S. Ramakrishnan's Blog, page 46
November 20, 2023
நூலக வாரவிழா
தூத்துக்குடியில் தேசிய நூலக வார விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியைத் துவங்கி வைத்து உரையாற்றினேன். நூலகர் ராம்சங்கர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்
மாலையில் பொது நிகழ்வு. இடைவிடாத மழைக்குள்ளும் அரங்கு நிரம்ப வாசகர்கள் வந்திருந்தார்கள்.

நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணப்பு செய்த நூலக மனிதர்கள் இயக்கத்தின் பொன். மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பியர்ல் ஷிப்பிங் நிர்வாக இயக்குநர் எட்வின் சாமுவேல். எழுத்தாளர் முஹம்மது யூசுப்பிற்கு அன்பும் நன்றியும்.
November 17, 2023
தூத்துக்குடியில்
நவம்பர் 19 ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
இதனை நூலக மனிதர்கள் இயக்கமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

November 16, 2023
விசித்திரக் கனவு
சத்யஜித் ரேயின் நாயக் படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றுள்ளது. சினிமா நடிகரான அரிந்தமின் கனவது. கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது அந்தக் கனவு வருகிறது.

கலையா அல்லது பணம் சம்பாதிப்பதா என்று இரண்டு பாதைகள் நாடக நடிகரான அரிந்தமின் முன்னால் இருந்தன. அவன் பணம் சம்பாதிப்பதைத் தேர்வு செய்கிறான். புகழும் பணமும் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். தனது குருவின் ஆணையை மீறி சினிமாவிற்குச் செல்கிறான்.
அவன் ஆசைப்பட்டது போலவே பெரும்புகழும் பணமும் சேர்கின்றன. திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மாறுகிறான். ஆனால் மனதிற்குள் தான் ஒரு தோற்றுப் போன நாடகக் கலைஞனாக உணருகிறான். தனிமையை அனுபவிக்கிறான்.

படத்தில் வரும் கனவுக் காட்சியில் குவியல் குவியலாகப் பணம் கொட்டிக்கிடக்கும் பணமேட்டினைக் காணுகிறோம். கரன்சி நோட்டுகள் காற்றில் பறக்கின்றன, பணக்குவியல் நடுவில் புன்னகையுடன் அரிந்தம் நடந்து செல்கிறான். ஆசையாகப் பணத்தை அள்ளிக் கொள்கிறான். காற்றில் வீசி மகிழ்கிறான்.
ஆனால் இந்தப் பணமேடு சட்டெனப் புதைமேடு போல மாறுகிறது. எலும்புக்கூடு கை ஒன்று தொலைபேசியை ஏந்தியிருக்கிறது. டெலிபோன் மணி விடாமல் ஒலிக்கிறது. எலும்புக்கைகள அவனை அழைக்கின்றன. புதைகுழி போலப் பணம் அவனை இழுத்துக் கொள்கிறது. விடுபடப் போராடுகிறான். ஆனால் பயனில்லை. பணம் அவனைச் சீராக விழுங்குகிறது.
அங்கே தோன்றும் குருவான சங்கர் தாவை நோக்கி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறான். அவர் உதவி செய்வதில்லை. வணிக வெற்றிக்காகத் தனது கலைத்திறனை விற்றுவிட்ட குற்ற உணர்ச்சியே அவனை விழுங்குகிறது. இந்தக் காட்சியைச் சர்ரியலிச ஓவியம் போல அழகாக ரே உருவாக்கியிருக்கிறார். அரிந்தம் அக் கனவிலிருந்து விழித்துக் கொள்ளும் போதும் நினைவிலிருந்து பயம் அகல மறுக்கிறது.
பெரும்புகழும் பணமும் இருந்தாலும் இயல்பாக உறக்கம் வராமல் அரிந்தம் தவிக்கிறான். தூக்கமாத்திரையின் உதவியால் தான் உறங்குகிறான். ஆயினும் நல்ல தூக்கம் கிடைப்பதில்லை. பயணத்திலும் அரிந்தம் குடிக்கிறான். தனது பிம்பம் கலைந்துவிடாமல் பாதுகாக்கிறான்.

ரயில் பயணத்தின் ஊடே அரிந்தம் அதிதி இருவருக்குமான நட்பு அழகாக வெளிப்படுகிறது. அவனது கடந்தகாலத்தை அதிதி நினைவுபடுத்துகிறாள். பயண வழியெங்கும் அரிந்தமைக் காண ரசிகர்கள் திரண்டிருப்பதைக் காணுகிறாள். அவன் திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறான். கேமிரா இல்லாத அந்த நடிப்பைக் கண்டு அதிதி பரிதாபம் கொள்கிறாள்.
அரிந்தம் புகழ்வெளிச்சத்திலிருந்து விடுபட விரும்பதை உணருகிறாள். ஆனால் அது எளிதானதில்லை. ரயில் டெல்லியை அடைந்ததும் ரசிகர்கள் திரண்டுவந்து மாலை அணிவித்து அவனைக் கொண்டாடுகிறார்கள். அரிந்தம் மீண்டும் நட்சத்திரமாகி விடுகிறான்.
அரிந்தமின் கனவு அவனது இன்றைய வாழ்க்கையின் அடையாளம். தொலைபேசி மணியொலிப்பதும், எலும்புக்கைகள் நீளுவதும் அவனது இப்போதைய திரையுலக வாழ்க்கை.
அவன் சினிமாவிற்குள் நுழைந்த போது கதாநாயகனாக இருந்த நடிகர் தற்போது படம் எதுவும் கிடைக்காமல் கஷ்ட ஜீவனத்திலிருக்கிறார். குடிப்பதற்குப் பணம் வாங்க அரிந்தமைத் தேடி வருகிறார். அவரைத் தான் வென்றுவிட்டதை உணர்த்தும் விதமாகவே அவருக்குப் பணம் தருகிறான். அவரது வீழ்ச்சி அரிந்தமிற்கான மறைமுக எச்சரிக்கை போலவே உள்ளது.
அரிந்தம் ரயிலில் ஏறும் போது கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறான். அது பாதுகாப்பு உணர்வின் அடையாளம். அதிதியோடு உரையாடும் போது அந்தக் கண்ணாடியை அகற்றிவிடுகிறான். அவள் முன்பு இயல்பாக நடந்து கொள்கிறான். இயல்பாகப் பேசுகிறான். சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் இறங்கி தேநீர் அருந்துகிறான். அவனது விடுபடல் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.
ரயில் பயணமும் நினைவின் பயணமும் இரு சரடுகளாகப் பின்னிச் செல்கின்றன. அரிந்தம் தனது கடந்தகாலத்தை உண்மையாக அதிதியிடம் விவரிக்கிறான் அதில் அவனது தவறுகள். ரகசியங்கள் வெளிப்படுகின்றன. மனம் திறந்து எல்லாவற்றையும் அதிதியிடம் பகிர்ந்து கொண்டதே போதும் என்று நினைக்கிறான். நிகழ்வுலகம் அவனை மீண்டும் நட்சத்திரமாக்கிவிடுகிறது. வெள்ளித்திரையின் கடவுளாக நடமாடத் துவங்குகிறான்.
1966ல் இப்படம் வெளியாகியிருக்கிறது. நட்சத்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் இருளை உலகம் கண்டுகொள்வதில்லை . அந்த இருளில் மறைந்திருக்கும் உண்மைகளையே சத்யஜித்ரே நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
November 15, 2023
பறக்கும் சுடர்கள்
நூல்வனம் பதிப்பகம் புத்தகத் தயாரிப்பில் முன்னோடியானது. மணிகண்டன் மிகவும் கலை நேர்த்தியாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது

அவரது சமீபத்திய வெளியீடு ரூமி கவிதைகள். தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் கவிஞர் க. மோகனரங்கன்.


ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன் சிறந்த கவிஞர், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். ஜென் கவிதைகளாக இருந்தாலும் சமகால உலகக் கவிதைகளாக இருந்தாலும் அதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதுடன் அதே கவித்துவத்தைத் தமிழிலும் கொண்டு வருபவர். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுப்புகளை விரும்பி வாசித்திருக்கிறேன்.

கவிதை என்பது நடனம். புனைகதை என்பது நடத்தல் என்கிறார் கவிஞர் பால் வலேரி. ரூமியை வாசிக்கும் போது அந்த நடனத்தை முழுமையாகக் காணுகிறோம். இது ஒரு வகை சூஃபி நடனம். சுழன்றாடுவதன் வழியே பரவசத்தை அடைவது. சொற்களைக் கொண்டு அந்த மாயநடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் ரூமி
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் சத்யமூர்த்தி ரூமி கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்து அழகான பதிப்பாக வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலைக் காணுகிறேன்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌலானா ஜலாலுத்தீன் ரூமி பாரசீகத்தின் நிகரற்ற கவிஞர். சூஃபி ஞானி. இவரது கவிதைகள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.
தமிழிலும் ரூமியின் கவிதைகள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. ரூமியின் கவிதைகள் தோற்ற அளவில் எளிமையானவை போலத் தோன்றக்கூடியவை. ஆனால் அந்த எளிமை ஏமாற்றக்கூடியது. அவை ஆழ்ந்த தத்துவார்த்தமும் கவித்துவ உச்சமும் கொண்டவை.
நான் ரூமியின் கவிதைகளைச் சிறகுள்ள சுடர்கள் என்றே சொல்வேன். ரூமி சொற்களைச் சுடர்களாக்குகிறார். கவிதையை வாசிப்பதன் வழியே அந்தச் சுடர்கள் நம் அகவெளியில் பறந்தலைகின்றன.
ரூமி கவிதைகள் நூலிற்குத் துணைத்தலைப்பாக இதயங்களின் உதவியாளர் என்று பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் மோகனரங்கன். ரூமி நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறார். மகிழ்ச்சியால் நிரப்புகிறார். ரூமி தன்னை இதயத்தின் விவசாயி என்றே அழைத்துக் கொள்கிறார்.
இந்த நூலில் ரூமியின் வாழ்வினை விவரிக்கும் அழகான வண்ண ஒவியங்களை இணைத்திருக்கிறார்கள். இது கவிதை நூலிற்குக் கூடுதல் அழகு தருகிறது. அத்தோடு ரூமி வாழ்ந்த காலத்தையும் நினைவு கொள்ள வைக்கிறது.
உடைந்த இதயம்
கடவுள் உற்று நோக்கும் இடம் என்று ஒரு கவிதையில் ரூமி எழுதியிருக்கிறார்.
உடைந்த இதயம் எப்போதும் அமைதியானது. அதன் துயரை கடவுளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கடவுளின் வேலை பேரன்பும் கருணையும் கொண்டு உடைந்த இதயத்தைச் சரி செய்வது தானே.
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது இகவாழ்வு என்ற சொல்லை மோகனரங்கன் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு சொல்லின் வழியே ரூமி தமிழ் மெய்யியல் கவிதைமரபின் தொடர்ச்சியாக மாறிவிடுகிறார். இது தான் சிறந்த மொழிபெயர்ப்பாளரின் அடையாளம்.
மண்டியிட்டு மண்ணை முத்தமிட
நூற்றுக்கும் அதிகமான வழிகள் உண்டு
என்ற ரூமியின் கவிதையினை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நினைவிற்கு வந்து போகிறான். அவன் மண்ணை முத்தமிட்டு உலகின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறான். மண்ணை முத்தமிடுவது என்பதை மரணம் என்கிறார்கள். பூமியில் வாழும் போது மனிதன் மண்ணை முத்தமிடுவதில்லை..மரணம் மனிதனையும் ஒரு விதையாக மாற்றுகிறது..
இன்னொரு கவிதையில் பரவசம் என்பதை ஒரு மொழியாக ரூமி குறிப்பிடுகிறார். ஆம், பரவசத்தின் போது சொற்கள் தேவையற்றுப் போகின்றன. பரவசம் உலகை எடையற்றுப் போகச் செய்கிறது. நாம் பரவசத்திற்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறோம் பெர்சியாவில் நடைபெறும். சூஃபி நடனம் பரவசத்தையே மையமாகக் கொண்டது. அந்த நடனத்தின் வழியே ஞானத்தை பெறுகிறார்கள்.
உனக்கொரு கண்ணாடியைக்
கொண்டு வந்துள்ளேன்
உன்னைப் பார்த்து
என்னை நினைவு கொள்
என்கிறது ரூமியின் இன்னொரு கவிதை
கண்ணாடி ரூமி கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. கண்ணாடியை தரிசனத்தின் அடையாளமாகவும் ஆசையின் வடிவமாகவும் குறிப்பிடுகிறார். தனக்கென நினைவுகள் அற்ற கண்ணாடி தான் மற்றவரை நினைவுபடுத்துகிறது என்பது விசித்திரமே.
நினைவும் மறதியும் ரூமி அடைக்கலமாகும் இடங்கள். நினைவுபடுத்தபடவும் விரும்புகிறார். மறதிக்குள் புதைந்துபோய்விடவும் விரும்புகிறார். இரண்டும் காதலால் மட்டுமே சாத்தியம். முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து எழுதப்பட்டவை ரூமியின் கவிதைகள். இந்தக் காதற்பாடல்கள் உடலைத் தாண்டிய காதலைப்பாடுகின்றன.
நமது வாழ்வு மிகச்சிறியது. அர்த்தமற்ற ஆசைகளால் நிரம்பியது. நம் வாழ்வை கடவுளிடம் சரணடையச் செய்வதன் மூலம் சிறப்பாக்கிக் கொள்ள முடியும். அகவிழிப்பே இதற்கான பாதை என்கிறார் ரூமி.
ரோஜாவிடம்
அதன் இதழ்களை மலரச் செய்திட
என்ன சொல்லப்பட்டதோ
அது இங்கே
எனது இதயத்திலும்
என்னிடம் உரைக்கபட்டது
என்கிறார் ரூமி. ரோஜா என்பது நித்யத்துவத்தின் அடையாளம். ரோஜாவை மனிதன் தனது கட்டளையால் மலரச் செய்துவிட முடியாது. கடவுள் சொன்ன ரகசியமே அதை மலரச் செய்கிறது. அந்த ரகசியத்தை அறிவதே ஞானமார்க்கம். அதையே தனது கவிதைகளின் வழியே ரூமி உணர வைக்கிறார்
சூஃபியானவர்
வேட்டைக்காரன் ஒருவனைப் போல
வேட்டையாடுவதைத் தேர்ந்தெடுத்து
மானின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறார்
அந்தச் சுவடுகளின் வரைபடத்தைக் கொண்டு
அதன் பாதையைக் கண்டறிய
அவர் முனைகிறார்
ஆனால் மெய்யாகவே
அந்த மான் தான்
அவருக்கு வழி காட்டுகிறது
சூஃபி ஞானத்தைச் சிறப்பாக விளக்கும் கவிதையிது.
மானைப் பின்தொடரும் வேட்டைக்காரனைப் போலவே சொற்களைத் துரத்திச் சென்று முடிவில் அதனாலே வழிகாட்டப்படுகிறார் ரூமி. கவிதை என்பது புள்ளிகளை உதிர்த்தபடி செல்லும் மாயமானில்லையா. அதைத் துரத்திச் செல்பவன் ஒரு புள்ளியில் தானும் மானாகிவிடுகிறான் என்பது தான் நிஜமோ.
ரூமியின் கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள கவிஞர் க. மோகனரங்கனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
•••
November 14, 2023
வாசகர்களின் அன்பு
கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன்.
மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார்.

உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில்.
தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன்
மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு உள்ள விருப்பம் ஆச்சரியமானது. மரபாகத் தொடரக்கூடியது. கேரளாவின் கலைவடிவங்களில் மகாபாரதம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள தெருக்கூத்து தென் மாவட்டங்களில் கிடையாது. மகாபாரதம் சார்ந்த சிற்பங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் யுதிஷ்ட்ரன் சிற்பத்தைக் கண்டதில்லை. அர்ச்சுனன் சிற்பமே அதிகம் காணப்படுகிறது. பல்லவ மன்னர்கள் மகாபாரதம் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவில் மகாபாரதம் சார்ந்த கலைகள் பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த மாத்ருபூமி ஆசிரியர் கே.சி. நாராயணனைச் சந்தித்து உரையாடிய போது அவர் மகாபாரதம் பற்றி MAHABHARATHAM: ORU SWATHANTHRA SOFTWARE எனப் புதிய கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். இப்படி மகாபாரதம் சார்ந்து புதிய புனைவுகள். கவிதைகள், ஆய்வுகள் மலையாளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
உப பாண்டவம் எனது முதல் நாவல். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியோடு பல்வேறு பதிப்பகங்களில் ஏறி இறங்கிய நாட்கள் நினைவிற்கு வருகின்றன. எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. கேலியும் கிண்டலும் செய்தார்கள். புறக்கணிப்பின் உச்சத்தில் நண்பர்களின் உதவியோடு நானே நாவலை வெளியிட்டேன். அப்போது விருதுநகரில் குடியிருந்தேன். என் வீட்டு முகவரிக்கு மணியார்டரில் பணம் அனுப்பி நாவலைப் பெற்றுக் கொண்டவர்கள் அதிகம். ஒரே ஆண்டில் இரண்டு பதிப்புகள் விற்பனையாகின. தமிழ் வாசகர்கள் என் நாவலின் மீது காட்டிய அன்பும் ஆதரவும் என்றும் நன்றிக்குரியது.
தற்போது உப பாண்டவம் நாவலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இன்று உப பாண்டவம் கேரள மண்ணில் வாசிக்கப்படுவதும் பாராட்டுப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பாக மொழியாக்கம் செய்த கே.எஸ்.வெங்கடாசலம். மற்றும் இதனை வெளியிட்டுள்ள DC புக்ஸ் நிறுவனத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
விருதுநகர் புத்தகத் திருவிழா நவம்பர் 16 முதல் 27 வரை நடைபெறுகிறது
நவம்பர் 18 சனிக்கிழமை மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.

November 12, 2023
தினமணி தீபாவளி மலரில்
தினமணி தீபாவளி மலர் 2023ல் எனது சிறுகதை வெளியாகியுள்ளது.


November 11, 2023
ஹீப்ரு மொழியில்
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ஆங்கிலம் வழியாக ஹீப்ரு மொழியில் Dr. M. Gluzman மொழியாக்கம் செய்துள்ளார். அவர் தொகுக்கும் சிறந்த இந்தியச்சிறுகதைகள் நூலில் இக்கதை இடம்பெறுகிறது.

November 10, 2023
ஆசியன் ரிவ்யூ இதழில்
புகழ்பெற்ற Asian Review of Books இதழில் எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு “The Man Who Walked Backwards and Other Stories” குறித்த அறிமுகம் வெளியாகியுள்ளது.

Thanks
November 9, 2023
நினைவில் ஒளிரும் காதல்
Past Lives 2023ல் வெளியான கொரியத் திரைப்படம். அழகான காதற்கதை. இயக்குநர் செலின் சாங்கின் முதற்படம் என்பதை நம்ப முடியவில்லை செலின் சாங் பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன்.

செலின் சாங் கொரியாவைச் சேர்ந்தவர். கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார். நாடக இயக்குநராகப் பணியாற்றியிருகிறார். ஆன்டன் செகாவின் நாடகத்தை இயக்கியிருக்கிறார். அவரது ஆதர்ச எழுத்தாளர் செகாவ்.
Past Lives அவரது முதற்படம். மிகுந்த கவித்துவத்துடன் கலைநேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்.
படத்தில் நாயகி நோரா இவரைப் போலவே நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். கொரியாவிலிருந்து அவளது பெற்றோர் கனடாவிற்கு இடம் மாறுகிறார்கள். செலின் போலவே நோராவும் நியூயார்க் நகரில் வசிக்கிறாள் . செலினின் பெற்றோர் போலவே திரைப்படத்திலும் நோராவின் பெற்றோர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை படமே அவரது சொந்த வாழ்க்கை நினைவுகள் தானா.

பள்ளி வயதில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு எவ்வளவோ எழுதப்பட்டிருக்கின்றன. திரைப்படமாகவும் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இப்படம் போல உண்மையாக, மனதிற்கு நெருக்கமாகப் படம் உருவாக்கப்படவில்லை.
சியோலில் வசிக்கும் நா யங் மற்றும் ஹே சங் இருவரும் ஒரே பள்ளியில் பயிலுகிறார்கள். வகுப்புத் தோழர்கள். நா யங் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுகிறாள். ஹே சங்கிற்கு எப்போதும் இரண்டாம் இடம் தான். ஒரேயொரு முறை அவளை முந்திக் கொண்டு முதல்மதிப்பெண் வாங்கிவிடுகிறான். அதனால் நா யங் கோவித்துக் கொண்டு எப்போதும் எதிலும் தானே முதலிடம் பெற வேண்டும் என்கிறாள். சைகோ என்று அவளைத் திட்டுகிறான் ஹே சங், பள்ளி வயதின் இனிமையான நாட்கள் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.
திடீரென நா யங்கின் குடும்பம் டொராண்டோவுக்கு இடம் மாறிப் போகிறது. இதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. காலம் மாறுகிறது. ராணுவப் பயிற்சி பெறும் இளைஞனான ஹே சங் இப்போதும் அவளை நினைத்துக் கொண்டேயிருக்கிறான். நா யங் எங்கே இருக்கிறாள் என்று இணையத்தில் தேடுகிறான்
அவள் தனது பெயரை நோரா மூன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறாள். தற்போது நியூயார்க்கில் நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். புதிய நாடகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறாள். ஃபேஸ்புக் மூலம் அவளைக் கண்டறிகிறான். அவர்களுக்குள் மீண்டும் நட்பு மலர்கிறது. வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆயினும் மனதிலுள்ள காதலை சொல்லிக் கொள்வதேயில்லை.
தீவிரமாகத் தான் எழுத்து வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்காலிகமாக உறவை துண்டித்துக் கொள்வோம் என்று சொல்லி நோரா மீண்டும் அவனைப் பிரிகிறாள். அதை ஹே சங்கால் ஏற்க முடியவில்லை. மனம் உடைந்து போகிறான்..

நோரா எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் ஒன்றில் கலந்து கொள்கிறாள். அங்கே ஆர்தர் என்ற இளம்எழுத்தாளன் அறிமுகமாகிறான். இருவரும் நெருக்கமாகப் பழகுகிறார்கள். அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நோரா அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.
சீனாவிற்குச் சென்று மாண்ட்ரின் பயிலுகிறான் ஹே சங். படிப்பை முடித்துவிட்டுச் சியோலில் வேலைக்குச் சேருகிறான். அவனும் ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். நெருங்கிப் பழகுகிறான். ஆனால் பொருளாதாரக் காரணங்களால் அந்த உறவு முறிந்து போகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹே சங் நியூயார்க் செல்ல திட்டமிடுகிறான். அதன் உண்மையான நோக்கம் நோராவை சந்திக்க வேண்டும் என்பதே. நியூயார்கில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். படத்தின் மிகச்சிறந்த பகுதி அதுவே. நோராவோடு ஹே சங் மேற்கொள்ளும் ஊர்சுற்றலும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் அற்புதமானவை.
ஒரு நாள் நோராவிற்கு வீட்டிற்கு வருகை தரும் ஹே சங் அவளது கணவன் ஆர்தரைச் சந்திக்கிறான். இந்தக் காட்சி ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை நினைவூட்டியது.
அவர்கள் ஒன்றாக இரவு உணவிற்குச் செல்கிறார்கள். ஆர்தர் முன்பாகவே கடந்த கால நினைவுகளைப் பேசிக் கொள்கிறார்கள். ஊரைவிட்டு அவள் போகாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்கிறான் ஹே சங். கடந்த காலம் மாற்ற முடியாதது ஆயினும். ஏக்கம் கொண்ட மனது கடந்தகாலத்தை மாற்றியமைக்க விரும்புகிறது..
ஹே சங்கை சந்தித்த இரவில் வீடு திரும்பும் நோராவிடம் ஆர்தர் கேட்கும் கேள்விகளும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று ஹே சங் கேட்டதற்கு ஒரே தொட்டிக்குள் வைக்கபட்ட இரண்டு செடிகள் வேர்விடுவதற்கு எவ்வளவு போராடுமோ அவ்வளவு சண்டைகள் கொண்டது என்கிறாள் நோரா.
கொரிய மொழியில் இன்-யுன். என்றொரு வார்த்தையிருக்கிறது அதன் பொருள் “விதி”. அல்லது “ஊழ்”. பௌத்த சமயச் சொல்லாகும். இரண்டு அந்நியர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களின் உடை உரசிக் கொண்டால் அது தற்செயல் கிடையாது. அது இன்-யுன் ஆகும். ஏனென்றால்,கடந்தகால வாழ்க்கையில் அவர்களுக்கு இடையே ஏதாவது உறவு இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தம். எட்டாயிரம் இன்-யுன் இழைகள் கொண்ட இருவரே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்கிறார்கள். நாம் ஆயிரம் காலப் பந்தம் என்று சொல்வதன் மறுவடிவம் போன்றதே இந்த நம்பிக்கை. இன்-யுன் குறித்துப் படத்தில் நோரா பேசுகிறாள். அதை முழுவதும் நம்புகிறாள். அல்லது அப்படிச் சொல்லி தனது செயலை நியாயப்படுத்திக் கொள்கிறாள். ஒருவேளை முந்தைய பிறவில் ஹே சங் தான் பெண்ணாக இருந்திருப்பானோ என்னவோ.

சொந்த ஊரைவிட்டு அவர்கள் ஏன் திடீரெனக் கனடாவிற்கு இடம் பெயர நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கு நோராவின் அம்மா நேரடியாகப் பதில் சொல்வதில்லை. ஆனால் ஒன்றை இழந்தால் பெரிதாக மற்றொன்று கிடைக்கும் என்று பதில் தருகிறாள். அப்படி அவர்களுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்ததா என்று தெரியவில்லை.
அம்மாவை போலவே நோரா கடந்தகாலத்திலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கையை வாழுகிறாள். ஆனால் அவளது மனது கடந்தகால வாழ்விற்கு, சொந்த தேசத்திற்கு ஏங்குகிறது. அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. ஹே சங் மனதில் பனிரெண்டு வயது சிறுமியாக நா யங் இருக்கிறாள். நியூயார்க்கில் அவன் காணுவது நோரா மூன். அவள் இன்னொருவன் மனைவி. அவர்கள் உரையாடுவதன் வழியாக மட்டுமே நெருக்கமாகிறார்கள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு நோராவை ஹே சங் நியூயார்க்கில் சந்திக்கும் காட்சியில் அவனது முகத்தில் வெளிப்படும் தயக்கம். ஆசை, மகிழ்ச்சி, தன் உணர்ச்சிகளை முழுவதும் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவது என அக்காட்சி அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. அவர்கள் வேடிக்கையான சப்தம் எழுப்பிக் கொண்டு நடக்கும் விதம் அபாரம். படம் முழுவதும் ஹே சங்கின் கண்களில் காதலின் ஏக்கம் உறைந்திருக்கிறது.

நோரா ஒரு ஊஞ்சலைப் போல முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டேயிருக்கிறாள். வாழ்க்கையின் வேகம் அவளை இழுத்துச் செல்கிறது. விரும்பாத சில முடிவுகளை எடுக்கிறாள். அதனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுகிறாள்.
காலம் உருவாக்கிய பிரிவை மறப்பதற்கு நினைவுகளே துணையாகின்றன. நினைவில் வாழுகிறவனுக்கு அந்தக் காதலே போதுமானது. ஹே சங் அப்படித்தானிருக்கிறான்.
Francisco de Quevedo எழுதிய Love constant beyond death என்ற கவிதையைப் படித்திருக்கிறீர்களா. அதில் memory will not abandon love என்ற வரி இடம்பெற்றுள்ளது. அது போன்ற காதலின் ஒளிரும் நினைவுகளை இப்படமும் பேசுகிறது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
