S. Ramakrishnan's Blog, page 37
March 24, 2024
பக்கத்து இருக்கை
புதிய குறுங்கதை
பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான்.

பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அது தற்செயல் நிகழ்வில்லை. விநோத விதி.
அதுவும் சினிமா தியேட்டரில். மருத்துவமனையில், ரயிலில், பேருந்தில். அரசு அலுவலகக் காத்திருப்பு வரிசையில் அடுத்து அமர்ந்திருப்பவர் கதையில் வரும் கதாபாத்திரம் போலவே இருக்கிறார். நடந்து கொள்கிறார்.
சினிமா தியேட்டரில் ஒரு முறை அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் படம் துவங்கியது முதல் முடியும் வரை ஜெபித்துக் கொண்டேயிருந்தார். வங்கியில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த கிழவரின் கையில் பாப்பா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒரே விரலில் இரண்டு மோதிரம் அணிந்திருந்தாள்.
மருத்துவமனையில் பக்கத்து இருக்கையில் அமர்ந்த சிறுமி ஊசி போடுவார்களா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஒருமுறை அவனது பக்கத்துச் சீட்டில் பூனை அமர்ந்திருந்தது.
இன்னொரு முறை ஒருவன் விரல் ஒடிந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்தான். வேறு ஒரு நாள் பக்கத்து இருக்கைப் பெண் தனது டிபன் பாக்ஸை திறந்து உலர்ந்த இட்லியை சீனி தொட்டு சாப்பிட்டாள். ஊட்டி பயணம் ஒன்றில் அடுத்த இருக்கைப் பையன் செல்போனில் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தபடியே வந்தான்.
சினிமா தியேட்டரில். விமானத்தில். ரயிலில் பக்கத்து இருக்கையில் யார் வந்து அமரப்போகிறார்கள் என்று தெரியாமல் கற்பனை செய்வது சுகமானது. ஒரு போதும் அவனது கற்பனை நினைவானதில்லை. இதை விடவும் அறியாத ஒரு நபர் இரண்டு முறை அவனருகில் அமர்ந்ததேயில்லை. அது மட்டுமின்றி இதுவரை ஒரு வெள்ளைக்காரன் கூட அவனருகில் அமர்ந்ததில்லை. பக்கத்து இருக்கை என்பது ஒரு புதிர். பயணத்தின் போது யாரும் வராமல் காலியாகவே உள்ள பக்கத்து இருக்கை ஏன் இவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒருமுறை பெங்களூர் ரயிலில் அவனது பக்கத்துச் சீட்டில் இருந்தவர் எழுந்து அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த நண்பருடன் பேச சென்ற போது இருக்கையில் தனது புத்தகத்தை வைத்துவிட்டுப் போனார். பெங்களூர் வரை அவனது பக்கத்துச் சீட்டில் ஒரு புத்தகம் மட்டுமே பயணம் செய்தது. அதனுடன் எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் மௌனமாகப் பயணம் செய்தார்கள்.
திருமணம் செய்து கொண்ட பிறகு அவனது பயணத்தில்,சினிமா அரங்கில். ஹோட்டலில் மனைவியோ மகளோ அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்துச் சீட்டில் அவர்கள் அமர்ந்தவுடன் அந்த இடம் வீடு போலாகிவிடுகிறது.
ஒருமுறை ஹோட்டலில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்தவர் அவன் சாப்பிடுகிற அதே ரவாதோசையை ஆர்டர் செய்தார். அவன் இரண்டாவதாகச் சொன்ன சப்பாத்தியை அவரும் ஆர்டர் செய்தார். அவனைப் போலவே டிகாசன் அதிகமாகக் காபியும் குடித்தார். தானே இரண்டு நபராகச் சாப்பிடுவது போல அவனுக்குத் தோன்றியது.
தனியே இருக்கும் சமயங்களில் தனது பழைய டயரிகளைப் புரட்டி பக்கத்தில் அமர்ந்தவர்களைப் பற்றிப் படித்துப் பார்ப்பான். அவன் படித்த எந்த நாவலிலும் அப்படியான கதாபாத்திரங்கள் வந்து போனதில்லை. வியப்பாக இருக்கும். தனது பக்கத்து இருக்கை மனிதர்களில் ஒருவரேனும் தன்னைப் போல இப்படி நாட்குறிப்பு எழுதுகிறவராக இருப்பாரா, தன்னைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பாரா என்று யோசிப்பான். ஏமாற்றமே மிஞ்சும். அப்போது விசித்திரமானது உலகம் என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வான்.
March 23, 2024
சீனாவில் தாகூர்
சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்.

இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது.
1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை சீனா சென்றிருக்கிறார். சீனாவில் தாகூர் அளவிற்குப் புகழ்பெற்ற இந்தியா எழுத்தாளர் எவருமில்லை.
நாம் இன்று ஆசையாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை, கவிஞர்களை மொழிபெயர்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். அங்கோ அவர்கள் தாகூரை கொண்டாடுகிறார்கள். தாகூர் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஸ்பானிய மொழியில் வெளியாகியுள்ளது.
ரவீந்திரநாத் தாகூருக்கும் அர்ஜென்டினா எழுத்தாளர் விக்டோரியா ஒகாம்போவுக்கும் இடையே ஆழ்ந்த நட்பிருந்தது. ஒகாம்போவின் விருந்தினராகச் சென்று அர்ஜென்டினாவில் தாகூர் தங்கியிருக்கிறார். அவள் கிழக்கிலிருந்து வந்த ஞானக் குருவாகத் தாகூரைப் பார்த்தாள். தாகூரின் ஓவியத் திறமைகளை வெளிக்கொணர்ந்த பெருமை ஒகாம்போவுக்கு உண்டு. அவள் கொடுத்த உத்வேகமே அவரைத் தொடர்ந்து ஓவியம் வரையச் செய்தது. அவளே பாரீஸில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தாள்.
சீனாவில் தாகூருக்கு அளிக்கபட்ட வரவேற்பும் அவரது உரையை ஒட்டி எழுந்த விவாதங்களும் இன்றும் பேசப்படுகின்றன.
தாகூர் 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆங்கில இலக்கிய உலகில் அவரது புகழ் உயர்ந்திருந்த்து. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகளை அமெரிக்கா மற்றும் ஜப்பானில் பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆசையாகப் படித்தார்கள். புத்தகம் கிடைக்காத காரணத்தால் கவிதைகளை நகலெடுத்து விநியோகம் செய்தார்கள்.
தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி சீனாவை எட்டியவுடன் அவரைச் சீனாவின் முக்கிய இலக்கியவாதிகள் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். 1915 ஆம் ஆண்டிலேயே கீதாஞ்சலி சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புகழின் காரணமாக அவரைச் சீனாவிற்கு வந்து உரையாற்றும்படியாகப் பீஜிங் விரிவுரை சங்கம் கேட்டுக் கொண்டது. இந்த அமைப்பின் சார்பில் வெளிநாட்டு அறிஞர்கள் சீனாவிற்கு வருகை தந்து உரையாற்றுவது வழக்கம்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இப்படிச் சீனா சென்று உரையாற்றியிருக்கிறார். அது சீன அறிவுஜீவிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே அவர்கள் 1923 இல் தாகூரை சீனாவில் ஒரு தொடர் உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.
இந்த அழைப்பை ஏற்றுச் சீனா புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் பயணம் மேற்கொண்டு ஷாங்காய் சென்றார். அங்கே அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்து சீனா சென்றார். அவருடன் ஓவியர் நந்தலால் போஸ். சமஸ்கிருத அறிஞர் மோகன் சென், உதவியாளர் எல்ம்ஹிர்ஸ்ட் உள்ளிட்ட ஐந்து பேர் உடன் சென்றார்கள்.

1924 ஏப்ரலில் சீனா வந்த தாகூர் பல மாதங்கள் அங்கே தங்கியிருந்தார். அவரது சீன மொழிபெயர்ப்பாளராக லின் ஹூயின் பணியாற்றினார்
1924மே 8 அன்று பீஜிங்கில் தனது 64வது பிறந்த நாளைத் தாகூர் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது சித்ரா நாடகம் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது. அவரது வருகைக்கு முன்பாகவே “தி கிரசண்ட் மூன்” மற்றும் “சித்ரா” போன்ற படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
தாகூரின் சீனவருகையை அங்கிருந்த இடதுசாரி இளைஞர்கள் விரும்பவில்லை. அவரது வருகையை கடுமையாக எதிர்த்தார்கள். அவரது உரைகள் அறிவியலுக்கு எதிரானது என்று விமர்சனம் செய்தார்கள். இதனால் தாகூர் மனவருத்தம் அடைந்தார். அவர் உரை நிகழ்த்திய அரங்கில் இளைஞர்கள் எதிர்ப்புப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்கள்.
இந்த எதிர்ப்பிற்கு முக்கியக் காரணம் அவரை அழைத்த வந்த அமைப்பும் அதன் நிர்வாகிகளுமே என்கிறார்கள்.
அவர்களுடன் இருந்த கருத்துவேறுபாட்டினை தாகூரிடம் இளைஞர்கள் காட்டினார்கள். இதில் தாகூரை சீனாவில் மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் சிலரும் இணைந்து கொண்டது அவருக்கு மனவருத்தம் அளித்தது.
“இரண்டு நாகரிகங்களுக்கிடையில் மீண்டும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்துவதே எனது நோக்கம். நான் ஞானியில்லை. கவிஞன். நான் கேட்பது அரியணையில்லை. உங்கள் இதயத்தில் சிறியதொரு இடம் “என்றே தாகூர் உரையை துவக்கியிருக்கிறார்.
தாகூரின் உரைகளில் சில தற்போது அச்சில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது பயணத்தில் உடன் சென்றவர்கள் இது குறித்து விரிவாக எதையும் எழுதவில்லை. ( அவற்றை வெளியிட வேண்டாம் என்று தாகூரை தடை செய்துவிட்டார் என்கிறார்கள் ). தாகூர் கசப்பான உணர்வுகளுடன் சீனாவை விட்டு வெளியேறினார். அங்கிருந்து கிளம்பி ஜப்பான். கொரியா எனப் பயணம் மேற்கொண்டார்
சீனாவில் இருந்த நாட்களில் அவர் கடைசி மன்னர் பு யி தங்கியிருந்த அரண்மனையைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.
இதை அறிந்த மன்னர் பு யி தாகூரையும் அவருடன் வந்த ஆறு பேரையும் தேநீர் விருந்திற்கு அழைத்தார். அந்தச் சந்திப்பின் போது அறிவியல் மற்றும் கவிதைகள் குறித்து மன்னர் உரையாடினார். சீனாவும் இந்தியாவும் சகோதரர்கள். இரண்டின் பண்பாடு மற்றும் செவ்வியல் கவிதைகள் சிறப்பானவை என்று தாகூர் புகழ்ந்து பேசினார்.
தாகூரின் பல படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற போதும், அவர் சீனாவில் ஆற்றிய உரைகளைக் கொண்ட நூல் இன்றுவரை சீன மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் யார் செய்தது சரி என்ற சர்ச்சையை அது மீண்டும் கிளறிவிடும் என்பதே.
புதிய காணொளித் தொடர்
அன்றாடம் எனக்கு வருகின்ற மின்னஞ்சலில் பாதிக்கும் மேல் கேள்விகளே. அதிலும் புத்தகங்கள். எழுத்தாளர்கள், அயல் சினிமா மற்றும் பயணம் குறித்த கேள்விகளே அதிகம். பெரும்பான்மைக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவேன்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும் எனது புத்தகப் பரிந்துரை காணொளிகள் நிறையப் பேருக்கு உதவிகரமாக இருந்ததை அறிவேன்.
தேசாந்திரி யூடியூப் சேனல் வழியாக சென்னையும் நானும் என்ற காணொளித் தொடர் உருவாக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது
இந்த சேனலில் நூறுக்கும் மேற்பட்ட எனது உரைகள் காணக் கிடைக்கின்றன
https://www.youtube.com/@desanthiripathippagam/?sub_confirmation=1
எஸ்.ராவிடம் கேளுங்கள் என்ற புதிய காணொளித் தொடரை தேசாந்திரி யூடியூப் சேனல் உருவாக்குகிறது.

இதில் உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க இருக்கிறேன்.
இலக்கியம், புத்தகங்கள். உலகசினிமா, பயணம், வரலாறு, பண்பாடு, எழுதும்கலை சார்ந்து உங்கள் கேள்விகள் இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
ஒருவர் ஐந்து கேள்விகள் வரை அனுப்பலாம்.
உங்கள் பெயர் மற்றும் ஊர், மின்னஞ்சல் முகவரியோடு கேள்விகளை அனுப்பி வையுங்கள்.
தேர்வு செய்யப்படும் கேள்விகள் நிகழ்ச்சியில் இடம் பெறும்.
எஸ்.ராவிடம் கேளுங்கள் குறித்த காணொளி இணைப்பில் உள்ளது.
March 21, 2024
இருமொழிப் புத்தகம்
புதிய குறுங்கதை
அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான்.

ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது.
அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத சொற்களுக்கு அவனே பொருள் தருகிறான். அதைத் தனது இஷ்டம் போல உச்சரித்துக் கொள்கிறான்..
உண்மையில் அவன் முன்னே இருப்பது மௌனத்தின் வரிசை. அந்த மௌனத்தைப் பல நேரம் அப்படியே விழுங்கிக் கொள்கிறான். சில நேரம் தனக்குப் பிடித்த சொல்லாக்கி விளையாடுகிறான். கவிதை எழுதுவது என்பதே இருமொழி விளையாட்டு தானே.
தாய்மொழி தவிர வேறு அறியாதவனுக்கு உலகின் எல்லா மொழிச்சொற்களும் அழகான கோட்டுருவங்களே.
அந்த நூலை அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாயிற்கு வாங்கினான். கடைக்காரனுக்கும் அது என்ன புத்தகம் என்று தெரியாது. ஆனால் ஒரு வெளிநாட்டுக்காரன் லாட்ஜில் விட்டுப் போன புத்தகம் என்று மட்டும் தெரிந்திருந்த்து. வெளிநாட்டுக்காரன் படித்த புத்தகம் என்பதாலே அதன் விலை அதிகம்.
மொழி அறியாத புத்தகத்தை வாங்கும் போது அது ஒரு சிற்பம் போலாகி விடுகிறது. சிற்பத்தை நாம் விரும்பியபடி ரசிக்கலாம். பொருள் கொள்ளலாம்.

வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது அந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. எந்தப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தாலும் ஒரே மௌனம் தானே. ஆயினும் முதற்பக்க மௌனமும் கடைசிப்பக்க மௌனமும் ஒன்றாக இருக்காதே. அவன் மனதில் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அந்தப் பக்கத்தைப் புரட்டினான். முப்பத்தி நான்காவது மௌனம் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பக்கத்தில் ஒரேயொரு தமிழ் சொல்லை எழுதினால் போதும் மௌனம் கலைந்துவிடும். ஆனால் அப்படிச் செய்ய அவன் விரும்பவில்லை.
பள்ளிப் படிப்போடு அவனது கல்வி முடிந்துவிட்டது. ஆயினும் அவன் நூலகத்திற்குச் சென்று விருப்பமான புத்தகங்களைப் படித்தான் முப்பது நாற்பது புத்தகங்களுக்கும் மேலாக விலைக்கு வாங்கியும் வைத்திருக்கிறான். குளத்தில் நீந்திக் குளிக்கும் போது உடல் எடையற்றுப் போவது போலவே வாசிக்கும் போதும் உடல் எடையற்றுப் போய்விடுகிறது என்பதை உணர்ந்திருந்தான்.
அவனிடமிருந்த ஒரே இருமொழிப் புத்தகம் அது மட்டுமே. இரண்டு அறியாத மொழிச் சொற்களில் எந்த இருசொற்கள் போலிக்கிறது என்று தேடிப்பார்த்து விளையாடுவான்.
புத்தகத்தைக் கையில் கொண்டு செல்லும் போது இரண்டுதேசங்களைச் சுமந்து செல்வது போல உணருவான். சில வேளைகளில் அவனுக்கு இருமொழிப் புத்தகம் படிப்பது போலவே நம்மைச் சுற்றிய இயற்கையை உணருகிறோம் என்றும் தோன்றியது.
இரண்டு மொழிகளின் மௌனம் ஒன்று போல இருக்காது என்று நினைத்தான். ஆனால் அதை யாரிடமும் சொல்ல அவன் விரும்பவில்லை.
மதராஸ் நினைவுகள்
கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் எனப்படும் டாக்டர். கே.எம். ஜார்ஜ் 1914 ஆம் ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்தார். 1940 களில் மலையாளத்தில் எழுத்த்துவங்கிய இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த ஆங்கில இலக்கிய விமர்சகர், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்.

ஜவகர்லால் நேருவால் தேர்வு செய்யப்பட்டுச் சாகித்ய அகாதமியில் பணியாற்றியவர். Masterpieces of Indian Literature என்ற இந்திய இலக்கியங்களின் மிகப்பெரிய தொகுப்பு நூலை எடிட் செய்தவர்.
ஜார்ஜின் சுயசரிதையான AS I SEE MYSELF நூலை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.
ஜார்ஜ் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதம் பயின்றிருக்கிறார். 1941 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நீண்டகாலம் விரிவுரையாளராக வேலை செய்திருக்கிறார்.
அவரது . சென்னை வாழ்க்கை மற்றும் கிறிஸ்துவக் கல்லூரி நினைவுகளை விரிவாக இந்த நூலில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக மலையாள விரிவுரையாளர் பணிக்காகக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணல், அதற்கு அளிக்கபட்ட பரிந்துரைக் கடிதம், நேர்காணலை அவர் சந்தித்த விதம், அந்தக் கால ஆசிரியரின் சம்பளம். கல்லூரி வளாகத்தினுள் குடியிருந்தது, மாத செலவுகள் எனத் தனது நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்
சாகித்ய அகாதமியின் தென் மண்டல செயலாளர் வேலைக்கு ஜார்ஜ் விண்ணப்பம் செய்த போது நேர்காணல் நடத்தியவர் நேரு. வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயராகிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசியது. நேரு கேட்ட கேள்விகள். . அன்றைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசியது எனத் தனது டெல்லி வாழ்க்கை அனுபவங்களையும் சுவைபடப் பதிவு செய்துள்ளார்
1964 ஆம் ஆண்டில், அவர் ஃபுல்பிரைட் பயண மானியத்தைப் பெற்று அமெரிக்கா சென்ற ஜார்ஜ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் வேலை செய்திருக்கிறார். சோவியத் யூனிய்ன் அழைப்பில் ரஷ்யா சென்று வந்து அது குறித்துப் பயணநூல் எழுதியிருக்கிறார்.
கேரள அரசின் சார்பில் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்ட போது அதன் தலைமை எடிட்டராக ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியில் பெற்ற அனுபவங்களையும், உடன் பணியாற்றியவர்கள் குறித்தும் தனி அத்தியாயம் எழுதியிருக்கிறார். இது போன்ற பணிகளுக்கு அன்றைய கேரள அரசு அளித்த ஆதரவு மற்றும் ஊதியத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார். தனது வீட்டு நூலகத்தை ஒரு விட்டு இன்னொரு ஊருக்கு எப்படிக் கொண்டு சென்றார் என்று எழுதியிருப்பது சிறப்பானது.
தனது திருமணம் மற்றும் பிள்ளைகள் பற்றிச் சிறிய அத்தியாயங்களை மட்டுமே எழுதியிருக்கிறார்.
அவரது இலக்கியச் செயல்பாடுகள், கல்விப்புலங்களில் பணியாற்றிய அனுபவம். அதில் சந்தித்த மனிதர்கள். பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், கேரள வாழ்க்கை. அதன் அரசியல், மும்பை வாழ்க்கை என தனது பொதுவாழ்வு குறித்தே அதிகம் எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு மொழி எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஜார்ஜ். அதைப்பற்றிய பதிவுகள் இதில் குறைவே.
March 20, 2024
மழையின் கறுப்புக் கோடுகள்
மாங்கா என்பது ஜப்பானின் புகழ்பெற்ற சித்திரக்கதை வடிவம். வயது வாரியாக மாங்கா வெளியிடப்படுகிறது. புகழ்பெற்ற மாங்கா நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

ஏன் ஜப்பானியர்கள் சித்திரங்களுடன் படிக்க விரும்புகிறார்கள். அது அவர்களின் பண்பாடு. வாசிப்பின் பிரதான முறை.
படக்கதை என்பதை ஆரம்ப வாசிப்பு என்றே இந்தியாவில் நினைக்கிறார்கள். அதனால் பெரியவர்கள் காமிக்ஸ் படிப்பதை ஒவ்வாத விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் இப்போது படக்கதை என்பது தனி வகைமையாக உருக்கொண்டதோடு அதற்கான பெரிய சந்தையும் உருவாகியுள்ளது.
ஜப்பானில் மாங்கா வரைவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து வெளியே வரும் இளைஞர்கள் புதிய கருப்பொருளில் புதிய டிஜிட்டல் முறையில் ஓவியம் வரைகிறார்கள்.

ஜப்பானிய அனிம் மற்றும் மாங்கா உலக அளவில் தனிக்கவனம் பெற்றுள்ளது. ஹாலிவுட் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிய அனிம் பல மடங்கு சிறப்பானது. ஹயாவோ மியாசாகிக்கு இணையாக ஹாலிவுட்டில் ஒருவரும் இல்லை.
ஜப்பான் தவிரப் பிற நாடுகளில் மாங்கா அவ்வளவு புகழ்பெறவில்லை. ஆனால் இதற்கு இணையாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கிராபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகின்றன. கொண்டாடப் படுகின்றன.
காமிக்ஸ் அல்லது மாங்கா போன்றவை சிறார்களுக்கானது என்ற எண்ணம் இன்று மாறி வருகிறது. நீங்கள் எதைப்பற்றிப் படிக்கவிரும்பினாலும் அதன் சித்திர வடிவம் நூலாகக் கிடைக்கிறது.
ரகசியமாக ஒளித்து வைத்துப் படிக்கப்பட்ட பாலின்பக்கதைகள் கூடத் தனிவகை மாங்காவாக ஜப்பானில் வெளியிடப்படுகின்றன.
பெரியவர்களுக்கான GEKIGA மாங்கா வடிவத்தை உருவாக்கிய யோஷிஹிரோ தட்சுமியினைப் பற்றிய Tatsumi திரைப்படத்தைச் சிங்கப்பூரைச் சேர்ந்த இயக்குநர் எரிக் கூ உருவாக்கியுள்ளார்.

மாங்கா ஸ்டைலிலே முழுப்படத்தை உருவாக்கியுள்ளது சிறப்பு. திரையில் கோடுகள் உயிர்பெற்று அசைகின்றன. செபியா வண்ணம் கடந்தகாலத்தை நிஜமாக்குகின்றன.
ஒவ்வொரு கதையும் ஒருவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்றைய அச்சுமுறை, மாங்காவின் வண்ணத்தேர்வுகளை மனதில் கொண்டே இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
வான்கோவிடம் காணப்படும் உன்மத்தம் போலவே தட்சுமியிடமும் பித்து நிலை காணப்படுகிறது. அவரது கோடுகள் தனது கோபத்தையும் விரக்தியையும் தவிப்பையும் வெளிப்படுத்துகின்றன. பரவும் நெருப்பென கோடுகள் அலைபாய்கின்றன.
தட்சுமி புகழ்பெற்ற ஓவியரான ஒசாமு தெசூகாவின் தீவிர வாசகர். தெசூகாவின் பாதிப்பில் தான் ஓவியம் வரையத் துவங்கியிருக்கிறார்.
தட்சுமி ஒரு முறை ஒசாமு தெசூகாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி படத்திலும் இடம்பெற்றுள்ளது.

தட்சுமியின் வாழ்க்கையினையும் அவர் எழுதிய ஐந்து சிறுகதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இப்படம்.
இப்படத்தின் ஆதாரநூல் A Drifting Life என்ற அவரது மாங்கா.
ஒசாமு தெசூகாவின் இறுதி ஊர்வலத்துடன் படம் தொடங்குகிறது. இனி மாங்காவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியைப் படம் எழுப்பி அதற்கான விடையாகத் தட்சுமியை முன்வைக்கிறது.

தட்சுமி இரண்டாம் உலகப் போர் சூழலில் வளர்ந்தவர். அன்றைய ஜப்பானில் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் நெருக்கடி நிலை இருந்தது. ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் ஏற்படுத்திய பாதிப்பு ஜப்பானை உலுக்கியது. அதன் தாக்கத்தைத் தட்சுமியின் படைப்புகளில் காண முடிகிறது.
படத்தின் முதல்கதை Hell ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றியது., அவர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நாளில் இறந்துகிடப்பவர்களையும் இடிபாடுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறார்.
ஒரு வீட்டில் அம்மாவிற்கு மகன் முதுகு பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறான். அந்த நேரம் அணுகுண்டு வீசப்பட்டதால் அவர்கள் உருவம் அப்படியே நிழலோவியம் போலச் சுவரில் பதிந்து போகிறது. இருவரும் கரிக்கட்டைகளாக எரிந்து கிடக்கிறார்கள்.
துயர நிகழ்வின் சாட்சியம் போன்ற நிழலோவியத்தைப் புகைப்படம் எடுக்கிறான். நீண்ட காலம் அந்தப் புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்து வருகிறான். பின்பு தனது வறுமையின் காரணமாக அதைப் பதிப்பாளர் ஒருவரிடம் விற்றுவிடுகிறான்.
புகைப்படம் வெளியாகி ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்தத் தாயும் மகனும் யார் என்ற உண்மையைக் கண்டறிந்து வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நினைவுச்சின்னம் உருவாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இறந்து போனதாகக் கருதப்படும் மகன் ஒரு நாள் உயிரோடு வருகிறான். அவன் யாரும் எதிர்பாராத புதிய கதையைச் சொல்கிறான். அந்த அதிர்ச்சி புகைப்படக்கலைஞனை உறையச் செய்துவிடுகிறது
ஐந்து கதைகளில் ஓய்வு பெறப்போகும் நாளில் தனக்கு விருப்பமான பெண்ணுடன் இரவை கழிக்க முற்படும் வயதானவர் பற்றிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவரை இச்சை கொள்ள வைப்பது, இளமையாக உணர வைப்பது கைவிடப்பட்ட பீரங்கி. அதைக் கண்டே அவர் தனது இளமையை உணருகிறார். எந்தப் பெண்ணுடன் இரவைக் கழிக்க ஆசைப்பட்டாரோ அவளுடன் இரவைக் கழிக்கிறார். ஆனால் அந்தப் பீரங்கி எதன் குறியீடு என்ற உண்மையை அதன்பிறகு அறிந்து கொள்கிறார்
இது போல இன்னொரு கதையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன் ஒரு குரங்கை வளர்க்கிறான். அந்தக் குரங்கு அவனது மனசாட்சியைப் போல அறையில் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சுவரில் வரையப்பட்ட பெண் சித்திரத்துடன் பேசிக் கொண்டு இசை கேட்டுக் கொண்டு தனியாக வசிக்கிறான். ஆயினும் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில் அவனது ஒரு கை துண்டிக்கபடுகிறது. இதனால் வேலை பறி போகிறது. கையில்லாதவனுக்குப் புதிய வேலை கிடைக்கவில்லை. முடிவில் அவன் தான் வளர்த்த குரங்கை மிருகக் காட்சி சாலை ஒன்றில் கொண்டு போய்விடுகிறான். அங்கே நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து கதைகளிலும் அதிர்ச்சியான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தனிமையை உணருகிறவர்களே முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மகிழ்ச்சியை தேடி அலையும் அவர்கள் கசப்பையே அருந்துகிறார்கள். குடும்பம் அவர்களை புரிந்து கொள்ளவில்லை. தனது வாழ்வின் அர்த்தம் என்பதே துயரங்கள் தான் என உணருகிறார்கள். படத்தில் ஹிரோஷிமாவின் மீது மழையின் கறுப்புக் கோடுகள் வந்து போவது , கீறல்கள் மற்றும் கறை படிந்திருக்கும் காட்சிகள். குரங்கு அமர்ந்துள்ள அறை, துண்டிக்கபட்ட கை உள்ளவனின் நாட்கள் என ‘பேரழிவின் சாட்சியமாகவே காட்சிகள் தோன்றி மறைகின்றன.
துப்பறியும் கதைகளையும் குற்றநிகழ்வுகளையும் முதன்மையாகக் கொண்ட காமிக்ஸ்களைப் படித்து வந்த நமக்கு தட்சுமி காட்டும் உலகம் வேறானது. உண்மைக்கு நெருக்கமானது. அதைப் படம் சரியாக அடையாளப்படுத்தியிருக்கிறது
நீண்ட வாக்கியம்
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நார்வேஜிய எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸே தனது எழுத்துமுறையை Slow Prose என்கிறார்.

எழுத்தை அதன் சொந்த வேகத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும். தேவையற்ற பரபரப்பு. வேகத்தை நாமாக உருவாக்க வேண்டியதில்லை என்கிறார் ஜான் ஃபோஸ்ஸே
இந்த எழுத்துமுறை கவிதையைப் போல ஒவ்வொரு சொல்லும் முக்கியம் கொண்டதாக, நுணுக்கமான விவரிப்புகள் கொண்டதாக, ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பது அவரது வாதம்.
சொற்களின் தாளம் மற்றும் வாக்கியக் கட்டமைப்பில் முழுமையை கொண்டு வர மெதுவான எழுத்துமுறை அவசியம்.
அவரது ஏழு தொகுதியான ‘செப்டாலஜி’ நாவல் ஒரே நீண்ட வாக்கியம் கொண்டது. ஆம். முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியமாகத் தனது ஏழு நாவல்கள் கொண்ட தொகுதியை எழுதியிருக்கிறார்.
மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியம். மரணம் தான் முற்றுப்புள்ளியை ஏற்படுத்துகிறது.
நீண்டவாக்கியங்கள் கொண்ட உரைநடையை வாசிப்பது பலருக்கும் கடினமானதே. ஆனால் அப்படி எழுதுவது தவறு என்று நாம் வாதிட முடியாது.
மிக வேகமான இன்றைய வாழ்க்கையின் வேதனையும் பாடுகளுமே மெதுவான, நிதானமான, ஆழ்ந்த பார்வை கொண்ட உரைநடையின் தேவையை உருவாக்குகிறது. இன்று புதிய எழுத்தின் தேவை குறித்து உலகெங்கும் விவாதிக்கிறார்கள்.. நாவல் மற்றும் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி புதியதாக மாறியிருக்கிறது.
திரைப்படங்களில் இன்று சிங்கிள் ஷாட்டில் ஒரு நிகழ்வு முழுவதையும் படமாக்குகிறார்கள். அந்த அனுபவம் புதியதாக இருக்கிறதே. அதற்கு இணையானதே நீண்ட வாக்கியங்களையும் உள்மடிப்புகளையும் கொண்ட Slow Prose. இதில் வாசகன் அவசரமாக, மேலோட்டமாகக் கதையைப் படித்துப் போய்விட முடியாது. நுண்ணோவியங்கள் அளவில் சிறியவை, மிகுந்த நுட்பமாக உருவாக்கபட்டவை. நுண்ணோவியம் போல எழுத்துமுறையும் முழுமையான கவனத்துடன், கச்சிதமாக மாற வேண்டும்.
பொதுவாக நாவல் என்பதை உரையாடல்களின் வழியே கதையை விவரித்துக் கொண்டே போவது என்று நினைக்கிறார்கள் . அதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்று அதன் வழியே கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் அகக்கொந்தளிப்புகளையும், நாடகீயமான தருணங்களையும் நாவல் உருவாக்குகிறது என்று நம்புகிறார்கள்.
சம்பிரதாயமான நாவல்கள் இதையே செய்கின்றன. ஆனால் நோபல் பரிசு பெற்ற நாவல்களை வாசித்துப் பாருங்கள். அது கதைசொல்லல் மற்றும் நாவலின் வடிவம்,உள்ளடக்கம் என மூன்றிலும் கவனம் கொண்டிருக்கிறது.
சாமுவேல் பெக்கெட்டின் நாவல்கள். ஹெஸ்ஸேயின் நாவல்கள். மார்க்வெஸின் நாவல்கள் சரமாகோவின நாவல்கள். பாமுக்கின் நாவல்கள் அனைத்தும் நோபல் பரிசு பெற்ற படைப்புகள் என்றாலும் அவற்றை ஒரே தட்டில் வரிசைப்படுத்த முடியாது.
இந்த நாவல் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைக்களனும் கதாபாத்திரங்களும் கதை சொல்லும் முறையில் புதுமையும், வடிவ ரீதியாகத் தனித்துவமும் கொண்டிருக்கின்றன.

ஜான் ஃபோஸ்ஸே நாவலில் நடக்கும் உரையாடல்கள் தனித்து எழுதப்படவில்லை. விவரிப்பின் பகுதியாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவற்றைத் தனிமொழி போலவே எழுதியிருக்கிறார்.
ஓவியரான ஆஸ்லே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழுவதே நாவலின் மையக்கதை. நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழவே ஆசைப்படுகிறோம். கிராமத்தில் வாழுகிறவருக்கு நகரவாழ்க்கையின் மீது ஆசையாக இருக்கிறது. நகரவாசிகளுக்குக் கிராமம் சொர்க்கமாகத் தெரியாது. ஆனால் நடைமுறையில் இரு இடங்களிலும் ஒருவர் வாழ முடியாது. புனைவில் இது சாத்தியம்
ஓவியர் ஆஸ்லே பிஜோர்க்வினுக்கு வடக்கே உள்ள டில்க்ஜாவில் தனியாக வசிக்கிறார், மற்றொரு ஆஸ்லே பிஜோர்க்வின் நகரில் வசிக்கிறார், ஒரே பெயர் கொண்ட இருவர் இருவேறு இடங்களில் வாழுகிறார்கள்.
இருவரும் ஒருவர் தானா. அல்லது ஒரே பெயரில் ஒரே பணியைச் செய்யும் இருவர் வசிக்கிறார்களா என்பது தான் புனைவின் சிறப்பு.
ஒருவர் இருவராகிவிடுவது நாவலின் பழைய உத்தி. டாக்டர் ஜெகில் மற்றும் மிஸ்டர் ஹைடில் ஒருவர் இருவராகிறார்கள். ஆனால் அது நன்மையும் தீமையுமான இரண்டு வடிவங்கள். ஒரே நபரின் இரண்டு வெளிப்பாடுகள் இருவராக அறியப்படுகின்றன. ஆனால் ஜான் ஃபோஸ் தனது நாவலை டாப்பல்கெஞ்சர் வகையாகச் சொல்கிறார். அதாவது ஒரே மாதிரியிருக்கும் இரட்டை நபர்கள் பற்றியது.
இடம் மாறும் போது நிகழ்ச்சியின் இயல்பும் கனமும் மாறிவிடுகின்றன. அனுபவம் திரளுவதும் கலைவதும் உருமாறிவிடுகிறது. ஆஸ்லே தனது கடந்த கால வாழ்க்கையை நண்பரிடம் நினைவு கூறுகிறார். நாவலின் ஊடாக ஓவியம், கலையின் நோக்கம். கடவுள் நம்பிக்கை, தனிமையின் துயரம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. மனதின் நீரோட்டம் போல வாக்கியம் நீண்டு சென்றபடியே இருக்கிறது.
நீண்ட ஒற்றை வாக்கியம் கொண்ட இந்த நாவல்வரிசை முப்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தீவிரமாக வாசிக்கபட்டு வெற்றி அடைந்திருக்கிறது. இன்று ஜான் ஃபோஸ்ஸேயிற்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளது. இதனைப் புதிய எழுத்துமுறைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
இவ்வளவு கடினமான நாவலையும் சிறப்பாக மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலத்திற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பை உருவாக்குகிறார்கள் என்பது பாராட்டிற்குரியது
நார்வேயின் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஜான் ஃபோஸ்ஸே. அவரை இப்சனுக்கு இணையாகக் கொண்டாடுகிறார்கள். அவருக்குத் தற்போது அறுபது வயதாகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார்.
ஆண்டுக்கு ஒரு நாடகம் எழுதும் ஜான் போஸ் மற்ற மாதங்களில் பயணம் செய்கிறார். புத்தக வெளியீடுகள், கல்விப்புல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். கவிதை, கட்டுரை, சிறார்களுக்கான கதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார் ஜான் ஃபோஸ்
“வலி, துக்கம், மனச்சோர்வு ஆகியவையும் ஒரு பரிசு தான்“. “எழுதும் போது நான் அனுபவிப்பது வாழ்க்கையில் நான் அனுபவிப்பதை விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எழுதுவது என்பது விழித்தபடியே கனவு காண்பது “ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
நாடக வாழ்க்கை போதும் என்று விலகி அவர் நாவல் எழுதத் துவங்கினார். அது தான் ’செப்டாலஜி’. அவரே ஒரு ஓவியர் என்பதால் ஆஸ்லே கதாபாத்திரத்தை எளிதாக எழுத முடிந்திருக்கிறது.
நாவலின் வேலை அனுபவங்களைத் தொகுத்து தருவதில்லை. அது தனிமனிதனின் ஆசைகள். உறவுகள், பயம். வெற்றி தோல்விகளை ஆராய்வதுடன். கலை, தத்துவம். அறிவியல். சமயம், வரலாறு. அரசியல் எனப் பல்வேறு விஷயங்களை விவாதிக்கவும் மாற்றுபார்வைகளை முன்வைக்கவும் இடம் தருகிற வடிவம்.
டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தாமஸ் மன்னும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மட்டும் நாவலாக எழுதியவர்களில்லை. அவர்கள் புறவாழ்வின் மாற்றங்களை, சமூக அரசியல் போராட்டங்களை, தனிமனிதனின் கனவுகள். ஆசைகள். வெற்றிதோல்விகளை எழுதியவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தனது படைப்புகளையும் உருவாக்குகிறேன் என்கிறார் ஜான் ஃபோஸ்.
வடிவரீதியாக ஜான் ஃபோஸ்ஸேயின் எழுத்து செவ்வியல் நாவலாசிரியர்களிடமிருந்து வேறுபட்டது. குறிப்பாக அவரது மொழி பனிஉருகுவது போல நிசப்தமாக உருகியோடிக் கொண்டிருக்கிறது. இவரது நாவலை ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நாவலோடு ஒப்பிடலாம்.
வாசிக்கக் கடினமாக உள்ள இந்த நாவல்கள் உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகம் புதிய எழுத்திற்காகக் காத்திருக்கிறது என்பதையே இது நினைவுபடுத்துகிறது.
March 19, 2024
கதைகளின் ஆழ்படிமங்கள்
மணிகண்டன்

ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.
இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள்
சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ இல்லை , சிறிய சலிப்புடன் தங்கள் வாழ்வின் பாரத்தைச் சுமக்க தெரிந்தவர்கள், உங்கள் எழுத்து வழி கையறு வாழ்விலும் உறுதியான மனம் படைத்தவர்களின் கதைகளாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.
‘துயரம் பொறுத்தலும்’ ‘மாறிக்கொண்டே இருக்கும் காலம்’ குறித்த பிரக்ஞையும் தங்கள் கதைகளின் ஆழ்படிமங்கள். உங்கள் கதைகளின் கலை வெற்றிகள் எவை என்று கேட்டால் இவை இரண்டையும் கூறுவேன்.
இவற்றைத் தாண்டி இத்தகையவர்களின் கதைகளைக் கூறும் தங்களைப் போன்ற எழுத்தாளுமையின் பரிவு அளிக்கும் ஆசுவாசம் இன்றியமையாதது, பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற தங்கள் கதைகள் ஒரு சுமைதாங்கியாக இருந்து வருகின்றன.நீ மௌனமாய்த் துயரப்படுவதை நான் அறிவேன் என்னும் பரிவு.
March 18, 2024
இரண்டு நகரங்கள்
போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோஜெக் பாலத்தில் ஒரு ஓட்டை (THE HOLE IN THE BRIDGE) என்றொரு குறுங்கதையை எழுதியிருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒரு நதியின் இரு கரைகளிலும் இரண்டு சிறுநகரங்கள் இருந்தன . இரண்டினையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது.
ஒரு நாள் அந்தப் பாலத்தில் ஒரு ஓட்டை ஏற்பட்டது. அந்த ஓட்டையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் யார் சரிசெய்வது என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. காரணம் ஒருவரை விட மற்றவர்கள் உயர்வானவர்கள் என இரண்டு நகரவாசிகளும் நினைத்தார்கள்.
`வலது பக்க நகரவாசிகளே பாலத்தை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் ஆகவே அவர்களே சரிசெய்ய வேண்டும்` என்றார்கள் இடது நகரவாசிகள். அது உண்மையில்லை. `இடது பக்க நகரவாசிகளே சரி செய்ய வேண்டும்` என வலது நகரவாசிகள் குற்றம் சாட்டினார்கள்.

இவர்கள் சண்டையில் பாலம் சரிசெய்யப்படவேயில்லை. அந்தத் தகராறு நீடித்தது. இதனால் இரண்டு நகரங்களுக்கு இடையே பரஸ்பர வெறுப்பு உருவானது.
ஒரு தடவை பாலத்தைக் கடக்க முயன்ற கிழவர் ஓட்டையில் கால் தடுமாறி விழுந்தார். அவரது கால் எலும்பு முறிந்தது. இந்த விபத்துக்கு எந்த ஊர் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. .
கிழவர், இடப்புற நகரிலிருந்து வலது பக்கம் நோக்கி வந்தாரா அல்லது வலது புறமிருந்து இடப்புற நகர் நோக்கிச் சென்றாரா என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணையை மேற்கொண்டார்கள்.
கிழவர் குடிபோதையிலிருந்த காரணத்தால் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
இன்னொரு நாள் பயணியின் வண்டியொன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டையில் சிக்கி அதன் அச்சு உடைந்தது. கோபமடைந்த பயணி வண்டியிலிருந்து இறங்கி, ஏன் அந்த ஓட்டையைச் சரிசெய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்று கோவித்துக் கொண்டார். இரு நகரவாசிகளும் அது தங்கள் குற்றமில்லை என்றார்கள்.
பயணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வந்தார்.
“நான் இந்த ஓட்டையைப் பணம் கொடுத்து வாங்க விரும்புகிறேன். இது யாருடையது என்று சொன்னால் உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்“
இப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை. அந்த ஓட்டை யாருக்குச் சொந்தம் என்று அவர்கள் யோசித்தார்கள். இருநகரங்களும் அதைத் தங்களுக்கு உரியதென அறிவித்தன
அதைக் கேட்ட பயணி சொன்னார்.
“நீங்கள் தான் ஓட்டையின் உரிமையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும்“
அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
பயணியே அதற்கு ஒரு தீர்வையும் சொன்னார்
“ஓட்டையின் உரிமையாளர் எவரோ அவரே அதை மூடுவதற்கு உரியவர்.“
ஓட்டையை மூடுகிறவரே அதன் உரிமையாளர் என்று அறிந்து கொண்ட மக்கள் அவசரமாக பாலத்திலிருந்த ஓட்டையை மூடும் பணியைச் செய்தார்கள்.
பயணி அமைதியாகச் சுருட்டு புகைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பாலத்திலிருந்த ஓட்டை அடைக்கப்பட்டவுடன் அவர்கள் அதை விற்பதற்காகப் பயணியைத் தேடி வந்தார்கள்.
பயணி அமைதியாகச் சொன்னார்
“நான் பாலத்திலிருந்த ஓட்டையைத் தான் விலைக்கு வாங்குவதாகச் சொன்னேன். இங்கே ஓட்டை ஏதும் இல்லையே. நான் எதை வாங்குவது. என்னை ஏமாற்ற முயல வேண்டாம்.“
என்றபடி தனது வண்டியில் ஏறிப் போய்விட்டார். இப்போது இரண்டு நகரவாசிகளும் ராசியாகிவிட்டார்கள். பாலத்தைப் பாதுகாக்கிறார்கள், யாராவது பயணி வந்தால் அவனை அடிப்பதற்காகக் காத்துக் கொண்டுமிருக்கிறார்கள் என்று கதை முடிகிறது.
ஸ்லாவோமிர் மிரோஜெக்கின் இக்கதை போலந்தின் அன்றைய அரசியலைக் கேலி செய்கிறது.
எளிய கதை என்றாலும் பாலத்திலுள்ள ஓட்டையை ஒருவன் விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது கதை புதியதாகிறது.
உண்மையில் துளை என்பது வெறுமை தானே. அதை எப்படி வாங்கவோ விற்கவோ முடியும்.
கதையின் முடிவில் பயணியின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அது முல்லாவின் ஞானம் போன்றது.
கதையில் என்னைக் கவருவது குடிகார கிழவர் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று தெரியாத சம்பவம். இந்த நிகழ்வு தான் பயணியின் புத்திசாலித்தனத்திற்கும் மக்களின் சுயநலத்திற்கும் நடுவே பாலமாக அமைகிறது.
ஸ்லாவோமிர் மிரோஜெக் போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர், மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆவார். இந்தக் கதைக்குள் நடப்பதும் ஒரு நாடகமே. ஓட்டை விழுவது என்ற மையப் பிரச்சனை, அதன் இருபக்க நிலைப்பாடுகள். அதன் அடுத்தக் கட்ட பாதிப்பு. அதற்கான தீர்வு என்று நாடகம் போலவே இந்தக் கதையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரே ஆற்றின் கரையில் தான் இரு நகரங்களும் இருக்கின்றன. பாலம் இருநகரங்களையும் இணைக்கிறது. ஆனால் இருநகரவாசிகளின் மனது இணையவேயில்லை. அவர்கள் வீண் பெருமையிலும் சுயநலத்திலும் ஊறிப்போயிருக்கிறார்கள். நகர நிர்வாகமும் மக்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். போலந்து தேசத்தின் கதையைத் தான் மிரோஜெக் உருவகமாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காகப் போலந்தை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தவர் மிரோஜெக்
குறுங்கதை என்பது அளவில் சிறியது என்பதால் மட்டுமே சிறப்பாகிவிடாது. அது பேசும் பொருள். கதைமொழி, நுணுக்கமான சித்தரிப்பு. தனித்துவமான முடிவு இவற்றால் தான் சிறப்படைகிறது. மிரோஜெக் கதையின் இன்னொரு வடிவமாகவே சரமாகோவின் The Stone Raft நாவலைச் சொல்லலாம். இரண்டும் சமகால அரசியலையே பேசுகிறது.
March 16, 2024
நூற்றாண்டின் சாட்சியம்
குமாரமங்கலம் தியாக தீபங்கள் என்று டாக்டர் சுப்பராயன் வாழ்க்கை வரலாற்றை கே.ஜீவபாரதி எழுதியிருக்கிறார். மிக முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல். 500 பக்கங்களுக்கும் மேலாக டாக்டர் சுப்பராயனின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனை பொள்ளாச்சி மகாலிங்கம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் வழியே டாக்டர் சுப்பராயன் குடும்பத்தினைப் பற்றி மட்டுமின்றி, நீதிக்கட்சி உருவான வரலாறு. அதன் செயல்பாடுகள். அன்றைய சட்டமன்ற நடவடிக்கைகள். அரசு பணியாளர் தேர்வாணையம் உருவானது. அறநிலையத் துறையை உருவாக்கியது. திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடச் செய்தது என முக்கியச் சமூக அரசியல் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்திய அரசியலில் சுப்பராயன் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அவரது மகன் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் இந்திய இராணுவத்தின் தலைமைப் படைத் தலைவராக இருந்தவர். இரண்டாவது மகன் ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம் நெய்வேலி நிலக்கரிக்கழகத்தின் தலைவராக விளங்கியவர். மூன்றாவது மகனான மோகன் குமாரமங்கலம் மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். மகள் பார்வதி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பார்வதியின் கணவர் கிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட். அவர்களின் காதல்கதை திரைப்படமாக்க வேண்டிய அளவு சுவாரஸ்யமானது.

அன்று Court of Wards சட்டப்படி தந்தையை இழந்த ஜமீன்தார்களின் பிள்ளைகளைப் பிரிட்டிஷ் அரசே படிக்க வைத்துப் பராமரிப்பு செய்தது. இந்தச் சட்டத்தின் கீழே சுப்பராயன் படிப்பைப் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற சுப்பராயன் உயர்கல்வி பெற லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வாதாம் கல்லூரியில் சேர்ந்தார். அவரது மனைவி ராதாபாய் மங்களூரைச் சேர்ந்தவர். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த ராதா பாயைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ராதாபாயும் சுப்பராயனுடன் லண்டன் சென்று அதே பல்கலைகழகத்தில் கல்வி பயின்றிருக்கிறார். முதல் உலகப்போரை ஒட்டி இந்தியா திரும்ப முடியாமல் இங்கிலாந்திலே சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
சுப்பராயன் குடும்ப வரலாற்றின் வழியே நூற்றாண்டுகாலத் தமிழ் வாழ்க்கையின் மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது.
தமிழக அரசியல் தலைவர்களில் அதிகப் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றிப் பெருமை சேர்ந்தவர் டாக்டர் சுப்பராயன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று படித்திருக்கிறார். சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். .தமிழகத்தின் முதலாவது அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். (அவரது காலத்தில் முதலமைச்சர் இப்படித் தான் அழைக்கப்பட்டார் ) முதல்வர் பதவிக்கு அவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார். அதில் அன்றைய கவர்னரின் பங்கு எப்படியிருந்தது என்பதைப் பற்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார்கள்.

மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மத்திய அமைச்சர், இந்தோனேசியத் தூதுவர். மாநில ஆளுநர், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்று சுப்பராயன் வகித்த பொறுப்புகள் முக்கியமானவை.
அவரது குடும்பத்தில் அனைவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். டாக்டர் சுப்பராயன் மனைவி ராதாபாய் பிராமணப்பெண். மங்களூரைச் சேர்ந்தவர். அவரது ஒரு மருமகள் பஞ்சாபி. இன்னொரு மருமகள் வங்காளி. மருமகன் கேரளாவைச் சேர்ந்தவர். பேரன் பேத்திகளும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களே. அவரது குடும்பம் தான் உண்மையான பாரதவிலாஸ்.
டப்ளினில் படித்துக் கொண்டிருந்த போது அயர்லாந்து விடுதலை அமைப்புடன் இணைந்து போராடியிருக்கிறார். சில காலம் இங்கிலாந்து பிரதமர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1911ல் டெல்லியில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற துணைத்தலைவரானவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அதற்குக் காரணமாக இருந்தவர் டாக்டர்சுப்பராயன் . இந்தியாவிலே சமூகநீதி அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை மாகாணத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது.
அந்தக்காலத்தில் எல்லோருக்கும் வாக்குரிமை கிடையது. நிலவரியாகப் பத்து ரூபாய் செலுத்தியவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டு வரியாக ஆண்டுக்கு மூன்று ரூபாய் செலுத்தியவர்கள் மற்றும் பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும், வேட்பாளராக நிற்க முடியும்.
கவர்னர் 29 உறுப்பினர்களைத் தானே நேரடியாக நியமனம் செய்வார். ஆந்திரா, கர்நாடகம். கேரளா ஆகிய மூன்றும் தமிழகத்துடன் இணைந்திருந்த காலமது. அன்றைய தேர்தல் எப்படி நடந்தது. வாக்குப் பெட்டிகள் என்ன வண்ணத்திலிருந்தன. எப்படி அமைச்சரவை உருவாக்கப்பட்டது என்ற தகவல்களை இந்தநூலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தந்தை காங்கிரஸ் கட்சியிலும், மகனும் மகளும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள். மருமகன் கிருஷ்ணனை கைது செய்யப் போலீஸ் தேடிக் கொண்டிருந்த காலத்தில் சுப்பராயன் அமைச்சராக இருந்திருக்கிறார். இப்படி அரசியலில் எதிர்நிலைகளைக் கொண்டிருந்த போதும் டாக்டர் சுப்பராயன் குடும்பம் தேசத்தின் நலனை முதன்மையாகக் கொண்டிருந்தார்கள் என்பதையே ஜீவபாரதி விளக்கியிருக்கிறார்.
டாக்டர் சுப்பராயன் இங்கிலாந்தில் படிக்க சென்ற போது நேருவும் அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நீண்டகாலம் நீடித்தது. டாக்டர் சுப்பராயனுக்கு நேரு எழுதிய கடிதங்களில் அந்த நட்பினையும் அன்பினையும் காண முடிகிறது. இது போலவே இந்திரா காந்தி. மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பாசு, பார்வதி கிருஷ்ணனுடன் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பார்வதி. இவர்கள் திருமணம் மும்பை கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அதற்கான செலவு ரூபாய் 20 மட்டுமே.
பாரதி நூலின் தடைக்கான சுப்பராயனின் நிலைப்பாடு, மற்றும் சட்டமன்ற உரையில் அவர் தெரிவிக்கும் பல கருத்துகள். அவரது பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாடு குறித்த மாற்றுக்கருத்துக்கள் எனக்கிருக்கின்றன. ஆயினும் நீண்ட அரசியல் பராம்பரியம் கொண்ட குடும்பமாக அவர்கள் பொதுவாழ்க்கையில் செயல்பட்ட விதம். சமூக அரசியல் தளங்களில் உருவாக்கிய மாற்றங்கள், அதற்காகச் சந்தித்த பிரச்சனைகள். அடைந்த வெற்றிகள் வியப்படையவே வைக்கின்றன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
