S. Ramakrishnan's Blog, page 31
July 8, 2024
கன்னடத்தில்
எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாக கூடும்.
July 7, 2024
கவிதை பிறக்கிறது
கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே கிடையாது. ஆனால் எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை.
ஒரு சிலர் ரகசியமாக டயரியில் கவிதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மனதிலே கவிதை எழுதி அழித்துவிடுகிறார்கள். பறக்க ஆசைப்படுவதும் கவிதை எழுத ஆசைப்படுவதும் இயல்பான ஒன்றும் தான். எந்த வயதிலும் ஒருவர் கவிதை எழுதத் துவங்கலாம். சிறந்த கவிஞராக வெளிப்படலாம்.

சாங்-டாங் லீ இயக்கிய Poetry என்ற கொரியப்படத்தில் யாங் மி-ஜா என்ற 66 வயதான பெண் கவிதை எழுத விரும்புகிறார். இதற்காகக் கவிதைப் பள்ளி ஒன்றில் சேருகிறாள்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வசதியான முதியவரைப் பராமரித்து வரும் மிஜாவிற்குத் திடீரென ஒரு நாள் நினைவு இழப்பு ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரைக் காணச் செல்கிறாள். அவளுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைச் சொல்லும் மருத்துவர் தேவையான மருத்துவ ஆலோசனைகளைச் சொல்கிறார்.
தனது நினைவுகளைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில் தான் யாங் மி-ஜா கவிதை வகுப்பில் இணைகிறாள்.
ஒரு மாதகாலப் பயிற்சி தரும் கவிதை பள்ளியது. அந்தப் பள்ளியில் கவிதை எழுத பயிற்சி அளிக்கும் ஆசிரியர் உங்களைச் சுற்றி நடக்கும் எதிலிருந்தும் கவிதை பிறக்கலாம். ஆகவே அவற்றை நுட்பமாகக் கவனியுங்கள் என்கிறார்.

யாங் மிஜா கையில் சிறிய குறிப்பேடு ஒன்றுடன் தன்னைச் சுற்றிய விஷயங்களைக் குறித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். பூக்களைப் பற்றிக் குறிப்பு எழுத ஆரம்பிக்கிறாள். திடீரென உலகம் புதிதாக மாறுகிறது. தரையில் விழுந்த பாதாம் பழங்களிலும் உருண்டோடும் ஆப்பிளிலும் எளிமையின் அழகைக் காண்கிறாள்
படத்தில் இடம்பெற்றுள்ள கவிதை குறித்த வகுப்பறைக் காட்சிகள் மிக அழகானவை. அவை கவிதையின் அடிப்படை இயல்புகளை விவரிக்கின்றன.
படத்தின் துவக்கக் காட்சியில் நதிக்கரையொன்றில் சிறார்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரில் சீருடை அணிந்த ஆக்னஸ் என்ற மாணவியின் உடல் மிதந்து செல்கிறது. அந்த மாணவியின் மரணத்தைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது

யாங் மி ஜாவின் மகள் நகரில் கணவனைப் பிரிந்து வாழும் தனியே வாழுகிறாள். பேரன் ஜாங்-வூக்கை தன்னோடு வைத்துக் கொண்டு வளர்த்து வருகிறாள் மி ஜா. பேரன் ஜாங் வூக் பாட்டி சொல்வதைக் கேட்பதேயில்லை. அவள் தரும் உணவை விருப்பமில்லாமல் சாப்பிடுகிறான். எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். பாட்டியால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜாங் வூக் பள்ளியில் பயின்ற மாணவி தான் இறந்து போனவள். அவளைப் பள்ளிச் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படும் பாட்டி பேரனிடம் இதைப்பற்றி விசாரிக்கிறாள்
ஜாங்-வூக் அதைப்பற்றித் தனக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறான்.
இறந்து போன மாணவிக்காக நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பாட்டி கலந்து கொள்கிறாள். இதற்கிடையில் பேரனின் பள்ளியிலிருந்து அவளை நேரில் வரும்படி அழைக்கிறார்கள்.
அங்கே ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். ஆக்னஸை கூட்டு வன்புணர்வு செய்தவர்களில் தனது பேரனும் ஒருவன் என அறிந்து மிஜா அதிர்ந்து போகிறாள். ஆக்னஸின் அம்மாவைப் பேசிச் சரிக்கட்டி பணம் கொடுத்துப் போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது எனப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது
இதை யாங் மி ஜா ஏற்க மறுக்கிறாள். ஆனால் மற்ற பெற்றோர்கள் தனது பிள்ளையின் தவற்றை மறைத்து. பணம் கொடுத்து வாயை அடைத்துவிடலாம் என்று எளிதாக நினைக்கிறார்கள்.
இறந்து போன ஆக்னஸின் அம்மாவைச் சந்தித்து அவளைச் சமாதானப்படுத்தி பணம் பெற்றுக் கொள்ள வைக்க யாங் மி ஜா செல்ல வேண்டும் என்கிறார்கள்.
கட்டாயத்தின் பெயரில் அவள் ஆக்னஸின் அம்மாவைக் காணச் செல்கிறாள்
அது படத்தின் மிக அழகான காட்சிகளில் ஒன்று. ஆக்னஸின் அம்மா வயலில் வேலை செய்வதைக் காண்கிறாள், அங்குள்ள பூக்கள், மரங்கள் மற்றும் பழங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பாட்டி பேசத் தொடங்குகிறாள். தான் வந்த நோக்கத்தைத் தெரிவிப்பதில்லை.

தனது பேரனைக் காப்பாற்ற நிறையப் பணம் வேண்டும் என்பதற்காக மி ஜா தான் வேலையும் வீட்டிலுள்ள பக்கவாதம் வந்த கிழவரின் ஆசையை நிறைவேற்றுகிறாள். ஆக்னஸுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மையை அவள் அறிந்து கொள்வது போலவே அந்தக் காட்சி இடம்பெறுகிறது.
பணம் போதாது என்ற நிலையில் கிழவரை மிரட்டிப் பணம் பெறுகிறாள். இவ்வளவு செய்தும் அவளால் பேரனைக் காப்பாற்ற முடியவில்லை.
தனது சொல்ல முடியாத தவிப்பை, துயரை, வலியை அவள் கவிதையாக எழுதுகிறாள். அதை அவள் பயிலும் பள்ளியின் வகுப்பில் வாசிக்கிறார்கள்.
ஒருவர் ஏன் கவிதை எழுத விரும்புகிறார். எதைக் கவிதையாக எழுதுகிறார் என்பதற்கான சிறந்த அடையாளமாக அந்தக் கவிதை இடம் பெறுகிறது
மி-ஜாவின் குரலில் தொடங்கும் கவிதை, ஆக்னஸின் குரலில் இணைவது வியப்பளிக்கிறது. உண்மையில் அவர்கள் பேசிக் கொள்வது போன்றே கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இறந்தவளிடம் பாட்டி அவளது செயலை, வலிகளைப் புரிந்து கொண்டதாகத் தெரிவிக்கிறாள். செய்யத் துணியாத வாக்குமூலமாகவே கவிதை வெளிப்படுகிறது
கவிதை என்பது ஒருவகை வாக்குமூலம். உண்மையின் குரல் ஒரு விடுதலை உணர்வு. துயரத்தின் வடிகால்.. மனதிலிருந்து எழும் வானவில் தான் கவிதை. இதை யாங் மி-ஜா உணர்ந்து கொள்கிறாள்.

கவிதை வகுப்பில் இரட்டை அர்த்தம் தரும் கவிதைகளை வாசிக்கும் காவலர் தான் முடிவில் அவளது பேரனைக் கைது செய்ய வருகிறார். வீட்டின் வாசலில் போலீஸ் வந்து நின்று விசாரிப்பது, பேரனை விசாரணைக்காக அழைத்துச் செல்வது என அந்தக் காட்சி மிக இயல்பாக, நிஜமாகப் படமாக்கப்பட்டுள்ளது
குற்றவுலகையும் அதன் மறுபக்கமாகக் குற்றவாளியைக் காப்பாற்ற விரும்பும் பாட்டியின் குற்றவுணர்வையும் பற்றிய இந்தப் படத்தில் கவிதை சேர்ந்தவுடன் படம் புதியதாகிவிடுகிறது.
கவிதை எழுதுவதற்காகத் தன்னைச் சுற்றிய பொருட்களை. இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கத் துவங்கிய . யாங் மி-ஜா மெல்லத் தனது உறவுகளை, தன்னைச் சுற்றிய மனிதர்களை, அவர்களின் போலித்தனங்களை, குரூரங்களை அடையாளம் கண்டு கொள்கிறாள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பக்கவாதம் வந்த கிழவர் பயன்படுத்திக் கொள்கிறார். தப்ப முடியும் சந்தர்ப்பத்தைப் பெற்றோர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஏமாற்ற முடியும் என்ற சந்தர்ப்பத்தை யாங் மிஜாவும் பயன்படுத்துகிறாள்.
ஆனால் நெருக்கடியான. மோசமான சூழ்நிலைகளில் நேர்மறையான விஷயங்களைக் கண்டறியவும் சரியான முடிவு எடுக்கவும் கவிதையே அவளுக்கு வழி காட்டுகிறது. அவளது மனசாட்சியின் வெளிப்பாடாகவே அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
யுன் ஜியோங்-ஹை பாட்டி யாங் மிஜாவாகச் சிறப்பாக நடித்துள்ளார். நேர்த்தியான ஒளிப்பதிவு. கவித்துவமான தருணங்கள் எனப் படம் சிறந்த கலை அனுபவத்தைத் தருகிறது.
July 4, 2024
மற்றொருவன்
புதிய குறுங்கதை.

அவன் கிரிகோர் சாம்சாவைப் போலவே சேல்ஸ்மேனாக அதே நிறுவனத்தில் வேலை செய்தான்.
அவர்களது நிறுவனம் துணிவிற்பனை செய்யக்கூடியது. அவனைப் போன்ற சேல்ஸ்மேன்களின் வேலை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்கான துணி சாம்பிள்களுடன் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியது.
அவர்களின் முதலாளி கருணையற்றவர். ஊழியர்களின் குரலை காது கொடுத்துக் கேட்காதவர். நிறுவன மேலாளரும் கண்டிப்பானவர். மாதச் சம்பளம் என்ற கடிவாளம் அவர்களை எதையும் பற்றி யோசிக்கவிடாமல் செய்திருந்தது.
கிரிகோர் சாம்சா சில நாட்களாக அலுவலகம் வரவில்லை. நிறுவன ஊழியர்கள் அவனைப் பற்றி தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. விற்பனையை அதிகரித்தல் தொடர்பான கூட்டத்தில் ஒன்றிரண்டு முறை கிரிகோருடன் பேசியதைத் தவிர வேறு பழக்கமில்லை.
அவன் கேட்காமலே ஸ்டோர் நிர்வாகியாக இருந்த பெண் அவனிடம் சொன்னாள்
“கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக மாறிவிட்டானாம்“
அதைச் சொன்னவிதத்தில் பயமும் கேலியும் கலந்திருந்தது. அப்படியா என இயல்பாக அவன் கேட்டவிதம் அவளுக்கு ஏமாற்றம் அளித்திருக்ககூடும்.
அவள் மறுபடியும் “கரப்பான்பூச்சியாக“ என்று அழுத்தமாகச் சொன்னாள்
அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சேல்ஸ்மேனாக வேலை செய்கிறவர்கள் நிச்சயம் ஒரு நாள் கரப்பான்பூச்சியாக மாறிவிடுவார்கள் தான். இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது. அதுவும் கிரிகோர் சாம்சா போல எவருடனும் பேசிப்பழகாத, சதா யோசனையுடன், குழப்பத்துடன் இருப்பவர்கள் பூச்சியாக மாறியதில் வியப்பு எதுவுமில்லை.
இடைவிடாத பயணம், குறித்த நேரத்தில் ரயிலைப் பிடிக்க வேண்டிய கவலை, மோசமான மற்றும் ஒழுங்கற்ற உணவு, வெவ்வேறு நபர்களைச் சந்தித்துப் பொய்யாகச் சிரித்துப் பேசியாக வேண்டிய கட்டாயம் என சேல்ஸ்மேன்களின் வாழ்க்கை நெருக்கடிகளால் நிரம்பியது. மணல் கடிகாரத்தில் மேலிருந்து விழும் மணல் துகளைப் போலத் தன்விருப்பம் இல்லாமலே அவர்கள் வீழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கிரிகோர் சாம்சா செய்ய வேண்டிய விற்பனை பணிகள் அப்படியே இருந்தன. அவனது விடுப்பை எப்படிக் குறித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. . மருத்துவ விடுப்பு என்றால் கூடக் கடிதம் தர வேண்டும். மருத்துவரின் பரிந்துரை அளிக்கபட வேண்டும். திடீரென கரப்பான்பூச்சியாக மாறிவிட்டேன் என்பதை எந்த அலுவலகமும் மருத்துவக் காரணமாக ஏற்றுக் கொள்ளாது தானே.

கடந்த ஐந்து வருடத்தில் கிரிகோர் சாம்சா ஒருமுறை கூட நோயுறவில்லை. பொய்யாகக் கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை. ஆனால் சலிப்புற்றிருந்தான். மோசமாக சலிப்புற்றிருந்தான். சலிப்பை நோய் என்று சொல்ல முடியுமா. சலிப்பு முற்றும் போது ஒருவன் நிலைகுலைந்து விடுகிறான். கண்ணாடி டம்ளர் மீது அமரும் ஈயால் அந்த டம்ளரைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமா என்ன.
கிரிகோர் சாம்சா வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து வந்த தலைமை எழுத்தர் “கிரிகோர் அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளிருந்தே பதில் தருகிறான், அவனது குரல் மாறிவிட்டது, அவன் நம்மை ஏமாற்றுகிறான் “. என்றே சொல்லியிருந்தார்
பனிக்காலத்தில் ஒருவன் உருமாறிவிடுவது இயல்பு தான். மந்தமான வானிலை மனிதர்கள் மீது சுமையாக படிந்துவிடுகிறது. உருமாறிய சாலைகள். உருமாறிய மரங்கள். நோயுற்ற சூரியன். நினைவுகளை கிளரும் இரவுகள். கடிகாரத்தால் துரத்தப்படும் மனிதனால் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
பூச்சியாக மாறியதற்குப் பதிலாகக் கிரிகோர் சாம்சா ஒரு பறவையாகவோ, குதிரையாகவோ மாறியிருக்கலாம். ஆனால் சமையலறைக்குள் ஒளிந்து திரியும் கரப்பான்பூச்சியாக ஏன் மாறினான். உலகை விட வீடு பாதுகாப்பானது என்பதால் தானா.
உலகின் கடைசி உயிரினம் கரப்பான்பூச்சி என்கிறார்களே. அது நிஜமா. ஒரு காலத்தில் பூமியை ஆண்ட டைனோசர்கள் தான் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் கொண்டுவிட்டதாக சொல்கிறார்களே. அப்படியும் இருக்குமா.
தேவதைகதைகளில் இப்படி இளவரசன் தவளையாக மாறிவிடுவதைப் பற்றிப் படித்திருக்கிறான். அதற்குக் காரணம் சாபம் . ஆனால் இந்த நகர வாழ்க்கையில் சாபம் என்பது நம்பக் கூடியதா.
பரபரப்பான சிக்னலில் காத்திருக்கும் கார்களின் குறுக்கே கடந்து செல்லும் போது நாம் கரப்பான்பூச்சி போல தானே உணருகிறோம். ரயிலைத் தவறவிட்டு காத்திருக்கும் போது கரப்பான்பூச்சியாக தானே மாறிவிடுகிறோம்.
ஒருவன் கரப்பான்பூச்சியாகிவிடும் போது உலகம் மாறிவிடுவதில்லை. அவன் மட்டுமே மாறிவிடுகிறான். உலகம் மனிதனை ஒருவிதமாகவும் கரப்பான்பூச்சியை இன்னொரு விதமாகவும் துரத்தக் கூடியது தானே,
இப்போது அவன் வெறும் கரப்பான்பூச்சியில்லை. கிரிகோர் சாம்சா என்ற பெயருள்ள கரப்பான்பூச்சி. சொந்த வீடு உள்ள கரப்பான்பூச்சி. எல்லாவற்றையும் விட படித்த சிந்திக்கிற சம்பாதிக்கிற கரப்பான்பூச்சி.
ஏன் கிரிகோர் சாம்சா பற்றி இவ்வளவு யோசிக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.
அலுவலக ஊழியர்கள் கிரிகோர் சாம்சாவின் வீட்டிற்குப் போய் நலம் விசாரித்து வரப்போகிறார்களா எனத் தெரியவில்லை. உடல் நலமற்றவர்களை விசாரிக்கச் செல்வது போல உருமாற்றம் அடைந்தவனையும் தேடிச் சென்று பார்க்க வேண்டுமா என்ன.
கிரிகோர் சாம்சாவின் வீடு எங்கேயிருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் எவரையும் அவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதில்லை. யாருடனும் நட்பாகப் பழகியதில்லை
உண்மையில் தனது விருப்பங்களை வீடும், உலகமும் புரிந்து கொள்ளாத போது, விரும்பாத விஷயங்களைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது ஒருவன் உருமாற்றம் அடைகிறான்.
கிரிகோர் சாம்சா கரப்பான்பூச்சியாக மாறியது போல அலுவலகத்தில் யார் யார் என்னவாக மாறப் போகிறார்கள் என்று ஒரு ஊழியன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தான். பூச்சிகளாக மாறினாலும் முதலாளியிடம் சம்பள உயர்விற்குப் போராட வேண்டியதே வரும் என்று மற்றொருவன் உரத்த குரலில் சொன்னான்.
ஒரு மனிதனை கால்பந்து போல உருட்டி மிதித்து விளையாடுவது மிகவும் ஆனந்தமானது என்பதாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.
நிறுவன ஊழியர்களின் கேலியும் வெறுப்பும் தான் கிரிகோர் சாம்சாவை தேடிப் போய் பார்க்க வேண்டும் என்ற அவனது விருப்பத்தை அதிகப்படுத்தியது. அலுவலக ரிஜிஸ்தரில் இருந்த சாம்சாவின் முகவரியை குறித்துக் கொண்டான்.
அன்று மாலை கிரிகோர் சாம்சா குடியிருக்கும் பகுதிக்கு சென்றான். அந்த வீதி சோபை இழந்து காணப்பட்டது. அங்கிருந்த மரங்கள் கூட அசைவற்றிருந்தன.
பழைய ரயில்வே அட்டவணை புத்தகத்தைச் சலிப்போடு புரட்டிக் கொண்டிருந்த சாம்சாவின் தந்தை “ அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா“ என்று கேட்டார்
“ இல்லை. நானாகவே வந்தேன்“ என்றான்
“ அவனைப் பற்றி அலுவலகத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள்“ என்று கேட்டார்
என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
“ சிறுவயதிலிருந்தே இப்படித்தான் நடந்து கொள்கிறான். நெருப்புக் கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக் கொள்வது போலத் தேவையற்ற கற்பனைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறான். குழப்பவாதி. “
கிரிகோர் சாம்சா மட்டும் தான் அப்படியிருக்கிறானா என்ன.
எல்லாத் தந்தைகளும் ஒன்று போலவே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.
கிரிகோர் சாம்சாவின் சகோதரி அவன் வந்திருக்கும் தகவலைச் சொல்வதற்காக மூடப்பட்டிருந்த அறைக் கதவின் முன் நின்றாள்.
கதவைத் தட்டுவதற்கு முன்பு உள்ளே ஏதேனும் ஓசை கேட்கிறதா எனக் கவனித்தாள்.
பின்பு மெதுவாகக் கதவைத் தட்டியபடியே “ உன்னைக் காண அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்“ என்றாள். உள்ளேயிருந்து பதில் வரவில்லை.
மூடிய கதவைப் பார்த்தபடியே நின்றிருந்தான். கிரிகோர் சாம்சாவின் அம்மா அவனிடம் ஆதங்கமாகச் சொன்னாள்
“அந்த அறைக்குள் போகவிடாமல் என்னை தடுக்கிறார்கள். பூச்சியாக மாறியிருந்தாலும் நான் தானே அவனது அம்மா. “
மறுபடியும் கதவை தட்ட வேண்டுமா என்ற தயக்கத்துடன் சகோதரி நிற்பதை கண்ட அவன் சொன்னான்.
“ என்னை அவருக்குத் தெரியாது. நான் கிளம்புகிறேன்“
அவன் புறப்படும் போது சாம்சாவின் சகோதரி “ ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா“ என்று கேட்டாள்
“ எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்“ என்றான்
எதற்காக வாழ்த்து எனப்புரியாதவள் போல குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெறுமனே வாழ்த்துச் சொன்னதற்குப் பதிலாக ஒரு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லியிருக்கலாம். கரப்பான்பூச்சிக்கு என்ன மலர் பிடிக்கும் என்று தெரியவில்லையே என யோசித்தபடியே அவன் வெளியே நடக்க ஆரம்பித்தான்.
•••
காஃப்கா நூற்றாண்டினை முன்னிட்டு அவரது புகழ்பெற்ற ‘The Metamorphosis’ சிறுகதையின் மாற்றுவடிவத்தை எழுத முயற்சித்தேன். கிரிகோர் சாம்சாவின் நிறுவனத்தில் வேலை செய்த இன்னொரு சேல்ஸ்மேன் பார்வையில் அதே நிகழ்வைக் இக்கதை விவரிக்கிறது.
July 3, 2024
காஃப்கா கடிதங்கள்
காஃப்கா எழுதிய கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து நாளை உரையாற்றுகிறேன். அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்ளலாம். நுங்கம்பாக்கம் ஜெர்மன் பண்பாட்டு மையமது.

புனைவில் நாம் காணும் காஃப்கா வேறு. நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காணும் காஃப்கா வேறு. அவர் தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தே உருவாகியிருக்கிறார். அதற்கான சான்றுகளை அவரது நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காண முடிகிறது.
நீச்சலில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த, உடல் நலத்தினைப் பேணுவதில் அக்கறை கொண்டிருந்த, தீவிரமாக வாசிக்க கூடிய, இசையில் ஆர்வமான காஃப்காவை இதில் காணுகிறோம். நகரில் நடைபெற்ற முக்கிய இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். இலக்கிய நிகழ்வுகள் எனத் தேடித்தேடி சென்றிருக்கிறார். நிர்வாண முகாமில் தங்கியிருக்கிறார். எழுத்து, படிப்பு. கலையின் நோக்கம் குறித்து அவருக்கென இருந்த தனித்துவமான எண்ணங்களையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு Reiner Stach’s Three Volume Biography of Kafka (trans.Shelley Frisch) . மிக முக்கியமான நூல்

நன்மை மற்றும் தீமை குறித்த அவரது எண்ணங்களை, புதிய பார்வைகளை அறிந்து கொள்ள Kafka’s Blue Octavo Notebooks அவசியம் படிக்க வேண்டும்.





1916-1917ம் ஆண்டின் குளிர்காலத்தில், காஃப்காவின் இளைய சகோதரி, ஓட்லா, பழைய ப்ராக் பகுதியில் உள்ள அல்கிமிஸ்டெங்காஸ்ஸில் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவளுடன் தங்கியிருந்த காஃப்கா இந்த இடத்தின் அமைதியையும் தனிமையையும் மிகவும் விரும்பினார்
இங்கிருந்த நாட்களில் காஃப்கா எழுதிய குறிப்புகளே Blue Octavo Notebooks .
காஃப்காவின் மற்ற எழுத்துக்களிலிருந்து மாறுபட்டது இந்தக் குறிப்பேடு. இதன் சில பதிவுகளில் கேலியும் கிண்டலும் அழகாக வெளிப்படுகின்றன.



July 1, 2024
கடலோடு சண்டையிடும் மீன்
கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1
சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு.
இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.
அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விலை ரூ 130
June 30, 2024
இரண்டு பாதைகள்
இயக்குநர் மிருணாள் சென்னைப் பற்றிய திரைப்படம் Chalchitra Ekhon. அஞ்சன் தத் இயக்கியுள்ளார்.

1981ம் ஆண்டு மிருணாள் சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சல்சித்ரா, இப்படத்தில் அஞ்சன் தத் கதாநாயகனாக அறிமுகமானார். வெனிஸ் திரைப்படவிழாவில் அவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் சல்சித்ரா திரையிடப்பட்ட போதும் இந்தியாவில் திரையிடப்படவில்லை.
இந்தப் படத்தில் கிடைத்த புகழால் அஞ்சன் தத் தொடர்ந்து கலைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். இசையில் இருந்த ஆர்வம் காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். இன்று அவர் வங்காளத்தின் புகழ்பெற்ற திரைக்கலைஞர்.
நாடக உலகில் இருந்த தன்னைக் கண்டுபிடித்துச் சினிமாவில் அறிமுகம் செய்து நடிகராக்கிய மிருணாள்சென்னிற்கு நன்றி செலுத்தும் விதமாகத் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைத் திரைப்படமாக்கியிருக்கிறார் அஞ்சன் தத். இப்படம் மிருணாள் சென் நூற்றாண்டுவிழாவிற்கான சிறந்த அஞ்சலியாக உள்ளது.
மிருணாள் சென்னின் குடும்பம், அவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைப்பட உருவாக்கத்தைச் சல்சித்ரா எகோன் மிக அழகாக விவரிக்கிறது

இளம்பத்திரிக்கையாளன் ரஞ்சன் கொல்கத்தா நகரைப் பற்றிக் கட்டுரை எழுத விரும்பி இயக்குநர் மிருணாள் சென்னைச் சந்திக்கிறான்.
தனது படங்களை அவன் பார்த்திருக்கிறானா என்று கேட்கிறார் சென்.
ஒரேயொரு படத்தை மட்டுமே பார்த்துள்ளதாகச் சொல்கிறான். கொல்கத்தா நகரைப் பற்றிய அவரது முரண்பட்ட எண்ணங்களை அறிந்து கொள்கிறான் ரஞ்சன். அவனது தோற்றம். பேசும்விதம். மற்றும் அறிவுஜீவித்தனம் மிருணாள்சென்னை வசீகரிக்கிறது.
பெங்காலி அறிவுஜீவிகளில் ஒருவனான ரஞ்சன் நாடக இயக்குரான இருக்கிறான். கோதே இன்ஸ்டிட்யூட்டின் ஆதரவைப் பெற்று நாடகம் நிகழ்த்துகிறான். ஜெர்மனிக்குச் செல்ல வேண்டும் என்பதே அவனது கனவு. கல்கத்தா நகரை அவனுக்குப் பிடிக்கவில்லை. வங்காளத்தின் அப்போதைய ஆளும் இடதுசாரி ஆட்சியின் அலைக்கு எதிராக ரஞ்சன் குரல் எழுப்புகிறான்.
பீட்டர் வெய்ஸின் மராட்/சேட் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபடும் அவனைத் தேடி வரும் மிருணாள் சென் தனது புதிய திரைப்படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்கிறார். ரஞ்சன் சம்மதிக்கிறான். உடனே அவனைத் தனது வீட்டிற்கு அழைத்துவந்து தலைமயிரை வெட்டச்செய்து வேறு உடைகளை அணியவைத்து தனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறானா என்று பரிசோதிக்கிறார் மிருணாள் சென்.

மிருணாள் சென் எப்படி ஒரு நடிகரை கையாளுவார் என்பதை இப்படத்தில் விரிவாகக் காட்டியிருக்கிறார்கள். அவர் மனதில் இருக்கும் காட்சிகளை நடிகர்களிடம் விவரிக்கிறார். நிஜமான சாலையில். நிஜமான இடத்தில் மக்களின் நடுவே படப்பிடிப்பு நடக்கிறது. டிராமில் ஏறிக் கொண்டு நிஜமாக டிக்கெட் வாங்கிப் பயணிக்கிறான் ரஞ்சன். அதைக் கேமிரா படம்பிடிக்கிறது. டிக்கெட்டை வாயிலிட்டு அவன் மென்று விழுங்கிவிடுவது அழகான காட்சி.
ஒரு திரைப்பட இயக்குநருக்கும் இளம்நடிகனுக்குமான உறவை வெளிப்படுத்தும் விதமாகவும், இரண்டு தலைமுறைகளுக்குள் ஏற்படும் இடைவெளியை, புரிதலை, ஆதர்சங்களை விவரிக்கும் திரைப்படமாகவும் சல்சித்ரா எகோன் உருவாக்கபட்டுள்ளது.
சென்னின் சல்சித்ரா படத்திலிருந்த காட்சிகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் அஞ்சன் தத் அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளார்
மிருணாள் சென் முக்கியமான இயக்குநரில்லை. போலித்தனமானவர் என்று அவரைப் பற்றிக் குறைகூறும் நாடக நடிகர்களிடம் சண்டையிடுகிறான் ரஞ்சன். இதன் காரணமாகக் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவனது நாடகக்குழு பிரிந்து போகிறது.
சினிமாவில் அவன் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கும் அவனது நிஜ வாழ்விற்குமான ஒப்புமைகளை, நெருக்கத்தை உணருகிறான். அவனது வாழ்க்கையே படமாக மாறுவது போலிருக்கிறது.
ரஞ்சன் மீது மிருணாள் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தபடுகிறது. குறிப்பாக அவன் இரவில் வீடு திரும்பப் பணம் கொடுக்கும் காட்சி, வீட்டில் சாப்பிட்டுப் போகச் சொல்லும் காட்சி, படப்பிடிப்பின் போது அவனிடம் காட்டும் அன்பு என நிறைய நல்ல காட்சிகள் உள்ளன.
பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்துப் பேசும் காட்சி படமாக்கபடும் போது ரஞ்சன் படும் சிரமங்களும். அவனுக்கு நடிப்பு பற்றி மிருணாள் சென் சொல்லும் விளக்கமும் சிறப்பானது.

படப்பிடிப்பின் போது நடக்கும் நிகழ்வுகளின் வழியே ரஞ்சன் தன்னைப் பற்றியும், தனது மதிப்பீடுகள் பற்றியும் மறுபரிசீலனை செய்யத் துவங்குகிறான். முடிவில் அவன் தன்னை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திக் கொள்ளும் போது அவனது பாதை எதுவென முடிவாகிறது.
கொல்கத்தாவின் அரசியல். வங்காளிகளின் பண்பாடு, கலைஇலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், பத்திரிக்கைச் சூழல். மாநகரவாழ்வின் நெருக்கடிகள் எனப் படம் மிக யதார்த்தமாக உருவாக்கபட்டிருக்கிறது.
சென்னின் ஒளிப்பதிவாளர் கே.கே.மஹாஜன் ரஞ்சனிடம் உரையாடும் காட்சிகள் சிறப்பானவை.
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பது கொல்கத்தா நகரம். அந்த நகரைப் பிடிக்காத ரஞ்சன் படத்தின் கடைசியில் கொல்கத்தா அருமையானது என்பதைப் புரிந்து கொள்கிறான்.
விரலுக்கு இடையில் சிகரெட் புகைந்தபடியே இருக்கும் மிருணாள் சென்னின் தோற்றம் மற்றும் அவரது நடையுடை பாவனைகளை மிக நுணுக்கமாகப் படத்தில் சித்தரித்துள்ளார்கள். கொல்கத்தா நகரையும் அதனைச் சிறப்பாகத் தனது படங்களில் சித்தரித்த மிருணாள் சென்னையும் ஒன்றுசேரக் கொண்டாடுகிறது இப்படம்.
June 29, 2024
காஃப்கா உரை
காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதனைக்குறிக்கும் வகையில் சென்னையிலுள்ள, Goethe-Institut சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஜூலை 4 மாலை ஆறுமணிக்கு காஃப்காவின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து உரை வழங்குகிறேன்.

அத்துடன் காஃப்கா குறித்த உரையாடலில் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்வில் ப.சேரலாதன், ரம்யா ராமஸ்வாமி கலந்து கொள்கிறார்கள்.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
••
நாள் : 4. ஜூலை 2024
நேரம்: மாலை 6-7pm
இடம்: கோதே இன்ஸ்டிடியூட்
#4, ரட்லண்ட் கேட் 5th தெரு
நுங்கம்பாக்கம் சென்னை 600006
காஃப்கா பற்றிய எனது புத்தகம்
விருதுப்பட்டியலில்
2024 Valley of Words Book Awards இறுதிப்பட்டியலில் எனது சிறுகதைத் தொகுப்பு The Man Who Walked Backwards and Other Stories இடம் பெற்றுள்ளது.

இதனை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Valley of Words என்பது டேராடூனில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவாகும்.
June 27, 2024
சிறிய மச்சம்
கவாபத்தாவின் “The Mole” சிறுகதையில் கணவனைப் பிரிந்து வாழும் சயோகோ என்ற இளம் பெண் தனது மச்சத்தைப் பற்றிய நினைவுகளைக் கடிதமாக எழுதுகிறாள்.

நான் மச்சத்தைப் பற்றி ஒரு கனவு கண்டேன் எனக் கதை துவங்குகிறது

ஒருவர் ஏன் மச்சத்தைக் கனவு காண வேண்டும். என்ன கனவாக இருக்கும் என்று யோசிக்கையில் கதை கனவைப் பற்றியதாக இல்லாமல் மச்சம் உள்ள பெண் அதை எப்படி உணருகிறாள் என்பதைப் பற்றியதாக விரிவு கொள்கிறது.
தனது தோள்பட்டைக்கு மேல் வலது பக்கத்தில் உள்ள அந்த மச்சத்தைச் சதா தடவி கொண்டேயிருப்பது அவளது பழக்கம். சிறுவயதில் இருந்து தொடரும் இந்தப் பழக்கத்தை அவளது அம்மா கண்டித்திருக்கிறாள். ஆனால் அவளால் அதைக் கைவிட முடியவில்லை.
அந்த மச்சத்தைத் தொடுவதன் மூலம் அவள் தனது பால்ய நாட்களுக்குத் திரும்புவது போல உணருகிறாள்.
திருமணத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை அவளது கணவன் கண்டிக்கிறான். இந்தச் சிறிய விஷயம் காரணமாக அவர்களுக்குள் சண்டை வருகிறது.
அவனது கோபம் அவளுக்குத் திருமண வாழ்க்கை என்பது சுதந்திரமனதானதில்லை. தன் விருப்பத்திற்கு அங்கே இடமில்லை என்று எண்ணச் செய்கிறது. ஆகவே தன்னைத் திட்டும் கணவனை வெறுக்கிறாள். நேசிப்பவர்களின் கோபம் நம்மை அதிகம் வருத்தமடையச் செய்கிறது என்று கதையில் கவாபத்தா சொல்கிறார்.
அவளது இந்தப் பழக்கத்தின் மீதான கணவனின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒரு நாள் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறான். அதை அவளால் ஏற்க முடியவில்லை. மணஉறவில் விரிசல் ஏற்படுகிறது. கணவனைப் பிரிந்து செல்கிறாள்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு கடிதம் எழுதுகிறாள். அதில் தனது கடந்த செயலை மறுபரிசீலனை செய்து கொள்கிறாள். ஆனால் மச்சத்தைத் தடவும் பழக்கத்தைத் தவறாக அவள் நினைக்கவேயில்லை. அது ஒரு சிறிய மகிழ்ச்சி. சுதந்திரம். அதை ஏன் தடுக்க நினைக்கிறார்கள் என்றே நினைக்கிறாள்.
அவளது மச்சம் குறித்து அவனுக்குக் குறை எதுவுமில்லை. மாறாக இந்தச் சிறிய பழக்கத்தை ஏன் மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் என்று தான் எரிசசல் அடைகிறான்.
திருமணம் என்பது பழக்கத்தைக் கைவிடவும் மாற்றிக் கொள்ளவும் வேண்டிய பந்தம். இதில் ஆண் பெண் இருவரும் பாதிக்கபடுகிறார்கள். ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோபம் அடைகிறார்கள். கட்டாயத்தால் மாற்றிக் கொண்டபின்பும் அதைப் பற்றி மனக்குறை கொண்டிருக்கிறார்கள்.

கதையில் வரும் சயோகோவிற்கு அந்த மச்சம் அவளது தன்னுணர்வின் அடையாளம் போலிருக்கிறது. அவள் மச்சத்தைத் தொடும்போது மீண்டும் ஒரு குழந்தையாக மாறுவது போல் உணர்கிறாள் , அவளுடைய கணவனிடமிருந்து அதே அன்பு அவளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை. கணவன் தனது மச்சத்தை தொட வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். அதை அவன் வெறுப்பது தன்னை வெறுப்பதாகவே நினைக்கிறாள்.
உடலைப் பற்றிய கவனமும் குற்றவுணர்வும் ஆண்களிடம் ஒருவிதமாகவும் பெண்களிடம் ஒருவிதமாகவும் வெளிப்படுகின்றன. தனது உடலின் குறையாக எதையோ ஒன்றை பெண் நினைக்கிறாள். அதைப் பற்றிச் சதா கவலை கொள்கிறாள். அதைப் பற்றிய பிறரது பேச்சினை கோவம் கொள்கிறாள்.
தனது அன்பை வெளிப்படுத்த தெரியாத ஒரு இளம் பெண்ணின் வெளிப்பாடாக மச்சத்தைத் தொடுதலைப் புரிந்து கொள்ளலாம்
கதையில் மச்சம் என்பது புரிந்து கொள்ள முடியாத, ஒரு மொழியாக மாறிவிடுகிறது.. குடும்ப உறவில் விரிசல் ஏற்படுத்த இது போன்ற சிறிய விஷயங்கள் கூடக் காரணமாகிவிடுகின்றன . அவளது தீர்க்கப்படாத வருத்தங்கள் தான் கடிதமாக மாறுகிறது.
யாசுனாரி கவாபத்தாவிற்கு இப்படி ஒரு மச்சம் இருந்திருக்கிறது. அதை அவர் மறைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். அவரது புனைவில் இப்படி மச்சம் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
நீர்வண்ண ஓவியம் போல கதையை எழுதியிருக்கிறார் கவாபத்தா. இந்தக் கதையை வாசிக்கும் போது இதில் என்ன இருக்கிறது என்றே ஒருவர் நினைக்க கூடும். ஆனால் சற்று யோசிக்கும் போது இது மச்சம் பற்றிய கதையில்லை. மாற்றிக் கொள்ள முடியாத பழக்கம் பற்றியது. தனக்கு மகிழ்ச்சி தருவது ஏன் பிறருக்கு வெறுப்பளிக்கிறது என்பதைப் பற்றியது எனப் புரியும். பெரிய லென்ஸ் ஓன்றின் மூலம் மச்சத்தைக் காணுவதைப் போன்ற அனுபவத்தைக் கதை தருகிறது. நாம் காணுவது மச்சத்தை மட்டுமில்லை. திருமண உறவின் புதிரை. அதன் மிஞ்சியிருக்கும் நினைவுகளை.
***
‘’
June 24, 2024
பார்வையற்ற ஓவியர்
திறந்த ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில், கடலை நோக்கியபடி மூன்று உருவங்கள் காணப்படுகின்றன. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்கள் உபயோகப்பட்டுள்ள விதம் மற்றும் உருவங்களின் தனித்தன்மை நம்மை வசீகரிக்கிறது.

பிரிட்டிஷ் ஓவியர் சர்கி மான் (Sargy Mann) வரைந்த இந்த ஓவியத்தைக் காணும் போது இது பார்வையற்றவர் வரைந்த ஓவியம் என்று நினைக்கமுடியவில்லை. பொதுவாகப் பார்வையற்றவர்கள் என்றால் அவர்களால் நிறத்தை பிரித்து அறிந்து கொள்ள முடியாது என்றே பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கிறது.

ஆனால் போர்ஹெஸ் போன்ற பார்வையற்ற எழுத்தாளர் தனக்கு மஞ்சள் நிறத்தின் மீது தனிவிருப்பம் என்று சொல்வதையும் நிறத்தை துல்லியமாகத் தனது எழுத்தில் வெளிப்படுத்துவதையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. சர்கி மான் திடீரெனப் பார்வை இழப்பிற்கு உள்ளானவர். ஆகவே மனதில் பதிந்துள்ள நிறத்தை ஓவியத்தில் துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்வதற்காகச் சிறப்புப் புள்ளியை உருவாக்கியிருக்கிறார்.
இசைக்குறிப்புகள் போல இந்தக் குறிப்புகளை வைத்து அவரால் வண்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. கேன்வாசில் தான் வரைய வேண்டிய உருவங்கள் மட்டும் நிலக்காட்சிகளையும் இப்படிக் குறியீடுகளாகப் பிரித்துக் கொண்டுவிடுகிறார். பின்பு அதை அடிப்படையாகக் கொண்டு படம் வரைகிறார்.ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவல் நுண்ணோவியர்களின் உலகை விவரிக்கிறது.
மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஒட்டோமான் மற்றும் பாரசீக நுண்ணோவியர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை இழப்பு ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் பார்வை போய்விடும், அதைத் தங்கள் திறமைக்குக் கடவுள் அளித்த பரிசு என்றே ஓவியர்கள் கருதியிருக்கிறார்கள்.
ஒரு பார்வையற்ற நுண்ணோவியர் கலையின் உச்சத்தைத் தான் அடைந்துவிட்டதாகவே உணர்ந்திருக்கிறார். பார்வை போனனதைப் பற்றி அவருக்கு ஒரு புகாரும் இல்லை
துருக்கிய ஓவியர், Eşref Armağan பிறப்பிலேயே பார்வையற்றவர். வியப்பூட்டும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

மான் 1989 முதல் பார்வை இழப்பிற்கு உள்ளாக ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பார்வையற்றவராகவும் மாறியிருக்கிறார்
காட்சிகளை முழுவதுமாக உள்ளுணர்வின் வழியாகப் புரிந்து கொள்வதும் வெளிப்படுத்துவமாக இருக்கிறார் மான். அடர்வண்ணங்கள் இசையைப் போன்றவை. அவற்றைக் கையாளுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் மான்.
பார்வையற்ற நிலையில் ஒரு ஓவியர் தனது நினைவாற்றலையும் அனுபவத்தையும் நம்பியே படம் வரைகிறார். ஓவியம் வரைவதற்குக் கண் தான் பிரதமானது என்ற எண்ணத்தையும் மாற்றுகிறார். கலை அவருக்கு மீட்சியாக அமைந்துவிடுவதைக் காண முடிகிறது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

