S. Ramakrishnan's Blog, page 22

November 30, 2024

சிரிக்கும் வகுப்பறை

சிறார் நாவல் விமர்சனம்

– கே.பாலமுருகன். மலேசியா

பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது அச்சிறுவர்கள் மனத்தளவில் உணர்வெழுச்சிக் கொள்கிறார்கள். உணர்வு ரீதியாகச் சமன்கொள்கிறார்கள். இவ்வாழ்க்கையுடன் உணர்வுரீதியில் தொடர்புக் கொள்ளக் கற்றுக் கொள்கிறார்கள். பாடநூல் வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்பு முற்றிலும் வேறுபட்டு உணர்வுத்தளத்தை நோக்கி நகரக்கூடியது. இரண்டுமே மாணவர்களுக்கு அவசியமாகும். இலக்கிய நூல்களை வாசிக்கும்போது கொண்டாட்ட மனநிலைகளின் அனைத்து எல்லைகளையும் அவர்கள் சென்றுரசி மனவெழுச்சிக் கொள்கிறார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரங்களுக்குள் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனாலேயே சிறார்களுக்கு அதிகளவில் இதுபோன்ற கற்பனை, உணர்வு சார்ந்த இலக்கிய நூல்கள் படைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘கால் முளைத்த கதைகள்’ மிகவும் பிரபலமான நூல். நான் அவருடைய சிறார் படைப்புகளில் முதலில் வாசித்த நூல் அதுதான். அதிலுள்ள நாட்டாரியல் கதைகள் யாவும் குழந்தைகளுக்கான சுவாரிசயங்கள் உடையவை. ஆதிகாலத்தில் ஒரு சமூகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அச்சமூகம் எப்படிக் கதைகளையும் கற்பனைகளையும் அடிப்படையாகக் கொண்டு பதில்கள் அளிக்க முயன்றுள்ளன என்பதன் சேகரிப்புதான் ‘கால் முளைத்த கதைகள்’. இப்பொழுது அவருடைய ‘சிரிக்கும் வகுப்பறை’ என்கிற சிறார் நாவலை தம்பி பிருத்விராஜூ பரிந்துரைத்ததால் கடையில் வாங்கிப் படித்தேன். தமிழில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து வயதினரும் அனைத்து சமூகத்தினரும் படித்து அடைய வேண்டிய சிறார் கல்வித் தொடர்பான விரிவும் ஆழமும் இந்நாவல் கொண்டுள்ளது. இதுவரை நாம் கையாண்டு வரும் கல்விக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன்பால் புறக்கணிக்கப்படும் சிறுவர்களின் வாழ்வியலையும் இந்நாவல் விமர்சன முறையில் அணுகியுள்ளது. ஆனால், எங்கேயும் சோர்வுத் தட்டாமல் இருக்க நாவலின் கடைசிப் பகுதிகளில் எழும் கற்பனை சார்ந்த சித்திரங்கள் அபாரமான எல்லைகள் உடையவை.

நாவலில் வரக்கூடிய அக்ரமா என்கிற குகை பள்ளியின் சித்தரிப்பும் கட்டமைப்பும் மிகச் சிறந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. பாறைகளால் உருவாக்கப்பட்ட வகுப்பறை, கற்களால் உருவான மேசைகள், கற்படுக்கை, தண்டனைகள் வழங்கப்படும் முறை என அனைத்திலும் நுணுக்கமான விவரிப்புகள் உள்ளதால் கதையோட்டத்தோடு இணைந்து செல்ல முடிகிறது.

‘ஒரு கரப்பான்பூச்சியாகப் பிறந்திருந்தால் பள்ளிக்குப் போகாமல் இஷ்டம் போலச் சுற்றித் திரிந்திருக்கலாம் எனத் திவாகருக்குத் தோன்றியது’ என்கிற வரியுடன் தான் நாவல் ஆரம்பமாகிறது. தொடக்க வரியிலேயே நாவலுக்கான சாரத்தை எழுத்தாளர் பின்னத் தொடங்குகிறார். பின்னர், இந்த வெறுப்பு எங்கணம் குழந்தைகளின் மனத்தில் வேர்க் கொள்கிறது என்பதை நோக்கி நாவல் சயனகிரி வரை விரிவாகுகிறது. திவாகர் எனும் மாணவன் அனைத்து பள்ளிகளாலும் பயனற்றவன், கல்வியில் ஆர்வமில்லாதவன் எனத் தூக்கி வீசப்படுகிறான். அவனது மனம் அதிலுள்ள நுட்பமான உணர்வலைகள் யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் மனமுடைந்த அவனுடைய பெற்றோர் திவாகரைத் தண்டனைப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் நாவலின் மிக முக்கியமான விறுவிறுப்பான பகுதிகள் ஆரம்பமாகின்றன.

தண்டனைப் பள்ளியின் தண்டனைகள்

விதவிதமான தண்டனைகளைக் கண்டுபிடித்து அதனை நாட்டிலுள்ள மற்ற பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே லொங்கோ என்பவனால் இப்பள்ளித் தொடங்கப்பட்டது. காயாம்பு, பட்லர், இயந்திரப் பறவை, புகை மனிதர்கள் என அடுத்தடுத்தப் பகுதிகள் சுவாரஷ்யமும் அதே சமயம் ஒரு சமூகம் தண்டனைகள் மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கைகள், அதீத விருப்பம் எப்படி அக்ரமா பள்ளியால் பணமாக்கப்படுகிறது என்கிற அரசியலையும் நாவலாசிரியர் கதையின் உள்ளோட்டச் சரடாக வைத்துள்ளார்.

பறந்து சென்று மாணவர்களை அடிக்கும் அதிசய பிரம்புடன் பள்ளிக்கு வரும் பட்லரின் பகுதி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. வேடிக்கையாகவும் அதே சமயம் பொருள் புதைந்த பகுதியாகவும் அமைந்திருந்தது. பட்லரின் அதிகாரத்தைச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் விதமும் நகைச்சுவையாக இருந்தது. இவர்கள் யாவரும் சேட்டையான மாணவர்கள், படிக்கத் தெரியாதவர்கள், எந்தப் பயனுமற்றவர்கள் எனக் குடும்பத்தாலும் பள்ளிக்கூடங்களாலும் அடையாளப்படுத்த ஒதுக்கப்பட்டவர்கள்.

ஆகவே, இவர்களைக் கண்டறிந்து அக்ரமா தண்டனைப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள். பெற்றோர், பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பினால் பயனுள்ள மனிதனாக உருவாக்கப்படுவார்கள் என நம்பி அக்ராமில் விட்டுவிட்டுகிறார்கள். ஆனால், லொங்கோ இப்பிள்ளைகளை இன்னும் கடுமையாகத் தண்டிக்கிறான். புதிது புதிதாக தண்டனைகள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் மூர்க்கமாக நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளியைத் திவாகரும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மீட்கிறார்கள் என்பதுதான் நாவலின் இறுதி பகுதியாகும்.

பள்ளிக்கூடம் என்பது என்ன? தண்டனைக்கூடமா? உண்மையில் ஒரு சிறந்த மாணவன் எப்படி தீர்மானிக்கப்படுகிறான்? அவனைத் தீர்மானிப்பது எவை? என்கிற மிக முக்கியமான கேள்விகளை நோக்கி இந்நாவல் நம் அனைவரையும் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவலாக நான் பரிந்துரைக்கிறேன். கல்விச்சூழலில் நிகழும் புறக்கணிப்புகளின் காட்டத்துடன் யதார்த்தமாகத் தொடங்கும் நாவல், பின்பகுதியில் அடையும் அதீதமான Fantacy (கனவுருப்புனைவு) ஒருவேளை சிறார்களுக்கு மிகவும் விருப்பம் மிகுந்த பகுதியாக இருக்கலாம். படிக்க வேண்டிய நாவல்.

நன்றி

கே.பாலமுருகன். மலேசியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2024 18:18

November 28, 2024

தஸ்தாயெவ்ஸ்கி திரைப்படம்

முன்பணம் கொடுத்த பதிப்பாளரின் ஒப்பந்தப்படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்டது. அதற்காக இளம் பெண்ணான அன்னாவை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டார். அப்போது அன்னாவின் வயது 20.

அந்த நாட்களை விவரிக்கும் Twenty six days in the life of Dostoevsky திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது .Aleksandr Zarkhi இயக்கியுள்ள இப்படம் 1981ல் வெளியானது.

இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மேடையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

நாவலை எழுதி முடித்தபிறகு தஸ்தாயெவ்ஸ்கி. தனது காதலை வெளிப்படுத்தினார் அன்னா அவரை ஏற்றுக் கொண்டாள். அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவளது உறுதுணையே தஸ்தாயெவ்ஸ்கியை துயரங்களிலிருந்து மீட்டது.

அன்னா தனது டயரிக்குறிப்பை தனிநூலாக வெளியிட்டிருக்கிறார்.

அன்னாவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்து ஆண்ட்ரூ டி. காஃப்மேன் எழுதிய புதிய நூல் The Gambler Wife: A True Story of Love, Risk, and the Woman Who Saved Dostoyevsky சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2024 01:56

November 26, 2024

எமர்சன் – சிறப்புரை

அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியலாளர் எமர்சன் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறேன்

டிசம்பர் -25. 2024 – புதன்கிழமை கவிக்கோ மன்றத்தில் இந்த உரை நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்புரையை நிகழ்த்துகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2024 23:07

கழுத்து நீண்ட விளக்கு

புதிய சிறுகதை. 26.11.24

.

மழை பெய்யப்போவது போலக் காற்று வேகமாகியிருந்தது.

சாத்தப்படாத ஜன்னல் காற்றின் வேகத்தில் அடிக்கும் சப்தம் கேட்டு படுக்கையிலிருந்து ராமநாதன் எழுந்து கொண்டார். ஜன்னலை மூடிவிட்டுத் திரும்பும் போது பாதித் திறந்திருந்த பிரபுவின் அறையில் சிரிப்புச் சப்தம் கேட்டது. அறைக் கதவைத் தள்ளி ராமநாதன் உள்ளே எட்டிப் பார்த்தார்.

பிரபு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துச் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாகப் பாடம் படிக்கலாமே. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. ஆனால் இதைச் சொன்னால் இந்த இரவில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விடுவான். பின்பு எப்போது வீடு திரும்புவான் என்று தெரியாது. எங்கே செல்லுகிறான். யாரைச் சந்திக்கிறான் என்றும் தெரியாது.

இந்த நகரில் இருபத்தியாறு வருஷமாக வாழ்கிறார். ஆனால் இப்படி இரவில் சந்திக்கக் கூடிய ஒருவர் கூட அவருக்குக் கிடையாது. ஒருவேளை இதே நகருக்குள் வேறு நகரம் ஒளிந்திருக்கிறதோ என்னவோ.

பிரபு தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.

வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு நீண்டகாலமாகிவிட்டது. பிரபு எப்போதும் தனியே தான் சாப்பிடுகிறான். அதுவும் அவசரமாக, தட்டைக் கவனிக்காமல், இதில் சாப்பிடும் நேரம் யாராவது அவனைப் போனில் அழைத்துவிடுகிறார்கள். பாதிச் சாப்பாட்டில் தட்டிலே கைகழுவிவிடுகிறான். அது என்ன பழக்கம். ஏன் எழுந்து போய் வாஷ்பேஷினில் கைகழுவ வேண்டியது தானே.

குடும்பத்தோடு ஒன்றாகச் சாப்பிட்டு எதையாவது பேசிச் சிரிப்பதில் என்ன பிரச்சனை அவனுக்கு என்று ராமநாதனுக்குப் புரியவில்லை.

பிரபு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாம் வகுப்புப் பரிட்சை தான் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. அதைப்பற்றிய கவலையே அவனுக்கு கிடையாது. பரிட்சையைப் பற்றி மட்டுமில்லை. எதைப்பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை. வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதுமில்லை. இப்படி அவன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் அவருக்கு இருந்தன. அதில் எதையாவது சொன்னால் உடனே கோவித்துக் கொண்டு வெளியே போய்விடுவான். இதற்காக மனைவியை விட்டுப் பிரபுவிடம் கேட்கச் சொல்லுவார்.

“நீ எப்போ தான்டா படிப்பே“ என்று சாந்தியும் குறைபட்டுக் கொள்வாள்.

“உனக்கு மார்க் தானம்மா வாங்கணும். அதெல்லாம் எடுத்துருவேன்“

“எவ்வளவு எடுப்பே. “

“அதெல்லாம் சொல்ல முடியாது“

“எந்தக் காலேஜ்ல சேர்ந்து படிக்கப் போறே“

“அது தெரியாது.. ரிசல்ட் வந்தபிறகு பாத்துகிடலாம்“

“எங்களாலே காசு குடுத்துச் சீட் வாங்க முடியாது பாத்துக்கோ“

“அப்போ படிக்க வைக்காதே.. வீட்ல இருக்கேன்“

“வீட்ல இருந்து என்ன பண்ணுவே“..

“ஐடியா இல்லே. அப்போ பாத்துகிடலாம்“

“இப்படி சொன்னா எப்படிறா.. படிக்கிற புள்ள பேசுற பேச்சா இது“

“என்னாலே இப்படித் தான் பேச முடியும்மா. “ என்று பிரபு பேச்சை முறித்துக் கொண்டுவிடுவான்.

••

படிக்காமல் எப்படி மார்க் வாங்க முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் சித்ராவின் மகள் பிரியதர்ஷினி இரண்டு டியூசன் செல்கிறாள். அதுவும் காலை ஐந்து மணிக்கு எழுந்து மேத்ஸ் படிக்கப் போகிறாள். பிரபு ஒரு நாள் கூடக் காலை ஏழு மணிக்கு முன்னால் எழுந்து அவர் பார்த்ததே கிடையாது. சில நாட்கள் இதற்காகவும் கோவித்துக் கொண்டிருக்கிறார்

“நான் தூங்கினதே லேட்டுப்பா. “

“எதுக்கு லேட்டா தூங்குனே. அவ்வளவு நேரம் படிச்சிட்டு இருந்தியா“

“மேட்ச் பாத்துட்டு இருந்தேன். படிக்கிறதுக்கு எல்லாம் முழிச்சிட்டு இருக்க முடியாதுப்பா“

“வீட்ல இருந்தா நீயா படிக்க மாட்டே. ஏதாவது டியூசன்ல சேர்த்துவிடுறேன்.“

“நான் போக மாட்டேன், அதெல்லாம் வேஸ்ட் “

“அப்புறம் எப்படி மார்க் எடுப்பே“

“அது என் வேலை. “

“உன்னை நான் எப்படி நம்புறது. “

“நீங்க சந்தேகப்பட்டா நான் படிக்க மாட்டேன். பெயில் ஆகிடுவேன் “

“சந்தேகம் இல்லைப்பா.. நீ வீட்ல உட்கார்ந்து படிக்கிறதை நான் ஒரு நாள் கூடப் பாக்கவேயில்லையே. அதான்“

“படிக்கிறதைப் பாக்கணும்னா. லைப்ரரிக்கு போங்க. யாராவது படிச்சிட்டு இருப்பாங்க. உங்களுக்காக நான் படிக்கிற மாதிரி நடிக்க முடியாதுப்பா“ என்றான் பிரபு

அவனுடன் சேர்ந்து கொண்டு சாந்தியும் “அவன் படிப்பான். மார்க் வாங்காட்டி கேளுங்க“ என்றாள்.

மார்க் வாங்காமல் விட்டுவிட்டால் பின்பு காரணம் கேட்டு என்ன பிரயோசனம் . எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் எப்படி ஒருவனால் இருக்க முடிகிறது. பலமுறை அவனிடம் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்.

“எனக்கு ஒரு ஐடியாவும் கிடையாதுப்பா. எது கிடைக்குதோ. அது படிப்பேன்“

“அப்படி படிச்சா நல்ல வேலை எப்படிக் கிடைக்கும்“

“எது கிடைக்குதோ. அது தான் நல்ல வேலை“

“அப்போ எப்படிச் சம்பாதிப்பே“

“அது என் பிரச்சனை. சம்பாதிக்காட்டா. உங்க கிட்ட வந்து கேட்க மாட்டேன் போதுமா“

அவனிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நிறையக் கவலைப்பட்டார். பயப்பட்டார். குழப்பமடைந்தார். சாந்தியும் பிரபுவின் படிப்பிற்காகக் கோவில் கோவிலாகப் பிரார்த்தனை செய்தாள். விரதம் இருந்தாள். சில நாட்கள் அவனது அறையில் தீர்த்தம் தெளித்து “நல்லா படிப்பு வரட்டும் சாமி“ என்று வேண்டிக் கொண்டாள். சில நேரங்களில் அம்மாவும் மகனும் பேசி சிரித்துக் கொள்வார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அவருக்குப் புரியாது.

பெற்றோர்களின் எல்லாக் குழப்பங்கள். பயங்கள். சந்தேகங்களுக்கு அப்பால் எப்போதும் போலப் பிரபு தனக்கான உலகில் தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். விருப்பம் போல நடந்து கொண்டான். படிப்பதை ஏன் இவ்வளவு பெரிதாக நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

பிளஸ் டூ படிக்கிற பையன் போலவே நடந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்று ராமநாதன் மிகவும் வருத்தப்பட்டார்.

அவர்கள் வீடு உள்ள தெருமுனையில் இருந்த டியூசன் சென்டரின் வாசலில் வரிசையாகச் சைக்கிள் நிற்பதைக் காணும் போது அவருக்குள் கோபம் பொங்கி வரும். இவர்கள் எல்லாம் முட்டாள்களா. ஏன் பிரபு தனது பேச்சை கேட்க மறுக்கிறான். ஒருவேளை அவனுக்குப் படிப்பு வரவில்லையோ. சகவாசம் சரியாக இல்லாமல் போய்விட்டதா. பத்தாம் வகுப்பு வரை கூடத் தான் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டானே. இப்போது என்னவானது.

••

ராமநாதன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு நாள் தர்மா எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் செல்போன் சார்ஜர் வாங்கப் போன போது அங்கே வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருந்த மேஜை விளக்கினைப் பார்த்தார்.

“ஸ்கூல் பசங்க நிறைய வாங்கிட்டு போறாங்க சார். விலை இருநூறு தான். உங்க பையன் கூடப் பிளஸ் டூ தானே“ எனக்கேட்டார் தர்மா எலக்ட்ரானிக்ஸ் ராஜகுரு. தெரிந்த மனிதர் என்பதால் அக்கறையாகக் கேட்கிறார்.

“டேபிள் சேர் வாங்கிக் குடுத்துருக்கேன். அதுல உட்கார்ந்து எங்க படிக்கிறான்“ என்று சலித்துக் கொண்டார் ராமநாதன்

“இந்த ஸ்டடி லேம்ப்ல நாலு பட்டன் இருக்கு. தேவையான அளவுக்கு வெளிச்சத்தைக் கூட்டிகிடலாம்“ என்று கடைப்பையன் விளக்கி காட்டினான்

கழுத்து நீண்ட அந்த விளக்கு அழகாகயிருந்தது. மருத்துவர்களின் மேஜை மீது அது போன்ற விளக்கைப் பார்த்திருக்கிறார்.

ஒருவேளை ஸ்டடி லேம்ப் வாங்கிக் கொடுத்தால் படிக்கத் துவங்கிவிடுவானோ என்ற எண்ணம் உருவானது. இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்டடி லேம்ப்பை வாங்கிக் கொண்டார். அந்த விளக்கு எரிவது போலவும் பிரபு மேஜையில் அமர்ந்து அதன் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவும் மனதில் ஒரு சித்திரம் வந்து போனது.

வீட்டிற்குப் போனவுடன் சாந்தி “இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க“ என்று கேட்டாள்

“அப்படியாவது படிக்க மாட்டானானு பாக்கத் தான், நான் படிக்கிற காலத்துல இப்படி யாரும் ஸ்டடி லேம்ப் வாங்கிக் குடுத்துப் படிக்கச் சொல்லலை.. எங்க வீட்ல அப்போ குண்டு பல்ப் தான். அதுவும் நாற்பது வாட்ஸ்“. என்றார்

“ நீங்களே அவன் கிட்ட குடுத்துப் பக்குவமாச் சொல்லுங்க“

“இதுல பக்குவமாச் சொல்றதுக்கு என்ன இருக்கு“

“உங்களுக்குப் பேசத் தெரியலை. சும்மா அவன் கிட்ட கோவிச்சிகிடுறீங்க“

“அப்போ நீயே இதையும் குடுத்துரு“

“இந்த கோபத்தைத் தான் நான் சொன்னேன்“.

“நான் ஏன் கோவிச்சிகிடுறேனு யோசிக்கவே மாட்டேங்குறானே“

“அதெல்லாம் அவனுக்குப் புரியாம இல்ல. இப்போ அவனுக்கு ஜாதகத்துல கட்டம் சரியில்லை. சித்திரைக்குப் பிறகு படிக்க ஆரம்பிச்சிருவான்“

“அதுக்குள்ளே பப்ளிக் எக்ஸாம் வந்துரும்“

“இப்படி பேசினா அவனுக்குக் கோபம் வராம என்ன செய்யும். “

“நாம சண்டை போட்டு என்ன ஆகப்போகுது.. அவன் வரட்டும் நான் பேசிகிடுறேன்“

அன்றைக்கு அவர் இரவு பதினோரு மணி வரை விழித்திருந்தார். பிரபு வரவில்லை. காலையில் எழுந்த போது ஸ்டடி லேம்ப் அவனது மேஜை மீது இருந்தது. சாந்தி கொடுத்திருக்கக் கூடும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அவர் சொல்ல முயன்றபோது “எனக்கு தெரியும்பா“ என்று ஒரே வார்த்தையில் பிரபு துண்டித்துவிட்டான்.

ஒவ்வொரு நாளும் ஆபீஸ் விட்டுவந்தவுடன் அவனது அறையினுள் எட்டிப்பார்ப்பார். விளக்கு அதே இடத்தில் அப்படியே இருக்கும். பிரபு அந்த விளக்கை பிளக் பாயிண்ட்டில் கூடச் சொருகியிருக்கவில்லை. ஏன் இப்படியிருக்கிறான் என்று ஒரு நாள் ஆத்திரத்தினை மனைவியிடம் காட்டினார்

“படிக்கும் போது பிளக்கில் சொருகிக்கிடுவான். நீங்க ஏன் அவசரப்படுறீங்க“ என்றாள் சாந்தி

ஒரு மாதம் ஆகியும் அதே இடத்தில் ஸ்டடி லேம்ப் அப்படியே இருந்தது. அதன்மீது படிந்திருந்த தூசியைக் கூடத் துடைக்கவில்லை. வாங்கிய நாளில் இருந்து ஒருமுறைகூட அதைப் பயன்படுத்தவில்லையே. எப்போது படிக்கத் துவங்குவான் என்று எரிச்சலாக வந்தது. அவராக ஒருநாள் ஸ்டடி லேம்பை பிளெக் பாயிண்ட்டில் சொருகி வைத்தார். அப்படியும் அவன் அதைப் பயன்படுத்தவில்லை

இதற்கிடையில் பிரபு எங்கிருந்தோ ஒரு சுழலும் வண்ணவிளக்கை வாங்கி வந்திருந்தான். அந்த விளக்கை மாட்டுவதற்கு இடம் வேண்டும் என்பதற்காக ஸ்டடி லேம்பை கட்டிலின் ஒரமாகக் கழட்டி வைத்துவிட்டான். அந்த விளக்கில் இருந்து சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என ஐந்துவிதமான வண்ணங்கள் ஒளிர்ந்தன.

அறை முழுவதும் சிவப்பு நிறமாக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சாந்தி

“எதுக்கு இந்தக் கலர் லைட்“ என்று கேட்டார் ராமநாதன்

“இந்த லைட்டுல பாட்டுக் கேட்குறது நல்லா இருக்கும்னு சொல்றான்“.

“பாட்டு கேட்டுகிட்டு இருந்தா எப்போ படிக்கிறது“

“அதை நீங்க தான் சொல்லணும். நான் சொன்னா. என்னைக் கோவிச்சிகிடுவான்“

“நான் சொன்னாலும் கோவிச்சிக்கிடுவான்“

“அப்போ சொல்லாதீங்க“

“அப்படி விட முடியாது“.

“அப்போ நீங்களாச்சு. உங்க பிள்ளையாச்சு“ என்றபடியே அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்

பிரபு வண்ணவிளக்கு வாங்கியது அவருக்குப் பெரிய விஷயமாகயில்லை. தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த ஸ்டடி லேம்பை பயன்படுத்தவில்லையே என்று தான் கோபமாக வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமலே அவனிடம் “பப்ளிக் எக்ஸாம் எப்போ ஆரம்பிக்குது“ என்று கேட்டார்

“டிவில சொல்லுவாங்க. கேட்டுக்கோங்க“ என்றான் பிரபு

“உங்க ஸ்கூல்ல சொல்லலையா“

“நான் கேட்கலை“

“ஸ்கூல்ல போய் அப்போ என்ன தான் செய்றே“

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் எதையோ முணுமுணுத்துக் கொண்டான்.

“நான் வந்து உங்க ஸ்கூல்ல கேட்கவா“

“கேட்டுக்கோங்க. அப்படியே எனக்குப் பதிலா நீங்களே பரிட்சை எழுத முடியுமானு கேட்டுட்டு வந்துருங்க“ என்றான்

“நான் படிக்கிற காலத்துல இப்படி இல்லே. தினம் விளக்கு வச்ச உடனே படிக்க ஆரம்பிச்சிடுவேன். நைட் பத்து மணி வரைக்கும் படிப்பேன். “

“அப்படி படிச்சி எவ்வளவு மார்க் வாங்குனீங்க. காலேஜ்ல பிகாம் தானே படிச்சீங்க. “

“அப்போ மார்க் நிறைய வாங்க முடியாது. இப்போ தான் மேத்ஸ் ஆயிரம் பேரு சென்டம் வாங்குறாங்க. நான் அப்பவே மேத்ஸ்ல 87.

“அதை விட நான் அதிகம் வாங்கிடுவேன் போதுமா“

அது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை.

••

ஒவ்வொரு முறை அவனது அறையைச் சுத்தம் செய்யும் போதும் கட்டிலிற்குக் கிழே இருந்த ஸ்டடி லேம்பை ஒரமாக வைத்துவிட்டு சாந்தி சுத்தம் செய்வாள். ஒரு நாள் ஸ்டடி லேம்ப் மீது தூசியடையாமல் இருக்கப் பழையதுணி ஒன்றை அதன் மீது போட்டு வைத்தாள்.

டிவியில் அவர் பார்த்த ஆங்கிலப் படத்தில் ஒரு சிறுவன் ஸ்டடி லேம்ப் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தான். அதைக் காணும் போது அவரை அறியாமல் கண்ணீர் வந்தது. ஆனாலும் பிரபு அந்த விளக்கை ஒருமுறை கூடப் பயன்படுத்தவேயில்லை.

••

இரவு எட்டுமணிச் செய்தியில் பப்ளிக் எக்ஸாம் துவங்குகிற தேதியை அறிவித்தார்கள். சாந்தி மறுநாள் காலை சிவன் கோவிலில் பிரபுவின் பெயருக்கு அர்ச்சனை செய்தாள். அன்றிலிருந்தே ராமநாதன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் எவ்வளவு கட்டணம் என்ற தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினார். வங்கிச் சேமிப்பில் அவ்வளவு பணம் இல்லையே என்ற கவலை கூடுதலாகச் சேர்ந்து கொண்டது. அவரது நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் ஆளுக்கு ஒரு கல்லூரியைச் சிபாரிசு செய்தார்கள்.

பள்ளியிலே சிறப்பு வகுப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னாள் சாந்தி. அதன்பிறகான நாட்களில் காலை ஏழு மணிக்கே பிரபு கிளம்பி போவதைப் பார்க்கும் போது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது.

மாலையில் பள்ளியில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்றன. பிரபு இரவு எட்டரை மணிக்குத் தான் வீடு திரும்பினான். வீட்டில் செய்த இட்லி தோசை எதுவும் அவனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தினமும் பிரைடு ரைஸ். நூடுல்ஸ் எனத் தள்ளுவண்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டான். அதற்குச் சாந்தி கோவித்துக் கொண்ட போது “எதையாவது சாப்பிட்டுப் படிக்கட்டும்“ என்று சமாதானம் சொன்னார் ராமநாதன்

பரிட்சை துவங்குவதற்கு இரண்டு வாரமிருந்த போது பிரபு தனது நண்பனின் அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் என மதுரைக்குக் கிளம்பிப் போனான். அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அவன் கேட்கவில்லை. பள்ளிக்கு உடல் நலமில்லை என்று லெட்டர் கொடுத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டான்.

“பப்ளிக் எக்ஸாமை வச்சிகிட்டு இப்படி ஊர் சுத்துனா.. எப்படி மார்க் வாங்குவான்“ என்று கோவித்துக் கொண்டார்.

சாந்தி அவனுக்காக அன்றாடம் கோவிலுக்குச் சென்று வரத் துவங்கினாள். நேர்த்திக்கடன் போட்டாள். மதுரைக்குச் சென்று திரும்பி வந்த போது அவனது இடது கண் வீங்கியிருந்தது. குளவி கடித்துவிட்டது என்றான்.

“கண்ணிற்கு டாக்டரைப் போய்ப் பார்த்து வந்துவிடலாம். பரிட்சை வரப்போகிறது“ என்றார் ராமநாதன்

“அதெல்லாம் பாத்துகிடலாம்“ என்று பிரபு மறுத்துவிட்டான்

வீங்கிய கண்களுடன் பள்ளிக்குப் போய் வந்தான். வீட்டிற்கு வந்த நேரம் முதல் வண்ண விளக்குகளைச் சுழலவிட்டு பாட்டு கேட்டான். கடிகாரத்தின் முள்ளைப் போல அவரது பயம் முடிவில்லாமல் சுற்றிக் கொண்டேயிருந்தது.

பரிட்சை அன்றைக்குக் காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே போய்விட்டான். அப்படியே ஸ்கூலுக்குப் போய் விடுவானா. அல்லது வீடு வந்து கிளம்பிப் போவானா என்று தெரியாமல் குழம்பிப் போனார்.

“நீங்க விஜயராஜ் வீடு வரைக்குப் போய்ப் பாத்துட்டு வந்துருங்க“ என்றாள் சாந்தி

அவர் விஜயராஜ் வீட்டிற்குப் போன போது அவன் குளித்துப் புதிய ஆடை அணிந்து நெற்றியில் திருநிறு பூசியவனாக இருந்தான். கையில் ஒரு புத்தகம் இருந்தது.

“இங்கே வரலை அங்கிள். டேனி வீட்டுக்குப் போயிருப்பான்“ என்றான்

டேனி வீடு எங்கேயிருக்கிறது என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை.

வீடு திரும்பிய ராமநாதன் “டேனி வீட்டுக்குப் போயிட்டானாம்“ என்று எரிச்சலோடு சொன்னார்

“பரிட்சையும் அதுவுமா சாப்பிடக்கூட இல்லே“ என்று சாந்தி வருத்தப்பட்டாள்

“விஜயராஜ் எல்லாம் காலைல குளிச்சி.. நெற்றி நிறையத் திருநீறு பூசி படிச்சிகிட்டு இருக்கான். நமக்குனு வந்து பொறந்திருக்கானே. “. என்று பிரபுவைத் திட்டினார்

டேனி வீட்டிலிருந்து நேராகப் பள்ளிக்கூடம் போய்விட்டான் பிரபு. பரிட்சை முடிந்தும் வீடு திரும்பி வரவில்லை. இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்த போது பரிட்சை எப்படி இருந்தது என்று கேட்டாள் சாந்தி

“ஈஸிம்மா“ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான் பிரபு

அந்தப் பரிட்சைக்கு மட்டுமில்லை. எல்லாப் பரிட்சைக்கும் இது போல டேனி வீட்டிலிருந்து தான் கிளம்பிப் போனான். எல்லாப் பரிட்சை பற்றியும் ஈஸிம்மா என்று அதே பதிலை தான் தந்தான்

“ரிசல்ட் எப்போ வரும்“ என்று அவனிடம் கேட்டார் ராமநாதன்

“டிவில சொல்வாங்க“ என்றான் பிரபு

அந்தப் பதில் அவரை எரிச்சல்படுத்தியது. கல்லும் கல்லும் உரசிக் கொள்ளும் போது நெருப்பு வருவது போல அவனுடன் எது பேசினாலும் இப்படி ஆகிவிடுகிறதே என்று தோன்றியது.

பரிட்சை முடிந்துவிட்டாலும் எந்தக் கல்லூரியில் சேருவது. அதற்கான விண்ணப்பம் எப்படி வாங்குவது. சில கல்லூரிகள் தனித் தேர்வு நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதற்குப் படிக்க வேண்டுமா என்று ராமநாதன் பல்வேறாக யோசித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின்னான நாட்களில் பிரபு மதியம் வரை தூங்கினான். பின்பு குளித்துவிட்டு மூன்றரை மணிக்கு மதிய உணவு சாப்பிட்டான். பைக்கை எடுத்துக் கொண்டு டேனி வீட்டிற்குச் செல்வான். இரவு இரண்டுமணிக்கு பிறகே வீடு திரும்பினான்.

ஆறாம் தேதி பரிட்சை முடிவுகள் அறிவிக்கபடும் என்று டிவியில் சொன்னார்கள். ஆறாம் தேதி காலையில் அவன் எப்போதும் போல டேனி வீட்டிற்குப் போயிருந்தான். அவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு போய்விடுவார்கள் என்றாள் சாந்தி.

எவ்வளவு மார்க் வாங்கியிருப்பான் என்று தெரியாத குழப்பம், மார்க் குறைவாக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவரை வாட்டியது. இரவு அவருக்குச் சரியான உறக்கமில்லை.

மறுநாள் காலை பத்துமணிக்கு அவனது மதிப்பெண் வந்திருந்தது. 96% சதவீதம் வாங்கியிருந்தான். இதில் கணிதத்தில் நூறு மதிப்பெண். பள்ளியின் செகண்ட் ரேங்க்.

அவரால் நம்பவே முடியவில்லை. வீட்டில் அமர்ந்து ஒரு நாள் கூடப் படிக்காதவன் எப்படி இவ்வளவு மார்க் வாங்க முடிந்தது. நாம் தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையா. அல்லது படிக்கும் முறை மாறிவிட்டதா. விளக்கு வைத்தவுடன் படிக்க வேண்டும் என்பது வெறும் பழக்கம் தானா. ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையின் கற்கும் திறனைப் புரிந்து கொள்ளவில்லையா. அறிவு வளர்ச்சி என்பது இது தானா. அவருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது

தனக்கும் தனது மகனுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளி என்பது வயது மட்டும் சார்ந்ததில்லை. தான் வேறு உலகில் வேறு நம்பிக்கைகளில் வாழுகிறோம். எதிர்காலம் பற்றிய பயம் தான் நம்மை வழிநடத்துகிறது.  ஆனால் இவர்கள் எதிர்காலத்தை  பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. கடந்த காலம் பற்றிப் புலம்புவதில்லை. தனது வீட்டில் தன்னோடு வளர்ந்தாலும் அவன் தனது பையன் மட்டுமில்லையோ என்று அவருக்குத் தோன்றியது. அந்த எண்ணம் மேலும் குற்றவுணர்வை உருவாக்கியது. அதிலிருந்து விடுபடுவதற்காக வீட்டில் பால்பாயாசம் வைக்கும்படி சொன்னார் ராமநாதன்

“அவனுக்குப் பாயாசம் பிடிக்காது. அவன் மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வருவானானு கேட்குறேன்“ என்று மகனுக்குப் போன் செய்தாள் சாந்தி.

“என்ன சொல்றார் அப்பா“ என்று இயல்பாகக் கேட்டான் பிரபு

“உன் மார்க்கைப் பார்த்து அழுதுட்டார்“ என்றாள் சாந்தி

தான் எப்போது அழுதோம் என்று புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராமநாதன்.

அன்று மாலை டேனியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பிரபு. டேனி ஒல்லியாக இருந்தான். இருவரும் ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் டீ சர்ட் போட்டிருந்தார்கள். டேனி அப்பா வாங்கிக் கொடுத்தது என்றான் பிரபு.

“தன்னைவிடவும் டேனி நாற்பது மார்க் குறைவு“ என்று அம்மாவிடம் சொன்னான் பிரபு

டேனி சிரித்தபடியே “இவனை மாதிரி படிக்க முடியாது ஆன்டி“. என்றான்.

“நல்லா சப்தமாச் சொல்லு. அவர் காதுல விழட்டும்“ என்றாள் சாந்தி

அதைக் கேட்காதவர் போல ராமநாதன் நடித்துக் கொண்டார்.

அன்றிரவு வீட்டில் சும்மா கிடக்கும் ஸ்டடி லேம்பை யாருக்காவது கொடுத்துவிடலாமா என்று மனைவியிடம் கேட்டார் ராமநாதன்

“அவன் படிக்கிறதுக்கு வாங்கினது.. அதெல்லாம் குடுக்கக் கூடாது“ என்றாள்.

“அவன் ஸ்டடி லேம்ப் வச்சிப் படிக்கிற ஆள் இல்லை“ என்றார்

“அப்போ அவன் பிள்ளை வந்து படிப்பான். அது பாட்டுக்கும் இருக்கட்டும்“ என்றாள்

தன்னால் அவ்வளவு எதிர்காலத்தை நினைக்க முடியவில்லையே என்று மனதிற்குள் சிரித்தபடியே“ பிரபு ரூம்ல இருக்கிற கலர் லைட்ல பாட்டு கேட்டா நல்லா இருக்குமா“ என்று மனைவியிடம் கேட்டார்.

“ஏன் வயசு திரும்புதாக்கும்“ என்று கேலி செய்தாள் மனைவி.

பிரபுவோடு அவனது அறையில் அமர்ந்து வண்ணவிளக்கு ஒளிர பாட்டு கேட்க வேண்டும் என்று அவருக்குள் ஆசை உருவானது.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2024 03:58

November 25, 2024

துரத்தும் நினைவுகள்

1970களின் மத்தியில் அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தால் நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டே இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

 1976 முதல் 1983 வரை அந்த நாட்டை ஆண்ட பயங்கரமான இராணுவ ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்து விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் நடுக்கடலில் தள்ளிவிட்டு கொல்லப்படுகிறார்கள்.

அப்படி ஒரு கடற்படை விமானத்தின் விமானியாக இருக்கும் கோப்லிக் இந்த இழிசெயலை செய்யமுடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரை ராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்கள். தன்னையும் சர்வாதிகாரம் பழிவாங்க கூடும் என்பதால் அவர் தலைமறைவாகிறார்.

அவரது தலைமறைவு வாழ்க்கையினைத் தான் Koblic திரைப்படம் விவரிக்கிறது. செபாஸ்டியன் போரென்ஸ்டீன் இயக்கியுள்ளார்.

தொலைதூர கிராமத்தில் பழைய நண்பரின் வீட்டில் தங்கிக் கொள்ளும் கோப்லிக் அவரது மருந்து தெளிக்கும் விமானத்தின் பைலட்டாகப் பணியாற்றுகிறார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் தென் அமெரிக்கப் பாம்பாஸின் நிலப்பரப்புகளுக்கு இடையே கதை நிகழுகிறது.

அந்த ஊரின் காவல்துறை அதிகாரி வெலார்டே மிக மோசமானவர். ஊழல் பேர்வழி. அவர் கோப்லிக்கை சந்தேகப்படுகிறார். இதனால் அவரை ரகசியமாகக் கண்காணிக்கிறார். கோப்லிக்கின் மனசாட்சி கடந்த கால நிகழ்ச்சியை நினைவுபடுத்தி அவரைத் தொந்தரவு செய்கிறது.

அந்தக் கிராமத்தில் சாலையோரக் கடை நடத்திவரும் நான்சி அறிமுகமாகிறாள். அவளுடன் கோப்லிக் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். மோசமான கணவனிடமிருந்து தப்பிக்க முயலும் நான்சி கோப்லிக்கை தீவிரமாகக் காதலிக்கிறாள். அதை அறிந்த அவளது கணவன கோப்லிக்கை கொல்வதென முடிவு செய்கிறான். இதனை எதிர்கொள்ளக் கோப்லிக் எடுக்கும் முடிவும் அதன் தொடர் விளைவுகளும் எதிர்பாராதவை.

படத்தின் துவக்காட்சியிலே காயம்பட்ட நாயை குணப்படுத்தித் தன்னுடன் கோப்லிக் வைத்துக் கொள்கிறான். அந்த நாய் அவனது வாழ்க்கையின் மறுவடிவம் போலிருக்கிறது. நான்சியின் மீது உருவாகும் ஈர்ப்பு. அவர்களின் ரகசிய சந்திப்பு. அவர்களுக்குள் நடக்கும் ஆவேசமான கூடல் எனக் காட்சிகள் கவித்துவமாக விரிகின்றன. நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. மாறிக் கொண்டேயிருக்கும் வானிலை படத்தின் மைய உணர்வை வெளிப்படுத்துகிறது.

ஒளிந்து வாழும் ஒருவனின் நாட்களை விவரிக்கும் படம் என்றாலும் அது தனி ஒருவரின் கதை மட்டுமில்லை என்று உணர்த்துகிறது. ஒருவகையில் நான்சியும் ஒளிந்து தான் வாழுகிறாள். அவளது கடந்தகாலம் ஒரு காட்சியில் மட்டுமே சொல்லப்படுகிறது. அது போலவே உள்ளூர் காவல்துறை அதிகாரிக்கும் கடந்தகாலமிருக்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்ற செயல்களும் இது போல உலகம் அறியாதவையே.

வெஸ்டர்ன் திரைப்படங்களைப் போலவே இப்படமும் உருவாக்கபட்டிருக்கிறது. குறிப்பாக மதுவிடுதிக் காட்சிகள். நான்சிக்கும் கோப்லிக்கிற்குமான காதல் மிக நுட்பமாக விவரிக்கபடுகிறது. அவள் ரகசிய சந்திப்பிற்காகக் குதிரையில் வரும் போது கடந்து செல்லும் நிலப்பரப்பு கண்கொள்ளாதது. அவர்கள் இருவரும் விமானத்தில் சுற்றிவரும் காட்சியும் சிறப்பானது. அது ஹிட்ச்காக்கின் “North by Northwest” படத்தின் ஒரு காட்சியினை நினைவுபடுத்தியது.

கதை நடக்கும் விசித்திரமான ஊரும் அதன் மனிதர்களுமே படத்திற்குத் தனித்துவத்தைத் தருகிறார்கள்.  கோப்லிக்கை காதல் தான் மீட்கிறது. அது புதிய வாழ்க்கையை நோக்கி அவனைப் பயணிக்க வைக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2024 06:54

November 21, 2024

வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்

MacKenna’s Gold திரைப்படத்தை எனது பள்ளி வயதில் பார்த்தேன். 70 MM திரைப்படம். திரை முழுவதும் விரியும் காட்சிகள் தந்த அனுபவம் மறக்க முடியாதது. ஒளிப்பதிவாளர் ஜோசப் மெக்டொனால்ட் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையும் வியப்பூட்டும் சண்டைக்காட்சிகளும் இன்று வரை மனதை விட்டு அகலவேயில்லை. ஆண்டிற்கு ஒருமுறையாவது அந்தப் படத்தைத் திரும்பப் பார்த்துவிடுவேன். கிராண்ட் கேன்யனின் அழகு நிகரில்லாதது. 

படத்தின் டைட்டிலில் மெக்கன்னாஸ் கோல்ட்டின் கதை வில் ஹென்றி எனக் குறிப்பிடுவார்கள்.  ஒரு படம் மிகப்பெரிய வெற்றி அடைவதால் அந்தப் படத்தின் கதாசிரியர் வெற்றி பெறுவதில்லை போலும். மெக்கன்னாஸ் கோல்ட் எழுதிய ஹென்றி ஹாலிவுட்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவாகவில்லை. அவரது நான்கு நாவல்கள் திரைப்படமாக எடுக்கபட்டுள்ளன. ஆனாலும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுக்கவில்லை.

இரண்டு மூன்று புனைப்பெயர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார் வில் ஹென்றி. அதில் ஒன்று தான் மெக்கன்னாஸ் கோல்ட். 1963ல் வெளியான நாவலை 1967ல் படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கான கதைக்கருவை பூர்வகுடி இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள தங்கம் பற்றிய வாய்மொழிக் கதைகள் தொகுப்பிலிருந்து கண்டுபிடித்திருக்கிறார். அதுவும் ஜே. ஃபிராங்க் டோபி தொகுத்துள்ளApache Gold and Yaqui Silver நூலில் இடம்பெற்ற தகவல்களை மையமாகக் கொண்டே இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஹென்றி தங்கச் சுரங்கத் தொழிலாளியாகப் பணியாற்றியவர் என்பதால் சொந்த அனுபவம் தங்க வேட்டை பற்றிய நாவல் எழுத துணை செய்திருக்கிறது

வில் ஹென்றி எம்.ஜி.எம் ஸ்டுடியோவின் திரைக்கதைப் பிரிவில் பணியாற்றியவர் என்பதால் சொந்தப் பெயரில் எதையும் பத்திரிக்கையில் எழுத முடியாதபடி ஒப்பந்தமிருந்தது. ஆகவே புனைப்பெயர்களில் நாவல் எழுதியிருக்கிறார்.

மெக்கன்னா கோல்ட் படத்தின் கதை வில் ஹென்றியுடையது என்றாலும் திரைக்கதையை அவர் எழுதவில்லை. The Bridge on the River Kwai and HighNoon போன்ற திரைப்படங்களின் திரைக்கதையை எழுதிய கார்ல் ஃபோர்மேன் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். நாவல் வாசிப்பதற்குச் சுவாரஸ்யமானது. சினிமாவை விடவும் கூடுதல் தகவல்கள் மற்றும் நுணுக்கங்களுடன் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

”Are you greedy for gold, Mackenna?” என்பது தான் நாவலில் முதல்வரி. படத்தின் மையப்புள்ளியும் இதுவே

படத்தின் துவக்க காட்சியில் வரும் பூர்வகுடி இந்தியரான Prairie Dog யார் என மெக்கனாவிற்குத் தெரியாது. அவர்களுக்குள் மிகக் குறைவான உரையாடலே நடைபெறுகிறது. நாவலில் அவர்கள் நிறையப் பேசுகிறார்கள். லாஸ்ட் ஆடம்ஸ் டிக்கிங்ஸ் பற்றிப் பூர்குடி இந்தியர் குறிப்பிடுகிறார். அது வெறும் கட்டுக்கதை என்கிறார் மெக்கன்னா

படத்தில் வருவது போல அவர் ஒரு வரைபடத்தை க்ளென் மெக்கன்னாவிடம் காட்டுவதில்லை. ( படத்தில் அந்த வரைபடத்தில் பெரிதாக எதுவுமிருக்காது.) மாறாக மணலில் படம் வரைந்து விளக்குகிறார். அவரை நினைவு வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார். ஒவ்வொரு இடத்தையும் க்ளென் மெக்கன்னா சரியாக அடையாளம் சொல்கிறார்.

மூன்று வரைபடங்களை வரைந்து காட்டி சரியாகத் தங்கம் எங்கே உள்ளது. எப்படிப் போவது என்பதை Prairie Dog விளக்குகிறார். அதுவும் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் மாலை நேரத்தில், எழுந்து நிற்க முடியாத நிலையில் அந்தப் படத்தை வரைகிறார். மணலில் வரையப்பட்ட படத்தை மனதில் சரியாகப் பதிந்து கொள்ளும்படி திரும்பத் திரும்பச் சொல்கிறார். சினிமாவிற்கு ஏற்ற நல்ல காட்சி.

ஆனால் ஏன் அதைக் கார்ல் ஃபோர்மேன் மாற்றினார். தங்கம் துரத்தி வருகிற மெக்சிக கொள்ளைக்காரன் கொலராடோ கும்பலுக்கு அடையாளம் காட்ட வேண்டுமே என்பதால் மெக்கன்னா அந்த வரைபடத்தைத் தீயிலிட்டு எரிப்பது போலவும். எரிந்த துண்டினை அவர்கள் கண்டறிவது போலவும் மாற்றியிருக்கிறார். ஆனால் அதைவிடவும நாவலில் வரும் காட்சி பல மடங்கு மேலானது.

When one is old and without teeth and can no longer work or hunt, no one will care about him other than some white man like yourself. That is the one thing which I have never comprehended about your people. They do not turn out their old ones. It’s a strange weakness for a people so bloody in all other things, don’t you think?” என்று வெள்ளைக்காரர்களைப் பாராட்டுகிறார் Prairie Dog. படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இத்தாலிய நடிகர் எட்வர்டோ சியானெல்லி

தங்கத்திற்கான தேடலைச் சுற்றிப் பின்னப்பட்ட நிகழ்வுகள் நாவலை சுவாரஸ்யமாக்குகின்றன. படத்தில் இவற்றை மிகவும் சுருக்கமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பணயக்கைதியாக உடன் வரும் நீதிபதியின் மகள் இங்கா திரைக்கதையில் உருவாக்கபட்டிருக்கிறாள். மூன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக ஒடும் படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் கால்வாசியை துண்டித்துவிட்டு திரையிடச் செய்தார்கள். ஆகவே நிறைய விடுபடல்களை திரையில் காண முடிகிறது. புகழ்பெற்ற நடிகர்கள் பலரை துணைக்கதாபாத்திரமாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மெக்கன்னாஸ் கோல்ட் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பாதிப்பில் 1971ல் White Sun of the Desert திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதே தங்கம் தேடும் சாகசத்தை மையமாக் கொண்ட இன்னொரு ஹாலிவுட் படம் Garden of Evil.

படத்தில் கொள்ளைக்காரர்களில் ஒருவராக வரும் Keenan Wynn ஒரு வசனம் கூடப் பேசுவதில்லை. சேர்ந்து குடிக்கவும். சண்டையிடவும் செய்கிறார். ஒரு வசனம் கூட இல்லாவிட்டாலும் அவரது சிரிப்பு இன்றும் அவரை நினைவுபடுத்துகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2024 04:06

November 19, 2024

இரண்டு வழிகாட்டிகள்

Flaubert said: “Writing is just another way of living.”

எழுத விரும்புகிறவர்களுக்கு இது தான் முதல்பாடம்.

ஒரு கதையோ, கவிதையோ எழுத ஆசைப்படுகிறவர்களுக்கு அது குறித்த அறிமுகப்பாடங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அதற்காக எழுதப்பட்ட புத்தகங்களில் இரண்டு மிகவும் முக்கியமானது.

ஒன்று கவிஞர் ரில்கே எழுதிய Letters to a Young Poet,

Franz Xaver Kappus என்ற இளம் கவிஞனுக்கு ரில்கே எழுதிய பத்து கடிதங்களின் வழியாகக் கவிதையின் ஆதாரங்கள். நுட்பங்கள் மற்றும் கவிதையின் மொழி குறித்த தெளிவான எண்ணங்களை ரில்கே வெளிப்படுத்துகிறார். இளம் படைப்பாளி மீதான நிஜமான அக்கறையும் எழுதப்பட்ட புத்தகமது. கவிஞர்கள் மட்டுமின்றிக் கவிதையை ஆழ்ந்து புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் இதனை வாசிக்கலாம். இரண்டு விதமான பதிப்புகளாக இந்த நூல் வெளியாகியுள்ளது. ஒன்று ரில்கேயின் பதில்கள் மட்டும் கொண்டது. இரண்டாவது பிரான்சிஸ் எழுதிய கடிதங்களும் அதற்கு ரில்கே எழுதிய பதில்களும் கொண்டது.

Do not write love poems, at least at first; they present the greatest challenge. It requires great, fully ripened power to produce something personal, something unique, when there are so many good and sometimes even brilliant renditions in great numbers. Beware of general themes. Cling to those that your every- day life offers you. Write about your sorrows, your wishes, your passing thoughts, your belief in anything beautiful. Describe all that with fervent, quiet, and humble sincerity. In order to express yourself, use things in your surroundings, the scenes of your dreams, and the subjects of your memory. என்கிறார் ரில்கே.

இரண்டாவது நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியரான மரியோ வர்காஸ் யோசா எழுதிய Letters to a Young Novelist

இந்நூல் பதினொரு கட்டுரைகளில் கதை எழுதுவதற்கான நுட்பங்களை விவரிக்கிறது. நாவலாசிரியன் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் பொதுவாகக் கதை எழுதுவது பற்றியும் அதன் நுட்பங்களையுமே யோசா விளக்குகிறார்.

Experience is the source from which fiction flows என எளிமையாக விளக்கும் யோசா அது வெறும் வாழ்க்கைவரலாற்று பதிவில்லை என்பதையும் விவரிக்கிறார்.

Fiction is a lie covering up a deep truth: it is life as it wasn’t, life as the men and women of a certain age wanted to live it and didn’t and thus had to invent என்கிறார் யோசா.

முதல் அத்தியாயத்தில் யோசா சொல்லும் நாடாப்புழுவை படித்துப் பாருங்கள். பின்பு அதை மறக்கவே மாட்டீர்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2024 06:27

November 16, 2024

கலையின் மீதான பசி

ஃபிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் சிறுகதையில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு மனிதன் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறான். அவனொரு பட்டினிக்கலைஞன். அதாவது பணம் செலுத்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகப் பட்டினி கிடப்பவன்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவனைப் போன்ற பட்டினிக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் காட்சி நடத்தியிருக்கிறார்கள். பொதுவாகத் திருவிழா, கண்காட்சியிலோ, அல்லது அரங்கம் ஒன்றிலோ இவர்களின் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்குக் கட்டணம் உண்டு.

இவர்கள் அதிகப் பட்சம் நாற்பது நாட்கள் வரை பட்டினி கிடப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்காகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். இப்படியான பட்டினிக்கலைஞர்களில் ஒருவர் கூடப் பெண் கிடையாது.

பட்டினிகிடப்பவன் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்பதே நிஜம். அவன் கடவுளுடன் பகடையாடுகிறான் என்றே பார்வையாளர்கள் நினைத்தார்கள். தொடர்ந்து பட்டினி கிடந்து சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். சிலர் ஐந்தாறு நாட்களில் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு வெளியேறுவதும் நடந்திருக்கிறது.

பட்டினிக்கலைஞர்களுக்கான வரவேற்பு குறைந்து போன காலத்தைக் காஃப்காவின் கதை விவரிக்கிறது.

கதையின் முதல்வரியிலே இதைக் காஃப்கா குறிப்பிட்டுவிடுகிறார். கதையில் பட்டினிக்கலைஞன் சர்க்கஸ் ஒன்றின் கூடாரத்திற்கும் விலங்குகள் உள்ள பகுதிக்கும் இடையே ஒரு கூண்டில் அடைக்கப்படுகிறான். அவனை வேடிக்கை பார்க்க சிறுவர்களும் பெரியவர்களும் திரண்டிருக்கிறார்கள்.

அவன் ரகசியமாக எதையேனும் சாப்பிட்டுவிடுகிறானா என்று கண்காணிப்பதற்காகப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் நியமிக்கபடுகிறார்கள்.

காஃப்காவின் கதையில் அப்படித் தேர்வு செய்யப்படுகிறவர்கள் கசாப்பு கடைக்காரர்கள். பட்டினிக்கலைஞனை கண்காணிக்க மூன்று கசாப்புகடைக்கார்ர்கள் காத்திருக்கிறார்கள் என்பதில் அவரது கேலி வெளிப்படுகிறது.

உண்மையில் அது கேலி தானா. உலகம் எப்போதுமே இப்படித் தானே நடந்து கொள்கிறது. இரக்கமற்றவர்கள் முன்னால் தானே கருணைக்கான வேண்டுதல் நடைபெறுகிறது. கசாப்புக்கடையாளர்களின் பெருந்தன்மையை எப்படிப் புரிந்து கொள்வது.

பட்டினிக்கலைஞர்கள் தன்னை வருத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையாளர்களை ஏமாற்றுவதில்லை. மோசடி செய்வதில்லை. மாறாக அவர்கள் உடலை வசப்படுத்துகிறார்கள். சிங்கத்தைச் சர்க்கஸில் பழக்குவது போல உடலைத் தன்கட்டுக்குள் கொண்டுவர பழக்குகிறார்கள். உடல் எளிதானதில்லை. அது எழுப்பும் குரலை அவர்கள் பட்டினி எனும் சவுக்கை கொண்டு அடக்கிவிடுகிறார்கள் சிங்கம் பணிவதைப் போல உடலும் பணிந்துவிடுகிறது. நாற்பது நாட்கள் முடிந்த பிறகும் பட்டினிக்கலைஞன் உண்ணாவிரதத்தை தொடரவே விரும்புகிறான். நிர்வாகி அதை அனுமதிப்பதில்லை.

கதையில் வரும் பட்டினிக்கலைஞன் உண்ணாவிரத்தை ஒரு கலையாகக் கருதுகிறான். அவன் பார்வையாளர்களின் நம்பிக்கையை மதிக்கிறான். அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான்.

பட்டினிக்கலைஞனுக்குக் காவலாக இருப்பவர்கள் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீ ரகசியமாகச் சாப்பிடலாம் என்பது போலச் சீட்டு விளையாடுகிறார்கள். அச்செயல் அவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. கண்காணிப்பை விடவும் இச் செயல் கேவலமானது என நினைக்கிறான்.

அவன் எந்தச் சூழ்நிலையிலும், வலுக்கட்டாயமாக வற்புறுத்தினாலும், சிறிதளவு கூடச் சாப்பிடமாட்டான் என்ற நம்பிக்கையை அவர்கள் அவமதிப்பதாகவே நினைக்கிறான்.

இரவெல்லாம் அவனைக் கண்காணிக்கும் அந்தக் காவலர்கள் களைப்பில் அசதியில் உணவருந்துவதை அவன் காணுகிறான். அப்போது கூட அவனுக்குச் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதில்லை. அவனுக்குப் பிடித்த உணவு என்ற ஒன்றே கிடையாது.

அவனைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் மாறிவிட்டது. ஆனால் அவன் மாறவில்லை. அவன் தனது பட்டினியைக் கலையாக்க முடியும் என நம்புகிறான். உலகம் பட்டினிகிடப்பவனை ஒரு போதும் கலைஞனாகக் கருதாது. அவனது பட்டினியைப் புரிந்து கொள்ளாது. பட்டினியை கலையாக்குவதன் மூலம் அவன் மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் தேடுகிறான், கூடவே வருவாயையும். நடனம் போல இதுவும் உடலால் நிகழ்த்தப்படும் கலை என்றே நினைக்கிறான்.

ஃபிரான்ஸ் காஃப்காவின் கதைகளில் பசி முக்கியமான கருப்பொருளாக விளங்குகிறது. காஃப்கா தன்னையே கதையில் வரும் பட்டினிக்கலைஞனாக மாற்றியிருக்கிறார் என்றும் தோன்றுகிறது.

காஃப்காவின் கதை பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு அடுக்கு கூண்டில் இருப்பவனுக்கும் வேடிக்கை பார்க்கும் உலகிற்குமானது. வரலாற்றில் இந்தக் கூண்டு ஆஷ்விட்ஸ் போன்ற நாஜி முகாம்களாக உருமாறியதைக் காணுகிறோம்.

இன்னொரு அடுக்கில் பசிக்கும் உணவிற்குமான உறவை பற்றியது. செபாஸ்டியன் லெலியோ இயக்கிய தி வொண்டர் திரைப்படத்தில் அயர்லாந்தின் கிராமப்புறம் ஒன்றில் ஒரு சிறுமி பல நாட்களாக சாப்பிடாமலே உயிர்வாழுகிறாள். அவள் மீது சந்தேகம் கொள்ளும் ஊர்மக்கள் அதனைக் கண்டறிய ஒரு செவிலியை அனுப்புகிறார்கள். அந்தக் கதை பசியைப் பற்றிய வேறு பார்வையை நமக்கு உருவாக்குகிறது. காஃப்காவிடமும் இது போன்ற அணுகுமுறையே வெளிப்படுகிறது.

மூன்றாவது தளத்தில் பட்டினி கிடப்பவனை வேடிக்கை பார்க்கும் சிறுவர்களைப் பற்றியது. அவர்களுக்கு இது என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தும்.

நான்காவது இந்த நிகழ்ச்சியை நடத்துகிற ஏற்பாட்டாளன், அவனது திட்டமிடல். அவன் எடுக்கும் புகைப்படங்கள். அவனது விளம்பரங்கள். சோர்வில்லாத படி இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் தந்திரம் பற்றியது. அவன் அடுத்தவனின் துயரை கொண்டாட்டமாக மாற்றுகிறான் . அவனுக்குப் பட்டினி என்பது வருவாய்க்கான திறவுகோல்.

ஐந்தாவது அடுக்கில் முக்கியமானது நீண்ட நாட்களாகப் பட்டினிகிடந்தவன் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சாப்பிட அழைக்கபடும் போது மயக்கமடைவது. அந்தப் பகுதி வாசிப்பில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உலர்ந்த இலை போலாகிவிட்ட பட்டினிக்கலைஞனின் கை எலும்புகளை நம்மால் காண முடிகிறது. அவனைச் சுற்றிலும் கேட்கும் உரத்த இசை. உற்சாகக் கூச்சல்கள் எத்தனை போலியானது என்று நன்றாக உணர முடிகிறது.

ஆறாவது அடுக்கில் பட்டினி கலைஞனுக்குப் பதிலாக ஒரு சிறுத்தை கூண்டில் அடைக்கபடுவதும், கூட்டம் அதனை ரசிப்பதும் பற்றியது.

விலங்கை விடவும் சமூகம் மனிதனை கீழாக நடத்துகிறது. அவனைக் காட்சிப்பொருளாகி அவனது கண்ணீரை, வேதனையை, அவலத்தைக் கைதட்டி ரசித்துக் கொண்டாடுகிறது.

பட்டினி எப்படிக் கலையாகும். அப்படிப் பட்டினி வேடிக்கை பார்க்கபடுகிறது என்றால் அந்தச் சமூகம் மோசமானதில்லையா. அடுத்தவரின் பசி என்பது கேலிக்குரிய விஷயமா.

காஃப்கா இந்தக் கேள்விகளை எழுப்புவதில்லை. வாசிக்கும் நம்மை எழுப்பச் செய்கிறார்.

கதையில் வரும் பட்டினிக்கலைஞனுக்குப் பெயர் கிடையாது. அவன் ஒரு குறியீடு. அது போலப் பட்டினி கிடப்பது வயிற்றுப் பிரச்சனையாக மட்டுமின்றி. அங்கீகாரம், புகழ், வருவாய் இன்மை என்றும் புரிந்து கொள்ளலாம். தான் மற்றவர்களைப் போலக் கிடையாது என்று ஒரு கலைஞன் சமூகத்திற்கு நிரூபிக்க முயற்சிக்கிறான். அதன் ஒரு வழி தான் பட்டினிக்கலைஞனாவது.

மக்கள் ஏன் கலைஞர்களைச் சந்தேகப்படுகிறார்கள். கலையை உண்மையானதில்லை என்று நினைக்கிறார்கள். தன்னை வருத்திக் கொள்ளாத கலைஞர்கள் என்று உலகில் எவரேனும் இருக்கிறார்களா.

ஃபிரான்ஸ் காஃப்காவின் சிறுகதை 1922 ஆம் ஆண்டு வெளியானது. அவர் பட்டினிக் கலைஞரான ஜியோவானி சுசியால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதினார் என்கிறார்கள்.

காஃப்காவின் கதை வெளியான பிறகு, பெர்லினில் பட்டினி கலைஞர்கள் அதிகமானார்கள். 1926 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆறு பட்டினிக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெரிய உணவகங்களில் இது போலக் கூண்டுகளில் பசிமறந்தவர்களாக அமர்ந்து பட்டினிக்கலைஞர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.

பட்டினிக்கலைஞன் உண்ணாவிரதம் இருப்பதை எளிதான விஷயம் என்று சொல்கிறான். அது தன்னை வருத்திக் கொள்வது எளிது என்பதையே உணர்த்துகிறது.

அவன் துன்பத்தைக் கலையாக்க மாற்றுகிறான், உலகிடம் பகிர்ந்து கொள்கிறான். உலகம் பிறர் துயர்களைக் கலையின் வடிவில் அறிந்து கொள்கிறது. துன்பத்தின் ஒருதுளி கூடக் கலக்காத கலை என்று எதுவுமில்லை. துன்பம் என்பது ஒரு சுடர். விநோத வெளிச்சம்.

பொழுதுபோக்கின் மீதான அளவில்லாத மோகம் மற்றும் கலைத்தன்மையை நிராகரிக்கும் போக்கின் அடையாளமே கூண்டில் இடம்பெற்ற சிறுத்தை. மக்களுக்கு அது பயங்கரமான புதிய பொழுதுபோக்காக மாறுகிறது. பின்னொரு நாள் அதுவும்கைவிடப்பட்டுப் பட்டினிக்கலைஞனின் நிலையை அடையும். அப்போது இன்னொரு புதிய பொழுதுபோக்கிற்காக மக்கள் காத்திருப்பார்கள்.

இக்கதையில் பட்டினிக்கலைஞன் தான் செய்யும் கலையினை ‘முழுமையாக்க’  பட்டினியால் சாகத் தயாராகிறான். அப்படித்தான் ஃபிரான்ஸ் காஃப்காவின்  சொந்த வாழ்க்கையும் அமைந்திருந்தது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2024 02:43

November 14, 2024

எதுவும் குற்றமில்லை

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளில் மோசமான மேயரின் கதாபாத்திரம் தொடர்ந்து இடம்பெறுகிறது. அங்குள்ள அரசியல் சூழலின் அடையாளமது. Herod’s Law திரைப்படம் அதிகாரத்திற்கு வரும் எளிய மனிதர் எப்படி மோசமானவராக மாறுகிறார் என்பதை விவரிக்கிறது.

லூயிஸ் எஸ்ட்ராடா இயக்கிய Herod’s Law மெக்சிகோவின் PRI கட்சியின் ஆட்சியின் போது நடந்த ஊழல் பற்றிய அரசியல் நையாண்டி படமாகும்.

1940 களில் சான் பெத்ரோ நகரின் மேயர் மிக மோசமான முறையில் கொல்லப்படுகிறார். அங்கிருந்து படம் துவங்குகிறது. அந்த நகரில் குறுகிய காலத்திற்குள் மூன்று மேயர்கள் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அது குறித்த கடுமையான விமர்சனத்தை அரசு சந்திக்கிறது.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியின் மீதான விமர்சனத்தைத் தடுக்கும் வகையில், உடனடியாக ஒருவரை மேயராக நியமிக்க மாநில ஆளுநர் சான்செஸ் முடிவு செய்கிறார்.

இதை நிறைவேற்றும்படியாகத் தனது துணைச் செயலர் லோபஸுடம் உத்தரவிடுகிறார். அவரோ இதனைத் தன்னிடம் பணியாற்றும் ராமிரெஸுடம் ஒப்படைக்கிறார். அவர் நீண்ட காலம் கட்சிக்கு பணியாற்றிய அப்பாவியான யுவான் வர்கஸ் என்பவரைச் சிபாரிசு செய்கிறார்.

இங்கிருந்தே படத்தின் அரசியல் நையாண்டி துவங்கி விடுகிறது. கட்சியில் யாரும் எதற்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.

கட்சியின் தீவிர விசுவாசியான வர்கஸ் இதுவரை எந்தப் பொறுப்பிற்கும் வந்தது கிடையாது. அடிமட்ட நிலையில் கட்சிக்கு பணியாற்றியவர். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார்.

வர்கஸால் தனக்கு அளிக்கப்பட்ட பதவியை நம்ப முடியவில்லை. அவரது மனைவி குளோரியா புதிய வாழ்க்கை துவங்கி விட்டது என மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் ஒரு காரில் சான் பெத்ரோ நகரை நோக்கி செல்கிறார்கள்.

சான் பெத்ரோ மிகவும் பின்தங்கிய பகுதி. பூர்வ குடி விவசாயிகள் வாழும் மலைநகராகும். அங்கே மின்சாரம் கிடையாது. குடிநீர் வசதி, பள்ளி, மருத்துவமனை என எதுவும் கிடையாது. நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் புழுதியும், தூசியும் நிறைந்த அந்நகரம் கைவிடப்பட்ட பாழ்நிலம் போலக் காட்சியளிக்கிறது.

மேயர் அலுவலகத்தைச் சேர்ந்த பெக் அவர்களை வரவேற்று அழைத்துப் போகிறார். அந்தக் காட்சியில் வர்கஸ் அடையும் திகைப்பு அழகானது. அந்த ஊரே வேண்டாம் என ஒடிவிட நினைக்கும் அவனைக் குளோரியா தான் கட்டாயப்படுத்திப் பதவி ஏற்க வைக்கிறாள்.

மேயரின் அலுவலகம். வீடு. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவும் வேடிக்கையாக உள்ளன.

காலியான கஜானாவை வைத்துக் கொண்டு எப்படி நகரை நிர்வாகம் செய்வது என வர்கஸிற்குப் புரியவில்லை. ஆனால் சண்டை சச்சரவுகள் இல்லாத இடமாகவும், சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாகவும் மாற்றிக் காட்டுவேன் என்று உறுதியளிக்கிறான். அந்த வாக்குறுதியை ஊர்மக்கள் எவரும் பொருட்படுத்தவில்லை.

அடுத்தச் சில நாட்களில் அங்கு வசிக்கும் பூர்வகுடி விவசாயிகளையும் முந்தைய மேயர்கள் செய்த ஊழல்களையும் பற்றி வர்கஸ் அறிந்து கொள்கிறான்.

சான் பெத்ரோவில் ஒரு விபச்சார விடுதி நடைபெறுகிறது. அதை டோனா என்ற நடுத்தரவயதுப் பெண் நடத்துகிறாள். அந்த ஊரிலுள்ள பாதிரியார் பேராசை பிடித்தவர். அவர் ஒரு பாவத்திற்கு ஒரு பெசோவை வசூலிக்கிறார். ஊரில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவருக்கு வர்கஸை பிடிக்கவில்லை.

இந்த நிலையில் வர்கஸ் சான் பெத்ரோவின் மேம்பாட்டிற்கான நிதி கேட்டு தலைநகருக்குப் புறப்படுகிறான். வழியில் அவனது கார் பழுதடைந்து நிற்கிறது. அந்த வழியில் தனது வாகனத்தில் வந்த ஸ்மித் என்ற அமெரிக்கன் உதவி செய்கிறான். காரை பழுது நீக்கி கொடுத்ததிற்கு ஸ்மித் அதிகப் பணம் கேட்கிறான். கையில் பணமில்லாத வர்கஸ் தான் சான் பெத்ரோவின் மேயர் என்பதால் அங்கே வந்து வாங்கிக் கொள்ளும்படி உத்தரவிடுகிறான். ஸ்மித் அந்த நகருக்கு வந்து சேர்ந்து வர்கஸிற்கு மோசமான ஆலோசனைகள் வழங்குகிறான்

மெக்சிகோ அரசிற்கு அமெரிக்க ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களைக் கேலி செய்வதற்காகவே ஸ்மித் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தலைநகரில் அவன் கேட்ட நிதியை தருவதற்குப் பதிலாக அரசியல் அமைப்பு சட்ட நூலையும் ஒரு ரிவால்வரையும் பரிசாக அளிக்கிறார்கள்.

இதில் உள்ள சட்டத்தைப் பயன்படுத்தித் தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள்.

சட்டப்புத்தகமும் துப்பாக்கியும் இருந்தால் போதும் எந்த ஊரையும் நிர்வாகம் செய்துவிடலாம் என்பதை வர்கஸ் உணருகிறான். மெக்சிக அரசியல் அமைப்பு சட்டத்தின் “பயனற்ற” பக்கங்களைக் கிழித்து, எழுதப்பட்ட சட்டத்தை விரிவுபடுத்தித் தனக்கான சட்டங்களை வர்கஸ் உருவாக்கிக் கொள்கிறான்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் விவசாயிகள் மற்றும் விபச்சார விடுதி பெண்ணிடம் லஞ்சம் பெறத் துவங்குகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணங்கள் வேடிக்கையானவை. பணம் கொடுக்க முடியாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறான். நாட்கள் செல்லச் செல்ல வர்கஸ் சர்வாதிகாரி போல உருமாறுகிறான்

அவனும் அவனது மனைவியும் ஊழல் செய்வதற்குப் பல்வேறு தந்திரமான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களிடம் பணம் கொட்டுகிறது.

சான் பெத்ரோவில் அவன் வைத்தது தான் சட்டம். அவனைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என டாக்டர் அரசிற்குப் புகார் அளிக்கிறார்.

டாக்டர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டினை உருவாக்கி அவரைக் கைது செய்கிறான். உயிர் பிழைக்க வேண்டி டாக்டர் அவனிடம் சமரசம் செய்து கொள்கிறார்.

அவனை மதிக்காத டோனா அடியாளை வைத்து அவனை அடித்துப் போட முயலுகிறாள். ஆத்திரத்தில் அவளைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான் வர்கஸ் . அந்தக் கொலையை மறைக்க குடிகாரனான ஃபைல்மோனை கொலைகாரனாக மாற்றுகிறான். இந்தச் சதிக்கு திட்டமிட்டவர் டாக்டர் என்று கதை கட்டுகிறான். பின்பு தான் கைது செய்துள்ள ஃபைல்மோனை காரில் சிறைக்குக் கொண்டு செல்லும் போது அவனையும் கொன்றுவிடுகிறான்.

அப்பாவியாக அந்த நகருக்கு வந்த வர்கஸ் மிக மோசமான மேயராக உருமாறுவதுடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துவங்குகிறான். முயல் போல வந்தவன் ஓநாயாக மாறுவதை நகைச்சுவையாகப் படம் சித்தரிக்கிறது.

அவனது பதவியைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது. ஆனால் அதைத் தந்திரமாக முறியடிக்கிறான். வர்கஸ் போன்றவர்களை அழிக்கவே முடியாது. அவர்கள் எதையாவது செய்து அதிகாரத்தின் மேல்மட்டத்தை நோக்கி சென்றுவிடுவார்கள் என்பதைப் படம் உண்மையாகச் சித்தரிக்கிறது.

பெக் என்ற நகராட்சி செயலாளர் அரியதொரு கதாபாத்திரம். மேயர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் மாறுவதேயில்லை. அவரது வரவேற்பும் மாறுவதில்லை.

படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியானது. டாமியன் அல்காசர் வர்கஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதிகாரத்திற்கு வந்தவுடன் உருமாறிப் போகும் வர்கஸின் கதாபாத்திரம் மெக்சிகோவிற்கு மட்டும் உரியதில்லை. உலகெங்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் பதவிக்கு வருகிறார்கள். ஊழல் செய்கிறார்கள். பின்பு பதவி நீக்கபடுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை இன்னொருவர் அதைவிடக் கூடுதலாக. மோசமாகச் செய்ய ஆரம்பிக்கிறார் என்பதே மாறாத நிதர்சனம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2024 03:04

November 13, 2024

கவளம்

எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம்.

இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் எனது நான்கு நூல்கள் வெளியாகின்றன.

கவளம் நூலிற்கான புதிய அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். மிக அழகாக உள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2024 23:52

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.