ஸ்தானிஸ்லாவ் திகாத்

போலந்து எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் திகாத் (Stanisław Dygat) எழுதிய தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற சிறுகதையைக் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் இக்கதை வெளியாகியுள்ளது. இந்தக் கதை வெளியான நாட்களிலே தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு வியந்து எழுதியுள்ள திகாத் வேறு என்ன சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஏதேனும் கட்டுரை அல்லது நூல் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை.

An Unknown Fragment from Dostoevsky’s Life என்ற திகாத்தின் இச்சிறுகதை The Modern Polish Mind: An Anthology இல் இடம்பெற்றுள்ளது.

போலந்து சிறுகதை தொகுதி ஒன்றில் The usher of the “Helios” movie theater என்ற அவரது இன்னொரு சிறுகதை வாசிக்கக் கிடைத்தது.

தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவர் ஏதும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் போலந்து இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் தாக்கம் பற்றிய ஆய்வு நூல் ஒன்றில் நவீன போலந்து இலக்கியத்தின் திசைமாற்றத்திற்குத் தஸ்தாயெவ்ஸ்கி முக்கியக் காரணியாக இருந்திருக்கிறார் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.

திகாத்தின் சிறுகதையில் வானுலகின் தூதுவர் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி விட்டிற்கு வந்து கடவுள் அவரைச் சந்திக்க விரும்புவதாக அழைத்துப் போகிறார்.

வானில் தஸ்தாயெவ்ஸ்கி கடவுளைச் சந்திக்கிறார். உரையாடுகிறார்.

அப்போது கடவுள் தஸ்தாயெவ்ஸ்கியை புகழ்ந்து பேசிவிட்டு நீங்கள் இருண்ட விஷயங்களை மட்டுமே எழுதுகிறீர்களே. நன்மை உங்கள் கண்ணில் படவில்லையா, இந்த உலகை வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்… கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம் என்று சொல்கிறார்.

வீடு திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கி இதன் காரணமாகவே கரமசோவ் சகோதரர்கள் நாவலை எழுத துவங்கினார் எனக் கதை முடிகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியை தீவிரமாக நேசிப்பவரால் மட்டுமே இப்படி ஒரு குறுங்கதையை எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தால் பாதிக்கப்பட்டவர் திகாத். அவரது கதைகளும் தஸ்தாயெவ்ஸ்கியின் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன

திகாத் சொல்வது போல நன்மைக்கும் தீமைக்குமான இடத்தை, காரணத்தை, அதன் பின்னுள்ள மனித மனதின் செயல்பாடுகளை தஸ்தாயெவ்ஸ்கி கரமசோவில் விசாரணை செய்கிறார். ஆனால் அவர் கடவுளின் பக்கம் நிற்கவில்லை. மாறாக மனிதனின் தடுமாற்றங்கள் மற்றும் குற்றத்தின் பின்னுள்ள காரணிகளை கண்டறிகிறார். இன்பங்களை அனுபவிப்பது தான் வாழ்வின் பிரதான நோக்கமா. அதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டானா என கேள்வி எழுப்புகிறார். பாதர் ஜோசிமா புனிதரைப் போல சித்தரிக்கபடுகிறார். ஆனால் இறந்த பிறகு அவரது உடலில் இருந்தும் துர்நாற்றமே அடிக்கிறது. அலியோஷாவால் அதை ஏற்க முடியவில்லை.

திகாத் கரமசோவை எவ்வளவு முறை படித்திருப்பார். எதில் வியந்து போனார் என தெரியவில்லை. ஆனால் அவர் அந்த நாவலுக்கு பின்னே அதிசயம் ஒளிந்திருப்பதாக நினைக்கிறார். அதை தான் அவரது கதையும் விவரிக்கிறது.

இக்கதையில் கடவுளும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகராக இருப்பது பிடித்திருக்கிறது. அது போலவே வானுலகின் அழைப்பை தஸ்தாயெவ்ஸ்கி எளிதாக எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். திரும்பி வந்துவிடுவோம் என்று உறுதியாக நம்புகிறார். தஸ்தாயெவ்ஸ்கியிடம் கடவுள் பேசும் இடமும் சொல்லாமல் விட்ட விஷயங்களும் தான் கதையை சிறப்பாக்குகின்றன.

தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஜனவரி 1879 முதல் நவம்பர் 1880 வரை தி ரஷியன் மெசஞ்சரில் ஒரு தொடராக வெளியிடப்பட்டது.அது வெளியான நான்கு மாதங்களுக்குள் தஸ்தாயெவ்ஸ்கி இறந்தார்.

1878 ஆம் ஆண்டு ஏப்ரலில் தி பிரதர்ஸ் கரமசோவிற்கான தனது முதல் குறிப்புகளைத் தொடங்கினார் என்கிறார்கள்

அக்டோபர் 1877 ல் தஸ்தாயெவ்ஸ்கி தனது நாட்குறிப்பில் இந்த நாவல் எழுதும் ஆசையைப் பதிவு செய்திருக்கிறார்

மே 1878 இல், தஸ்தாயெவ்ஸ்கியின் 3 வயது மகன் அலியோஷா இறந்து போனான். அந்தத் துயரம் இந்த நாவலில் மறைமுகமாக வெளிப்படுகிறது..

வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது நாவல்கள் திரைப்படமாக வெளியாகியுள்ளன. வார்சாவின் மொகோடோவ் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் ஒன்றுக்கு அவரது பெயர் வைக்கபட்டிருக்கிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2024 04:50
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.