S. Ramakrishnan's Blog, page 27
August 8, 2024
கிழவர்களின் விளையாட்டு
புதிய குறுங்கதை.
இரண்டு கிழவர்களும் தினமும் பூங்காவில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருவர் கையில் சிவப்பு பிடி கொண்ட குடை வைத்திருப்பார். மற்றவர் பச்சை நிற கைப்பிடி கொண்ட குடை. ஒருவர் அடர்ந்து நரைத்த தாடியுடன் இருப்பார். மற்றவர் தினசரி முகச்சவரம் செய்து மீசையில்லாமல் இருப்பார். இருவரும் சரியாக மாலை நான்கு முப்பதுக்குப் பூங்காவிற்குள் நுழைவார்கள். அவர்களுக்கான அதே சிமெண்ட் இருக்கையில் அமர்வார்கள்

மீசையில்லாதவர் கொண்டு வந்த பிளாஸ்கில் இருந்து காபி ஊற்றி இருவரும் குடிப்பார்கள். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு படிப்பார்கள். பகல் வெளிச்சம் குறைந்து மின்விளக்குகள் எரிய ஆரம்பிக்கும் வரை படிப்பார்கள். பின்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள். குடும்ப விவகாரங்களைப் பற்றி மெல்லிய குரலில் பேசிக் கொள்வார்கள். செல்போன் பேசியபடியே நடைப்பயிற்சி செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்பு மரம் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
வீடு திரும்பப் புறப்படும் போது சிறிய விளையாட்டினை மேற்கொள்வார்கள். அதாவது மீசையில்லாத தாத்தா தான் வைத்திருந்த பச்சை குடையினைத் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்து அவரது குடையை வாங்கிக் கொள்வார். தாத்தாக்களின் குடை என்பது வெறும் பொருளில்லை. அது ஒரு ஆறுதல். உலகம் தராத பாதுகாப்பைக் குடை தந்துவிடும் என்ற நம்பிக்கை. நண்பனின் குடையோடு நடக்கத் துவங்கும் போது இரண்டு தாத்தாக்களும் சிறுவர்களாகி விடுவார்கள். நண்பனின் குடையை வீட்டிற்குக் கொண்டு செல்வது என்பது நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றது தானே.
மறுநாள் அவர்கள் அதே பூங்காவில் சந்தித்து அவரவர் குடையைப் பெற்றுக் கொள்வார்கள். அன்று பூங்காவிலிருந்து கிளம்பும் போது தாடி வைத்த தாத்தா தனது பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை மீசையில்லாத தாத்தாவிடம் கொடுத்து அவரிடமிருந்த ஐந்து ரூபாய் நாண‘யத்தை வாங்கிக் கொள்வார். இதுவும் ஒரு விளையாட்டே.
இப்படியாக அவர்கள் ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறியதாகத் தங்களுக்கான விளையாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
திருப்பித் தருவதற்கு ஏதாவது ஒன்றிருக்கும் வரை தான் வாழ்க்கையின் மீது விருப்பம் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
பெரிய உலகில் இது போன்ற சிறிய நிகழ்வுகள் தன் போக்கில் ஆனந்தமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
••
August 5, 2024
கிறுகிறுவானம்
எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

August 1, 2024
தாத்தாவின் புகைப்படங்கள்
தனது தாத்தாவிற்குச் சொந்தமான குடும்பத்தின் கோடைக்கால வீட்டில், பழைய உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்கு நடுவே இருந்த பை ஒன்றைக் கண்டுபிடிக்கிறான் இகோர்.

அதில் நிறையப் புகைப்படச்சுருள்கள் காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலுள்ள அந்தப் புகைப்படச்சுருளை இன்றுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு மீள் உருவாக்கம் செய்கிறான். அந்தப் புகைப்படங்கள் வியப்பளிக்கின்றன.

சோவியத் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான தனது தாத்தா லியோனிட் புர்லாகாவின் இளமைக்காலச் சாட்சியமாக உள்ள அந்தப் புகைப்படங்களை ஆராயத் துவங்குகிறான்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு நினைவு அழிந்து போன தாத்தாவிடம் புகைப்படங்களைக் காட்டி விளக்கம் கேட்கிறான். அவருக்குத் தன்னை மட்டுமே தெரிகிறது. படம் பிடிக்கப்பட்ட இடம், மற்றும் படத்திலிருப்பவர் பற்றிய நினைவுகள் மறந்து விட்டன.
அந்தப் புகைப்படங்களைப் பாட்டி காணுகிறாள். இளமையான தாத்தாவைக் கண்டு எவ்வளவு அழகாக இருந்திருக்கிறீர்கள் என்று வியக்கிறாள். அந்த அழகு இப்போது எங்கே போய்விட்டது என்று கேலி செய்கிறாள்.
ஒரு புகைப்படத்தில் தாத்தா பைப் புகைக்கிறார். பாட்டி அதைப் பார்த்துவிட்டு நீங்கள் புகைப்பீர்களா.. இத்தனை வருஷம் தெரியாமல் போய்விட்டதே என்று கோவித்துக் கொள்கிறாள்.

புகைப்படங்கள் கால ஒட்டத்தில் ரசம் அழிந்து போவது போல மனித நினைவுகளும் அழிந்து போகின்றன என்கிறார் தாத்தா. அவரது நினைவிலிருந்த மனிதர்கள். இடங்களை அடையாளம் கண்டு கொள்ளும் பேரன் அவரது திரையுலக வாழ்வினையும் அவர் எடுத்த படங்களையும் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த முயலுகிறான்
இந்த முயற்சியின் விளைவே Fragile memory (2022) என்ற ஆவணப்படம். சோவியத் ஒன்றியத்தில் இயங்கிய திரைப்பட நிறுவனங்கள். இயக்குநர்கள். நடிகர்கள் குறித்தும். அன்றைய அரசு திரைத்துறையை எப்படித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியது என்பது பற்றியும் இகோர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்
தனது தாத்தாவின் இளமையான தோற்றமும் தனது தோற்றமும் ஒன்று போல இருப்பதைக் கண்டு இகோர். மகிழ்ச்சி அடைகிறான்
எண்பது வயதான தாத்தாவின் அன்றாட வாழ்க்கை. காது கேளாத அவருடன் நடக்கும் உரையாடல். தாத்தாவோடு பணியாற்றிய இயக்குநர்களைத் தேடி பயணம் செய்து விபரங்களைச் சேகரிப்பது என இகோரின் தேடலும் ஆவணப்படுத்துதலும் சிறப்பாக உள்ளது

சோவியத் சினிமா பள்ளியில் ஒளிப்பதிவு பயின்று லியோனிட் புர்லாகா ஒடேசா ஃபிலிம் ஸ்டுடியோவில் 1964 முதல் 1999 வரை பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் ஜோச ப்ராட்ஸ்கியின் நண்பராக இருந்திருக்கிறார்.
படத்தின் ஒரு காட்சியில் பழைய திரைப்படங்களின் படச்சுருள்கள் கேன் கேனாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை யாரும் பராமரிக்கவில்லை. தூசி படிந்து சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. ஒரு சிற்பம் போலவோ, ஓவியம் போலவே சினிமா பாதுகாக்கப்படுவதில்லை. பல்வேறு அரிய திரைப்படங்களின் மூலச்சுருள்கள் அழிந்து போய்விட்டன.
தனது இளமைக்காலப் புகைப்படங்களையும் தான் எடுத்த திரைப்படங்களையும் பற்றி நினைவு கூறும் போது புர்லாகா முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அபூர்வமானது. ஒரு காட்சியில் தாத்தாவால் தனது சொந்த மகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை. மரம் தனது உதிர்ந்த இலையை அடையாளம் கண்டு கொள்ளுமா. நினைவு வைத்திருக்குமா. நினைவற்ற நிலையில் மனிதர்கள் நிழல் போலாகி விடுகிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் பழைய புகைப்படங்களின் வழியே காலம் மீட்டெடுக்கப்படுகிறது. நாம் எவரெவர் நினைவில் எப்படிப் பதிந்து போயிருக்கிறோம் என்ற தேடல் உருவாகிறது. கலைந்த மேகங்கள் போலப் புகைப்படத்தில் காணப்படும் சிதைவுகளைத் தாத்தா ரசிக்கிறார்.

படத்தில் தாத்தாவை விடவும் பாட்டி அதிக நினைவாற்றலுடன் இருக்கிறாள். பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறாள். இன்றைய தலைமுறை தாத்தாவை மதிப்பதில்லை. அவரது பிறந்தநாளில் கூட வாழ்த்து சொல்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாள். இது புர்லாகாவின் வருத்தம் மட்டுமில்லை. உலகெங்கும் உள்ள சிறந்த படைப்பாளிகள் முதுமையில் கைவிடப்பட்டவர்களாகத் தனிமையில் வாழுகிறார்கள். இறந்து போகிறார்கள்.
புர்லாகாவின் ஒளிப்பதிவு பாணி தனித்துவமாகயிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படங்களுக்கே அதிகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சோவியத் மற்றும் உக்ரேனிய சினிமாவின் 50 ஆண்டுகளையும், சோவியத் ஒன்றியத்தின் வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்கும் விதமாக ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
July 30, 2024
புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில்
புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன.

இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன்.


எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன.
வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
July 29, 2024
காஃப்காவின் சுழலும் தலை
காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். காஃப்காவின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக நான் எழுதிய கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. (28.7.24) தமிழ் இந்து நாளிதழுக்கும் மண்குதிரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

கோவை புத்தகத் திருவிழாவில்
கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம்.

விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன்.
கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. மின் இணைப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. காலை உணவுக்கு( 600 ரூபாய் + வரி ) கட்டணம் வைத்திருக்கிறார்கள். மதிய சாப்பாடு (1000 ரூபாய் + வரி ) பொதுவாக விடுதிகளில் காலை உணவு இலவசமாகவே வழங்குவார்கள். இவர்கள் அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.
கோவையில் நல்ல சைவ உணவகங்கள் இருக்கின்றன. அதுவும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் பீளமேடு பகுதியிலே சிறந்த உணவகங்கள் இருப்பதால் மூன்று வேளையும் வெளியே தான் சாப்பிட்டேன்.
நண்பர் மூர்த்தி மூன்று நாட்களும் உடனிருந்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

வெள்ளிகிழமை மாலை விஷ்ணுபுரம் அரங்கிற்குச் சென்றேன். அஜிதனைச் சந்தித்து அவரது எழுத்து குறித்த பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
விஷ்ணுபுரம் அரங்கில் அமர்ந்து போகன்சங்கர், சுகுமாரன், கோகுல்பிரசாத் உடன் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ், மலையாளத் திரையுலகம். எழுத்தாளர்களின் சினிமா அனுபவங்கள், கு.அழகிரிசாமி கதைகள் எனச் சுவாரஸ்யமாக அமைந்த உரையாடல்.

சனிக்கிழமை காலை சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கிற்குச் சென்றேன். சுரேஷ் வெங்கடாத்ரி , நாஞ்சில் நாடன், ஜி. ஆர்.பிரகாஷ் மற்றும் சிறுவாணி அமைப்பின் நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் வெளியிட்ட புதிய நூல்களை வாங்கினேன்.
கண்காட்சியில் சுற்றியலைந்து வரலாறு, கலை, பௌத்தம், கிராபிக் நாவல் என இருபது புத்தகங்கள் வாங்கினேன். அதில் பாதி ஆங்கில நூல்கள்.
தேசாந்திரி அரங்கிற்கு வந்திருந்த இரண்டு ஆங்கிலப் பேராசிரியர்கள் சமகால ஆங்கிலப் படைப்புகள் குறித்து நிறையக் கேள்வி கேட்டார்கள். தனது பிறந்த நாளை என்னுடன் கொண்டாட வேண்டும் என்று பெங்களூரிலிருந்து வாசகர் பஷீர் வந்திருந்தார்.

எனது படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மாணவி ரேணுகா தனது ஆய்வேடினைக் கொண்டுவந்து கொடுத்தார்.
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் தேசாந்திரி பாடமாக வைக்கபட்டுள்ளது. ஆகவே நிறைய மாணவர்கள் அந்த நூலில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள்.

காவல்துறை ஆணையர் சேகர். டாக்டர் சந்திரமௌலி, எழுத்தாளர் வேணுகோபால், தொழில் அதிபர் ராமலிங்கம், கவிஞர் க.வை.பழனிச்சாமி, டாக்டர் அருண், என நண்பர்கள் பலரும் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து சிறப்பித்தார்கள்.
கோவையில் உலக இலக்கியம் குறித்த பேருரை ஒன்றை நான் நிகழ்த்த வேண்டும் என நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
வாசகர் சந்திப்பும் இரண்டு நாட்கள் இரண்டு உலக இலக்கியச் சொற்பொழிவுகளும் நடத்தத் திட்டமிடுகிறேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
சங்க இலக்கியங்களை எப்படிப் பயிலுவது, வரலாற்றை ஏன் வாசிக்க வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் திரைக்கதை எப்படி உள்ளது. செவ்விலக்கியங்களின் முக்கியத்துவம். வெளிநாட்டு கவிதைகளை வாசிப்பதில் உள்ள சிக்கல்கள், புரியாமை என ஒவ்வொரு நாளும் இலக்கிய அமர்வு போலப் பத்து பனிரெண்டு இளைஞர்கள் கூடி அரங்க வாசலில் நின்றபடி விவாதித்தோம்.

சனிக்கிழமை இரவு ஹரிபிரசாத் மற்றும் மூர்த்தியுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த வாசகர்கள் செல்லா , மதுநிகாவோடு நாகர்கோவில் ஆர்யபவனுக்கு இரவு உணவுக்குச் சென்றேன். இரவு பத்து மணிக்கும் ஜேஜே என்றிருந்தது. பிரம்மாண்டமான உணவகம். மிகச் சுவையான உணவு. இரவு 11.30 வரை உரையாடினோம். மறக்க முடியாத இனிமையான சந்திப்பு.
ஞாயிறு மாலை விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கிற்குச் சென்று ஜெயமோகன், அருண்மொழி, அஜிதன். ஈரோடு கிருஷ்ணன், செல்வேந்திரனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திருச்சூர் பயணத்திலிருந்து ஜெயமோகன் அன்று தான் திரும்பியிருந்தார். பேச்சில் எப்போதுமான உற்சாகம். அன்பு. மகிழ்ச்சியான சந்திப்பு.
இரவு எட்டரை மணிக்குக் கண்காட்சி நிறைவுபெற்றதாக அறிவிப்பு வந்த போதும் தேசாந்திரி அரங்க வாசலில் நின்று உரையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கலைந்து போகவில்லை. மனமகிழ்வான மூன்று நாட்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கு ஆதரவு தந்த வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள். இணைய ஊடகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,
வாசகர்களின் மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் தரும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. உங்கள் அனைவரின் அன்பே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.
தேசாந்திரி பதிப்பக அரங்கினை சிறப்பாக நிர்வாகம் செய்த அன்புகரன், உதவி புரிந்த கபிலன், துணை நின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
July 25, 2024
காந்தியின் கடைசி பயணம்
மகாத்மா காந்தியின் குண்டு துளைத்த உடலை The Last Journey Of Gandhi என்ற ஆவணப்படத்தில் காணும் போது மனம் கலங்கிவிட்டது. ரத்தக்கறை படிந்த காந்தியின் உடை மற்றும் அவரது உடலுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிகளை இதில் காணலாம்

அவரது கடைசி நாளின் சாட்சியாக உருவாக்கபட்ட இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது.
பத்து நிமிஷங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் யூடியூப்பில் காணக்கிடைக்கிறது
The Last Journey Of Gandhi
July 23, 2024
அநீதியிலிருந்து தப்பித்தல்
ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரவணிகன் நாடகத்தில் நீதி சொல்வதற்காகப் போர்ஷியா ஆண் உருவம் கொள்கிறாள். ஷைலாக்கிற்கு நீதி உரைக்கிறாள். வீடு திரும்பிய பின்பே அவளது கணவனுக்கு உண்மை தெரியவருகிறது. நெருக்கடியின் போது பெண் ஆணாக உருக் கொள்வதை இலக்கியத்தில் நிறையவே காணமுடிகிறது.

Prayers for the Stolen படத்தில் போதைப் பொருள் கும்பலிடமிருந்து தனது மகளைக் காப்பாற்றிக் கொள்ள ரீட்டா அவளது தலைமுடியை வெட்டி ஆணைப் போல வளர்க்கிறாள். அனா என்ற அந்தச் சிறுமியின் பார்வையில் ஒபியம் விளையும் மலைக்கிராம வாழ்க்கையும் அங்கே நடைபெறும் வன்முறையும் சித்தரிக்கப்படுகின்றன.
ஜெனிஃபர் கிளெமென்ட்டின் நாவலை மையமாகக் கொண்டு டாட்டியானா ஹியூஸோ படத்தை உருவாக்கியுள்ளார் Tempestad என்ற ஆவணப்படத்தின் மூலம் சர்வதேச திரையுலகின் கவனத்தைப் பெற்ற ஹியூஸோ இயக்கிய முதல் படமிது.
இப்படத்தின் கதை உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. – மெக்சிகோ மலைக்கிராமங்களில் காணாமல் போகும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குப் போதைப் பொருள் கும்பலே முக்கியக் காரணம் என்கிறார்கள்

அம்மாவும் மகளும் தங்களுக்கான சவக்குழியைத் தோண்டுவதில் படம் ஆரம்பிக்கிறது. குறியீட்டுதன்மையான காட்சியது. இறப்பிற்கான அடையாளமாக இல்லாமல் தப்பித்தலுக்கான வழிமுறையாகச் சவக்குழி மாறுகிறது. போதைக் கடத்தல் கும்பலின் வாகன ஓசை கேட்டதும் அனா ஒளிந்து கொள்ள ஒடத்துவங்குகிறாள். தப்பித்து வாழ்வதன் வலியை அவள் முழுமையாக வெளிப்படுத்துகிறாள்.
மெக்சிகோவிலுள்ள ஓபியம் விளையும் மலைப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போதைப்பொருள் விற்பனைக் கும்பல். அவர்கள் துப்பாக்கி முனையில் மலையை ஆட்சி செய்கிறார்கள். அங்குள்ள இளம்பெண்களைக் கடத்திக் கொண்டு போய் இன்பம் அனுபவிக்கிறார்கள். பின்பு கொன்று வீசி விடுகிறார்கள்
மலைக்கிராமப் பெண்கள் ஓபியத் தோட்டங்களில் வேலை செய்து உயிர்வாழ வேண்டிய கட்டாயம். அந்தப் பகுதியில் அரசாங்கம் அடிக்கடி சோதனை நடத்துகிறது. கார்கள் சீறிப்பாய்கின்றன. ஆனால் அவர்களால் ஓபியம் விளைவிப்பர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. பலநேரம் காவல்துறையினர் கடத்தல்காரர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். மலைகிராமப்பள்ளியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் கார்டெல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஓபியம் உற்பத்தியைத் தடுக்க இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கிறது. அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆரம்பக் காட்சியில் எட்டு வயதான அனா வெளியூரில் பணியாற்றும் தனது தந்தையோடு செல்போனில் பேச முயல்கிறாள். தந்தை அந்த அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ஊரே மலையின் உச்சியில் நின்று கொண்டு டவர் தேடும் காட்சி மிக அழகானது.

அனா பயிலும் பள்ளிக்கூடம். வகுப்பறைக்காட்சிகள். அவளது ஆசிரியரின் அக்கறை. ஓபியத்தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் நிலை. ஓபியக்களிம்பை எடை போட்டு கூலி நிர்ணயம் செய்வது. அருகிலுள்ள குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை எனப் படம் தொலைதூர மலைக்கிராம வாழ்க்கையைக் கண்முன்னே விரிக்கிறது.
ஆண் போலத் தலைமயிர் வெட்டப்பட்டிருந்தாலும் மூன்று சிறுமிகளும் ஆசையாக உதட்டுச்சாயம் பூசிக்கொள்கிறார்கள். ஒருவர் மனதில் இருப்பதை அடுத்தவர் கண்டுபிடிக்கும் டெலிபதி விளையாட்டினை விளையாடுகிறார்கள். கிழிந்த உதடு கொண்ட சிறுமியின் சிரிப்பு அலாதியானது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் நாளில் அனா செல்வதும் அறுவை சிகிச்சை முடிந்தபின்பு அவளுடன் உரையாடுவதும் சிறப்பான காட்சிகள்.
அனாவின் தாய் ரீட்டா தனித்துவமான கதாபாத்திரம். அவளது மனவுறுதி மற்றும் மகளைப் பாதுகாக்கும் போராட்டம் படத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. படத்தில் ஒரேயொரு இடத்தில் தான் அவள் சிரிக்கிறாள். பள்ளி ஆசிரியரை விருந்துக்கு அழைக்கும் போதும் அவருக்காக உணவு தயாரிக்கும் போதும் தான் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை.
போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் அவளது வீடு தேடிவந்து மகளைப் பற்றிக் கேட்கும் காட்சியில் ரீட்டா ஆவேசமாக நடந்து கொள்ளும் விதம் மற்றும் அனாவின் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் முயற்சி அபாரமானது.
அனா, மரியா மற்றும் பவுலா ஆகிய மூன்று சிறுமிகளின் விளையாட்டுத்தனம் மற்றும் ரகசிய ஆசைகள் படத்தில் மிகுந்த கவித்துவமாக வெளிப்படுகிறது.

அனாவின் கண்களால் தான் அந்த உலகத்தைப் பார்க்கிறோம். ஐந்து வருடங்களில் அவளிடம் ஏற்படும் மாற்றம் மற்றும் முதிர்ச்சியைப் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது.
போதைப் பொருள் கும்பலுக்குப் பயந்து அனா மறைவிடத்தில் ஒளிந்தபடியே தன்னைச் சுற்றி நடப்பதைக் காணுகிறாள். ஒளிந்து பார்க்கும் காட்சிகள் படத்தில் குறியீடு போலவே காட்டப்படுகிறது.
அனா தனது காதலன் மார்கரிட்டோவுடன் நடனமாடும் அந்த மாய இரவு. அதில் கிடைக்கும் சந்தோஷம். வீடு திரும்பும் போது புதரோரம் கிடக்கும் பெண்ணின் உடலைக் கண்டு அலறுவது. மூன்று சிறுமிகளும் ஆற்றில் நீந்தச் செல்வது, மார்கரிட்டோ அவளுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சி அளிப்பது என அவளது உலகம் தனக்கான மகிழ்ச்சியையும் தவிர்க்க முடியாத நெருக்கடியினையும் கொண்டிருக்கிறது.
பள்ளி மூடப்படும் செய்தியை அறியும் போதும், இன்னொரு பெண் காணாமல் போனதைப் பற்றிக் கேள்விப்படும் போதும் அவர்கள் அதிர்ச்சி அடைவதில்லை. மாறாகத் தங்களைச் சுற்றி நடக்கும் உண்மையைப் புரிந்து கொண்டவர்களாக இயல்பான தங்கள் விளையாட்டு உலகிற்குத் திரும்புகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டாரியேலா லுட்லோ மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெடிவைத்துக் குவாரியில் பாறை சரியும் காட்சி. செல்போன் டவர் தேடும் பெண்கள். இடிபாடுகளுக்குள் சிறுமிகள் சுற்றியலைவது. மலைப்பாதைகள். மரத்தில் ஊஞ்சலாடும் காட்சி. காளைச்சண்டை நடக்குமிடம். இரவு நடனக்காட்சி என டெரன்ஸ் மாலிக்கின் பாணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் அழகானவை.
மலைக்கிராமத்தில் வசிப்பவர்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மூன்றுமுக்கிய கதாபாத்திரங்களையும் மிகப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பருவ பெண் அனாவாக நடித்துள்ள மரியா மெம்ப்ரெனோ சரியான தேர்வு.
காணாமல் போனவர்களின் கைவிடப்பட்ட வீடுகளைப் படம் துயரின் அடையாளச் சின்னமாகக் காட்டுகிறது. அந்தக் காட்சி ஏற்படுத்தும் மனப்பாதிப்பு ஆழமானது.
July 19, 2024
கோவை புத்தகக் கண்காட்சி
தேசாந்திரி பதிப்பகம் கோவை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண் 9.

ஜுலை 26 (26.07.2024) வெள்ளி முதல் 28 ஞாயிறு வரை கோவையில் இருப்பேன்.
சந்திக்க விரும்பும் வாசகர்கள், நண்பர்கள் தேசாந்திரி பதிப்பக அரங்கில் சந்திக்கலாம்.


புதிய வெளியீடுகள் :







பிபி.ஸ்ரீநிவாஸ் பாராட்டு
எனது விரும்பிக் கேட்டவள் சிறுகதை பி.பி.ஸ்ரீநிவாஸின் ரசிகையைப் பற்றியது. இந்தக் கதையை படித்துவிட்டு பி.பி.ஸ்ரீநிவாஸ் எனக்கு விருந்து கொடுத்துப் பாராட்டினார். விகடனில் வெளியான இக்கதையினை நூறு பிரதிகள் ஜெராக்ஸ் எடுத்து பலருக்கும் அனுப்பி வைத்தார். பின்பு அதனை சிறுவெளியீடாக அவரே வெளியிட்டார்
அதன்பிறகு அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். திரையுலக அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு இசைமேதை. பத்து மொழிகள் அறிந்தவர்.
விரும்பிக் கேட்டவள் சிறுகதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
நேற்று வேறு எதையோ தேடும் போது அவர் அனுப்பி வைத்த பாராட்டுக் கடிதம் கிடைத்தது. பி.பி.ஸ்ரீநிவாஸைப் பற்றிய இனிய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
