S. Ramakrishnan's Blog, page 40

March 19, 2024

கதைகளின் ஆழ்படிமங்கள்

மணிகண்டன்

ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.

இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள்

சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ இல்லை , சிறிய சலிப்புடன் தங்கள் வாழ்வின் பாரத்தைச் சுமக்க தெரிந்தவர்கள், உங்கள் எழுத்து வழி கையறு வாழ்விலும் உறுதியான மனம் படைத்தவர்களின் கதைகளாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.

‘துயரம் பொறுத்தலும்’ ‘மாறிக்கொண்டே இருக்கும் காலம்’ குறித்த பிரக்ஞையும் தங்கள் கதைகளின் ஆழ்படிமங்கள். உங்கள் கதைகளின் கலை வெற்றிகள் எவை என்று கேட்டால் இவை இரண்டையும் கூறுவேன்.

இவற்றைத் தாண்டி இத்தகையவர்களின் கதைகளைக் கூறும் தங்களைப் போன்ற எழுத்தாளுமையின் பரிவு அளிக்கும் ஆசுவாசம் இன்றியமையாதது, பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற தங்கள் கதைகள் ஒரு சுமைதாங்கியாக இருந்து வருகின்றன.நீ மௌனமாய்த் துயரப்படுவதை நான் அறிவேன் என்னும் பரிவு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2024 03:04

March 18, 2024

இரண்டு நகரங்கள்

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோஜெக் பாலத்தில் ஒரு ஓட்டை (THE HOLE IN THE BRIDGE) என்றொரு குறுங்கதையை எழுதியிருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒரு நதியின் இரு கரைகளிலும் இரண்டு சிறுநகரங்கள் இருந்தன . இரண்டினையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது.

ஒரு நாள் அந்தப் பாலத்தில் ஒரு ஓட்டை ஏற்பட்டது. அந்த ஓட்டையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் யார் சரிசெய்வது என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. காரணம் ஒருவரை விட மற்றவர்கள் உயர்வானவர்கள் என இரண்டு நகரவாசிகளும் நினைத்தார்கள்.

`வலது பக்க நகரவாசிகளே பாலத்தை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் ஆகவே அவர்களே சரிசெய்ய வேண்டும்` என்றார்கள் இடது நகரவாசிகள். அது உண்மையில்லை. `இடது பக்க நகரவாசிகளே சரி செய்ய வேண்டும்` என வலது நகரவாசிகள் குற்றம் சாட்டினார்கள்.

இவர்கள் சண்டையில் பாலம் சரிசெய்யப்படவேயில்லை. அந்தத் தகராறு நீடித்தது. இதனால் இரண்டு நகரங்களுக்கு இடையே பரஸ்பர வெறுப்பு உருவானது.

ஒரு தடவை பாலத்தைக் கடக்க முயன்ற கிழவர் ஓட்டையில் கால் தடுமாறி விழுந்தார். அவரது கால் எலும்பு முறிந்தது. இந்த விபத்துக்கு எந்த ஊர் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. .

கிழவர், இடப்புற நகரிலிருந்து வலது பக்கம் நோக்கி வந்தாரா அல்லது வலது புறமிருந்து இடப்புற நகர் நோக்கிச் சென்றாரா என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணையை மேற்கொண்டார்கள்.

கிழவர் குடிபோதையிலிருந்த காரணத்தால் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

இன்னொரு நாள் பயணியின் வண்டியொன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டையில் சிக்கி அதன் அச்சு உடைந்தது. கோபமடைந்த பயணி வண்டியிலிருந்து இறங்கி, ஏன் அந்த ஓட்டையைச் சரிசெய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்று கோவித்துக் கொண்டார். இரு நகரவாசிகளும் அது தங்கள் குற்றமில்லை என்றார்கள்.

பயணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வந்தார்.

“நான் இந்த ஓட்டையைப் பணம் கொடுத்து வாங்க விரும்புகிறேன். இது யாருடையது என்று சொன்னால் உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்“

இப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை. அந்த ஓட்டை யாருக்குச் சொந்தம் என்று அவர்கள் யோசித்தார்கள். இருநகரங்களும் அதைத் தங்களுக்கு உரியதென அறிவித்தன

அதைக் கேட்ட பயணி சொன்னார்.

“நீங்கள் தான் ஓட்டையின் உரிமையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும்“

அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

பயணியே அதற்கு ஒரு தீர்வையும் சொன்னார்

“ஓட்டையின் உரிமையாளர் எவரோ அவரே அதை மூடுவதற்கு உரியவர்.“

ஓட்டையை மூடுகிறவரே அதன் உரிமையாளர் என்று அறிந்து கொண்ட மக்கள் அவசரமாக பாலத்திலிருந்த ஓட்டையை மூடும் பணியைச் செய்தார்கள்.

பயணி அமைதியாகச் சுருட்டு புகைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பாலத்திலிருந்த ஓட்டை அடைக்கப்பட்டவுடன் அவர்கள் அதை விற்பதற்காகப் பயணியைத் தேடி வந்தார்கள்.

பயணி அமைதியாகச் சொன்னார்

“நான் பாலத்திலிருந்த ஓட்டையைத் தான் விலைக்கு வாங்குவதாகச் சொன்னேன். இங்கே ஓட்டை ஏதும் இல்லையே. நான் எதை வாங்குவது. என்னை ஏமாற்ற முயல வேண்டாம்.“

என்றபடி தனது வண்டியில் ஏறிப் போய்விட்டார். இப்போது இரண்டு நகரவாசிகளும் ராசியாகிவிட்டார்கள். பாலத்தைப் பாதுகாக்கிறார்கள், யாராவது பயணி வந்தால் அவனை அடிப்பதற்காகக் காத்துக் கொண்டுமிருக்கிறார்கள் என்று கதை முடிகிறது.

ஸ்லாவோமிர் மிரோஜெக்கின் இக்கதை போலந்தின் அன்றைய அரசியலைக் கேலி செய்கிறது.

எளிய கதை என்றாலும் பாலத்திலுள்ள ஓட்டையை ஒருவன் விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது கதை புதியதாகிறது.

உண்மையில் துளை என்பது வெறுமை தானே. அதை எப்படி வாங்கவோ விற்கவோ முடியும்.

கதையின் முடிவில் பயணியின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அது முல்லாவின் ஞானம் போன்றது.

கதையில் என்னைக் கவருவது குடிகார கிழவர் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று தெரியாத சம்பவம். இந்த நிகழ்வு தான் பயணியின் புத்திசாலித்தனத்திற்கும் மக்களின் சுயநலத்திற்கும் நடுவே பாலமாக அமைகிறது.

ஸ்லாவோமிர் மிரோஜெக் போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர், மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆவார். இந்தக் கதைக்குள் நடப்பதும் ஒரு நாடகமே. ஓட்டை விழுவது என்ற மையப் பிரச்சனை, அதன் இருபக்க நிலைப்பாடுகள். அதன் அடுத்தக் கட்ட பாதிப்பு. அதற்கான தீர்வு என்று நாடகம் போலவே இந்தக் கதையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரே ஆற்றின் கரையில் தான் இரு நகரங்களும் இருக்கின்றன. பாலம் இருநகரங்களையும் இணைக்கிறது. ஆனால் இருநகரவாசிகளின் மனது இணையவேயில்லை. அவர்கள் வீண் பெருமையிலும் சுயநலத்திலும் ஊறிப்போயிருக்கிறார்கள். நகர நிர்வாகமும் மக்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். போலந்து தேசத்தின் கதையைத் தான் மிரோஜெக் உருவகமாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காகப் போலந்தை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தவர் மிரோஜெக்

குறுங்கதை என்பது அளவில் சிறியது என்பதால் மட்டுமே சிறப்பாகிவிடாது. அது பேசும் பொருள். கதைமொழி, நுணுக்கமான சித்தரிப்பு. தனித்துவமான முடிவு இவற்றால் தான் சிறப்படைகிறது. மிரோஜெக் கதையின் இன்னொரு வடிவமாகவே சரமாகோவின் The Stone Raft நாவலைச் சொல்லலாம். இரண்டும் சமகால அரசியலையே பேசுகிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2024 01:55

March 16, 2024

நூற்றாண்டின் சாட்சியம்

குமாரமங்கலம் தியாக தீபங்கள் என்று டாக்டர் சுப்பராயன் வாழ்க்கை வரலாற்றை கே.ஜீவபாரதி எழுதியிருக்கிறார். மிக முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல். 500 பக்கங்களுக்கும் மேலாக டாக்டர் சுப்பராயனின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனை பொள்ளாச்சி மகாலிங்கம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் வழியே டாக்டர் சுப்பராயன் குடும்பத்தினைப் பற்றி மட்டுமின்றி, நீதிக்கட்சி உருவான வரலாறு. அதன் செயல்பாடுகள். அன்றைய சட்டமன்ற நடவடிக்கைகள். அரசு பணியாளர் தேர்வாணையம் உருவானது. அறநிலையத் துறையை உருவாக்கியது. திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடச் செய்தது என முக்கியச் சமூக அரசியல் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்திய அரசியலில் சுப்பராயன் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அவரது மகன் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் இந்திய இராணுவத்தின் தலைமைப் படைத் தலைவராக இருந்தவர். இரண்டாவது மகன் ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்  நெய்வேலி நிலக்கரிக்கழகத்தின் தலைவராக விளங்கியவர். மூன்றாவது மகனான மோகன் குமாரமங்கலம் மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். மகள் பார்வதி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பார்வதியின் கணவர் கிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட். அவர்களின் காதல்கதை திரைப்படமாக்க வேண்டிய அளவு சுவாரஸ்யமானது.

அன்று Court of Wards சட்டப்படி தந்தையை இழந்த ஜமீன்தார்களின் பிள்ளைகளைப் பிரிட்டிஷ் அரசே படிக்க வைத்துப் பராமரிப்பு செய்தது. இந்தச் சட்டத்தின் கீழே சுப்பராயன் படிப்பைப் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற சுப்பராயன் உயர்கல்வி பெற லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வாதாம் கல்லூரியில் சேர்ந்தார். அவரது மனைவி ராதாபாய் மங்களூரைச் சேர்ந்தவர். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த ராதா பாயைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ராதாபாயும் சுப்பராயனுடன் லண்டன் சென்று அதே பல்கலைகழகத்தில் கல்வி பயின்றிருக்கிறார். முதல் உலகப்போரை ஒட்டி இந்தியா திரும்ப முடியாமல் இங்கிலாந்திலே சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

சுப்பராயன் குடும்ப வரலாற்றின் வழியே நூற்றாண்டுகாலத் தமிழ் வாழ்க்கையின் மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது.

தமிழக அரசியல் தலைவர்களில் அதிகப் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றிப் பெருமை சேர்ந்தவர் டாக்டர் சுப்பராயன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று படித்திருக்கிறார். சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். .தமிழகத்தின் முதலாவது அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். (அவரது காலத்தில் முதலமைச்சர் இப்படித் தான் அழைக்கப்பட்டார் ) முதல்வர் பதவிக்கு அவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார். அதில் அன்றைய கவர்னரின் பங்கு எப்படியிருந்தது என்பதைப் பற்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார்கள்.

மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மத்திய அமைச்சர், இந்தோனேசியத் தூதுவர். மாநில ஆளுநர், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்று சுப்பராயன் வகித்த பொறுப்புகள் முக்கியமானவை.

அவரது குடும்பத்தில் அனைவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். டாக்டர் சுப்பராயன் மனைவி ராதாபாய் பிராமணப்பெண். மங்களூரைச் சேர்ந்தவர். அவரது ஒரு மருமகள் பஞ்சாபி. இன்னொரு மருமகள் வங்காளி. மருமகன் கேரளாவைச் சேர்ந்தவர். பேரன் பேத்திகளும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களே. அவரது குடும்பம் தான் உண்மையான பாரதவிலாஸ்.

டப்ளினில் படித்துக் கொண்டிருந்த போது அயர்லாந்து விடுதலை அமைப்புடன் இணைந்து போராடியிருக்கிறார். சில காலம் இங்கிலாந்து பிரதமர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1911ல் டெல்லியில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற துணைத்தலைவரானவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அதற்குக் காரணமாக இருந்தவர் டாக்டர்சுப்பராயன் . இந்தியாவிலே சமூகநீதி அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை மாகாணத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது.

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் வாக்குரிமை கிடையது. நிலவரியாகப் பத்து ரூபாய் செலுத்தியவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டு வரியாக ஆண்டுக்கு மூன்று ரூபாய் செலுத்தியவர்கள் மற்றும் பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும், வேட்பாளராக நிற்க முடியும்.

கவர்னர் 29 உறுப்பினர்களைத் தானே நேரடியாக நியமனம் செய்வார். ஆந்திரா, கர்நாடகம். கேரளா ஆகிய மூன்றும் தமிழகத்துடன் இணைந்திருந்த காலமது. அன்றைய தேர்தல் எப்படி நடந்தது. வாக்குப் பெட்டிகள் என்ன வண்ணத்திலிருந்தன. எப்படி அமைச்சரவை உருவாக்கப்பட்டது என்ற தகவல்களை இந்தநூலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

பார்வதி கிருஷ்ணன்

தந்தை காங்கிரஸ் கட்சியிலும், மகனும் மகளும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள். மருமகன் கிருஷ்ணனை கைது செய்யப் போலீஸ் தேடிக் கொண்டிருந்த காலத்தில் சுப்பராயன் அமைச்சராக இருந்திருக்கிறார். இப்படி அரசியலில் எதிர்நிலைகளைக் கொண்டிருந்த போதும் டாக்டர் சுப்பராயன் குடும்பம் தேசத்தின் நலனை முதன்மையாகக் கொண்டிருந்தார்கள் என்பதையே ஜீவபாரதி விளக்கியிருக்கிறார்.

டாக்டர் சுப்பராயன் இங்கிலாந்தில் படிக்க சென்ற போது நேருவும் அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நீண்டகாலம் நீடித்தது. டாக்டர் சுப்பராயனுக்கு நேரு எழுதிய கடிதங்களில் அந்த நட்பினையும் அன்பினையும் காண முடிகிறது. இது போலவே இந்திரா காந்தி. மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பாசு, பார்வதி கிருஷ்ணனுடன் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பார்வதி. இவர்கள் திருமணம் மும்பை கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அதற்கான செலவு ரூபாய் 20 மட்டுமே.

பாரதி நூலின் தடைக்கான சுப்பராயனின் நிலைப்பாடு, மற்றும் சட்டமன்ற உரையில் அவர் தெரிவிக்கும் பல கருத்துகள். அவரது பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாடு குறித்த மாற்றுக்கருத்துக்கள் எனக்கிருக்கின்றன. ஆயினும் நீண்ட அரசியல் பராம்பரியம் கொண்ட குடும்பமாக அவர்கள் பொதுவாழ்க்கையில் செயல்பட்ட விதம்.  சமூக அரசியல் தளங்களில் உருவாக்கிய மாற்றங்கள், அதற்காகச் சந்தித்த பிரச்சனைகள். அடைந்த வெற்றிகள் வியப்படையவே வைக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2024 01:18

March 15, 2024

என்டோனியின் கனவு

லுசினோ விஸ்காண்டியின் La Terra Trema 1948 ஆம் ஆண்டு வெளியானது. இத்தாலியின் மீனவ கிராமம் ஒன்றின் வாழ்க்கையை யதார்த்தமாக, கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார் விஸ்காண்டி.

இப்படம் சிசிலியன் மீனவர்களின் வாழ்க்கையை நிஜமாகச் சித்தரிக்கிறது என்று வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது.

ஜியோவானி வெர்காவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. தொழில்முறை சாராத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் பலம்..

மீனவர்கள் கலையாத இருளுக்குள் வலையோடு கடலுக்குச் செல்வது. மீனவ குடும்பத்தின் நெருக்கடிகள். உணவு தயாரிக்கும் விதம். குடியிருப்பின் நெருக்கடியான சூழ்நிலை. பிடித்துவரப்படும் மீனுக்கு விலையில்லாமல் போவது. இடைத்தரகர்கள் மீனவர்களை ஏமாற்றுவது என கடலோர வாழ்க்கையைப் ஆவணப்படம் போல துல்லியமாக சித்தரித்துள்ளது சிறப்பாகும்.

இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறிய மீன்பிடி கிராமமான அசி ட்ரெஸாவில் கதை நடைபெறுகிறது. அங்குள்ள வாலாஸ்ட்ரோ குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரனாகப் பணியாற்றிவிட்டு ஊர் திரும்புகிறான் என்டோனி. தனது குடும்பத் தொழிலான மீன்பிடிப்பதில் ஈடுபடுகிறான். உள்ளூரில் அவனுக்குக் காதலியிருக்கிறாள்.

என்டோனியின் தாத்தா அவர்கள் சம்பாதித்து வரும் பணத்தைச் சரியாகப் பங்குபிரித்துத் தருகிறார். எளிமையான அந்த வாழ்க்கையைச் சந்தோஷமாகவே என்டோனி அனுபவிக்கிறான்.

ஆனால் தங்களை வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள். மீனுக்கு உரிய விலையைத் தர மறுக்கிறார்கள் என்று உணர்ந்து கோபம் கொள்கிறான். அவர்களை எதிர்த்துச் சண்டை போடுகிறான்.

இதை என்டோனியின் தாத்தா கூட விரும்பவில்லை. அவர் என்டோனியிடம், “வணிகர்கள் எப்போதுமே சரியானவர்கள்” என்று சொல்கிறார். வெளிப்படையாக, பழைய தலைமுறையினர் தங்கள் அவலநிலையை விதியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை என்டோனி உணர்ந்து கொள்கிறான்.

மீனுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று அறிந்த போதும் மீனவர்களால் வணிகர்களைப் பகைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதுடன்,மோசமான வானிலையிலும் கூட, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும்.

ஒரு நாள் ஆத்திரம் அதிகமாகி வணிகர்கள் வைத்திருந்த தராசினை பிடுங்கி கடலில் வீசுகிறான். இதனால் மோதல் ஏற்படுகிறது. காவலர்கள் என்டோனியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அவன் மீனவர்களுக்குச் சங்கம் உருவாக்கபட வேண்டும் என்று வாதிடுகிறான். சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராட மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது ஒன்றே தீர்வு என்கிறான்.

என்டோனியின் சகோதரி லூசியா காதல் வசப்படுவது. அவளது காதலன் கட்டிட வேலை செய்தபடியே காதல்மொழி பேசுவது, என்டோனி தனது காதலி நெட்டாவைத் தேடிச் சென்று உரையாடுவது மிக அழகான காட்சிகள்

நெட்டாவின் பெற்றோர் தங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் தர வேண்டுமானால் தான் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என என்டோனி உணர்ந்து கொள்கிறான். ஆகவே சொந்தமாக ஒரு படகு வாங்குவதற்காகக் குடியிருந்த வீட்டை அடமானம் வைக்கிறான். ஆரம்பத்தில் நிறைய மீன் கிடைக்கிறது. அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் எதிர்பாராத புயலில் அவனது படகு சிக்கிக் கொண்டுவிடுகிறது. காணாமல் போன அவர்களைக் குடும்பம் தேடுகிறது. புயலில் படகு பழுதடைகிறது. அதைச் சரி செய்ய அவர்களிடம் பணமில்லை.மீண்டும் பிறருக்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இத்துடன் கடனும் சேர்ந்து கொள்ளவே அவனது கனவு தோற்றுப் போகிறது. வலஸ்ட்ரோ குடும்பத்தின் தோல்விகளுக்குப் பிறகு கிராம மக்கள் அவர்களை ஒதுக்கிய விதம் அதிர்ச்சிகரமானது.

புயலில் சிக்கிக் காணாமல் போன என்டோனியின் படகு திரும்பி வருகிறதா எனக் காணுவதற்காகக் கடற்கரையில் வலஸ்ட்ரோ பெண்கள் காத்திருக்கும் காட்சி மறக்கமுடியாதது.

வலஸ்ட்ரோ குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. ஊரைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அதில் என்டோனிக்கு விருப்பமில்லை. முடிவில் தனது தோல்வியை அவன் கசப்போடு ஏற்றுக் கொள்கிறான்.

இனவரைவியல்ஆவணம் போலக் கதை நிகழும் இடத்தையும் நிகழ்வுகளையும் ஒளிப்பதிவாளர் ஜி.ஆர். ஆல்டோவின் கேமிரா நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. அபாரமான காட்சிக் கோணங்கள். நகர்வுக்காட்சிகள். படத்தினை இன்றும் புதியதாக வைத்திருப்பது அதன் தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் தொழில்முறை சாராத நடிகர்களின் உணர்ச்சி வெளிப்பாடேயாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2024 03:25

March 14, 2024

குள்ளனும் டாவின்சியும்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பர்லாகர் க்விஸ்டின் குள்ளன் நாவலை தி.ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கம். நாவலின் கவித்துவமான வர்ணனைகள் மற்றும் தத்துவ எண்ணங்களை நேர்த்தியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

The Dwarf நாவல் 1944ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளியானது. 1945ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  1986 அக்டோபரில் சமுதாயம் பதிப்பகம் குள்ளன் நாவலை வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலில் ஓவியர் லியோனார்டோ டாவின்சி முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். மிலன் பிரபுவான லுடோவிகோ ஸ்ஃபோர்சாவின் அழைப்பில் டாவின்சி மேற்கொண்ட கலைப்பணிகளையே நாவல் விவரிக்கிறது.

நாவலில் டாவின்சி கதாபாத்திரத்தின் பெயர் பெர்னார்டோ. இளவரசன் லியோனின் நண்பராகவும் ஆலோசகராகவும், குருவாகவும் சித்தரிக்கப்படுகிறார். டாவின்சியின் தோற்றம் , அறிவியலில் அவருக்குள்ள ஈடுபாடு, உடற்கூறியல் பற்றிய அவரது ஆய்வுகள். புதிய ஆயுதங்களை உருவாக்க முயன்ற நிகழ்வுகள், பிரான்ஸிஸ்கன் மடத்தின் சுவரில் டாவின்சி வரைந்த ஓவியம் போன்றவற்றைப் பர்லாகர் க்விஸ்ட் தனது நாவலில் குறிப்பிடுகிறார்

குள்ளன் எழுதிய நாட்குறிப்பு போலவே நாவல் விவரிக்கப்படுகிறது. ஒருவகையில் இது அவனது சுயசரிதை. . அவன் இளவரசன் லியோனின் விளையாட்டுத் துணையைப் போல அரண்மனையில் வசிக்கிறான். இளவரசன் போலவே உடை அணிந்திருக்கிறான்.

இரண்டரை அடி உயரம். நல்ல உடற்கட்டு. தைரியசாலி. குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவன். மற்ற குள்ளர்களைப் போல அவன் கோமாளியாக இருக்க விரும்பவில்லை. அப்படி யாராவது தன்னை நடத்த முயன்றால் கோவித்துக் கொள்கிறான். தன்னை ஒரு போர்வீரனாகக் கருதும் குள்ளன் இளவரசனுடன் போர்களத்திற்குச் செல்கிறான். சண்டையிடுகிறான். தன்னை போன்ற ஒரு குள்ளனைக் கொல்கிறான். குற்றவுணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறான்.

உருவத்தால் சிறியவராக இருப்பதால் தங்களைக் குழந்தைகளோடு விளையாடச் சொல்கிறார்கள். தனக்குக் குழந்தைகளைப் பிடிக்கவே பிடிக்காது என்கிறான் குள்ளன்.

அவமானத்தாலும் சிறுமைகளாலும் நிரம்பிய அவனது வாழ்க்கையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் தனது இழிவான வாழ்வை வெறுக்கிறான். தன்னை அரவணைத்துக் காத்து வரும் இளவரசனையும் வெறுக்கிறான்.

யாவரையும் விட இளவரசியை அதிகம் வெறுக்கிறான். அதற்கு முக்கியக் காரணம். அவளது கள்ளக்காதல். மிகு காமம். அன்றாடம் அவள் தரும் காதற் கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி அவனுடையது. இந்த இழிந்த காரியத்தில் தன்னை ஏன் ஈடுபடுத்துகிறாள் என்ற கோபம் அவனுக்குள்ளிருக்கிறது. ஒருவேளை மன்னரால் கண்டுபிடிக்கபட்டால் தண்டிக்கப்படுவோமே என்ற பயமும் அவனிடம் இருக்கிறது. ஆனால் இளவரசியைப் போலவே அவனும் பாசாங்க நடந்து கொள்கிறான் 

இளவரசிக்கு எப்படி இத்தனை காதலர்கள். அவள் ஏன் இப்படி சரசமாடுகிறாள்  அதை ஏன் இளவரசன் கண்டு கொள்வதேயில்லை என்று மனதிற்குள் ஆத்திரமடைகிறான்.

குள்ளனை ஒரு விளையாட்டுப் பொம்மை போலவே இளவரசி நடத்துகிறாள். தனது அந்தரங்கம் யாவையும் பகிர்ந்து கொள்கிறாள். அவன் முன்னே ஆடைகள் நெகிழ நடக்கிறாள். படுக்கையில் ஆடையில்லாமல் கிடக்கிறாள். அது குள்ளனை எரிச்சல் படுத்துகிறது. தன்னை அவள் மனிதனாகவே நினைக்கவில்லை என்று உணருகிறான்.

குள்ளனுக்கு அவனைப் போலவே குள்ளமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க இளவரசி முயலுகிறாள். அதை அவனால் ஏற்க முடியவில்லை. அவனது கூற்றுப்படி, குள்ளர்கள் மலட்டுத்தன்மை கொண்டவர்கள். எனவே இனப்பெருக்கம் சாத்தியமற்றது ஆகவே அவர்களுக்குக் காதல் தேவையற்றது.

அரண்மனையின் போலித்தனங்களையும் அபத்தமான நடவடிக்கைகளையும் காணும் குள்ளன்  தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்ல விரும்புகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

குள்ளர்களுக்கு அவன் ஞானஸ்நானம் செய்து வைக்கும் போது பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான். விருந்தினர்கள் பயந்து போகிறார்கள். அந்தக் காட்சி லூயி புனுவலின் திரைப்படம் காணுவது போன்ற அனுபவத்தை தருகிறது.

தவறான நடத்தை காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அப்போது அவனது கையில் மாட்டுவதற்கு ஏற்றார் போல விலங்கு இல்லை என்று தெரிய வருகிறது. இளவரசன் அவனுக்காக புதிய விலங்கு ஒன்றைச் செய்யச் சொல்கிறான். அது பின்னாளில் உபயோகமாகிறது.

மனித மனதின் விசித்திரங்களை குள்ளன் நன்றாக அறிந்திருக்கிறான். குறிப்பாக ஒருவரின் தீய எண்ணங்களைப் பார்வையிலே உணர்ந்துவிடுகிறான். இது அவனுக்குப் பலநேரம் நன்மையாகவும் சில நேரம் தீமையாகவும் முடிகிறது.

அவனால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரே மனிதர் ஞானியைப் போலிருந்த பெர்னார்டோ. அவர் ஓவியம் வரைகிறார். இறந்த உடலை ஆராய்ச்சி செய்கிறார். புதிய போர் கருவிகளை உருவாக்குகிறார். அவரும் இளவரசரும் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது குள்ளனுக்கு வியப்பாக இருக்கிறது.

இளவரசன் ஒரு மாணவன் போலப் பணிவாக நடந்து கொள்வதையும் பெர்னார்டோ உலகிலுள்ள சகல விஷயங்கள் குறித்தும் ஞானம் கொண்டிருப்பதையும் கண்டு குள்ளன் ஆச்சரியப்படுகிறான்.

ஒரு நாள் குள்ளனைத் தனது அறைக்கு வரவழைத்து அவனது உடைகளைக் களையச் சொல்லி படம் வரைகிறார் பெர்னார்டோ. குள்ளன் அதனை அத்துமீறிய செயலாக் கருதுகிறான். செத்த உடலை ஆராய்ச்சி செய்வது போலத் தன்னையும் அவர் ஆராய்ச்சி செய்வதாகக் கருதுவதாக நினைக்கிறான். தனது எதிர்ப்பை காட்ட உதைக்கிறான். ஆனால் பலவந்தமாக அவனது உடைகளைக் களைந்து அவனை ஓவியம் வரைகிறார்.

குள்ளனை வைத்தே தனது எதிரிகளுக்கு விஷம் கொடுக்கிறான் இளவரசன். அந்தப் பணியை விருப்பத்துடன் குள்ளன் மேற்கொள்கிறான். பழிவாங்குவதற்குத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்றே நினைக்கிறான்.

டான் ரிக்கார்டோவின் மரணத்தின் விளைவாக இளவரசி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். குள்ளனின் முன்பாக இளவரசி மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கிறாள். அவளது பாவங்களை மன்னிக்க முடியாது என்று குள்ளன் கூச்சலிடுகிறான். இளவரசி கண்ணீர் விட்டு தனது மனத்துயரை வடித்துக் கொள்கிறாள்.

குள்ளனால் எவரிடத்தும் அன்பு காட்ட முடியவில்லை. துரோகமும் போலித்தனமும் கொண்ட அரண்மனை வாழ்க்கையை அவன் வெறுக்கிறான்.

குள்ளனுக்கும் இளவரசிக்கும் இடையேயான உறவு தெளிவற்றது, அவள் மீது பொறாமை கொண்டிருக்கிறான். தன்னிடம் அவள் மன்றாடும் தருணத்தில் குள்ளன் மகிழ்ச்சி அடைகிறான். அந்த நிமிஷத்தில் அவன் தன்னைக் கடவுளைப் போல உணருகிறான்.

எந்த இளவரசரும் குள்ளன் இல்லாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு விளையாட்டு பொம்மைகளை விடவும் அவனைப் போன்ற மனிதர்களே தேவை என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறான்.

இளவரசர் லியோன் புத்திசாலி. அரசியலில் சாதுரியமாகக் காய் நகர்த்தத் தெரிந்தவன். மக்களின் மதிப்பைப் பெற எதையும் செய்பவன்.  இளவரசியைப் போலவே அவனும் கள்ளக்காதலில் திளைக்கிறான். அவன் காதலியோடு துயிலும் அறையைத் தேடிச் சென்று குள்ளன் ரகசியத் தகவலைச் சொல்லும் பகுதி நாவலில் முக்கியமானது.

குள்ளன் நாவலில் பெர்னார்டோ ஒரு மேதையாகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் நன்மை தீமை என இரண்டிற்கும் பங்களிக்கிறார். விஞ்ஞானமும் கலையும் பெர்னார்டோவால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன

பர்லாகர் க்விஸ்ட் ஓவியம் வரையக் கூடியவர். ஆகவே இத்தாலிய மறுமலர்ச்சி கால வரலாற்றை தொட்டுச் செல்லும் தனது நாவலில் டாவின்சியை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார். அறிவும் போதமும் குமிழிடும் தெளிந்த ஊற்றின் முன் அமர்ந்திருப்பது போல இளவரசன் நடந்து கொள்வதாக நாவலில் எழுதியிருக்கிறார். இது டாவின்சியைப் பற்றிய சரியான மதிப்பீடு

தங்கள் எதிரியான ஜியோவானி ஏஞ்சலிகாவுடன் உறங்குவதைக் குள்ளனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நள்ளிரவில் இளவரசரைனை தேடிச் சென்று அவனே வெளிப்படுத்துகிறான். அந்த வகையில் ஏஞ்சலிகாவின் தற்கொலைக்குக் குள்ளனே காரணமாக இருக்கிறான்.

தனது எந்த செயலையும் அவன் குற்றமாக நினைக்கவில்லை. அவற்றை விரும்பியே செய்கிறான். தண்டனையை ஏற்றுக் கொள்கிறான். தீமையின் மலரைக் கையில் ஏந்தியபடி நிற்கும் குள்ளன் கதாபாத்திரம் தனித்துவமானது.

மறுமலர்ச்சி கால இத்தாலியைப் பற்றிய இந்த நாவல் இன்று வாசிக்கப்படும் போது சமகாலத்தின் அரசியல் நிகழ்வுகளை. போருக்கான காரணங்களை, தனிமனித வீழ்ச்சியைப் பேசுவதாகவே உணர முடிகிறது.

குள்ளர்களுக்குத் தாய்நாடு, பெற்றோர் என்று ஒன்றும் கிடையாது“ என்று நாவலின் ஒரு இடத்தில் குள்ளன் சொல்கிறான். அவனை இருபது பணத்திற்கு விற்றுவிட்டாள் அவனது அம்மா. அந்தப் பணத்தில் மூன்று முழத்துண்டும், ஆட்டு மந்தைக்கு ஒரு காவல் நாயும் வாங்கிக் கொண்டாள். இவ்வளவு தான் அவனது மதிப்பு.

நட்சத்திரங்கள் தங்கள் சொந்த இருள் வழியே போய்க்கொண்டேயிருக்கின்றன“ என்று நாவலில் ஒரு வரி வருகிறது. அது தான் குள்ளனின் வாழ்க்கை.

பர்லாகர் க்விஸ்டிற்கு 19 51ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அவரது வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தார்கள். எவரையும் சந்திக்க மறுத்துவிட்ட பர்லாகர் க்விஸ்ட் தனது எழுத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். அதைத்தாண்டி பத்திரிக்கையாளர்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை என்று அறிவித்தார்.

கடைசிவரை அவர் பத்திரிக்கை பேட்டிகள் எதையும் தரவில்லை. தனது சொந்தவாழ்க்கை பற்றிய எதையும் பத்திரிக்கைகளில் பகிர்ந்து கொள்ளவில்லை.

நன்மைக்கும் தீமைக்குமான மோதல்களையே தனது படைப்பின் மையப்பொருளாகக் கொண்டிருந்தார் பர்லாகர் க்விஸ்ட்.

பாரபாஸ் நாவலும் இதே கருவைக் கொண்டது தான்.  இயேசுவிற்குப் பதிலாக விடுதலை செய்யப்பட்ட திருடன் பாரபாரஸின் கண்ணோட்டத்தில் இயேசுவின் அற்புதங்களைப்  பற்றி  பேசும் நாவலது.

நோபல் பரிசுக்கு பர்லாகர் க்விஸ்ட் பெயரை ஒன்பது நாடுகள் பரிந்துரை செய்தன. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரது குள்ளன் நாவல் வெளியான போதே இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போது விருது கிடைக்கவில்லை

பாரபாஸ் நாவல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆறு மாதங்களுக்குள் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதோடு ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாகின. அதுவே  நோபல் கமிட்டியின் கவனத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1951ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு  வழங்கப்படது.

பாரபாஸ் நாவல் தமிழில் அன்புவழி என்று க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது 1961ல் ரிச்சர்ட் பிளீஷர் இயக்கத்தில் பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

நமக்குள்ளிருக்கும் வன்முறையின் வடிவம் தான் குள்ளன். அவனைச் சிறையில் அடைப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. நாவலின் முடிவில் அதே இளவரசன் இன்னும் அரியணையில் இருக்கிறான். பகை அப்படியே இருக்கிறது. அதிகாரத்தின் சதிவலை விரிக்கப்பட்டேயிருக்கிறது. மீண்டும் யுத்தம் வரலாம், தான் விடுவிக்கப்படலாம் என்று குள்ளன் உணர்ந்திருக்கிறான். கடைசியில் அதை நினைத்தே அவனது முகத்தில் ஏளனச் சிரிப்பு வெளிப்படுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2024 01:07

March 13, 2024

ஹெர்சாக் சொல்கிறார்

தாமஸ் வான் ஸ்டெய்னேக்கர் இயக்கிய Werner Herzog: Radical Dreamer படத்தின் துவக்கத்தில் தன்னை A good soldier of cinema என ஹெர்சாக் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

ஆம். போர்வீரனின் துணிச்சலும் தியாகமும் கொண்டவர் தான் வெர்னர் ஹெர்சாக். பதினாறு வயதில் துவங்கிய அவரது சினிமாக் கனவு நிறைய போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்கச் செய்தது. அவற்றை வெற்றிகரமாக வென்று காட்டி சாதனைகளை நிகழ்த்தியவர் ஹெர்சாக். இன்று சர்வதேச சினிமாவில் அவரது பெயர் ஒரு அடையாளம். நிகரற்ற திரைக்கலைஞராகக் கொண்டாடப்படுகிறார்.

இந்த ஆவணப்படத்தில் ஹெர்சாக் சச்ராங்கில் (Sachrang) அவர்கள் வசித்த பழைய வீட்டைக் காணச் செல்கிறார். அழகான மலைக்கிராமம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவர்கள் வசித்த ஸ்டிபெடிக் நகரம் அழிக்கப்பட்டது. ஆகவே ஹெர்சாக்கின் அம்மா ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள சச்ராங்கில் தஞ்சம் புகுந்தார்.

இப்போது அந்த பழைய வீடு உருமாறியிருக்கிறது. பூட்டப்பட்ட வீட்டினை. கண்ணாடி வழியாகப் பார்க்கிறார். அவரது நினைவின் கதவுகள் திறந்து கொள்கின்றன. தான் சிறுவனாக இருந்த போது அந்த வீடு எப்படியிருந்தது என்பதை விவரிக்கிறார். வீட்டிற்குள் போய்ப் பார்க்கலாமா என்று கேட்கிறார்கள். வேண்டாம் என மறுத்துவிடுகிறார். ஏதோ பழைய நினைவுகள் பீறிட அவரது கண்கள் கலங்கி விடுகின்றன.

அவருக்கு விருப்பமான அருவியைக் காணச் செல்கிறார்கள். வழிந்தோடும் காட்டருவியைப் பார்த்து மகிழும் ஹெர்சாக் அது நான் தான் என்று சொல்கிறார். அது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமில்லை. சில இடங்களை நாமாகவே உணருகிறோம். அதைத் தான் ஹெர்சாக் சொல்கிறார்.

அந்த அருவிக்குத் தண்ணீர் எங்கேயிருந்து வருகிறது என்று உடன் வந்த பெண் கேட்கிறார். தான் அதைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த மர்மம் அப்படியே நீடிக்கட்டும் என்கிறார்.

ஹெர்சாக்கின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. நதிமூலம் காண வேண்டாம் என்பது தான் நமது மரபு. சில மர்மங்கள் நீடித்திருப்பதே நல்லது.

அந்த அருவியைப் போலவே தன் போக்கில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறார் ஹெர்சாக்.

படத்தின் இறுதிக்காட்சியில் இந்த ஆண்டு இரண்டு புத்தகங்கள் எழுதிமுடித்திருக்கிறேன். புதிதாக ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் குரலில் வெளிப்படும் சந்தோஷம் தான் அவரை இன்றும் இளமையாக வைத்திருக்கிறது

இளவயதின் ஹெர்சாக்கை விடவும் இப்போதுள்ள ஹெர்சாக்கின் தோற்றம். அதில் வெளிப்படும் கனிவு. ஞானம் பிடித்திருக்கிறது.

இளமையான ஹெர்சாக் நெருப்பைப் போன்றிருக்கிறார். சாத்தியமற்ற கனவுகளைச் சாத்தியமாக்கும் போராட்ட குணமும், அதற்காக உயிரையும் இழக்க முற்படும் தைரியமும் கொண்டிருக்கிறார்.

அவரது திரையுலகப் பயணத்தினையும் அதில் அடைந்துள்ள வெற்றிகளையும் காணும் போது ஹெர்சாக்கை தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

பெரிய கனவுகள் இல்லாத வாழ்க்கை என்பது அர்த்தமற்றது. ஒரு போதும் சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும் கனவுகளை நனவாக்கிக் காட்டுவதே வாழ்வின் உண்மையான சவால். அதை ஹெர்சாக் விரும்பி ஏற்றிருக்கிறார். வென்று காட்டியிருக்கிறார்.

உலகின் குரலை விடவும் தனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலையே அவர் தொடர்ந்து கேட்கிறார். நம்புகிறார். மனசாட்சியின் வழிகாட்டுதலில் நடந்து செல்கிறார்.

படத்தின் இன்னொரு காட்சியில் “Even Dwarfs Started Small” படம் எடுத்த இடத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பு வந்து நிற்கிறார். ஆயினும் அவரது நினைவில் படப்பிடிப்பு நாட்களில் நடந்தவை துல்லியமாக வெளிப்படுகின்றன.

இது போலவே Aguirre, Wrath of god படம் உருவான விதம். படப்பிடிப்பில் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் விவரிக்கும் போது ஹெர்சாக் தனது கனவைச் சாத்தியமாக்க எவ்வளவு போராடியிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாகக் கிளாஸ் கின்ஸ்கியோடு அவருக்குள்ள நட்பு மற்றும் மோதலை கூடப் புன்னகையோடு தான் வெளிப்படுத்துகிறார்

பெருவியன் மலையின் மீது ஒரு நீராவிக் கப்பலைக் கொண்டு செல்வதைப் பற்றிப் படம் எடுப்பதாக ஒருவர் கனவு காணுகிறார் என்றால் அது எளிய விஷயமா என்ன. சினிமாவின் மீது ஹெர்சாக்கிற்குள்ள பித்து தான் இது போன்ற அசாதாரணப் படங்களை உருவாக்க செய்திருக்கிறது.

ஹெர்சாக்கின் சகோதரரும் அவரது தயாரிப்பாளருமான லக்கி ஸ்டிபெட்டிக்கின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. நிதானமாக, தனது பங்களிப்பை அவர் விவரிக்கும் விதம் அழகானது.

நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த தனது வழிகாட்டியான லோட்டே ஈஸ்னரைப் பார்க்க முனிச்சிலிருந்து பாரீஸுக்கு ஹெர்சாக் ஒரு பாதயாத்திரையை மேற்கொண்டார் அந்த யாத்திரையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது குறித்து முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

இந்த ஆவணப்படத்தில் லோட்டே ஈஸ்னரைப் பற்றி ஹெர்சாக் குறிப்பிடுவதுடன் அந்தப் பயணத்தில் எழுதிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்..

ஜெர்மானியத் திரையுலகில் புதிய அலை எப்படி உருவானது என்பது குறித்தும். ஹெர்சாக் படங்களின் அழகியல் குறித்தும் படம் விரிவாகப் பேசுகிறது.

நடிகர்கள் கிறிஸ்டியன் பேல், நிக்கோல் கிட்மேன், இயக்குநர் விம் வெண்டர்ஸ், இயக்குநர் வோல்கர் ஸ்க்லான்டோர்ஃப், நேர்காணல்கள் ஹெர்சாக்கின் சினிமா குறித்த நேர்மையான பார்வையினை முன்வைக்கின்றது.

தனது கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கி பார்க்கும் ஹெர்சாக் சுயபுலம்பல் எதுவும் இல்லாமல், தன்னைப் பற்றிய பெருமிதங்கள் எதையும் சொல்லாமல் தனக்கு விருப்பமான வேலையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்வதாகச் சொல்லும் போது அவர் மீதான மதிப்பு மிகவும் அதிகமாகிறது.

ஹெர்சாக்கிற்குள் ஒரு சிறுவன் துடிப்போடு இருக்கிறான். அவனது ஆசைகளும் ஆர்வமுமே அவரை வழிநடத்துகிறது. படத்தின் ஒரு காட்சியில் ஹெர்சாக் கடற்கரையில் கிடக்கும் வட்டவடிவமான கற்களை ஆசையாகப் பொறுக்கி கையில் வைத்துக் கொள்கிறார். அப்போது நாம் காண்பது அந்தச் சிறுவனையே.

ஹெர்சாக் நடத்தும் திரைப்பள்ளி. இளம் இயக்குநர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள். நடிகர்களைக் கையாளுவதில் அவர் காட்டும் தனித்துவம், அவரது ஆவணப்படங்களின் உருவாக்கம். அமெரிக்க வாழ்க்கை என இந்த ஆவணப்படம் ஹெர்சாக்கையும் அவரது திரை பங்களிப்பையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2024 00:43

March 11, 2024

ஒளி தரும் மகிழ்ச்சி

ஜப்பானுக்கு வெளியே அதிகம் கவனம் பெறாத எழுத்தாளர் யோகோ சுஷிமா (Yūko Tsushima). ஜப்பானியத்தனம் இல்லாத ஜப்பானிய படைப்பாளி என்பதால் மேற்குலகம் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேசப் பதிப்பாளர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளை விடவும் புத்தகச்சந்தையில் விற்பனைக்கான அதிக சாத்தியமுள்ள படைப்புகளையே தேர்வு செய்கிறார்கள்.  அதற்கு ஜப்பானியதனம் அவசியமானது. அது முரகாமியிடம் இருக்கிறது. சுஷிமாவிடம் இல்லை. 2016ல் மறைந்துவிட்ட சுஷிமாவின் எழுத்துகள் தனித்து பேசப்பட வேண்டியவை.

ஜப்பானிய இலக்கிய உலகம் யோகோ சுஷிமாவைக் கொண்டாடுகிறது. அவர் பல்வேறு இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.. 1980களில் அவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு வெளியாகியுள்ளன. ஆனால் அதிகம் கவனம் பெறவில்லை.

ஜப்பானுக்கு வெளியே என்னைக் குறைவாகவே வாசிக்கிறார்கள். காரணம் நான் செர்ரி பூக்கள் மற்றும் கிரிஸான்தமம் பற்றி எழுதும் ஜப்பானியப் படைப்பாளியில்லை என்று வேடிக்கையாகச் சொல்கிறார் சுஷிமா

தனித்து வாழும் பெண்களின் வாழ்க்கையே அவரது கதையுலகம். அதிலும் ஒற்றைத் தாயாகக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு வாழும் பெண்ணைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார்.

பிரசவம் மற்றும் குழந்தை வளர்ப்புக் குறித்த பெரும்பான்மை ஜப்பானியச் சொற்கள் ஆண்கள் உருவாக்கியவை. அவற்றை நான் மறுஉருவாக்கம் செய்திருக்கிறேன். என் படைப்பு உதிரக்கறை படிந்தது என்கிறார் சுஷிமா.

தனது வாழ்க்கை அனுபவங்களை முதன்மைப்படுத்தி எழுதும் அவர் தனது நாவலில் குழந்தைக்கு எப்போது பால் கொடுக்க வேண்டும். எவ்வளவு பால் குடிக்கும். குழந்தையின் அழுகைக்கு என்ன பொருள் என்பதற்கான அட்டவணை ஒன்றையும் தனது கதையோடு இணைத்து வெளியிட்டிருக்கிறார்.

நெரிசலான அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் பெண், தந்தையைப் பற்றிய அவளது நினைவுகள். சிணுங்கும் குழந்தை, புறஉலகின் யதார்த்தம் துரத்தும் போது அதிலிருந்து தப்பிக்கத் தானே உருவாக்கிக் கொள்ளும் மாற்று உலகம் இவையே அவரது கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ‘

அவரது கதை ஒன்றின் திடீரெனக் கடலைப் பற்றிய நினைவு வந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கடலைக் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறாள். அங்கே அவள் காணுவது கடலை அல்ல. திறந்தவெளி குப்பை மேடு போலிருக்கும் கடற்கரையை . அந்தக் கடலும் கடற்கரையும் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும், தொடர்ந்து நடக்க முடியாது. இந்த அவஸ்தைகள் அவளது ஆசையை அர்த்தமற்றுப் போகச் செய்கின்றன.

அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதற்கு இந்த ஒரு பத்தியே சாட்சி

பிரவசத்திற்காக பொதுமருத்துவமனைக்கு செல்லும் பெண்ணின் உணர்ச்சிகளை விவரிக்கும் பகுதியிது.

 “The pain made her think of the pressure of ocean depths. She had heard that when a deep-sea fish is hauled rapidly to the surface the change in pressure causes its body to blow up and burst like a balloon. She felt exactly as if such a deep-sea fish were in her belly. It seemed to want to bring all the surrounding pressure to bear on its small body until it hardened and sank, deeper and deeper. She must stay quite still and withstand the pressure or her own body would be sucked down by it too.” Takiko waits patiently until the pain leaves her, then she strides on. Within moments, she is repaid for her endurance with great beauty: “As she turned to the right, all of her was bathed in the direct light of the morning sun for the first time that day. It was a dazzling light. The city streets spread out at her feet and the dawn sky spread above, faintly pink . . . No one was aware of her joy at this instant—not her mother, not her father, not a soul. She didn’t think there could be any moment more luxurious than this

-from Woman Running in the Mountains

மகிழ்ச்சியான பெண்களைப் பற்றி நான் ஒருபோதும் எழுதவில்லை. மகிழ்ச்சிக்காக ஏங்கும் பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்கிறார் சுஷிமா.

Territory of Light மூன்று வயது மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாழும் பெண்ணின் கதை. அதில் அந்த வீடு வெளிச்சமாக இருப்பதைப் பற்றி எழுதுகிறார்

the apartment was filled with light at any hour of the day. The kitchen and dining area immediately inside had a red floor, which made the aura all the brighter, I felt like giving myself a pat on the head for having managed to protect my daughter from the upheaval around her with the quantity of light. ஒளி தான் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

வெளிச்சம் பரவுவது போலவே நிதானமாக, மௌனமாகத் தனது எழுத்துக்களில் ஒளிர்கிறார் யோகோ சுஷிமா

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2024 23:11

மூன்று சிறுமிகள்

டச்சு ஓவியரான வாலி மோஸ் (Wally Moes)ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர். ஆகஸ்ட் அலெபே மற்றும் ரிச்சர்ட் பர்னியர் ஆகியோரிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். உணர்ச்சிகரமான ஓவியங்களை வரைவதில் பெயர் பெற்றவர் வாலி மோஸ். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை வரைவதில் தனித்துவம் கொண்டவர்.

1880ம் ஆண்டின் கோடையில் மோஸ், ஓவியர் தெரேஸ் ஸ்வார்ட்ஸை சந்தித்தார், அவர் வழியாக கலையுலகிற்கு அறிமுகமானார். ஜெர்மனியில் சிறிது காலம் தங்கிய மோஸ் பின்பு  ஆம்ஸ்டர்டாமிற்குத் திரும்பினார். 1884 இல் பாரிஸுக்குச் சென்றார், அங்குள்ள கலைக்கூடங்களில் தனது ஓவியம் இடம்பெற வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது ஒரேயொரு ஓவியம் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டது. அதுவும் பெரிய வரவேற்பு பெறவில்லை. அவர் பாரீஸில் சில மாதங்களே வசித்தார். 1898 இல் அவர் லாரனுக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்தபடி தொடர்ச்சியாக ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்.

1908 ஆம் ஆண்டில் இடைவிடாத மூட்டுவலி காரணமாக அவரால் ஓவியம் வரைய முடியாமல் போனது. ஆகவே கதைகள் எழுத துவங்கினார். அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

வாலி மோஸ் பின்னல் வேலை செய்யும் பெண்களைப் பற்றி மூன்று ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1890 வரையப்பட்ட Knitting girls என்ற நீர்வண்ண ஓவியம் மிகச்சிறப்பானது இதில் மூன்று சிறுமிகள் நடந்தபடியே பின்னல் வேலை செய்கிறார்கள். அவர்களின்  முகபாவங்களைப் பாருங்கள். சாந்தமும் அமைதியும் கொண்ட முகங்கள். அவர்கள் பின்னல்வேலையை புதிதாக கற்றுக் கொண்டவர்கள். அதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் ஈடுபாட்டிலே தெரிகிறது. அந்த சாலை மிகவும் அழகாக வரையப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாலையோர மலர். அதன் ஒளிர்வு. சிறுமிகளின் காலடியில் விழும் நிழல். அவர்கள் பயிற்சிபள்ளியிலிருந்து வீடு திரும்பும் பகல் நேரமது.

வலது மணிக்கட்டின் இயக்கம், கையில் நூலை வைத்திருக்கும் விதம். நூல் சுண்டு விரல் வழியாகச் செல்வது, இடதுகையின் பிடிமானம். என ஓவியம் மிகவும் நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது.

சிறுமிகளின் தோற்றம் அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மூவரும் சமவயதுள்ளவர்கள் போலத் தெரியவில்லை. நடுவில் உள்ள பெண் கடைசியில் உள்ள பெண்ணின் சகோதரியைப் போலவே தெரிகிறாள். இருவரின் முகச்சாடையைப் பாருங்கள்.

சிறுமிகளின் எளிய உடையின் வண்ணமும் சாலையோரப் பூக்களும் அழகாக உள்ளன. உறக்க நடையாளர்களைப் போல அந்த சிறுமிகள் நடக்கிறார்கள்.

அவர்களுக்குள் போட்டி நடப்பது போலிருக்கிறது. யார் விரைவாகப் பின்னல் வேலையை முடிக்கப்போவது என்று போட்டியிடுகிறார்கள். அந்தப் பாதை அவர்கள் வழக்கமாக வந்து போகும் பாதை என்பதால் பின்னல் வேலையில் கவனம் செலுத்தியபடியும் அவர்களால் நடக்க முடிகிறது. சிறுமிகளின் கண்கள் நிலை கொண்டுள்ள விதம். அவர்களின் சற்றே சரிந்த முகம், நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டு நெதர்லாந்தில் வீடு தோறும் பெண்கள் பின்னல் வேலை செய்தார்கள்.  பிள்ளைகளுக்கு வீட்டிலே பின்னல் கற்றுக் கொடுத்தார்கள். பின்னல் வேலையில்​​ வித்தியாசமான ஸ்டைல்கள் உள்ளன. அதில் கான்டினென்டல் பின்னல் அப்போது பிரபலமாக இருந்தது.

வாலி மோஸின் Knitting school in Huizen ஓவியத்தில் பயிற்சி பள்ளியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒன்றாக அமர்ந்து பின்னல் செய்துகொண்டிருக்கிறார்கள். அறைஜன்னலின் வழியாக வரும் ஒளி உடைகளில் பிரதிபலிக்கும் அழகு, மரத்தாலான தரையின் வண்ணம், வெளியே தெரியும் வெள்ளை துணியின் படபடப்பு அழகாக வரையப்பட்டிருக்கிறது. தியானம் செய்வது போல ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவர்கள் பின்னலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறுமியின் கவனமும் அவளது முகபாவமும் உடைகளும் நேர்த்தியான வரையப்பட்டுள்ளன. தரையில் வைக்கப்பட்டுள்ள நூற்கண்டுள்ள கூடை தனித்த அழகைக் கொண்டிருக்கிறது. அறையிலுள்ள மௌனத்தை நம்மால் உணர முடிகிறது.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் பின்னல் வேலை புகழ்பெறத் துவங்கியது. இங்கிலாந்தில், பின்னல் வேலை செய்த  கம்பளித் தொப்பிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த தொப்பி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

17 ஆம் நூற்றாண்டில் கையால் பின்னல்வேலை செய்வது பணக்கார பெண்களின் களமாக மாறியது. இதற்கென சிறப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டன. கையுறைகள், காலுறைகள் மற்றும் தொப்பிகள் செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அனாதை இல்லங்கள் மற்றும் ஏழை வீடுகளில் பின்னல்வேலை கற்பிப்பது அவர்களுக்கான வருவாய் தரும் பணியாக  உருமாறியது.  19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பின்னல் வேலை கற்றுத்தரும் வீட்டுப் பள்ளிகள் நிறைய இருந்தன.

இந்த ஓவியமும் அப்படியான ஒரு வீட்டுப்பள்ளியில் பெண்கள் பின்னல் வேலை செய்வதையே சித்தரிக்கிறது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு காட்சியை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது, 17 ஆம் நூற்றாண்டில் டச்சு ஓவியர்கள் இந்த வகை ஓவியங்களை சிறப்பாக உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியானதே வாலி மோஸின் ஓவியம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2024 02:05

March 9, 2024

Usawa இதழில்

எனது புலிக்கட்டம் சிறுகதை ஜி.பரத்குமாரால் “Lambs and Tigers” என மொழியாக்கம் செய்யப்பட்டு Usawa Literary Review இதழில் வெளியாகியுள்ளது.

“Lambs and Tigers”, a short story by S Ramakrishnan, translated from the Tamil By G Bharath Kumar
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2024 23:28

நூல் கொள்முதல் கொள்கை 2024

தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024யை வெளியிட்டுள்ளது

நூலகத்துறையின் எதிர்காலம் மற்றும் பதிப்புத்துறையின் வளர்ச்சி, வாசகர்களின் பன்முகப் பயன்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நூல் தேர்விற்கான சிறப்புக் குழு, இணைய வழியாக விண்ணப்பம் செய்வது, நூல்களுக்கான விலையை முறையாக நிர்ணயம் செய்வது எனச் சிறந்த வழிகாட்டுதல்களைக் கொண்ட நிகரற்ற ஆவணமாகவே இதனைக் கருதுகிறேன்.

நூல் கொள்முதலை ஆண்டுமுழுவதும் செயல்படுத்தும் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. அதிலும் வாசகர்கள் விரும்பும் நூல்களைக் கொள்முதல் செய்து நூலகத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்பது சிறப்பானது. இது போன்ற நடைமுறை தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் நூலகம் இதற்குச் சிறந்த உதாரணம்.

இது போலவே நோபல் பரிசு, புக்கர் பரிசு மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள், அரசு வெளியீடுகள் மற்றும் ஆவணப் பதிப்புகள் உள்ளிட்டவை தேர்வுக்குப் பரிந்துரை செய்வது, ஒவ்வொரு நூலகத்திலும் உள்ள வல்லுநர்கள் குழு, நூலகர்கள், வாசகர் வட்டத்தினர் இணைந்து புத்தகங்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ஆவணத்தின் மூலம் நூலகத்துறை தனது இலக்குகளைத் தெளிவாக வகைப்படுத்தியுள்ளது. தெளிவான, வெளிப்படையான இந்த ஆவணம் தனக்கான பிரதான இலக்குகளைச் சரியாக வரையறுத்துள்ளது. இந்தக் கொள்கை முழுமையாகச் செயல்படுத்தபட்டால் பதிப்புத்துறையும் நூலகத்துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பது உண்மை.

தமிழக நூலகத்துறையின் வரலாற்றில் இந்த ஆவணம் ஒரு மைல்கல் என்றே சொல்வேன்.

சிறப்பான இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் IASக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2024 19:22

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.