S. Ramakrishnan's Blog, page 24
September 14, 2024
மலேசியப் பயணம்
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன்.
பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.

September 13, 2024
டெர்சுவின் பாதை.
அகிரா குரோசாவா இயக்கிய “டெர்சு உசாலா” திரைப்படத்தில் டெர்சுவாக நடித்திருப்பவர் சோவியத் யூனியனைச் சேர்ந்த நடிகர் மாக்சிம் முன்சுக். இவர் 1975 மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்

டெர்சு உசாலா குரோசாவாவின் 25 வது படம். ஜப்பானுக்கு வெளியே அவர் எடுத்த முதல் படம். விளாடிமிர் அர்செனியேவ் எழுதிய இந்த நாவலை ரஷ்யாவில் 1961ம் ஆண்டு இயக்குனர் அகாசி பாபயன் படமாக்ககியிருக்கிறார். ஆனாலும் குரோசாவா இதனைப் படமாக்க விரும்பினார். ரஷ்ய ஜப்பானிய கூட்டுறவில் இப்படம் உருவாக்கபட்டது.

மாக்சிம் முன்சுக் நடித்த “Disappearance of a witness” படத்தைப் பார்த்த அகிரா குரோசாவா, டெர்சு உசாலா கதாபாத்திரத்திற்கு முன்சுக்கை;த தேர்வு செய்தார். நாவலில் இருந்து படத்தின் திரைக்கதை பெரிதும் மாறுபட்டது. படம் கேப்டனின் நினைவுகளில் இருந்தே துவங்குகிறது.
அடையாளமற்றுப் போய்விட்ட புதைமேட்டினைத் தேடும் கேப்டனின் தூய அன்பின் வழியாகவே டெர்சு நினைவு கொள்ளப்படுகிறார்.

நாவலில் வரும் டெர்சுவிற்கு வயது நாற்பத்தைந்து, அவர் குள்ளமான உருவம் கொண்டிருக்கிறார், ஆனால் பரந்த மற்றும் தடித்த உடலமைப்பு, அகலமான மார்பு. வலுவான கைகால்கள். பழங்குடியினருக்கே உரித்தான முகம். சிறிய மூக்கு. துருத்திய கன்னத்து எலும்புகள். முகத்தில் ஆழமான வடுக்கள் மங்கோலியர்களுக்கே உரித்த சிறிய கண்கள். பெரிய பற்கள் செம்பட்டையான தாடி மற்றும் மீசை. அவரது கச்சையில் ஒரு வேட்டைக் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, தோற்றத்தில் அப்பாவியான வெளிப்பாடு இருந்தது என்கிறார் அர்செனியேவ்
படத்தில் நாம் காணும் டெர்சு இதே உருவத்துடன் இருக்கிறார். ஆனால் அவரது பேச்சும் நடையும் தனித்துவமாக உள்ளது. அவரது கண்களில் அச்சமின்மையும் தெளிவும் ஆழ்ந்த துயரும் வெளிப்படுகிறது. அதுவே நம்மைக் கவர்கிறது. படத்தில் டெர்சுவிற்கும் கேப்டனுக்குமான நட்பும் புரிதலும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

டெர்சு அறிமுகமாகும் காட்சியில் ராணுவ வீரர்கள் கரடி வரப்போகிறது என்றே காத்திருக்கிறார்கள். ஆனால் முதுகில் சுமையோடு டெர்சு அவர்களை நோக்கி வந்து சேருகிறார். அவர்களை அந்நியர்களாக நினைக்காமல் நீண்டகாலம் பழகியது போல எளிதாக அவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்கிறார். கேப்டனுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ராணுவ வீரர்கள் அவரை கேலி செய்கிறார்கள். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
நெருப்பின் அருகில் அமர்ந்தபடி தனது புகைக்குழாயை நிரப்பிப் புகைக்க ஆரம்பிக்கிறார். அத்தோடு தான் நாள் முழுவதும் சாப்பிடவில்லை. பசிக்கிறது என்றும் சொல்கிறார். அதை அவர் சொல்லும் விதம் இயல்பானது. இது ஒன்றும் தனக்கு புதிய விஷயமில்லை என்பது போலவே சொல்கிறார்.
அவருக்கு உணவு தருகிறார்கள். அவர் நாள் முழுவதும் பட்டினிகிடந்தவரின் ஆவேசமின்றி நிதானமாக உணவைச் சாப்பிடுகிறார். அந்தக் காட்சியிலே டெர்சுவின் ஆளுமை வெளிப்பட்டுவிடுகிறது.
கேப்டன் அர்செனியேவ் முதல்சந்திப்பிலே டெர்சுவைப் புரிந்து கொண்டுவிடுகிறான். அவர். அசாதாரணமானவர். எளிமையாகவும், அமைதியாகவும், அடக்கமாகவும், பேசுகிறார். தனது முழு வாழ்க்கையையும் தைகாவில் கழித்திருக்கிறார். நகரவாழ்வின் சுவடே இல்லாத மனிதர். வீடில்லாத அவர் காட்டிற்குள் சிறிய கூடாரம் அமைத்து தங்கிக் கொள்கிறார். ஒரு காலத்தில் அவருக்கு மனைவி பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பெரியம்மை நோயால் இறந்துவிட்டார்கள். வீடு தீக்கிரையாகிவிட்டது என்ற அவரது வாழ்க்கைக் கதையை முதற்சந்திப்பிலே தெரிந்து கொண்டுவிடுகிறான்.
டெர்சுவின் வாழ்க்கை கதை சின்னஞ்சிறியது. ஆனால் அவரது நினைவுகள் இதிகாசம் போன்று மிகப்பெரியது. இயற்கையைப் பற்றிய அவரது புரிதல் தெளிந்த ஞானமாக வெளிப்படுகிறது. அதன் அடையாளம் தான் புலியின் ஆவியைப் பற்றிச் சொல்வது ஒவ்வொரு இரவும் நெருப்பின் மூலம் அவர் தனது குடும்பத்தின் ஆவிகளுடன் தொடர்பு கொள்வது. காட்டிலுள்ள எல்லா உயிர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பது.
தனியே வாழும் டெர்சுவிற்கு அவரது வயது எவ்வளவு என்று கூடத் தெரியவில்லை. நீண்டகாலம் வாழ்ந்துவிட்டேன் என்றே சொல்கிறார். அந்த பதிலில் சலிப்பும் நிறைவும் வெளிப்படுகிறது. காட்டின் உருவம் போலவே டெர்சு சித்தரிக்கபடுகிறார்.
நீங்கள் வேட்டைக்காரனா எனக் கேட்கும் போது நான் எல்லா நேரமும் வேட்டையாடுவேன்; வேறு வேலையே கிடையாது. எனக்கு வேட்டையாட மட்டுமே தெரியும். என்கிறார் டெர்சு.
தங்களுக்கு வழிகாட்டியாக அவர் இருக்க முடியுமா எனக் கேப்டன் கேட்கிறார். டெர்சு அதற்குப் பதில் தருவதில்லை. மாறாக மறுநாள் வழிகாட்டத் துவங்கிவிடுகிறார். நேரடியான பதிலை விடவும் செயலே அவரது வழிமுறை.
நாவலில் டெர்சுவின் பழைய துப்பாக்கிக்கு பதிலாகப் புதிய துப்பாக்கி ஒன்றை தர முயலுகிறார் கேப்டன். அது தனது தந்தையின் துப்பாக்கி என்பதால் அதன் நினைவுகளுக்காகத் தான் வைத்திருக்க விரும்புவதாகப் புதிய துப்பாக்கியை மறுக்கிறார் டெர்சு.
டெர்சு உசாலா நாவலை தமிழில் அவைநாயகன் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல மொழியாக்கம். அரிய புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து மொழியாக்கம் செய்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது
நாவலில் இருந்து படத்தின் திரைக்கதையை உருவாக்கும் போது எவ்வளவு காட்சிகளைத் தேவையில்லை எனக் குரசோவா நீக்கியிருக்கிறார் என்பது திரைக்கதை எழுதும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

டெர்சு ராணுவ வீரர்களைக் கண்டு பயப்படுவதில்லை. அவர்கள் தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வீணடிக்கிறார்கள் என்று சொல்கிறார். படம் முழுவதும் பாதைகளைக் கண்டறிவதே அவரது வேலை. உன்னிப்பாக எதையும் பார்க்காமல் போனால் காட்டில் உயிர்வாழ முடியாது என்கிறார் டெர்சு
அவரும் கேப்டனும் தனிமைப்படுத்தப்பட்டு, பனிப்புயலால் உறைந்த ஏரியில் வழிதவறிப் போன நாளில் அந்தி மறைவதற்குள் ஒடியோடி வேலை செய்வதும் பனிப்புயலுக்குள் இரவைக் கழிப்பதும் மறக்க முடியாத காட்சி. அதுவும் வானில் மறையும் சிவப்பு கோளமான சூரியனும் அதே பிரேமில் பாதி வெளிப்பட்ட நிலவும் தெரிய அவர்கள் நிற்கும் காட்சி அபாரம்.
இயற்கையும் மனிதனும் இணைந்த அந்த உலகில் வன்முறையில்லை. குரூரங்கள் இல்லை. ,படம் அமைதியாகவும், அழகாகவும், தத்துவமாகவும், கலை ரீதியாகவும் உருவாக்கபட்டிருக்கிறது. கலையின் வழியாக மனித இதயத்தினை நோக்கிய தூய பாதை ஒன்றினை குரோசாவா உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.
தனிமையில், பழைய நினைவுகளின் துயரத்தில் வாழுகிறவனுக்கு நட்பு தான் ஒரே மீட்சி. புதிய வெளிச்சம். அந்தப் பாதையில் கேப்டனும் இணைந்து பயணிக்கும் போது டெர்சு புதிய உறவினை அடைகிறார். இரண்டு பறவைகள் ஒன்றிணைந்து பறப்பது போலவே அவர்கள் செயல்படுகிறார்கள்.
உலகசினிமா வரலாற்றில் டெர்சு உசாலாவிற்கு எப்போதும் தனியிடம் உண்டு. செவ்வியல் நாவல்களைப் போலத் திரையில் உருவாக்கபட்ட செவ்வியல் காவியம் என்றே இதனைக் கருதுகிறேன்.
••
மாக்சிம் முன்சுக் துவா குடியரசின் பிராந்திய நாடக அரங்கை நிறுவியவர்களில் முக்கியமானவர். அவர் ஒரு பாடகர், இசையமைப்பாளர். வேட்டைக்காரர். குதிரை மேய்ப்பவர், நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பவர், ராணுவ வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார்
துவாவிலுள்ள உர்கைலிக் என்ற சிறிய கிராமத்தில் முன்சுக் பிறந்தார். அவரது உண்மையான பிறந்த நாள் எதுவெனத் தெரியவில்லை. ஆகவே ஆண்டில் இரண்டு முறை அவர் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார். ஒன்று மே 2 மற்றொன்று செப்டம்பர் 15.
1927ல் முன்சுக் மக்கள் புரட்சிகர இராணுவத்தில் இணைந்து ஒரு பணியாற்றியிருக்கிறார். இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். அதுவே சினிமாவிற்குள் நுழைய வழிகாட்டியிருக்கிறது.
டெர்சு உசாலா படத்தின் படப்பிடிப்பு 1974 ஆம் ஆண்டு மே 28ல் தைகா வனப்பகுதியில் துவங்கியது. 1975 இல் ஜனவரி 14 நிறைவு பெற்றது. படப்பிடிப்பில் ஏராளமான பிரச்சனைகள், நெருக்கடிகள். புத்த துறவியைப் போல அமைதியாக, உறுதியாக செயல்பட்டு படத்தை முடித்திருக்கிறார் குரோசாவா.
படப்பிடிப்பு நாட்களில் அங்கே நடந்த அனைத்தையும் மனைவிக்கு எழுதிய கடிதம் மூலம் பதிவு செய்திருக்கிறார் முன்சுக்.
அவரும் குரோசாவும் ஒரே வயதுடையவர்கள். ஆகவே நண்பர்கள் போலப் பழகியிருக்கிறார்கள். ஆண்டுத் தோறும் முன்சுக்கிற்குப் புத்தாண்டு வாழ்த்து அட்டையைப் பரிசுடன் அனுப்பி வைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் குரோசாவா.
படப்பிடிப்புத் தளத்தில் அகிரா குரோசாவா எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருப்பார். ஆகவே அவரது கண்களை நேரடியாகப் பார்க்க முடியாது. ஒருமுறையாவது அந்தக் கண்களை நேரில் காண ஆசைப்பட்ட முன்சுக் அப்படி ஒரு தருணம் கிடைத்ததைப் பற்றிக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்
தைகாவில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்த காரணத்தால் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தாடியும் மீசையும் வளர்ந்து போனது. அகிரா குரோசாவா மொட்டை அடித்துக் கொள்ள விரும்பி நாவிதரை வரவழைத்திருந்தார். அப்போது அவரது கண்களைத் தான் நேரில் கண்டதாகவும் அன்பும் கருணை கொண்டதாக அந்தக் கண்கள் இருந்தன என்றும் முன்சுக் குறிப்பிடுகிறார்


விளாடிமிர் அர்செனியேவ் புத்தகத்தில் காணப்படும் உண்மையான டெர்சுவிற்கும் அதன் புதிய பதிப்பின் அட்டையில் இடம்பெற்றுள் முன்சுக்கிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை
டெர்சுவின் ஆன்மா இந்தப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று சொல்கிறார் முன்சுக்கின் மகள். அந்த நம்பிக்கை தைகா மக்களிடம் உண்டு. அதனால் தான் குரோசாவா இறந்து போன பிறகு முன்சுக் அவரது ஆவியுடன் தான் உரையாடுவதாகவும் இன்னொரு படம் சேர்ந்து வேலை செய்ய அவர் விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார் .
பனிபடர்ந்த ஏரியின் அழகை கேப்டனும் டெர்சுவும் அதிகாலை மென்னொளியில் நின்று பார்க்கும் காட்சி ஏதோ இரண்டு தேவதூதர்கள் பூமியின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது போல நினைக்க வைக்கிறது.
••
September 12, 2024
இன்மையின் உருவம்
Jean-Baptiste-Siméon Chardin. வரைந்த Soap Bubbles ஓவியத்தில் முதலில் நம்மைக் கவர்வது சோப்புக் குமிழே. மிக அழகாக அக் குமிழ் வரையப்பட்டிருக்கிறது. சோப்புக்குமிழின் வசீகரம் அது உருவாகும் நிறஜாலம். எடையற்றுப் பறக்கும் விதம். கண்ணாடி போன்ற மினுமினுப்பு.

இந்த ஓவியத்தில் சோப்புக் குமிழை ஊதுகிறவன் பதின்வயது பையன். அவனருகே ஒரு கண்ணாடி டம்ளரில் சோப்புத் தண்ணீர் காணப்படுகிறது. அவன் சோப்புத்தண்ணீரை ஊதி ஒரு குமிழியை உருவாக்குகிறான், குமிழி இன்னும் தனித்துப் பறக்கவில்லை. அது ஊது குழலின் முனையில் கோளம் போல உருக்கொண்டிருக்கிறது.

அவன் பின்னாலிருந்து ஒரு சிறுவன் எக்கி நின்று பார்க்கிறான். அச்சிறுவனின் கண்களில் வெளிப்படும் ஆசை. அவனது தொப்பி மற்றும் சோப்பு நுரையை ஊதுகிறவனின் சிகை அலங்காரம். மற்றும் கிழிந்த உடை. படர்ந்திருக்கும் இலைகளின் அழகு. என அந்தக் காட்சி நம்மைப் பால்யத்தின் சறுக்கு பலகையில் சறுக்கிக் கொண்டு போகச் செய்கிறது . செவ்வக கற்சன்னலில் அந்தப் பையன் கையூன்றி நிற்கும்விதம் ஒரு முக்கோணம் போலக் காட்சியளிக்கிறது. இந்த ஓவியம் நிலையற்றவையின் அழகினைப் பேசுகிறது
பதினெட்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சார்டினின் இந்த ஓவியம் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் கைப்பற்றப்பட்டது. உலகப்போரின் பின்பு இதனை மீட்டிருக்கிறார்கள்.

டச்சு ஓவியங்களில் சோப்புக்குமிழ் ஊதுவது முக்கியமான கருப்பொருளாக விளங்கியது. இந்தக் காட்சியை நிறைய டச்சு ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டு பார்வையாளர்களுக்கு, சோப்புக் குமிழ்கள் என்பது இன்பத்தின் நிலையற்ற தன்மையை அடையாளப்படுத்தியிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டின் டச்சுக் கலாச்சாரத்தில் சோப்பு நுரையை ஊதி விளையாடுவது, குழந்தைகளின் முக்கிய விளையாட்டாக இருந்தது
1574 ஆம் ஆண்டில், டச்சு ஓவியர் கார்னெலிஸ் கெட்டெல், ஒரு மேகமூட்டமான வானத்திற்கு எதிராகப் புல் படுக்கையில் படுத்தபடி ஒருவன் சோப்புக், குமிழிகளை ஊதுவதை வரைந்திருக்கிறார்.

கரேல் டுஜார்டின் 1663 ஆம் ஆண்டு வரைந்த ஓவியத்தில் ஒரு சிறுவன் தான் உருவாக்கிய குமிழிகளை மகிழ்ச்சியோடு ரசிக்கிறான்.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க எழுத்தாளர் சமோசாட்டாவின் லூசியன் பார்வையில் மனிதனே ஒரு குமிழி தான்.
மனித வாழ்வின் பலவீனம் மற்றும் நிலையற்ற தன்மையின் அடையாளமே சோப்புக்குமிழி. இந்தக் குமிழி உடனடியாக உடைந்து மறைந்துவிடும். மனிதனின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்கிறார் லூசியன்.
ஒரு சோப்புக் குமிழியை உருவாக்கி அதைக் ஆழ்ந்து கவனியுங்கள்; நீங்கள் ஒரு முழு வாழ்க்கையையும் அதற்காகவே செலவிடலாம், என்கிறார் கணிதவியலாளர் வில்லியம் தாம்சன்
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், விஞ்ஞானிகள் சோப்புக் குமிழிகள் பற்றிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். அறிவியல்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டார்கள்.
ஒரு குமிழியை இரண்டாக வெட்டுவது, இரண்டு குமிழிகளை ஒன்றாக்குவது, புகை நிரம்பிய ஒரு குமிழியுடன் பறப்பது போன்ற வேடிக்கை நிகழ்ச்சிகள் ஐரோப்பாவின் பல நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன.

சார்டின் ஓவியத்தில் காணப்படும் பழுப்பு நிறம் மற்றும் பதின்வயது பையனின் முகத்தில் வெளிப்படும் தீவிரம். அவனை நம்பாமல் எக்கி நின்று பார்க்கும் சிறுவனின் ஏக்கம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது,
குமிழியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவன், குமிழியின் அளவே இருக்கிறான்
பால்யம் என்பதும் இது போன்ற சோப்புக்குமிழ்களின் உலகமே. அது தானே உருக்கொண்டு இலக்கின்றி மிதந்து, பின்பு உடைந்தும் போய்விடுகிறது.

ஓவியத்தில் குமிழியை ஊதுகிறவனின் சட்டையில் கிழிந்துள்ள பகுதி வழியாக உள்ளே அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை வெளிப்படுகிறது. அந்தப் பையன் தலையில் கருப்பு, ரிப்பன் கட்டியிருக்கிறான். அவனது நெற்றியில் மிகவும் அடர்த்தியாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. சோப்பு குமிழியின் மீது ஒளியின் நுட்பமான பிரதிபலிப்புகளைக் காணலாம்.
சார்டின் குழந்தைகள் விளையாடுவதை அதிகம் வரைந்திருக்கிறார். அந்த வரிசையில் தான் இதனையும் சேர்க்கிறார்கள்.
நாம் சோப்புக் குமிழியை ஊதாத போதும் அக்குமிழி நம்மை நோக்கிப் பறந்து வருவதையோ, கைகளில் படுவதையோ விரும்புகிறோம். நீர்க்குமிழி கையில் படும் போது விநோதமான தொடுதலை உணருகிறோம். எப்போதெல்லாம் குமிழியால் தொடப்படுகிறோமோ அப்போதெல்லாம் நாம் சிறுவனாகி விடுகிறோம். இன்மையின் உருவம் தான் குமிழியா.
நான், எனது என்பதும் இது போலக் குமிழி தானா. உண்மையில் நமது வாழ்க்கை எனும் குமிழியை நாம் உருவாக்குகிறோம். மிதக்கவிடுகிறோம்
குமிழி உடையும் போது சிறார்கள் வருந்துவதில்லை. அதுவும் விளையாட்டின் பகுதியே. ஆனால் பெரியவர்களாகிய நாம் அன்றாட வாழ்க்கையில் துன்பங்களின் குமிழியை உருவாக்குகிறோம். அது வெடிக்கும் போது வருந்துகிறோம்.
The earth hath bubbles as the water has என்று மெக்பெத் நாடகத்தில் மூன்று சூனியக்காரிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.
நீர் குமிழியைப் போலப் பூமியின் குமிழி என்பது எவ்வளவு அழகான கற்பனை.
சோப்புக் குமிழ்களை அப்பாவித்தனம், லேசான தன்மை மற்றும் சுதந்திரத்துடன் ஜென் தொடர்புபடுத்துகிறது. சார்டின் ஓவியத்தைக் காணும் போது நாமும் அதனையே உணருகிறோம்
••
Indian Literature இதழில்
எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு செப்டம்பர் மாத Indian Literature இதழில் வெளியாகியுள்ளது.
இக்கதையை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.


September 11, 2024
மதுரை வருகை
செப்டம்பர் 13 மற்றும் 14 நாட்களில் மதுரை வருவதாகத் திட்டமிட்டிருந்தேன்.
முக்கியப்பணி ஒன்றின் காரணமாக சென்னையில் இருக்க வேண்டியதால் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை.
அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புத்தகத் திருவிழாவில் பேசுகிறேன்.
September 10, 2024
பேனா மருத்துவமனை
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்

முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர்.
உடைந்த நிப்கள், மைக்கசிவு மற்றும் பேனா பிஸ்டன்களைச் சரி செய்து தருவதே இவர்களின் முக்கிய வேலை. மான்ட்பிளாங்க் போன்ற உலகளாவிய பேனா நிறுவனங்களின் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பினையும் செய்து தருகிறார்கள்.
நோயாளியைப் பரிசோதனை செய்வது போலவே பேனாவைப் பூதக்கண்ணாடி மூலம் பரிசோதனை செய்து தேவையான பாகங்களை மாற்றிச் சரி செய்கிறோம் என்கிறார் இம்தியாஸ்.
இந்தப் பேனா மருத்துவமனையில் இயக்குநர் சத்யஜித் ரே தனது பேனாவைச் சரி செய்து வாங்கியிருக்கிறார். வங்காள எழுத்தாளர்கள் பலரும் இக்கடையின் வாடிக்கையாளர்களே.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் நிப்பு தயாரிக்கும் தொழிலில் புகழ்பெற்றது. பிரபல நிறுவனங்களுக்கான பேனா நிப்புகள் சாத்தூரில் தான் செய்யப்படுகின்றன. அவற்றை நேரில் கண்டிருக்கிறேன். குடிசைத் தொழில் போல சிறிய இயந்திரங்களைக் கொண்டு நிப்பு தயாரிப்பது நடக்கிறது.
காந்தி தனது வாழ்நாளில் 31,000 கடிதங்களை எழுதியிருக்கிறார் என்கிறார்கள். அவ்வளவும் மைப்பேனாவில் எழுதப்பட்டதே. ஆனாலும் மைப்பேனாவின் விலை அதிகம் என்பதால் அதைச் சாமானிய மக்கள் பயன்படுத்த இயலாது என்பதைக் காந்தி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்.
காந்தியின் ஆலோசனைப்படி கையால் தயாரிக்கப்படும் சுதேசிப் பேனாக்களை ஆந்திராவின் ராஜமுந்திரியில் கோசூரி வெங்கட் ரத்னம் துவங்கினார் 1932 இல் ஆரம்பிக்கப்பட்ட ரத்னம் பென் ஒர்க்ஸ் இந்திய அளவில் புகழ்பெற்றது. காந்தி அவர்களைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இன்றும் அவர்கள் கையால் பேனா தயாரிப்பதைத் தொடருகிறார்கள். அதுவும் தங்கப்பேனா வரை தயாரிக்கிறார்கள்.

பேனா விற்பனை செய்பவர்களை, பேனா தயாரிப்பவர்களைப் பற்றி ஏதேனும் சிறுகதை தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா என யோசித்துப் பார்த்தேன். நினைவில் வரவில்லை.
பிபேக் டெப்ராய் மற்றும் சோவன் ராய் எழுதிய Inked in India: Fountain Pens and a Story of Make and Unmake புத்தகத்தில் மைப்பேனாவின் வரலாறு மற்றும் காந்தி பயன்படுத்தி மைப்பேனா, தொட்டு எழுதும் நாணல் பேனா பற்றிய காந்தியின் கடிதங்கள். சுதேசி பேனா உருவாக்கம் பற்றிய அவரது ஆலோசனைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்

1900 களின் முற்பகுதியில், வங்காள மருத்துவர் ஒருவர் தான் காசியில் இந்திய மைப் பேனாவை உருவாக்கினார் என்கிறது இந்தப் புத்தகம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனாக்கள் இந்தியச் சந்தையில் செலுத்திய ஆதிக்கம், இந்தியாவில் மை தயாரிக்கப்பட்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்
ஒவ்வொரு பேனா வாங்கியதற்கு பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. பரிட்சை எழுதக் கொண்டு சென்ற பேனா, தொலைத்த பேனா, கடன்வாங்கிய பேனா, முதல்கதை எழுதிய பேனா, சம்பளம் வாங்க கையெழுத்திட்ட பேனா, பரிசாகப் பெற்ற பேனா என பேனாவின் பின்னால் உள்ள கதைகள் ஏராளம். இது எனக்கு மட்டுமானதில்லை. என் தலைமுறையின் பலருக்கும் மைப்பேனா நினைவுகள் நிறையவே இருக்கும் . மைக்கறை படிந்த விரலை மறக்க முடியுமா என்ன.
September 9, 2024
காதலின் இருநிலைகள்
பிரெஞ்சு ஓவியர் ஹென்றி ஷெல்சிங்கரின் Girl with dead bird ஓவியத்தில் ஒரு இளம்பெண் தனது மடியில் இறந்து போன பறவை ஒன்றை வைத்திருக்கிறாள். சோகமான அவளது முகம். பிரார்த்தனை செய்வது போலக் கைவிரல்களைக் கோர்த்துள்ள விதம். உதிர்ந்த இலை ஒன்றைப் போல மடியில் கிடக்கும் பறவை. அதுவும் தலைகீழாக உள்ள அதன் தோற்றம். பெண்ணின் சாய்ந்த கழுத்து. பறவையை நோக்கும் கண்கள். சிறிய பறவைக்கூண்டு ஒன்றும் ஓவியத்தில் காணப்படுகிறது

இறந்த பறவை என்பது காதலின் பிரிவைத்தான் குறிக்கிறதா. இல்லை மரணத்தின் முன்பு செய்வதறியாத அவளது உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறதா

ஹென்றி-குயாம் ஷெல்சிங்கரை (Henry Guillaume Schlesinger) ஓவிய உலகின் கவிஞன் என்கிறார்கள். அது பொருத்தமான புகழுரை என்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. கவிதையைப் போல இந்த ஓவியமும் ஒரு காட்சியை மட்டுமே முன்வைக்கிறது. உணர்ச்சிகளைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது. அந்த மௌனத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எளிய தினசரிக் காட்சி போலத் தோற்றம் தந்தாலும் இது அரியதொரு நிகழ்வின் அடையாளமே. இறந்த பறவை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டிருப்பது அவளது பரிவுணர்வின் வெளிப்பாடு தானா. வலி மிகவும் ஆழமானது என்பதைத் தான் இந்த ஓவியம் புரிய வைக்கிறதா.
சாலையில் இறந்துகிடக்கும் காகங்களைக் காணும் போது இந்தப் பெண்ணின் உணர்வை நானும் அடைந்திருக்கிறேன். சாலையில் கிடக்கும் போது இறந்த பறவையின் உடல் விநோதமான பொருளாக மாறிவிடுகிறது. இறந்த பறவை எப்போதும் எதையோ நினைவுபடுத்துகிறது. நிமிஷ நேரம் நம்மைக் குற்றவுணர்வு கொள்ளவும் வைக்கிறது.
பறவைகளைச் சுதந்திரத்தின், காதலின் அடையாளமாகக் கருதுவது மனிதர்கள் தான், பறவைகளின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை. பசியும் தீராத அலைதலும் கொண்டது. பறவையின் பாடலும் பறத்தலும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை, விடுதலை உணர்வை பறவைக்கும் அளிக்குமா என்று தெரியவில்லை.

இந்த ஓவியத்தைப் புரிந்து கொள்வதற்கு இன்னொரு ஓவியத்தின் துணை தேவைப்படுகிறது. அதுவும் ஹென்றி குயாம் ஷெல்சிங்கர் வரைந்ததே. அந்த ஓவியத்தில் ஒரு இளம் பெண். காதல்பறவைகளுடன் இருக்கிறாள்
அவளது விரலில் பறவை அமர்ந்துள்ள விதம். அதன் ஜோடியின் சிறகடிப்பு. விளையாட்டுக்காட்ட முனைவது போன்ற அவளது விரலசைவு. சாய்ந்த வசீகரமான கழுத்து. அழகான உடை. சிகை அலங்காரம். அவள் அமர்ந்துள்ள நாற்காலியின் அழகிய கைப்பிடி. காதல் தரும் மகிழ்ச்சியை இந்த ஓவியம் பிரதிபலிக்கிறது என்றால் காதலின் பிரிவு தரும் துயரை இறந்தபறவையை ஏந்திய பெண்ணின் ஓவியம் சித்தரிக்கிறது.
பிரஷியாவில் பிறந்த ஹென்றி குயாம் ஷெல்சிங்கர் வியன்னாவின் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் படித்தவர், பின்னர்ப் பாரிஸில் தனது கலைக் கல்வியைத் தொடர்ந்திருக்கிறார்.. 1870 இல் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்று அங்கேயே தனது கலைப்பணியை ஆற்றியிருக்கிறார்.
சுல்தான் மஹ்மூத் II ஆட்சியின் போது இஸ்தான்புல்லிற்கு அழைக்கபட்ட ஹென்றி அஙகே சுல்தானின் குதிரையேற்ற ஓவியம் உட்படப் பல்வேறு சுய உருவப்படங்களை வரைந்து கொடுத்திருக்கிறார். அவை இன்று இஸ்தான்புல்லிலுள்ள டோப்காபி அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன

பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல், உள்ளிட்ட ஐந்து உணர்புலன்களை ஐந்து ஓவியங்களாக வரைந்திருக்கிறார். “தி ஃபைவ் சென்ஸ்” என்ற அவரது ஓவியம் 1865 ஆம் ஆண்டுச் சலோனில் பேரரசி யூஜெனியால் வாங்கப்பட்டிருக்கிறது
இளம் பெண்களின் உணர்ச்சிகரமான சித்தரிப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டவர் ஹென்றி. ஆகவே இந்த வரிசையின் தொடர்ச்சி போலவே மகிழ்ச்சி. துயரம் எனப் பறவை ஒவியங்களை வரைந்திருக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது.
இதே கருப்பொருளை கொண்ட இன்னொரு ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். அது 1766 ல் Jean-Baptiste Greuze வரைந்த Young Girl Crying Over Her Dead Bird என்ற ஓவியம். இறந்த பறவையை நினைத்து அழும் இளம்பெண் ஓவியம் , ஹென்றி ஷெல்சிங்கருக்கு உத்வேகம் அளித்திருக்ககூடும்.

இரண்டு ஓவியங்களிலும் பறவை தலைகீழாகவே உள்ளது. Jean-Baptiste Greuze வரைந்துள்ள பெண் ஒரு கையால் முகத்தை மூடி தனது சோகத்தையும் ஏக்கத்தையும் நேரடியாக வெளிப்படுத்துகிறாள். துயருற்ற நிலையிலும் அவள் பார்வையாளரைக் கவர்ந்திழுக்கின்றன. அந்த முகபாவனையின் பின்னணியில் உள்ள ரகசியத்தை நாம் அறிய விரும்புகிறோம்.
பெண்ணின் முகத்தைச் சுற்றியுள்ள ஒளி சோகத்துடன் வெளிப்படுகிறது பெண் வெள்ளை உடை அணிந்துள்ளார். நீலப் பூக்களால் சூழப்பட்டதாக இறந்த பறவை காணப்படுகிறது. இந்த ஓவியத்தினை இளம்பெண்ணின் கைவிடப்பட்ட, இழந்த நம்பிக்கைகளின் அடையாளமாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சோகத்தின் உண்மையான அர்த்தம் என்ன, அவள் ஒரு பறவையின் இறப்பிற்காகத் தான் வருந்துகிறாளா. அல்லது பறவை என்பது அவளது மகிழ்ச்சியான காதலின், கடந்த காலத்தின். அப்பாவித்தனத்தின் அடையாளமா,
அவள் நேரடியாக அழவில்லை, ஆனால் ஆழமாகக் காயமடைந்திருக்கிறாள்.
பறவையின் மரணம் அவளுக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்திருக்கிறது. நேசத்திற்குரியவற்றை நாம் இழக்கும் போது என்னவாகிறோம் என பார்வையாளனை யோசிக்க வைக்கிறது.
நம்மால் சரிசெய்ய முடியாத நிகழ்வுகளின் போது நாம் செயலற்றுவிடுகிறோம். மகிழ்ச்சியாகப் பறவையைக் கையில் ஏந்திய பெண்ணும் கைகளைப் பிணைத்துக் கொண்ட பெண்ணும் இருவேறு உணர்ச்சிநிலைகளின் அடையாளங்கள் தான். தோற்றம் வேறாக இருந்தாலும் அவர்கள் காதலின் இருநிலைகளைத் தான் வெளிப்படுத்துகிறார்கள்
உயிருள்ள பறவை மட்டுமே பாடுகிறது என மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இறந்த பறவையும் பாடுகிறது. அந்தப் பாடலைக் கவிஞர்கள் மட்டுமே கேட்கிறார்கள் என்றொரு கவிதையை அஞ்சன்தேவ் ராய் எழுதியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையே
நாம் இந்த ஓவியத்தில் இறந்த பறவையின் பாடலையே கேட்கிறோம். ஹென்றி ஷெல்சிங்கர் அதையே வரைந்திருக்கிறார்.
••
September 6, 2024
போர்ஹெஸின் சித்திரக்கதை
போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது.


போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி டெல்லி, மும்பை என அலைய வேண்டியிருந்தது. அன்று மிகவும் குறைவான புத்தகங்களே கிடைத்தன. இன்று போர்ஹெஸ் பற்றி என்னிடமே இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவரது கவிதைகள். கட்டுரைகள். சிறுகதைகள் என மூன்று மொத்த தொகுப்புகளும் இருக்கின்றன. கவிதை குறித்த அவரது உரையின் ஆடியோ, மற்றும் அவர் பற்றிய காணொளியும் கூட வைத்திருக்கிறேன். போர்ஹெஸின் படைப்புகளுக்கு ஒரு அகராதியும் வெளியாகியுள்ளது.
போர்ஹெஸை முக்கியக் கதாபாத்திமாக்கி தண்ணீரின் திறவுகோல் என்ற சிறுகதையை எழுதியிருக்கிறேன். காலச்சுவடு இதழில் வெளியானது.
போர்ஹெஸ் தமிழில் கொண்டாடப்பட்ட அளவிற்கு இந்தியாவின் வேறுஎந்த மொழியிலும் கொண்டாடப்படவில்லை.
September 5, 2024
மதுரைப் புத்தகத் திருவிழா
மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது
இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155.
எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்

செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன்.
விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

September 4, 2024
அரவான் நாடகம்
எனது அரவான் நாடகத்தை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் தீபக் குமார். இளம் நாடக நடிகரான இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
டிசம்பரில் மும்பையில் நடைபெறவுள்ள நாடகவிழாவில் இதனை நிகழ்த்த இருக்கிறார்.

அரவான் நாடகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை ஒரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கிறார்கள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
