தன்னை வரைந்திருக்கவில்லையோ என்னவோ.

நான்கு வெள்ளைக்காரர்கள் வழிகாட்டியுடன் அந்த ஒவியக்கூடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். வலது பக்கச் சுவர் முழுவதும் மன்னர்களின் உருவச் சித்திரங்கள். எதிர் சுவர் முழுவதும் ராணிகள், இளவரசிகளின் சித்திரங்கள். ஆனால் பெண்களின் சித்திரத்தில் அவர்களின் முகம் வரையப்படவில்லை. பதிலாக ரோஜாப் பூவை வரைந்திருந்தார்கள். கழுத்துவரை துல்லியமாக வரையப்பட்ட பெண்ணின் உருவம். முகத்திற்குப் பதிலாக ரோஜா இருப்பது விநோதமாக இருந்தது. எந்த அரசியின் பெயரும் குறிக்கபடவில்லை.
“ராணியின் முகத்தை வரையக்கூடாது . அவர்கள் பெயர்களைப் பிறர் உச்சரிக்கக் கூடாது என்பது மன்னர் காலக் கட்டுப்பாடு. இப்போது துணிக்கடை விளம்பரத்திற்காக வைக்கபடும் பெண் பொம்மைகள் தலையில்லாமல் இருக்கிறதே.. அது போலத் தான் இந்த ஓவியங்களும்“. என்று சிரித்தார் வழிகாட்டி.
ஆனால் அவர்கள் அணிந்துள்ள உடையும் நகைகளும் துல்லியமாக வரையப்பட்டிருந்தன.
“ஒவ்வொரு பெண்ணின் அந்தஸ்திற்கு ஏற்ப ரோஜா இதழ்களின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கும். நன்றாகப் பாருங்கள்“ என்றார் வழிகாட்டி.
ஒரு வெள்ளைக்காரப் பெண் அருகில் சென்று பார்த்துவிட்டு “ஒவியர் இந்த ராணிகளை நேரில் பார்த்து தானே வரைந்திருப்பார்`` என்று கேட்டார்.
அது வியப்பூட்டும் விஷயம். சாவித்துளை வழியாக மட்டுமே அவர் ராணியைப் பார்க்க முடியும். அதுவும் இந்த ஓவியத்தில் இருப்பது போலக் கழுத்துக்குக் கீழே தான் காண முடியும். ராணியின் முகம் திரையிடப்பட்டிருக்கும். நான்கைந்து ஒவியர்கள் வேறுவேறு காலகட்டத்தில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். எவரும் எந்த ராணியின் முகத்தையும் நேரில் கண்டதில்லை.
வழிகாட்டி தனது குரலை தாழ்த்திக் கொண்டு ரகசியம் போல சொன்னார்
“இந்த ராணிகளில் சிலர் சந்தேகத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள். அதைக் குறிப்பதற்காக அவர்கள் இடது கையின் மோதிரவிரல் வரையப்பட்டிருக்காது பாருங்கள்“ என்றார். இரண்டு பெண்களின் மோதிரவிரல் வரையப்படவில்லை
“இந்த ஓவியங்களை ராணிகள் பார்த்திருக்கிறார்களா“ எனக்கேட்டார் வயதான வெள்ளைக்காரர்.
“ஒரு போதுமில்லை. நல்லவேளை மன்னர்கள் இல்லாத காலம் என்பதால் இப்படி ரோஜா முகம் கொண்ட ராணிகளை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்“ என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.
அதைக் கேட்டு அங்கிருந்தவர்களில் எவரும் சிரிக்கவில்லை.
நீதியின் குரல்
.
மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் எழுதிய East West Street நூலைப் பற்றி நண்பர் சர்வோத்தமன் சடகோபன் இணையதளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அந்த நூலைப் பற்றி அவர் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். உடனே அதை இணையத்தின் வழியே வாங்கிப் படித்தேன். வியப்பூட்டும் தகவல்களுடன் உள்ள அரிய நூல். நீதித்துறை சார்ந்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். உண்மையில் இது ஒரு பெரிய நாவலாக எழுத வேண்டிய கருப்பொருளைக் கொண்டது. பிலிப் சாண்ட்ஸ் தனது விரிவான ஆய்வின் மூலம் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் ஊசலாடும் பல நிகழ்வுகள் வழியாக நாம் மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கிய இரண்டு வழக்கறிஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். லிவீவ் நகரில் வசித்த இருவரும் நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள்.
ஒருவர் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை உருவாக்கிய ரஃபேல் லெம்கின் மற்றவர் “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற கருதுகோளை முன்வைத்த ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்.
இரண்டு வழக்கறிஞர்களும் மனித உரிமைகள் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் இரண்டு வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து. இருவர் முன் வைக்கும் வாதங்களும், அதற்கான காரணங்களும் சரியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பிலிப் சாண்ட்ஸின் தாத்தா உக்ரேனிலுள்ள லியான் லிவீவ் நகரத்தில் வசித்தவர். அதே நகரின் கிழக்கு மேற்கு தெருக்களில் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரே நகரின் இரண்டு வீதிகள் நீத்துறை வரலாற்றில் எவ்வாறு முக்கியமாக அடையாளமாக மாறியது என்பதைச் சாண்ட்ஸ் விவரிக்கிறார்.
ஒரு இனத்தின் மீது நடத்தப்படும் குற்றங்களே இனப்படுகொலையாகும். அதில் தனிநபரை விடவும் இன அடையாளம் தான் முதன்மையானது. ஆகவே யூதர்கள் மீது நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்கிறார் லெம்கின்.
ஆனால் நாம் அவர்கள் என்று இன அடையாளத்தின் படி இருவரை பிரிக்கும் போது எதிர்தரப்பில் உள்ள அப்பாவிகளை, குற்றமற்றவர்களையும் சேர்த்துப் பழிசுமத்துகிறோம். அது சரியானதில்லை. இனப்படுகொலையாக அறியப்பட்டாலும் அது தனிநபர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான குற்றங்களே என்கிறார் லாட்டர்பேகட்
அவர் முன்நிறுத்துவது தனிமனிதனை. அவனைக் கட்டுப்படுத்தித் தண்டிக்கும் அதிகாரத்தின் வரம்புகளை.

இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்கள். யூதர்கள் என்பதால் லாட்டர்பேக்டின் குடும்பத்தினர் இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார்கள். அவரே சட்டம் பயில முடியாமல் திண்டாடினார். போராடி சட்டம் பயின்ற அவர் யூதர்கள் கொல்லப்பட்டதை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே வாதிடுகிறார். அப்படி வரையறை செய்யும் போது தான் குற்றவாளியின் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய குற்றங்களை விசாரிக்கத் துவங்கப்பட்ட நியூரெம்பர்க் விசாரணையில் நாஜி போர்க்குற்றவாளிகளை எப்படி விசாரிக்க வேண்டும், ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் சரியானதா என்ற கேள்விகள் எழுந்தன. இனப்படுகொலை என்று குற்றம்சாட்டப்பட்டாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற ரீதியிலே பலரும் தண்டிக்கபட்டார்கள்
போலந்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹான்ஸ் ப்ராங்க் .லட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்குக் காரணியாக இருந்தார். ஹிட்லரின் ஆணையைச் செயல்படுத்தினார் என்பதால் தனிநபராக ஹான்ஸ் ப்ராங்க் செய்தது குற்றம் கிடையாது. .ஆனால் அவரது ஆணையின் படி குரூரக்கொலைகள் நடந்திருக்கிறது என்பதால் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன
லெம்கின் மற்றும் லாட்டர்பேக்ட் இருவரும் மனித சமுதாயத்தின் நலனையே முதன்மையாகக் கருதினார்கள். நீதியின் மீது மாறாத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். சாண்ட்ஸ் இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளை விவரிப்பதுடன் தனது குடும்ப வரலாற்றையும் சிறப்பாக ஒன்றிணைத்துள்ளார்.
.
November 30, 2024
சிரிக்கும் வகுப்பறை
சிறார் நாவல் விமர்சனம்
– கே.பாலமுருகன். மலேசியா

பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது அச்சிறுவர்கள் மனத்தளவில் உணர்வெழுச்சிக் கொள்கிறார்கள். உணர்வு ரீதியாகச் சமன்கொள்கிறார்கள். இவ்வாழ்க்கையுடன் உணர்வுரீதியில் தொடர்புக் கொள்ளக் கற்றுக் கொள்கிறார்கள். பாடநூல் வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்பு முற்றிலும் வேறுபட்டு உணர்வுத்தளத்தை நோக்கி நகரக்கூடியது. இரண்டுமே மாணவர்களுக்கு அவசியமாகும். இலக்கிய நூல்களை வாசிக்கும்போது கொண்டாட்ட மனநிலைகளின் அனைத்து எல்லைகளையும் அவர்கள் சென்றுரசி மனவெழுச்சிக் கொள்கிறார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரங்களுக்குள் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனாலேயே சிறார்களுக்கு அதிகளவில் இதுபோன்ற கற்பனை, உணர்வு சார்ந்த இலக்கிய நூல்கள் படைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘கால் முளைத்த கதைகள்’ மிகவும் பிரபலமான நூல். நான் அவருடைய சிறார் படைப்புகளில் முதலில் வாசித்த நூல் அதுதான். அதிலுள்ள நாட்டாரியல் கதைகள் யாவும் குழந்தைகளுக்கான சுவாரிசயங்கள் உடையவை. ஆதிகாலத்தில் ஒரு சமூகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அச்சமூகம் எப்படிக் கதைகளையும் கற்பனைகளையும் அடிப்படையாகக் கொண்டு பதில்கள் அளிக்க முயன்றுள்ளன என்பதன் சேகரிப்புதான் ‘கால் முளைத்த கதைகள்’. இப்பொழுது அவருடைய ‘சிரிக்கும் வகுப்பறை’ என்கிற சிறார் நாவலை தம்பி பிருத்விராஜூ பரிந்துரைத்ததால் கடையில் வாங்கிப் படித்தேன். தமிழில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து வயதினரும் அனைத்து சமூகத்தினரும் படித்து அடைய வேண்டிய சிறார் கல்வித் தொடர்பான விரிவும் ஆழமும் இந்நாவல் கொண்டுள்ளது. இதுவரை நாம் கையாண்டு வரும் கல்விக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன்பால் புறக்கணிக்கப்படும் சிறுவர்களின் வாழ்வியலையும் இந்நாவல் விமர்சன முறையில் அணுகியுள்ளது. ஆனால், எங்கேயும் சோர்வுத் தட்டாமல் இருக்க நாவலின் கடைசிப் பகுதிகளில் எழும் கற்பனை சார்ந்த சித்திரங்கள் அபாரமான எல்லைகள் உடையவை.
நாவலில் வரக்கூடிய அக்ரமா என்கிற குகை பள்ளியின் சித்தரிப்பும் கட்டமைப்பும் மிகச் சிறந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. பாறைகளால் உருவாக்கப்பட்ட வகுப்பறை, கற்களால் உருவான மேசைகள், கற்படுக்கை, தண்டனைகள் வழங்கப்படும் முறை என அனைத்திலும் நுணுக்கமான விவரிப்புகள் உள்ளதால் கதையோட்டத்தோடு இணைந்து செல்ல முடிகிறது.
‘ஒரு கரப்பான்பூச்சியாகப் பிறந்திருந்தால் பள்ளிக்குப் போகாமல் இஷ்டம் போலச் சுற்றித் திரிந்திருக்கலாம் எனத் திவாகருக்குத் தோன்றியது’ என்கிற வரியுடன் தான் நாவல் ஆரம்பமாகிறது. தொடக்க வரியிலேயே நாவலுக்கான சாரத்தை எழுத்தாளர் பின்னத் தொடங்குகிறார். பின்னர், இந்த வெறுப்பு எங்கணம் குழந்தைகளின் மனத்தில் வேர்க் கொள்கிறது என்பதை நோக்கி நாவல் சயனகிரி வரை விரிவாகுகிறது. திவாகர் எனும் மாணவன் அனைத்து பள்ளிகளாலும் பயனற்றவன், கல்வியில் ஆர்வமில்லாதவன் எனத் தூக்கி வீசப்படுகிறான். அவனது மனம் அதிலுள்ள நுட்பமான உணர்வலைகள் யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் மனமுடைந்த அவனுடைய பெற்றோர் திவாகரைத் தண்டனைப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் நாவலின் மிக முக்கியமான விறுவிறுப்பான பகுதிகள் ஆரம்பமாகின்றன.
தண்டனைப் பள்ளியின் தண்டனைகள்
விதவிதமான தண்டனைகளைக் கண்டுபிடித்து அதனை நாட்டிலுள்ள மற்ற பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே லொங்கோ என்பவனால் இப்பள்ளித் தொடங்கப்பட்டது. காயாம்பு, பட்லர், இயந்திரப் பறவை, புகை மனிதர்கள் என அடுத்தடுத்தப் பகுதிகள் சுவாரஷ்யமும் அதே சமயம் ஒரு சமூகம் தண்டனைகள் மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கைகள், அதீத விருப்பம் எப்படி அக்ரமா பள்ளியால் பணமாக்கப்படுகிறது என்கிற அரசியலையும் நாவலாசிரியர் கதையின் உள்ளோட்டச் சரடாக வைத்துள்ளார்.
பறந்து சென்று மாணவர்களை அடிக்கும் அதிசய பிரம்புடன் பள்ளிக்கு வரும் பட்லரின் பகுதி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. வேடிக்கையாகவும் அதே சமயம் பொருள் புதைந்த பகுதியாகவும் அமைந்திருந்தது. பட்லரின் அதிகாரத்தைச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் விதமும் நகைச்சுவையாக இருந்தது. இவர்கள் யாவரும் சேட்டையான மாணவர்கள், படிக்கத் தெரியாதவர்கள், எந்தப் பயனுமற்றவர்கள் எனக் குடும்பத்தாலும் பள்ளிக்கூடங்களாலும் அடையாளப்படுத்த ஒதுக்கப்பட்டவர்கள்.
ஆகவே, இவர்களைக் கண்டறிந்து அக்ரமா தண்டனைப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள். பெற்றோர், பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பினால் பயனுள்ள மனிதனாக உருவாக்கப்படுவார்கள் என நம்பி அக்ராமில் விட்டுவிட்டுகிறார்கள். ஆனால், லொங்கோ இப்பிள்ளைகளை இன்னும் கடுமையாகத் தண்டிக்கிறான். புதிது புதிதாக தண்டனைகள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் மூர்க்கமாக நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளியைத் திவாகரும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மீட்கிறார்கள் என்பதுதான் நாவலின் இறுதி பகுதியாகும்.
பள்ளிக்கூடம் என்பது என்ன? தண்டனைக்கூடமா? உண்மையில் ஒரு சிறந்த மாணவன் எப்படி தீர்மானிக்கப்படுகிறான்? அவனைத் தீர்மானிப்பது எவை? என்கிற மிக முக்கியமான கேள்விகளை நோக்கி இந்நாவல் நம் அனைவரையும் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவலாக நான் பரிந்துரைக்கிறேன். கல்விச்சூழலில் நிகழும் புறக்கணிப்புகளின் காட்டத்துடன் யதார்த்தமாகத் தொடங்கும் நாவல், பின்பகுதியில் அடையும் அதீதமான Fantacy (கனவுருப்புனைவு) ஒருவேளை சிறார்களுக்கு மிகவும் விருப்பம் மிகுந்த பகுதியாக இருக்கலாம். படிக்க வேண்டிய நாவல்.
நன்றி
கே.பாலமுருகன். மலேசியா
November 28, 2024
தஸ்தாயெவ்ஸ்கி திரைப்படம்
முன்பணம் கொடுத்த பதிப்பாளரின் ஒப்பந்தப்படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்டது. அதற்காக இளம் பெண்ணான அன்னாவை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டார். அப்போது அன்னாவின் வயது 20.

அந்த நாட்களை விவரிக்கும் Twenty six days in the life of Dostoevsky திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது .Aleksandr Zarkhi இயக்கியுள்ள இப்படம் 1981ல் வெளியானது.
இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மேடையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

நாவலை எழுதி முடித்தபிறகு தஸ்தாயெவ்ஸ்கி. தனது காதலை வெளிப்படுத்தினார் அன்னா அவரை ஏற்றுக் கொண்டாள். அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவளது உறுதுணையே தஸ்தாயெவ்ஸ்கியை துயரங்களிலிருந்து மீட்டது.
அன்னா தனது டயரிக்குறிப்பை தனிநூலாக வெளியிட்டிருக்கிறார்.

அன்னாவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்து ஆண்ட்ரூ டி. காஃப்மேன் எழுதிய புதிய நூல் The Gambler Wife: A True Story of Love, Risk, and the Woman Who Saved Dostoyevsky சமீபத்தில் வெளியாகியுள்ளது.

November 26, 2024
எமர்சன் – சிறப்புரை
அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியலாளர் எமர்சன் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறேன்
டிசம்பர் -25. 2024 – புதன்கிழமை கவிக்கோ மன்றத்தில் இந்த உரை நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்புரையை நிகழ்த்துகிறேன்





கழுத்து நீண்ட விளக்கு
புதிய சிறுகதை. 26.11.24
.
மழை பெய்யப்போவது போலக் காற்று வேகமாகியிருந்தது.
சாத்தப்படாத ஜன்னல் காற்றின் வேகத்தில் அடிக்கும் சப்தம் கேட்டு படுக்கையிலிருந்து ராமநாதன் எழுந்து கொண்டார். ஜன்னலை மூடிவிட்டுத் திரும்பும் போது பாதித் திறந்திருந்த பிரபுவின் அறையில் சிரிப்புச் சப்தம் கேட்டது. அறைக் கதவைத் தள்ளி ராமநாதன் உள்ளே எட்டிப் பார்த்தார்.

பிரபு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துச் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாகப் பாடம் படிக்கலாமே. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. ஆனால் இதைச் சொன்னால் இந்த இரவில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விடுவான். பின்பு எப்போது வீடு திரும்புவான் என்று தெரியாது. எங்கே செல்லுகிறான். யாரைச் சந்திக்கிறான் என்றும் தெரியாது.
இந்த நகரில் இருபத்தியாறு வருஷமாக வாழ்கிறார். ஆனால் இப்படி இரவில் சந்திக்கக் கூடிய ஒருவர் கூட அவருக்குக் கிடையாது. ஒருவேளை இதே நகருக்குள் வேறு நகரம் ஒளிந்திருக்கிறதோ என்னவோ.
பிரபு தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு நீண்டகாலமாகிவிட்டது. பிரபு எப்போதும் தனியே தான் சாப்பிடுகிறான். அதுவும் அவசரமாக, தட்டைக் கவனிக்காமல், இதில் சாப்பிடும் நேரம் யாராவது அவனைப் போனில் அழைத்துவிடுகிறார்கள். பாதிச் சாப்பாட்டில் தட்டிலே கைகழுவிவிடுகிறான். அது என்ன பழக்கம். ஏன் எழுந்து போய் வாஷ்பேஷினில் கைகழுவ வேண்டியது தானே.
குடும்பத்தோடு ஒன்றாகச் சாப்பிட்டு எதையாவது பேசிச் சிரிப்பதில் என்ன பிரச்சனை அவனுக்கு என்று ராமநாதனுக்குப் புரியவில்லை.
பிரபு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாம் வகுப்புப் பரிட்சை தான் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. அதைப்பற்றிய கவலையே அவனுக்கு கிடையாது. பரிட்சையைப் பற்றி மட்டுமில்லை. எதைப்பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை. வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதுமில்லை. இப்படி அவன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் அவருக்கு இருந்தன. அதில் எதையாவது சொன்னால் உடனே கோவித்துக் கொண்டு வெளியே போய்விடுவான். இதற்காக மனைவியை விட்டுப் பிரபுவிடம் கேட்கச் சொல்லுவார்.
“நீ எப்போ தான்டா படிப்பே“ என்று சாந்தியும் குறைபட்டுக் கொள்வாள்.
“உனக்கு மார்க் தானம்மா வாங்கணும். அதெல்லாம் எடுத்துருவேன்“
“எவ்வளவு எடுப்பே. “
“அதெல்லாம் சொல்ல முடியாது“
“எந்தக் காலேஜ்ல சேர்ந்து படிக்கப் போறே“
“அது தெரியாது.. ரிசல்ட் வந்தபிறகு பாத்துகிடலாம்“
“எங்களாலே காசு குடுத்துச் சீட் வாங்க முடியாது பாத்துக்கோ“
“அப்போ படிக்க வைக்காதே.. வீட்ல இருக்கேன்“
“வீட்ல இருந்து என்ன பண்ணுவே“..
“ஐடியா இல்லே. அப்போ பாத்துகிடலாம்“
“இப்படி சொன்னா எப்படிறா.. படிக்கிற புள்ள பேசுற பேச்சா இது“
“என்னாலே இப்படித் தான் பேச முடியும்மா. “ என்று பிரபு பேச்சை முறித்துக் கொண்டுவிடுவான்.
••

படிக்காமல் எப்படி மார்க் வாங்க முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் சித்ராவின் மகள் பிரியதர்ஷினி இரண்டு டியூசன் செல்கிறாள். அதுவும் காலை ஐந்து மணிக்கு எழுந்து மேத்ஸ் படிக்கப் போகிறாள். பிரபு ஒரு நாள் கூடக் காலை ஏழு மணிக்கு முன்னால் எழுந்து அவர் பார்த்ததே கிடையாது. சில நாட்கள் இதற்காகவும் கோவித்துக் கொண்டிருக்கிறார்
“நான் தூங்கினதே லேட்டுப்பா. “
“எதுக்கு லேட்டா தூங்குனே. அவ்வளவு நேரம் படிச்சிட்டு இருந்தியா“
“மேட்ச் பாத்துட்டு இருந்தேன். படிக்கிறதுக்கு எல்லாம் முழிச்சிட்டு இருக்க முடியாதுப்பா“
“வீட்ல இருந்தா நீயா படிக்க மாட்டே. ஏதாவது டியூசன்ல சேர்த்துவிடுறேன்.“
“நான் போக மாட்டேன், அதெல்லாம் வேஸ்ட் “
“அப்புறம் எப்படி மார்க் எடுப்பே“
“அது என் வேலை. “
“உன்னை நான் எப்படி நம்புறது. “
“நீங்க சந்தேகப்பட்டா நான் படிக்க மாட்டேன். பெயில் ஆகிடுவேன் “
“சந்தேகம் இல்லைப்பா.. நீ வீட்ல உட்கார்ந்து படிக்கிறதை நான் ஒரு நாள் கூடப் பாக்கவேயில்லையே. அதான்“
“படிக்கிறதைப் பாக்கணும்னா. லைப்ரரிக்கு போங்க. யாராவது படிச்சிட்டு இருப்பாங்க. உங்களுக்காக நான் படிக்கிற மாதிரி நடிக்க முடியாதுப்பா“ என்றான் பிரபு
அவனுடன் சேர்ந்து கொண்டு சாந்தியும் “அவன் படிப்பான். மார்க் வாங்காட்டி கேளுங்க“ என்றாள்.
மார்க் வாங்காமல் விட்டுவிட்டால் பின்பு காரணம் கேட்டு என்ன பிரயோசனம் . எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் எப்படி ஒருவனால் இருக்க முடிகிறது. பலமுறை அவனிடம் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்.
“எனக்கு ஒரு ஐடியாவும் கிடையாதுப்பா. எது கிடைக்குதோ. அது படிப்பேன்“
“அப்படி படிச்சா நல்ல வேலை எப்படிக் கிடைக்கும்“
“எது கிடைக்குதோ. அது தான் நல்ல வேலை“
“அப்போ எப்படிச் சம்பாதிப்பே“
“அது என் பிரச்சனை. சம்பாதிக்காட்டா. உங்க கிட்ட வந்து கேட்க மாட்டேன் போதுமா“
அவனிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நிறையக் கவலைப்பட்டார். பயப்பட்டார். குழப்பமடைந்தார். சாந்தியும் பிரபுவின் படிப்பிற்காகக் கோவில் கோவிலாகப் பிரார்த்தனை செய்தாள். விரதம் இருந்தாள். சில நாட்கள் அவனது அறையில் தீர்த்தம் தெளித்து “நல்லா படிப்பு வரட்டும் சாமி“ என்று வேண்டிக் கொண்டாள். சில நேரங்களில் அம்மாவும் மகனும் பேசி சிரித்துக் கொள்வார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அவருக்குப் புரியாது.
பெற்றோர்களின் எல்லாக் குழப்பங்கள். பயங்கள். சந்தேகங்களுக்கு அப்பால் எப்போதும் போலப் பிரபு தனக்கான உலகில் தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். விருப்பம் போல நடந்து கொண்டான். படிப்பதை ஏன் இவ்வளவு பெரிதாக நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
பிளஸ் டூ படிக்கிற பையன் போலவே நடந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்று ராமநாதன் மிகவும் வருத்தப்பட்டார்.
அவர்கள் வீடு உள்ள தெருமுனையில் இருந்த டியூசன் சென்டரின் வாசலில் வரிசையாகச் சைக்கிள் நிற்பதைக் காணும் போது அவருக்குள் கோபம் பொங்கி வரும். இவர்கள் எல்லாம் முட்டாள்களா. ஏன் பிரபு தனது பேச்சை கேட்க மறுக்கிறான். ஒருவேளை அவனுக்குப் படிப்பு வரவில்லையோ. சகவாசம் சரியாக இல்லாமல் போய்விட்டதா. பத்தாம் வகுப்பு வரை கூடத் தான் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டானே. இப்போது என்னவானது.
••

ராமநாதன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு நாள் தர்மா எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் செல்போன் சார்ஜர் வாங்கப் போன போது அங்கே வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருந்த மேஜை விளக்கினைப் பார்த்தார்.
“ஸ்கூல் பசங்க நிறைய வாங்கிட்டு போறாங்க சார். விலை இருநூறு தான். உங்க பையன் கூடப் பிளஸ் டூ தானே“ எனக்கேட்டார் தர்மா எலக்ட்ரானிக்ஸ் ராஜகுரு. தெரிந்த மனிதர் என்பதால் அக்கறையாகக் கேட்கிறார்.
“டேபிள் சேர் வாங்கிக் குடுத்துருக்கேன். அதுல உட்கார்ந்து எங்க படிக்கிறான்“ என்று சலித்துக் கொண்டார் ராமநாதன்
“இந்த ஸ்டடி லேம்ப்ல நாலு பட்டன் இருக்கு. தேவையான அளவுக்கு வெளிச்சத்தைக் கூட்டிகிடலாம்“ என்று கடைப்பையன் விளக்கி காட்டினான்
கழுத்து நீண்ட அந்த விளக்கு அழகாகயிருந்தது. மருத்துவர்களின் மேஜை மீது அது போன்ற விளக்கைப் பார்த்திருக்கிறார்.
ஒருவேளை ஸ்டடி லேம்ப் வாங்கிக் கொடுத்தால் படிக்கத் துவங்கிவிடுவானோ என்ற எண்ணம் உருவானது. இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்டடி லேம்ப்பை வாங்கிக் கொண்டார். அந்த விளக்கு எரிவது போலவும் பிரபு மேஜையில் அமர்ந்து அதன் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவும் மனதில் ஒரு சித்திரம் வந்து போனது.
வீட்டிற்குப் போனவுடன் சாந்தி “இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க“ என்று கேட்டாள்
“அப்படியாவது படிக்க மாட்டானானு பாக்கத் தான், நான் படிக்கிற காலத்துல இப்படி யாரும் ஸ்டடி லேம்ப் வாங்கிக் குடுத்துப் படிக்கச் சொல்லலை.. எங்க வீட்ல அப்போ குண்டு பல்ப் தான். அதுவும் நாற்பது வாட்ஸ்“. என்றார்
“ நீங்களே அவன் கிட்ட குடுத்துப் பக்குவமாச் சொல்லுங்க“
“இதுல பக்குவமாச் சொல்றதுக்கு என்ன இருக்கு“
“உங்களுக்குப் பேசத் தெரியலை. சும்மா அவன் கிட்ட கோவிச்சிகிடுறீங்க“
“அப்போ நீயே இதையும் குடுத்துரு“
“இந்த கோபத்தைத் தான் நான் சொன்னேன்“.
“நான் ஏன் கோவிச்சிகிடுறேனு யோசிக்கவே மாட்டேங்குறானே“
“அதெல்லாம் அவனுக்குப் புரியாம இல்ல. இப்போ அவனுக்கு ஜாதகத்துல கட்டம் சரியில்லை. சித்திரைக்குப் பிறகு படிக்க ஆரம்பிச்சிருவான்“
“அதுக்குள்ளே பப்ளிக் எக்ஸாம் வந்துரும்“
“இப்படி பேசினா அவனுக்குக் கோபம் வராம என்ன செய்யும். “
“நாம சண்டை போட்டு என்ன ஆகப்போகுது.. அவன் வரட்டும் நான் பேசிகிடுறேன்“
அன்றைக்கு அவர் இரவு பதினோரு மணி வரை விழித்திருந்தார். பிரபு வரவில்லை. காலையில் எழுந்த போது ஸ்டடி லேம்ப் அவனது மேஜை மீது இருந்தது. சாந்தி கொடுத்திருக்கக் கூடும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அவர் சொல்ல முயன்றபோது “எனக்கு தெரியும்பா“ என்று ஒரே வார்த்தையில் பிரபு துண்டித்துவிட்டான்.
ஒவ்வொரு நாளும் ஆபீஸ் விட்டுவந்தவுடன் அவனது அறையினுள் எட்டிப்பார்ப்பார். விளக்கு அதே இடத்தில் அப்படியே இருக்கும். பிரபு அந்த விளக்கை பிளக் பாயிண்ட்டில் கூடச் சொருகியிருக்கவில்லை. ஏன் இப்படியிருக்கிறான் என்று ஒரு நாள் ஆத்திரத்தினை மனைவியிடம் காட்டினார்
“படிக்கும் போது பிளக்கில் சொருகிக்கிடுவான். நீங்க ஏன் அவசரப்படுறீங்க“ என்றாள் சாந்தி
ஒரு மாதம் ஆகியும் அதே இடத்தில் ஸ்டடி லேம்ப் அப்படியே இருந்தது. அதன்மீது படிந்திருந்த தூசியைக் கூடத் துடைக்கவில்லை. வாங்கிய நாளில் இருந்து ஒருமுறைகூட அதைப் பயன்படுத்தவில்லையே. எப்போது படிக்கத் துவங்குவான் என்று எரிச்சலாக வந்தது. அவராக ஒருநாள் ஸ்டடி லேம்பை பிளெக் பாயிண்ட்டில் சொருகி வைத்தார். அப்படியும் அவன் அதைப் பயன்படுத்தவில்லை
இதற்கிடையில் பிரபு எங்கிருந்தோ ஒரு சுழலும் வண்ணவிளக்கை வாங்கி வந்திருந்தான். அந்த விளக்கை மாட்டுவதற்கு இடம் வேண்டும் என்பதற்காக ஸ்டடி லேம்பை கட்டிலின் ஒரமாகக் கழட்டி வைத்துவிட்டான். அந்த விளக்கில் இருந்து சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என ஐந்துவிதமான வண்ணங்கள் ஒளிர்ந்தன.
அறை முழுவதும் சிவப்பு நிறமாக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சாந்தி
“எதுக்கு இந்தக் கலர் லைட்“ என்று கேட்டார் ராமநாதன்
“இந்த லைட்டுல பாட்டுக் கேட்குறது நல்லா இருக்கும்னு சொல்றான்“.
“பாட்டு கேட்டுகிட்டு இருந்தா எப்போ படிக்கிறது“
“அதை நீங்க தான் சொல்லணும். நான் சொன்னா. என்னைக் கோவிச்சிகிடுவான்“
“நான் சொன்னாலும் கோவிச்சிக்கிடுவான்“
“அப்போ சொல்லாதீங்க“
“அப்படி விட முடியாது“.
“அப்போ நீங்களாச்சு. உங்க பிள்ளையாச்சு“ என்றபடியே அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்
பிரபு வண்ணவிளக்கு வாங்கியது அவருக்குப் பெரிய விஷயமாகயில்லை. தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த ஸ்டடி லேம்பை பயன்படுத்தவில்லையே என்று தான் கோபமாக வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமலே அவனிடம் “பப்ளிக் எக்ஸாம் எப்போ ஆரம்பிக்குது“ என்று கேட்டார்
“டிவில சொல்லுவாங்க. கேட்டுக்கோங்க“ என்றான் பிரபு
“உங்க ஸ்கூல்ல சொல்லலையா“
“நான் கேட்கலை“
“ஸ்கூல்ல போய் அப்போ என்ன தான் செய்றே“
அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் எதையோ முணுமுணுத்துக் கொண்டான்.
“நான் வந்து உங்க ஸ்கூல்ல கேட்கவா“
“கேட்டுக்கோங்க. அப்படியே எனக்குப் பதிலா நீங்களே பரிட்சை எழுத முடியுமானு கேட்டுட்டு வந்துருங்க“ என்றான்
“நான் படிக்கிற காலத்துல இப்படி இல்லே. தினம் விளக்கு வச்ச உடனே படிக்க ஆரம்பிச்சிடுவேன். நைட் பத்து மணி வரைக்கும் படிப்பேன். “
“அப்படி படிச்சி எவ்வளவு மார்க் வாங்குனீங்க. காலேஜ்ல பிகாம் தானே படிச்சீங்க. “
“அப்போ மார்க் நிறைய வாங்க முடியாது. இப்போ தான் மேத்ஸ் ஆயிரம் பேரு சென்டம் வாங்குறாங்க. நான் அப்பவே மேத்ஸ்ல 87.
“அதை விட நான் அதிகம் வாங்கிடுவேன் போதுமா“
அது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை.
••
ஒவ்வொரு முறை அவனது அறையைச் சுத்தம் செய்யும் போதும் கட்டிலிற்குக் கிழே இருந்த ஸ்டடி லேம்பை ஒரமாக வைத்துவிட்டு சாந்தி சுத்தம் செய்வாள். ஒரு நாள் ஸ்டடி லேம்ப் மீது தூசியடையாமல் இருக்கப் பழையதுணி ஒன்றை அதன் மீது போட்டு வைத்தாள்.
டிவியில் அவர் பார்த்த ஆங்கிலப் படத்தில் ஒரு சிறுவன் ஸ்டடி லேம்ப் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தான். அதைக் காணும் போது அவரை அறியாமல் கண்ணீர் வந்தது. ஆனாலும் பிரபு அந்த விளக்கை ஒருமுறை கூடப் பயன்படுத்தவேயில்லை.
••

இரவு எட்டுமணிச் செய்தியில் பப்ளிக் எக்ஸாம் துவங்குகிற தேதியை அறிவித்தார்கள். சாந்தி மறுநாள் காலை சிவன் கோவிலில் பிரபுவின் பெயருக்கு அர்ச்சனை செய்தாள். அன்றிலிருந்தே ராமநாதன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் எவ்வளவு கட்டணம் என்ற தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினார். வங்கிச் சேமிப்பில் அவ்வளவு பணம் இல்லையே என்ற கவலை கூடுதலாகச் சேர்ந்து கொண்டது. அவரது நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் ஆளுக்கு ஒரு கல்லூரியைச் சிபாரிசு செய்தார்கள்.
பள்ளியிலே சிறப்பு வகுப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னாள் சாந்தி. அதன்பிறகான நாட்களில் காலை ஏழு மணிக்கே பிரபு கிளம்பி போவதைப் பார்க்கும் போது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது.
மாலையில் பள்ளியில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்றன. பிரபு இரவு எட்டரை மணிக்குத் தான் வீடு திரும்பினான். வீட்டில் செய்த இட்லி தோசை எதுவும் அவனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தினமும் பிரைடு ரைஸ். நூடுல்ஸ் எனத் தள்ளுவண்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டான். அதற்குச் சாந்தி கோவித்துக் கொண்ட போது “எதையாவது சாப்பிட்டுப் படிக்கட்டும்“ என்று சமாதானம் சொன்னார் ராமநாதன்
பரிட்சை துவங்குவதற்கு இரண்டு வாரமிருந்த போது பிரபு தனது நண்பனின் அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் என மதுரைக்குக் கிளம்பிப் போனான். அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அவன் கேட்கவில்லை. பள்ளிக்கு உடல் நலமில்லை என்று லெட்டர் கொடுத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டான்.
“பப்ளிக் எக்ஸாமை வச்சிகிட்டு இப்படி ஊர் சுத்துனா.. எப்படி மார்க் வாங்குவான்“ என்று கோவித்துக் கொண்டார்.
சாந்தி அவனுக்காக அன்றாடம் கோவிலுக்குச் சென்று வரத் துவங்கினாள். நேர்த்திக்கடன் போட்டாள். மதுரைக்குச் சென்று திரும்பி வந்த போது அவனது இடது கண் வீங்கியிருந்தது. குளவி கடித்துவிட்டது என்றான்.
“கண்ணிற்கு டாக்டரைப் போய்ப் பார்த்து வந்துவிடலாம். பரிட்சை வரப்போகிறது“ என்றார் ராமநாதன்
“அதெல்லாம் பாத்துகிடலாம்“ என்று பிரபு மறுத்துவிட்டான்
வீங்கிய கண்களுடன் பள்ளிக்குப் போய் வந்தான். வீட்டிற்கு வந்த நேரம் முதல் வண்ண விளக்குகளைச் சுழலவிட்டு பாட்டு கேட்டான். கடிகாரத்தின் முள்ளைப் போல அவரது பயம் முடிவில்லாமல் சுற்றிக் கொண்டேயிருந்தது.
பரிட்சை அன்றைக்குக் காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே போய்விட்டான். அப்படியே ஸ்கூலுக்குப் போய் விடுவானா. அல்லது வீடு வந்து கிளம்பிப் போவானா என்று தெரியாமல் குழம்பிப் போனார்.
“நீங்க விஜயராஜ் வீடு வரைக்குப் போய்ப் பாத்துட்டு வந்துருங்க“ என்றாள் சாந்தி
அவர் விஜயராஜ் வீட்டிற்குப் போன போது அவன் குளித்துப் புதிய ஆடை அணிந்து நெற்றியில் திருநிறு பூசியவனாக இருந்தான். கையில் ஒரு புத்தகம் இருந்தது.
“இங்கே வரலை அங்கிள். டேனி வீட்டுக்குப் போயிருப்பான்“ என்றான்
டேனி வீடு எங்கேயிருக்கிறது என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை.
வீடு திரும்பிய ராமநாதன் “டேனி வீட்டுக்குப் போயிட்டானாம்“ என்று எரிச்சலோடு சொன்னார்
“பரிட்சையும் அதுவுமா சாப்பிடக்கூட இல்லே“ என்று சாந்தி வருத்தப்பட்டாள்
“விஜயராஜ் எல்லாம் காலைல குளிச்சி.. நெற்றி நிறையத் திருநீறு பூசி படிச்சிகிட்டு இருக்கான். நமக்குனு வந்து பொறந்திருக்கானே. “. என்று பிரபுவைத் திட்டினார்
டேனி வீட்டிலிருந்து நேராகப் பள்ளிக்கூடம் போய்விட்டான் பிரபு. பரிட்சை முடிந்தும் வீடு திரும்பி வரவில்லை. இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்த போது பரிட்சை எப்படி இருந்தது என்று கேட்டாள் சாந்தி
“ஈஸிம்மா“ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான் பிரபு
அந்தப் பரிட்சைக்கு மட்டுமில்லை. எல்லாப் பரிட்சைக்கும் இது போல டேனி வீட்டிலிருந்து தான் கிளம்பிப் போனான். எல்லாப் பரிட்சை பற்றியும் ஈஸிம்மா என்று அதே பதிலை தான் தந்தான்
“ரிசல்ட் எப்போ வரும்“ என்று அவனிடம் கேட்டார் ராமநாதன்
“டிவில சொல்வாங்க“ என்றான் பிரபு
அந்தப் பதில் அவரை எரிச்சல்படுத்தியது. கல்லும் கல்லும் உரசிக் கொள்ளும் போது நெருப்பு வருவது போல அவனுடன் எது பேசினாலும் இப்படி ஆகிவிடுகிறதே என்று தோன்றியது.
பரிட்சை முடிந்துவிட்டாலும் எந்தக் கல்லூரியில் சேருவது. அதற்கான விண்ணப்பம் எப்படி வாங்குவது. சில கல்லூரிகள் தனித் தேர்வு நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதற்குப் படிக்க வேண்டுமா என்று ராமநாதன் பல்வேறாக யோசித்துக் கொண்டிருந்தார்.
அதன்பின்னான நாட்களில் பிரபு மதியம் வரை தூங்கினான். பின்பு குளித்துவிட்டு மூன்றரை மணிக்கு மதிய உணவு சாப்பிட்டான். பைக்கை எடுத்துக் கொண்டு டேனி வீட்டிற்குச் செல்வான். இரவு இரண்டுமணிக்கு பிறகே வீடு திரும்பினான்.
ஆறாம் தேதி பரிட்சை முடிவுகள் அறிவிக்கபடும் என்று டிவியில் சொன்னார்கள். ஆறாம் தேதி காலையில் அவன் எப்போதும் போல டேனி வீட்டிற்குப் போயிருந்தான். அவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு போய்விடுவார்கள் என்றாள் சாந்தி.
எவ்வளவு மார்க் வாங்கியிருப்பான் என்று தெரியாத குழப்பம், மார்க் குறைவாக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவரை வாட்டியது. இரவு அவருக்குச் சரியான உறக்கமில்லை.
மறுநாள் காலை பத்துமணிக்கு அவனது மதிப்பெண் வந்திருந்தது. 96% சதவீதம் வாங்கியிருந்தான். இதில் கணிதத்தில் நூறு மதிப்பெண். பள்ளியின் செகண்ட் ரேங்க்.
அவரால் நம்பவே முடியவில்லை. வீட்டில் அமர்ந்து ஒரு நாள் கூடப் படிக்காதவன் எப்படி இவ்வளவு மார்க் வாங்க முடிந்தது. நாம் தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையா. அல்லது படிக்கும் முறை மாறிவிட்டதா. விளக்கு வைத்தவுடன் படிக்க வேண்டும் என்பது வெறும் பழக்கம் தானா. ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையின் கற்கும் திறனைப் புரிந்து கொள்ளவில்லையா. அறிவு வளர்ச்சி என்பது இது தானா. அவருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது
தனக்கும் தனது மகனுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளி என்பது வயது மட்டும் சார்ந்ததில்லை. தான் வேறு உலகில் வேறு நம்பிக்கைகளில் வாழுகிறோம். எதிர்காலம் பற்றிய பயம் தான் நம்மை வழிநடத்துகிறது. ஆனால் இவர்கள் எதிர்காலத்தை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. கடந்த காலம் பற்றிப் புலம்புவதில்லை. தனது வீட்டில் தன்னோடு வளர்ந்தாலும் அவன் தனது பையன் மட்டுமில்லையோ என்று அவருக்குத் தோன்றியது. அந்த எண்ணம் மேலும் குற்றவுணர்வை உருவாக்கியது. அதிலிருந்து விடுபடுவதற்காக வீட்டில் பால்பாயாசம் வைக்கும்படி சொன்னார் ராமநாதன்
“அவனுக்குப் பாயாசம் பிடிக்காது. அவன் மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வருவானானு கேட்குறேன்“ என்று மகனுக்குப் போன் செய்தாள் சாந்தி.
“என்ன சொல்றார் அப்பா“ என்று இயல்பாகக் கேட்டான் பிரபு
“உன் மார்க்கைப் பார்த்து அழுதுட்டார்“ என்றாள் சாந்தி
தான் எப்போது அழுதோம் என்று புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராமநாதன்.
அன்று மாலை டேனியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பிரபு. டேனி ஒல்லியாக இருந்தான். இருவரும் ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் டீ சர்ட் போட்டிருந்தார்கள். டேனி அப்பா வாங்கிக் கொடுத்தது என்றான் பிரபு.
“தன்னைவிடவும் டேனி நாற்பது மார்க் குறைவு“ என்று அம்மாவிடம் சொன்னான் பிரபு
டேனி சிரித்தபடியே “இவனை மாதிரி படிக்க முடியாது ஆன்டி“. என்றான்.
“நல்லா சப்தமாச் சொல்லு. அவர் காதுல விழட்டும்“ என்றாள் சாந்தி
அதைக் கேட்காதவர் போல ராமநாதன் நடித்துக் கொண்டார்.
அன்றிரவு வீட்டில் சும்மா கிடக்கும் ஸ்டடி லேம்பை யாருக்காவது கொடுத்துவிடலாமா என்று மனைவியிடம் கேட்டார் ராமநாதன்
“அவன் படிக்கிறதுக்கு வாங்கினது.. அதெல்லாம் குடுக்கக் கூடாது“ என்றாள்.
“அவன் ஸ்டடி லேம்ப் வச்சிப் படிக்கிற ஆள் இல்லை“ என்றார்
“அப்போ அவன் பிள்ளை வந்து படிப்பான். அது பாட்டுக்கும் இருக்கட்டும்“ என்றாள்
தன்னால் அவ்வளவு எதிர்காலத்தை நினைக்க முடியவில்லையே என்று மனதிற்குள் சிரித்தபடியே“ பிரபு ரூம்ல இருக்கிற கலர் லைட்ல பாட்டு கேட்டா நல்லா இருக்குமா“ என்று மனைவியிடம் கேட்டார்.
“ஏன் வயசு திரும்புதாக்கும்“ என்று கேலி செய்தாள் மனைவி.
பிரபுவோடு அவனது அறையில் அமர்ந்து வண்ணவிளக்கு ஒளிர பாட்டு கேட்க வேண்டும் என்று அவருக்குள் ஆசை உருவானது.
ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
