S. Ramakrishnan's Blog, page 35
May 5, 2024
பிரிவின் மஞ்சள் நிறம்
ஆயில் பெயிண்டிங் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் THE PEASANTS. இந்தப் படத்திற்காக 40,000 கையால் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் (Władysław Reymont ) நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் ஹக் வெல்ச்மேன், ஓவிய மேற்பார்வையாளர் பிஸ்கெர்கா பெட்ரோவிச்.
ஓவியர் வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கையைப் பற்றிய Loving Vincent திரைப்படத்தை இயக்கியவர் ஹக் வெல்ச்மேன். அதைவிடவும் சிறப்பாக இப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

நடிகர்களைக் கொண்டு காட்சிகளை நேரடியாகப் படமாக்கப்பட்ட பின்பு அதே பிரேம்களைத் தனித்தனி ஓவியமாக வரைவதே ஆயில் பெயிண்டிங் அனிமேஷனாகும்.
ஒரு பிரேமினை வரைவதற்குக் குறைந்தது 5 மணி நேரமாகும்.
போலந்து, செர்பியா, லிதுவேனியா மற்றும் உக்ரைனில் உள்ள நான்கு அனிமேஷன் ஸ்டுடியோக்களில் ஏறக்குறைய 100 ஓவிய அனிமேட்டர்கள் இதில் பணியாற்றியிருக்கிறார்கள்.
கொரோனா மற்றும் உக்ரேன் போர் காரணமாக நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆயினும் இடைவிடாத உழைப்பின் காரணமாகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

படம் நான்கு பருவகாலங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வண்ணங்கள். காட்சிக் கோணங்கள். உடைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் மாறுகின்றன. போலந்தின் புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டு படத்தின் காட்சிகளை வரைந்திருக்கிறார்கள். திரையில் புகழ்பெற்ற ஓவியங்கள் உயிர்பெற்று இயங்குவதைக் காணுவது பரவசமளிக்கிறது
போலந்து கிராமமான லிப்ஸில் கதை நிகழ்கிறது. ஜக்னா என்ற இளம்பெண் மீது இருவர் ஆசைப்படுகிறார்கள். ஆன்டெக் என்ற திருமணமான விவசாயியை ஜக்னா காதலிக்கிறாள். கிராமத்தின் பணக்கார விவசாயியான ஆன்டெக்கின் தந்தை போரினா அவளை அடைய விரும்புகிறார். இதற்காக ஜக்னாவிற்கு மூன்று ஏக்கர் நிலம் பரிசாக அளிப்பதாக அவளது அம்மாவிடம் வாக்குறுதி அளிக்கிறார்.

ஜக்னாவிற்கு விருப்பம் இல்லாத போதும் அம்மாவின் கட்டாயத்தால் திருமணம் நடைபெறுகிறது.
இதனை விரும்பாத ஆன்டெக் தந்தையோடு சண்டையிடுகிறான். அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார் தந்தை.
திருமணத்திற்குப் பிறகும் ஆன்டெக் மீதான காதலை ஜக்னா தொடருகிறாள். போரினா இதனைக் கண்டிக்கிறார். ஆயினும் ரகசியமாக அவர்களின் உறவு தொடருகிறது.
இந்த நிலையில் மரம்வெட்டுவதில் ஏற்படும் பிரச்சனையின் போது போரினா வெளியாட்களால் தாக்கப்படுகிறார். அவரை ஆன்டெக் காப்பாற்றுகிறான். இந்தச் சண்டையில் தந்தையைத் தாக்க முயன்றவனை ஆன்டெக் கொன்றுவிடுகிறான். அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
காயம்பட்ட போரினா படுக்கையில் நாட்களைக் கழிக்கிறார். அவர் தனது சொத்து முழுவதையும் மகளுக்கு அளித்துவிட்டு ஜக்னாவை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார். ஆன்டெக் சிறையிலிருந்து திரும்பி வருகிறான். ஜக்னாவோடு ஒன்று சேருகிறான். ஆனால் ஊர்மக்கள் அதை விரும்பவில்லை. ஜக்னாவை ஊரைவிட்டுத் துரத்த முடிவு செய்கிறார்கள். இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளே படத்தின் கடைசிப்பகுதி.

ஜக்னாவைச் சுற்றியே கதை நடக்கிறது. போலந்து கிராமங்களின் பேரழகான இயற்கைக் காட்சிகளும், விவசாயக்குடும்பங்களின் வாழ்க்கை, சடங்குகள். விழாக்களைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
குறிப்பாக ஜக்னாவின் திருமணத்தின் போது நடைபெறும் நடனக்காட்சி அபாரம். அது போலவே மதுவிடுதியில் ஆன்டெக்கோடு ஜக்னா நடனமாடும் காட்சி. அறுவடை நடப்பது, பனிக்காலத்தின் வருகை, ஜக்னா செய்யும் காகிதபறவைகள். அன்டக்கின் மனைவி ஹன்கா பசித்த தனது குழந்தைகள் பற்றிப் பேசுவது, குளிர்காலப் புயல் வருவது போல அழகான, மறக்க முடியாத காட்சிகள் உள்ளன.

போலந்து ஓவியர் ஜோசப் மரியன் செலோமோன்ஸ்கி, ஜீன்-பிரான்காயிஸ் மில்லட் மற்றும் பிரெஞ்சு இயற்கை ஓவியர் Jules Breton, வரைந்த ஓவியங்களை அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பிரெட்டனின் காலிங் இன் தி க்ளீனர்ஸ் ஓவியம் திரையில் உயிர்பெற்று விரிவது அபாரமானது.
பருவ காலம் மாறுவது படத்தில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கோடையின் வருகை. அதன் மஞ்சள் வண்ணம். காட்சிக்கோணங்கள் மாறுவது சிறப்பாக உள்ளது. இது போன்ற ஆயில்பெண்டிங் அனிமேஷன் உருவாக்கத்தில் குளோசப் காட்சிகளைத் துல்லியமாக, வெகு கவனமாக வரைய வேண்டும். படத்தினை இதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட THE PEASANTS. முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது. சினிமாவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான சாட்சியமாக உள்ளது.
ஜக்னாவின் அம்மா ஒரு காட்சியில் மகளிடம் சொல்கிறார்
“காதல் சில காலத்தின் பின்பு மறைந்துவிடும். ஆனால் நிலம் அப்படியில்லை. அது என்றைக்கும் அப்படியே இருக்கும்“
இது போலவே ஜக்னாவை காதலிக்கும் ஆன்டெக் அவளைப் புனித நிலம் என்றே அழைக்கிறான்.
ஒரு காட்சியில் அவர்கள் வைக்கோலுக்குள் ஒளிந்து கொண்டு காதலிக்கிறார்கள். அதை அறிந்த போரினா வைக்கோற்போருக்கு தீயிட்டுக் கொளுத்துகிறார், சுற்றிலும் எரியும் நெருப்பை மறந்து காதலர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள். ஜக்னாவின் வண்ணமாகச் சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்துள்ளது தனிச்சிறப்பு.

படத்தைக் காணும் போது தாமஸ் ஹார்டி எழுதிய Tess of the d’Urbervilles நாவல் நினைவிற்கு வந்தது. இதே போன்ற கதைக்களன் கொண்ட நாவலது. 1979ல் ரோமன் போலன்ஸ்கி அதைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.
1924 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் The peasants என்ற அவரது நாவல் நான்கு-தொகுதிகளுடன் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் திரை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
.
May 4, 2024
மனித மனதின் குறியீடு
G. கோபி
சிகரெட் பிடிக்கும் குரங்கு சிறுகதை பல நினைவுகளைக் கிளறிவிட்டது.

எனது ஊர் கழுகுமலை. அங்குள்ள மலையில் உள்ள குரங்குகள் அங்கு வரும் மனிதர்கள் போடும் திண்பண்ட பொட்டலங்கள், கவர், வாட்டர் கேன், இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். பள்ளி படிக்கும் போது நண்பர்களோடு நான் அடிக்கடி போவேன். அப்போது சில நேரங்களில் அந்தக் குரங்குகள் யாரோ புகைத்து விட்டு போட்ட பீடி தூண்டுகளை எடுத்து பற்ற வைப்பது போலப் பாவனைச் செய்யும். ஆனால் காற்று அதிகம் இருப்பதால் அவற்றால் பற்ற வைக்க முடியாது. அது விளையாட்டு போல ஆச்சர்யமாக இருக்கும்.
ஆனால் சிகரெட் பற்ற வைத்து புகையை ஊதும் குரங்கை இந்தக் கதையைத் தவிர வேறெங்கும் கேள்வி பட்டதே இல்லை. விலங்குகள் மனிதர்கள் உடன் வாழ பழகி மனிதர்கள் செய்யும் அத்தனையும் செய்யப் பழகிக் கொள்கின்றன.
கதையில் ஏன் குரங்கு மனிதர்கள் செய்வதைச் செய்ய விரும்புகிறது? மேலும் மனிதர்கள் ஏன் சிகரெட் புகைப்பதின் மீது இவ்வளவு விருப்பம் கொண்டுள்ளார்கள்? சுற்றியுள்ள சமூகம் செய்யும் செயல்களையே சிறுவர்களும் உள்வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். ? இன்னொன்று ஒரு குரங்கை நாம் ஏன் இப்படி நடந்துகிறோம் என்ற பல கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. சிகரெட் பிடிப்பதற்குப் பதிலாக நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் என்பதுதான் அந்த ஊதுகுழலை சிறுவன் குரங்கிடம் தருவது. மேலும் சிகரெட் பிடிக்கும் குரங்கு என்றதுமே அந்தக் காட்சி கண் முன்னே உடனே மின்னல் வெட்டு போலத் தெரிவது தான். பெரும்பாலும் காற்றில் படார் என்று அடிக்கும் ஜன்னலைப் போலக் குறுங்கதைகள் வாசிக்கும் போது நம்மைத் தாக்குகின்றன. நேரிடையாக நமது வியப்பை கூர்மை கொள்ளச் செய்கின்றன.
மிருகக் காட்சி சாலைகளைப் பார்த்ததும் நாம் ஏன் இப்படி விலங்கு பறவைகளை இப்படிச் சிறைபடுத்திக் காட்சிபடுத்து வைத்திருக்கிறார்கள் மனிதர்களுக்கு என்ன உரிமை உள்ளது? ஆனால் அதே சமயம் அது மனித சுபாவங்களைக் கற்றுக் கொள்ளவதும் வியப்புதான்.
ஒவ்வொரு குரங்கும் மனித மனதின் குறியீடுதான். மரம் விட்டு மரம் தாவுவதும் வித விதமான பழக்கங்களால் அதைச் சுமையேற்றி அசிங்கபடுத்தி வைத்திருப்பதும் நாம் தான். அதற்குப் புற சூழலான சமூகமும் ஒரு காரணம்தான். அப்படியான மனதை ஒழுங்குபடுத்திச் சீரமைக்கச் சிறுவன் குரங்கிடம் கொடுக்கும் பச்சை நிற ஊதுகுழல் ஏனும் கலை சார்ந்த விஷயங்கள் தேவைப் படுகிறது.
மனித துயரங்களையும், குழப்படிகளையும், பணி சுமைகள் மற்றும் நாம் உருவாக்கிக் கொண்ட கற்பிதங்களையும் கலை கொண்டு நாம் புரிந்து கொண்டு கடந்து போக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதுவுமே இன்னொரு பழக்கமே. மனிதர்கள் பழக்கங்களுக்கு உடனே ஆளாகிவிடுகிறர்வர்கள் என்பதும் உண்மை.
இசை, கலை சார்ந்த விஷயங்கள் மனிதனை உருமாற்றி நல்ல பழக்கங்களை உருவாக்கி விடுகின்றன. எளிய குறுங்கதை வாயிலாக நல்ல சிந்தனையைத் தூண்டிய எஸ். ரா சாருக்கு பாராட்டுக்கள் நல்ல கதையை எழுதியுள்ளீர்கள்.
•••
நன்றி
மழையில் நனைந்த எனது புத்தகங்களுக்கான சிறப்பு விற்பனைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி.


திரளாக வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். எனது ஆங்கில நூலிற்கான அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அபர்ணா கார்த்திகேயன் உரையை முதன்முறையாகக் கேட்கிறேன். அற்புதமாகப் பேசினார். மேனாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் எனது கதைகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தின் நுட்பங்கள் குறித்து அவர் கேட்ட கேள்விகள் முக்கியமானவை. அகரனுக்கு எனது அன்பும் நன்றியும்




கதையாகும் மனிதர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளனின் சவால்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினேன். நிகழ்விற்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் தேசாந்திரி பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வாசகர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று நாட்களில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்

தனது சேது பாஸ்கரா கல்வி நிறுவனத்திற்காக மொத்தமாகப் புத்தகங்களை வாங்கி உதவிய டாக்டர் சேது குமணன் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி.
டாக்டர் சேது குமணன்இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து உதவிய இயக்குநர் வசந்தபாலனுக்கு அன்பும் நன்றியும்.
நூலைச் சிறப்பாக வெளியிட்டுள்ள ஓரியண்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்திற்கும் , அதன் ஆசிரியர் மொய்னா, நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.
தேசாந்திரி பதிப்பகத்தின் அன்புகரன். கண்ணகி, சண்முகம், ஹரிபிரசாத், கபிலா காமராஜ், நூல்வனம் மணிகண்டன், எடிட்டர் கௌதம், ஸ்ருதிடிவி கபிலன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
May 2, 2024
சஞ்சாரம் / திறனாய்வுக் கூட்டம்
நாளை ( 04.05.24) இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக சஞ்சாரம் நாவலுக்கான திறனாய்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சஞ்சாரம் குறித்து முனைவர் சு.விநோத் உரையாற்றுகிறார்.
இந்து தமிழ் திசை நிகழ்ச்சி
நாளை (04.04.24 )காலை இந்து தமிழ் திசை சார்பில் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
எஸ்.ராவிடம் கேளுங்கள்- 3
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி- 3
May 1, 2024
தனிமையின் நூறு ஆண்டுகள்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவரவுள்ளது.


அதற்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
நாவலின் மறக்க முடியாத துவக்க வரிகள் திரையில் காட்சியாக விரிவது அற்புதமாகவுள்ளது.
April 30, 2024
Frontline இதழில்
இம்மாத Frontline இதழில் எனது சிறுகதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது


நன்றி :
மினி கிருஷ்ணன்
பிரபா ஸ்ரீதேவன்
Frontline இதழ்.
சிகரெட் பிடிக்கும் குரங்கு
புதிய குறுங்கதை
சிம்பன்சிக் குரங்கு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது
மிருகக்காட்சி சாலையில் இருந்த அந்தச் சிம்பன்சிக் குரங்கிற்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அது கடந்த சில வாரங்களாகச் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருந்தது.

சிகரெட் புகையை ஊதியபடியிருக்கும் சிம்பன்சியின் புகைப்படம் நியூஸ்பேப்பரில் வெளியான பிறகு அதைக் காணுவதற்காக ஏராளமானவர்கள் மிருகக் காட்சிசாலைக்கு வரத் துவங்கினார்கள்.
சிகரெட்டினை பற்ற வைத்து குரங்கின் முன்னால் நீட்டினார்கள். சிம்பன்சி ஸ்டைலாகச் சிகரெட் பிடித்துக் காட்டியது. மனிதர்களின் செயலை குரங்கு செய்யும் போது ஏன் விநோதமாக இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
குரங்கு சிகரெட் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த மிருகக் காட்சியின் தலைமை நிர்வாகி எவரும் குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைக் கூண்டின் முன்பாக வைத்தார், ஆனாலும் எப்படியோ குரங்கிற்குச் சிகரெட் கிடைத்து வந்தது.
பணியாளர்களில் எவரோ குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கிறார்கள் என்று நிர்வாகி. சந்தேகப்பட்டார் சிகரெட் பிடிக்கத் துவங்கிய பிறகு குரங்கிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன
சிகரெட்டுடன் ஏதோ யோசனை செய்வது போல அமர்ந்திருந்தது. சில நேரங்களில் நடந்தபடியே சிகரெட் பிடித்தது. அப்போது எதையோ புரிந்து கொண்டது போலத் தலையசைத்தது. பெண்களின் முன்னால் சிகரெட் பிடிக்கும் போது அதன் முகபாவம் மாறியது. செயின் ஸ்மோக்கர்கள் போல ஒரு சிகரெட் முடிந்தவுடன் அடுத்தச் சிகரெட்டிற்குக் கையை நீட்டியது சிம்பன்சி.
இதனைக் கட்டுப்படுத்தவேண்டி மிருகக் காட்சி சாலைக்குள் சிகரெட் கொண்டுவருவதற்குத் தடை விதித்தார்கள். சிகரெட் கிடைக்காத நாட்களில் சிம்பன்சி ஆவேசமாகி கத்தியது. அங்குமிங்கும் தாவியது கையில் கிடைக்கும் பொருட்களை வீசி அடித்தது. குரங்கின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பதற்றமாக நடந்து கொள்ளும் என்றார் மருத்துவர்.
ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட் கொடுப்பது என முடிவு செய்தார்கள். முன்பு போலக் கூண்டின் அருகே வந்து சிகரெட் பிடிக்காமல் தள்ளி நின்று கூண்டிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு குரங்கு சிகரெட் பிடித்தது.
சிம்பன்சியின் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காக நடத்தை பயிற்சியாளர் ஒருவரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்தார்கள். ஐம்பது வயதான அந்தச் சீனர் சிம்பன்சி இருந்த கூண்டின் முன்பாக முக்காலி போட்டு அமர்ந்து அதன் நடவடிக்கையை ஆராய்ந்தார்.
“ஏன் சிம்பன்சி சிகரெட் பிடிக்க விரும்புகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.
“மனிதர்களைப் போலவே குரங்குகளும் வெறுமையை உணருகின்றன. தொடர்ந்து தான் பார்க்கப்படுவதை சிம்பன்சி விரும்பவில்லை. அது எவர் கண்ணிலும் படாமல் இருக்க விரும்புகிறது. அந்தச் சூழ்நிலை கிடைக்காத போது சிகரெட் பிடிக்கிறது“என்றார் சீனர்
மிருகக்காட்சி நிர்வாகம் அவரது வேண்டுகோளை மறுத்தது.
“சிம்பன்சி புகையை ரசிக்கிறது. அதற்காகவே சிகரெட் பிடிக்கிறது. புகையைப் போலத் தானும் காற்றில் கலந்துவிட விரும்புகிறது “என்றார் சீனர்.
“சிம்பன்சி சிகரெட் பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். அது எங்களுக்குத் தேவையற்றது. அதை உடனடியாக நிறுத்த வேண்டியது உங்கள் வேலை. அதைச் செய்துகாட்டுங்கள்“ என்றார் நிர்வாகி
சில நாட்களுக்குப் பிறகு அவர் சிம்பன்சி சிகரெட் பிடிக்கும் நேரம் தானும் ஒரு சிகரெட் பிடித்தார். சிம்பன்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை.
“புதிய பழக்கம் ஒன்றை ஏற்படுத்தும் போது சிம்பன்சி சிகரெட் பிடிப்பதை விட்டுவிடும்“ என்று சீனர் நம்பினார். இதற்காகக் கூண்டின் முன்னால் அமர்ந்து விசில் அடித்தார். சோப்பு நுரைகளை வைத்து விளையாடினார். புத்தகம் படித்தார். கால்பந்து விளையாடினார். பபிள்கம்மை மென்று பலூன் ஊதினார். தண்ணீர் வாளியை தலையில் ஊற்றி ஆடினார். எதுவும் சிம்பன்சிக்கு பிடிக்கவில்லை.
ஒரு நாள் பள்ளிமாணவன் ஒருவன் பச்சை நிற ஊதுகுழலை ஊதியபடி சிகரெட் பிடிக்கும் குரங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
குரங்கு சிகரெட் புகையை அவனை நோக்கி ஊதியது.
வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தான் வைத்திருந்த ஊதுகுழலை அதன் முன்பாக நீட்டி சிகரெட்டை கொடு என்று கேட்டான்.
மறுநிமிஷம் சிம்பன்சி தனது சிகரெட்டை அவனிடம் நீட்டியது. சிறுவன் தனது ஊதுகுழலை அதனிடம் தர மறுத்தான். சிம்பன்சி பாய்ந்து பிடுங்க முயன்றது. அவன் கூண்டினை விட்டு விலகி நின்று கொண்டான். சிம்பன்சி கூண்டின் இரும்புக் கம்பியை பிடித்து ஆவேசமாக ஆட்டியது.
புதிய டிரம்பட் ஒன்றை சிறுவனுக்கு அளிப்பதாகச் சொல்லி அவனது ஊதுகுழலை சிம்பன்சியிடம் கொடுத்துவிடச் சொன்னார் நடத்தை பயிற்சியாளர். கையில் கிடைத்த ஊதுகுழலை எப்படி ஊதுவது என்று தெரியாமல் சிம்பன்சி ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அன்று மாலை அது இரண்டாவது சிகரெட்டிற்காகக் கூண்டின் முன்பு வந்து நிற்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிந்தைய இரவில் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்துக் கொண்டிருக்கும் சப்தம் மிருகக் காட்சி சாலை முழுவதும் கேட்டது. அதன்பிறகு நாள் முழுவதும் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்தபடி இருந்தது. அதன் முகத்தில் முன்பு காணாத சந்தோஷம் வெளிப்பட்டது.
சிம்பன்சி ஊதுகுழல் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அந்தச் சிறுவன் ரகசியமாகப் பள்ளியின் கழிப்பறையில் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருப்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

