S. Ramakrishnan's Blog, page 21
November 7, 2024
டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

இந்த விழாவில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

இதில் கவளம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன.
இலக்கியம் என்பது சாதாரண மனிதர்களிடமுள்ள அசாதாரணமானவற்றைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் சாதாரண வார்த்தைகளால் அசாதாரணமான அனுபவமாக மாற்றுவது என்கிறார் பாஸ்டர்நாக். இக்கதைகளும் அதையே மேற்கொள்கின்றன.
சதுரங்க விளையாட்டினைப் போலவே சிறுகதை எழுதுவதும் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டது. சதுரங்கக் கட்டமும் காய்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை. ஆனால் காய்களை நகர்த்தும் விதம் விளையாட்டு வீரனின் தனித்துவம். அப்படிச் சிறுகதையில் புதிய நகர்வுகளை உருவாக்கி, முடிவில்லாமல் விளையாடிக் கொண்டேயிருக்கலாம்.
இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் எழுதுவதென்பது ஒரு நபர் ஆடும் சதுரங்கம். இரண்டு பக்கத்தையும் ஒருவரே விளையாட வேண்டும். நாவல் எழுதுவதை விடவும் சிறுகதை எழுதுவதே எனக்கு விருப்பமானது. சவாலானது.
இந்தத் தொகுப்பிலுள்ள இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்திலும் நான்கு கதைகள் மலையாளத்திலும் ஒரு கதை பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
November 6, 2024
சிறார் கதைகள்
புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக எனது எட்டு சிறார் நூல்களை மாணவர்கள் வாசித்து உரையாடுகிறார்கள்.
இந்த நிகழ்வு 09.11.24 சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பள்ளி முதல்வரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.








இந்த நூல்களைப் பெற விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும்
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை,
சாலிகிராமம், சென்னை-93
தொலைபேசி (044)- 23644947. 9789825280
November 4, 2024
சில புதிர்கள்
புதிய குறுங்கதை.

அப்பாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. சில நாட்கள் தந்திமரத்தெருவில் இருந்த கோல்டன் டெய்லர்ஸ் கடையின் முன்பாகப் போய் நின்று கொள்வார். அந்த டெய்லரிடம் எந்த உடையும் அவர் தைக்கக் கொடுக்கவில்லை. ஆனால் எதற்கோ காத்திருப்பவர் போல அங்கே நின்றிருப்பார். அவரது பார்வை தையல் இயந்திரத்தின் மீது நிலைகுத்தியிருக்கும். கடைக்குள் வரும்படி டெய்லர் விஜயன் அழைத்தாலும் வர மாட்டார். அந்தக் கடையினுள் என்ன பார்க்கிறார் என்று தெரியாது. வீட்டிலிருந்து யாராவது போய் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். கையைப் பிடித்து இழுத்தாலும் வர மாட்டார். காந்தத்தால் இழுக்கபடும் இரும்பு ஆணியைப் போல அந்தக் கடை அவரை இழுத்துக் கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாத வேறு காட்சிகள் எதுவும் அவருக்குத் தெரிகிறதோ என்னவோ. அப்பா அப்படி நிற்கும் நாட்களில் விஜயன் குற்றவுணர்ச்சி கொள்வது வழக்கம். தவறுதலாக கத்தரித்துப் போட்ட பட்டுத்துணியைப் போல அப்பாவைக் காணுகிறாரோ என்னவோ. சற்றே வளைந்த கழுத்துடன் நின்றிருந்த அப்பா மறந்து போன சொல் திரும்ப நினைவிற்கு வந்துவிட்டது போலச் சில மணி நேரத்தின் பின்பு தலையை உலுக்கியபடி நல்லது என்று சொல்லுவார். என்ன நல்லது. யாருக்குச் சொல்கிறார் என்று எவருக்கும் புரியாது.
••
அம்மாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. விறகு அடுப்பு இருந்த நாட்களது. சமைக்கும் போது அடுப்பில் எரியும் நெருப்போடு பேசிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் அவனே என்று நெருப்பைச் சொல்வாள். சில வேளைகளில் அவளே என்று திட்டுவாள். தீக்கொழுந்துகள் வேகமாகி சப்தமிடும் போது திடீரென ஒரு கை உப்பை அள்ளி அடுப்பில் போடுவாள். அடுப்பினுள் எதற்காக உப்பைப் போட வேண்டும் என்று தெரியாது. மங்களம் அக்கா கேட்டதற்கு நெருப்போட வாயை அடக்கணும் என்று சொல்வாள் அம்மா. உப்பால் நெருப்பின் வாயை அடக்க முடியுமா என்ன. ஆனால் அம்மா அதைக் கண்டுபிடித்திருக்கிறாள். நெருப்பை அல்ல உப்பைத் தண்டிக்கிறாள் என்பாள் மங்களம். சமைப்பவர்களுக்கு எனச் சில விசித்திர நம்பிக்கைகள் பழக்கங்கள் இருப்பது இயல்பு தானா.
••

மங்களம் அக்காவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவள் படுத்திருக்கும் மரக்கட்டிலிற்குக் கிழே ஒரு ஜோடி குழந்தை காலணியைப் போட்டு வைத்திருப்பாள். குழந்தைகள் அணியும் செருப்பு கிடந்தால் கெட்ட கனவுகள் வராது என்பது அவளது நம்பிக்கை. அப்போது அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. யார் சொல்லி அப்படிச் செய்கிறாள் என்று தெரியவில்லை. மூடிவைக்கபட்ட கண்ணாடி பாட்டிலின் மீதேறிய எறும்புகள் ஏமாந்து திரும்பிப் போவது போலத் துர்கனவுகள் அக்காவின் செருப்பின் வரை வந்து அவளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிப் போகின்றன என்பது விசித்திரமாக இருந்தது.
••
தாத்தாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவரது ஒரு கண்ணில் தான் அழுகை வரும். எப்போது அவர் மனத்துயர் கொண்டாலும் அவரது வலது கண்ணில் இருந்து மட்டுமே கண்ணீர் கசியும். இடது கண்ணில் இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் வந்ததில்லை. எப்போதோ இதைப்பற்றிக் கேட்டதற்கு இடது கண் உலகிற்கானது, வலது கண் வீட்டிற்கானது என்றார் தாத்தா. அப்படிக் கண்களைப் பிரித்துக் கொள்ள முடியுமா என்ன. தாத்தாவால் முடிந்திருக்கிறது.
••
பகலில் எரியும் விளக்கு
தாய் தந்தையை நினைவு கொள்வதற்குக் கட்டுரை தான் சிறந்த வடிவம். கதையில் அவர்களை இடம்பெறச் செய்தால் உணர்ச்சிப்பூர்வமாகி விடுகிறார்கள். இயல்பை விட அதிகமாகவோ, குறையாகவோ சித்தரிக்கபட்டு விடுகிறார்கள். கவிதையில் இடம்பெற்றாலோ அரூபமாகிவிடுகிறார்கள். கவிதையில் இடம் பெறும் அன்னை கவிஞனின் அன்னையாக மட்டும் இருப்பதில்லை. இலக்கிய வடிவம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறவினை மட்டுமே சரியாகக் கையாளுகிறது. வெளிப்படுத்துகிறது என்பது எனது எண்ணம்.
மனிதர்கள் எதை, எப்போது, எதற்காக நினைவு கொள்கிறார்கள் என்பது விநோதமானது. இறந்து போன தனது கணவரின் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் டீச்சருக்கு அவள் கையில் கட்டியிருப்பது வெறும் கடிகாரமில்லை.
இது போலக் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் கட்டம் போட்ட பச்சைசட்டை ஒருவரை பல வருஷங்களுக்குப் பின்னே கொண்டு போய்விடுகிறது. குயிலின் குரலைக் கேட்கும் போதெல்லாம் மதியானத்திற்குப் போய்விடும் ஒருவரை நான் அறிவேன். இப்படி நினைவுகளுக்குள் அலைந்தபடியே இருப்பவர்கள் அதன் வழியாக நிகழ்வாழ்வை கடந்து செல்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் காலத்தினுள் திரும்பிச் செல்வதற்கான பாதை ஒன்றை தானே கண்டுபிடித்து வைத்திருக்கிறான்.
சிறுகதைகள். நாவல் போலக் கவிதை நினைவுகளைத் தொகுப்பதில்லை. அடுக்கி உருவம் கொடுப்பதில்லை. மாறாக நினைவுகளைக் கலைத்துப் போடுகிறது. எதில் நினைவு இணைக்கபட்டிருக்கிறதோ அதிலிருந்து விடுபடச் செய்து காலமற்ற ஒன்றாக மாற்ற முற்படுகிறது. அதில் வெற்றியும் பெறுகிறது.
வரலாறு எனும் நினைவுகளின் பள்ளதாக்கின் மீது பறவையாகக் கடந்து போகிறது கவிதை. கவிதையின் வேலை நினைவுபடுத்துவது தான். ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் நினைவுபடுத்துவதில்லை. மாறாக விளக்கை ஏற்றிவைத்தவுடன் இருட்டிலிருந்த எல்லாப் பொருளும் தெரிந்துவிடுவது போலக் கவிதை எழுப்பும் நினைவு அறியாத எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வைத்துவிடுகிறது.

இஸ்ரேலின் முக்கியக் கவிஞர் எஹுதா அமிகாய். ஹீப்ருவில் எழுதப்பட்ட அவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
இந்த வருஷம் அவரது நூற்றாண்டு துவங்கியுள்ளது. உலகெங்கும் அவரது கவிதைகள் குறித்துப் பேசுகிறார்கள். கூடி வாசிக்கிறார்கள். பல்கலைகழகங்களில் அவருக்கான கருத்தரங்குகள் நடக்கின்றன. அவர் பிறந்த ஜெர்மனியில் அவரது நினைவைப் போன்றும் மலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

அவரது கவிதைகளை விரும்பி வாசிக்கிறவன் என்ற முறையில் மானசீகமான அவரது நூற்றாண்டு நிகழ்வை எனக்குள் நிகழ்த்திக் கொண்டேன். அதாவது அவரது கவிதைகளை வாசிப்பது. அது குறித்து நண்பர்களுடன் பேசுவது. அந்த மகிழ்ச்சியைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வது.
கேலிசித்திரம் வரைகிறவர்கள் எவரது தோற்றத்தையும் நேரடியாகச் சித்தரிப்பதில்லை. உருவத்தை மாற்றிவிடுவார்கள். அப்படியான முயற்சியைத் தான் எஹுதா அமிகாய் தனது கவிதையில் மேற்கொள்கிறார்.
அவரது அன்னையும் தந்தையும் கவிதையில் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள். ஒரு கவிதையில் தனது அன்னையை நினைவுகூறும் போது காற்றாலை போல நான்கு கைகள் கொண்டவர் என்கிறார்.
காற்றால் சுழலும் இறக்கைகளைப் போலக் குடும்பம் தான் அவரைச் சுழல வைக்கிறது. அன்றாடத்திற்கான இரண்டு கைகளும் அதற்கு அப்பால் உள்ளவற்றைக் கையாளும் இருகைகளும் அவருக்கு உள்ளன.
வேறு கவிதை ஒன்றில் அவரது அன்னை ஒரு தீர்க்கதரிசி. ஆனால் தான் ஒரு தீர்க்கதரிசி என அறியாதவர் என்றும் சொல்கிறார். அது உண்மையே எல்லா அன்னையும் தீர்க்கதரிசிகளே. அவர்களே நமக்கு உலகத்தைச் சமைத்துக் கொடுக்கிறார்கள். கண்டித்தும், அன்பு காட்டியும் உலகின் இயல்பை. உறவின் உண்மைகளைப் புரிய வைக்க முயலுகிறார்கள். அதில் கொஞ்சமே வெற்றியடைகிறார்கள். நெற்றியில் வைக்கப்பட்ட அன்னையின் கை பிள்ளையின் உடல்நலத்தை அறிந்து கொள்கிறது. சப்தமில்லாமல் பிரார்த்தனை செய்கிறது.
அமிகாய் தனது அன்னையினைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அது அவரது அன்னையை மட்டும் குறிக்கவில்லை. முதுமையில் நோயுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அம்மா தனது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை அகற்ற விரும்புகிறார். அந்த விரல் வீங்கிக் கொண்டு வலிக்கிறது.
அதைத் தானே அகற்றுவதில்லை. அதற்குப் பிள்ளைகளிடம் அனுமதி கேட்கிறார். பிள்ளைகள் மோதிரத்தை திருகிக் கழட்ட முயலுகிறார்கள். மோதிரத்தைத் தேய்த்தால் அற்புதம் நடக்கும் என்பார்களே. அப்படி எந்த அற்புதமும் அங்கே நடக்கவில்லை என்கிறார் அமிகாய்.
முடிவில் மருத்துவர் அந்த மோதிரத்தை துண்டிக்கிறார். அப்போது அம்மா சிரிக்கிறார். பின்பு எதையோ நினைத்துக் கொண்டது போல அம்மா அழுகிறார். இரண்டையும் நிறைவாகச் செய்கிறார்.
கவிதையில் இடம்பெற்ற இந்தக் காட்சி அப்படியே ஒரு சிறுகதை. அம்மா தனது மோதிரத்தை மட்டும் கழற்றவில்லை. திருமண உறவு ஏற்படுத்திய இறுக்கத்திலிருந்தும் விடுபடுகிறார்.
அந்தக் கவிதையின் இறுதியில் அம்மா பாஸ்போர்ட்டிற்காக ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை, அந்த ஊரில் இறப்புச் சான்றிதழில் போட்டோ கேட்க மாட்டார்கள் என்று கவிதை முடிகிறது.
புகைப்படம் என்பது நினைவின் புறவடிவம். பிறரால் காண முடிகிற நினைவு. ஆனால் அம்மாவின் அனுபவங்கள். கடந்து வந்த வாழ்க்கை. அதன் துயரங்கள் யாவும் அவருக்குள்ளே புதைந்துவிட்டிருக்கின்றன. உலகிற்கு அவர் வெளிக்காட்டியது குறைவே.
அது போலவே தனது தந்தையைச் சிறிய கடவுளாகச் சொல்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட மகனாக நடந்து கொண்ட போதும் அவர் தனது தந்தையை வெறுக்கவில்லை. புகார் சொல்லவில்லை. மாறாகப் பரிகாசத்துடன் அவரது அதிகாரத்தை விமர்சனம் செய்கிறார். குடும்பத்தில் வசிக்கும் சிறிய கடவுளின் வல்லமை அவ்வளவு தானே இருக்கும்.
எஹுதா அமிகாயின் தந்தை வீட்டின் கடவுளாக இருந்தாலும் கோபம் கொள்வதில்லை. ( கோபம் கொள்ளும் நேரங்களில் மட்டுமே கடவுள் மனிதரைப் போலிருக்கிறார். நடந்து கொள்கிறார்.) மோசஸின் பத்துக் கட்டளைப் போல அவரது தந்தையும் மகனுக்குப் பத்துக்கட்டளைகளை விதிக்கிறார். இடிமின்னல் எதுவுமில்லாமல் அந்தக் கட்டளைகளைப் பிறப்பித்தார் என்று அமிகாய் கேலியாகச் சொல்கிறார். பத்துக் கட்டளைகளுடன் கூட இரண்டு கட்டளைகளையும் அப்பா சேர்த்துக் கொண்டதையும் கேலி செய்கிறார்.
எஹுதா அமிகாய் கவிதையில் வரும் அன்னையும் தந்தையும் சிறுகதையில் வரும் கதாபாத்திரங்களைப் போல முழுமையாகக் காட்சி தருகிறார்கள். ஆனால் கவிதையில் இடம்பெறும் பெயரற்ற மனிதர்கள் போல உலகிற்குப் பொதுவாகவும் மாறிவிடுகிறார்கள்.
அமிகாய் தனது மகனைப் பற்றி எழுதிய கவிதையில் தந்தையாக நேரடியாக, தெளிவாகத் தந்தையின் கவலைகளை, வேதனைகளை, ஏக்கத்தை எழுதுகிறார். அங்கே அவர் அரூபமான தந்தையாக இல்லை.
அரசியல் கவிதைகளில் வெளிப்படும் அமிகாயும், அன்றாட வாழ்வினை பற்றி எழுதும் அமிகாயும் ஒருவர் தானா என வியப்பாக இருக்கிறது. ஆனால் இரண்டிலும் எதன்மீதும் அவர் வெறுப்பை, துவேசத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகத் தனது நிலைப்பாட்டினையும் அதன் பின்னுள்ள நியாயத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
என் தந்தையின் நினைவு என்பது வேலை நாளுக்கான ரொட்டித் துண்டுகள் போல வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கின்றன என்கிறார் அமிகாய். ஒரு மந்திரவாதி தனது தொப்பியிலிருந்து முயலை வெளியே எடுப்பதைப் போல எளிய தனது உடலிலிருந்து அப்பா தனது அன்பை வெளிப்படுத்தினார் என்பது அபாரமான வரி. தந்தை செய்யும் எளிய அற்புதங்கள் உணரப்படாதவை. அந்த அற்புதங்களை எப்படி நடத்தினோம் என அவருக்கே தெரியாது.
ஒரு கத்தி தன்னை நோக்கி வருவதையும் தனக்குள் புகுவதையும் பற்றி ஒரு ஆப்பிள் என்ன நினைக்கும் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் எஹுதா அமிகாயின் கவிதையை வாசிக்க வேண்டும். முதுமை கனத்த இரும்பு பொருளாக மாறிவிடுவதை உணர்ந்து கொள்வதற்கு அவரை நிச்சயம் படிக்க வேண்டும்.

எஹுதா அமிகாய் ஐந்து முறை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக நிராகரித்து விட்டார்கள். மொழிபெயர்ப்புகளின் மூலம் ஒரு கவிஞர் சர்வதேச அரங்கில் கவனம் பெறுவது என்பது சவாலானது. அதை வென்று காட்டியவர் அமிகாய்.
ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்த அமிகாய் ஜெருசலேத்தில் வாழ்ந்தவர். ஜெருசலேம் என்பது நித்தியத்தின் கரையில் ஒரு துறைமுக நகரம் என்கிறார். தனது 11வது வயதில் 1936 இல் தனது குடும்பத்துடன் ஜெர்மனியில் இருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பயின்று சில வருடங்கள் ஆசிரியராக மேல்நிலைப் பள்ளிகளில் ஹீப்ரு கற்பித்திருக்கிறார்
பதினொரு கவிதைத் தொகுதிகள், இரண்டு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
சலிப்பூட்டுவதாகத் தோன்றும் தினசரி வாழ்க்கையை எஹுதா அமிகாய் தனது கவிதைகளின் வழியே வியப்பூட்டுகிறார். சல்லடை ஒன்றின் வழியே ஒளியைப் பரவ விடுகிறார் என்று அவரது கவிதைகளைச் சொல்லலாம். ஆமாம். சிறிய துளைகளின் வழியே ஒளி உருவம் கொள்வது எத்தனை அழகாக இருக்கிறது. கண்ணாடியின் முன்பாக நின்றபடி ஒருவர் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொள்வது போன்ற ரகசிய சந்தோஷத்தை கவிதையின் வழியாக வெளிப்படுத்துகிறார்.
தனது பிறந்த நாளை பற்றிய அவரது நீண்ட கவிதை அபாரமானது. இவை அதிலுள்ள சில வரிகள்
நான் பிறந்தது 1924ல்.
ஒருவேளை ஒயினாக இருந்திருந்தால் அற்புதமான மதுவாகவோ அல்லது புளித்துப் போனதாகவோ இருந்திருக்கக் கூடும்.
ஒரு வேளை நாயாக இருந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன்.
ஒரு புத்தகமாக இருந்திருந்தால் மிகுந்த மதிப்பு உள்ளதாகவோ அல்லது தூக்கி எறியப்பட்ட ஒன்றாகவோ இருந்திருக்கக் கூடும்.
ஒரு வனமாக இருந்திருந்தால் நான் இளமையாக இருந்திருப்பேன்,
ஆனால் ஒரு மனிதனாக நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
••
மனிதனாக இருப்பது ஏன் ஒருவருக்குச் சோர்வளிக்கிறது. நினைவுகளால் வழிநடத்தப்படுவது ஒரு காரணம். நிகழ்காலத்தின் கைகள் தன்னைப் பகடையாக மாற்றி விளையாடுவது இன்னொரு காரணம். இப்படித் தெரிந்த, தெரியாத நிகழ்வுகளால் மனிதன் தொடர்ந்து அலைக்கழிக்கபடுகிறான். மனிதர்கள் மீது உலகம் ஏற்படுத்தும் காயங்களை இலக்கியமே ஆற்றுகிறது. கவிதைகள் தன்னுடைய இயல்பிலே மருந்தாக இருக்கின்றன. போர் ஏற்படுத்திய காயங்களை. வடுக்களைக் கவிதைகளே குணமாக்கியிருக்கின்றன. மறையச் செய்திருக்கின்றன.
தான் பிறந்த அதே ஆண்டில் வேறு வேறு இடங்களில். வேறு வேறு அன்னையருக்கு பிறந்த அனைவருக்குமாகப் பிரார்த்தனை செய்கிறார் அமிகாய். அவர்களைத் தனது சொந்த உறவாகக் கருதுகிறார். அது தான் கவியின் தனித்துவம்.
கடிகாரத்திற்குள் இல்லை காலம் என்றொரு கவிதை வரியை எழுதியிருக்கிறார் அமிகாய். கடிகாரம் காலத்தை அடையாளப்படுத்துகிறது. காலம் நமக்கு வெளியே ஒருவிதமாகவும் உடலுக்குள் இன்னொரு விதமாகவும் உணரப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் காலம் ஒருவிதமாகப் படிகிறது.
மணி காட்டும் கடிகாரத்தைப் போல நாட்களின் கடிகாரமாக நாமே மாறி விடுகிறோம். மனிதர்கள் உண்மையில் நடமாடும் கடிகாரங்கள் தான். இந்தக் கடிகாரத்தில் எண்கள் எழுதப்படவில்லை. ஆனால் தலையில் வெளிப்படும் நரை என்பது கடிகாரத்தின் மணிசப்தம் போலக் காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

தனக்கு விருப்பமான கிரேக்கக் கவிஞரை நினைவு கொள்ளும் கவிதை ஒன்றில் அவர் வெளியே மருத்துவராகவும் மனதிற்குள் கவிஞராகவும் இருந்தார் என்று அமிகாய் குறிப்பிடுகிறார். இது அப்படியே ஆன்டன் செகாவிற்குப் பொருந்தக்கூடியது. அவர் வெளியே மருத்துவராகவும் உள்ளே சிறுகதை ஆசிரியராகவும் இருந்தார்.
அதே கவிதையில் வேறு ஒரு தருணத்தில் அவர் உள்ளே மருத்துவராகவும் வெளியே கவிஞராகவும் இருந்தார் என்றும் அமிகாய் குறிப்பிடுகிறார். கண்ணாடியின் முன்பக்கம் பின்பக்கம் போன்ற நிலையாக இதைக் கருத முடியாது. பந்தின் முன்பக்கம் பின்பக்கம் போலப் பிரிக்கமுடியாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.
இறந்த அரசரின் பெயருக்கு அடுத்ததாக
அவர் பிறந்த இறந்த வருஷத்தின் எண்கள்
ஒரு கோடு மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது.
என்றொரு கவிதையில் சொல்கிறார்.
பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடைப்பட்ட சிறிய கோடு தான் வாழ்க்கையா. அந்தக் கோட்டிற்குள் எவ்வளவு உண்மைகள் புதைந்திருக்கின்றன. அந்தக் கோடு மன்னரின் வாழ்க்கையை மட்டுமா சொல்கிறது. பிறப்பு இறப்பு இரண்டிற்கும் நடுவிலுள்ள அந்தச் சிறிய கோட்டின் விஸ்வரூபத்தைக் கவிதையே நமக்கு உணர்த்துகிறது. வாழ்வு குறித்த ஞானத்தை வெளிப்படுத்துகிறது.
சில நேரங்களில் ஒரு மனிதன்
எதையாவது எடுப்பதற்காகக் குனிகிறான்
அப்பொருள் அவன் கையிலிருந்து விழுந்தது,
அவன் நிமிரும் போது,
உலகம் மாறி வேறொன்றாகி விடுகிறது.
என்ற கவிதை வரியை வாசிப்பவர்கள் கவிஞர் தேவதச்சனை நினைவு கொள்ளாமல் எப்படியிருக்க முடியும். இருவரும் எளிய நிகழ்விற்குள் பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
அமிகாயின் இன்னொரு கவிதையில் ஒரு பெண்பித்தன் மறதியின் வீட்டிலிருந்து இருந்து நினைவின் வீட்டிற்குச் செல்கிறான். பின்பு நினைவின் வீட்டிலிருந்து மறதியின் வீட்டிற்குத் திரும்புகிறான். காதல் என்பதே இந்த இரண்டு வீடுகளுக்கு இடையே அலைந்த பயணம் தானோ.
தொலைவில் இருந்து பார்த்தால்
எல்லாமும் அதிசயம் போல் தெரிகிறது
ஆனால் அருகில் சென்றால்
அதிசயம் கூட
அதிசயமாகத் தெரிவதில்லை.
என்று கவிஞர் குறிப்பிடும் போது இடைவெளி தான் அதிசயத்தை உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.
அவர்கள் தெருவில் ஒரு குழி தோண்டுகிறார்கள்.
ஆடை கிழிந்த அழுக்கு குடிகாரன் போல
பூமியின் அந்தரங்கம்
பொதுவெளியில் வெளிப்படுகிறது
என்ற அமிகாயின் வரிகள் சட்டென நமது பார்வையை மாற்றிவிடுகிறது. பூமியின் அந்தரங்கம் குறித்த குற்றவுணர்வினை நமக்குள் ஏற்படுத்துகிறது..
அமிகாயின் கவிதை ஒன்றில் இறந்து கிடந்த போர்வீரனின் மீது மழை பெய்கிறது. அவன் தனது முகத்தைக் கையால் மூடிக் கொள்ளவில்லை என்கிறார். போரின் துயரை இதை விடை வலிமையாக எப்படிச் சொல்ல முடியும்
அவரது கவிதையில் வேறுவேறு நபர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அந்த உரையாடல்களின் சாட்சியமாக அவர் இருக்கிறார். உரையாடலில் அவர் குறுக்கிடுவதில்லை. மாறாக அந்த உரையாடல்களைத் தனது சொந்த அனுபவத்தோடு இணைத்து புதிய அனுபவமாக மாற்றிவிடுகிறார்.
அன்பைப் பற்றிய அவரது கவிதை ஒன்றில் உடல் தான் அன்பிற்கான காரணம் என்கிறார். நமது உடல் அன்பின் கோட்டையாகவும் அன்பின் சிறைச்சாலையாகவும் மாறிவிடுகிறது. உடல் இறக்கும் போது அன்பு விடுதலையாகி விடுகிறது, நாணயங்கள் போட்டு விளையாடும் சூதாட்ட இயந்திரம் திடீரென உடைபட்டு நாணயங்கள் சிதறுவதைப் போல எனக் கவிதை முடிகிறது. இதை வாசிக்கும் போது அன்பு என்பதே உடலின் தந்திரம் தானோ, உடலின் சூதாட்டம் தான் அன்பாக உணரப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.
நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்
பிரார்த்தனைகள் கடவுளுக்கு முந்தியவை என்று.
பிரார்த்தனைகள் கடவுளைப் படைத்தன.
கடவுள் மனிதனைப் படைத்தார்,
மேலும் மனிதன் பிரார்த்தனைகளை உருவாக்குகிறான்
அது மனிதனைப் படைக்கும் கடவுளை உருவாக்குகிறது.
இந்தக் கவிதையில் பிரார்த்தனை பற்றி இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள, நினைத்துக் கொணடிருக்கிற யாவும் மாறிவிடுகிறது.
பிரார்த்தனைகள் தான் கடவுளைப் படைத்தன என்பது வியப்பூட்டும் வரி
உண்மையில் நாம் எதன் முன்பாகப் பிரார்த்தனை செய்கிறோமோ அப்பொருள் கடவுளாகி விடுகிறதே.
கடற்கரை மணலில்
பறவைகளின் கால்தடங்கள்,
பொருள்கள், பெயர்கள், எண்கள் மற்றும் இடங்களை
நினைவில் கொள்ள விரும்பிய
ஒருவரின் கையெழுத்துக் குறிப்புகள் போல
காலடிதடங்களை விட்டுச் சென்ற
பறவையை நான் ஒரு போதும் பார்த்ததில்லை
கடவுளைப் போலவே.
காணாத கடவுளின் காலடித்தடங்கள் தான் பூமியில் நாம் காணும் இயற்கை காட்சிகள் என்பது பரவசமளிக்கிறது. கடவுள் ஒரு பறவையைப் போன்றவர் என்று கவிதையால் மட்டுமே சொல்ல முடியும்.
உருண்டையான பழத்தை கத்தியால் உரிப்பதைப் போல,
காலத்தின் இயக்கத்தை
உணர்கிறேன நான்.
எனும் அமிகாயை இடிபாடுகளின் கவிஞன் என்று சொல்லலாம். காலத்தால் உருமாறிய இடங்களின் இடிபாடுகள் மட்டுமின்றி. உறவன் இடிபாடுகளையும் அவர் எழுதுகிறார்
ஒருவரை மறப்பதென்பது
பின்கட்டில் உள்ள விளக்கை
அணைக்க மறப்பது போன்றது
அதனால் அது அடுத்த நாள் முழுவதும்
எரிந்து கொண்டே இருக்கும்
ஆனால் பின்பு அதன் வெளிச்சமே
உங்களை நினைவில் வைக்கும்
என்ற கவிதையில் நமது கவனக்குறைவு தான் மறதிக்கான காரணம் என்கிறார். அறியாமல் செய்த தவறு என்றும் அதைக் கருதலாம். அல்லது அலட்சியமான தவறு என்றும் கருதலாம்.
எளிமையான ஒன்றைச் செய்ய மறந்ததால் ஏற்படும் விளைவுகளை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம், அச் செயல் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
பின்கட்டில் எரியும் விளக்கும் முன்கட்டில் எரியும் விளக்கும் ஒன்றல்ல. இந்தக் கவிதையில் பின்கட்டில் உள்ள விளக்கை தான் அணைக்க மறந்து போகிறார்கள். வீட்டின் கவனத்தைப் பெறாமலும் அதே நேரம் தனது பயனற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அந்த வெளிச்சம் பகலிலும் எரிந்து கொண்டேயிருக்கிறது. அந்த ஒளியென்பது அதுவரை வெளிப்பட்ட விளக்கின் ஒளியாகயில்லை. மாறாக அதற்கு எதிரான ஒளியாக மாறுகிறது. நமது தவறின், கவனக்குறைவின், கண்டுகொள்ளாமையின் அடையாளமாக மிஞ்சுகிறது வெளிச்சம்.
நாம் யாரையாவது மறக்க முயற்சித்தால், அணைய மறுக்கும் ஒளியைப் போல அவர்கள் நம்மைத் துரத்துவார்கள் என்பதையே இந்தக் கவிதை வரி உணர்த்துகிறது. இதனை இழந்த, முறிந்த காதலின் கவிதையாக இன்றைய இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயங்களில் சமயக் கவிதைகளைத் தாண்டி வேறு சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறார்கள். அப்படி இந்தக் கவிதையைத் துக்கசடங்கில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு இக்கவிதை வெறும் காதலின் பிரிவை சொல்லும் கவிதையில்லை.
I don’t live like a poet, nor do I look like one, and I have the child in me. My escape route to childhood is always open. என்கிறார் அமிகாய். தனது தப்பிக்கும் வழியாக அவர் உருவாக்கிக் கொண்டதே கவிதை. ஆனால் அதன் வழியாக அவர் தனது பால்யத்திற்கு மட்டும் திரும்பவில்லை. விரும்புகிற வயதிற்கு, விரும்புகிற இடத்திற்குக் கவிதையின் வழியாகச் சென்று வருகிறார். காலம் மற்றும் வெளியோடு விளையாடுகிறார். உறவினுள் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஒரே நேரத்தில் நடிகராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.
அமிகாய் தன்னை நவீன, இஸ்ரேலிய வரலாற்றின் பிரதிநிதியாக மட்டும் கருதவில்லை, மாறாக அவர் மூவாயிரம் ஆண்டுப் பழமையான யூத பாரம்பரியத்தின் சுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதே அவரது தனித்துவம்.
•••
October 31, 2024
பாக்தாத்தின் திருடன்
அலெக்சாண்டர் கோர்டா தயாரித்து மைக்கேல் பாவல் இயக்கிய The Thief of Bagdad திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 1940ல் வெளியான இப்படம் இன்றும் சுவாரஸ்யம் மாறாமல் அப்படியே உள்ளது. படத்தில் அபு என்ற கதாபாத்திரமாக எலிஃபண்ட் பாய் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இந்திய நடிகர் சாபு நடித்திருக்கிறார்.

1001 அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அழகாகக் கோர்த்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அரங்க அமைப்பும் படமாக்கப்பட்ட விதமும் இசையும் அற்புதமானது..
தமிழில் வெளிவந்த பாக்தாத் திருடன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற படங்களும் அராபிய கதையிலிருந்து உருவானதே.
இப்படத்தின் கதை பஸ்ராவில் துவங்குகிறது. அஹ்மத் என்ற கண் தெரியாத பிச்சைக்காரன் தனது நாயுடன் வீதியில் அமர்ந்து யாசகம் கேட்கிறான். வணிகர்கள் பிச்சை போடும் நாணயங்களில் எது கள்ள நாணயம் என அவனது நாய் கண்டறிந்து சொல்லிவிடுகிறது.
சந்தையிலிருப்பவர்கள் இந்த அதியசத்தை வியப்போடு காணுகிறார்கள். ஒரு காலத்தில் அந்த நாய் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இருந்திருக்கக் கூடும் என ஒருவன் கேலி செய்கிறான்
ஒரு வணிகன் இதனை நம்ப முடியாமல் பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நாய் கள்ள நாணயத்தைக் கண்டுபிடித்துவிடுகிறது.

கண்தெரியாத இந்தப் பிச்சைகாரன் ஒரு காலத்தில் பாக்தாத்தின் இளவரசனாக இருந்தவன். மந்திரவாதி ஜாஃபரால் ஏமாற்றப்பட்டுப் பார்வையை இழந்திருக்கிறான் அது போலவே திருடன் அபு தான் இப்போது நாயாக மாறியிருக்கிறான் என்று கதை அவர்களின் கடந்தகாலத்தை விவரிக்கிறது.
இது போன்று சாபத்தால் உருவமாறியவர்களைப் பற்றிய கதையைக் கேட்டமாத்திரம் மனது பள்ளி வயதிற்குப் போய்விடுகிறது. அந்த வயதில் கேட்ட, படித்த கதைகள் மறப்பதேயில்லை.
ஒரு கதைக்குச் சுவையூட்டும் உப்பு என்பது இது போன்ற மாய நிகழ்வுகளே. அவை அளவாகப் பயன்படுத்தப்படும் போது கதையின் சுவை அதிகரித்துவிடுகிறது.
இந்தப் படத்திலும் நாயாக உள்ள திருடனும். பார்வையிழந்த பிச்சைக்காரனும் மந்திரவாதியால் உருமாற்றப்படுகிறார்கள் மந்திவாதி சர்வ சக்தி படைத்தவன். பேராசை கொண்டவன். மந்திரவாதி ஜாஃபரின் வருகை என்பது லண்டன் நகருக்குள் டிராகுலா வருவதைப் போலிருக்கிறது.
அதிசயங்களால் பின்னப்பட்ட கம்பளம் போன்றதே படத்தின் திரைக்கதை.
இந்தக் கதையில் வரும் அடுத்த அதிசயம் உறங்கிக் கொண்டேயிருக்கும் இளவரசி. அவளை எவராலும் உறக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை. காரணம் மந்திரவாதி அவளை ஆழ்துயிலில் வைத்திருக்கிறான். அந்த இளவரசியின் துயிலைக் கலைத்து அவளை எழுப்புவதற்காகச் செல்கிறான் அஹ்மத். அவள் கனவிற்கும் நனவிற்கும் இடையில் தடுமாறுகிறாள். படத்தின் மிக அழகான காட்சியது. எது நிஜம் என அவளால் அறிய முடியவில்லை. காதலே நிஜத்தை உணர வைக்கிறது.

மூன்றாவது அதிசயம் பறக்கும் இயந்திரக் குதிரை. மந்திரவாதி ஜாஃபர் பஸ்ராவின் சுல்தானுக்குப் பரிசாகப் பறக்கும் இயந்திரக் குதிரை ஒன்றைத் தருகிறான். அந்தக் குதிரையின் மீதேறி நகர் முழுவதும் சுற்றியலைகிறார் சுல்தான். இன்றுள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு நிகராக அன்றே இந்த மாயக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். பறக்கும் குதிரைக்கு ஈடாக அவரது மகளைத் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கேட்கிறான் ஜாஃபர். சுல்தானும் சம்மதிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை இப்பகுதி விவரிக்கிறது.
நான்காவது அதிசயம் சுல்தானைக் கொல்வதற்காக உருவாக்கபட்ட இயந்திர நடனப் பெண். இந்தியக் கடவுள் போல உருவாக்கபட்டிருக்கிறாள்.. அறிவியல்புனைகதைகளில் வருவது போன்ற கதாபாத்திரமது.
ஐந்தாவது அதிசயம் அபு வும் பூதமும் சந்திக்கும் நிகழ்வுகள். அபு பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக் கொண்டு உடைந்து போகிறது. வெறிச்சோடிய கடற்கரையில் அபு தனியாக எழுகிறான். அங்கே பாட்டிலில் அடைக்கபட்ட பூதம் ஒன்றை விடுவிக்கிறான். அந்தப் பூதம் அவனைக் கொல்ல முயலுகிறது. அதனிடமிருந்து எப்படித் தப்புகிறான் என்பதும், அதன் ஊடாக விவரிக்கபடும் சர்வ சக்திகள் கொண்ட மாயக்கண்ணும். அதற்காக மந்திரவாதியும். அஹ்மத்தும் மோதிக் கொள்ளும் நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. ராட்சத சிலந்திக்கு எதிராகப் போராடும் அபுவின் காட்சி சிலிர்க்க வைக்கிறது
கடைசி அதிசயம் அபு பறக்கும் கம்பளத்தில் பறந்தபடி சாகசப்பயணம் துவங்குவது. அபு யார் என்பதை ஞானிகள் விவரிக்கும் காட்சியும் சிறப்பானது.

The Thief of Bagdad அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அப்படியே படமாக்கவில்லை. மாறாகத் தேவையான கதைச்சரடுகளை, கதாபாத்திரங்களைச் தேர்வு செய்து திரைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாற்றங்களை மைக்கேல் பாவல் சரியாகக் கையாண்டிருக்கிறார். அதுவே படத்தைக் காலம் தாண்டிய கலைப்படைப்பாக்கியிருக்கிறது.
அதே நேரம் மறைமுகமாகப் படத்தினுள் வெளிப்படும் காலனியப் பார்வையினையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதே கதைச்சரடுகள் தமிழில் வேறுவேறு படங்களில் தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குலேபகாவலி படத்தில் பார்வையின்மையைக் குணப்படுத்தும் குலேப் என்ற மாயமலரைத் தேடிப் போகிறார்கள். இது போலப் பறக்கும் கம்பளத்தின் கதையும் அடிமைபூதம் கதையும் தமிழில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.
அராபிய இரவுகள் கதையைப் படிக்கும் போது நாம் அடையும் வியப்பை. சுவாரஸ்யத்தை அப்படியே படமும் தருகிறது. இதே அராபிய இரவுகள் கதையினை மையமாகக் கொண்டு வேறு சில படங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்திற்கு இணையாக இல்லை.

1930 களின் பிற்பகுதியில் பிரிட்டனில் டெக்னிக் கலர் அறிமுகமானது. அதை இப்படம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, குறிப்பாக அரண்மனைக் காட்சிகள் மற்றும் பஸ்ரா துறைமுகத்திற்கு மந்திரவாதி ஜாஃபர் வந்து சேரும் காட்சிகள். அதில் துறைமுகத்தின் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கப்பலில் நடைபெறும் விஷயங்களைப் பேரழகுடன் படமாக்கபட்டிருக்கின்றன. பஸ்ராவில் நாம் காணும் மனிதர்களின் ஆடைகள், தலைப்பாகைகள், கடலில் காணும் விதவிதமான பாய்மரங்கள் மற்றும் வண்ணக் கொடிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன, இந்தத் திரைப்படம் 1940 இல் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
இந்தப்படத்தில் கிடைத்த அனுபவத்திலிருந்து மைக்கேல் பாவல் தனக்கான தனித்துவ திரைமொழியை உருவாக்கிக் கொண்டார். அவரது Black Narcissus திரைப்படத்தில் இமயமலைச்சாரலில் உள்ள மடாலயத்தையும் மன்னரின் மாளிகை போன்ற அரங்க அமைப்பினையும் உருவாக்கியதில் அது சிறப்பாக வெளிப்பட்டது. Black Narcissus உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
புகழ்பெற்ற இயக்குனர்களான பிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலா மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி The Thief of Bagdad படத்தை பிரிட்டிஷ் சினிமாவின் காவியம் என்று கொண்டாடுகிறார்கள்.
October 28, 2024
நினைவின் உணவகம்.
புதிய குறுங்கதை
அந்த மலைநகரில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தணிக்கை செய்வதற்காக அவள் வந்திருந்தாள். கூட்டுறவு சங்க நிர்வாகிகளே அவளது உணவு மற்றும் தங்குமிடத்தைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. அவற்றை அவளே ஏற்பாடு செய்து கொண்டாள்.
தணிக்கை செய்யச் செல்லும் இடங்களில் மதிய உணவு கிடைப்பது தான் பிரச்சனையாக இருந்தது. சங்க ஊழியர்களில் எவரேனும் அவளுக்காக உணவு வாங்கி வருவதற்காக மலைநகருக்குள் சென்று வந்தார்கள். அதை மட்டும் அவளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் சாப்பாட்டிற்கான பணத்தை அவளே கொடுத்து அனுப்பினாள்.
நேர்மையாக இருப்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
அன்றைக்கு அவள் தணிக்கை செய்ய வேண்டிய கூட்டுறவு சங்கம் செயல்பட்ட இடம் பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடம். தொலைவிலிருந்து பார்க்க சிறகை விரித்துப் பறக்க காத்திருக்கும் செந்நிற பறவை போலிருந்தது
கர்னல் வில்லியம்ஸ் காலத்தில் மாட்டப்பட்ட சுவரோவியங்கள் கூட அப்படியே இருந்தன. உறுதியான அதன் படிகளில் ஏறும் போது அவள் அறியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

அன்றைக்கு மதிய உணவை வெளியே எங்காவது நடந்து போய்ச் சாப்பிட்டு வரலாம் என நினைத்துக் கொண்டாள். வெயில் வராத காரணத்தால் மணி இரண்டானதை அவள் உணரவில்லை. சோம்பல் முறித்தபடியே வெளியே வந்தபோது ஊழியர்கள் டிபன் பாக்ஸை திறந்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள். மடித்து உருவம் இழந்து போன சப்பாத்திகளைப் பார்ப்பது சாப்பிடும் ஆசையைப் போக்கிவிடுகிறது. எவ்வளவு நாட்கள் இப்படி டிபன் பாக்ஸில் வளைந்த ரப்பர் செருப்பு போன்ற சப்பாத்தியை கொண்டுவந்து சாப்பிட்டிருக்கிறாள் என்ற நினைவு வந்து போனது
அவள் உணவகத்தைத் தேடி மண்பாதையில் நடந்த போது தண்ணீர் குழாய் ஒன்று வெடித்து நீர் பீச்சி கொண்டிருந்தது. மலைநகரங்களில் நிசப்தம் எடைகூடி விடுவதை உணர்ந்தாள்
யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் தேன் விற்கும் கடை ஒன்று கண்ணில்பட்டது. அங்கே அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண் வலதுபக்கம் திரும்பினால் உணவகம் இருப்பதாகச் சொன்னாள்.
அந்த உணவகத்திற்குப் பெயரில்லை. மரக்கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த போது அங்கே மூன்று மேஜைகள் இருப்பதைக் கண்டாள். ஒருவரைக் கூடக் காணவில்லை
ஒரு வேளை உணவகம் செயல்படவில்லையோ எனத் தோணியது. கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் யாரோ நடமாடுவது போலிருந்தது. அவள் “சாப்பாடு இருக்கிறதா“ எனச் சப்தமாகக் கேட்டாள். அரக்கு நிறக்கதவை தள்ளி வெளியே எட்டிப்பார்த்த நரைத்த தலை கொண்டவர் சிரித்தபடியே “இருக்கிறது…மெனுகார்டை பாருங்கள்“ என்றார்.
மேஜையில் இருந்த மெனு கார்டினை அவள் கையிலெடுத்து புரட்டினாள். அதில் உணவின் பெயர்களுக்குப் பதிலாக வெவ்வேறு வயதின் உணவுகளாகப் பட்டியல் இருந்தது.
ஐந்து வயதின் உணவு. ஆறு வயதின் உணவு. பதிமூன்று வயதின் உணவு. நாற்பத்திரெண்டு வயதின் உணவு. எழுபத்திமூன்று வயதின் உணவு என வயது வாரியாக உள்ளதே. இதை வைத்து எப்படி உணவைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக இருந்தது.
கண்ணாடி டம்ளரில் சூடான வெந்நீருடன் வெளியே வந்த சமையற்காரர் அதே சிரிப்பு மாறாமல் “எந்த வயதின் உணவைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்“ எனக் கேட்டார்.
“இதில் எப்படித் தேர்வு செய்வது எனக் குழப்பமாக உள்ளது“ என்றாள்.
“எல்லா உணவும் வயதின் அடையாளங்கள் தான். உங்களுக்கு விருப்பமான பூரியோ, கேசரியோ, அடையோ முதன்முதலில் எப்போது அதைச் சாப்பிட்டீர்களோ அந்த வயது உணவோடு சேர்ந்துவிடுகிறது. அதே உணவைத் திரும்பச் சாப்பிடும் போதெல்லாம் நாம் அந்த வயதை திரும்ப அடைகிறோம்“ என்றார்.
அவர் சொல்வது உண்மை. இப்போதும் கூடத் தட்டில் ஆவி பறக்கும் ரவா உப்புமாவும் சீனியையும் கண்டால் உடனே பள்ளி நாட்கள் நினைவில் வந்துவிடுகிறதே.
எந்த வயதின் உணவைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் அவள் மெனுக் கார்டில் கண்களை ஒடவிட்டாள்.
பின்பு அவள் தனது பனிரெண்டு வயதின் உணவை தேர்வு செய்தாள்.
காத்திருக்கும் நேரம் வரை இந்தப் புதிர்கட்டத்தை விளையாடலாம் என ஒரு அச்சிடப்பட்ட காகிதம் ஒன்றை அவர் தனது அங்கியின் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார்.
பசியில் எளிய புதிர்கட்டங்களைப் பூர்த்திச் செய்வது கூட கடினமாக இருந்தது.
அரை மணி நேரத்தின் பின்பு அவள் முன்பாக இலையைப் போட்டுச் சூடான சாதம் வைத்தார், அதில் எண்ணெய் மிதக்கும் பூண்டுக் குழம்பு. அதுவும் பெரிய பூண்டுகள். சுட்ட அப்பளம். தேங்காய் துவையல். நிறைய வெங்காயம் போட்ட உருளைக்கிழங்கு புட்டினை வைத்தார்.
அதைப் பார்த்த மாத்திரம் கோடை விடுமுறைக்குப் பார்வதி அத்தை வீட்டிற்குப் போன போது ஆசையாகச் சாப்பிட்ட நினைவு வந்து போனது.
தனது பனிரெண்டு வயதின் அனுபவம் இவருக்கு எப்படித் தெரிந்தது எனப் புரியாமல் அவள் திகைத்தபோது
“உங்கள் பனிரெண்டு வயது இது தானா“ எனக் கேலியாகக் கேட்டார்.
அதே ருசி. இத்தனை ஆண்டுகளாக நாக்கு இதற்குத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது.
அவள் ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளும் போது சொன்னார்
“கற்கண்டு பாயாசம் இருக்கிறது. “
ஆமாம் அதுவும் அத்தை வீட்டில் சாப்பிட்டது.
இந்த மனிதரால் எப்படித் தனது பனிரெண்டு வயதை, அதன் ருசியைக் கண்டறிய முடிந்தது என வியப்பு அடங்காமல் அவள் பாயசத்தைக் குடித்தாள்.
வழக்கமாக அவள் சாப்பிடும் உணவகங்களை விடவும் பில் குறைவாக வந்திருந்தது. அதைச் செலுத்திவிட்டு வெளியே வந்த போதும் ஆச்சரியத்திலிருந்து விடுபட முடியவில்லை.
நாளை மறுபடியும் போய் இன்னொரு வயதின் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் உருவானது.

அவள் கூட்டுறவு சங்கத்திற்குத் திரும்பிய போது நிர்வாகி “இங்கே நல்ல சாப்பாடு கிடைக்காது“ எனச் சலித்துக் கொண்டார். “வாழ்நாளில் மறக்க முடியாத சாப்பாடு கிடைத்தது“ எனச் சொல்லியபடியே அவள் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
மறுநாள் மதியம் அந்த உணவகத்திற்குச் சென்ற போது பச்சை நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு கிழவர் தனியே சாப்பிட அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
அவளைப் பார்த்த மாத்திரம் சமையற்காரர் “இந்த ஹோட்டலை எவராலும் மறக்க முடியாது. திரும்பத் திரும்ப வருவார்கள். எனது வாடிக்கையாளர்கள் நிரந்தரமானவர்கள்“ என்று சிரித்தார்.
இன்றைக்கு எந்த வயதின் உணவை தேர்வு செய்வது என மெனுவைப் புரட்டிக் கொண்டிருந்த போது பக்கத்து மேஜையில் இருந்த முதியவர் சொன்னார். “உணவின் வழியே வேறு வேறு வயதிற்குச் சென்று வருவது சந்தோஷம் தருகிறது. “
அதை ஏற்பது போல அவளும் தலையாட்டினாள்
“நீங்கள் எந்த வயதின் உணவை தேர்வு செய்திருக்கிறீர்கள்“ என முதியவர் கேட்டார்.
“அது ரகசியம்“ என்று சொன்னாள்.
“ஆமாம். ரகசியம் “எனச் சொல்லி முதியவர் கண்ணைச் சிமிட்டினார்.
அவளது அடிமனதில் கல்லூரியில் ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாகத் திடீர் விடுப்பு அறிவிக்கப்பட்ட நாளில் வீடு திரும்பிய போது அம்மா செய்து கொடுத்த மிதி பாகற்காய் வறுவல். அதுவும் அதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிட்ட நினைவு வந்தது .
மெனு கார்டில் அந்த வயதை அவள் தேர்வு செய்தாள்.
சமையற்காரர் இன்னொரு புதிர்காகிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டுக் “காத்திருங்கள்“ என்றபடியே உள்ளே நடந்த போது அவரது பெயரைக் கேட்க விரும்பினாள்.
அந்த மர்மமும் வியப்பும் கலைய வேண்டாமே என நினைத்தபடியே அவள் மௌனமாகினாள்.
அவளது நாக்கு கசப்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
••
பயணியின் சிறகுகள்
அஹ்மது யஹ்யா அய்யாஷ்
இலக்கற்ற பயணி நூல் பற்றிய விமர்சனம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. எஸ்ரா வின் எழுத்துக்கள் வெறுமெனக் காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்களின் குவியல் அல்ல. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள். அப்படித்தான் இலக்கற்ற பயணி எனும் பயணம் குறித்த எஸ்ரா வின் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். பயணம் குறித்து எல்லோருக்கும் ஓர் கனவு உண்டு, எண்ணங்கள் உண்டு, திட்டங்கள் உண்டு. அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் எஸ்ரா. நாடோடிகள் பற்றிய சிந்தனை என் மனதில் அடிக்கடி எழுந்து பின் அடங்கும். சிலபோது நானும் சில தோழர்களிடம் நானும் நாடோடி தானே எனச் சொல்லிக் கொள்வேன். அப்படி ஒரு பிம்பத்தை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர. நாடோடிகளின் வாழ்வை நம்மால் அடையவே முடியாது. அதுபோலத்தான் பயணம் என்பதும் பயணி என்பதும் அதில் திட்டமிடல் இருக்காது / சாப்பாட்டுப் பொட்டலங்கள் அடங்கிய குவியல் நம்மிடையே இருக்காது., தேர்ந்தெடுக்கப்பட்டு, அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட சிறு எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. அன்புத் தோழர் இஸ்மாயில் காக்கா ஒருமுறை தனது சக தோழரிடம் “வீட்டை நோக்கிய பயணம் ” என்ற போஸ்ட்டுக்கு “இலக்கு வைத்து பயணித்து அடைதலோ, திரும்புதலோ பயணமே அல்ல” என்பார். அதுபோலத்தான் பயணம் என்பதைப் பற்றி எஸ்ரா குறிப்பிடும்பொழுது
“பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு. பயணம் என்பது உலகை அறிந்து கொள்ளும், வழி சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி. பெரும்பான்மை சுற்றுலாக்கள் விடுமுறை கொண்டாட்டங்களே. பயணி ஒரு போதும் சுற்றுலா செல்ல விரும்புகின்றவனில்லை. அவன் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ, சுடச்சுட எழுதி, அச்சிட்டு இணையத்தில் ஏற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதையோ விரும்பாதவன். வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போலத் தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி.” என்று எழுதுகிறார்.
எஸ்ராவின் இப்பயணக் கட்டுரைகளில் இடம்பெறுபவை என்னவெனில் “ஏரி, கடல், ஓவியம், நூலகம், சிற்பங்கள், பண்டைகாலக் கல்வெட்டுகள், பனி விழும் பிரதேசம், ரயில் பயணம் போன்றவையே. தண்ணீர் குறித்த எஸ்ரா பார்வையும், எழுத்தும் அற்புதமானது. கனடாவின் ஏரிகளைப் பற்றி எஸ்ரா மிக அற்புதுமாக எழுதியிருக்கிறார். அவை உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏரிகளைப் பகலில் பார்ப்பதும் இரவில் பார்ப்பதும் எப்படி வேறு வேறு அனுபவங்களைத் தருமோ அதுபோலத்தான் நான்கு பருவங்களிலும் ஏரிகளைக் காண வேண்டும். அதுதான் ஏரிகளை முழுமையாகப் பார்த்ததாகச் சொல்ல முடியும் இல்லையேல் ஏரியை ஓரளவு பார்த்ததற்குச் சமம் என எஸ்ரா சொல்வார். எஸ்ராவின் இப்புத்தகத்தினைப் பெரும்பாலும் பயணங்களில்தான் வாசித்தேன். அன்பை மீட்டுகிற ஓர் பயணத்தில் கனடாவின் ஒன்டாரியா ஏரிகளைப் பற்றிப் படித்தேன். உலகின் மிக நீண்ட 1815 அடி உயரத்தில் உள்ள சிஎன் டவரிலிருந்து ஒன்டாரியா ஏரியை பார்ப்பது எவ்வளவு அலாதியானது என்பதை என்னால் உணர முடிகிறது. உயரம் என்கிற ஒன்று நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச் செல்கிறது. கிட்டதிட்ட பறவை அதீத உயரத்தில் அமர்ந்து கொண்டு பறத்தலுக்குத் தயாராகும் மனநிலையை அவை ஏற்படுத்தும்.
தண்ணீர் மீதான காதல் என்பது அலாதியானது. அது ஓடும் ஆறானாலும், கொட்டும் அருவியானாலும், அடித்து ஆடும் கடலானாலும் சரியே. அதில் ஓர் கிறக்கம் இருக்கிறது. நாம் வெறுமையை உணரத் துவங்கும்போது , அவமானங்களால் விக்கித்து நிற்கும்போது , தனிமை நம்மை விழுங்கத் துவங்கும்போது இப்பிரம்மாண்டமான நீருக்குள் நம்மைப் புதைத்துக் கொள்ள வேண்டும். அது நமது வெறுமையை , அவமானங்களை, தனிமையைக் கழுவி நம்மைச் சுத்தப்படுத்தும். எழுத்தாளர் பிரபஞ்சன் குளியலை பற்றி எழுதும்போது ” பூட்டப்பட்ட அறைகளில் , தண்ணீர் ஊற்றிக் கொள்வதற்குப் பெயர் குளியல் அல்ல அது உடலைக் கழுவி கொள்வது ” என்பார். அப்படியான குளியலைப் போன்று அல்ல ஏரிகளும், கடலும் , ஆறும் நமக்குத் தருவது. நீரின் ஆன்மாக்களோடு உரையாடுவதும் பதிலுக்கு நீர் நமது உடலை வருடுவதும் தான் குளியல்.
எஸ்ரா இப்புத்தகத்தில் இரண்டு இடங்களில் ஒரே போலச் செயல்படுவார். ஒன்று கனடாவின் சிம்கோ ஏரியின் முன்பு சிறிய கல்லை எறிந்துவிட்டு இந்தக் கல் தரையை வந்தடைய இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ, அத்தனை வருடம் என் நினைவுகள் இதில் இருக்கட்டும் என்று எழுதுவார். அதுபோலவே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பு தனது சட்டைப் பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து அருவியை நோக்கி வீசிவிட்டு
” என் கரம் தொட முடியாத அருவியை நாணயம் தொட்டு உணரட்டும். அருவியின் உள்ளே மனிதக்கரங்கள் தீண்ட முடியாமல் அந்த நாணயம் பயன்பாடு என்ற உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளட்டும். எனது வருகை அந்த நாணயத்தின் பெயரால் உறுதி செய்யப்படட்டும். அருவியைப் போல வாழ்க்கை எனக்குத் தீராச் சந்தோஷத்தை வாரி வழங்கட்டும் ” என நினைத்துக் கொண்டதாக எழுதுகிறார். எவ்வளவு அற்புதமான வரிகள் இவை. எழுத்தாளன் பிற மனிதனர்களின் ரசனைகளில் இருந்தும், சொற்களில் இருந்தும் வேறுபடும் இடம் இதுதான்.
கடலைப் பற்றி எஸ்ரா இரண்டு இடங்களில் எழுதுகிறார். ஒன்று தனுஷ்கொடி மற்றொன்று கொற்கை. இரண்டுமே தற்போது அழிவுச் சின்னங்களாகக் காட்சி தருகின்றன. தனுஷ்கொடியில் கட்டிடங்களைத் தவிர எந்த எச்சங்களும் இல்லை அதுபோலவே கொற்கையில் கடல்கூட இல்லாத நிலையில் பல கிலோமீட்டர்கள் பின்வாங்கிய கடலின் எச்சங்களைப் பற்றித் தகவல்களை எஸ்ரா தருகிறார். கடலுக்கு எப்போதுமே ஒரு வசீகரம் இருக்கிறது. சலிப்பற்ற , அலுப்பு தராத ஓர் காட்சிதான் கடல். கடலை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக நம்மால் காணமுடியும் . கும்மிருட்டில் சிறு பிறை வெளிச்சத்தில், நட்சத்திரங்கள் சூழ காத்திரமாக அடித்து அடித்து அடங்கும் அலைகளைக் கொண்ட கடலில் முன்பு நம்மை ஒப்புக் கொடுத்து தனிமையை, வெறுமையை அதனிடம் தந்துவிட வேண்டும். அது மனதினை மயிலிறகால் தீண்டும் ஓர் உன்னதத்தை நமக்குத் தரும். கடலின் பிரம்மாண்டம் மட்டுமே நமக்குத் தெரியும். அதன் அமைதியை சாந்தத்தை யார் அறிவார்..? அறியப் போகிறார். ? கடலிடம் சென்று வெறுமெனக் கால்களை நனைத்துக் கொண்டு ஜோடிகளாகப் படங்களின் பட்டியல்களை நிரப்புவதில் எனக்குத் துளியளவும் உடன்பாடில்லை. அதன் அருகே அமர்ந்து முடிந்தமட்டும் தின்று கழித்துப் பொழுதை பாழாக்குவது அருவருப்பான ஒன்று.
கடலைப் பற்றி மாலுமியின் குறிப்பொன்றை எஸ்ரா தருகிறார் ” கடலோடு பேசவும், கடலை நேசிக்கவும் தெரியாதவனைக் கடல் ஒருபோதும் தன்னுள் அனுமதிப்பதில்லை ” .ஒரு முறை ஒரே ஒருமுறை கடலின் முன் நின்று ஓர் கால் மணிநேரம் எதுவுமே பேசாமல் உங்களை நீங்களைக் கடலிடம் ஒப்புக்கொடுத்துவிடுங்கள். பேரமைதி உங்களைத் தழுவி கொள்ளும்.
அடுத்ததாகப் பின்னிரவைப் பற்றி எஸ்ரா எழுதுகிறார். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரமது. இரவும் மனிதர்களை மிக நேர்த்தியாக உறங்க வைக்கும் நேரமது. பின்னிரவு எப்படிபட்டது.? எல்லோரும் விழித்திருக்க நீங்கள் மட்டும் விழித்திருக்கிறீர்கள் எனும் போது யாரிடம் அதைச் சொல்லப் போகிறீர்கள்.? யாரைப் பற்றிய நினைவுகளை அந்தப் பின்னிரவுகளில் அசைபோட போகிறீர்கள்.? எஸ்ரா ஓர் இரயில் பயணத்தில் , ஓர் மலை நகரத்தில், ஓர் பனிப் பிரதேசத்தில் பின்னிரவைப் பற்றி மிக நுட்பமாக எழுதுகிறார். பின்னிரவின் இரயில் பயணத்தில் விழித்துக் கொண்டு காற்றோடு கதைக்கிறார். மலைப் பிரதேசத்துப் பின்னிரவில் தூரத்தில் மலை உச்சியில் எங்கோ வரையப்பட்ட ஓவியம் போலக் காட்சி தரும் ஒற்றை மரத்திடம் பேசுகிறார். பனி கொட்டும் பின்னிரவில் சூரியனை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.
நானும் நிறையப் பின்னிரவுகளில் விழித்திருந்திருக்கிறேன். ஓர் இரயில் பயணத்தில், ஓர் பதற்றமான கலவரச் சூழலில், மரணித்த சிறுவனின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னிரவு, அனாதையாய் தொழுகை விரிப்புகளில் கண்ணீர் சிந்தி கையேந்தி நிற்கும் பின்னிரவு எனப் பின்னிரவின் இரகசியம் எனக்குத் தெரியும். அது ஓர் சாந்தத்தை, என்ன வாழ்க்கை வாழுகிறாய் என்று ஓங்கி விடும் அறையை, பெரும் குற்ற உணர்ச்சியை, தாங்குவதற்குக் கரங்கலற்ற தருணத்தில் கண்ணீரை படைத்தவனிடம் ஒப்படைத்தலை என நிறையப் பின்னிரவுகள் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் அடிக்கடி ” இரவு என்பது வெறுமென உறங்குவதற்கானது மட்டுமல்ல. தலையணை தலைசாய்ப்பதற்கு மட்டுமானதல்ல என்பதைப் போல ” என்று எழுதி வைக்கிறேன்.
இந்த மொத்த புத்தகத்திலும் நான் மிக ரசித்த ஓர் பயணக் கட்டுரை ஒன்று இருக்கிறது அதுதான் “கூட்ஸ் பயணம் ” . நிறைய நேரம் இரயில் நிலையங்களில் இரயிலுக்காகக் காந்திருந்த போதெல்லாம் எனை கடந்து ஏராளமான கூட்ஸ் இரயில் போயிருக்கிறது. அதனைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் அலுப்பாக இருந்த போதிலும் கூட்ஸ் பெட்டியின் கடைசிப் பெட்டியில் திறந்த வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த இரயில்வே ஊழியரை விடாமல் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியான கட்டுரை தான் கூட்ஸ் பயணம்.
உடலை வருத்திக் கொள்ளாத உழைப்புகளிலெல்லாம், பெரும்பாலும் நேரத்தை எனதாக்கி புத்தகங்களை வாசிப்பதும், கதைகளைக் கேட்பதும் உண்டு. அலுப்பையும் , சலிப்பையும் தரும் கூட்ஸ் வண்டியில் எப்படி ஒரு ஊழியரால் நீண்ட தூரம் பயணிக்க முடிகிறது. எல்லா அதிவிரைவு வண்டிகளுக்கும் வழி விட்டு ஆமை நடைபோடும் கூட்ஸ் வண்டிகளில் அந்த ஊழியர் ஒற்றை மனிதராய் அப்படி என்ன பொழுதை கழிப்பார். எஸ்ராவிற்கு அந்தக் கூட்ஸில் பயணிக்க வேண்டுமெனவும் அதில் மார்கஸிம் கார்க்கியின் இரயில் கதைகளை வாசிக்க வேண்டுமெனத் தோன்றி அந்த ஊழியரின் அனுமதியோடு கூட்ஸில் பயணிக்கத் துவங்குகிறார். பயணத்தின் முடிவில் அலுப்பும், உடலை அப்பிக் கொள்ளும் அழுக்கும்,தூசியும், இரைச்சலும் தான் மிச்சமானது. அவரால் அந்தச் சூழலில் அப்புத்தகத்தை வாசிக்கவே முடியவில்லை. ஆனாலும் ” இன்றும் எங்காவது கூட்ஸ் ரயில் போவதைப் பார்க்கும்போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன. ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை.” என்று எஸ்ரா எழுதுகிறார்.
நான் வசிக்கும் பழங்குடி கிராமத்திற்கு அருகே 50 கிலோ மீட்டருக்குள்ளே தான் ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் தொடங்குகின்றன. கிட்டதட்ட இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளவர்களும் ஒரிய மொழியைப் பேசக்கூடியவர்களே. எஸ்ரா இப்பழங்குடியினர் குறித்துத் தனது பயணக் கட்டுரைகளில் எழுதுகிறார். அவர்களது வாழ்வியல், அவர்களது அன்றாட வாழ்க்கை, அவர்கள் ஒன்றுகூடும் வாரச் சந்தை என எஸ்ராவின் குறிப்புகளை நேரடியாகக் கண்டிருக்கிறேன். பழங்குடி மக்களைக் கவருவதற்கு ஒவ்வொரு வாரச் சந்தையிலும் நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகிறது. அது குறித்து எஸ்ரா சொல்லும்போது “நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லாப் பொருட்களும் டூப்ளிகேட், அதே நேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்தவை. தங்களின் உழைப்பால் உருவான அந்தப் பொருட்களை விற்று டூப்ளிகேட் பொருள்களைப் பழங்குடிகள் வாங்கிப்போகின்ற காட்சியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.மலிவான பிளாஸ்டிக் கலாச்சாரத்தைப் பழங்குடிவரை கொண்டு சேர்த்திருப்பது வருத்தமாக இருந்தது.” என்று எழுதுவார்.
ஒருமுறை வாரச் சந்தைக்காகச் சந்தை நடக்கும் பகுதிக்கு ஆடும் , கோழிகளும் ஏற்றப்பட்ட ஆட்டோவில் சென்றேன். சந்தையில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். சில பொருட்களை வாங்கியிருக்கிறேன். சிலவற்றை விற்றிருக்கிறேன். ஓர் பழங்குடிக் கிழவர் தான் வளர்த்த நாட்டுக் கோழிகளையும், சேவல்களையும் கால்களைக் கட்டி சந்தையில் கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தார். நாட்டுக் கோழிகளுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. சந்தை முடிகின்ற நேரம் அக்கிழவரை பார்த்தேன். ஓர் இறைச்சி கடையில் பிராய்லர் கோழி இறைச்சி 1/2 கிலோ , சில சாராயப் பொட்டலங்களை, காய்கறிகள், மளிகை பொருட்கள் எனத் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு தனது ஊரை நோக்கி புறம்படத் துவங்கினார். பிராய்லர் கோழிகள், மேகி நூடுல்ஸ்கள், தலைக்கு அடிக்கும் சாயங்கள், நச்சு மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்கள் என நகரத்து அரக்கர்களின் கரங்கள் எப்போதோ அவர்களை அரவணைக்கத் தொடங்கிவிட்டன.
பயணங்களைப் பற்றிய எழுத்துக்களை ஓர் பயணியால் தான் சொல்ல முடியும். ஓர் பயணியும், தேர்ந்த எழுத்தாளனுமாகிய எஸ்ராவின் எழுத்துப் பணிகள் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்கட்டுமாக என வாழ்த்துகிறேன். எஸ்ரா சமகால எழுத்துலகின் சிற்பி என்றால் அது மிகையல்ல.!
புத்தகம் : இலக்கற்ற பயணி
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 184 விலை :₹175
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
:
October 26, 2024
அண்டா ஹால்ட்
வங்காளத்தின் புகழ்பெற்ற ராமபத சௌதுரி எழுதிய பாரதநாடு என்ற சிறுகதை முக்கியமானது.
இந்தக் கதை வங்கச்சிறுகதைகள் தொகுப்பில் உள்ளது.
இதனை சொல்வனம் இணைய இதழில் மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள்.
••
பாரத நாடு
ராமபத சௌதுரி
தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி.

ராணுவக் குறியீட்டின்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்ஃபாரமும் இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டி பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது. அவ்வளவுதான். இரு திசைகளிலும் போகும் ரயில்களில் எதுவுமே நிற்பதில்லை. ஒரேயொரு ஸ்பெஷல் ரயில் மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும். என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டும்தான் முன்னதாகத் தெரியும். நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர்.
ரயில் நிற்பதில்லை, ஸ்டேஷனும் இல்லை. அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது. – ‘அண்டா ஹால்ட்.’ அண்டா என்றால் முட்டை. நாங்களும் அந்தப் பெயரைப் பயன்படுத்தத் துவங்கி விட்டோம்.
அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தில் நிறையக் கோழிகள் வளர்க்கப்பட்டன. மகதோக்கள் அங்கிருந்து வெகு தொலைவிலிருந்த புர்க்குண்டாவில் சனிக்கிழமைதோறும் கூடும் சந்தையில் கோழிகளையும் முட்டைகளையும் விற்கப் போவார்கள். சில சமயம் சந்தையில் கோழிச் சண்டையும் நடக்கும்.
ஆனால் BF332க்கு ‘அண்டா ஹால்ட்’ என்று பெயர் வர இது காரணமல்ல. எங்களுக்கு அந்த கிராமத்து முட்டைகள் மேல் எவ்வித ஆசையும் இல்லை.
ரயில்வே இலாகா ஒரு காண்ட்ராக்டருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அவனிடம் ஒரு டிராலி வண்டி இருந்தது. அவன் சிவப்புக் கொடி கட்டப்பட்ட அந்த ட்ராலியைத் தண்டவாளங்களின் மேல் தள்ளிக் கொண்டு வந்து அங்கு கூடை கூடையாக முட்டைகளை இறக்குவான். பிகாரி சமையல்காரன் பகோதிலால், அவற்றை இரவில் வேகவைப்பான். பிறகு வெந்த முட்டைகள் தோலுரிக்கப்படும் உரிக்கப்பட்ட முட்டைத் தோல் நாளடைவில் மலைபோல் குவிந்து விட்டது. இதனால்தான் அந்த இடத்துக்கு ‘அண்டா ஹால்ட்’ என்று பெயர் வந்தது.
ராணுவ மொழியில் வழங்கப்பட்ட BF332 -ல் உள்ள BF என்ற எழுத்துக்கள் breakfast (காலையுணவு) என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் என்று நினைக்கிறேன்.
அப்போது ராம்கட் என்ற ஊரில் போர்க்கைதிகளின் முகாம் ஒன்றிருந்தது. அங்கு இத்தாலியப் போர்க் கைதிகள் துப்பாக்கிகளாலும் முள்வேலிகளாலும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சில சமயம் அவர்கள் ஒரு ரயிலில் ஏற்றப்பட்டு வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் ஏன் எங்கு கொண்டு செல்லப் படுகிறார்களென்பது எங்களுக்குத் தெரியாது.
மறுநாள் காலையில் ரயில் வந்து நிற்கும் என்று எனக்குச் செய்தி வரும். முட்டைகளும் கூடவே வரும். நான் பகோதிலாலிடம் முட்டைகளைக் காட்டி , “முன்னூத்தி முப்பது காலைச் சாப்பாடு” என்று சொல்வேன்.
பகோதிலால் எண்ணி அறுநூற்றி அறுபது முட்டைகளுடன் உபரியாக இருபத்தைந்து முட்டைகள் எடுத்துக் கொள்வான். முட்டைகளில் சில அழுகிப் போயிருக்கலாம் என்பதால் உபரி முட்டைகள். பிறகு அவற்றை நன்றாக வேக வைப்பான். வெந்த முட்டைகளை மூன்று கூலிகலின் உதவியோடு தோலுரிப்பான்.
இந்த முட்டைத் தோல்கள்தான் முள்வேலிக்கு வெளியே மலையாகக் குவியும்.
காலையில் ரயில் வந்து நிற்கும். அதன் இரு திசைகளிலும் ராணுவச் சிப்பாய்கள் கீழே குதிப்பார்கள் காவலுக்காக.
பிறகு கோடுபோட்ட சிறையுடையணிந்த போர்க் கைதிகள் ரயிலிலிருந்து இறங்குவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெரிய குவளை, ஒரு பீங்கான் தட்டு.
மூன்று கூலிகளும் இரண்டு பெரிய ட்ரம்களைக் கவிழ்த்து அவற்றை மேஜை போலப் பயன்படுத்துவார்கள். போர்க்கைதிகள் வரிசையாக அந்த ட்ரம்களைக் கடந்து போவார்கள். ஒரு கூலி ஒவ்வொரு கைதியின் குவளையிலும் சுடச் சுடக் காப்பியை ஊற்றுவான். இன்னொரு கூலி ஒவ்வொரு கைதிக்கும் இரண்டு துண்டுகள் ரொட்டி கொடுப்பான். மூன்றாவது கூலி இரண்டிரண்டு முட்டைகல் கொடுப்பான். பிறகு கைதிகள் ரயிலில் ஏறிக் கொள்வார்கள். தோளில் அடையாளப் பட்டையும் காக்கிச் சீருடையும் அணிந்த கார்டு விசில் ஊதுவான். கொடி அசையும், ரயில் புறப்பட்டு விடும்.
மகதோக்கள் யாரும் அங்கு நெருங்குவதில்லை. அவர்கள் தூரத்திலுள்ள வயல்களில் மக்காச் சோளம் விதைத்தவாறே நிமிர்ந்து நின்று இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள்.
சில சமயம் ரயில் சென்ற பிறகு நாங்கள் முகாமைப் பகோதிலாலின் பொறுப்பில் இவ்ட்டு விட்டு மகதோக்களின் கிராமத்துக்குக் காய்கறிகள் வாங்கப் போவோம். மகதோக்கள் குன்றுச் சரிவில் கடுகு, கத்தரிக்காய் பீர்க்கங்காய், பயிரிடுவார்கள்.
திடீரென்று அண்டா ஹால்ட் எல்லா ரயில்களும் நிற்குமிடமாகி விட்டது. முள்வேலிக்கும் தண்டவாளத்துக்கும் இடையிலுள்ள நிலம் செப்பனிடப்பட்டு பிளாட்ஃபாரம் போல மேடாக்கப்பட்டது.
போர்க்கைதிகளை ஏற்றி வந்த ரயில்கள் மட்டுமன்றி ராணுவத்தை ஏற்றி வந்த விசேஷ ரயில்களும் அங்கே நிற்கத் தொடங்கின. அவற்றில் காபர்டின் பேண்ட் அணிந்து கொண்டு அதன் பின்பக்கப் பையில் பணப்பை வைத்திருந்த அமெரிக்கச் சிப்பாய்கள் வந்தார்கள். ராணுவப் போலிசார் கீழே இறங்கி இங்குமங்கும் நடப்பார்கள், வேடிக்கையாகப் பேசுவார்கள். போர்க்கைதிகளைப் போலவே ராணுவச் சிப்பாய்களும் வரிசையாக நின்று ரொட்டி, காப்பி, முட்டை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிக் கொள்வார்கள். காக்கியுடை அணிந்த ரயில் கார்ட் கொடியை அசைத்தவாறு விசில் ஊதுவான். நான் ராணுவ மேஜரிடம் ஓடிப்போய் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்குவேன்.
ரயில் போய்விடும். எங்கு என்று எங்களுக்குத் தெரியாது.
அன்றும் அமெரிக்கச் சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு ரயில் வந்து நின்றது. மூன்று கூலிகளும் சிப்பாய்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்கள். சிப்பாய்கள் “முட்டை அழுகல், ரொட்டித் துண்டு காய்ஞ்சு போச்சு,’ என்று சொல்லி அவற்றை எறிந்து விடாமலிருக்கிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான் பகோதிலால்.
அப்போது தற்செயலாக முள்வேலிப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
முல்வேலிக்குச் சற்று தூரத்தில் ஒரு மகதோச் சிறுவன் கண்களை அகல விரித்துக் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கோவணம் மட்டுமே அணிந்திருந்தான். அவனுடைய அரைஞாணில் ஒரு உலோகத் துண்டு கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் அவன் எருமைக்கன்று ஒன்றின்மேல் சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பையன் ஆச்சரியத்தோடு ரயிலையும், சிவந்த முகமுடைய அமெரிக்கச் சிப்பாய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சிப்பாய் அவனைப் பார்த்து ‘ஏய்!’ என்று பயமுறுத்தவும் அந்தப் பையன் அலறியடித்துக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினான். சில சிப்பாய்கள் இதைப் பார்த்து ‘ஹோ ஹோ’ வென்று சிரித்தார்கள்.
பையன் மறுபடி ஒரு நாளும் வரமாட்டான் என்று நான் நினைத்தேன்.
ஆனால் மறுதடவை ரயில் வந்து நின்ற போது அந்தப் பையன் முள்வேலிக்கு வெளியே நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவனோடு கூட அவனை விடச் சற்று பெரிய இன்னொரு பையன். பையனின் கழுத்தில் நூலில் கட்டப்பட்ட துத்தநாகத் தாயத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. புர்க்குண்டாச் சந்தையில் இத்தகைய தாயத்துகள் குவியல் குவியலாக விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இவை தவிர குங்குமம், மூங்கில் கழியில் தொங்கவிடப்பட்ட பல நிற நூல்கள், கண்ணாடி மணி, பாசி மணி மாலைகள் இன்னும் பல பொருட்களும் விற்கப்படும். சில சமயம் ஒரு நாடோடி வியாபாரி கழுத்தில் நிறையப் பாசி மணி மாலைகளைப் போட்டுக் கொண்டு முழங்கால் வரை தூசியுடன் மகதோக்களின் கிராமத்துக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன்.
இரு சிறுவர்களும் முள்வேலிக்கு மறுபுறம் நின்று கொண்டு வியப்போடு அமெரிக்க சிப்பாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முன்பு வந்திருந்த பையனின் கண்களில் பயம். சிப்பாய் யாராவது பயமுறுத்தினால் ஓடிப் போகத் தயாராயிருந்தான் அவன்.
நான் சப்ளை ஃபாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். வாய்ப்புக் கிடைக்கும்போது மேஜரைப் புகழ்ந்து காக்காய் பிடித்தேன். ஒரு சிப்பாய் ரயில் பெட்டியின் கதவருகில் நின்று காப்பியைக் குடித்தவாறே அந்தச் சிறுவர்கலைத் தன் பக்கத்திலிருந்த இன்னொரு சிப்பாய்க்குச் சுட்டிக்காட்டி, ‘அசிங்கம்!’ என்று சொன்னான்.
மகதோக்கள் அசிங்கம் என்று அதுவரை தோன்றியதில்லை. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். கவண் அல்லது அம்பெறிந்து புனுகுப் பூனை வேட்டையாடுகிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள், மது தயாரித்துக் குடிக்கிறார்கள், சில சமயம் வில்லின் நாண் போல நிமிர்ந்து கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள். கோவணமணிந்த, குச்சி போன்ற உடல் வாகு, கறுப்பு, சொர சொரப்பு-
அந்த சிப்பாய் ‘அசிங்கம்’ என்று சொல்லியது என்னை உறுத்தியது. அந்தப் பையன்கள் மேல் எனக்குக் கோபம் வந்தது.
சிப்பாய்களில் ஒருவன் ஒரு பாட்டி வரியொன்றை உரக்கப் பாடினான். சிலர் ‘ஹா ஹா’வென்று சிரித்தார்கள். ஒருவன் குவளையிலிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்து விட்டுக் கூலியைப் பார்த்துக் கண்ணடித்தான், குவளையை மறுபடி நிரப்பச் சொல்லி. இன்னும் எவ்வளவு நேரம் ரயில் நிற்க வேண்டுமென்று பார்க்க வந்த பஞ்சாபி ரயில் கார்டு மேஜருடன் மூக்கால் பேசினான்.
பிறகு விசில் ஊதியது. கொடியசைந்தது. எல்லாரும் சிவப்புப் பட்டையணிந்த ராணுவப் போலிஸ் உட்பட அவசர அவசரமாக ரயிலில் ஏறினார்கள்.
ரயில் சென்ற பிறகு மறுபடி பழையபடி வெறுமை. மணல் வெளியில் கள்ளிச் செடி வரிசை போல முள்வேலி.
சில நாட்களுக்குப் பிறகு இன்னொரு ரயில் வந்தது. இந்த தடவை அதில் வந்தவர்கல் போர்க்கைதிகள். அவர்கள் ராம்கட்டிலிருந்து வேறெங்கோ போய்க் கொண்டிருந்தார்கள். எங்கே என்று எங்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை.
அவர்கள் கோடுபோட்ட சிறையுடையை அணிந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை, அவர்களைச் சுற்றிலும் ரைஃபிள் ஏந்திய சிப்பாய்கள். எங்களுக்கும் கொஞ்சம் பயமாயிருக்கும். ஒரு போர்க்கைதி வேஷ்டி ஜிப்பா அணிந்து கொண்டு தப்ப முயன்றதாக நாங்கள் புர்க்குண்டாவில் கேள்விப்பட்டோம். நாங்கள் வங்காளிகளாதலால் மிகவும் பயப்பட்டோம்.
ரயில் சென்ற பிறகு நான் கவனித்தேன். முள்வேலிக்கு வெளியே அந்த இரண்டு பையன்களோடு, குட்டையான துணியணிந்து ஒரு பதினைந்து வயதுப் பெண்ணும் இரண்டு ஆண்களும் வயல் வேலையை விட்டு விட்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு சிரித்தார்கல். பிறகு அருவி நீரோடுவது போல கலகலவென்று பேசிக்கொண்டே கிராமத்தை நோக்கி நடந்தார்கள்.
ஒரு நாள் அமெரிக்க சிப்பாய்கள் பிரயாணம் செய்த ரயில் ஒன்று வருவதைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மகதோக்கள் சுமார் பத்துப் பேர் ஓடி வந்தார்கள். ரயில் ஜன்னல் வழியே காக்கியுடையைப் பார்த்ததுமே அவர்கள் ரயில் அங்கு நிற்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த வழியே தினம் ஒரிரு பிரயாணி ரயில்களும் சரக்கு ரயில்களும் போவது வழக்கம். அவை அந்த இடத்தில் நிற்பதுமில்லை, அவற்றைப் பார்த்து மகதோக்கள் ஓடி வருவதுமில்லை. எங்கள் முகாமில் காய்கறிகளும் மீனும் கொண்டு வந்து விற்க அனுப்பும்படி மகதோ கிராமத்துத் தலைவனிடம் ஒரு நாள் சொன்னேன்.
”வயல் வேலையை விட்டு வர முடியாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.
ஆனால் இப்போது மகதோக்கள் ஓடி வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது எனக்கு.
கருப்பு உடலில் கோவணம் மட்டும் அணிந்த ஆண்கள், அகலக் கட்டையான துணியுடுத்திய பெண்கள்; கிராமத்துச் சக்கிலியன் தைத்த முரட்டுச் செருப்புகள் காலில், அவர்கள் முள்வேலிக்கு வெளியே வரிசையாக நின்றார்கள்.
ரயில் வந்து நின்றது. அமெரிக்க சிப்பாய்கள் கைகளில் குவளைகளை எடுத்துக் கொண்டு திடுதிடுவென்று இறங்கினார்கள்.
அன்று அங்கே இருநூற்றுப் பதினெட்டுப் பேருக்குக் காலையுணவு தயாராகி இருந்தது.
அப்போது குளிர ஆரம்பித்து விட்டது. தொலைவில் குன்றின் மேல் பனிப்போர்வை. மரங்களும் செடிகொடிகளும் பனியால் கழுவப்பட்டுப் பச்சைப் பசேலென்று இருந்தன.
ஒரு சிப்பாய் தன் அமெரிக்கக் குரலில் இந்த இயற்கையழகை ரசித்தான்.
இன்னொருவர்ன் ரயிலுக்கு வெளியே நின்று கொண்டு முள்வேலிக்கு அப்பாலிருந்த வெட்டவெளியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் குவளையை ரயில் பெட்டியின் படியின்மேல் வைத்து விட்டுத் தன் பேண்ட் பைக்குள் கையை விட்டான். பையிலிருந்து ஒரு பளபளப்பான எட்டணா நானயத்தை எடுத்து மகதோக்கள் இருந்த திசையில் எறிந்தான்.
அந்தக் காசு முள்வேலிக்கு உட்புறத்தில் தார் போடப்பட்டிருந்த தரையில் விழுந்தது. மகதோக்கள் வியப்போடு அந்தச் சிப்பாயைப் பார்த்தார்கள். கீழே கிடக்கும் நாணயத்தைப் பார்த்தார்கள், பிறகு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ரயில் சென்றபிறகு அவர்களும் போகத் தொடங்கினார்கள். நான் அவர்களிடம், “தொரை ஒங்களுக்குப் பக்ஷீஸ் கொடுத்திருக்கார். எடுத்துக்கிட்டுப் போங்க” என்றேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். யாரும் வந்து காசைப் பொறுக்கிக் கொள்ள முன்வரவில்லை.
நானே காசை எடுத்து மகதோக் கிழவனிடம் கொடுத்தேன். அவன் ஒன்றும் புரியாமல் என் முகத்தைப் பார்த்தான். பிறகு அவர்கள் எல்லாரும் மௌனமாக அங்கிருந்து போய் விட்டார்கள்.
முட்டைகள் சப்ளை செய்த காண்டிராக்டரிடம் வேலை பார்ப்பவன் நான். எனக்கு இந்த வேலை சற்றும் பிடிக்கவில்லை. ஜனநடமாட்டமில்லாத இடம். பிரயாணி ரயில் எதுவும் நிற்பதில்லை. முகாமில் நானும் பகோதிலாலும் மூன்று கூலிகளுந்தான். வெறும் பொட்டல் வெளி, பகலில் சூனியமான வானம், என் மனதில் சலிப்பு. மகதோக்களும் எங்களை நெருங்குவதில்லை. நானே போய் அவர்களிடமிருந்து காய்கறிகள், மீன் வாங்கி வருவேன். அவர்கள் விற்க வருவதில்லை. ஆறு மைல் தூரம் நடந்து புர்க்குண்டாச் சந்தையில் விற்கச் செல்லுகிறார்கள்.
பிறகு சில நாட்களுக்கு சிப்பாய் ரயிலோ கைதி ரயிலோ வரவில்லை.
திடீரென்று ஒரு நாள் அரைஞாணில் இரும்புத்துண்டு கட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் என்னிடம் வந்து கேட்டான், “ ரயில் வராதா, பாபு?.”
”வரும், வரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
பையனைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கும் குட்டையான குன்றுகள், வறண்ட நிலம். கிராமவாசிகள் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்யும் பஸ் ஒன்றைப் பார்ப்பதற்குக் கூட வேலமரக் காட்டைக் கடந்து நான்கு மைல் போக வேண்டும். காலை வேளையில் ஒரு பக்கமும் மாலையில் எதிர்ப்பக்கமும் போகும். பிரயாணிகள் ரயில் தன் வேகத்தைக் கூடச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல் அந்த இடத்தைக் கடந்து விடும். அப்படியும் நாங்கள் ரயில் பெட்டிகளின் ஜன்னல் வழியே மங்கலாகத் தெரியும் மனித முகங்களைப் பார்க்கக் கூடாரத்திலிருந்து வெளியே ஓடி வருவோம். மனிதர்களைப் பார்க்காமல் எங்களுக்குச் சலிப்பாயிருக்கும்.
ஆகவே அமெரிக்கச் சிப்பாய்கள் வருகிறார்களென்ற செய்தி கேட்டால் கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டலும் கூடவே ஓர் ஆறுதலும் தோன்றும் எங்களுக்கு.
சில நாட்களுக்குப் பிறகு சிப்பாய் ரயில் வருவதாகச் செய்தி வந்தது. மறுநாள் ரயில் வந்தது. வழக்கம்போல சிப்பாய்கள் ரயிலிலிருந்து இறங்கி முட்டை, ரொட்டி, காப்பி எடுத்துக் கொண்டார்கள்.
திடீரென்று முள்வேலிக்கு வெளியே மகதோக்களின் கூட்டம். அவர்கள் இருபது பேர் இருக்கலாம். முப்பது பேர் இருக்கலாம். முழங்கால் உயரமுள்ள குழந்தைகளைச் சேர்த்தால் மொத்தம் எவ்வளவு பேர் என்று சொல்ல முடியாது. குட்டைத் துணியுடுத்திய பெண்களும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றார்கள் அங்கே.
அவர்களைப் பார்த்து எனக்கு ஓர் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. பகோதிலாலோ கூலிகளோ மகதோ கிராமத்துக்குப் போக விரும்பினால் எனக்குப் பயமாயிருக்கும்.
அங்கே பிளாட்பாரம் இல்லை. ரயிலில் ஏறி இறங்க வசதிக்காகப் பாதையோரம் தார் போட்டுச் சற்று மேடாக்கப்பட்டிருந்தது. அமெரிக்கச் சிப்பாய்கல் காப்பியை உறிஞ்சிக் குடித்தவாறு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மகதோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒரு சிப்பாய் பகோதிலாலை நெருங்கித் தன் பேண்ட் பையிலிருந்து பணப் பையை எடுத்தான். பிறகு அதிலிருந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்துப் பகோதிலாலிடம் “சில்லறை இருக்கா?” என்று கேட்டான்.
சிப்பாய்கள் பொதுவாகச் சில்லறை வைத்துக் கொள்வதில்லை. கடைக்காரனிடம் ஏதாவது சாமான் வாங்கினால் அல்லது டாக்சியோட்டிக்குப் பணம் கொடுப்பதானால் கரன்ஸி நோட்டைக் கொடுத்து விடுவார்கள். “பாக்கியை நீயே வச்சுக்க” என்று சொல்லிக் கொடுத்து விடுவார்கள். நான் இதை ராஞ்சியில் பலமுறை பார்த்திருக்கிறேன்.
பகோதிலால் சிப்பாய்க்கு ஓரணா, இரண்டனா, நாலணா சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது மகதோக்களின் கூட்டத்தில் இரும்புத்துண்டை அரைஞாணில் அணிந்திருந்த சிறுவன் சிரித்துக் கொண்டே கையை நீட்டி ஏதோ கேட்டான்.
பகோதிலாலிடமிருந்து சில்லறைகளை வாங்கிக் கொண்ட சிப்பாய் அவற்றை மகதோக்களிருந்த பக்கம் எறிந்தான். இதற்குள் நான் சப்ளை ஃபாரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். கார்டு விசில் ஊதி விட்டான். ரயில் ஓடத் தொடங்கியது.
நான் மகதோக்கள் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
அவர்கள் சற்று நேரம் மௌனமாகக் கீழே கிடந்த சில்லறைகளைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பிறகு திடீரென்று அரைஞாணில் இரும்புத் துண்டு கட்டியிருந்த சிறுவனும், துத்த நாகத் தாயத்து அணிந்த சிறுவனும் முள்வேலிக்குள் நுழைந்து வந்தார்கள்.
அப்போது முரட்டுச் செருப்பு அணிந்த மகதோக் கிழவன் “ஜாக்கிரதை!” என்று கத்தினான். அந்தச் சத்தத்தில் நான் கூடத் திடுக்கிட்டுப் போய் விட்டேன்.
ஆனால் இரு சிறுவர்களும் அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லாச் சில்லறைகளையும் பொறுக்கிக் கொண்டு தோலுரித்த பிஞ்சுச் சோளக் கொண்டை போலச் சிரித்தார்கள். மகதோ ஆண்களும் பெண்களும் கூடவே சிரித்தார்கள்.
மகதோக் கிழவன் கோபத்துடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே கிராமத்துக்குப் போனான். மற்ற மகதோக்கள் தமக்குள் கலகலவென்று பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.
அவர்கல் சென்றபின் அந்த இடத்தில் மறுபடி வெறுமை, நிசப்தம். சில சமயங்களில் எனக்கு மிகவும் அலுப்பு ஏற்படும். கொஞ்சமாகத் தண்ணீரோடும் அருவி, பசுமையான வயல்கள், அவற்றில் அங்கங்கே கோவணமணிந்த கருப்பு மனிதர்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சி.
அவ்வப்போது சிப்பாய் ரயில் வந்து நிற்கும். சிப்பாய்கள் காலையுணவு உண்டு விட்டுப் போவார்கள். மகதோக்கள் முள்வேலிக்கு வெளியே கூட்டமாக வந்து நிற்பார்கள்.
“தொரை, பக்ஷீஸ்! தொரை, பக்ஷீஸ்!”
ஒரே சமயத்தில் பல குரல்கள்.
மேஜரிடம் ஃபாரத்தில் கையெழுத்து வாங்க வந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல, சில இளைஞர்களும் கை நீட்டி பக்ஷீஸ் கேட்கிறார்கள். குட்டைத் துணியணிந்த வளர்ந்த பெண்ணும் கேட்கிறாள்.
முன்பொருநாள் நான் காய்கறி வாங்கக் கிராமத்துக்குப் போயிருந்த போது அவள்தான் “ரயில் எப்போ வரும்?” என்று என்னைக் கேட்டவள்.
தோளில் பட்டையணிந்த மூன்று நான்கு சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து கை நிறையச் சில்லறையை எடுத்து அவர்கள் பக்கம் எறிந்தார்கள். மகதோக்கள் ரயில் புறப்படும் வரை காத்திருக்காமல், ஒருவர் மேலொருவர் விழுந்து காசுகளைப் பொறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவசர அவசரமாக முள்வேலிக்குள் நுழைந்து வரும்போது சிலருக்கு உடம்பில் கீறல் காயம் ஏற்பட்டது. சிலருடைய கோவணங்கள் வேலியில் சிக்கிக் கொண்டன.
ரயில் சென்றபிறகு அவர்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். மகதோ கிராமத்தினரில் பாதிப்பேர் அங்கு வந்து விட்டதாகத் தோன்றியது. எல்லாருக்கும் கொஞ்சம் காசு கிடைத்து விட்டது. ஆகையால் அவர்கள் முகத்தில் சிரிப்பு. ஆனால் எவ்வளவு தேடியும் முரட்டுச் செருப்பணிந்த அந்த மகதோக் கிழவனை மட்டும் பார்க்க முடியவில்லை. அவன் வரவில்லை. முதல் தடவை அவன் அதட்டியும் சிறுவர்கள் பொறுக்கியெடுத்த காசுகளை எறியவில்லை என்று அவனுக்குக் கோபமாயிருக்கலாம்.
கிழவன் மட்டும் இப்போது தனியே வயலில் மண்ணை வெட்டிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு எனக்கு இதமாயிருந்தது.
முகாமில் இருந்த எங்கள் ஐந்து பேருக்கு எப்படியோ பொழுது கழிந்தது. இடையிடையே சிப்பாய் ரயில் வரும், நிற்கும், போகும். மகதோக்கள் முள்வேலிக்கு வெளியே கூட்டமாகக் கூடி ‘தொரை, பக்ஷீஸ்! தொரை, பக்ஷீஸ்!” என்று கத்துவார்கள்.
அப்போது சில நாட்கல் மகதோக் கிழவன் வயல் வேலையை விட்டு விட்டுக் கைகளிலிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு அங்கே வேகமாக வந்து எல்லாரையும் அதட்டுவான். ஆனால் யாரும் அவனைப் பொருட்படுத்துவதில்லை. அவன் பரிதாபமாக அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். ஆனால் யாரும் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.
சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து சில்லறையை எடுத்து எறிவார்கள். மகதோக்கள் ஒருவர் மேலொருவர் குப்புற விழுந்து காசுகளைப் பொறுக்குவார்கள். காசு ‘எனக்கு, ஒனக்கு’ என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். இதைப் பார்த்துச் சிப்பாய்கள் ‘ஹா ஹா’ வென்று சிரிப்பார்கள்.
இதன் பிறகு மகதோக் கிழவன் வருவதில்லை. மகதோக்களின் பிச்சைக்காரத்தனம் அவனுக்குப் பிடிப்பதில்லை, அதனால் அவன் அங்கு வருவதில்லை என்பதற்காக நான் கர்வப்பட்டேன். மகதோக்களின் நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களது இந்த நடத்தைக்காக நான் வெட்கப்பட்டேன். அவர்களுடைய வறுமை மிக்க தோற்றத்தைப் பார்த்துச் சிப்பாய்கள் அவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமளித்தது.
ஒருநாள் அவர்கள், “பக்ஷீஸ்! பக்ஷீஸ்!” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். ரயில் கார்டு ஜானகிநாத்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். ’கிறீச், கிறீச்’ என்று ஒலியெழுப்பிய பூட்ஸ் அணிந்து என் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி தொண்டையைக் காரிக் கொண்டு ‘பிச்சைக்காரப் பசங்க’ என்று சொன்னான்.
நானும் ஜானகிநாத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என் முகம் அவமானத்தால் கறுத்தது. என்னால் தலை நிமிர முடியவில்லை. உள்ளூர எரிச்சல் பட்டேன். கையாலாகாத எரிச்சல்.
“பிச்சைக்காரப் பசங்க! பிச்சைக்காரப் பசங்க!”
என் கோபமெல்லாம் மகதோக்கள் மேல் திரும்பியது. ரயில் போனதும் நான் பகோதிலாலைக் கூடிக் கொண்டு போய் அவர்களை விரட்டினேன். அவர்கள் பொறுக்கிக் கொண்ட காசுகளை மடியில் செருகிக் கொண்டு சிரித்தவாறே ஓடிப் போய் விட்டார்கள்.
எனினும் மகதோக்களால் எனக்கு ஏற்பட்ட அவமான உணர்வை ஓரளவு தணித்தது ஒரு கர்வம். மகதோக் கிழவனின் உருவத்தில் அந்த கர்வம் குன்று போல என் கண் முன்னால் உயர்ந்து நின்றது.
ஒரு செய்தி கேட்டு எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. காண்ட்ராக்டரைச் சந்திக்க புர்க்குண்டா போனபோது நான் கேட்ட செய்தி அது. அண்டா ஹால்ட்டை மூடி விடப் போகிறார்களாம்.
கூலிகளில் இருவர் இவ்வளவு காலமாக மேஜை போலப் பயன்பட்ட இரு ட்ரம்களையும் முள்வேலிக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கூலி எங்கள் கூடாரத்துக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தான். பகோதிலால், ”ஆட்டம் க்ளோஸ், ஆட்டம் க்ளோஸ்!” என்று சொல்லியவாறு ட்ரம்களை உதைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று இங்கு எழுந்த அரவத்தைக் கேட்டு மகதோக்கள் ஓடி வந்தார்கள்.
நாங்கல் அவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தோம். ஏனோ பகோதிலால் சிரித்தான்.
இதற்குள் முள்வேலிக்கு வெளியே கூட்டம் கூடி விட்டது.
திடீரென்று விசில் ஒலி. ரயில் வரும் அரவம். ஜன்னல்களில் காக்கியுடை.
எங்களுக்கு ஒரு புறம் எரிச்சல், ஒரு புறம் வியப்பு. ரயில் வரப்போகும் செய்தியை எங்களுக்கு அனுப்பப் புர்க்குண்டா ஆபீஸ் மறந்து விட்டதா! இந்த முகாமையே எடுத்து விடப் போவதாக நாங்கள் கேள்விப்பட்டது தவறா? ரயில் நெருங்க நெருங்க ஒரு விசித்திரமான சத்தம் பலமாகக் கேட்டது. சத்தம் அல்ல, பாட்டு. ரயில் மிக அருகில் வந்தபோது சிப்பாய்களெல்லாரும் ஒன்று சேர்ந்து உரக்கப் பாடுவது கேட்டது.
நான் ஒன்றும் புரியாமல் ஒரு புறம் ரயிலைப் பார்த்தேன். இன்னொரு புறம் திரும்பி முள்வேலியைப் பார்த்தேன். அந்த நிமிஷம் மகதோக் கிழவன் மேல் என் பார்வை விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு அவனும் “தொரை, பக்ஷீஸ்! தொரை, பக்ஷீஸ்!” என்று கத்திக் கொண்டிருந்தான்.
மகதோக் கிழவனும் மற்றவர்களும் பிச்சைக்காரர்கள் போல, பைத்தியம் பிடித்தவர்கள் போல கத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்று அந்த ரயில் இங்கு நிற்கவில்லை. மற்ற பிரயாணி ரயில்களைப் போல அதுவும் அண்டாஹால்ட்டைப் புறக்கணித்து விட்டுப் போய் விட்டது. ரயில் இனி நிற்காது என்று எங்களுக்குப் புரிந்தது.
ரயில் போய் விட்டது. ஆனால் இவ்வளவு காலமாக வயல்களில் விவசாயம் செய்து கொண்டிருந்த மகதோக்கள் எல்லாரும் பிச்சைக்காரர்களாகி விட்டார்கள்.
(பாரத் வர்ஷ ஏபங் அன்யான்ய கல்ப,’ 1969)
••
சாகித்ய அகாதமி விருது பெற்ற ராமபத சௌதுரியின் பல கதைகள் திரைப்படமாகியுள்ளன.
அவரைப் பற்றிய சாகித்ய அகாதமி தயாரித்த ஆவணப்படமிது
நன்றி
சொல்வனம்
October 25, 2024
அறியாத ரகசியம்
அப்துல் ரஹீம்
உங்களுடைய ஞாபகக் கல் என்ற சிறுகதையை படித்தேன். இந்தச் சிறுகதை பகலின் சிறகுகள் தொகுப்பில் உள்ளது.

அந்த அனுபவத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த அம்மா கல்லோடு உரையாடுவது. ஒரு மிகப்பெரிய அதிசயத்தை அவருடைய குடும்பம் சாதாரணமாகக் கையாள்வது . நான் ஒரு விஞ்ஞானி என்று சொன்னாலும் தத்துவத்தின் வழியே ஆன்மீகத்தின் வழியே அந்த அதிசயத்தை நிகழ்த்துவது. பகல் பொழுதுகளை அவள் கோர்க்கும் மலர்களாக உருவகிப்பதும் , ஆகாயம் போல ஆளுமை கொண்ட அவளைக் காலமும் சமூகமும் ஒரு வீட்டின் கூரையாக மாற்றுவதையும் நீங்கள் குறிப்பிட்டது அழகாக இருந்தது.
கதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கதையின் கடைசி வரி “அந்தப் பெயரை உலகம் அறியாமல் எனக்குள்ளாக வைத்துக் கொள்ளவேண்டும என்று ஏனோ தோன்றியது.”. அவளது மகன் அத்தனை தேடல்களுக்கும் உணர்வுப் பயணங்களுக்கும் பின் அடைந்த இந்த இடத்தைத் தான் அவனது அம்மாவும் அடைத்திருப்பாள் . கடைசிவரை பத்மலட்சுமி ஒரு அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியம் தான்.
இன்னும் என்னன்னவோ தோன்றுகிறது ஆனால் வார்த்தைப்படுத்த முடியவில்லை.நன்றி.
**
October 23, 2024
எடித் ஹாமில்டன்
அமெரிக்கன் கிளாசிசிஸ்ட்: தி லைஃப் அண்ட் லவ்ஸ் ஆஃப் எடித் ஹாமில்டன் என்ற புத்தகத்தை விக்டோரியா ஹவுஸ்மேன் எழுதியிருக்கிறார்.

இது எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹாமில்டனின் பால்ய நினைவுகள், அவரது பெற்றோர். வளர்ந்த சூழல் மற்றும் கிரேக்க இலக்கியங்கள், லத்தீன் மொழி மீது கொண்ட ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது

குடும்பச் சூழல் காரணமாகப் படித்து முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு குடிகாரர். தாயும் சகோதரியும் நோயாளிகள். ஆசிரியராகப் பணியைத் துவங்கி ஹாமில்டன் தனது அயராத உழைப்பால் தலைமை ஆசிரியராக உயர்வு பெற்றார். 25 ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்திருக்கிறார். அதன் பின்பு விருப்ப ஒய்வு பெற்றுக் கொண்டு தனக்கு விருப்பமான கிரேக்க இலக்கியங்களைத் தொன்மங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.
வாழ்க்கை எவ்வளவு கசப்பானதும் இனிமையானது என்பதைக் கிரேக்கர்கள் முழுமையாக அறிந்திருந்தனர். மகிழ்ச்சியும் துக்கமும் கிரேக்க இலக்கியத்தில் கைகோர்த்து நிற்கின்றன, ஆனால் அதில் எந்த முரண்பாடும் இல்லை. கிரேக்கர்கள் ஒரு போதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது என்கிறார் ஹாமில்டன்.
எடித் ஹாமில்டன் தனது அறுபத்தி இரண்டு வயதில் தான் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய எடித் கிரேக்க, ரோமானிய தொன்மங்கள். இலக்கியங்கள் குறித்து ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது மொழியாக்கத்தில் வெளியான கிரேக்க வரலாறு மற்றும் தொன்மங்கள் பற்றிய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.
கிரேக்கத் சிந்தனையாளர்கள் மற்றும் கடவுளரின் கதைகளை இவர் சமகால அமெரிக்க வாழ்க்கையோடு அரசியலோடு தொடர்பு படுத்தி விவாதித்தார். கிரேக்க இலக்கியங்களிடமிருந்து இன்றைய தலைமுறை என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார்.
சிறுவயதிலிருந்தே லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைப் படித்திருந்த ஹாமில்டன். தனது நூல்களுக்கான ஆய்வுகளுக்காக. ஹாமில்டன் நிறையப் பயணம் செய்திருக்கிறார்,
இவரது பங்களிப்பிற்காக ஏதென்ஸின் கௌரவக் குடிமகனாகக் கௌரவிக்கபட்டார்.
இவரது The Greek Way ல் பண்டைய கிரேக்கர்களிளை உலகின் முதல் நவீன குடிமக்களாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் உலகம் பற்றிய புரிதல்களை வியந்து எழுதியிருக்கிறார்.

கிரேக்க செவ்வியல் இலக்கியங்களை ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதை எடித் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதற்காகக் காரணங்களை அவர் தெளிவாகப் பட்டியலிடுகிறார்.
கிரேக்க கடவுள்கள் பற்றிய கதைகளை வெறும் தொன்மக்கதைகளாகப் பாராமல் சமகாலத்தில் நடப்பது போல அதிகாரத்திற்கு எதிரான செயல்கள் மற்றும் அடிபணிய மறுத்த நாயகர்களின் கதைகளாக அடையாளப்படுத்தினார். அதன் காரணமாகவே அமெரிக்காவில் பலராலும் விரும்பி வாசிக்கபட்டார்.
கிரேக்க சிந்தனையாளர்கள் மற்றும் செவ்வியல் எழுத்துகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஹாமில்டன் நல்ல துவக்கமாக இருப்பார் என்பதே நிஜம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
