S. Ramakrishnan's Blog, page 17

February 13, 2025

கதை எனும் மருந்து

சத்யஜித் ரேயின் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இந்தி திரைப்படம் The Storyteller . ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். அறிவியல்புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகளை ரே எழுதியிருக்கிறார். விசித்திரமான நிகழ்வுகள். மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட அவரது சிறுகதைகள் வங்காளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓவியர் என்பதால் ரே கதாபாத்திரங்களைத் துல்லியமாகச் சித்தரிக்கக் கூடியவர். இந்தக் கதையில் வரும் இருவரும் தனித்துவமானவர்கள்.

வங்காளத்தில் வாழும் தாரிணி பந்தோபாத்யாயா என்ற அறுபது வயதானவர் ஒரு கதை சொல்லி. முதலாளித்துவத்தை வெறுக்கும் அவரால் எங்கேயும் வேலை செய்ய முடியவில்லை. 72 வேலைகள் மாறிவிட்டதாகச் சொல்கிறார். அவரது மகன் அரிந்தம் அமெரிக்காவில் வசிக்கிறான். அவன் தந்தையை அமெரிக்கா வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அவருக்கு முதலாளித்துவ நாடான அமெரிக்காவைப் பிடிக்கவில்லை. பேரன் தொலைபேசியில் அழைத்துத் தனக்குக் கதை சொல்வதற்காக அமெரிக்கா வரும்படி அழைக்கிறான். அதற்காகப் போக விரும்பினாலும் கல்கத்தாவை விட்டுச் செல்ல அவரது மனது இடம் தரவில்லை.

அவர் ஒரு நாள் பத்திரிக்கையில் கதை சொல்லி தேவை என்ற ஒரு விளம்பரத்தைக் காணுகிறார். அகமதாபாத்திலுள்ள முகவரிக்கு விண்ணப்பம் செய்கிறார். நேரில் வரும்படி அவரை அழைக்கிறார்கள். பெங்காலிகள் மீன் உண்பதையும் துர்கா பூஜையினையும் எந்த நிலையிலும் விடமாட்டார்கள் எனும் தாரிணி புதிய வேலைக்காகச் சொந்த ஊரைவிட்டு அகமதாபாத் புறப்படுகிறார்.

கதை சொல்லி தேவை என்ற விளம்பரத்தை கொடுத்தவர் தொழிலதிபரான ரத்தன் கரோடியா, ஜவுளி தொழில் செய்துவருகிறார். பணக்காரர், ஐம்பது வயதானவர். அவருக்கு நீண்டகாலமாகவே தூக்கம் வர மறுக்கிறது என்பதால் சிறுவயதில் பாட்டியிடம் கதை கேட்டது போல ஒரு கதைசொல்லியை வேலைக்கு வைத்துக் கொள்ள அழைத்திருக்கிறார் என்பதைத் தாரிணி அறிந்து கொள்கிறார்.

தூக்கமின்மை என்பது பணம் படைத்தவர்களுக்கு வரும் வியாதி எனக் கேலி செய்யும் தாரிணி கதை சொல்லியாக அங்கே வேலைக்குச் சேருகிறார்

ரத்தன் கரோடியா சைவ உணவு உண்பவர். வீட்டில் அலங்காரப் பொருள் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். ஆனால் எதையும் படிக்கமாட்டார். புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே அறிவு வந்துவிடும் என நம்புகிறார். அவர் படிக்கும் ஒரே புத்தகம் வரவுசெலவு கணக்குப் பேரேடு மட்டுமே .

தாரிணி தினமும் மீன் சாப்பிடக் கூடியவர். அவருக்குக் குஜராத்தி உணவு ஒத்துக் கொள்வதில்லை. ஆனாலும் வழியில்லாமல் ரத்தன் கரோடியாவிற்குக் கதை சொல்வதற்காக அந்த வீட்டில் வசிக்கிறார். தினமும் இரவு ரத்தன் அறைக்குச் சென்று அவருக்காகக் கதை சொல்கிறார். தாரிணி விடிய விடிய கதை சொன்னாலும் ரத்தனுக்கு உறக்கம் வருவதில்லை. ஆனால் தாரிணி சொல்லும் கதைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்கிறார். மறுநாள்காலையில் பாராட்டுகிறார்.

தனிமையில் வசிக்கும் ரத்தன் கரோடியாவின் வாழ்க்கையில் ஏதோ புதிர்கள் சிக்கல்கள், இருப்பதாக உணரும் தாரிணி அதை;ச சரி செய்யும்படி சொல்கிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது.

இதற்கிடையில் ரத்தன் வீட்டின் அருகிலுள்ள நூலகத்திற்குச் சென்று உறுப்பினராகும் தாரிணி அங்குப் பணியாற்றும் பெண்ணுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். அவளுடன் தாரிணி உரையாடும் காட்சிகள் அழகானவை.

அவள் வழியாகக் குஜராத்தியில் வெளியாகும் இதழ்கள் பற்றியும் கார்க்கி என்ற குஜராத்தி எழுத்தாளரைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். அந்தக் கார்க்கி வேறு யாருமில்லை ரத்தன் கரோடியா தான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ரத்தன் கரோடியாவின் மறுபக்கத்தை அறிந்த தாரிணி என்ன செய்கிறார் என்பதே படத்தின் பிற்பகுதி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல தெரிந்த தாரிணி ஒரு வரி கூட எழுதுவதில்லை. தயக்கம். சோம்பல். மற்றும் விமர்சனத்திற்குப் பயந்து அப்படி நடந்து கொள்வதாகச் சொல்கிறார். படிப்பதில் ஆர்வமான அவர் தீவிர இலக்கியவாசகர். தாகூரை, மாக்சிம் கார்க்கியை, டால்ஸ்டாயை விரும்பி படிக்கிறார்.

அவருக்கு நேர் எதிரான கதாபாத்திரம் ரத்தன். பகட்டான மனிதர். புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர். தந்திரமானவர். அதே நேரம் தனது பலவீனங்களை அறிந்து வைத்திருப்பவர்.

இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கதை இணைக்கிறது. தூக்கமின்மைக்குக் கதைகள் தான் மருந்து எனத் தாரிணி சொல்கிறார். கதை கேட்கும் போது நம்மை மறந்துவிடுகிறோம். கதைகள் மருந்தாக வேலை செய்கின்றன என்பதைத் தாரிணி உணர்ந்திருக்கிறார்.

நூலகரிட்ம் தான் என்ன வேலை செய்கிறேன் என்பதை விவரிக்கும் போது உறக்கதை வரவழைப்பவர் என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.

குஜராத்தி பேசத் தெரியாத வங்காளியான தாரிண எந்த மொழியில் கதையைச் சொல்கிறார் என்று தெரியவில்லை தாரிணி சொல்லும் கதைகள் அனிமேஷன் காட்சியாக விரிகின்றன. அந்தக் கதைகளில் ஒரு அற்புதமும் இல்லை. அவை குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் எளிய கதைகள். அதன் காரணமாகக் கதை சொல்லியின் மீது நாம் கொள்ளும் ஈர்ப்பு அவர் சொல்லும் கதைகளிடம் ஏற்படுவதில்லை.

பெங்காலிகளின் பெருமிதங்களான கம்யூனிசம், வங்காள எழுத்தாளர்கள். மகாகவி தாகூர் அவரது இசை, மீன் உணவு. துர்கா பூஜை. இவற்றையே இப்படமும் பேசுகிறது. குஜராத்தி வணிகர்களைப் படம் கேலி செய்கிறது. வங்காளத்தைப் போலவே குஜராத்தியிலும் சிறந்த எழுத்தாளர்கள். இலக்கிய மரபு இருப்பதைப் படம் சித்தரிக்கவில்லை.

உண்மையில் இப்படம் கல்கத்தா, அகமதாபாத் எனும் இரு நகரங்களின் கதை. மனைவியை இழந்து வாழ்பவருக்கும், தனியே வாழுகிறவருக்குமான உறவின் கதை. இக்கதையில் வரும் ரேவதியின் வாழ்க்கையும் கடந்தகாலமும் முழுவதும் விவரிக்கபடுவதில்லை. அது சொல்லப்படாத கதையாகவே உள்ளது.

கதையின் முக்கியத் திருப்பம் அழகானது. ஆனால் அதற்கான காரணங்களும் கதையில் அந்தத் திருப்பம் ஏற்படுத்தும் விளைவுகளும் எளிமையாக முடிந்துவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

வால்டர் பெஞ்சமின் தனது கதைசொல்லியைப் பற்றிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்

Boredom is the dream bird that hatches the egg of experience. A rustling in the leaves drives him away. His nesting places—the activities that are intimately associated with boredom—are already extinct in the cities and are declining in the country as well. With this the gift for listening is lost and the community of listeners disappears. For storytelling is always the art of repeating stories, and this art is lost when the stories are no longer retained. It is lost because there is no more weaving and spinning to go on while they are being listened to. The more self-forgetful the listener is, the more deeply is what he listens to impressed upon his memory. When the rhythm of work has seized him, he listens to the tales in such a way that the gift of retelling them comes to him all by itself. This, then, is the nature of the web in which the gift of storytelling is cradled. This is how today it is becoming unraveled at all its ends after being woven thousands of years ago in the ambience of the oldest forms of craftsmanship

ரேயின் இக்கதையும் இதனையே பேசுகிறது. கதை சொல்லி ஒரு விதையை மண்ணில் ஊன்றுவது போலக் கேட்பவர் மனதில் கதையை ஊன்றிவிடுகிறான்.

கதைசொல்லி என்பதும் கதையைச் சொல்பவர் என்பதும் வேறுவேறு. கதை சொல்லி மரபின் தொடர்ச்சியான கலைஞன். ஆனால் கதையைச் சொல்பவர் தான் படித்த, கேட்ட. யாரோ சொன்ன கதையை அரங்கில் சொல்கிறார். கைதட்டு பெறுகிறார்.

ஆனால் கதை சொல்லி என்பவர் தானே புதியபுதிய கதைகளை உருவாக்குபவர். தாரிணி சொல்வது போல அத்தனையும் ஒரிஜினல் கதைகள். அதை நிகழ்த்துகலை போல உயிரோட்டமாக நிகழ்த்துகிறார். தனது இனத்தின். நிலத்தின், வரலாற்றின், உறவுகளின் அழியாத நினைவுகளைக் கதைகளாக நெசவு நெய்கிறார்.

இத்திரைப்படத்தில் வரும் தாரிணி ஒரு கதை சொல்லி. அவர் வாய்மொழிக்கதை மரபில் உருவானவர்.

ஒரு காலத்தில் டிக்கன்ஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தனது கதையைத் தானே மக்களிடம் சொன்னார்கள். அதற்குப் பெரிய கூட்டம் வந்தது. கட்டணம் செலுத்தி மக்கள் கதை கேட்டார்கள். அச்சு வடிவம் வந்தபிறகு வாய்மொழிக்கதை சொல்லிகள் குறைந்து போனார்கள்.

அடில் உசேன் மற்றும் பரேஷ் ராவல் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2025 19:49

February 12, 2025

எவரும் விரும்பாத கடிதம்

 “Wicked Little Letters,” மாறுபட்ட பிரிட்டிஷ் திரைப்படம். தியா ஷாராக் இயக்கிய புதிய நகைச்சுவை திரைப்படம்

துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். ஆனால் துப்பறியப்படும் விஷயமும் பின்புலமும் புதியது. சுவாரஸ்யமானது.

1920களில் கதை நடக்கிறது. லிட்டில்ஹாம்ப்டனில் உள்ள ஒரு வீட்டிற்குத் தபால் வருவதில் துவங்குகிறது. அந்தத் தபாலை பார்த்த மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். காரணம் அது ஒரு மொட்டைக்கடிதம். அதுவும் ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதம். அதைப் பிரித்துப் படிக்கவே சங்கடப்படுகிறார்கள்.

இப்படியான கடிதங்கள் தொடர்ந்து வருவதைத் தாங்க முடியாமல் எடித்தின் குடும்பம் காவல்துறையில் புகார் தருகிறார்கள். அவளது அப்பா தீவிரமான மதப்பற்றாளர். அம்மா கோபக்காரர். எடித்தையும் தீவிர மதநம்பிக்கை கொண்டவராக வளர்த்திருக்கிறார்கள். இளம்பெண்ணாக இருந்த போதும் அவளை ஒரு சிறுமியைப் போலவே தந்தை நடத்துகிறார்கள். கட்டுபாடுகளை விதிக்கிறார். பிறந்தநாள் விருந்து அதற்கு ஒரு உதாரணம்.

கடவுளுக்குப் பயந்து வாழும் தங்களைப் பற்றி இப்படி மோசமாக எழுதும் நபர் யாராக இருக்ககூடும் என அவர்கள் யோசிக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் ரோஸ் தான் இப்படி எழுதுகிறாள் என்று நினைத்து அவள் மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்கள்.

ரோஸ் ஐரீஷ் பெண். விளையாட்டுதனமானவள். போரில் கணவனை இழந்து தனியே வாழுகிறவள். தன் மகள் நான்சி மீது மிகுந்த அன்பு கொண்டவள். பக்கத்துவீட்டுக்காரர்களின் கட்டுபாடுகளைத் துச்சமென நினைப்பவள். சுதந்திரமான மனநிலை கொண்டவள்

ஆரம்ப நாட்களில் எடித் பக்கத்துவீட்டு ரோஸ் உடன் நட்பாகவே பழகுகிறாள். ஆனால் அவளது துடுக்கான பேச்சும் செயலும் எடித்திற்கு அச்சமூட்டுகின்றன. ஆகவே விலகிக் கொள்கிறாள். ரோஸ் பக்கத்துவீட்டுகார்களைப் பல்வேறுவிதமாக எரிச்சல்படுத்துகிறாள். ஆகவே ரோஸ் தான் மொட்டைகடிதம் எழுதியிருப்பாள் என எடித் சந்தேகப்படுகிறாள். அவளது தந்தை அதை உறுதியாக நம்புகிறார்.

ரோஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். காவல்துறை ரோஸை கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஆனாலும் மொட்டைக்கடிதம் வருவது நிற்கவில்லை. இப்போது அது போன்ற கடிதம் பலருக்கும் வரத்துவங்குகிறது. காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது.

இதற்கிடையில் ரோஸ் ஒரு அப்பாவி என நினைக்கும் காவல்துறையைச் சேர்ந்த கிளாடிஸ் மோஸ் என்ற பெண் அதிகாரி அவளுக்கு உதவி செய்திட முன்வருகிறாள். நடந்தவற்றை அவள் விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

மொட்டைகடிதம் எழுதுவது வேறு யாரோ என உணர்கிறாள். அவரைக் கண்டுபிடிக்க முயலுகிறாள். இந்த நிலையில் காவல்அதிகாரிக்கே வசைக் கடிதம் வந்து சேருகிறது. கடிதத்திலுள்ள கையெழுத்தை வைத்து அதை எழுதியவர் யார் எனத் தேடுகிறார்கள். முடிவில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்.

வெளித்தோற்றத்தில் அமைதியாக, வெகுளியாகத் தோற்றம் தருபவர் மனதில் இது போல வசையும் வெறுப்பும் மறைந்திருக்கக் கூடும், அவர்கள் ரகசியமாகச் செயல்படுவார்கள் என்பதைக் கதை வெளிப்படுத்துகிறது.

ஒரு மொட்டைகடிதம் இங்கிலாந்து முழுவதையும் பரபரப்பாக்குகிறது. செய்தி தாட்கள் அந்தச் செய்தியை விற்பனைப் பொருளாக்கி பெரியதாக்குவதையும் படம் அழகாக விளக்குகிறது.

கிளாடிஸ் மோஸ் காவல்துறையில் பணியாற்றும் முதல் பெண் போலீஸ் அதிகாரி . உண்மையான கதாபாத்திரத்தின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணைக் காவல்துறை அதிகாரியாக ஏற்க மறுக்கிறார் எடித்தின் தந்தை. அவரது வெறுப்பும் ஏளனமும் அந்தக் காலகட்ட பொதுப்புத்தியின் வெளிப்படாகவே உள்ளது

1918-1920 காலப்பகுதியில் பிரிட்டிஷ் குடும்பத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது

ரோஸ் தனது சொந்தத் துயரங்களைக் கடந்து மகிழ்ச்சியாக வாழுகிறாள். சந்தோஷத்தைப் பரவவிடுகிறாள். ஆனால் எடித் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து தனது இயல்பை மறைத்துக் கொண்டு பிறரது சந்தோஷத்தை வெறுப்பவளாக மாறிவிடுகிறாள். குடும்ப வன்முறையின் அடையாளமே எடித். அவள் ரோஸைப் போல வாழ விரும்புகிறாள். ஆனால் அதற்கான தைரியமில்லை.

எடித்தின் தந்தை அந்தக்கால கட்ட பிரிட்டிஷ் தந்தையின் குறியீடு. அவர் அன்பை போதிக்கிறவராகவும் அடக்குமுறையை கையாளுகிறவராகவும் நடந்து கொள்கிறார்.

அன்றைய காவல்துறையின் செயல்பாடு, முதல் பெண் காவல்துறை அதிகாரி சந்திக்கும் அவமானங்கள். அவள் நடத்தப்படும் விதம் போன்றவற்றை உண்மையாக படம் சித்தரிக்கிறது.

ரோஸின் கடந்த காலம். அவளது கறுப்பினக்காதலன். அவளது மகள் ரோஸைப் புரிந்து கொள்வது, ரோஸிற்கு உதவிடும் பெண்கள், அவர்கள் வசிக்கும் வீதி, அன்றைய தபால்துறை என அக்கால உலகமும் அதன் தனித்துவமான மனிதர்களும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2025 01:01

February 9, 2025

வாழ்வின் விசித்திரங்கள்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புத்தகம் குறித்த விமர்சனம்

சதீஸ்குமார்,

நன்றி

தமிழ்நாடு இ பேப்பர். காம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2025 05:54

February 6, 2025

தபால்துறை விழா/ புகைப்படங்கள்

நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடந்தேறியது.

அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள். தபால் நிலைய ஊழியர்கள், தபால்தலை சேமிப்பாளர்கள், ஊடக நண்பர்கள், என அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வை நன்றாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் அந்திமழை அசோகன் உள்ளிட்ட எனது விருப்பத்திற்குரிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலை தபால்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆகவே அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

நிகழ்வில் சென்னையின் பல்வேறு அஞ்சலகங்களில் பணியாற்றும் தபால்காரர்களுக்கு நூலை வணங்கினோம். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.

இதே நிகழ்வில் சென்னை பொதுதபால் அலுவலகத்தின் நிரந்தர ஓவிய தபால்முத்திரை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அதில் தபால்தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ரோலாண்ட்ஸ் நெல்சன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சென்னை மண்டல தபால்துறைத் தலைவர் ஜி. நடராசன் நிகழ்விற்குத் தலைமையேற்று சிறப்பான உரையை வழங்கினார். சென்னை மண்டல தபால்துறை இயக்குநர் எம்.மனோஜ், முதன்மை தபால்துறை அதிகாரி சுவாதி மதுரிமா, உதவி இயக்குநர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தபால்துறையின் சார்பில் இப்படி ஒரு விழா நடத்தி என்னைக் கௌரவப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2025 18:55

February 5, 2025

எதிர்பாராத முத்தம்

இலக்கிய விமர்சகர் ஜேம்ஸ் உட் தி கார்டியன் இதழின் தலைமை இலக்கிய விமர்சகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று தி நியூயார்க்கரில் வேலைக்குச் சேர்ந்து அங்கும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை எழுதி வருகிறார்.

இவரது விமர்சனக் கட்டுரைகள் இலக்கியப் படைப்பின் நுட்பத்தை, சிறப்புகளை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவை. இவரது கட்டுரைகளின் தொகுப்பான SERIOUS NOTICING: SELECTED ESSAYS, 1997-2019 யை வாசித்தேன். 28 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

லியோ டால்ஸ்டாய், மெல்வில். பால்சாக், ஆன்டன் செகாவ், வி.எஸ் நைபால். வர்ஜீனியா வூல்ஃப், மர்லின் ராபின்சன், லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய், பிரைமோ லெவி என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார்

ஜேம்ஸ் வுட் பாசாங்கான இலக்கியப் பிரதிகளைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். செவ்வியல் இலக்கியங்களின் முக்கியத்துவம் குறித்தும், படைப்பில் எழுத்தாளன் கையாளும் மொழி மற்றும் எழுத்தாளனின் அகப்பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இசையில் தோய்ந்து போய் ரசிப்பவர்கள் அதைப்பற்றி எவ்வளவு பரவசத்துடன் பேசுவார்களோ அது போலவே தான் படித்த நாவல்களை, சிறுகதைகளைப் பேசுகிறார்

இந்தத் தொகுப்பில் ஆன்டன் செகாவின் சிறுகதையான முத்தம் குறித்து இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு சிறுகதையை எப்படி வாசிக்க வேண்டும். கொண்டாட வேண்டும் என்பதற்கு இக் கட்டுரைகள் ஒரு உதாரணம்.

செகாவின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜேம்ஸ் வுட். இந்தக் கட்டுரையில் செகாவ் எழுத்துகளின் அடிப்படை மற்றும் தனிச்சிறப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். ஓவியரைப் போலச் செகாவ் காட்சிகளைத் துல்லியமாக விவரிக்கும் முறையைப் பற்றியும், கதாபாத்திரங்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் உணர்ச்சிகளை ஆராயும் முறையைப் பற்றியும் விவரிக்கிறார்

முத்தம் என்ற சிறுகதை செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று எனக் குறிப்பிடும் ஜேம்ஸ் வுட் ஏன் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்பதற்கான விளக்கத்தையும் முன்வைக்கிறார்

ஜேம்ஸ்வுட் குறிப்பிடும் செகாவின் முத்தம் சிறுகதையை நான் முன்பே வாசித்திருக்கிறேன். அதைச் சாதாரணக் கதை என்றே கருதியிருந்தேன். ஜேம்ஸ்வுட் அந்தக் கதையைத் திறந்துகாட்டி அதில் வெளிப்படும் முக்கியமான உளவியல் தன்மையைப் பற்றியும், காலப் பிரக்ஞை எப்படி வெளிப்படுகிறது என்பதை அடையாளம் காட்டியதையும் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

ஜேம்ஸ் வுட்டை வாசித்த பிறகு அந்தக் கதையைத் திரும்பப் படித்துப் பார்த்தேன். ஆமாம். அது வைரமே தான்.

ஆன்டன் செகாவின் முத்தம் சிறுகதையில் படைப்பிரிவு ஒன்று முகாமிற்குச் செல்லும் வழியில் மைஸ்டெட்ச்கி கிராமத்தில் தங்குகிறார்கள். அங்கே ஒரு பணக்கார வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அதில் ரியாபோவிச் என்ற சிப்பாய் கலந்து கொள்கிறான்.

அவன் கூச்ச சுபாவம் கொண்டவன். விருந்தில் நிறைய இளம் பெண்கள் இருப்பதைக் காணுகிறான். பெண்களுடன் பேசவும் நடனமாடவும் தயங்குகிறவன் என்பதால் எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறான். இந்த விருந்தில் பெண்கள் நடனமாடுகிறார்கள், மது அருந்துகிறார்கள், இது ரியாபோவிச்சிற்குச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

விருந்து நடக்கும் மாளிகையின் இருண்ட அறை ஒன்றுக்குள் அவன் நடக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு இளம்பெண் அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அந்தப் பெண் தவறான ஒருவரை முத்தமிட்டுவிட்டோம் என உணர்ந்து பதற்றமாக ஒடுகிறாள். யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய முத்தத்தை ரியாபோவிச் பெற்றுவிடுகிறான்.

அந்த முத்தம் ரியாபோவிச்சை உலுக்கிவிடுகிறது. யார் அவள். எதற்காகத் தன்னை முத்தமிட்டாள். இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது கடவுள் அளித்த பரிசா, ஒரு முத்தம் இவ்வளவு இன்பம் அளிக்கக் கூடியதா என்று அவனது மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதுகின்றன.

அந்தப் பெண் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டி இளம்பெண்கள் நடனமாடுகிற அறைக்குள் செல்கிறான். இருட்டில் வந்த பெண் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மறக்க முடியாத அந்த முத்தம் அவனுக்குள் புதிய ஆசையை, கனவுகளை உருவாக்கிவிடுகிறது. அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்

விருந்துக்குப் பிறகான நாட்களில், அவன் முத்தத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிறார், மேலும் ஒரு சிப்பாயின் அன்றாடச் செயல்கள் தரும் சலிப்பை கடந்து செல்ல அந்த இனிமையான நினைவு உதவுகிறது.

தனது நண்பர்களிடம் எதிர்பாரத முத்தம் பற்றிய நிகழ்வை கதையைப் போலச் சொல்லத் துவங்குகிறான். அப்படிப் பேசுவது கற்பனையான போதையைத் தருகிறது. அதுவரையான அவனது வாழ்க்கையில் என்ன குறைவு என்பதை அந்த முத்தமே காட்டிக் கொடுக்கிறது.

ரியாபோவிச்சின் தனிமையான மனநிலையினையும் எதிர்பாராத முத்தம் உருவாக்கிய மகிழ்ச்சியினையும் செகாவ் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதிர்பாராமல் கிடைத்த முத்தம் உண்மையில் அற்பமானது என்றும், அதைத் தீவிரமாகச் சிந்திப்பது முட்டாள்தனம் என்றும் ரியாபோவிச் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயலுகிறான். ஆனால் அந்த நினைவு மறையவில்லை. மாறாக அவனைக் காதலில் விழுந்தது போல் உணரவைக்கிறது. .

ஜேம்ஸ் வுட்டின் சிறப்பு அவரது உரைநடையில் வெளிப்படும் உணர்ச்சிகரமான தன்மை. இலக்கியக் கோட்பாடுகளை, சித்தாந்தங்களைச் சார்ந்து அவர் இலக்கிய விமர்சனம் செய்வதில்லை. மாறாக வாசிப்பில் தோய்ந்து போய் எழுத்தின் நுட்பங்களை, ரகசியங்களை வியந்து பாராட்டி எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டுகிறார். அதே நேரம் எழுத்தில் வெளிப்படும் போதாமைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை. வி.எஸ். நைபாலை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி பற்றிய கட்டுரை இதற்குச் சிறந்த உதாரணம்.

இன்றும் நம்மிடம் உள்ள இலக்கிய விமர்சகர்களில் ஜேம்ஸ் வுட்டே முதன்மையானவர். அவர் எழுத்தாளர்களின் புகழை வைத்து அவர்களின் புத்தகங்களை எடைபோடுவதில்லை. கறாராக, தங்கத்தை உரசிப்பார்த்து எடை போடுகிறவரைப் போல, தனது ஆழ்ந்தவாசிப்பின் மூலம் இலக்கியப் பிரதிகளை அணுகி மதிப்பீடு செய்கிறார். அது சில எழுத்தாளர்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது. அவர்கள் ஜேம்ஸ் வுட்டை கடுமையாகத் திட்டுகிறார்கள். அவற்றைக் கடந்து தீவிரமாகவும், உண்மையாகவும் ஜேம்ஸ் வுட் தொடர்ந்து எழுதி வருகிறார் என்று பேட்ரிக் மேக்ஸ்வெல் குறிப்பிடுகிறார்.

இது சரியான மதிப்பீடு என்பதை SERIOUS NOTICING: SELECTED ESSAYS கட்டுரை தொகுப்பு உறுதி செய்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2025 04:33

February 4, 2025

தபால்துறை- சிறப்பு விழா

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி நான் எழுதிய தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதற்பதிப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவிலே விற்றுத் தீர்ந்துவிட்டது. நிறைய விமர்சனப்பதிவுகளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இந்நூல் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நூலைக் கௌரவிக்கும் விதமாக தபால்துறை சிறப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 6 வியாழன் காலை பத்துமணிக்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 தபால்காரர்களுக்கு இந்த நூல் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்விற்கு முக்கியக் காரணமாக உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2025 07:24

January 30, 2025

தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு

சாகித்திய அகாதமி நடத்தும் தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு பிப்ரவரி 3 திங்கள்கிழமை காலை சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2025 23:54

கூண்டில் ஒருவர்.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார்.

re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார்.

அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார்.

இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் படுக்கை அறையில் இருந்த பொருட்களை அகற்றியிருக்கிறார்கள். பக்கத்து அறையில் இந்தப் பொருட்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள்.

யார் இந்த ஆள். எதற்காகக் கூண்டில் இருக்கிறார். அதுவும் நமது வீட்டில் என அந்தக் கணவன் கோபமடைகிறான்.

அதற்குக் கூண்டில் இருந்த ஆள் நீங்கள் இன்றைக்கு வருவீர்கள் என்று சொல்லவில்லையே. நாளை வருவதாகத் தானே சொன்னார்கள் என்று கேட்கிறார்

ஆமாம் ஒரு நாளைக்கு முன்பாகவே வந்துவிட்டோம். நீங்கள் யார். எதற்காகக் கூண்டில் இருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்கிறாள் மனைவி சூசனா.

என்னை நீங்கள் கோவித்துக் கொள்ள முடியாது. அது சரியான முறையில்லை. தேனிலவிற்குச் செல்லும் அவசரத்தில் நீங்கள் குடியிருப்பு விதிகளைச் சரியாகப் படிக்கவில்லை. புதிய விதிகள் உருவாகியுள்ளன என்கிறார் கூண்டில் இருப்பவர்.

என்ன விதி என ஆத்திரத்துடன் கேட்கிறான் கணவன்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இப்படிக் குடியிருப்பில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய குடியிருப்புகளுக்குக் கைதிகளை விநியோகிக்கின்றன, இதன் காரணமாக நல்ல இடமும் சரியான சூழலும் எங்களுக்குக் கிடைக்கும். இது புதிய வாழ்க்கைக்கான மறுபிரவேசமாக அமையும் என்கிறார் கூண்டில் இருப்பவர்

உங்களைக் கவனித்துக் கொள்வது எங்கள் வேலையில்லை என அவர்கள் திட்டுகிறார்கள்.

இது அரசாங்கத்தின் முடிவு. பழைய சிறைகளை இடித்துவிட்டார்கள். இனி எங்களைக் கைதி என்று கூட யாரும் அழைக்க முடியாது. நீங்கள் வழிகாட்டிகள். நாங்கள் புதிய வாழ்க்கையை விரும்புகிறவர்கள் என்கிறார். அத்தோடு இந்த வீட்டில் எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. உணவு, உடை, மருத்துவம் மற்றும் உளவியல் உதவி என யாவும் நீங்கள் செய்து தர வேண்டும். நீங்கள் தரும் எந்த உணவையும் நான் சாப்பிடுவேன். எனக்குப் பெண் துணை தேவை. அதற்கும் சட்டம் வழி செய்திருக்கிறது.

மிஸ் குக்வி என்றொரு பெண் என்னைத் தேடி வருவாள் அவளுடன் இன்பம் அனுபவித்துக் கொள்வேன். அதற்கான கட்டணத்தை நீங்கள் தர வேண்டும். இது போல இசை, மது, நண்பர்கள் என அனைத்திற்கும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்கிறார்.

அவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசாங்க அதிகாரிகளின் மனிதாபிமான உணர்விற்கு நேர் எதிராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி அந்த ஆள் கூண்டின் கதவை திறக்க சொல்லி சாவகாசமாகக் குளிக்கச் செல்கிறார்

இன்னும் எவ்வளவு நாட்கள் நீங்கள் இங்கே இருப்பீர்கள் எனக் கணவன் கேட்கிறான்.

நான் ஆயுள்தண்டனை கைதி என்கிறார் கூண்டு மனிதன்.

••

ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகள் வியப்பூட்டும் நிகழ்வுகளை, செய்தியைக் கொண்டிருப்பவை. அவற்றை இயல்பான, அன்றாட வாழ்க்கையின் நேரடியான களத்திற்குள் வைத்து எழுதுகிறார் என்பதே அவரது சிறப்பு.

“எனது சிறுகதைகள் கற்பனையும் நகைச்சுவையும் கலந்த ஒரு வினோதமான கலவை“ என்கிறார் ஸோரன்டினோ

காலத்தின் பின்னால் போய் அறியாத நிலப்பரப்பில் கதையை எழுதும் போது விந்தையான நிகழ்வுகளை எளிதாக நிஜமாக்கிவிட முடியும் என்கிறார் போர்ஹெஸ். இது எழுத்தின் ரகசியங்களில் ஒன்று.

ஆனால் ஸோரன்டினோ, தனக்குப் பழக்கமான சூழலை கதையின் களமாக வைத்துக் கொள்கிறார். ஆனால் கதையில் நடைபெறும் நிகழ்வுகள் வியப்பூட்டுகின்றன.

இந்தக் கதையில் வரும் கூண்டு மனிதன் காஃப்காவின் பட்டினிக்கலைஞனை நினைவுபடுத்துகிறான். அவனும் இப்படிக் கூண்டில் அடைபட்ட மனிதனே.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ கதையில் அவர்கள் தேனிலவு முடிந்து புதிய வாழ்க்கையைத் துவக்குவதற்காக வருகிறார்கள். அவர்களைப் போலவே கூண்டு மனிதனும் புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காக வந்திருக்கிறான். ஒன்று இயல்பானது. மற்றொன்று விநோதமானது

சிறைச்சாலைக்கு மாற்றாகக் கைதிகளை இப்படி வீட்டில் ஒப்படைப்பது என்ற அரசின் முடிவை கைதி பாராட்டுகிறார். அறிவார்ந்த செயல் என்கிறார். ஆனால் அது அபத்தமான செயல் என்பதைத் தம்பதிகள் மட்டுமே உணருகிறார்கள்.

கூண்டில் இருக்கும் மனிதன் சட்டத்தின் பெயரால் அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அவர்களின் வாழ்க்கையினுள் குறுக்கீடு செய்கிறான். புதிய பொறுப்புகளைச் சுமத்துகிறான். நமது வாழ்க்கையில் இனி இப்படி எல்லாம் நடக்கலாம் என்று எச்சரிக்கை செய்கிறார் சொரண்டினோ. இந்தக் கதை முழுவதும் வெளிப்படும் மெல்லிய கேலியை காஃப்காவிடம் காண முடியாது.

கூண்டில் இருந்த நபர் சிவப்பு நிற முடியுடன் காணப்படுகிறார். அழகான சூட் அணிந்திருக்கிறார். பொருத்தமான டை மற்றும் பளபளப்பான காலணிகள். தொப்பி. அவரது தோற்றம் கைதியைப் போல இல்லை. அவர் கோபம் கொள்வதில்லை. மாறாக உத்தரவிடுகிறார். அதுவும் அன்று சனிக்கிழமை என்பதால் தன்னைத் தேடி மிஸ் குக்வி வரக்கூடும். நீங்கள் எங்கள் அந்தரங்கத்தில் தலையிடாமல் வெளியே செல்லுங்கள் என்கிறார். உண்மையில் இளம்தம்பதிகள் தங்கள் வீடு எனும் கூண்டிற்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார் கூண்டு மனிதர்.

உண்மையற்ற கதைக்கு உண்மையான சூழல் நுட்பமான விவரிப்பு தேவை என்கிறார் ஃபெர்னான்டோ ஸோரன்டினோ.

இந்தக் கதையில் வரும் புதுமணதம்பதிகள் யார். கணவன் என்ன வேலை செய்கிறான். இந்த வீட்டை எப்போது வாடகைக்குப் பிடித்தார்கள். அந்த வீட்டிற்குச் சூசனா முதன்முறையாக வருகிறாளா என்பது போன்ற எந்தத் தகவலும் கதையில் கிடையாது. அது தேவைப்படவும் இல்லை. கதையின் முதல் வரியில் அவர்கள் தேனிலவை தங்கள் வீட்டுப் படுக்கை அறையில் தொடர்வதற்காகப் பரிலோச்சியிலிருந்து புறப்பட்டுப் பியூனஸ் அயர்ஸுக்குத் திரும்புகிறார்கள். அதுவும் மாலை நேரத்தில். ஆனால் அவர்கள் எதிர்பாராத நிகழ்வு அவர்களின் இன்பத்தில் குறுக்கிடுகிறது. ஆனால் அதே இன்பத்தைக் கூண்டில் இருப்பவர் அனுபவிக்கப் போகிறார் என்று கதை முடிகிறது,

சிறை என்பதும் ஒரு கூண்டு தான். ஆனால் அது பறவை கூண்டு போல வட்டமானதில்லை. இப்போது அந்த மனிதர் பறவை கூண்டு போல உருவாக்கபட்ட வீட்டுச்சிறையில் இருக்கிறார். இந்த மாற்றமே அவருக்குப் போதுமானதாகயிருக்கிறது. அதிகாரத்துவத்தின் அபத்தத்தை மெல்லிய நகைச்சுவையாகச் சொல்கிறார் ஸோரன்டினோ. அதுவே கதையை மறக்க முடியாத ஒன்றாக்குகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2025 04:02

January 28, 2025

இணையாத தண்டவாளங்கள்

எகிப்திய இயக்குனரான யூசுப் சாஹின் இயக்கிய Cairo Station 1958ல் வெளியான திரைப்படம். முழுப்படமும் கெய்ரோ சென்ட்ரல் ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் கதை நடைபெறுகிறது

ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். பயணிகள் அதை முழுமையாக உணர்வதில்லை. நான் பல நாட்களை ரயில் நிலையத்தில் கழித்தவன் என்ற முறையில் இப்படம் சித்தரிக்கும் உலகை நன்றாக அறிவேன்.

கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம், தலைநகரின் இதயம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரயில் புறப்படும் பரபரப்பான ரயில் நிலையமது. நூற்றுக்கணக்கில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நெரிசலான அந்த ரயில் நிலையத்தின் அதிகாரி. சிறுவணிகர்கள். காவலர்கள். போர்ட்டர்கள். மோசடி பேர்வழிகள். திருடர்கள். பெண்பித்தர்கள் என ரயில் நிலையம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டிக்கெட் இல்லாத பயணத்தில் கெய்ரோ வந்து சேரும் ஏழையான கினாவி பசிமயக்கத்தில் ரயில் நிலையத்தில் கிடக்கிறான். அவனுக்கு உதவி செய்யும் நியூஸ்ஸ்டாண்ட் உரிமையாளர் மட்பௌலி செய்தி தாள் விற்பனை செய்பவனாக நியமிக்கிறான். அப்பாவியான கினாவி கால்களை இழுத்து இழுத்து நடக்கக் கூடியவன். சிறுவர்கள் கூட அவனைக் கேலி செய்கிறார்கள். கினாவி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறான். சம்பாதித்துத் திருமணம் செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி போய்விட வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறான்.

பிளாட்பாரத்தை ஒட்டிய ஒரு தகரகொட்டகை. அங்கே கினாவி உறங்கிக் கொள்கிறான். அவன் செய்தி தாளில் வரும் அழகிகளின் புகைப்படத்தை வெட்டி தனது அறை முழுவதும் ஒட்டி வைத்துக் கொள்கிறான். அழகான பெண்களைப் பற்றிக் கனவு கண்டபடி இருக்கிறான்

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குச் சம வாய்ப்பு மற்றும் சம ஊதியம் கிடைப்பதில்லை. ஒரு சுமைதூக்கும் தொழிலாளி விபத்திற்குள்ளாகிறான். அவனுக்கு நஷ்ட ஈடு தர மறுக்கிறார்கள். ஆகவே அபு செரிஹ் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ரயில் நிலையத்தினைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபு கேமல் தனது ஆட்களை வைத்து அவர்களை ஒடுக்குகிறான். இந்நிலையில் கினாவிக்கு அதே ரயில் நிலையத்தில் குளிர்பானங்கள் விற்கும் இளம்பெண் ஹன்னோ மீது காதல். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவள் அபு செரிஹை காதலிக்கிறாள். அவனும் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான். இதை அறிந்த போதும் கினாவி ஹன்னோவிடம் நெருங்கிப் பழக முயலுகிறான்.

தனது அன்னையின் நகையை அவளுக்குப் பரிசாக அளிக்கிறான். ஹன்னோ அவனைக் கேலி செய்கிறாள். துரத்திவிடுகிறாள். அவளை அடைவதற்காகக் கினாவி எதையும் செய்ய முயற்சிக்கிறான். நிராகரிப்பை எதிர்கொள்ளும், கினாவியின் ஆவேசம் ஆபத்தானது. இணையாத இரண்டு தண்டவாளங்களைப் போல அவர்கள் உறவு நீளுகிறது. இக்கதையில் தனது காதலனுக்காக காத்திருக்கும் இளம்பெண்ணின் கதை கிளையாக விரிகிறது. அதுவும் முதன்மை கதையும் ஒரே நிகழ்வின் இருவேறுவடிவங்களாக மாறுகின்றன.

இதற்கிடையில் இந்த ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரேதம் தலையற்ற நிலையில் கிடக்கிறது. யார் கொலையாளி எனத் தேடுகிறார்கள்.

அபு தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்க முயலுகிறான். அதைக் அபு கேமலின் ஆட்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

ரயில் நிலையத்திற்கு வரும் பிரபலங்களைக் காண பயணிகள் போட்டி போடுகிறார்கள். ரயில் நிலையத்தினுள் அனுமதி இன்றிக் குளிர்பானங்கள் விற்க கூடாது எனக் காவலர்கள் ஹன்னோவை விரட்டுகிறார்கள். அவள் ரயிலில் தாவி ஏறி விற்பனை செய்யும் விதமும் அவளது நடனமும் அழகானது.

பயணச்சீட்டு வாங்குவதற்கான இடத்தில் கிராமவாசிகள் வேடிக்கையாக நடந்து கொள்வது. கினாவி முறைத்துப் பார்த்துவிட்டதாகப் பெண் போடும் சண்டை. கணவன் மனைவிக்குள் வரும் சண்டை. பெண்கள் குழந்தைகளைத் திட்டுவது, காதலன் காதலி சந்திப்பு. ரயில் நிலையக்காவலர்கள் லஞ்சம் வாங்குவது. என ரயில் நிலைய வாழ்வினை படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தாங்க முடியாத வெப்பத்தில் ரயில் வந்து நிற்பது குளிர்பானம் விற்கும் பெண்கள் தண்டவாளத்தில் ஒடி ரயிலில் உள்ள பயணிகளிடம் குளிர்பானம் விற்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

இத்தாலிய நியோ ரியலிச பாணியில் உருவாக்கபட்ட அழகான திரைப்படம். ஆல்விஸின் ஒளிப்பதிவு அபாரமானது குறிப்பாக இரவுக்காட்சிகள் மற்றும் ரயிலின் வருகை. ரயிலில் நடக்கும் குழு நடனம், அபுவும் ஹன்னோவும் சந்திக்கும் அறை. துடிதுடிக்கும் கண்களின் அதீத நெருக்கமான காட்சிகள் இருண்ட பிளாட்பாரத்தில் நடக்கும் நிகழ்வுகள் எனத் தேர்ந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனிச்சிறப்பை உருவாக்குகிறது.

அரபு இலக்கியங்களில் வரும் கதாபாத்திரம் போலவே மட்பௌலியும் கினாவியும் உருவாக்கபட்டிருக்கிறார்கள். எகிப்தின் மாறிவரும் சமூகமாற்றதை ரயில் நிலையத்தின் வழியே படம் அழகாகச் சித்தரித்துள்ளது.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 23:31

காந்தியின் கடிதம்

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, 1931 ஆகஸ்ட் 28 தேதியிட்டு இந்திய அரசின் உள்துறைச் செயலர் ஹெர்பர்ட் வில்லியம் எமர்சனுக்குக் காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது அவரது இடது கையால் எழுதப்பட்ட கடிதமாகும்.

இரண்டு கைகளாலும் காந்தியால் எழுத முடியும்.

இந்தக் கடிதம் இடது கையால் எழுதப்பட்டது என்ற தகவலை காந்தியே தெரிவிக்கிறார்.

இடது கையால் எழுதப்பட்ட போதும் எழுத்துக்கள் சரிவாகவோ, துண்டிக்கப்பட்டோ காணப்படவில்லை. வரிகளுக்கு இடையே சரியான இடைவெளியும் தெளிவான கையெழுத்தும் காணப்படுகிறது.

அழகான கையெழுத்தின் அவசியம் பற்றிக் காந்தி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்

“bad handwriting should be regarded as a sign of an imperfect education. I tried later to improve mine, but it was too late. I could never repair the neglect of my youth. Let every young man and woman be warned by my example, and understand that good handwriting is a necessary part of education. I am now of opinion that children should first be taught the art of drawing before learning how to write. Let the child learn his letters by observation as he does different objects, such as flowers, birds, etc., and let him learn handwriting only after he has learnt to draw objects. He will then write a beautifully formed hand.”

காந்தியைப் போலவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க் ளின், லியோனார்டோ டாவின்சி, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இரண்டு கைகளிலும் சரளமாக எழுதக் கூடியவர்கள்.

மத்திய பிரதேசத்திலுள்ள புத்தேலா கிராமத்தில் உள்ள வீணா வந்தினி பள்ளியின் அனைத்து மாணவர்களும் இரு கைகளாலும் எழுத பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்கிறது நாளிதழ் செய்தி.

Thanks : British Library Untold lives blog

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 03:55

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.