S. Ramakrishnan's Blog, page 43

February 14, 2024

கோனேரி ராஜபுர ஓவியங்கள்

கோனேரி ராஜபுரம் சென்றிருந்தேன். திருநல்லம் என்பது அதன் பழைய பெயர். அங்குள்ள பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் மிகப்பெரியது. பேரழகு மிக்கது. செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாகக் கட்டினார் என்கிறார்கள். கோவிலிலுள்ள இறைவியின் பெயர் அங்கவள நாயகி. எவ்வளவு அழகான பெயர்.

கும்பகோணம் – காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரைக் கடந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் பயணம் செய்தால் கோனேரி ராஜபுரம் அடையலாம். சாலைவழியெங்கும் நாணல் பூத்திருந்தன. இளவெயிலின் முணுமுணுப்பு. மண்சாலைகளுக்கு உள்ள நினைவு தார்ச் சாலைகளுக்குக் கிடையாது.

கோவிலின் முகப்பு மண்டப விதானத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை முறையான பராமரிப்பின்றி உதிர்ந்த நிலையில் உள்ளன. கோவில் சார்ந்த தொன்மம் மற்றும் புராணக் கதைகள், கோவிலின் விழாக்களைச் சித்தரிக்கும் காட்சிகள்  ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில் ஒன்றாக ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி ஒரு ஓவியத்தை வேறு கோவில் எதிலும் நான் கண்டதில்லை.

நான்கு ஆங்கிலேயர்கள் தலைதொப்பி அணிந்து நீண்டவாளுடன் நிற்கிறார்கள். அவர்களின் உடை மற்றும் கழுத்துப்பட்டி நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிரே தட்டில் சந்தனம், பன்னீர் சொம்பு, வெற்றிலை பாக்கு காணப்படுகின்றன. அவர்களை வரவேற்கும் விதமாகச் சதிராடும் பெண் ஒருத்தி நடனமாடுகிறார். தலைப்பாகை அணிந்தவர் முகவீணை வாசிக்க, இன்னொருவர் சின்னமேளம் அடிக்க, மற்றொருவர் கைத்தாளம் போடுகிறார்.

கோனேரிராஜபுரம் ஓவியங்களை 1916-ஆம் ஆண்டுத் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் பிள்ளை தீட்டியதாகவும், பின்னர் 1935-ஆம் ஆண்டுத் திருவாவடுதுறை வர்ணக்காரர் மாசிலாமணி தீட்டியதாகவும் வரலாற்று ஆய்வாளர் இரா.நாகசாமி குறிப்பிடுகிறார்.

இக்கோவிலின் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்து ஆய்வாளர் எழில்ஆதிரை செம்பியன் மாதேவி மலைக்கோயில்கள் என விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

வண்ணக்காரன் என்று ஓவியரை அழைப்பது பொருத்தமானது. டெம்பரா ஓவிய முறையில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் தனித்துவமாக வண்ணங்களை உபயோகித்துள்ள விதமும் முகபாவங்களும் அபாரமான அழகுடன் காணப்படுகின்றன.

நடனமாடும் பெண் திருவிடைமருதூர் ருக்மணி என்றும், நாதஸ்வர வித்துவான்களாக அம்மாபேட்டை பக்கிரி மற்றும் மன்னார்குடி சின்ன பக்கிரி என்றும் இணையத்தில் செய்தி காணப்படுகிறது. உறுதியான தகவல் தானா என்று தெரியவில்லை.

நாயக்க மன்னர்களின் காலத்தில் தான் தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் இயற்கை வண்ண நீர் கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து அதனைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள்.. சிவப்பு, மஞ்சள், கறுப்பு, , நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே இதில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன..

Around India with a Movie Camera என்றொரு ஆவணப்படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். அதில் இது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோவில் முன்பாக ஆங்கிலேய அதிகாரிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சதிர் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சதிராடும் பெண்களின் கம்பீரமும் அதைக் காணும் கிராமவாசிகளும் , உள்ளூர் பிரமுகரின் பருத்த தோற்றமும், இந்த வரவேற்பை விநோதமாகக் காணும் பிரிட்டிஷ் குடும்பத்தின் இயல்பையும் அந்த ஆவணப்படத்தில் காண முடிந்தது. அதே நிகழ்வின் மறுவடிவம் போலவே கோனேரி ராஜபுர ஓவியம் காணப்படுகிறது. ஆங்கிலேயர்கள் கோவிலில் அளிக்கபடும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் தோற்றத்தைக் காணும் போது அன்றைய உள்ளூர் பிரமுகர்கள் எவ்வளவு அடிபணிந்து போயிருக்கிறார்கள், அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஓவியத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் உடல் அமைப்பும் முகபாவமும் அதில் வெளிப்படும் உணர்ச்சிகளும் துல்லியமாக வரையப்பட்டுள்ளன. குறிப்பாகச் சதிராடும் பெண்ணின் பின்னால் உள்ள பெண்களின் வெறித்த பார்வையைப் பாருங்கள். சற்றே தலை தாழ்த்தி நிற்கும் ஆங்கிலேயர்களின் பாவனையைப் பாருங்கள். அபாரம்

ஓவியத்திலுள்ள கடிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. கோவில் சுவரில் காணப்படும் அந்தக் கடிகாரம் காலமாற்றத்தின் அடையாளம். கோவிலுக்குள் எப்போதுமே காலமயக்கம் ஏற்படுகிறது. அல்லது காலம் கோவிலுள் நழுவி விடுகிறது. நாம் காணும் சிற்பங்களும் ஓவியங்களும் உடனடியாக நம்மைப் பின்னோக்கி நகர்த்திக் கடந்தகாலத்தினுள் நீந்தச் செய்கின்றன. கோவிலின் கோபுரம் என்பது காலமற்றது. அதன் நிழல் என்னை எப்போதும் வசீகரிக்கக்கூடியது.

அந்தக் கால முகங்களுக்கு என்று விசேச அழகிருக்கிறது. இந்தக் கோவிலில் காணப்படும் வேறு சில ஓவியங்களில் அப்படியான விசித்திர முகங்களைக் கண்டேன். பணிந்து கைகூப்பி நிற்கும் துறவியின் சித்திரத்தை விட்டுக் கண் அகலமுடியவில்லை.

தொலைதூரத்திலிருந்து கேட்கும் ரேடியோ பாடல் தற்காலத்திற்குள் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. மனம் வேறுகாலத்தில் வேறு உணர்வில் மயங்கிச் சரிந்து கொண்டிருந்தது. கலை தரும் மகிழ்ச்சியை வேறு எதனாலும் ஈடு செய்துவிட முடியாது. கோவில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு கால அடுக்குகள் கொண்டிருக்கிறது. சங்கீதமும் சிற்பங்களும் ஓவியங்களும் பிரிக்கமுடியாத இழையால் இணைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. வெறும் பாத்திரத்தில் பாலை நிரப்பியது போல என்றொரு வரி மனதில் தோன்றியது.

ஆமாம். அப்படி தானிருந்தேன்.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2024 05:44

February 13, 2024

சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன்.

ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் தலைப்பு ஏ.கே.ராமானுஜன் வைத்தது.

இந்தக் கவிதைகளைப் பற்றி ராமானுஜத்தின் மகன் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்

“1971 ஆகஸ்டில் ஒரு நாள் எனது தந்தை, ஏ.கே. ராமானுஜன், மெஸ்கலின் என்ற போதை மருந்து காப்ஸ்யூலை எடுத்துக் கொண்டார். அதில் மயக்கமாகி உறங்கிவிட்டார். . கண்விழித்த போது குழப்பமான மாயத்தோற்ற விளைவுகள் ஏற்பட்டன. அவர் மிகுந்த உணர்ச்சிகரமான மனநிலையைக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தைத் துண்டு துண்டான கவிதைகளாக எழுதினார். ஆற்றில் கலக்கும் துணை நதிகள் போல அவரது எழுத்து தனக்கான ஒரு ரகசிய பாதையைக் கண்டுபிடித்தது, அப்படித் தான் சோமாவின் கருப்பொருளில் தொடர்ச்சியான கவிதைகளை எழுதத் துவங்கினார் “.

இந்தத் தொகுப்பில் அவரது நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 1982 இல் சிகாகோவில் மலையாளக் கவிஞர் கே. ஐயப்ப பணிக்கருக்கும் ஏ.கே.ராமானுஜனுக்கும் இடையே நடந்த நேர்காணலது. ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணல் நீண்டகாலமாகப் பணிக்கரின் பாதுகாப்பில் இருந்திருக்கிறது. அதைத் தேடி எடுத்து அச்சிட்டிருக்கிறார்கள்.

இந்த நேர்காணலில் இரண்டு மொழிகளில் எழுதுவது குறித்தும் அவரது ஆங்கிலக் கவிதைகள் குறித்தும் ராமானுஜன் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தியாவிலிருந்தபடி ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் வேறுபாடு உள்ளதா என்று பணிக்கர் கேட்கிறார். தான் அப்படி உணரவில்லை எனும் ராமானுஜன் அமெரிக்கா சென்ற பிறகுத் தனது கவிதைகளை நிறையத் திருத்தம் செய்து மேம்படுத்தியதாகச் சொல்கிறார்.

சோமா அவரது பரிசோதனைக் கவிதைகளின் தொகுப்பு. சோமா என்பது வானுலகின் தாவரம். அதிலிருந்தே சோமபானம் தயாரிக்கபடுகிறது. வேத இலக்கியங்கள் அமுதமான சோமாவைக் கொண்டாடுகின்றன சோமா மனதைக் கட்டுப்படுத்தும் மருந்தாக அறியப்படுகிறது. கடவுள்களின் மதுவான சோமா, புலன் மயக்கத்தையும் உச்சநிலை பரவசத்தையும் உருவாக்கக் கூடியது. சோமா அமரத்துவத்தைத் தர வல்லதாகவும் கருதப்படுகிறது

சோம பானம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. அது போலவே ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழுமையும், சோம பானம் தயாரிக்கும் முறையை விவரிக்கிறது/ இது போலவே சோமம் குறித்த பல்வேறு துதிப்பாடல்களையும் காண முடிகிறது.

ஏ.கே.ராமானுஜனின் சோமா கவிதைகள் எழுபதுகளில் எழுதப்பட்டவை . அவர் சோமாவை நவீன வாழ்வின் குறியீடாகக் கொள்கிறார். இதிலுள்ள 22 கவிதைகளும் சோமாவை வெவ்வேறு வழிகளில் அவருடன் தொடர்புபடுத்துகின்றன. குறிப்பாக இக்கவிதைகளில் சோமாவை அவர் அழைக்கும் விதமும் தொடர்பு படுத்தும் புள்ளியும் ஆச்சரியமளிக்கின்றன .நம்மாழ்வார் பாடலை தனது கவிதையுடன் அவர் இணைக்கும் விதம் அபாரமானது.

Soma, I said, is no Siva.

Yet Siva is sometimes Soma,

Soma, I said, is no Visnu

But Visnu can play Soma,

enter the nests of flesh

to make them sing…

தனது கட்டுரை ஒன்றில் இளமைப்பருவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ராமானுஜன் இப்படிக் குறிப்பிடுகிறார்

As we grew up Sanskrit and English were our father-tongues and Tamil and Kannadaour mother-tongues. The father-tongues distanced us from our mothers, from ourchildhoods, and from our villages and many of our neighbours in the cowherd colonynext door. And the mother-tongues united us with them. It now seems appropriate that our house had three levels: a downstairs for the Tamil world, an upstairs for the English and the Sanskrit, and a terrace on top that was open to the sky where our father could show us the stars and tell us their Sanskrit Names.

வெளிநாட்டில் வசிக்கும் போது தாய்மொழியில் எழுதுவதற்கான தூண்டுதலையும் தாய்மொழியில் கற்றத்தின் நினைவுகளையும் எழுப்புவதற்குச் சோமா துணை நிற்பதாக ராமானுஜன் கருதுகிறார். அந்த வகையில் இக்கவிதைகள் அவரது நினைவின் ஆழத்திலிருந்து வெளிப்படும் விசித்திர மலர்களே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2024 00:30

February 9, 2024

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது

இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2024 23:11

கே.ஜி, ஜார்ஜ் நினைவு மலர்

மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2024 23:05

February 5, 2024

மரங்களின் கடல்

புதிய சிறுகதை

நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்..

அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். அவனது மூன்று உயரதிகாரிகளும் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிடுவார்கள். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க மாட்டார்கள். எவ்வளவு நெருக்கடியிலும் கடுஞ்சொல் பேச மாட்டார்கள். ஒரு நாளில் நூறு முறை நன்றி சொல்வார்கள்.

அவர்களின் அலுவலகம் ரெயின்போ டவர்ஸின் பனிரெண்டாவது தளத்தில் இயங்கியது. இருநூறு பேருக்கும் மேலாக வேலை செய்தார்கள். ஆனால் அலுவலகத்தில் ஆள் நடக்கிற சப்தம் கூடக் கேட்காது. அறைச்சுவர்களின் வண்ணம் துவங்கி சுவரோவியங்கள். தொட்டிச் செடிகள் வரை மிகுந்த தனித்துவத்துடன் இருந்தன.

அலுவலகத்தின் நடுவே பெரிய கற்பாறை ஒன்றை வைத்திருந்தார்கள். பணி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது அந்தப் பாறையைச் சுற்றி அமர்ந்து கொண்டு விவாதிப்பார்கள். பிரச்சனையைத் தீர்க்க வேண்டியவர் பாறையைத் தொட்டுக் கொண்டு பேசுவதுண்டு.

வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு மனவளப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் முதன்மையானது. மலர் காணுதல். ஆளுக்கு ஒரு மலரைக் கையில் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அந்த மலரைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு மலரை எவ்வளவு நேரம் கண் அகலாமல் பார்க்க முடியும். ஐந்து நிமிஷங்களே அதிகம். ஆனால் முப்பது நிமிஷங்கள் மலரைப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லுவார்கள்.

இந்தப் பயிற்சியின் ஆரம்பக் காலங்களில் மலரை பார்த்தவுடன் அதன் வாசனை, எதைப் போலிருக்கிறது என்ற எண்ணம். இது போன்ற மலரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற நினைவுகளே மேலிடும். பின்பு அது மெல்ல வடிந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக மலர் மறைந்து அதன் வாசம் விலகி அதன் நிறமும் வடிவமும் தெரியத் துவங்கும். பின்பு அதுவும் மறைந்து போய்க் காற்றில் லேசாக மலர் அசைவதும் நிற்பதும் புலனாகும். அதுவும் கடந்து போய்ப் பின்பு மலர் என்பது காலத்தின் இதழ்கள் என்பது போலிருக்கும். பின்பு அதுவும் மறைந்து நிலையாமை தான் மலராக உருக்கொண்டிருக்கிறது என்பதை உணர நேரிடும்.

நரேந்திரன் அது போன்ற நேரத்தில் மலரை அல்ல தனது மனதைக் கவனிக்கவும் பழக்கவும் துவங்கினான். ஆழ்ந்து அவதானித்த பிறகு மலர் மெல்ல அவன் முன்னாலிருந்து இடம் மாறி மனதிற்குள் வந்துவிடும். மனதிற்குள் வந்துவிட்ட மலர் வாடுவதேயில்லை.

ஜப்பானிலிருந்து வந்திருந்த அவர்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுகுரு மசூடா ஒரு முறை அவர்களிடம் சொன்னார்

“உதிர்ந்த மலர்கள் தான் வண்ணத்துப்பூச்சிகளாக மறுபிறப்புக் கொள்கின்றன. அதனால் தான் அவை மலர்களைச் சுற்றிவருகின்றன என்பது எங்களின் நம்பிக்கை. கிளைக்குத் திரும்பிவிடும் மலர் தான் வண்ணத்துப்பூச்சி என்றொரு கவிதையிருக்கிறது. “

கவித்துவமான அவரது கற்பனையை நரேந்திரன் ரசித்தான்.

இது போலவே மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்திச்சூரியனை ரசிப்பதற்கும், டம்ளரில் உள்ள தண்ணீரை ஒவ்வொரு சொட்டாக எடுத்து இன்னொரு டம்ளருக்கு மாற்றும் பயிற்சியும் அவர்களுக்கு அளித்தார்கள். இந்தப் பயிற்சிகளில் அவன் மிகுந்த விருப்பத்தோடு ஈடுபட்டான். எளிமையான மனவளப்பயிற்சிகள் அவன் வயதை கரைத்து பால்யத்திற்குள் அழைத்துச் செல்வதை உணர்ந்தான். ஆனால் அவனது அலுவலகத்தில் பலருக்கும் இது போன்ற பயிற்சிகள் பிடிக்கவில்லை. தனிப்பட்ட பேச்சில் அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கேலி செய்தார்கள்.

••

அயோகிகஹாரா என்பதற்கு மரங்களின் கடல் என்று பொருள் என்றார் கானக வழிகாட்டி மசாயா கிச்சினே.

பச்சை நிற தொப்பி அணிந்திருந்தார். சிறிய உதடுகள். நாற்பது வயதுள்ளவர் போலத் தோற்றம் கொண்டிருந்தார். ஆனால் அவரது உண்மையான வயது எழுபத்தியாறு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் காட்டிற்குள் சுற்றிவருகிறார். தற்கொலை செய்து கொண்டு இறந்தவரின் உடலை மீட்கும் பணியைச் சேவையாகவும் செய்து வருகிறார்.

ஃபூஜி எரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அயோகிகஹாரா மரங்கள் அடர்ந்து அமானுஷ்யமான அமைதி கொண்டிருந்தது.

“இந்தக் காட்டில் எரிமலைக் குழம்புகள் உறைந்து போயிருப்பதால் காந்த சக்தியிருக்கிறது. ஆகவே திசைகாட்டிகள் செயல்படாது“ என்றார் மசாயா

“நாம் டிரக்கிங் போகப்போகிறோமா“ என்று கேட்டாள் ஹரணி.

“இல்லை“ என மறுத்து தலையாட்டியபடியே மசாயா ஆளுக்கு ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினார்.

“இதை கையில் கட்டிக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் காட்டிற்குள் எங்கேயிருக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டறிய முடியும். மூன்று நாட்கள் காட்டிற்குள் நீங்கள் தனியே சுற்றிவர வேண்டும். எந்தத் தொடர்பு சாதனமும் எடுத்துச் செல்லக்கூடாது. உங்களுக்கு உணவு வழங்கப்படாது. குடிநீர் வழங்கப்படாது. நீங்களாக உணவையும் குடிநீரையும் தேடிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் கடிகாரத்தின் சிவப்பு வட்டத்தை அழுத்தினால் நாங்கள் மீட்டுவிடுவோம். இது உங்களை நீங்களே கண்டறியும் பயிற்சி. ஆகவே மகிழ்ச்சியோடு ஈடுபடுங்கள்.“

என்று உற்சாகமாகப் பேசினார்.

நரேந்திரனும் அவனது நண்பர்களும் கைதட்டினார்கள். ஆனாலும் மனதிற்குள் அவர்கள் சினிமாவில் பார்த்திருந்த காடும் அதன் திகில் காட்சிகளும் வந்து போயின

“இந்தக் காட்டில் சிங்கம் புலியிருக்கிறதா“ எனக்கேட்டான் பாலசிவம்.

“கரடி மான், நரி, பன்றி, காட்டுமுயல், அணில், மரங்கொத்தி போன்றவை இருக்கின்றன“ என்றார் மசாயா

“வேறு என்ன சிறப்பு“ எனக்கேட்டாள் ஸ்வேதா.

“அதிசயமான வண்ணத்துப்பூச்சிகள் நிறைய இருக்கின்றன. மேல்புறத்தில் கரும்புள்ளிகளுடன் ஆழமான ஆரஞ்சு நிறம் கொண்ட ஃப்ரிட்டில்லரி வண்ணத்துப்பூச்சிகளை நிறையக் காணலாம். அதிர்ஷடமிருந்தால் வண்ணத்துபூச்சி உங்களை முத்தமிடும் “

“ஏன் இந்தக் காட்டில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்“ என்று கேட்டான் ஸ்ரீதரன்.

“இதன் அழகும் அமைதியும் தான் காரணம் என்கிறார்கள். எனக்கு என்னவோ பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்திக்க முடியாதவர்களே தற்கொலை செய்வதாகத் தோன்றுகிறது. சென்ற ஆண்டில் 105 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதில் மார்ச் மாதம் அதிகம் நடந்துள்ளது “ என்றார் மசாயா

“இப்போது மார்ச் மாதம் தானே“ என்று கேட்டான் ஸ்ரீதரன்..

அவர் சிரித்தபடியே “உங்களுக்கு ஏதேனும் கடன்பிரச்சனை இருக்கிறதா“. என்று கேட்டார் மசாயா

ஸ்ரீதரன் சிரித்தபடியே இல்லை என்று தலையாட்டினான்.

“அழகு தற்கொலையைத் தூண்டுமா“ என்று கேட்டான் நரேந்திரன்

“அழகின் உச்சத்தை நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள். அது ஆபத்தானது. அழகின் நாவு தீண்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். வரலாற்றில் அப்படியான சம்பவங்கள் நிறைய இருக்கிறதே“ என்றார் மசாயா

“என்னால் நம்ப முடியவில்லை“. என்றான் நரேந்திரன்

“நெருப்பும் நீரும் தான் உலகின் நிரந்தரஅழகிகள். அவை நம் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதில்லை“என்று புன்னகை செய்தார் மசாயா.

••

அவர்கள் பத்து பேரும் சாகச மனநிலையில் அயோகிகஹாரா காட்டிற்குள் ஆளுக்கு ஒரு பக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள். அடர்த்தியாக மரங்கள் உயர்ந்திருந்தன. சூரிய வெளிச்சம் தரையிறங்கவில்லை. பச்சைமணம் நாசியில் ஏறியது. அரை மணி நேரம் நடந்தபிறகு எந்தப் பக்கம் போவது என்று அவனுக்குத் தெரியவில்லை. கால்கள் அழைத்துச் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தான்.

இரண்டு மணி நேரத்தின் பின்பு பசி எடுத்தது. என்ன சாப்பிடுவது. வேட்டையாட வேண்டுமா. எதை வேட்டையாடுவது. எந்த ஆயுதமில்லையே என்று குழப்பமாக இருந்தது. திடீரெனக் காடு திறந்த வெளி உணவகம் போலத் தோன்றியது.

மீன்களைப் பிடிப்பது எளிது என்று நினைத்து நீரோட்டத்தைக் கண்டறிந்து கற்களைக் கொண்டு மீன்பிடிக்க முனைந்தான். ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடியவில்லை. தனது ஏமாற்றத்தை யாரிடம் காட்டுவது என்றும் தெரியவில்லை.

சட்டென வெயில் மறைந்து மேகம் இருண்டது. சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கே செல்வது எனத் தெரியவில்லை. மரத்தடியில் ஒதுங்கி நின்றான். காற்றும் மழையும் சேர்ந்து கொண்டது. மழையின் சீற்றம் அவனை அச்சப்படுத்தியது. இதுவரை பசுமையின் சின்னமாக இருந்த மரங்கள் இப்போது அச்சத்தின் உருவங்களாக மாறியிருந்தன. மழைவிட்டபிறகு அவன் பசி தாங்க முடியாமல் ஒரு கல்லை கூர்மையாக்கினான். ஏதாவது ஒரு விலங்கை வேட்டையாட வேண்டும். தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ண வேண்டும் என்று நினைத்தான். எவ்வளவு அலைந்த போதும் ஒரு விலங்கும் கண்ணில் படவில்லை. தாகம் அதிகமானது. ஒடும் தண்ணீரை அள்ளிக் குடித்தான்.

ஒரு மரத்தடியில் இளமஞ்சள் நிறத்தில் பேரிக்காய்கள் போல உதிர்ந்து கிடந்தன. அது என்ன பழம் என்று தெரியவில்லை. ஆனால் அதை எடுத்து வேகமாகச் சாப்பிட்டான். லேசான கசப்பாக இருந்தது.

அந்தி வெளிச்சம் மறைந்து இரவு வந்தது. விளக்கு வெளிச்சத்திற்காக அவன் ஏங்கினான். எங்கே உறங்குவது எனத் தெரியவில்லை. பெயர் அறியாத பூச்சிகளின் சப்தம் காட்டின் உன்னதச் சங்கீதமாக ஒலித்தது. ஏதாவது மரத்தில் ஏறிக் கொண்டு உறங்கலாமா என்று நினைத்தான். அவனால் மரமேற முடியவில்லை.

பாறை ஒன்றைத் தேடி கண்டுபிடித்து அதன் மீதேறி படுத்துக் கொண்டான். குளிர்ச்சி அவன் உடல் நரம்புகளில் ஊடுருவி வதைத்தது. காட்டு விலங்குகள் தன்னைத் தாக்கிவிடுமோ என்ற பயம் அவனுக்குள் அதிகமானது. போதும் எனச் சிவப்புப் பொத்தானை அமுக்கி வெளியே ஒடிவிடலாம் என்று நினைத்தான். நடந்த அசதியும் களைப்பும் அவனை அறியாமல் உறக்கத்தில் ஆழ்த்தியது.

திடீரென்று பின்னிரவில் விழித்துக் கொண்டான். வானிலிருந்து அபூர்வமான வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒளிரும் வானைக் காணும் போது அழ வேண்டும் போலிருந்தது. இரண்டு நட்சத்திரங்கள் ஒடி விளையாடிக் கொண்டிருந்தன. விடிகாலையில் அவன் எழுந்து கொண்ட போது தனது இயலாமைகள் குறித்து ஆழமான குற்றவுணர்வு கொண்டிருந்தான். அவனது படிப்பு அவனைக் கைவிட்டிருந்த்து. அவனது பணம் அவனைக் கைவிட்டிருந்தது. உள்ளுணர்வும் உடலின் வலிமையும் மட்டுமே அவனை இயக்கியது.

முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் அவன் சற்று அச்சமின்றி நடந்தான். வழியில் மரத்தில் தாவியோடும் அணில் ஒன்றைக் கண்டான். அதன் கண்களில் பயமில்லை. இரண்டாம் நாளில் அவன் சட்டையைக் கழட்டி அதைக் கொண்டு மீன்பிடிக்கப் பழகியிருந்தான். கற்களை உரசி நெருப்பை மூட்டினான். அது ஏதோ சாகசச் செயல் போலிருந்த்து. மரத்திலிருந்த பறவைகள் ஒலி எழுப்பும் போது உன்னிப்பாகக் கவனித்தான். உலர்ந்த சருகுகள் காற்றில் எழுப்பும் ஒசையின் ரகசியம் அறிந்து கொண்டான்.

வீழ்ந்து பாசிபடிந்து கிடந்த மரங்கள் விநோதச் சிற்பங்கள் போன்றிருந்தன. யாரோ விட்டுச் சென்றிருந்த கிழிந்த சிவப்பு தொப்பி ஒன்றை கண்டெடுத்து அணிந்து கொண்டான். அது அவனுக்கு அவனே பரிசளித்துக் கொண்டது போலிருந்தது.

காட்டிற்குள் நடக்க நடக்க இன்னொரு மனிதனின் சப்தம் கேட்டுவிடாதா என்று ஏக்கம் அதிகமானது. ஒரு மரத்தடியில் மஞ்சளும் சிவப்புமாக நூறு பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அபூர்வமான காட்சியைக் கண்டான். மனம் விம்மியது. இப்போது மணி எவ்வளவு என்று தெரியவில்லை. பகலும் இரவும் இரண்டு துண்டுகள் மட்டுமே. நத்தை ஊர்வது போலப் பகல் நகர்ந்து கொண்டிருந்தது. காட்டின் இயக்கம் ரகசியமானது. புதிரானது. எனத் தோன்றியது

அன்றிரவு சிறிய குகை போலிருந்த இடத்தினைக் கண்டுபிடித்து அதற்குள் தங்கினான். பசியில் உறக்கம் வரவில்லை. தொலைதூரத்திலிருந்த வீடும் அவனது படுக்கையும் நினைவிற்கு வந்தது.

மூன்றாம் நாள் அவன் காட்டில் எதையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தரையை மட்டுமே பார்த்தான். மெதுவாக நடந்தான். பாறையடியில் நீலநிற பறவை முட்டைகளைக் கண்டறிந்தான். மூலிகை செடிகளைப் பார்த்தான். ஒடிந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்து ஊன்று கோலாக மாற்றிக் கொண்டான். வனத்தை வீடாக்கி கொள்வது எளிதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. பசி தாகம் தூக்கம் மூன்று மட்டுமே அவனை இயக்கியது. மூன்று நாட்களாக அவனது பெயரைச் சொல்லி ஒருவர் கூட அழைக்கவில்லை. இந்தப் பெயர் எதற்கு என்று அவனுக்கே புரியவில்லை.

காட்டில் நடக்கும் போது வழியில் கிடந்தகல் ஒன்றை காலால் எத்தித் தள்ளினான். அது சரிவில் போய் விழுந்தது. இந்தக் கல் எத்தனை ஆண்டுகள் இதே இடத்தில் கிடந்ததோ. அது இடம் பெயர்வதற்கு தான் தனது இந்தப் பயணம் ஏற்பட்டதோ என்று தோன்றியது.

காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து அவன் பாலத்தைக் கண்டுபிடித்தான். மூங்கில் பாலமது. அந்தப் பாலத்தின் நடுவே உறங்குவது என்று முடிவு செய்தான். அந்த இரவில் மேகங்களைத் துரத்திக் கொண்டு வானில் பறந்து கொண்டிருப்பது போல அவனுக்கு ஒரு கனவு வந்தது.

விடிகாலையில் அவனது வழிகாட்டி மசாயா அவனைக் கண்டுபிடித்திருந்தார். அவர்களின் கூடாரத்திற்கு அழைத்துச் சென்று தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்தார். அவன் கொஞ்சம் தேநீர் மட்டும் குடித்தான். அவனைத் தவிர மற்ற ஒன்பது பேரும் இரண்டாம் நாளிலே காட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள். அவன் ஒருவன் மட்டுமே மூன்று நாட்களை கானகத்தில் கழித்திருக்கிறான்.

“எப்படியிருந்தது கானக அனுபவம்“ என மசாயா கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. சிறிய புன்னகை மட்டுமே செய்தான்.

மறுநாள் அவர்களுக்கு நகரின் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய மதுவகைகள். கடல் உணவுகள். மறுநாள் புறப்படும் போது பரிசுப்பை ஒன்றும் அளிக்கபட்டது. இவை எதுவும் அவனை மகிழ்ச்சிபடுத்தவில்லை. முறிந்த கிளை போலாகியிருந்தான்.

விமானத்தில் வரும் போது அவனை அறியாமல் மரங்களின் கடல் மரங்களின் கடல் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

விமானம் சென்னையில் தரையிறங்கும் போது “பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேலையை விட்டுவிடலாம்“ என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது. வேலையை விட்டுவிட்டு என்ன செய்வது என்ற கேள்வியே எழவில்லை. அது சரியான முடிவு தான் என்பது போலத் தனக்குதானே தலையசைத்துக் கொண்டான்.

அப்போது வழிகாட்டி மசாயாவின் சிரித்த முகம் மனதில் தோன்றி மறைந்தது.

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2024 02:54

February 4, 2024

ரஷ்ய வெளிச்சம்

‘மாஸ்கோவின் மணியோசை’  வாசிப்பனுபவம்.

ரம்யா ரோஷன்

ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும்.

நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த கவனம் தமிழில் உருவாகி வளர்ந்ததற்கும் அவர் ஒரு முக்கிய காரணம்.

‘மாஸ்கோவின் மணியோசை’ – சென்ற புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்.இதில் ரஷ்ய படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய 30 கட்டுரைகள் உள்ளன.

நாம் ஏன் ரஷ்ய எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும்? – முன்னுரையில் :

//உலகின் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி யார் பட்டியலிட்டாலும் முதல் ஐந்து இடத்திற்குள் ரஷ்ய எழுத்தாளர்களே இடம்பெறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள் குறித்துப் பேசியவர்கள். வறுமை, பசி, காமம், பிரிவு, காதல், மரணம் போன்ற என்றும் மாறாத விசயங்களைப் பற்றி ஆழ்ந்து விவாதித்தவர்கள், புதிய பார்வையை வெளிப்படுத்தியவர்கள்.

குற்றம், வெறுப்பு, துரோகம், பேராசை போன்ற மனித இருண்மைகளை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள், அரசு, அதிகாரம், மதம், சமூக வேறுபாடுகள் குறித்து உரத்த கேள்விகளை எழுப்புகிறார்கள். எளிய மனிதர்களின் துயரங்களை, சந்தோஷங்களைப் புரிந்து கொண்டு எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அன்பின் வெளிச்சத்தை உயர்த்திப்பிடிக்கிறார்கள். இந்தச் சிறப்புகளால் தேசத்தின் ஆன்மாவாக ரஷ்ய எழுத்தாளர்கள் விளங்குகிறார்கள். இந்தப் புரிதல் தான் தன்னை மீண்டும் மீண்டும் ரஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசவும் எழுதவும் வைக்கிறது என்கிறார் எஸ். ரா அவர்கள்.//

இந்த புத்தகம் முழுவதும் டால்ஸ்டாய்,தஸ்தாயெவ்ஸ்கி,செகாவ்,இவான் தூர்கனே என மகத்தான படைப்பாளிகளை பற்றிய கட்டுரைகள்….பல வித்தியாசமான நூல்கள்,திரைப்படங்கள், நிகழ்வுகள் …. எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வெளியிட சந்தித்த அவதிகள்… நடுவே செகாவின் ஒரு அழகிய சிறுகதை. புஷ்கினில் துவங்கி இன்றைய வேரா பாவ்லோவா வரையிலான கவிஞர்கள்..

தஸ்தாயெவ்ஸ்கி ரசிகர்களுக்கு இது ஒரு முக்கியமான புத்தகம். அவரை பற்றி மட்டுமே அற்புதமான நான்கைந்து கட்டுரைகள் உள்ளன.குற்றமும் தண்டனையும் பற்றிய சில விளக்கங்கள் அருமை.

//எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதைத் தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்துகொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து தூஷிக்கப்பட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளர் அவர்.நெருக்கமான மனிதர்களின் மரணமும் வறுமையும் நோயும் நிழலைப் போல அவரது வாழ்வில் பின்தொடர்ந்தன.//

கார்க்கியின் ‘தாய்’ எல்லோருக்கும் தெரியும். அவரின் பாட்டியையும் தெரிந்து கொண்டேன்.கார்க்கியின் கதைகளில் வரும் தைரியமான பெண் கதாபாத்திரங்கள்.. வாழ்க்கை நெருக்கடிகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதம் கஷ்டமும் போராட்டமுமான அன்றாட வாழ்க்கையின் நடுவேயும் உணவும் நடனமும் இசையுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் யாவும் பாட்டியின் வழியே அவருக்குக் கிடைத்த வளங்கள் என தெரிந்து கொண்டேன்.

அலெக்சாண்டர் குப்ரின் மற்றும் ஜி நாகராஜன் இருவருக்குமான ஒற்றுமை நன்று.

எழுத்தின் நுட்பங்களை அறிந்து கொள்ள எழுத்தாளனையும் அவனது புற,அக சூழல்களையும் அது உருவாக்கும் பாதிப்புகளையும் அறிந்து கொள்வது அவசியம் அல்லவா?எனில் அவசியம் இந்த நூலை வாசியுங்கள்.

வேதனைகளைக் கணக்கிடும் மனிதன் சந்தோஷங்களை ஒருபோதும் கணக்கிடுவதேயில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இனியாவது சந்தோசங்களை கணக்கெடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.

****

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2024 22:33

திருவாரூர் புத்தகத் திருவிழாவில்

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை மாலை திருவாரூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2024 22:20

February 1, 2024

சர்வதேச இலக்கிய விழாவில்

கேரளாவில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்ள நாளை ( பிப்ரவரி 2) திருச்சூர் செல்கிறேன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2024 00:38

January 31, 2024

தண்ணீரைத் தேடி

The Naked Island படத்தில் தொலைதூரத் தீவு ஒன்றில் வாழும் ஆணும் பெண்ணும் விவசாயம் செய்கிறார்கள்

கடலின் உப்பு நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாது என்பதால் நல்ல தண்ணீரைத் தேடி தீவின் மறுகரைக்குச் செல்கிறார்கள். வாளிகளில் தண்ணீரைச் சேகரித்து, தங்கள் தீவுக்குக் கொண்டு வருகிறார்கள். பாறைவெடிப்புகளுக்குள் நீளும் பாதையில் தண்ணீர் வாளிகளைக் கொண்டு செல்கிறார்கள். கிட்டத்தட்ட முதுகுத்தண்டு உடைந்துவிடுமளவு கடினமான பணி.

அந்தப் பெண் இரண்டு பக்கமும் இரண்டு தண்ணீர் வாளிகளைச் சுமந்தபடி உயரமான பாதையில் நடந்தேறுகிறாள். இந்தக் காட்சியில் கேமிரா அவள் கூடவே பயணம் செய்கிறது. அவளது நடையின் தடுமாற்றம். கடினமான பாறைகளுக்குச் செல்லும் சிறிய பாதை. சூரிய ஒளி அவள் முகத்தில் பட்டு தெறிக்கும் விதம். அவள் ஒவ்வொரு அடியையும் உறுதியாக, கவனமாக எடுத்து வைக்கிறாள். அவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை நீண்டு செல்லும் அந்தக் காட்சி உணர்த்திவிடுகிறது.

தீவுப் பெண்ணாக நடித்திருப்பவர் இயக்குநர் ஷிண்டோவின் மனைவி நொபுகோ ஒட்டோவா. ஷிண்டோ மற்றும் நொபுகோ இறந்த போது அவர்களின் சாம்பல் இந்தத் தீவில் தூவப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் வசனமே கிடையாது. இசையும் கதபாத்திரங்களின் உடல்மொழியும் இணைந்து புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. சுகுனே என்ற சிறிய தீவில் படமாக்கியிருக்கிறார்கள். பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு.

1960ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர்க் கனெட்டோ ஷிண்டோ. இவர் Children of Hiroshima என்ற அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார். இது ஜப்பானின் சிறந்த செவ்வியல் திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

The Naked Island படம் ஹிரோஷிமாவின் அருகிலுள்ள ஒரு தீவில் படமாக்கபட்டிருக்கிறது. நான்கே கதாபாத்திரங்கள். விவசாயம் செய்யும் ஒரு ஆண். அவனது மனைவி. இரண்டு பிள்ளைகள். போராட்டமான அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படம் போல படம்பிடித்துள்ளார் ஷிண்டோ. காட்சிக் கோணங்களும் ஹிகாரு ஹயாஷியின் இசையும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக நீண்டு செல்லும் காட்சிகளில் நாம் நிழலைப் போல அவர்களைப் பின்தொடருகிறோம்.

கறுப்பு வெள்ளையில் கவித்துவமான காட்சிகளை உருவாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கியோமி குரோடா

தொலைதூரத் தீவில் உள்ள ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் போருக்கு முந்தைய ஜப்பானிய வாழ்வை ஆவணப்படுத்துகிறார் ஷிண்டோ. நன்றியுணர்வும் பணிவும் கொண்ட அந்த விவசாயக் குடும்பம் ஒரு காலகட்டத்தின் சாட்சியம் போலவே சித்தரிக்கபடுகிறது

அவர்கள் தீவில் வசித்தாலும் மறுகரையிலுள்ள ஓனோமிச்சி என்ற சிறுநகருக்குப் போகிறார்கள். அங்கே வாழ்க்கை நவீனமாகி வருவதை அறிந்து கொள்கிறார்கள். அந்த மாற்றம் அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

உணவு மேஜையின் முன்பு கூட அவர்கள் நிதானமாக இருப்பதில்லை. பசி அவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறது. வேகவேகமாகச் சாப்பிடுகிறார்கள். வெந்நீர்த் தொட்டியில் குளிக்கும் போது தான் சற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்தப் பெண் அடையும் மகிழ்ச்சி அழகாக வெளிப்படுத்தபட்டுள்ளது. விவசாயின் மகன் அருகிலுள்ள பள்ளியில் படிக்கிறான். இதற்காக அவனை தனது படகில் அழைத்துக் கொண்டு போகிறாள் அம்மா. அழகான அந்தப் பள்ளிக்கூடம், அதன் மைதானம். விளையாடும் சிறுவர்கள் எனப் பள்ளி வாழ்க்கைக் குறைவான காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது

பருவகாலம் மாறும் போது அவர்களின் வாழ்க்கைக் கடினமாகிறது. மழையினையும் பனிக்காலத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் விதம்  துயரமானது. அருகிலுள்ள ஊரில் நடக்கும் திருவிழா, விளைந்த பொருட்களைக் காணிக்கை செலுத்தும் விதம், அவசர உதவிக்காக மருத்துவரை அழைப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை என்று அந்தக் கால ஜப்பானிய விவசாய வாழ்க்கை ஆவணப்படம் போல சித்தரிக்கபடுகிறது

அவளுடைய தண்ணீர் வாளிகளைக் குறியீடாகவே காணுகிறேன். ஒரு பெண்ணாக, மனைவியாக, தாயாக அந்தப் பெண் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் உருவகமாகக் கனமான வாளி சித்தரிக்கபடுகிறது

சிறுவர்கள் மீன்பிடிக்கும் காட்சியும். அந்த மீனை விற்பதற்காகக் குடும்பம் ஓனோமிச்சிக்கு மேற்கொள்ளும் பயணமும், உணவகம் ஒன்றில் அமர்ந்து அவர்கள் சுவைமிக்க உணவைச் சாப்பிடும் காட்சியும், முகமூடி அணிந்து ஆடும் நடனமும் அபூர்வமான கலையழகுடன் உருவாக்கபட்டிருக்கின்றன

உயிர்வாழ்வதற்கான அவர்களின் இடையுறாத போராட்டம் கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸின் செயல்பாட்டினைப் போன்றது. சலிப்பான போதும் அதிலிருந்து மீட்சி கிடையாது.

இது போல விவசாய வாழ்க்கையின் கஷ்டங்களை ரஷ்ய இயக்குநரான டவ்சென்கோ The Earth என்று படமாக்கியிருக்கிறார். இப்படம் பார்க்கும் போது அதன் நினைவு வந்து போனது. சிறுவர்கள் விளையாடும் காட்சிகள் சத்யஜித்ரேயின் பதேர்ப் பாஞ்சாலி போன்றிருக்கின்றன. ஜப்பானிய சினிமாக் காவியங்களில் ஒன்றாகவே இப்படத்தைக் கருதுவேன்.

தனிமைப்படுத்தப்படுத்த அவர்களின் வாழ்க்கை ஒரு தீவைப் போலவேயிருக்கிறது. சுற்றிலும் கடல் இருந்தாலும் அவர்கள் தண்ணீருக்காகவே போராடுகிறார்கள். இயற்கை தான் அவர்களின் சொர்க்கம் அதுவே அவர்களின் நரகமும் கூட.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2024 23:27

பாதிப்படம்

புதிய குறுங்கதை

வீட்டில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்ளும் நாளில் அப்பா கட்டாயம் சினிமாவிற்குப் போவார். அது சில நேரம் இரவு செகண்ட் ஷோவாகக் கூட இருக்கக் கூடும். அப்படிச் சினிமாவிற்குப் போகும் போதெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு போவார். ஆகவே அப்பா அம்மாவின் சண்டை சிறுவனான அவனை மகிழ்ச்சிப்படுத்தவே செய்தது.

“என்னை இப்படி விட்டுட்டு நீங்க சினிமாவுக்குப் போனா நான் செத்துப் போயிருவேன் பாத்துக்கோங்க“ என்று அம்மா கத்துவாள்.

அப்பா அதைக் காது கொடுத்துக் கேட்காதவர் போல தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அவன் சைக்கிள் கேரியரில் ஏறிக் கொள்வான். அவர்கள் ஊரில் நான்கு திரையரங்குகள் இருந்தன. என்ன படம் ஓடுகிறது என்று கூட அப்பா பார்க்க மாட்டார். அவசரமாக டிக்கெட் எடுத்து உள்ளே நுழைவார். அப்பா சினிமாவிற்குள் எதையோ பார்க்கிறார். அவர் திரையைப் பார்த்து தனக்குத்தானே எதையோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறான். ஒருவர் மீதான கோபத்தைச் சினிமா கரைத்துவிடுமா என்ன. அப்பாவிற்குச் சினிமா என்பது ஒரு அவசரக்குளியல்.

ஒரு போதும் தான் பிரவேசிக்க முடியாத சினிமாவில் வரும் அழகான வீடுகளை அவன் நேசித்தான். குறிப்பாகப் பெரிய உணவு மேஜையை, பளிங்கு குளியல் தொட்டியை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பான். சினிமா பார்க்கும் போது அவனுக்குப் பயங்கரமான பசி ஏற்படும். அது எதனால் என்று புரியாது.

தியேட்டரில் இடைவேளை விட்டவுடன் அப்பா வீட்டிற்குப் போகலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஏன் என்று அவன் கேட்டதேயில்லை. இதனால் அவன் நிறையப் படங்களைப் பாதி தான் பார்த்திருக்கிறான். அந்த வருத்தம் ஆழமானது. ஒவ்வொரு வயதும் அதற்குரிய முட்களுடன் தானிருக்கிறது.

அவர்கள் சினிமாவிற்குப் போயிருந்த நேரத்தில், கோபத்தில் அழுத அம்மா வீட்டில் எப்படியிருந்தாள், அவளது கோபம் எப்படி வடிந்தது என்பது அவன் பார்க்காத பாதிச் சினிமாவை விடவும் புதிரானது. வருத்தமளிக்கக் கூடியது.

அதைப் புரிந்து கொண்டபோது அவன் அப்பாவைப் பிடிக்காத இளைஞனாகயிருந்தான்.

**

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2024 01:18

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.