S. Ramakrishnan's Blog, page 23
October 2, 2024
திருச்சி புத்தகத் திருவிழாவில்
திருச்சி நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

திருச்சி புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 26 மற்றும் 27ல் எனது அனைத்து நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மலேசியப் பயணம்
ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம், சுங்கைசிப்புட் ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். எனது நீண்டகால நண்பர்.

கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள். நல்ல அறை. சுவையான உணவு. நண்பர்கள் சந்திப்பு. கலந்துரையாடல் என மூர்த்தி அனைத்தையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது துணைவியாரும் பயணம் முழுவதும் உடனிருந்து அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும். எங்களது பயணத்தில் உடன்வந்து உதவிகள் செய்த நாடகக் கலைஞரும் ஆசிரியருமான விஸ்வா மற்றும் அவரது துணைவியாருக்கும் நன்றி

சுங்கை சிப்புட்டில் சகோதரி செண்பகவள்ளி தனது வீட்டில் சிறப்பான விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அன்பும் நன்றியும்.



நிகழ்வுகளுக்கு இடையில் பினாங்கின் புதிய பாலம், ஜார்ஜ் டவுனில் உள்ள இந்திய மியூசியம். புத்தர் கோவில், தைப்பிங்கில் உள்ள லேக் கார்டன்ஸ், கோலக்கங்சாரிலுள்ள முதல் ரப்பர் மரம், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை, விக்டோரியா பாலம், ஈவூட் புதிய தமிழ்ப்பள்ளி என நிறைய இடங்களுக்கும் சென்று வந்தேன்.
எழுத்தாளர் புண்ணியவான், பாலமுருகன், பச்சைபாலன், தயாஜி எனப் படைப்பாளிகள் பலரையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. கூலிம் நவீன இலக்கியக் களம் சார்பில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஒரு இலக்கிய உரையினையும் ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலை நண்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. குமாரசாமி இதனை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து கொடுத்தார். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.










மலாக்காவில் நடைபெற்ற நிகழ்வில் எனக்கு நவீன இலக்கியச் செம்மல் என்ற விருதினை வழங்கினார்கள். இதற்கான பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்பட்டன.


September 25, 2024
ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை
பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது.
ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது.
ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை தனக்கு விருப்பமானவர் எவராவது படிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார். ஒரு வேளை படிக்க விரும்பாவிட்டால் அந்த ரொட்டியைச் சாப்பிட்டுவிடுங்கள் என்றும் ஆலோசனை சொல்கிறார்.
கவிதையின் கடைசி வரி சிறப்பானது. கவிதையோ, ரொட்டியோ தேவைப்படாதவனை என்ன செய்வது என்று கேட்கும் கவிஞன் அவன் வாழ்வில் மோசமான வழியில் செல்கிறான் என்பதைத் தவிர என்று முடிக்கிறார்.
கவிதையும் ரொட்டியும் இரு எதிர்நிலைகள் இல்லை. இரண்டு வாழ்வின் ஆதாரங்கள் என்கிறது இக்கவிதை.
கவிதைகளை உண்பது போல வேறு எதுவும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யாது என்று மார்க் ஸ்ட்ராண்ட் ஒரு கவிதையில் சொல்கிறார். கவிதையை உண்ணுபவனின் வாயில் மை வழிவதாக அக்கவிதை துவங்குவதாக நினைவு.
September 24, 2024
காதலின் சாவி.
கிரேக்கத் தொன்மத்தில் வரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் (Pyramus and Thisbe) காதல் கதையின் பாதிப்பில் தான் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டும் பகையான குடும்பத்திற்குள் நடக்கும் காதலையே பேசுகின்றன. ரோமானிய கவிஞர் ஓவிட் இக்கதையைத் தனது மெட்டாமார்போசிஸில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கிழக்குப் பாபிலோனில், ராணி செமிராமிஸ் நகரத்தில், அடுத்தடுத்த வீட்டில் வசித்துவரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் பெற்றோர்கள் நீண்டகாலமாக வெறுப்பும் பகையும் கொண்டிருந்தார்கள். ஆனால் காதலர்களான பிரமிஸ் மற்றும் திஸ்பே இரண்டு வீட்டிற்கும் பொதுவாக இருந்த சுவரிலிருந்த துளை வழியாக ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள். பெற்றோர்களின் கண்டிப்பு பற்றிப் புகார் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இரவு பிரியும் போது சுவரை முத்தமிட்டுக் கொண்டு பிரிகிறார்கள். இப்படியாக அவர்கள் காதல் வளர்க்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள், ஆனால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஒருநாள் முடிவு செய்கிறார்கள்
நகர வாயில்களுக்கு வெளியே, நினஸ் மன்னரின் கல்லறைக்கு அருகில் உள்ள ஒரு மல்பெரி மரத்தடியில் இரவு சந்திக்கத் திட்டமிடுகிறார்கள்.

அதன்படி, திஸ்பே மாறு வேடமிட்டு வீட்டை விட்டு வெளியேறி வருகிறாள். நினஸின் கல்லறைக்கு அருகில் உள்ள மல்பெரி மரங்களின் தோட்டத்திற்கு வந்து சேருகிறாள். அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. மங்கிய நிலவொளி. பிரமஸ் எங்கேயிருக்கிறான் எனத் தெரியாமல் அவனைத் தேடுவதற்காகத் தனது முகத்திரையை அகற்றுகிறாள். அப்போது அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிங்கம் வந்திருந்தது. அச்சிங்கம் அவளைத் தாக்க முற்படவே தப்பியோடி பாறைகளுக்கு இடையே ஒளிந்து கொள்கிறாள்.
வெறி கொண்ட சிங்கம் இரத்தம் தோய்ந்த தாடையால் அவளது முகத்திரையைக் கிழித்து எறிகிறது. அங்கு வந்த பிரமஸ் கிழிந்துகிடந்த இரத்தக் கறை படிந்த முகத்திரையைப் பார்க்கிறான் அது திஸ்பேயின் முகத்திரை என அறிந்து அதிர்ச்சி அடைகிறான். சிங்கம் அவளைக் கொன்றுவிட்டதாக நினைத்து வருந்தி தனது வாளால் தற்கொலை செய்து கொள்கிறான்.
திஸ்பே அவனைத் தேடி வருகிறாள். அங்கே பிரமஸ் இறந்துகிடப்பதைக் கண்டு அதே வாளால் தன்னையும் மாய்த்துக் கொண்டு இறந்து போகிறாள். இதை அறிந்த அவர்கள் பெற்றோர்கள் உடலைக் கைப்பற்றுகிறார்கள். பின்பு காதலர்கள் ஒரே கல்லறையில் ஒன்றாக அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்தக் காதலர்களின் ஒப்பற்ற காதலின் நினைவாகக் கடவுள் வெள்ளையாக இருந்த மல்பெரி மரத்தின் பழங்களைச் சிவப்பாக மாற்றினார் என்கிறார்கள். அது முதலே மல்பெரி பழம் சிவப்பாக உள்ளது என்கிறது கிரேக்கக் கதை.
கிரேக்கப் புராணங்களில் இது போல மலரின், பழங்களின் நிறம் மாறுவது தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. நர்சிசஸ் இறந்துவிடுகிறான் அவனது இரத்தத்திலிருந்து நார்சிசஸ் மலர் முளைத்ததாகச் சொல்கிறார்கள். இது போலவே அடோனிஸின் இரத்தக் கறை படிந்த வெள்ளை ரோஜாக்கள் காரணமாகவே பூமியில் சிவப்பு ரோஜாக்கள் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பிரமஸ் மற்றும் திஸ்பேவின் வீட்டுத் துளையின் பார்வையில் அர்ஜென்டினா எழுத்தாளர் என்ரிக் ஆண்டர்சன் எம்பெர்ட் குறுங்கதை ஒன்றினை எழுதியிருக்கிறார். இவர் குறுங்கதைகளை எழுதுவதில் முன்னோடியான எழுத்தாளர். Woven on the Loom of Time என அவரது குறுங்கதைகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

அவரது குறுங்கதையில் பாபிலோனில் இரண்டு பழைய வீடுகளுக்கு இடையே இருந்த சுவர் ஒன்றில் சிறிய துளை விழுகிறது. சில வாரங்களில் அந்தத் துளை வாய் போன்ற வடிவம் கொள்கிறது. நாளடைவில் அது காது போன்ற வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. பின்பு கண் வடிவமாகிறது.
இரண்டு பக்கம் நடப்பதையும் ஆசையாகக் கவனிக்கத் துவங்குகிறது. காதலர்கள் ரகசியமாகச் சந்தித்துக் கொள்ள மாட்டார்களா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பயனற்ற காத்திருப்பு எனப் புரிந்து கொள்கிறது. பிரமஸ் மற்றும் திஸ்பே பற்றி ஒருபோதும் அறியாத அந்தத் துளையைக் காலவோட்டத்தில் சிலந்தி வலை படர்ந்து மூடிவிடுகிறது.
எம்பெர்ட் சுவரில் விழுந்த துளையால் வசீகரிக்கப்படுகிறார். அதை ஒரு கதாபாத்திரமாக உருவாக்குகிறார். தனது சிறிய கதையின் வழியே கிரேக்க தொன்மத்தை நோக்கி நம்மை பயணிக்கச் செய்கிறார். குறுங்கதை என்பது ஒருவகை நினைவூட்டல். ஒரு மறு உருவாக்கம்.
நான் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் கதையை சிங்கம் வழியாகவே எழுத விரும்புவேன். அது தான் கதையின் முடிச்சு. சிங்கம் இல்லாவிட்டால் அவர்கள் காதல் கதை மகிழ்ச்சியாக முடிந்திருக்கும். சிங்கம் நிஜமாக வந்திருக்குமா என்பதே கேள்வி தான். அப்படி நம்ப வைத்திருக்கலாம்.
பிரமஸ் மற்றும் திஸ்பே கதையை படிக்கும் போது பஷீரின் மதிலுகளில் வரும் சிறைச்சாலைச் சுவர் நினைவிற்கு வருகிறது. பெண் கைதியின் காதலும் அதைப் பஷீர் சொன்னவிதமும் அழகானது. அதிலும் மலரே காதலின் சாட்சியமாகிறது. அவர்கள் சுவரை முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
பெற்றோரின் பகை சுவரை எழுப்பி அவர்களின் காதலைத் தடுக்கிறது. ஆனால் துளை காதலின் சாவியைப் போல அவர்கள் உரையாட வழியை உருவாக்குகிறது. காதல் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். அது தான் சுவரிலிருந்த துளை.
வாய், கண் காது எனத் துளை உருக் கொள்வது கதையின் சிறப்பு. இக்கதையை வாசிக்கும் போது சர்ரியலிச ஓவியம் ஒன்றைப் பார்த்த அனுபவம் உருவாகிறது.
September 21, 2024
குயிங் மிங் திருவிழாவின் போது
மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியை மிக நீண்ட ஒற்றை ஓவியமாக யாரேனும் வரைந்திருந்தால் எப்படியிருக்கும் என யோசித்திருக்கிறேன்.
அப்படியான ஒரு ஓவியம் தான் ALONG THE RIVER DURING THE QINGMING FESTIVAL. பனிரெண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் சீனாவின் தலைசிறந்த பத்து ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பை வரைவது சீன ஓவியத்தின் மிக உயர்ந்த கலைவடிவமாகக் கருதப்படுகிறது. , மிகத் துல்லியமாக விவரங்களை வரையறுக்கும் கோடுகள் மற்றும் தூரிகையின் பயன்பாடு இதன் சிறப்பாகும். இந்த வகை ஓவியத்தை மௌனமான கவிதை என்று சொல்கிறார்கள்.




இது போன்ற சுருள் ஓவியங்களைத் தோக்கியோ அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன். சுவற்றில் மாட்டப்பட்டுள்ள ஓவியங்களை ரசிப்பது போலச் சுருள் ஓவியங்களை ரசிக்க முடியாது. அதற்குக் கூடுதல் நேரமும் கவனமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஓவியத்தினைப் புரிந்து கொள்வதற்கான கையேடு ஒன்றையும் தருகிறார்கள். அதன் உதவியோடு நாம் நிதானமாகப் பார்வையிட்டால் ஓவியத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம்.
கிங்மிங் திருவிழாவின் போது ஆற்றங்கரையில் காணப்படும் காட்சிகளை ஓவியர் ஜாங் செதுவான் சுருள் ஓவியமாக வரைந்திருக்கிறார். மடக்குவிசிறி போல அடுக்கடுக்காக விரியக்கூடியது இந்த ஓவியம்.
12ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் அதன் துல்லியமான சித்தரிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதலுக்காகப் புகழ் பெற்றுள்ளது.
இன்றுள்ள சினிமா தொழில்நுட்ப வசதியால் சிங்கிள் ஷாட்டில் முழுபடத்தையும் உருவாக்க முடிகிறது. அது போன்ற ஒரு பாணியே இந்தத் தொடர் சுருள் ஓவியம். தலைநகரான பியான்ஜிங்கில் வசித்த மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் ஓவியம் மிக அழகாகச் சித்தரிக்கிறது
அந்தக் காலகட்ட ஆடைகள் மற்றும் வாகனங்கள். ஆற்றங்கரை நெடுகிலும் காணப்படும் பல்வேறு மக்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள். பாலங்கள், அகழிகள் மற்றும் பாதைகள், வீடுகள் போன்றவற்றை ஜாங் செதுவான் சிறப்பாக வரைந்திருக்கிறார், கயிறுகள் மற்றும் கொக்கிகள் கட்டும் விதம் கூடத் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது
இந்தச் சுருள் ஓவியம் 10.03 அங்குல உயரமும் 17.22 அடி அகலமும் கொண்டது. இது பட்டுத் துணியில் ஒரே வண்ணமுடைய மையில் வரையப்பட்டிருக்கிறது, இதில் சித்தரிக்கப்பட்டுள்ள நகரம் கைஃபெங், அந்த நகரத்தின் தெருக்கள், வீடுகள் மிகத் துல்லியமாகச் வரையப்பட்டுள்ளன

இந்த ஓவியம் சாங் வம்ச சீனாவின் நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை விளக்குவதற்கும் சீனாவின் செழிப்பான வணிக நடவடிக்கையின் சாட்சியமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஓவியத்தில் 1695 மனிதர்கள், 28 படகுகள், 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் 30 கட்டிடங்கள், 20 வாகனங்கள், 9 நாற்காலிகள் மற்றும் 170 மரங்கள், இரண்டு பாலங்கள் இருப்பதாகச் சொல்கிறார். பேராசிரியர் வலேரி ஹேன்சன்.
ஓவியம் ஐந்து பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள்ளது. . முதலாவது அமைதியான இயற்கைக்காட்சிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து வானவில் பாலத்தை மையமாகக் கொண்ட ஒரு பகுதி, அது சந்தைக் காட்சியுடன் காணப்படுகிறது. மூன்றாவது பகுதி நகர வாயிலுக்கு அருகில் காணப்படும் பரபரப்பான செயல்பாட்டை விவரிக்கிறது, நான்காவது பகுதியில் ஆற்றின் இருபுறமும் இயற்கைக்காட்சிகளுடன் காணப்படுகிறது. அதில் ஒரு பெரிய மரப்பாலம் ஒன்றும் சித்தரிக்கபடுகிறது. கடைசிப் பகுதியில் ஏரியின் அழகிய நீர்பரப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது.
“கிங்மிங் திருவிழா” என்பது கல்லறை துடைக்கும் திருநாளாகக் கருதப்படுகிறது. ” இந்த விழாவின் போது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளைத் துடைப்பதன் மூலம் அவர்களுக்கான மரியாதையைச் செய்கிறார்கள். மூதாதையர் வழிபாடு எப்போதுமே சீன நாகரிகத்தின் தனித்துவமிக்க அங்கமாக இருந்து வருகிறது,

நகரவாழ்வின் உன்னதங்களாகக் கட்டிடங்கள் சித்தரிக்கபட்டுள்ளன. குறிப்பாக இரண்டு மாடி உள்ள வீடுகள். அதன் அழகான முகப்புகள். இன்றிருப்பது போலக் கட்டிடங்களின் முன்பகுதியில் கடைகள் செயல்படுகின்றன. பின்பகுதி குடியிருப்பாகப் பயன்படுத்தபட்டிருக்கிறது. குடியிருப்புக் கட்டிடங்கள் நாற்கரமாக உள்ளன. கடைகளுக்கான அடையாளமாகக் கொடிகள், சின்னங்கள் காணப்படுகின்றன.
இதில் அதிகாரிகள், விவசாயிகள், வணிகர்கள், மருத்துவர்கள், மந்திரவாதிகள், துறவிகள், தாவோயிஸ்டுகள், காவல் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், படகோட்டிகள், மரம் வெட்டுபவர்கள், தண்ணீர் சுமப்பவர்கள் எனப் பலரும் காணப்படுகிறார்கள். .வானவில் பாலத்தின் மீதும் ஆற்றங்கரையோரங்களிலும் உள்ள மக்கள் படகை நோக்கிக் கூச்சலிட்டுச் சைகை செய்கிறார்கள். ஆற்றில் மீன்பிடி படகுகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் நிரம்பியுள்ளன, வீதியில் சிறுவர்கள் ஒடியாடுகிறார்கள். கோவேறு கழுதைகள் மற்றும் பிற கால்நடைகள் காணப்படுகின்றன. குடிப்பது, அரட்டை அடிப்பது, படகுகளைத் தள்ளுவது போன்ற செயல்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. சிலர் மூடுபல்லக்கினைச் சுமந்து செல்கிறார்கள். கடைகளின் முன் எரியும் விளக்குகள். வணிகர்களின் கூச்சல், கடந்து செல்லும் ஒட்டகங்கள் என அந்தக் காலத்தினைக் கேமிராவில் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருப்பது போலத் துல்லியமாக வரைந்திருக்கிறார் ஜாங் செதுவான்

Along the River during the Qingming Festival ஓவியத்தின் Animated Version இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் திருவிழாக் காட்சிகள் நம் கண்முன்னே விரிகின்றன. உறைந்து போன மனிதர்கள் இயக்கம் கொள்கிறார்கள். படகுகள் நீரில் அசைகின்றன. குடையோடு நதிக் கரை நோக்கி மக்கள் நடக்கிறார்கள். 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஓவியம் நிகரற்ற கலைப்படைப்பாக மட்டுமின்றி முக்கியமான வரலாற்று சின்னமாகவும் கொண்டாடப்படுகிறது.
••
September 20, 2024
கற்பனையின் இனிமை
ஹயாவோ மியாசாகியின் தி பாய் அண்ட் தி ஹெரான் அனிமேஷன் படத்தின் உருவாக்கம் குறித்த ஆவணப்படமே Hayao Miyazaki and the Heron. இரண்டு மணி நேரம் ஒடக்கூடியது.

2013 இல் மியாசாகி திரையுலகிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவை அறிவித்தார். அவர் இப்படி அறிவிப்பது புதிதில்லை. திரும்பவும் புதிய படம் ஒன்றைத் துவங்கிவிடுவார் என்று அவரது நண்பர்கள் கேலி செய்தார்கள். அதை உண்மையாக்குவது போலவே சில மாதங்களுக்குப் பின்பாக ஹெரான் கதையினைப் படமாக்கும் ஆசையை வெளிப்படுத்தினார் மியாசாகி.
அதிலிருந்து துவங்கி பத்து ஆண்டுகள் இந்தக் கனவு எப்படி நனவாகிறது என்பதை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள்
மியாசாகியின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கோவிட் தொடர்பான தாமதங்களை எதிர்கொண்டது, படத்தின் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் என அவரது வாழ்வையும் சினிமாவையும் ஒரு சேர ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் மியாசாகி பயணிக்கிறார், மேலும் அவற்றைப் பிரிக்கும் கோட்டினை அழித்தும் விடுகிறார். வானில் இடி இடிப்பதைக் காணும் போது இறந்து போன தனது நண்பன் இடியாக மாறிவிட்டதாகச் சொல்கிறார் மியாசாகி. இப்படி அன்றாட வாழ்க்கையைக் கற்பனையால் அளவிடும் அவரது பார்வைகளும் செயல்பாடுகளும் புதிதாக இருக்கின்றன.
எண்பது வயதிலும் சினிமாவின் மீது மியாசாகி கொண்டுள்ள ஈடுபாடு வியப்பளிக்கிறது. அவரது ஸ்டுடியோ கிப்லி செயல்படும்விதம். அங்குள்ள இளம் வரைகலை ஓவியர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது.
அனிமேஷன் படங்கள் என்பது வெறும் கற்பனையில்லை. அதற்குள் சொந்த வாழ்வின் பிரதிபலிப்புகள் மறைந்திருக்கின்றன என்பதை இப்படம் சிறப்பாக உணர்த்துகிறது.

ஒரு திரைக்கதையுடன் தொடங்குவதற்குப் பதிலாக, மியாசாகி ஒரு ஓவியத்துடன் தனது படத்தைத் துவங்குகிறார், பின்னர் படத்திற்கான முழுமையான ஸ்டோரி போர்டுகளை உருவாக்கி, அதைக் கொண்டு இறுதி திரைவடிவத்தை உருவாக்குகிறார். கையால் வரைந்த பின்பே கணிணி உதவி கொண்டு படமாக்குகிறார். படம் அவரது பணி நெறிமுறைகளைப் துல்லியமாக விளக்குகிறது. அனிமேஷன் படத்தில் ஐந்து வினாடிகள் இடம்பெறும் காட்சியை முடிக்க அவர்களுக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது.
சிறுவயதிலிருந்தே மியாசாகி தாயின் அன்பிற்காக ஏங்கியவர். நோய்வாய்ப்பட்ட அவர் 10 வயதுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர் கணித்தார்கள். ஆனால் எப்படியோ பிழைத்துக்கொண்டார். தனது வாழ்விற்கான நோக்கமே ஓவியம் வரைவது தான் என்று நம்பினார். அந்த எண்ணம் அவரது எண்பது வயதிலும் அப்படியே உறுதியாக வெளிப்படுகிறது.
ஒரு தாவரம் வளர்வது போல நிதானமாக, கண்ணுக்குத் தெரியாமல் தி பாய் அண்ட் தி ஹெரான் படமும் வளர்க்கிறது. இதற்கிடையில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இறந்து போகிறார்கள். உடன் பணியாற்றிய கலைஞர்கள் இறந்து போகிறார்கள். நீண்டகாலம் வாழ்வதன் வேதனையை அவர் அனுபவிக்கிறார். இத் துயரம் அவரை முடக்கிப் போடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு மீண்டும் சினிமாவிற்குள் கரைந்து போகிறார்.
அவரது மேஜையின் அடியில் வரைந்து திருப்தியில்லாமல் கிழித்துப் போட்ட காகிதங்கள் குவிந்துகிடக்கின்றன. அது வெறும் சலிப்பில்லை. முழு திருப்தி வராமல் எதையும் செய்யக்கூடாது என்பதன் அடையாளம்
படம் முழுவதும் மியாசாகியின் உதட்டில் ஒரு சிகரெட் இருக்கிறது. பென்சிலும் சிகரெட்டும் தான் அவரது பிரிக்க முடியாத பொருட்கள். அவரது பிறந்தநாளைச் சிறுவர்கள் ஒன்று கூடிக் கொண்டாடுகிறார்கள். எண்பது வயதிலும் நல்ல ஆரோக்கியத்துடன் உடல்வலிமையோடு இருக்கிறார். விறகு உடைக்கும் காட்சிகளில் அவரது உடல்வலிமை சிறப்பாக வெளிப்படுகிறது. அவரது வேகமான நடைப்பயிற்சி மற்றும் அந்திச் சூரியனை ரசிக்கும் மனநிலை, வெந்நீர் குளியல், நண்பர்களுடன் பயணம் செய்வது என உடல் அளவிலும் மனதளவிலும் அவர் உற்சாகமாகவே இருக்கிறார். ஆனாலும் மரணம் குறித்த எண்ணம் அவரை ஆட்டுவிக்கிறது.
மியாசாகி மற்றும் அவரது மறைந்த நண்பர் இசாவோ தகாஹாட்டாவிற்கும் இடையேயான உறவை படம் ஆழமாக ஆராய்கிறது
இசாவோவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடுகிறார். அவரோடு பழகிய இனிய நாட்களை நினைவு கொள்கிறார். இருவரும் ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். ஒன்றாகத் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார்கள். தனது நெருக்கமான நண்பன் என்று அவரைக் குறிப்பிடுகிறார். இந்த நினைவுகளைத் திரட்டி படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றாக மியாசாகி மாற்றுகிறார்.

தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தின் பல காட்சிகள் அவரது சொந்த வாழ்வில் நடந்தவை. அதைப் புரிந்து கொள்வதற்கான கையேடு போல இந்த ஆவணப்படம் உள்ளது.
அவருடன் நீண்டகாலமாகப் பணியாற்றும் தயாரிப்பாளர் மற்றும் ஓவியர்களின் துணையும் நட்பும் படத்தில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி பாய் அண்ட் தி ஹெரான் படம் தியேட்டர்களில் வெளியாகும் நாளின் போதான அவரது மனநிலை. ஆஸ்கார் விருதை வென்ற தருணம். தொலைக்காட்சியில் அதை நேரடியாகக் கூட மியாசாகி காண்பதில்லை. அறிவிப்பு வரும் போது அவர் கழிப்பறையில் இருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற செய்தி அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறது. தனது வேலை முடிந்துவிட்டது என்பதைப் போலச் சிரிக்கிறார்.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு மூன்றாம் முறையாகத் தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தைப் பார்த்தேன். இப்போது படம் மிகவும் சோகமாகவும் ஆழ்ந்த தத்துவார்த்த வெளிப்பாடு கொண்ட படமாகவும் உணர்ந்தேன். முதன்முறையாக இப்படத்தை ஐமாக்ஸ் திரையில் பார்த்த போது அடைந்த மகிழ்ச்சியை இப்போது அடைய முடியவில்லை. மாறாக ஒரு கலைஞன் தனது சொந்தவாழ்வின் துயரங்களை எப்படிக் கலையாக உருமாற்றுகிறான். எப்போது அது உன்னதமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

படத்தின் ஒரு காட்சியில் அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியங்களைக் கொண்டு வந்து காட்டி வியக்கிறார்கள். ஆனால் மியாசாகியிடம் அந்த வியப்பு இல்லை. அவருக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் பணியின் மீது மட்டுமே கவனம் குவிந்திருக்கிறது. தான் விரும்பியபடி கதாபாத்திரத்தை உருவாக்கப் போராடுகிறார். தூக்கத்திலும் அதே சிந்தனையில் உழலுகிறார். அவரது விருப்பத்தை உடன் பணியாற்றுகிறவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிறப்பாகத் துணை செய்கிறார்கள்.
படத்தின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தடைகள் குறித்த என மியாசாகி வருந்தும் போது அவரது தோற்றத்தை மாற்றினால் புறஉலகிலும் மாற்றம் வந்துவிடும் என்கிறார் நண்பர். உடனே தனது தாடி, மீசையைச் சவரம் செய்துவிட்டு புதிய தோற்றத்தில் வருகிறார் மியாசாகி. அந்த முகத்தில் முதுமையின் ரேகைகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொள்கிறார் மியாசாகி. அது தான் அவரது வெற்றியின் அடையாளம்.
மேதைகளுக்கு ஒய்வு கிடையாது. அவர்கள் தனது முந்தைய படைப்பை விடவும் சிறப்பான ஒன்றை செய்துவிட முடியும் எனப் போராடுகிறார்கள். முடிவில் வெற்றியும் பெறுகிறார்கள். அதன் சாட்சியமே மியாசாகி.
மியாசாகியின் 80 வயதை நாம் பார்க்கிறோம். அவரது கைகள் நடுங்கத் தொடங்குகின்றன. ஆனால் அவர் ஒய்வை விரும்பவில்லை. புதிய முயற்சிகளில் இறங்குகிறார். வேலையே அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
தி பாய் அண்ட் தி ஹெரான் இசையமைப்பாளர் கென்ஷி யோனேசு தனது சிறுவயதிலிருந்து ஆதர்ச நாயகனாக உள்ள மியாசாகியை சந்தித்து உரையாடும் போது அவரை ஒரு துருவ நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார். அது உண்மையான பாராட்டு.
குழந்தைகளுடன் விளையாடும் போது மியாசாகி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். மாறும் பருவகாலங்களை ரசிப்பது. தனது அலுவலகத்தில் வளர்ந்து நிற்கும் மரத்தை வியந்து பார்ப்பது, கொரோனா காலத்தில் யாரும் இல்லாத விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது. மழைக்குள் குடையோடு வேகமாக நடப்பது என அழகான தருணங்களால் நிரம்பியிருக்கிறது இந்த ஆவணப்படம்.
••
September 18, 2024
பிறப்பின் பின்னால்
அகோதா கிறிஸ்டோஃப் ஒரு ஹங்கேரிய எழுத்தாளர். இவரது The Illiterate, என்ற கட்டுரை நூல் வாசிப்பின் மீதான அவரது ஆர்வம் மற்றும் எழுத துவங்கிய நாட்கள் பற்றியது.

I read. It is like a disease என்ற நூலின் முதல் வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசிப்பில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பொருந்தக்கூடிய வரியது.
இதில் அவர் சிறுவயதில் கையில் கிடைத்த எல்லாவற்றையும் படித்த நாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அப்போது அவர் மீது வீட்டில் வைக்கபட்ட குற்றசாட்டு வேறு வேலைகள் எதையும் செய்யாமல் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே.

புத்தகம் படிப்பது என்பது உதவாத விஷயம். வீட்டு வேலைகளில் இருந்து தப்பிக்கும் வழி என்று அவரது குடும்பத்தினர் நினைத்தார்கள். அந்த எண்ணம் இன்றைக்கும் பல குடும்பங்களில் உள்ளது.
புத்தகம் படிப்பது போலவே கதை சொல்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். அவர்கள் வீட்டிற்குப் பாட்டி வரும் நாட்களில் அவள் பாட்டியை கதை சொல்ல விடமாட்டாள். தான் சொல்லும் கதைகளைக் கேட்கும்படி வற்புறுத்துவாள். மனதில் இருக்கும் கதை சொல்லும் போது எப்படி எல்லாம் வளர்ச்சி அடைகிறது என்பது அவளுக்கு வியப்பாக இருக்கும்.
எனது கிராமத்தில் பல வீடுகளில் இப்படிச் சிறுவர்கள் பெரியவர்களுக்குக் கதை சொல்வதைக் கண்டிருக்கிறேன். சில வீடுகளில் சிறுவர்களைப் பயமுறுத்த உன்னைத் தவிட்டுக்கு வாங்கினோம். நீ எங்கள் வீட்டில் பிறக்கவில்லை என்று பயமுறுத்துவார்கள். இதை உண்மை என நம்பிய பையன் அல்லது பெண் அழுவதைக் கண்டிருக்கிறேன். இதே போன்ற நிகழ்வு ஒன்றை கிறிஸ்டோப் எழுதியிருக்கிறார்.
நம் பிறப்பின் பின்னால் ஒரு ரகசியமிருக்கிறது என்று யாரோ சொல்ல ஆரம்பித்தால் உடனே நாம் நம்பிவிடுகிறோம். அது இன்றும் மாறவேயில்லை. இது தான் கதையின் ஆதாரப்புள்ளி என்கிறார் அகோதா
பிரிவுத்துயர் தான் அவரை எழுத வைக்கிறது. பிரிவை தாங்க முடியாத போது மனம் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கிறது. அந்த மீட்சியின் வடிவமாகவே எழுத்து உருவாகிறது.
எழுதுவதை ஆரம்பிப்பது எளிது. ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பது தான் உண்மையான சவால். விடாப்பிடியாத. எழுத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு தீவிரமாக எழுதிக் கொண்டேயிருப்பது முக்கியமானது. பலநேரங்களில் எழுத்து அங்கீகரிக்கப்படுவதில் தாமதம் தடை ஏற்படும். ஆனால் அதைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத்தில் செயல்படுகிறவர்களே வெற்றியடைகிறார்கள் என்கிறார் அகோதா கிறிஸ்டோஃப்
இது அவரது அனுபவத்தின் பாடம். எழுத்தின் மீது ஆர்வம் கொள்ளும் இளையோருக்கான உண்மையான அறிவுரை.
September 17, 2024
மீன்களின் நடனம்
குறுங்கதை
அந்த அறையில் முன்பு குடியிருந்தவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் வண்ணமீன்கள் வளர்த்திருக்கிறார். அறையைக் காலி செய்து போகும் போது கண்ணாடித் தொட்டியை அப்படியே விட்டுவிட்டுப் போயிருந்தார்.
ராஜன்பாபு அந்தக் கண்ணாடித் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பெரியதொரு தொட்டி. அதற்குள் பாசியேறிய கூழாங்கற்கள். அறுந்து போன பிளாஸ்டிக் டியூப். மீன் தொட்டியின் வெளியே மார்க்கர் பேனாவால் ஜெலின் என்று எழுதப்பட்டிருந்தது. அது மீனின் பெயரா. அல்லது மீன் நினைவுபடுத்தும் பெண்ணின் பெயரா எனத் தெரியவில்லை.
ராஜன்பாபு அந்தப் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அதுவே மீன் நீந்துவது போலதானிருந்தது.
ஒருவர் எப்போதும் மீன் வளர்ப்பதை நிறுத்திக் கொள்கிறார். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யாரும் கேட்பதில்லை.

ராஜன்பாபு இரண்டு முறை மீன் வளர்ப்பதை நிறுத்தியிருக்கிறான். அந்த முடிவை எடுப்பதற்கு அவன் பல நாட்கள் யோசனை செய்தான். அவனுக்குள் குற்றவுணர்வு ஏற்பட்டது. இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கவும் முடியவில்லை.
சிறிய விஷயங்களில் முடிவு எடுப்பது கடினமானது என்பதை அப்போது உணர்ந்தான்.
ஒருவன் மீன் வளர்ப்பதை நிறுத்துவது என்பது எளிமையான செயலில்லை. உலகின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் ஒன்றைக் கைவிடுவதன் அடையாளமது.
வண்ணமீன்களை வளர்ப்பதற்கு வேண்டுமானால் ஏதோவொரு காரணம் இருக்கலாம். ஆனால் மீன் வளர்ப்பதை நிறுத்துவதற்கு வெளியே பகிர முடியாத, பகிர விரும்பாத காரணம் நிச்சயம் இருக்கக் கூடும்.
ஒருவேளை ஆசையாக வளர்த்த மீன்களில் ஒன்று தொட்டிக்குள் செத்து மிதப்பதைக் கண்ட நாளுக்குப் பிறகு தான் அந்த முடிவை எடுத்திருப்பார்களா. ராஜனுக்கு அப்படியான அனுபவம் இருந்தது.
வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பிய இரவில் அவனது வளர்ப்பு மீன்களில் ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்தது. அவனுக்குத் தொட்டியில் மிதந்த மீனை வெளியே எடுக்கத் தைரியம் வரவில்லை.
அதே தொட்டியிலிருந்த மற்ற மீன்கள் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தன. அது ராஜனை எரிச்சல் படுத்தியது. இரவு முழுவதும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
காலையில் மீன்தொட்டியைத் தூக்கிக் கொண்டு மொட்டைமாடியில் வெயில்படும்படியாக வைத்தான். அவனது நோக்கம் பூனை தொட்டியிலுள்ள மீன்களைப் பார்க்க வேண்டும். தொட்டிக்குள் இருக்கும் எந்த மீன் பூனைப் பார்த்தாலும் பதற்றமாகிவிடும். அது தான் அதற்குத் தரும் தண்டனை.
இரண்டு நாட்களுக்குப் பின்பு மொட்டைமாடிக்குப் போன போது வெறும் தொட்டியாக இருந்த்து. அதிலிருந்த மீன்கள் என்னவாகின என்று தெரியவில்லை.
ஆனால் இந்த புதிய அறைக்கு வந்தவுடன் காலியாக இருந்த கண்ணாடித்தொட்டி அவனது மீன் வளர்க்கும் ஆசையை மறுபடி தூண்டியது.
யாரோ விட்டுச் சென்ற கண்ணாடி தொட்டியில் இன்னொருவர் மீன் வளர்க்கும் போது அது முந்தியவரின் விருப்பத்தைத் தொடர்வதாக மாறிவிடாதா என ராஜன்பாபு யோசித்தான்..
அவனைப் போன்று மீன் வளர்க்க விரும்புகிறவர்கள் தோற்றத்தில் அமைதியானவர்கள் போலத் தோன்றும் குழப்பவாதிகள். அவர்கள் உண்மையில் மீன்களுடன் பேச விரும்புகிறார்கள். மீன்களிடமிருந்து சில பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.தனது தனிமையைப் போக்கிக் கொள்ள மீன்கள் மட்டுமே இருந்தால் கூடப் போதும் என நினைக்கிறவர்கள்.
கண்ணாடி தொட்டியில் தனக்கு விருப்பமான இரண்டு மீன்களை வாங்கி நீந்த விட்டான். அந்த மீன்களில் ஒன்றை அவன் ஜெலின் என்றே அழைத்தான். இன்னொரு மீனுக்குப் பெயர் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான்.
தொட்டிக்குள் அந்த மீன்கள் நீந்தும் போது அந்த அறையில் இதற்கு முன்பு வசித்தவன் நினைவில் வந்து கொண்டேயிருந்தான்.
ஒரே தொட்டிக்குள் இருந்தாலும் இரண்டு மீன்களும் ஒரே வயதுடையதில்லை.
ஒரு அறையில் ஒரு மனிதனும் இரண்டு மீன்களும் வசிக்கின்றன என்றால் அதை மூவர் வசிக்கும் இடமாகத் தானே கருத வேண்டும். அவன் அப்படித்தான் கருதினான்.
உண்மையில் மீன்கள் நீந்துவதில்லை. அவை விநோதமான முறையில் நடனமாடுகின்றன. அந்த நடனத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இரண்டு மீன்களும் ஒன்றுக்கொன்று இணையாக நடனமாடும் போது ஏற்படும் வியப்பும் மகிழ்ச்சியும் நிகரில்லாதது.
திடீரென இரண்டு மீன்களில் ஒன்று மேல் நோக்கிச் செல்வதாக நடனமாடுகிறது இன்னொன்று கீழ் நோக்கி வருவதாக நடனமாடுகிறது. இரண்டும் சந்திக்கும் புள்ளி மாறிக் கொண்டேயிருக்கிறது. மீன்களின் நடனத்திற்குள் ரகசியம் ஒளிந்திருக்கிறது.
பகலை விடவும் இரவில் மீன்கள் அதிகம் அமைதியற்றுப் போகின்றன. தனது அறையை ராஜன்பாபு ஒரு கண்ணாடித்தொட்டி போல நினைத்தான். அதற்குள் அவனும் ஒரு மீன் போலவே அலைந்து கொண்டிருந்தான்.
கண்ணாடிச் சுவரின் விளம்பு வரை தனது மூக்கால் உரசும் மீன் உண்மையில் எதையோ சொல்ல விரும்புகிறது. மீன் தனது சமநிலையைப் பராமரிக்கிறது, பல நேரங்களில் மிகவும் மெதுவாக நகர்கிறது. இயக்கமற்றது போலக் காட்டிக் கொள்கிறது. அது அவன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

மீன்களின் நடனத்தைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்கள். மீன்களுக்கு நினைவு உண்டா. நினைவு மறதி உண்டா.
நினைவு மறதி கொண்டது போலச் சில வேளைகளில் நடந்து கொள்கிறதே.
தங்க மீன்களுக்குக் குறுகிய கால நினைவாற்றல் இருப்பதாக நம்புகிறார்கள். , அதனால் தானோ என்னவோ மீன் வளர்க்கிறவரைப் பார்க்கும் போது அவை உற்சாகமடைகின்றன.
கண் பார்வையில்லாத டால்பின் ஒன்றை ஒரு நாள் தொலைக்காட்சியில் பார்த்தான். அந்த டால்பினை இன்னொரு டால்பின் வழிநடத்துகிறது. இரண்டு ஒன்றாக நீந்துகின்றன. ஒன்றாகத் தண்ணீருக்குள் மறைகின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன்னை அறியாமல் ராஜன் அழுதான்.
புத்தகம் படிப்பது போல ஆசையாக, கவனமாக, அவன் மீன்தொட்டியின் அருகில் அமர்ந்து அதன் நடனத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மீன்களின் உருவம் மறைந்து அலையும் இரு சிறுகோடுகள் போல மாறின. பின்பு அதுவும் மறைந்து அவனது அகத்தில் சிறியதொரு அசைவு. நகர்வு. ஆனந்தம் ஏற்படுவதை உணர்ந்தான்.
இது போதும் , இது போதும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
ஒரு நகரம் மனிதனைக் கைவிடும் போது அவனது அறை மீன்கள் தனது நடனத்தால் அவனை உற்சாகப்படுத்துகின்றன.
தொட்டியில் உள்ள மீன்கள் யாவும் சிறுமிகள் என்று ராஜன்பாபு நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்துக் கொள்வது கூடுதல் சந்தோஷம் தருவதாக இருந்தது.
••
September 16, 2024
ரிக்யூவின் தேநீர்
ஜப்பானிய தேநீர் கலையின் மாஸ்டராகக் கருதப்படுகிறவர் சென் ரிக்யூ. துறவியான இவர் தேநீர் தயாரிப்பதையும் பகிர்வதையும் கலையின் நிலைக்கு உயர்த்தினார். உலகெங்கும் தேநீர் உற்சாகம் தரும் பானமாக அருந்தப்பட்ட போதும் ஜப்பானில் தான் அது கலையாக மாறியது. 16 ஆம் நூற்றாண்டில் இந்த மாற்றம் ஏற்பட்டது.

ரிக்யூவின் காலத்தில் தேநீர் என்பது சாமானியர்கள் குடித்த பானமில்லை. தேநீர் குடிப்பது அரசின் உயர் அதிகாரிகளும், பௌத்த மதகுருக்களுக்கும் மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. அதுவும் அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள் கௌரவிக்கப்படுவதற்காகத் தேநீர் விருந்து நடைபெற்றது.
ரிக்யுவுக்கு முன், ஜப்பானியத் தேநீர் விழா ஆடம்பரமாக இருந்தது. அதை மாற்றி அலங்கரிக்கப்படாத குடிசையில் நடைபெறும் எளிய நிகழ்வாக ஆக்கியவர் ரிக்யூ.
ரிக்யூவின் தேநீர் விழாவில் கலந்து கொள்ள வருகிறவர்களும் எளிய உடையில் தான் வரவேண்டும். மன்னராக இருந்தாலும் ஆடம்பர உடைகள் அனுமதிக்கபடாது. அது போல தேநீர் கூடத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடைவாளை வெளியே விட்டுச் செல்ல வேண்டும். தேநீர் அருந்துதல் சமாதானத்தின் அடையாளம். அங்கே ஆயுதங்களுக்கு இடமில்லை.
தேநீர் தயாரிக்கப்படும் பாத்திரங்களை அவர் கலைப்பொருளாக உருவாக்கினார். இவற்றை ரிகு சோஜிரோ பகுதி கைவினைஞர்களைக் கொண்டே செய்தார். அது போலவே தேநீர் அருந்தியபடி மலர்களை ரசிக்கும்படியாகச் செய்தார். இதற்காக இகேபானா கலையினைத் தேநீர் சடங்குடன் இணைத்துக் கொண்டார்.
பொன்னிறம் மற்றும் அடர் வண்ணங்கள் கொண்ட தேநீர் கோப்பைகளுக்குப் பதிலாக இயற்கையில் காணப்படும் பழுப்பு, பச்சை மற்றும் சாம்பல். மற்றும் மங்கலான வண்ணங்கள் கொண்ட கோப்பைகளை ரிக்யூ பயன்படுத்தினார். இதற்கு முக்கியக் காரணம் கோப்பையின் வண்ணங்களில் நம் கவனம் சிதறக் கூடாது. எவ்விதமான கவனச்சிதறலும் இல்லாமல், நாம் தேநீரை ருசித்து அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.
இந்தியாவில் தேநீரின் சுவையை விடவும் அதன் சூடு மற்றும் உடனடியாகத் தரும் உற்சாகம் காரணமாகவே மிகவும் புகழ்பெற்றிருக்கிறது.. தேநீர் கடை இல்லாத ஊரே இந்தியாவில் கிடையாது. ஆனால் நம்மிடம் தேநீர் கலை உருவாகவில்லை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் உண்கலன்கள் மற்றும் சமையல் பாத்திரங்களின் வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை. இது போலவே கோவிலின் மடப்பள்ளி மற்றும் அங்கே தெய்வத்திற்காகத் தயாரிக்கப்படும் உணவுகள். அதன் தயாரிப்பு முறை, அங்கே அனுமதிக்கபடாத விஷயங்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் வெளியாகவில்லை.
உணவு கலையாக மாறுவது எளிதானதில்லை. அதிலும் தேநீர் போல எல்லோராலும் எளிதாக அருந்த முடிகிற, எளிதில் கிடைக்கிற ஒரு பானத்தைக் கலையாக மாற்றியது வியப்பளிக்கவே செய்கிறது.
இன்றைய ஜப்பானில் இந்தச் சடங்கு மரபின் தொடர்ச்சி போல நடைபெறுகிறது. ஜப்பானியப் பெரிய நகரங்களில் கிஸ்ஸடென் என அழைக்கப்படும் டீரூம்களை விடவும் அதிகமாக ஸ்டார்பக்ஸ் மற்றும் இத்தாலியக் காபி கடைகள் காணப்படுகின்றன.

ரிக்யூவிற்கு முன்பே தேநீர் தயாரிப்பதும் அருந்துவதும் ஜப்பானில் புகழ்பெற்றிருந்தது. அதை ரிக்யூ மறுவரையறை செய்தார் என்கிறார்கள். குறிப்பாக ரிக்யூ வடிவமைத்த தேநீர் கூடங்கள். மற்றும் தேநீர் குடிப்பதற்கான விசேச கோப்பைகள். தேயிலைத் தூள் வைக்கப்படும் கொள்கலன் தேநீர் தயாரிப்பதற்கான விசேச பாத்திரங்கள். தேநீர் தயாரிக்கபடும் முறை என அனைத்திலும் அவர் அழகியலை உருவாக்கினார். குறிப்பாகத் தேநீர் பருகுவதை இயற்கையோடு இணைந்த கலைச்செயல்பாடாக மாற்றினார்.
தேநீர் தயாரிப்பதையும் தேநீர் அருந்துவதையும் ஜென் போதனைகளின் வடிவமாக்கினார் ரிக்யூ.
ஜப்பானில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை நிலையிலிருந்த நேரத்தில். ரிக்யூ தனது கடைசித் தேநீர் விழாவை ஏப்ரல் 21, 1591 அன்று நடத்தினார்,
மன்னர் ஹிதேயோஷி உத்தரவால் அந்த விழா முடிந்த உடனேயே செப்புகு எனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அதற்கு முன்பாகத் தேநீர் தயாரிக்கும் கலன்களை நண்பர்களுக்குப் பரிசாக வழங்கினார். தனது தேநீர் கோப்பையை உடைத்து நொறுக்கினார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது ஒரு கவிதையை வாசித்துக் காட்டினார்.
ஹிதேயோஷி ரிக்யூவை தற்கொலை செய்து கொள்ளக் கட்டளையிட்டார் என்ற உண்மை இன்னமும் வெளிப்படவில்லை. பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
உங்களுடைய சொந்த மனவுறுதியே உங்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய சிறந்த ஆசான் என்கிறார் ரிக்யூ. அந்த மனவுறுதியின் வெளிப்பாடே அவரது மரணம்.
மன்னர் ஹிதேயோஷி ரிக்யூவிற்கான நட்பும் உறவும் புதிரானது. முன்கோபியான ஹிதேயோஷிவை ஒரு குழந்தையைப் போல ரிக்யூ நடத்தினார் என்கிறார்கள்.
ஒரு முறை ரிக்யூ நடத்தும் அசகாவோ தேநீர் விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டு மன்னர் ஹிதேயோஷி அதில் கலந்து கொள்ளச் சென்றார்.
தோட்டத்தின் வழியாகத் தேநீர் குடிலை நோக்கி நடந்து வரும் பாதையில் பல ஒழுங்கற்ற வடிவ கற்கள் சீரற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்தன. அதற்குக் காரணம் முழுமையடையாத பாதையின் வழியே தான் நாம் நடக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குவதே.
ஒரு மூங்கில் துண்டைப் பயன்படுத்தி ரிக்யூவால் செய்யப்பட்ட பூந்தொட்டியில் சிறிய விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. விருந்தினர் ஒருவர் அதைச் சுட்டிக்காட்டியபோது, ‘இந்தத் தண்ணீர்தான் உயிர் ‘ என்றார் ரிக்யூ .
மார்னிங் க்ளோரிஸ் எனப்படும் அசகாவோ மலர்கள் கொண்ட பெரிய தோட்டம் அங்கே இருந்தது. அசகாவோ மலரைத் தமிழில் அடும்பு என்பார்கள். நீல நிறமானது

ரிக்யூவின் தேநீர் குடிலை சுற்றிய தோட்டத்தில் ஒரு அசகாவோ மலர் கூட இல்லை. அத்தனையும் பறிக்கப்பட்டிருந்து. அவர் தன்னை வரவேற்க அசகாவோ மலர்கள் இல்லை என்று கோபம் கொண்டார். தன்னை ரிக்யூ அவமதிப்பதாக நினைத்தார்
ஆனால்அவர் தேநீர் குடிலுக்கு வந்தவுடன் அறை இருளடைந்தது. . வெளியே இலைகள் சலசலக்கும் சத்தம், பறவைகள் கீச்சிடும், ஓசை கேட்டது. பின்பு ஜன்னலின் சிறிய துளை வழியாகப் பிரகாசமான வெளிச்சம் உள்ளே நுழைந்தது. அந்த வெளிச்சம் சென்ற திசையினை ஹிதேயோஷியின் கண்கள் பின்தொடர்ந்தன.
அங்கே சுவரில் ஒரு மலர் குவளையில் ஒரேயொரு அசகாவோ மலர் மட்டுமே இருந்தது. வெளிச்சம்பட்டு அந்த ஒற்றை மலர் பேரழகுடன் ஒளிர்வதைக் கண்ட ஹிதேயோஷி மயங்கிப் போனார்.
நாம் ஒரே நபரை அடிக்கடி சந்தித்தாலும், அந்த நபருடனான ஒவ்வொரு சந்திப்பையும் வாழ்வில் ஒரேயொரு முறை மட்டுமே கிடைத்த பொக்கிஷமாகக் கருதி, செயல்பட வேண்டும் என்கிறார் ரிக்யூ. அதன் அடையாளமே இந்தத் தேநீர் விருந்து நிகழ்ச்சி.
பணிவு மற்றும் எளிமையில் அழகு காண்பது என்பதே உயர்வானது என்பதை ரிக்யு அனைவருக்கும் நினைவூட்டினார்.
தேநீர் பாத்திரங்களில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளைத் துலக்கினாலும், இதயம் இன்னும் தூய்மையற்றதாக இருந்தால் என்ன பயன் என்று கேட்கிறார் ரிக்யூ.
தேநீர் குடிப்பவர்களில் எத்தனை பேர் தனது இதயத்தின் தூய்மையைப் பற்றி நினைக்கிறார்கள் சொல்லுங்கள்.
••
September 14, 2024
மலேசியப் பயணம்
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன்.
பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
