S. Ramakrishnan's Blog, page 34
May 19, 2024
எஸ்.ராவிடம் கேளுங்கள் -6
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது
May 18, 2024
திருடனின் மீது விழும் மழைத்துளி
மலையாள எழுத்தாளர் யு.கே. குமரன் எழுதிய இருட்டில் தெரியும் கண்கள் என்ற சிறுகதையில் தன்மீது விழும் மழைத்துளியால் திடுக்கிட்டுப் போகிறான் ஒரு திருடன்.

திருடனின் வாழ்க்கையை விவரிக்கும் அந்தக் கதையில் “இப்போதெல்லாம் யாரும் விலைமதிப்பு மிக்கப் பொருட்களை வீட்டில் வைப்பதில்லை. திருடச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு திருடனால் இங்குக் கண்ணியமான வாழ்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது“ என்கிறான் அத் திருடன்
பல நாட்களாகத் திருடச் செல்லாத திருடன் ஒரு இரவு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு மழைத்துளி அவனது முகத்தில் விழுகிறது. அது வரவிருக்கும் மழைக்காலத்தை நினைவுபடுத்துகிறது.
மழை அவனுக்கெனச் சொந்த வீடில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. அடுத்த மழைக்காலத்திற்குள் தனக்கென சிறிய குடிசை வீடாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் முன்பு நினைத்திருந்தான். அந்த முடிவை மழைத்துளி நினைவுபடுத்துகிறது
மழைக்காலம் வருவதற்குள் தான் ஒரு புதிய இடத்தில் வாழத் தொடங்க வேண்டும் என்று திருடன் நினைக்கிறான். ஆனால் அது எளிதான விஷயமில்லை.

பழைய பூட்டுகளைத் திறப்பது எளிது. இன்றைய பூட்டுகளை எளிதாகத் திறக்க முடியாது. உடைப்பதும் கடினம். இதனால் வீடுகளில் திருடுவது மிகவும் கடினமாகிவிட்டது என்கிறான் திருடன். அத்தோடு விலைமதிப்புமிக்கப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற முதன்மைப் பாடத்தை அனைவரும் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்கிறான் திருடன்
புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பல வீடுகள் பூட்டியே கிடப்பதைக் காணுகிறான். அவற்றின் உரிமையாளர்கள் துபாய் வாசிகள். அல்லது ஏதோ வெளிநாட்டில் வசிப்பவர்கள். பூட்டிய வீட்டில் மதிப்புமிக்க எந்தப் பொருளும் இருக்காது. ஒரு வீட்டில் நீண்ட காலம் வசிக்கும் போது தான் அதன் மீது பற்று ஏற்படுகிறது. வீடு நினைவின் பகுதியாக மாறுகிறது. ஆனால் இப்படிப் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகள் சவப்பெட்டியை நினைவுபடுத்துகின்றன என்கிறான்.
சில வீடுகளில் விளக்கு எரிவது தெரிகிறது. வயதானவர்கள் விளக்கை அணைக்க மறந்து உறங்கிவிட்டார்கள். அல்லது பாதுகாப்பிற்காக எரிய விட்டிருக்கிறார்கள். இது போன்று வயதானவர்கள் தனியே வசிக்கும் வீட்டில் திருடுவதற்கு ஒன்றுமிருக்காது. அவர்களே ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அங்கே திருடச் செல்லக்கூடாது என நினைக்கிறான்.
எங்கே திருடச் செல்வது என்று தெரியாமல் சாலையில் நின்று கொண்டிருந்த போது தான் மழைத்துளி அவன் மீது விழுகிறது
அமைதியான அந்த இரவில் பூட்டிய வீடுகள் பேசுவதைப் பற்றி அவன் கற்பனை செய்கிறான். வீடுகளுக்கும் சொந்த மொழி இருக்கக் கூடும். அந்த வீடுகள் தங்களுக்கே உரித்தான மொழியில் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்வதாக நினைக்கிறான்.
“இந்த வீட்டிற்குள் வா“ என்றொரு குரல் கேட்கிறது. எங்கிருந்து அக்குரல் வருகிறது என அவனுக்குத் தெரியவில்லை.
பூட்டிய வீடு திருடனை உள்ளே வரும்படி அழைக்கிறது
நீண்டகாலமாக மனித நடமாட்டத்தை அறியாத அந்த வீடு மனிதனின் காலடிச் சப்தத்திற்காக ஏங்குகிறது.
அந்த வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது இன்னொரு துளி மழை அவனது முகத்தில் விழுகிறது. திருடன் அந்த வீட்டிற்குள் செல்கிறான். அலமாரியிலிருந்த பொருட்களைக் காணுகிறான். நகைப்பெட்டி எங்கே இருக்கிறது எனத் தேடுகிறான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனுக்குத் திடீரென்று மாடிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒருவேளை, அந்த வீடுதான் அப்படிச் செய்யும்படி வற்புறுத்துகிறது என்று அவன் நினைக்கிறான்
வீட்டின் அழகை ரசித்தபடி படிகளில் ஏறுகிறான். மேல் தளத்தை அடைந்ததும் சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்பு அங்கிருந்த அறைக்குள் நடக்கிறான். ஒரு இடத்தை அடைந்ததும், யாரோ ரகசியமான குரலில் பேசுவதைக் கேட்கிறான். அது பக்கத்து வீட்டிலிருந்து வரும் சப்தம். யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்
பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே ஜன்னலில் ஏறி அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறான்.
அங்கே இரண்டு நாற்காலிகள் தெரிகின்றன. அதில் ஒரு வயதான ஆணும் ஒரு வயதான பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதிரே இருவர் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
என்ன செய்யப் போகிறார்கள்? என்று திருடனுக்குப் புரியவில்லை
“உங்கள் வாரிசுகள் வெளிநாட்டிலிருந்து வரமாட்டார்கள். அவர்களுக்கு இந்தச் சொத்தெல்லாம் வேண்டாம். மரியாதையாகச் சொத்தை எங்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள்.. இந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் உங்களை உயிரோடு விட்டுவிடுவோம். இல்லாவிட்டால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

பயந்து போன முதியவர்கள் எங்கே கையெழுத்துப் போட வேண்டும் என்று நடுங்கும் குரலில் கேட்கிறார்கள்.
அந்த ஆள் அவர்கள் முன்பு பத்திரத்தை வைக்கிறான். இப்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்குகிறது.. மழையின் இரைச்சலில் அவர்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை.
உள்ளே என்ன நடக்கிறது என்று திருடனுக்குத் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்ய ஆரம்பிக்கிறது. இருட்டிற்குள்ளாகவே உற்றுப் பார்க்கிறான். அந்த முதியவர்கள் கழுத்தை மேல்நோக்கி உயர்த்தி ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி இருப்பது தெரிகிறது. அவர்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த திருடன் அச்சம் கொள்கிறான். அந்த முதியவர்களின் கண்கள் அவனிடம் எதையோ யாசிக்கின்றன. அந்தப் பார்வை அவனை முழுவதுமாக உலுக்குகிறது. குழப்பமான மனதுடன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி நடக்கிறான்.
அன்று அவன் எதையும் திருடவில்லை. ஆனால் அமைதியை இழந்திருந்தான். அவனால் அந்த நான்கு கண்களை மறக்க முடியவில்லை. எனக் கதை முடிகிறது
மழைத்துளி திருடனுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் நடமாட்டத்திற்கு வீடு ஆசைப்படுவது கதையின் அழகான பகுதி. கதை முடியும் போது அந்த முதிய கண்களை நாமும் காண்கிறோம். அவை இந்த உலகிடம் இது தானா வாழ்க்கை என்ற கேள்வியை எழுப்புகின்றன. அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தான் திருடன் வெளியேறிப் போகிறான். அவனைப் போலவே குற்றவுணர்ச்சியுடன் நாமும் அமைதியை இழக்கிறோம்.
••
May 16, 2024
தந்தையின் காதலி
ஜப்பானிய எழுத்தாளர் சுடோமு மிசுகாமியின் நாவலை மையமாகக் கொண்டு 1963ல் உருவாக்கபட்ட திரைப்படம் Bamboo Doll of Echizen.

மூங்கில் பொம்மைகள் செய்யும் இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஜப்பானிய கறுப்பு வெள்ளைப்படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன. மாறுபட்ட கதைகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். உணர்ச்சிப்பூர்வமான திரைமொழி, நேர்த்தியான இசை, மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என ஜப்பானிய சினிமா அதற்கான கலைநேர்த்தியைக் கொண்டிருக்கிறது.
இப் படத்தின் இயக்குநர் கோசாபுரோ யோஷிமுரா. இவர் புகழ்பெற்ற இயக்குநர் யசுஜிரோ ஓசுவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஆகவே இப்படத்தில் ஓசுவின் சாயலைக் காண முடிகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் கசுவோ மியாகாவா. இவர் ரஷோமோன் படத்தின் ஒளிப்பதிவாளர். ஜப்பானின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகக் கொண்டாடப்பட்டவர்.

எச்சிசன் மாகாணத்தின் டேகாமி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் கிசுகே உஜியே பொம்மைகள் செய்யும் கலைஞன். இவனது தந்தை புகழ்பெற்ற பொம்மைக்கலைஞர். தந்தையின் மரணத்திலிருந்தே படம் துவங்குகிறது. அவருக்கான நினைவுச் சடங்குகளை நடத்தி வைப்பதற்காகப் புத்த மதகுருவை அழைத்து வருகிறான். அவரும் பிரார்த்தனை செய்து சடங்குகளை நிகழ்த்துகிறார். பனிப்பொழிவின் ஊடாக நடைபெறும் இந்த நிகழ்வு அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.
கிசுகேவின் தந்தை மறைந்ததைப் பற்றிக் கேள்விபட்டு தாமே என்ற அழகான இளம் பெண் அஞ்சலி செலுத்த வருகிறாள். அவள் யார் என்று கிசுகேயிற்குத் தெரியவில்லை. அவனது தந்தைக்குப் பழக்கமானவள் என்று சொல்கிறாள். பனியின் ஊடே நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ள அவளை வீட்டிற்குள் வரவேற்கிறான்.
குடையுடன் அவளைத் தந்தையின் நினைவிடத்திற்கு அழைத்துப் போகிறாள். அங்கே தாமே உணர்ச்சிவசப்பட்டவளாகப் பிரார்த்தனை செய்கிறாள். பின்பு தனது ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று பனிக்காற்றின் ஊடே புறப்படுகிறாள். அவளது பெயரை அறிந்து கொண்ட, கிசுகே சில நாட்களுக்குப் பின்பு அவளைத் தேடிச் செல்கிறான்.
தாமே ஒரு விலைமாது, சட்டவிரோதமான இன்ப விடுதியில் வேலை செய்கிறாள் என்பதையும், அவனது தந்தை ஒரு காலத்தில் அவளுடைய வழக்கமான வாடிக்கையாளராக இருந்ததையும் அறிந்து கொள்கிறான்.
தாமேயின் அறையில் அவளுக்காகத் தந்தை செய்து கொடுத்த அழகான மூங்கில் பொம்மை ஒன்றைக் காணுகிறான். அப்படி ஒரு அழகான பொம்மையை அவன் கண்டதேயில்லை. தாமே அந்தப் பொம்மையை அவனுக்கே பரிசாக அளிக்கிறாள்.
சிறுவயதிலே தாயை இழந்து தந்தையால் வளர்க்கபட்ட கிசுகேவிற்குத் தாமேயின் மீது ஈர்ப்பு உண்டாகிறது. அடிக்கடி அவளைத் தேடிச் சென்று பார்க்கிறான். உரையாடுகிறான். பெரும்கடன் சுமையால் அவள் சிரமப்படுவதை அறிந்து தனது பணத்தைக் கொடுத்து அவளைக் கடனிலிருந்து மீட்கிறான்.
அவள் விரும்பினால் அந்த விடுதியிலிருந்து வெளியேறி வந்து தன்னுடன் கிராமத்தில் வசிக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறான். தாமே யோசிப்பதற்கு நேரம் வேண்டும் என்கிறாள்

பொம்மை செய்வதற்கான மூங்கில் வெட்ட காட்டிற்குள் கிசுகே சென்றிருந்த நாளில் தாமே கிராமத்திற்கு வந்து சேருகிறாள். அவள் குதிரை வண்டியில் வருவதைக் கேள்விபட்டு கிசுகே காட்டிற்குள் மூச்சிரைக்க ஒடிவருவது அழகான காட்சி. ஊர்மக்கள் அவளைப் புது மணப்பெண் என்று நினைத்துக் கொண்டு வரவேற்கிறார்கள். அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தங்க வைக்கிறான். ஊரார் ஆசையைப் போலவே அவளும் கிசுகேயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவர்கள் திருமணம் எளிமையாக நடைபெறுகிறது

முதலிரவில் அவளுடன் உடலுறவு கொள்ளக் கிசுகே தயங்குகிறான். அவள் வற்புறுத்தவே அவளைத் தனது தாயாக நினைப்பதாகச் சொல்லி விலகிப் போகிறான். அதைத் தாமேயால் ஏற்க முடியவில்லை. அவனைக் கட்டாயப்படுத்த முடியாது என உணர்ந்த தாமே இந்த மனத்தடை நாளைடைவில் நீங்கிவிடும் என்று நம்புகிறாள்.
தந்தை பரிசாகச் செய்து கொடுத்த மூங்கில் பொம்மையைப் போலக் கிசுகே தானும் உருவாக்குகிறான். அவை சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன. அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்படுகிறது. தாமே கிசுகேவின் மனைவியாக வீட்டுவேலைகளைச் செய்கிறாள். ஆனால் அவளது உடலின் தேவையை அவன் அறியவேயில்லை. தாமே ஏக்கத்தால் வாடுகிறாள். ஒரு நாள் தன்னைத் தேடி வரும் தோழியிடம் இதைப்பற்றிச் சொல்லிப் புலம்புகிறாள்.
இன்னொரு நாள் கியோட்டோவிலிருந்து அவர்களின் மூங்கில் பொம்மைகளை வாங்கிப் போவதற்காக விற்பனைபிரதிநிதி ஒருவன் வந்து சேருகிறான். அவன் தாமேயின் பழைய வாடிக்கையாளன். அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்ற போதும் அவளது ஏக்கத்தைப் புரிந்து கொண்டு கட்டாயப்படுத்தி அவளுடன் உடலுறவு கொள்கிறான். இதில் தாமே கர்ப்பமாகிறாள்.

கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்புச் செய்ய விரும்பிய தாமே கியோட்டோ நகருக்குச் செல்கிறாள். அங்கே தன்னை ஏமாற்றிய விற்பனைபிரதிநிதியைச் சந்திக்கிறாள். கணவனின் அனுமதியின்றிக் கருக்கலைப்புச் செய்வது சட்டவிரோதமானது என்பதால், அவனிடம் உதவி கேட்கிறாள். அவனோ உதவி செய்வதாக நம்ப வைத்து அவளைத் திரும்பவும் ஏமாற்றுகிறான்.
தாமே இறுதியில் தன் குழந்தையைத் தற்செயலாக இழக்கிறாள். நடந்த நிகழ்ச்சிகள் எதுவும் கிசுகேவிற்குத் தெரியாது. அப்பாவியான அவனை ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வில் பாதிக்கபடும் தாமே கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகிறாள். காசநோயின் பாதிப்பு அவளை முடக்குகிறது. கிசுகே உண்மையை அறிந்து கொள்வதே பிற்பகுதிக்கதை.
தாமேயை தேடி அவளது விடுதிக்கு கிசுகே செல்லும் காட்சி, அவளுடன் உறையாடும் காட்சிகள் அழகானவை. அமைதியான வாழ்க்கையை விரும்பி கிராமத்திற்கு வரும் தாமேக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் உடலின் தேவை அவளைப் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வைக்கிறது. எதற்காக அவள் கிசுகேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த வந்தாள் என்ற காரணம் படத்தில் சொல்லப்படுவதில்லை. ஆனால் அந்த உறவு அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. கிசுகே தனது தந்தையை விடவும் அவள் மீது அதிக அன்பு செலுத்துகிறான். அவனை ஏமாற்றும் குற்றவுணர்வு தாமேவை நோய்மையுறச் செய்கிறது. கிசுகே தனது தந்தையின் மரணம் ஏற்படுத்திய வெறுமையைத் தாமேயைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறான். அவள் வந்தபிறகே அவனது வாழ்க்கை வளர்ச்சி அடைகிறது. தந்தையின் ஆசைநாயகியாக இருந்தவளை திருமணம் செய்து கொண்ட போதும் அவளை மனைவியாக அவனால் நினைக்க முடியவில்லை. இந்தச் சிக்கலை படம் அழகாக் கையாண்டிருக்கிறது
நாவலில் வரும் கிசுகேவைப் போலவே எழுத்தாளர் சுடோமு மிசுகாமியும் தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, அவர் ஒன்பது வயதில் உள்ளூர் புத்தகோவிலில் எடுபிடி வேலைகள் செய்வதற்காக அனுப்பப்பட்டார், பின்னர் அவர் கியோட்டோவில் உள்ள ஷோகோகுஜி கோயிலுக்கு மாற்றப்பட்டார், அங்குச் சில காலம் ஹனாசோனோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்
வறுமையின் காரணமாகச் சிறு சிறு வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் சீனாவிற்கும் மஞ்சூரியாவிற்கும் அனுப்பப்பட்டார், அங்குப் போர்க்களப் பணியாளர்களின் பொறுப்பாளராக வேலை செய்தார். ராணுவ சேவையிலிருந்து தப்பி வந்து தலைமறைவு வாழ்க்கையை நடத்திய காலத்தில் தான் மிசுகாமி எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் தனது முதல் நாவல் வெளியானது. அதன்பிறகே அவர் திருமணம் செய்து கொண்டார், அவரது குழந்தை குறைவளர்ச்சியுடன் பிறந்தது. தனது மகளைக் காப்பாற்ற அவருக்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. இதற்காக மர்மக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது மனைவிக்குக் குறைவளர்ச்சியான குழந்தையைப் பிடிக்கவில்லை. மிசுகாமியோடு தொடர்ந்து சண்டையிட்ட அவரது மனைவி பின்பு அவர்களைக் கைவிட்டு பிரிந்து போனார்.
மிசுகாமி தனது சிறுவயது மற்றும் இளமைக்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு Bamboo Doll நாவலை எழுதினார். இனவரைவியல் ஆவணம் போன்ற உணர்வைத் தரும் இந்த நாவல் ஜப்பானின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
படத்தின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது, தாமேவாக நடித்துள்ள அயகோ வகாவோவின் சிறந்த நடிப்பும், சேய் இகெனோவின் இசையும் கச்சிதமான திரைக்கதையும் இப்படத்தை ஜப்பானின் கிளாசிக் படங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.
**
May 15, 2024
அகமெம்னானின் கனவு
கிரேக்கப் பழங்கால நூல்களை இன்றைய இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை எவ்வளவு விரிவான புனைவுப்பரப்பில் இயங்கி, ஆழமான உணர்வுகளை, புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று புரிகிறது.
மனிதர்களுக்குள் நடக்கும் மோதலை மட்டும் கிரேக்கக் கதையுலகம் விவரிக்கவில்லை. மாறாக மனிதனுக்கும் கடவுளுக்குமான மோதலை. கடவுளின் பழிவாங்குதலைப் பற்றிப் பேசுகிறது. பூமியைப் போலவே வானமும் அங்கே முக்கியக் கதைக்களமாக விளங்குகின்றன.

ஒரு கதாபாத்திரத்தின் விதியை வானிலிருக்கும் ஒரு கடவுள் முடிவு செய்கிறார். மனிதர்கள் கடவுளின் கைகளில் பகடைக்காய்களாக உருளுகிறார்கள். அதிகாரத்திற்கான போட்டி மற்றும் முடிவற்ற காதல் போட்டிகளைக் கிரேக்க இலக்கியங்கள் அளவிற்கு எவரும் பேசியதில்லை.
ஹோமரின் கதை செல்லும் வேகத்தை எந்த நவீன எழுத்தாளரிடம் நாம் காண இயலாது. இலியட்டில் நாம் காணுவது போர்க்களத்தை மட்டுமில்லை. போருக்குப் பிந்திய நிகழ்வுகளை, மரணச்சடங்குகளை, போர்களத்தில் பின்பற்ற வேண்டிய அறத்தை. ஹோமரின் மகத்தான கவித்துவம் போர்க்கள நிகழ்வுகளைப் பெரும் துயர நாடகமாக மாற்றுகிறது.
கிரேக்கக் கதையுலகில் பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று கனவை உருவாக்குதல்.
ஒருமுறை மைசீனிய நாட்டின் அரசனும் கிரேக்கப் படையின் முதன்மைத் தளபதியுமான அகமெம்னான் கிரேக்க கடவுளான ஜீயஸை கோபம் கொள்ளச் செய்துவிட்டார்.
அவரைத் தண்டிக்க விரும்பிய ஜீயஸ் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதாவது அகமெம்னான் தலைக்குள் ஒரு கனவைப் புகுத்திவிட்டால் அது தானே அவனை அழிவை நோக்கிக் கொண்டு சென்றுவிடும்.
அப்படியான ஒரு கனவை அகமெம்னான் தலையில் புகுத்துவதற்காகக் கனவுகளின் கடவுளான ஒனிரோஸை அனுப்பி வைக்கிறார் ஜீயஸ்.

அகமெம்னான் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது தலைக்குள் தண்ணீர் ஊற்றுவது போலக் கனவை ஊற்றுகிறார் ஒனிரோஸ். காலையில் விழித்தெழுந்த அகமெம்னான் தான் டிராய் நகரைத் தாக்கி டிரோஜன்களை அழிப்பது போலக் கனவு கண்டதாகச் சொல்கிறார். அந்தக் கனவு அவருக்குச் சந்தோஷம் அளிக்கிறது. அவர் ஆயிரம் கப்பல்களுடன் டிராய் மீது போர் தொடுக்கிறார். அந்தப் போர் பத்து ஆண்டுகளாக நீடிக்கிறது. முடிவில் அகமெம்னான் வெற்றி பெறுகிறார்.
ட்ரோஜன் போரில் வெற்றி பெற்ற பிறகு, அகமெம்னான் அழகியான கசாண்ட்ராவை தன்னுடன் அழைத்துக் கொண்டு நாடு திரும்புகிறார். அகமெம்னன் தனது சொந்த மகள் இபிஜீனியாவைக் கொல்ல முயன்றதையும், கசாண்ட்ராவுடன் திரும்பி வந்ததையும் ஏற்க முடியாத அவனது மனைவி கிளைடெம்னெஸ்ட்ரா அவளது காதலன் ஐகிஸ்தோஸுடன் சேர்ந்து அகமெம்னானைக் கொன்றார் என்கிறது கிரேக்க இலக்கியம்.
பாரீஸ் ஹெலென் மீது கொண்ட காதல் மட்டும் டிராய் யுத்தத்திற்குக் காரணமில்லை. இப்படியொரு காரணமும் ஒளிந்திருக்கிறது.

ஒருவரது தலைக்குள் கனவை விதைக்கும் இந்த நிகழ்வினை இன்றைக்கு வாசிக்கும் போதும் வியப்பாகவேயிருக்கிறது. கடவுள் அனுப்பி வைக்கும் செய்தி தான் கனவு. நமது கனவுகளை யாரோ உருவாக்குகிறார்கள் என்கிறது கிரேக்க இலக்கியம்.
அகமெம்னான் தன்னை ஜீயஸ் பழிவாங்கிவிட்டதை கடைசிவரை உணரவேயில்லை. கிரேக்க இலக்கியங்களில் நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கிறது. சுதந்திரம், நீதி, அறம். காதல் குறித்துக் கிரேக்க இலக்கியத்தில் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைய சமூக,அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கும் பொருந்தமாகவே இருக்கின்றன.
May 12, 2024
அபாய வீரன்
ராஜ்

குழந்தைகளுக்கான கதைகளை விளையாட்டு வடிவத்தில் நீங்கள் வடிவமைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாங்கி அதை என் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கூடவே பகடையும். மகிழ்ச்சியுடன் அவர்கள் நண்பர்களுடன் விளையாடினார்கள். கூடவே என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் குழந்தையாகி போனதில் நான் அடைந்த பேரானந்தத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் நான்கைந்து நாட்களாகச் செல்போன் பற்றிய ஞாபகமே அவர்களுக்குப் பெரிதாக வரவில்லை. புத்தகத்தில் படித்து விளையாடிய அந்த விளையாட்டை வைத்துப் புதிதாக அவர்களாக ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொண்டும் விளையாடுகிறார்கள்.
குறிப்பாகத் தினமும் கதை சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் நானும் ஏதாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டியது உள்ளது. முதல் முறை விளையாட்டில் என் மகள் தான் ஜெயித்தாள். அவள் தான் அபாய வீரி .
இது போன்ற கதைகளும் விளையாட்டும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.
தங்களுக்கும் தங்களின் அபாய வீரன் குழந்தைகள் விளையாட்டு கதைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்
எஸ்.ராவிடம் கேளுங்கள் -5
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் ஐந்தாவது பகுதி வெளியாகியுள்ளது
May 11, 2024
பார்ட்ல்பியின் மறுப்பு
ஹெர்மன் மெல்வில்லின் நெடுங்கதையான Bartleby, the Scrivener முப்பது பக்கங்கள் கொண்டது. 1853 இல் வெளியானது.
நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள சட்ட அலுவலகத்தில் கதை நடக்கிறது. கதை சொல்பவர் ஒரு வயதான வழக்கறிஞர். அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பார்ட்ல்பி என்பவனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

சட்ட ஆவணங்கள்- ஒப்பந்தங்கள், குத்தகைகள், உயில்கள் மற்றும் பிற ஆவணங்களைக் கையால் நகலெடுக்கும் எழுத்தர்களே ஸ்க்ரிவெனர் எனப் படுகிறார்கள். அவர்களின் வேலை ஆவணங்களை நகலெடுத்து மூலத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்துத் தருவதாகும்.
கதையைச் சொல்லும் வழக்கறிஞர் ஆரம்பத்திலே தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார். அவரது அலுவலகத்தில் துருக்கி, நிப்பர்ஸ் மற்றும் ஜிஞ்சர் நட் என மூவர் வேலை செய்கிறார்கள். இது அவர்களின் உண்மைப் பெயர்களில்லை, பட்டப்பெயர்கள்.
இதில் துருக்கிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். குள்ளமானவர். அவர் தினமும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்வார். மதியத்தின் பின்பு அவரது இயல்பு மாறிவிடும். எதையும் கவனமாகச் செய்ய மாட்டார். பேனாவை மைப் புட்டியில் நனைப்பதில் கவனக்குறைவாக இருப்பார். ஆவணங்களைக் கறைபடிய செய்துவிடுவார். தப்பும் தவறுமாகப் பிரதியெடுப்பார். மிகவும் களைத்து போய்விடுவதுடன் எரிச்சலாகவும் நடந்து கொள்வார்.
ஆகவே காலை நேரம் மட்டுமே இவருக்கு முக்கியப் பணிகள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை மதியம் மிக மோசமான நபராக மாறிவிடுவார். வயதாகிவிட்டது தான் இதற்கெல்லாம் காரணம் என்று துருக்கி சமாதானம் சொல்லுவார்.
நிப்பர்ஸ் இளைஞன். இருபத்தைந்து வயதிருக்கும். அவன் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டவன். ஆகவே காலை அலுவலகம் வரும் போதே எரிச்சலும் பதற்றமும் கொண்டவனாக இருப்பான். வயிற்றுப்பிரச்சனையால் எந்த வேலையும் கவனமாகச் செய்ய முடியாது. தனது மேஜையைச் சரிசெய்வதிலே காலை நேரத்தைப் போக்கிவிடுவான்., மதியத்தின் பின்பு அவனது வயிற்றுப்பிரச்சனை சரியாகிவிடும். அப்புறம் சுறுசுறுப்பாக வேலை செய்வான். மகிழ்ச்சியாக நடந்து கொள்வான். ஆகவே முக்கியமான பணிகளை மதியம் அவனிடம் ஒப்படைப்பார்கள்.
அந்த அலுவலகத்தின் மூன்றாவது நபர் ஜிஞ்சர் நட், 12 வயதுச் சிறுவன். எடுபிடி வேலைகளுக்காக வைத்திருந்தார்கள். அருகிலுள்ள பேக்கரிக்குப் போய்த் தின்பண்டங்களை வாங்கி வருவது, துப்புரவுப் பணிகளைச் செய்வது அவனது வேலை.

இந்த அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்தவன் தான் பார்ட்ல்பி. வழக்கறிஞர் கொடுக்கும் பணியை மிகுந்த கவனத்துடன் சிறப்பாகச் செய்து தருகிறான். சில நாட்கள் நகலெடுப்பு பணியைப் பார்ட்ல்பி பகலிரவாக மேற்கொள்வதை வழக்கறிஞர் கண்டிருக்கிறார். மற்ற ஊழியர்கள் போல அவன் சாப்பிட கூட வெளியே செல்வதில்லை. பசியை மறந்து வேலை செய்து கொண்டிருப்பான். இதனால் அவன் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது.
ஒரு நாள் முக்கியமான ஆவணம் ஒன்றை அவசரமாக நகலெடுக்க வேண்டும் என்பதால் வழக்கறிஞர் பார்ட்ல்பியை அழைத்து அந்தப் பணியை மேற்கொள்ளச் சொல்கிறார்
என்னால் செய்ய முடியாது என்று பார்ட்ல்பி மறுத்துவிடுகிறான். அவர் அதை எதிர்பார்க்கவில்லை.
ஏன் முடியாது என்று காரணம் கேட்கிறார். அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான். ஆகவே அந்தப் பணியை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடுகிறார்.
அடுத்த நாள் அவன் நகலெடுத்துக் கொடுத்த வேறு ஆவணத்தை மூவரும் இணைந்து சரிபார்க்கலாம் என்று வழக்கறிஞர் அவனை அழைக்கிறார். அவன் வர மறுக்கிறான். அப்படி ஒருவர் படிக்க மற்றவர் சரிபார்ப்பது அலுவலக நடைமுறை என்று வழக்கறிஞர் விளக்குகிறார். ஆனாலும் பார்ட்ல்பி என்னால் முடியாது என்று பதில் தருகிறான்.
இந்தப் பதில் வழக்கறிஞரை மட்டுமின்றி மற்ற நகலெடுப்பவர்களையும் எரிச்சல்படுத்துகிறது. அவனை வேலையை விட்டுத் தூக்கிவிடுங்கள் என்று வழக்கறிஞரிடம் சொல்கிறார்கள்.
அன்றிலிருந்து எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் பார்ட்ல்பி இதைச் செய்ய நான் விரும்பவில்லை என்று மறுக்கிறான்.
இப்படி ஒருவனை எதற்காக வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். வேலையை விட்டுத் துரத்திவிடலாம் என்று வழக்கறிஞர் முடிவு செய்கிறார்.
அந்த வாரம் ஞாயிற்றுகிழமை வழக்கறிஞர் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு அவசர வேலை ஒன்றின் காரணமாக அலுவலகம் செல்கிறார். அலுவலகத்தில் பார்ட்ல்பி இருப்பதைக் காணுகிறார். விடுமுறை நாளில் அவன் என்ன செய்கிறான் என்று சந்தேகம் கொண்டு விசாரிக்கிறார். அவன் பதில் சொல்ல மறுக்கிறான். அத்தோடு எதுவும் நடக்காதவன் போல வெளியேறிப் போய்விடுகிறான்
அவன் அந்த அலுவலகத்தில் குடியிருக்கிறான் என்ற உண்மையை அப்போது தான் வழக்கறிஞர் உணருகிறார்.
இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை. அவனுக்குக் குடும்பம் இல்லையா. என்று யோசிக்கும் வழக்கறிஞர் அவனது மேஜையைத் திறந்து பார்க்கிறார். அதில் அவனது சேமிப்புப் பணத்தைக் காணுகிறார். பார்ட்ல்பியை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை
மறுநாள் அவனிடம் எந்த ஊரைச் சேர்ந்தவன். அவனது குடும்பம் எங்கேயிருக்கிறது என விசாரிக்கிறார். தன்னைப் பற்றிய விபரங்கள் எதையும் பார்ட்ல்பி சொல்ல மறுக்கிறான். அத்தோடு வெளியே உள்ள செங்கல் சுவரை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறான். அவனது மறுப்பு வழக்கறிஞரின் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது.
அவனுக்குத் தர வேண்டிய சம்பள பணத்தைக் கொடுத்து வேலையை விட்டு அனுப்ப உத்தரவிடுகிறார். பணத்தை வாங்க மறுப்பதோடு தன்னால் வெளியேற முடியாது என்று பார்ட்ல்பி சொல்கிறான். ஆத்திரமான வழக்கறிஞர் அவனுக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறார். அப்படியும் பார்ட்ல்பி வெளியேறிப் போகவில்லை,
உடல் பலத்தைப் பயன்படுத்தவோ அல்லது காவல்துறையை அழைப்பதற்கோ அவருக்குத் தயக்கம், ஆகவே தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறார்.
பார்ட்ல்பி பழைய அலுவலகத்தை விட்டுப் போக மறுக்கிறான். அந்த இடத்தின் புதிய உரிமையாளர் பார்ட்ல்பியை வழக்கறிஞரின் உறவினர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் புகார் அளிக்கிறார்.
அவன் தனது உறவினர் இல்லை. தேவையான நடவடிக்கை எடுத்துத் துரத்திவிடுங்கள் என்கிறார் வழக்கறிஞர். காவல்துறை உதவியோடு அவனை வெளியேற்றுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கும் பிடிவாதமாகச் சாப்பிட மறுத்து, எதைச் செய்யச் சொன்னாலும் தனக்கு விருப்பமில்லை என்கிறான். முடிவில் சிறைச்சாலையில் பட்டினி கிடந்து சுவரைப் பார்த்தபடி இறந்து விடுகிறான்.
பார்ட்ல்பியின் பிடிவாதமான மறுப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று வழக்கறிஞருக்குத் தெரியவில்லை.
மற்றவர்களைப் போலப் பணம் சேர்ப்பதிலோ, இன்பங்களை அனுபவிப்பதிலோ பார்ட்ல்பி ஆர்வம் காட்டவில்லை. பங்குச்சந்தை உலகம் என்பது பேராசையும் தந்திரங்களும் கொண்டது. ஆனால் அந்த உலகிற்குள் தனது ஆன்மாவின் துயரால் எதையும் செய்ய விரும்பாதவனாகத் துறவி போலப் பார்ட்ல்பி நடந்து கொள்கிறான்.
பார்ட்ல்பி செங்கல் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தான் கதையின் மையப்படிமம். அந்தச் சுவர் அவனது மறுப்பின் அடையாளம். கதையின் முடிவில் வக்கீல் அதைப் புரிந்து கொள்கிறார்
பார்ட்ல்பி ஒளிபுக முடியாத பொருளைப் போலிருக்கிறான் அவனால் மற்றவர்களைப் போலச் சமரசங்களுடன் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை.
பார்ட்ல்பியின் மறுப்பைக் கதை முழுவதும் காணுகிறோம். ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்று ஒருபோதும் வழக்கறிஞர் கேட்பதில்லை.
கதையின் முடிவில் பார்ட்ல்பி பற்றிய சிறிய குறிப்பு இடம்பெறுகிறது. அதில் பார்ட்ல்பி யார், தற்போதைய கதை சொல்பவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினான் என்று எதுவும் விளக்கப்படவில்லை.
பார்ட்ல்பி வாஷிங்டனில் உள்ள டெட் லெட்டர் அலுவலகத்தில் ஒரு துணை எழுத்தராக வேலை செய்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீரென நீக்கப்பட்டான் என்ற குறிப்பு காணப்படுகிறது.
சரியான முகவரி இல்லாத மற்றும் இறந்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மூலம் வாழ்க்கையின் அர்த்தமின்மையைப் பார்ட்ல்பி புரிந்து கொண்டிருக்கிறான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஆனால் ஒரு மனிதனின் மறுப்பிற்கான உண்மையான காரணத்தை எவராலும் கண்டறிய முடியாது. மனதின் சிக்கலான அடுக்குகளுக்குள் அந்த முடிவு புதையுண்டு போயிருக்கும்.
கதையில் வரும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பார்ட்ல்பியை வெறுக்கிறார்கள். ஆனால் அவன் எவரையும் வெறுக்கவில்லை. பட்டினி கிடப்பதன் வழியே அவன் தன்னைதானே தண்டித்துக் கொள்கிறான்.
பார்டில்பி எந்த மாற்றத்தை விரும்பவில்லை.. அவனால் தனது அந்தரங்க உலகத்தை விட்டு வெளியே செல்லவும் , தன்னைப் பற்றிய பொதுப் பிம்பத்தை உருவாக்கவும் முடியாது. ஆகவே தனது மறுப்பை அழுத்தமாக வெளிப்படுத்துகிறான். மற்றவர்களின் அனுதாபத்தைப் பார்டில்பி ஏற்பதேயில்லை.
அவன் ஒரு பைத்தியம் என்று கதையின் ஒரு இடத்தில் ஜிஞ்சர் நட் சொல்கிறான். மற்றவர்களைப் போல நடந்து கொள்ளாதவர்களை உலகம் எப்போதும் பைத்தியம் என்றே அழைக்கிறது. புரிந்து கொள்கிறது.
மெல்வில்கதையில் மெல்வில் பசி மற்றும் அஜீரணக்கோளாறு பற்றிக் குறிப்பிடுகிறார். நல்ல உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்ற வழக்கறிஞரின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். துருக்கிக்குச் சாப்பிடுவதில் ஆர்வம். நிப்பர்ஸ் வயிற்றுப்பிரச்சனை கொண்டவன். இவர்களை எளிதாகச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் விரும்பிப் பட்டினிகிடப்பவனைத் தான் சமூகம் சந்தேகிக்கிறது. கைவிடுகிறது.
கதையில் வரும் துருக்கியைப் போல நாளின் பாதிநேரம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர்கள் இன்றுமிருக்கிறார்கள். அவர்கள் மதிய நேரத்தில் ஆறிப்போன டீயைப் போல மாறிவிடுகிறார்கள்.
பார்ட்ல்பி அலுவலக நடைமுறைகளை ஏற்க மறுக்கிறான். உத்தரவுகளை மறுக்கிறான். பின்பு ஏன் வேலை செய்கிறான். அந்த அலுவலகம் அவனது புகலிடம். சிலந்தியைப் போலச் சிறிய அலுவலகத்தின் மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டுவிடுகிறான். ஆனால் சிலந்தியை யார் விரும்புவார்கள்.
பார்ட்ல்பி மனநோயாளியா, இல்லை. அவன் மறுப்பை மிக நேர்மையாக வெளிப்படுத்துகிறான். அதுவும் முகத்திற்கு நேராக வெளிப்படுத்துகிறான். அந்தத் தைரியம் முக்கியமானது. அலுவலக உத்தரவை எத்தனை பேரால் மறுக்க முடியும். அதே நேரம் கூடுதலாகத் தரப்படும் பணத்தை வேண்டாம் என்று மறுத்துவிடுவதும் முக்கியமானது,
பார்ட்ல்பி ஒரு மனிதனின் கதை மட்டுமில்லை. அது ஒரு குறியீடு. அவனது பாதிப்பில் தான் காஃப்கா பட்டினிக்கலைஞன் கதையை எழுதியிருக்கிறார். பின்நவீனத்துவப் படைப்பாளிகள் பலரும் இந்தக் கதையை வியந்து பாராட்டுகிறார்கள். அந்த வகையில் Bartleby, the Scrivener என்பது நவீன அமெரிக்காவின் உருவகக் கதையாகும்
May 10, 2024
டான்டூனின் கேமிரா – வாசிப்பனுபவம்
ந. பிரியா சபாபதி, மதுரை.

டான்டூன் எனும் கறுப்பு எறும்பின் வாழ்க்கை வழியே ஆசிரியர் மனிதர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாது.
டான்டூன் சிந்தையானது அறிஞர்களின் சிந்தையாகவே உள்ளது. பிற எறும்புகள் அனைத்தும் ஒன்று சேரும் பொழுது பெரும்பாலும் உணவுகளைப் பற்றியே இருக்கும். ஆனால் இதன் சிந்தையானது பரந்து பட்ட சிந்தையாகத்தான் இருக்கும். இந்தப் பரந்த பட்ட சிந்தனைதான் சீரிய செயலுக்கு வழி வகுக்கும் என்பதைக் கூறிச் செல்கிறார்.
மனிதர்களுக்கு உள்ள வசதிகளைப் போல் தங்களுக்கும் அனைத்து வசதி கிடைத்தால் அருமையாக இருக்கும் என எண்ணுகிறது. அதன் அம்மாவானது தங்கள் இனத்திற்குப் பலமிருப்பதால் மனிதர்களுக்குத் தேவையான வசதி போன்று தேவையில்லை எனக் கூறுகிறது.
மனிதர்களின் சோம்பேறித்தனத்தை ஆசிரியர் சுட்டும் பொழுது நாம் வாழும் முறையையும் , மாற்றிக் கொள்ள முறையையும் ஆசிரியர் தெளிவாகச் சுட்டுகிறார். அதில் மறுப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
டான்டூனின் சாகசப் பயணம் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தொடங்குகிறது. டான்டூனின் தாய் தன் மகன் தன் கணவனைப் போல் உயிரை விட்டுவிடுவானோ என்று பயம் கொள்கிறது. அதன் முயற்சிக்குத் தடை விதிக்கிறது. ஆனாலும் தன் மன உறுதியுடன் எதிர்கொள்கிறது.
புகைப்படக் கலைஞனாக மாறுவதில் எறும்பு எதிர்கொள்ளும் இன்னல்களைக் கூறும் இடத்தில் அதன் குழந்தைத்தனமும் , முயற்சியும் அழகாகப் பரிணமிக்கிறது.
உழைப்பே உயர்வு தரும் என்பதை ஆசிரியர் டான்டூனின் ஒவ்வொரு முயற்சியிலும் மனிதர்களான நமக்கு உணர்த்துகிறார்.
ஆசிரியரின் பல சிறார் நாவல்களில் இயற்கையைப் போற்றும் விதமாகவும், அதனைப் பல மனிதர்கள் பாழ்படுத்தும் விதத்தினையும் , பாதுகாக்கும் விதத்தினையும் அறிவுறுத்திக் கொண்டே உள்ளார்.
டான்டூனும், ஸாகரும் உரையாடும் இடம் மனிதர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
கரும்பாக்கம் கடற்கரை நகரம் போன்று அனைத்துக் கடற்கரை நகரமிருந்தால் கடற்கரை நகரங்கள் மனிதர்களிடமிருந்து காப்பாற்றப்படும். வருங்காலத்தில் இவையெல்லாம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நமக்குள் ஏற்படுகிறது.
டான்டூன் லைமான் உதவியுடன் கடற்பந்தாட்ட்த்தில் தன் குழுவினருடன் சிவப்பு எறும்பு கூட்ட்த்தை வெல்கிறது. தன் தந்தை போன்று சிறந்த புகைப்படக் கலைஞராகவும் தன் செயலால் வெளிப்படுத்தியது.
தன் எதிரியைக் கடற்பந்தாட்ட்த்தில் காப்பாற்றுகிறது. இவ்விடத்தில் உதவி செய்தல் குணத்தின் சிறப்பினையும் உணர முடிகிறது.
எறும்புகளையும் அதன் வாழ்க்கையையும் மையப்படுத்திய கதையாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் நம்பிக்கை, உண்மை, அன்பு, நேர்மை, நட்பு, பெரியோரை மதித்தல் என மனிதன் மனிதனாக வாழ்வதற்குரிய குணங்களைப் பெற்றுக் கொள்ள இயல்கிறது.
மனிதன் இயற்கையைப் பாழ்படுத்தினால் இயற்கையின் தாக்கம் எவ்விதமாக இருக்கும் என்பதையும் கதையின் வழியே கூறுகிறார்.
கேமிரா நினைவுகளைப் பதிவு செய்து நமக்கு அளிப்பது போல் இந்நாவலில் ஆழ்ந்த கருத்துகளை எளிய வாக்கியங்களின் வழி நம் கைகளுக்குக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியோர்களும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் ஆகும்.
புஷ்கினைத் தேடுகிறார்கள்
உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்தும் புஷ்கினின் முதற்பதிப்புகள் திருடு போவதாகச் செய்தி படித்தேன். டார்ட்டு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சமீபமாக இந்தத் திருட்டு நடைபெற்றிருக்கிறது

அரிய நூல்களை இப்படித் திருடிச் சென்றுவிற்கும் கூட்டம் பெருகிவிட்டது என்றும், இந்த முதற்பதிப்புகளுக்கு இன்றைய சந்தையில் விலை பல கோடி ரூபாய் என்றும் சொல்கிறார்கள்.
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முதற்பதிப்புகளைச் சேகரிக்கும் வசதி படைத்தவர்கள் அதற்காக எவ்வளவு பணமும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள்.
அரிய புத்தங்களைச் சேகரிக்கும் இந்தப் பிப்லியோஃபைல்களின் உலகம் விசித்திரமானது. இதைப்பற்றி ஜீன் கிளாடே கேரியர் விரிவாக எழுதியிருக்கிறார். அவரும் அரிய நூல்களைச் சேகரிப்பவர்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்றால் அதை வாங்குவதற்குப் பெரிய போட்டியே நடக்கும் என்கிறார்கள்.
அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்களைத் திருடிப் போகிறவர்கள் போல நூலகங்களிலிருந்து அரிய புத்தகங்களைத் திருடி விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அரிய நூல்களின் மதிபபை பெருபான்மையினர் அறியவில்லை. அதைப் பழைய குப்பை என்று நினைத்து எரித்துவிடுகிறார்கள். இப்படித் தீயிலிட்டும், குப்பையில் எறிந்தும் போனது தமிழ் நூல்கள் ஏராளம்.
ரஷ்ய அரசர் பீட்டர் தி கிரேட் ஆப்ரிக்கா மீது படையெடுத்து அபிசீனிய அரசனைத் தோற்கடித்தார். தோற்ற மன்னரால் ரஷ்ய அரசிற்குப் பெருந்தொகை தர முடியவில்லை. ஆகவே அவரது மகன் ஹனிபாலை பணயக்கைதியாகக் கொண்டு சென்றார்.
ரஷ்யாவிற்கு வந்த ஹனிபால் கிறிஸ்துவச் சமயத்தை ஏற்றுக் கொண்டார். ரஷ்யப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த மகள் ஓசீப் போவ்னா.
அவள் செர்ஜி ல்வோவிச் புஷ்கின் என்ற வசதியான ரஷ்ய பிரபுவை திருமணம் செய்து கொண்டாள். அவர்களது மகன் தான் புஷ்கின். ஆகவே புஷ்கின் தோற்றத்தில் கறுப்பின மக்களின் சாயல் இருக்கும்.
புஷ்கின் பள்ளிவயதிலே கவிதைகள் எழுதத் துவங்கினார். தனது 15வது வயதில் தனது முதல் கவிதையை வெளியிட்டார். 18வது வயதில் வெளியுறவுத்துறையில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார்
பிரபுக்களின் நட்பு காரணமாக. புஷ்கின் விருந்து குடி நடனம் என உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தார்.

தனது 21 வயதில் ரஸலான் அண்ட் லுதுமியா என்ற காவியத்தை எழுதி சாதனை செய்தார் புஷ்கின். அவரது கேலிப்பேச்சும் நையாண்டியான எழுத்தும் ஜார் மன்னருக்கு எதிராக உள்ளதாகப் புகார் அளித்தார்கள். ஆகவே அவர் மிக்லோவ்ஸ்கியா என்ற அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டார். இந்தத் தண்டனைக் காலத்தில் புஷ்கின் நிறைய எழுதினார். படித்தார்.
நடால்யாநடால்யா என்ற அழகியை காதலித்தார் புஷ்கின். அவளையே திருமணம் செய்து கொண்டார். அவளது அழகில் ஜார் மன்னர் கூட மயங்கிப் போனார் என்கிறார்கள். ஒருமுறை ஜார்ஜ் டி’அந்தேஸ் என்ற பிரெஞ்சு ராணுவ வீரனை தனது வீட்டில் நடந்த விருந்திற்கு அழைத்திருந்தார் புஷ்கின்.
அந்த விருந்தில் ஜார்ஜ் டி’அந்தேஸ் நடாலியாவின் அழகில் மயங்கி மனதைப் பறிகொடுத்தான். அதிலிருந்து அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றான். திருமணமானவள் என்று அறிந்தும் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்தினான். அத்தோடு விருந்து ஒன்றில் புஷ்கினை கேலி செய்து அவமானப்படுத்தினான் இதனால். புஷ்கினின் கோபம் பெரிதாகவே பரோனின் வளர்ப்பு தந்தை தனது மகன் உறவுப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

ஜார்ஜ் டி’அந்தேஸின் காதல்விவகாரம் முடிந்து போனதாகப் புஷ்கின் நினைத்தார். ஆனால் பரோன் பொது இடங்களில் நடாலியாவோடு நெருக்கமாகப் பேசி சிரிப்பதும் கைகோர்த்து நடனமாடுவதையும் கண்ட புஷ்கின் அவனை நேருக்கு நேராகச் சண்டையிட சவால் விடுத்தார்.
டூயல் எனப்படும் அந்தத் துப்பாக்கி சண்டையில் இருவரும் நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொள்வார்கள். இருவரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைக்க முடியும். புஷ்கினின் இந்தச் சவாலை ஜார்ஜ் டி’அந்தேஸ் ஏற்றுக் கொண்டான்.
குறிபிட்ட நாளில் பொதுமனிதர் முன்பாக உறைபனியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது அதில் ஜார்ஜ் டி’அந்தேஸை புஷ்கினைச் சுட்டுவிட்டான. அடிவயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து. தரையில் வீழ்ந்த புஷ்கின் தானும் ஆன்தீவ்ஸைச் சுட்டார். அவனுக்கும் காயம் ஏற்பட்டது.
ரத்தப்பெருக்கில் மயங்கிய புஷ்கினை குதிரை வண்டியில் மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். நடாலியாவிற்கு இந்தச் சவால் பற்றி எதுவும் தெரியாது. அவள் மரணப்படுக்கையில் இருந்த புஷ்கினை காண ஒடோடி வந்தாள். அவளது கௌரவத்தைக் காக்கவே தான் சண்டையிட்டதாகச் சொன்னார் புஷ்கின். மருத்துவர்கள் புஷ்கினைக் காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அதிகமான குருதி இழப்புக் காரணமாக அவர் உயிர் துறந்தார். அப்போது புஷ்கினின் வயது 37
காதலும் சாகசமும் கொண்ட புஷ்கின் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞராகக் கொண்டாடப்படுகிறார். அவரது கவிதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.
1881ல் வெளியான அவரது முதற்பதிப்புகளை வாங்குவதற்காகப் பெரும்போட்டியிருக்கிறது. அதன் காரணமாகவே இந்தத் திருட்டு நடைபெறுகிறது என்கிறார்கள். கலைப்பொருட்களை மீட்பதற்காக உருவாக்கபட்ட சிறப்புப் பிரெஞ்சு போலீஸ் பிரிவு புஷ்கின் நூல்களை மீட்பதற்காக “ஆபரேஷன் புஷ்கின்” என்ற விசாரணையைத் துவங்கியிருக்கிறார்கள். நான்கு புத்தகத் திருடர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் புத்தகங்களை கைமாறிப் போய்விட்டது. அதை கண்டறிந்து மீட்பது எளிதானதில்லை என்கிறது காவல் துறை.
நூலகங்களுக்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் இதனுடன் எழுந்திருக்கிறது. புத்தக உலகின் மறுபக்கம் விசித்திரமானது. அது எழுதப்பட்ட எந்த துப்பறியும் கதையினையும் விட மர்மமானது என்கிறார் விமர்சகர் ஜார்ஜ் பீட். அது உண்மையே,.
May 7, 2024
எஸ்.ராவிடம் கேளுங்கள் -பகுதி 4
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளிவரும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி 4 வெளியாகியுள்ளது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

