பார்ட்ல்பியின் மறுப்பு
ஹெர்மன் மெல்வில்லின் நெடுங்கதையான Bartleby, the Scrivener முப்பது பக்கங்கள் கொண்டது. 1853 இல் வெளியானது.
நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள சட்ட அலுவலகத்தில் கதை நடக்கிறது. கதை சொல்பவர் ஒரு வயதான வழக்கறிஞர். அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பார்ட்ல்பி என்பவனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

சட்ட ஆவணங்கள்- ஒப்பந்தங்கள், குத்தகைகள், உயில்கள் மற்றும் பிற ஆவணங்களைக் கையால் நகலெடுக்கும் எழுத்தர்களே ஸ்க்ரிவெனர் எனப் படுகிறார்கள். அவர்களின் வேலை ஆவணங்களை நகலெடுத்து மூலத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்துத் தருவதாகும்.
கதையைச் சொல்லும் வழக்கறிஞர் ஆரம்பத்திலே தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார். அவரது அலுவலகத்தில் துருக்கி, நிப்பர்ஸ் மற்றும் ஜிஞ்சர் நட் என மூவர் வேலை செய்கிறார்கள். இது அவர்களின் உண்மைப் பெயர்களில்லை, பட்டப்பெயர்கள்.
இதில் துருக்கிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். குள்ளமானவர். அவர் தினமும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்வார். மதியத்தின் பின்பு அவரது இயல்பு மாறிவிடும். எதையும் கவனமாகச் செய்ய மாட்டார். பேனாவை மைப் புட்டியில் நனைப்பதில் கவனக்குறைவாக இருப்பார். ஆவணங்களைக் கறைபடிய செய்துவிடுவார். தப்பும் தவறுமாகப் பிரதியெடுப்பார். மிகவும் களைத்து போய்விடுவதுடன் எரிச்சலாகவும் நடந்து கொள்வார்.
ஆகவே காலை நேரம் மட்டுமே இவருக்கு முக்கியப் பணிகள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை மதியம் மிக மோசமான நபராக மாறிவிடுவார். வயதாகிவிட்டது தான் இதற்கெல்லாம் காரணம் என்று துருக்கி சமாதானம் சொல்லுவார்.
நிப்பர்ஸ் இளைஞன். இருபத்தைந்து வயதிருக்கும். அவன் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டவன். ஆகவே காலை அலுவலகம் வரும் போதே எரிச்சலும் பதற்றமும் கொண்டவனாக இருப்பான். வயிற்றுப்பிரச்சனையால் எந்த வேலையும் கவனமாகச் செய்ய முடியாது. தனது மேஜையைச் சரிசெய்வதிலே காலை நேரத்தைப் போக்கிவிடுவான்., மதியத்தின் பின்பு அவனது வயிற்றுப்பிரச்சனை சரியாகிவிடும். அப்புறம் சுறுசுறுப்பாக வேலை செய்வான். மகிழ்ச்சியாக நடந்து கொள்வான். ஆகவே முக்கியமான பணிகளை மதியம் அவனிடம் ஒப்படைப்பார்கள்.
அந்த அலுவலகத்தின் மூன்றாவது நபர் ஜிஞ்சர் நட், 12 வயதுச் சிறுவன். எடுபிடி வேலைகளுக்காக வைத்திருந்தார்கள். அருகிலுள்ள பேக்கரிக்குப் போய்த் தின்பண்டங்களை வாங்கி வருவது, துப்புரவுப் பணிகளைச் செய்வது அவனது வேலை.

இந்த அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்தவன் தான் பார்ட்ல்பி. வழக்கறிஞர் கொடுக்கும் பணியை மிகுந்த கவனத்துடன் சிறப்பாகச் செய்து தருகிறான். சில நாட்கள் நகலெடுப்பு பணியைப் பார்ட்ல்பி பகலிரவாக மேற்கொள்வதை வழக்கறிஞர் கண்டிருக்கிறார். மற்ற ஊழியர்கள் போல அவன் சாப்பிட கூட வெளியே செல்வதில்லை. பசியை மறந்து வேலை செய்து கொண்டிருப்பான். இதனால் அவன் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது.
ஒரு நாள் முக்கியமான ஆவணம் ஒன்றை அவசரமாக நகலெடுக்க வேண்டும் என்பதால் வழக்கறிஞர் பார்ட்ல்பியை அழைத்து அந்தப் பணியை மேற்கொள்ளச் சொல்கிறார்
என்னால் செய்ய முடியாது என்று பார்ட்ல்பி மறுத்துவிடுகிறான். அவர் அதை எதிர்பார்க்கவில்லை.
ஏன் முடியாது என்று காரணம் கேட்கிறார். அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான். ஆகவே அந்தப் பணியை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடுகிறார்.
அடுத்த நாள் அவன் நகலெடுத்துக் கொடுத்த வேறு ஆவணத்தை மூவரும் இணைந்து சரிபார்க்கலாம் என்று வழக்கறிஞர் அவனை அழைக்கிறார். அவன் வர மறுக்கிறான். அப்படி ஒருவர் படிக்க மற்றவர் சரிபார்ப்பது அலுவலக நடைமுறை என்று வழக்கறிஞர் விளக்குகிறார். ஆனாலும் பார்ட்ல்பி என்னால் முடியாது என்று பதில் தருகிறான்.
இந்தப் பதில் வழக்கறிஞரை மட்டுமின்றி மற்ற நகலெடுப்பவர்களையும் எரிச்சல்படுத்துகிறது. அவனை வேலையை விட்டுத் தூக்கிவிடுங்கள் என்று வழக்கறிஞரிடம் சொல்கிறார்கள்.
அன்றிலிருந்து எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் பார்ட்ல்பி இதைச் செய்ய நான் விரும்பவில்லை என்று மறுக்கிறான்.
இப்படி ஒருவனை எதற்காக வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். வேலையை விட்டுத் துரத்திவிடலாம் என்று வழக்கறிஞர் முடிவு செய்கிறார்.
அந்த வாரம் ஞாயிற்றுகிழமை வழக்கறிஞர் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு அவசர வேலை ஒன்றின் காரணமாக அலுவலகம் செல்கிறார். அலுவலகத்தில் பார்ட்ல்பி இருப்பதைக் காணுகிறார். விடுமுறை நாளில் அவன் என்ன செய்கிறான் என்று சந்தேகம் கொண்டு விசாரிக்கிறார். அவன் பதில் சொல்ல மறுக்கிறான். அத்தோடு எதுவும் நடக்காதவன் போல வெளியேறிப் போய்விடுகிறான்
அவன் அந்த அலுவலகத்தில் குடியிருக்கிறான் என்ற உண்மையை அப்போது தான் வழக்கறிஞர் உணருகிறார்.
இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை. அவனுக்குக் குடும்பம் இல்லையா. என்று யோசிக்கும் வழக்கறிஞர் அவனது மேஜையைத் திறந்து பார்க்கிறார். அதில் அவனது சேமிப்புப் பணத்தைக் காணுகிறார். பார்ட்ல்பியை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை
மறுநாள் அவனிடம் எந்த ஊரைச் சேர்ந்தவன். அவனது குடும்பம் எங்கேயிருக்கிறது என விசாரிக்கிறார். தன்னைப் பற்றிய விபரங்கள் எதையும் பார்ட்ல்பி சொல்ல மறுக்கிறான். அத்தோடு வெளியே உள்ள செங்கல் சுவரை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறான். அவனது மறுப்பு வழக்கறிஞரின் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது.
அவனுக்குத் தர வேண்டிய சம்பள பணத்தைக் கொடுத்து வேலையை விட்டு அனுப்ப உத்தரவிடுகிறார். பணத்தை வாங்க மறுப்பதோடு தன்னால் வெளியேற முடியாது என்று பார்ட்ல்பி சொல்கிறான். ஆத்திரமான வழக்கறிஞர் அவனுக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறார். அப்படியும் பார்ட்ல்பி வெளியேறிப் போகவில்லை,
உடல் பலத்தைப் பயன்படுத்தவோ அல்லது காவல்துறையை அழைப்பதற்கோ அவருக்குத் தயக்கம், ஆகவே தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறார்.
பார்ட்ல்பி பழைய அலுவலகத்தை விட்டுப் போக மறுக்கிறான். அந்த இடத்தின் புதிய உரிமையாளர் பார்ட்ல்பியை வழக்கறிஞரின் உறவினர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் புகார் அளிக்கிறார்.
அவன் தனது உறவினர் இல்லை. தேவையான நடவடிக்கை எடுத்துத் துரத்திவிடுங்கள் என்கிறார் வழக்கறிஞர். காவல்துறை உதவியோடு அவனை வெளியேற்றுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கும் பிடிவாதமாகச் சாப்பிட மறுத்து, எதைச் செய்யச் சொன்னாலும் தனக்கு விருப்பமில்லை என்கிறான். முடிவில் சிறைச்சாலையில் பட்டினி கிடந்து சுவரைப் பார்த்தபடி இறந்து விடுகிறான்.
பார்ட்ல்பியின் பிடிவாதமான மறுப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று வழக்கறிஞருக்குத் தெரியவில்லை.
மற்றவர்களைப் போலப் பணம் சேர்ப்பதிலோ, இன்பங்களை அனுபவிப்பதிலோ பார்ட்ல்பி ஆர்வம் காட்டவில்லை. பங்குச்சந்தை உலகம் என்பது பேராசையும் தந்திரங்களும் கொண்டது. ஆனால் அந்த உலகிற்குள் தனது ஆன்மாவின் துயரால் எதையும் செய்ய விரும்பாதவனாகத் துறவி போலப் பார்ட்ல்பி நடந்து கொள்கிறான்.
பார்ட்ல்பி செங்கல் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தான் கதையின் மையப்படிமம். அந்தச் சுவர் அவனது மறுப்பின் அடையாளம். கதையின் முடிவில் வக்கீல் அதைப் புரிந்து கொள்கிறார்
பார்ட்ல்பி ஒளிபுக முடியாத பொருளைப் போலிருக்கிறான் அவனால் மற்றவர்களைப் போலச் சமரசங்களுடன் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை.
பார்ட்ல்பியின் மறுப்பைக் கதை முழுவதும் காணுகிறோம். ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்று ஒருபோதும் வழக்கறிஞர் கேட்பதில்லை.
கதையின் முடிவில் பார்ட்ல்பி பற்றிய சிறிய குறிப்பு இடம்பெறுகிறது. அதில் பார்ட்ல்பி யார், தற்போதைய கதை சொல்பவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினான் என்று எதுவும் விளக்கப்படவில்லை.
பார்ட்ல்பி வாஷிங்டனில் உள்ள டெட் லெட்டர் அலுவலகத்தில் ஒரு துணை எழுத்தராக வேலை செய்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீரென நீக்கப்பட்டான் என்ற குறிப்பு காணப்படுகிறது.
சரியான முகவரி இல்லாத மற்றும் இறந்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மூலம் வாழ்க்கையின் அர்த்தமின்மையைப் பார்ட்ல்பி புரிந்து கொண்டிருக்கிறான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஆனால் ஒரு மனிதனின் மறுப்பிற்கான உண்மையான காரணத்தை எவராலும் கண்டறிய முடியாது. மனதின் சிக்கலான அடுக்குகளுக்குள் அந்த முடிவு புதையுண்டு போயிருக்கும்.
கதையில் வரும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பார்ட்ல்பியை வெறுக்கிறார்கள். ஆனால் அவன் எவரையும் வெறுக்கவில்லை. பட்டினி கிடப்பதன் வழியே அவன் தன்னைதானே தண்டித்துக் கொள்கிறான்.
பார்டில்பி எந்த மாற்றத்தை விரும்பவில்லை.. அவனால் தனது அந்தரங்க உலகத்தை விட்டு வெளியே செல்லவும் , தன்னைப் பற்றிய பொதுப் பிம்பத்தை உருவாக்கவும் முடியாது. ஆகவே தனது மறுப்பை அழுத்தமாக வெளிப்படுத்துகிறான். மற்றவர்களின் அனுதாபத்தைப் பார்டில்பி ஏற்பதேயில்லை.
அவன் ஒரு பைத்தியம் என்று கதையின் ஒரு இடத்தில் ஜிஞ்சர் நட் சொல்கிறான். மற்றவர்களைப் போல நடந்து கொள்ளாதவர்களை உலகம் எப்போதும் பைத்தியம் என்றே அழைக்கிறது. புரிந்து கொள்கிறது.

கதையில் மெல்வில் பசி மற்றும் அஜீரணக்கோளாறு பற்றிக் குறிப்பிடுகிறார். நல்ல உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்ற வழக்கறிஞரின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். துருக்கிக்குச் சாப்பிடுவதில் ஆர்வம். நிப்பர்ஸ் வயிற்றுப்பிரச்சனை கொண்டவன். இவர்களை எளிதாகச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் விரும்பிப் பட்டினிகிடப்பவனைத் தான் சமூகம் சந்தேகிக்கிறது. கைவிடுகிறது.
கதையில் வரும் துருக்கியைப் போல நாளின் பாதிநேரம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர்கள் இன்றுமிருக்கிறார்கள். அவர்கள் மதிய நேரத்தில் ஆறிப்போன டீயைப் போல மாறிவிடுகிறார்கள்.
பார்ட்ல்பி அலுவலக நடைமுறைகளை ஏற்க மறுக்கிறான். உத்தரவுகளை மறுக்கிறான். பின்பு ஏன் வேலை செய்கிறான். அந்த அலுவலகம் அவனது புகலிடம். சிலந்தியைப் போலச் சிறிய அலுவலகத்தின் மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டுவிடுகிறான். ஆனால் சிலந்தியை யார் விரும்புவார்கள்.
பார்ட்ல்பி மனநோயாளியா, இல்லை. அவன் மறுப்பை மிக நேர்மையாக வெளிப்படுத்துகிறான். அதுவும் முகத்திற்கு நேராக வெளிப்படுத்துகிறான். அந்தத் தைரியம் முக்கியமானது. அலுவலக உத்தரவை எத்தனை பேரால் மறுக்க முடியும். அதே நேரம் கூடுதலாகத் தரப்படும் பணத்தை வேண்டாம் என்று மறுத்துவிடுவதும் முக்கியமானது,
பார்ட்ல்பி ஒரு மனிதனின் கதை மட்டுமில்லை. அது ஒரு குறியீடு. அவனது பாதிப்பில் தான் காஃப்கா பட்டினிக்கலைஞன் கதையை எழுதியிருக்கிறார். பின்நவீனத்துவப் படைப்பாளிகள் பலரும் இந்தக் கதையை வியந்து பாராட்டுகிறார்கள். அந்த வகையில் Bartleby, the Scrivener என்பது நவீன அமெரிக்காவின் உருவகக் கதையாகும்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
