S. Ramakrishnan's Blog, page 42
January 27, 2024
ஆங்கிலத்தில்
எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்


இணைப்பு
https://www.usawa.in/issue-8/Translation/The-Last-Horse-Cart-R-Satish.html
பெயரின் அருகில்
புதிய குறுங்கதை
அவரது கையில் குரூப் போட்டோ இருந்தது. சி.எஸ். ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் எடுத்தது. அதிலிருந்தவர்களின் பெயர்களை நினைவிற்குக் கொண்டு வர முயன்றார். ஐந்தாறு பெயர்களைத் தவிர வேறு நினைவில் இல்லை.

எழுபத்தியெட்டு வயதிலிருந்து கொண்டு ஆறாம் வகுப்பில் படித்தவர்களின் பெயர்களை நினைவு கொள்வது எளிதான என்ன. பெயர் மறைந்து போன வகுப்புத்தோழர்கள் உதிர்ந்த சிறகுகளைப் போலிருந்தார்கள். சிறகை வைத்து எந்தப் பறவை உதிர்த்தது எனக் கண்டுபிடிக்க முடியாதே. புகைப்படத்தில் உள்ள யார் யாரை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்பது புதிரானது.
மாணவர்களுக்கு நடுவில் மர நாற்காலியில் அமர்ந்திருந்த ஆறாம் வகுப்பு ஆசிரியர் கே.வி.ரஞ்சனியின் பெயர் மறக்கவேயில்லை. இவ்வளவிற்கும் அவரைப் பிடிக்கவே பிடிக்காது. பிடித்தவர்களின் பெயர்கள் வேகமாக மறந்துவிடுவதும் பிடிக்காதவர்களின் பெயர்கள் நீண்டகாலம் நினைவிலிருப்பதும் விநோதமில்லையா.
நினைவின் பெட்டகத்தில் நிறைய ஒட்டை விழுந்திருக்கின்றன. அதில் நழுவிப் போனவை ஏராளம். கைக்கட்டிய படி நிற்கும் தனது உருவத்தையும் ஹேர்ஸ்டைலையும் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது.
குரூப் போட்டோவில் அவரது அருகில் நின்றிருப்பது ஜெயமாலா. எவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள் சூடியிருந்த கனகாம்பரம் வாடவேயில்லை. அவள் தான் வகுப்பின் முதல் மாணவி. அவளது கையெழுத்து அத்தனை அழகாக இருக்கும். அவளது பக்கத்தில் நிற்கும் போது இளவெயிலில் நிற்பது போல இதமாக இருக்கும்.
போட்டோ எடுக்கும் நாளில் அவள் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சி. முருகேசனை பின்னால் தள்ளிப் போகச் சொன்னார். அந்தக் கோபம் அவனது முகத்தில் உறைந்திருந்தது, புகைப்படத்தில் முருகேசன் ஓங்கி அடித்த ஆணி வளைந்து கொண்டிருப்பது போலிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்து போய்விட்டான் என்பதைக் கேள்விப்பட்டார். சிலரது மரணத்திற்குப் பின்பும் அவர்கள் கொண்டிருந்த கோபம் மறைவதில்லை போலும்.
இப்போது ஜெயமாலாவும் பாட்டியாகியிருப்பாள். ஒருவேளை இறந்தும் போயிருக்கலாம். ஆனால் இந்தப் புகைப்படத்தைக் காணும் போது அவளருகே ஒரு நிமிஷம் நிற்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.
ஜெயமாலா இப்போது எங்கேயிருப்பாள். மீண்டும் ஒரு முறை தன் அருகே வந்து நிற்பாளா. உலகம் ஏன் அபூர்வமான தருணங்களை இரண்டாம் முறை நிகழ அனுமதிப்பதில்லை. உதிர்ந்த இலை மரத்தைப் பார்த்து ஏங்குவதைப் போலப் புகைப்படத்தைப் பார்த்து ஏங்கினார். ஒரு முறைதான். ஒருமுறை மட்டும் தான் என்று முணுமுணுத்துக் கொண்டார்.
பின்பு ஏதோ யோசனை வந்தவரைப் போலச் சுவரின் ஒரு இடத்தில் ஜெயமாலா என்று எழுதினார். அதனருகில் போய் நின்று கொண்டார். தனது பேரன் விதார்த்தை அழைத்துத் தன்னை ஒரு போட்டோ எடுத்துத் தரும்படியாகச் செல்போனை நீட்டினார்.
அவன் வியப்போடு ஏன் தாத்தா சுவரை ஒட்டி நிக்குறே என்று கேட்டான்.
நீ போட்டோ எடு சொல்றேன் என்றார்.
அவன் நாலைந்து புகைப்படங்களை எடுத்துத் தந்தான். அதில் அவரருகே ஒரு பெயராக ஜெயமாலா இருந்தாள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அது போதும் என்றே அவருக்குத் தோன்றியது.
January 25, 2024
கற்பனைத் தீவுகள்
புதிய குறுங்கதை
சட்டைப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய பாக்கெட் நோட் ஒன்றை அவன் வைத்திருந்தான். அந்த நோட்டில் அவன் கேள்விப்படுகிற தீவுகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரைத் தீவு என்பது அவனது ஆறாவது விரலைப் போன்றது. வரைபடத்தில் காணும் போது எல்லாத் தீவுகளும் மேஜையில் சிந்திய மைத்துளி போலவே தோற்றமளிக்கின்றன.

அவனுக்குத் தீவின் பெயர்களைச் சேகரிப்பது பிடித்தமான வேலை. அவன் சந்திக்கும் பலரிடமும் அவர்கள் கேள்விப்பட்ட தீவுகளைப் பற்றி விசாரிப்பான். நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ, தொலைக்காட்சியிலோ தீவின் பெயரைக் காணும் போது ஆசையாகத் தனது பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்வான். பெரிய தேசங்களை விடவும் சிறிய தீவுகளே வசீகரிக்கின்றன.
உண்மையில் சிறிய தீவுகளின் வரலாறு துயரமானது. ரத்தக்கறை படிந்தது. தீவின் மழையும் காற்றும் ரகசியங்களையும் தொல் நினைவுகளையும் எழுப்பக்கூடியது.
தீவு என்பது ஒரு பூனை. தோற்றத்தில் மட்டுமே அது மிருதுவானது. தேசத்திற்கு வயதாவது போலத் தீவுகளுக்கு வயதாவதில்லை. அல்லது வெளிப்படையாகத் தெரிவதில்லை. தீவின் பெயர்களைக் கொண்டே அது எப்படியிருக்கும் என அவன் கற்பனை செய்து கொள்வான்.
ஒவ்வொரு நாளும் இரவில் நோட்டிலிருந்த ஒரு தீவின் பெயரைத் தேர்வு செய்து அதைத் துண்டுப்பேப்பரில் எழுதி தனது தலையணைக்குள் வைத்துக் கொள்வான். கனவில் அந்தத் தீவிற்குப் போய்விடுவதாக நம்பினான்.
மனிதர்களே இல்லாத தீவுகளைப் பற்றி நிறையக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை எழுதியவர்கள் எந்தத் தீவிற்குப் போனவர்களில்லை. உலகில் பல்வேறு தண்டனை தீவுகள் இருந்தன. அங்கே குற்றவாளிகள் மட்டுமே வசித்தார்கள். ஒரேயொரு குரங்கு வசித்த தீவு ஒன்றைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். தீவு என்பதே விசித்திரத்தின் வெளி தான் போலும். உதட்டில் மச்சம் கொண்ட ஒரு பெண்ணைப் பேருந்தில் கண்ட போது அவள் உதட்டில் சிறிய தீவு முளைத்திருப்பதாகவே உணர்ந்தான்.
புதிய தீவுகளின் பெயர்கள் கிடைக்காமல் போகும் நாட்களில் அவனாக ஒரு பெயரை நோட்டில் எழுதிக் கொள்வான். அப்படி ஒரு தீவு அவனது கற்பனையில் உருவாவதை யார் தடுக்க முடியும். தானே உருவாக்கிய கற்பனைத் தீவுகளைப் பற்றிப் பிறரிடம் சொல்லும் போது அவர்கள் நம்பிவிடுவதையும், அங்கே விடுமுறைக்குப் போக விரும்புவதாகச் சொல்லும் போதும் அவன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனுக்கு உலகிலுள்ள எல்லாப் பெயர்களும் ஒரு தீவு தான் என்று தோன்றும்.
கடலின் நகங்கள் தான் தீவுகள் என்று சிறுவயதில் படித்திருக்கிறான். அப்படி நினைக்க இன்றும் பிடித்தேயிருந்தது.
January 24, 2024
இணைய இதழில்
Medium என்ற இணைய இதழில் எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருப்பதை இன்று தான் பார்த்தேன்.


சிங்கப்பூரில் வசிக்கும் ராஜ் ஸ்வரூப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. தகுந்த ஆங்கிலப் பதிப்பாளர் கிடைக்காத காரணத்தால் அந்நூல் இன்னும் வெளியாகவில்லை.
The Eighty-Year Wait கதை அரிய பறவையான JERDON COURSER பற்றியது.
கதையின் இணைப்பு.
https://rs-writes-well.medium.com/the-eighty-year-wait-fd95a57b8fec
பெலிகோவின் குடை
ஆன்டன் செகாவின் “Man in a Case” சிறுகதையில் பெலிகோவ் என்றொரு ஆசிரியர் வருகிறார். அவர் பள்ளியில் கிரேக்க மொழி கற்பிக்கிறவர். வீட்டிலிருந்து எப்போது வெளியே புறப்பட்டாலும் கனத்த கோட்டும், குடையும் கலோஷேஸ். எனப்படும் காலணிகளைப் பாதுகாக்கும் நீண்ட உறையும் அணிந்து செல்வது அவரது வழக்கம்.

எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனைக் கைவிடமாட்டார். வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் பெலிகோவ். ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்ற பயப்படுவார்.
வகுப்பறையில் கூச்சலிடும் மாணவர்களை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. பள்ளிக்கூடம் ஏன் இவ்வளவு கெட்டுப்போய்விட்டது என்று மெதுவான குரலில் புலம்பிக் கொள்வார்.
அவர் எப்போதும் கடந்த காலத்தைப் புகழ்ந்தார். அவர் கற்பிக்கும் கிரேக்க மொழி கூட அவரது குடையும் காலணியும் போன்று தன்னைப் பாதுகாப்பதாக நினைத்தார்.
பள்ளியில் சக ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறை, சமூக வெளியில் மக்கள் செயல்படும்விதம் குறித்த பயமும் கவலையும் அவரிடமிருந்தன.
தனது வீட்டின் ஜன்னல்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார். தன்னுடைய வீட்டிற்குத் திருடன் வந்துவிடக்கூடும் என்று பயப்படுவார். நத்தை அல்லது நண்டு போலத் தனது வசிப்பிடத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கவே பெலிகோவ் ஆசைப்பட்டார்.
உரக்கச் சிரிக்கும் பெண்களை அவருக்குப் பிடிக்காது. எந்த விதமான விதிமீறல். விலகலையும் அவரால் அனுமதிக்க முடியாது.ஆகவே அரசாங்கம் எதை அனுமதித்துள்ளது. எதை அனுமதிக்கவில்லை என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார். இதைப் பற்றிய அரசின் சுற்றறிக்கைகளை ஆழ்ந்து வாசித்து மனதில் வைத்திருப்பார்.
அவர் வாழும் நகரம் கூட அவரது பயத்தின் நீட்சியாக இருந்தது. சலிப்பூட்டும் வாழ்க்கையை நடத்தி வரும் பெலிகோவிடம் சில விசித்திரமான பழக்கங்கள் இருந்தன. பள்ளியில் வேலை செய்யும் சக ஆசிரியரின் முன்னால் வந்து அமர்ந்து, எதையோ கவனமாகப் பார்ப்பது போல் ஒரு மணி நேரம் அவரை உற்று நோக்கியிருந்து விட்டு அமைதியாகப் புறப்படுவார். இதற்குப் பெயர் ‘சகாக்களுடன் நல்லுறவைப் பேணுதல்’ என்பார். அவரது விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு ஆசிரியர்கள் பயந்தார்கள்.

நகரில் நடக்கும் நாடகம் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் நடத்தைகள் பற்றி அவருக்குக் கோபமிருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.
தேவாலயத்திற்குத் தாமதமாகச் செல்பவர்களைக் கண்டால் அவர் கலக்கமடைவார். கடிதங்கள் அனுப்பவோ, மற்றவர்களுக்கு உதவி செய்யவோ கூட அவர் பயந்தார். ஊர் மக்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைக்கலாம் என்ற பயத்தில் அவர் ஒரு வேலைக்காரியை வைத்துக் கொள்ளவில்லை.
இப்படிப் பாதுகாப்புச் சுவர்களுடன் நடமாடும் பெலிகோவ் எப்படி ஒரு பெண்ணை விரும்பினார் என்ற கதையைச் செகாவ் அழகாக விவரிக்கிறார்.
பெலிகோவின் பள்ளிக்குப் புதிதாக வரலாறு மற்றும் புவியியல் கற்பிக்கக் கோவலென்கோ என்ற ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். அவர் தனது சகோதரி வாரிங்காவுடன் அந்த ஊருக்கு வந்து சேருகிறார்.
முப்பது வயதான வாரிங்கா உற்சாகமானவள். சிறிய விஷயத்திற்குக் கூட சப்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவள். சந்தோஷம் அதிகமானால் நடனமாடுவாள். அவளுக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது.
திருமண ஆசையே இல்லாத பெலிகோவ் அவளது உற்சாகத்தில் மயங்கினார். அவளைப் பெலிகோவ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் விரும்பினார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வதை நினைத்தால் அவருக்குக் கவலையும் மனச்சோர்வும் ஏற்பட்டது. ஆகவே வாரிங்காவிடம் திருமணத்தைப் பற்றிப் பேசவேயில்லை.
ஆரம்பம் முதலே கோவலென்கோவிற்குப் பெலிகோவைப் பிடிக்கவேயில்லை. அவரைச் சிலந்தி என்று கேலி செய்தான். தனது சகோதரிக்கு ஏற்றவர் இல்லை என்று நம்பினான்.
ஒரு நாள் அவர் வாரிங்காவுடன் வீதியில் நடந்து போவதைக் கண்ட குறும்புக்காரர்கள் அதைப் பற்றிக் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து விடுகிறார்கள். இந்தச் சித்திரம் பெலிகோவ் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது
வாரிங்காவின் சகோதரன் கோவலென்கோவை தேடிச் சென்று உரையாடுகிறார். அவர்களுக்குள் வாக்குவாதமாகிறது. தடுமாறி கீழே விழும் அவரைக் கண்டு வாரிங்கா பலமாகச் சிரித்துவிடுகிறாள். அந்த அவமானத்தைப் பெலிகோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக வீடு திரும்புகிறார். இதனை அடுத்து அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விடுகிறது.
இந்தக் கதையில் தனது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் மனிதர்களின் அடையாளமாகப் பெலிகோவ்வை உருவாக்கியிருக்கிறார் செகாவ்.
நம்மைச் சுற்றி நிறையப் பெலிகோவ்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை.
வெளி உலகத்தைப் பற்றிய இந்தப் பயம் நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. பெலிகோவ் உண்மையில் ஒரு அனுதாபத்திற்குரிய கதாபாத்திரம். அவரது பயம் அனைவருக்குமானது. உணவு, உடை, உறவு, தொழில், அலுவலகம் என அனைத்திலும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். சிறிய மாறுதல்களைக் கூட ஏற்க மறுக்கிறோம்.
உண்மையில் நம்மைச் சுற்றி வாழும் பெலிகோவ்கள் நம்மைப் பாதிக்கிறார்கள். இதனால் புதிய விஷயங்களை உருவாக்கவும் ஏற்கவும் ஆராயவும் இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. பெலிகோவ்கள் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

இந்தக் கதையின் நினைவாகப் பெலிகோவிற்கு ரஷ்யாவில் சிலை வைத்திருக்கிறார்கள். சிலையாக அல்ல நேரடியாகவே தினமும் நாம் பல்வேறு பெலிகோவ்களைக் காணுகிறோம். கடந்து போகிறோம். இலக்கியம் தான் இவர்களை அடையாளப்படுத்துகிறது. புரிந்து கொள்ள வைக்கிறது. இதனால் தான் ஆன்டன் செகாவ் இன்றும் உலகின் சிறந்த சிறுகதையாசிரியராக் கொண்டாடப்படுகிறார்.
January 23, 2024
புயலின் கண்
The Eye of the Storm நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பேட்ரிக் வொயிட் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2011 வெளியான இப்படத்தை இயக்கியவர் ஃப்ரெட் ஸ்கெபிசி.
பறவைகள் சூழ கடற்கரையில் தனித்து நிற்கும் எலிசபெத்தின் நினைவுகளுடன் படம் அழகாகத் துவங்குகிறது. அந்தக் காட்சியில் கேமிரா அவளது மனநிலையைப் போலவே அமைதியாகச் சுழல்கிறது.

சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பணக்கார எலிசபெத் ஹண்டரின் இல்லம் தான் கதையின் களம். நோயுற்று நீண்டகாலமாகப் படுக்கையில் நாட்களைக் கழிக்கும் எலிசபெத் ஹண்டரைக் காண்பதற்காக அவளது மகனும் மகளும் வருகை தருகிறார்கள். அவர்களின் வருகைக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள் எலிசபெத். படுக்கையில் கிடந்த போதும் அவள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறாள். அவளது வீட்டில் இரண்டு செவிலியர்கள், ஒரு பணிப்பெண் உடனிருக்கிறார்கள்.
எலிசபெத்தின் மகன் பேசில் ஒரு நாடக நடிகர். பிளேபாய், போகத்தில் திளைப்பவன். லண்டனில் வசிக்கிறான். மகள் டோரதி பிரான்ஸின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள். திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுத் தனித்து வாழுகிறாள். மரணப்படுக்கையிலுள்ள தாயைக் காண விரும்பியதை விடவும் அவளது பெரும் செல்வங்களை அடைவதிலே அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எலிசபெத்தின் குடும்ப வழக்கறிஞர் அர்னால்ட் அவள் மீது ரகசியக் காதல் கொண்டிருக்கிறார்.

எலிசபெத்தின் பணிப்பெண் லோட்டே அவளுக்காக தினமும் நடனமாடுகிறாள். விரும்பிய உணவுகளைச் சமைத்துத் தருகிறாள். அம்மா உடல்நலமற்றுப் படுக்கையில் இருப்பதால் வீட்டுப்பணிப்பெண் மற்றும் செவிலியர் பணத்தைக் கண்டபடி செலவு செய்கிறார்கள் என்று நினைக்கும் மகள் டோரதி இது குறித்து அம்மாவிடம் புகார் சொல்கிறாள். ஆனால் அதை எல்லாம் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்கிறாள் எலிசபெத். அம்மாவிற்கும் மகளுக்குமான விலகலும் வெறுப்பும் சில காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது
தனது பணத்தைக் கொண்டு கடந்து போன நாட்களைத் திரும்ப வாங்க முடியாது என்பதை எலிசபெத் நன்றாக உணர்ந்திருக்கிறாள். மகனைப் போலவே அவளும் போகத்தில் திளைக்கும் வாழ்க்கையை அனுபவித்தவள். குறிப்பாக உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவள். அதை நிகரற்ற இன்பமாக நினைக்கிறாள். தாயும் மகளும் இதனைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சியில் அவளது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அலாதியானது. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கதை தாவித்தாவிச் செல்கிறது

ஒரு முறை குயின்ஸ்லாந்து தீவில் ஏற்பட்ட புயலின் போது எலிசபெத் சிக்கிக் கொள்கிறாள். அன்று அனுபவித்த உணர்வுகள் அவள் மனதில் அழியாச் சுவடுகளாகப் பதிந்து போயிருக்கின்றன
சிட்னி நகரில் நடக்கும் உயர்குடி விருந்து நிகழ்வுகள். அங்கே டோரதி சந்திக்கும் மனிதர்கள். அவர்களின் போலியான பாவனைகள். பேசிலின் நாடக உலகம். அவரது ரகசிய ஆசைகள், தடுமாற்றங்கள் என உயர் தட்டு வாழ்வின் மினுமினுப்புகளுக்குள் மறைந்துள்ள ரகசியங்களை, அவஸ்தைகளை, பொய்யுரைகளை படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
வர்ஜீனியா வூல்ஃப்பின் நாவலின் நாயகியைப் போலவே எலிசபெத் நடந்து கொள்கிறாள். நினைவும் நடப்பும் அவளுக்குள் மாறி மாறி விரிகின்றன. வீட்டின் படிக்கட்டில் அவளைத் தூக்கிச் செல்லும் காட்சியில் அவள் அடையும் வெட்கமும் மகிழ்ச்சியும் சிறப்பானது. படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. குறிப்பாகக் கடற்கரைக்காட்சிகள்.
பேசில் வழக்கறிஞரை சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் வழக்கறிஞர் பேசிலின் அம்மாவைப் பற்றி சொல்வது மிகச்சரியானது. அது போலவே பேசிலும் அவரது சகோதரியும் அம்மா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு உரையாடும் காட்சியும் சிறப்பாக உள்ளது.

எலிசபெத்தை நினைவுகளே வழிநடத்துகின்றன. அவள் கடந்து போன இன்பங்களை நினைத்து ஏங்குகிறாள். குறிப்பாக உடலின்பங்கள் மீதான அவளது நாட்டம் குறையவேயில்லை. அவளது உடையும் அலங்காரமும் உணவும் அதை தெளிவாக உணர்த்துகின்றன. உடலின்பம் பற்றி மிக வெளிப்படையாக பேசுகிறாள். கேலி செய்கிறாள்.
டோரதி உடலின்பத்தை வெறுக்கிறாள். அவளுக்குத் தேவை பணம் மட்டுமே. அதுவும் உயர்குடி வாழ்க்கையை அனுபவிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்காக மட்டுமே அவள் அம்மாவை நேசிக்கிறாள்.
எலிசபெத்தின் கணவர் பற்றி மறைமுகமாகப் படம் பேசுகிறது. குறிப்பாக நூலகத்தில் அவரது புத்தகங்களை ஆராயும் போது பேசிலும் அவரது சகோதரியும் இது பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.
எலிசபெத் தனது வாழ்க்கையில் கருணையின் அர்த்தத்தைப் புயலின் வழியே புரிந்து கொள்கிறாள். அதை அவளது பிள்ளைகளும் முடிவில் உணருகிறார்கள்.
life is a tale Told by an idiot, full of sound and fury, Signifying nothing.என மெக்பெத்தில் ஷேக்ஸ்பியர் சொல்கிறார். இப்படத்தி புயலின் தாக்கம் எலிசபெத்தை வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. கடைசிவரைஅவள் தனது அமைதியை நிதானத்தைக் கைவிடுவதில்லை.
ஆஸ்திரேலியாவை விட்டு அவளது பிள்ளைகள் வெளியேறிப் போக விரும்புகிறார்கள். அவளோ தனது நினைவுகளுக்குள் ஆழ்ந்து நிலத்தில் ஒரு தாவரமாக மாறிவிட விரும்புகிறாள். அவளது வாழ்வின் தவறுகளை பெருமழை அழித்துவிடுகிறது. புயலே அவளது மீட்சியின் அடையாளம்.
உறங்கும் நாய்கள்
புதிய குறுங்கதை

மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வட்டத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். எனது குடியிருப்பின் படிக்கட்டை ஒட்டிய இடம் சாம்பல் நிற நாயுடையது. இப்போது அந்த இடத்தில் மூன்று நாய்கள் வளையம் போல உறங்கிக் கொண்டிருந்தன. காலில் ஒன்றை மடக்கி இன்னொரு காலை பின்னங்கால் மீதிட்டு வாலைத் தளர்த்தி ஒடுங்கிய முகத்துடன் உறங்கும் மூன்று நாய்களுக்கு நடுவே நீல நிற கிழிந்த துணியொன்று கிடந்தது விநோதமாகத் தோன்றியது. என்ன ஆயிற்று இந்த மூன்று நாய்களுக்கும். யாராவது படியை நோக்கி வரும் போது கறுப்பு நாய் லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தது. அப்போதும் அதன் உடலில் அசைவில்லை. கடந்த சில நாட்களாகவே மூன்று நாய்களும் தீராத உறக்கத்தால் பீடிக்கப்பட்டவை போலப் பகலிலும் தளர்ந்து கிடந்தன. அதன் காதுகள் உதிர்ந்த இலை காற்றில் அசைவது போல லேசாக அசைவதைக் கண்டேன். நாயின் பாதித் திறந்த கண்களுக்குள் பசியும் நோயின் வேதனையும் வெளிப்பட்டன. சாம்பல் நிற நாய் முதுமையை அடைந்துவிட்டது. அந்த நாய் ஒரு நாள் வாந்தியெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளாகவே எங்கள் வீதியில் மூன்று நாய்களும் தெருவில் ஒன்றாக அலைவதைப் பார்த்திருக்கிறேன்.. தெரு நாய்களுக்கு பெயர்கள் கிடையாது. நிறம் தான் அதன் அடையாளம். ஒட்டமும் நடையுமாக இருக்கும் இந்த நாய்களில் ஒன்று சப்தமாகக் குரைத்தபடி வாகனங்களைத் துரத்தி ஓடக்கூடியது. காரை துரத்தியோடுவதால் என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. நாய்களின் விசித்திரமது. சாம்பல் நிற நாய் சிறுவர்களைப் பார்த்தால் மட்டுமே குரைக்கக் கூடியது. அதற்கு என்ன கோபமே தெரியவில்லை. கறுப்பு நிற நாய் தொட்டிச்செடிகளுக்கு அருகே போய்த் தான் படுத்துக் கொள்ளும். அந்த நாய் சில நேரம் உதிர்ந்து கிடக்கும் பூக்களை முகர்ந்து பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாக அந்த நாய்கள் ஒரே இடத்தில் கொடியிலிருந்து விழுந்த துணிகள் கிடப்பது போலிருந்தன. அவற்றின் மௌனம் என் மனதை வேதனைப்படுத்தியது. சாவை நெருங்கும் நாயிற்கு மற்ற இருநாய்களும் துணையிருப்பதாகவே உணர்ந்தேன். முதுமையடைந்த நாயின் முகபாவம் மனதில் உள்ளதைக் கேட்கத் தெரியாத சிறுமியின் சாடையை ஒத்திருந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் மூப்படைந்த நாய் இறந்து போயிருந்தது. அதன் அருகில் இரண்டு நாய்களும் முன்பு போலவே படுத்திருந்தன. குடியிருப்பின் காவலாளி இறந்துகிடந்த நாயின் முகத்தில் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடியே நாயை எங்கே புதைப்பது என்பதைப் பற்றிக் குடியிருப்பு நிர்வாகியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
இறந்த நாயின் முகத்தில் வெயில் விழுந்து கொண்டிருந்தது. அசைவற்ற நாயின் வாலைக் காணுவது மிகுந்த வருத்தமளித்தது அதுவரை உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களும் மெல்ல எழுந்து கொண்டன. சோம்பலான நடையுடன் அவை வீதியில் மெதுவாகச் சென்றன. தெருவைக் கடந்து மேற்கே செல்லும் போது எதையோ பறி கொடுத்தது போலத் திரும்பிப் பார்த்துக் கொண்டன. பின்பு அவற்றை எனது வீதியில் பார்க்கவேயில்லை.
•••
January 22, 2024
அன்பும் நன்றியும்
47வது சென்னை புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அவர்களுடன் உரையாடினேன். வாசகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் ஈடற்றது. புத்தகக் கண்காட்சியின் போது நூறு கைகள் எனக்கிருப்பது போல உணர்ந்தேன். இந்த நம்பிக்கை வாசகர்கள் உருவாக்கியது. அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி.

தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து எனது நூல்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
எனது புதிய புத்தகங்களையும் பரிந்துரைகளையும் ஒளிப்பதிவு செய்து உதவிய ஸ்ருதி டிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும். இணைந்து ஒளிப்பதிவு செய்த சுரேஷ் மற்றும் நேர்காணல் செய்த எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு நன்றி.
தேசாந்திரி பதிப்பகம் தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் வெளியிட்டு உதவிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் இணைய ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் அனைவருக்கும் நன்றி.

எங்கள் அரங்கிற்கு வந்திருந்த இலங்கை, துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த படைப்பாளிகள். வெளிநாட்டு வாசகர்கள், புத்தகக் கடை உரிமையாளர்கள், இலக்கிய அமைப்பைச் சார்ந்தவர்கள், தங்கள் புதிய நூல்களை எனக்குப் பரிசாக அளித்த சகபடைப்பாளிகள். இளங்கவிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
எனது அன்பிற்குரிய எழுத்தாளர் வண்ணதாசன், மருத்துவர் பரணி, மருத்துவர் நந்தினி, ஆடிட்டர் சந்திரசேகர், ஹைதராபாத் கணேஷ்குமார், எழுத்தாளர் சாந்தன், நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன், டெல்லி நெடுங்கிள்ளி, இயக்குநர் வசந்தபாலன், வழக்கறிஞர் மணிசெந்தில், வேலூர் லிங்கம். உள்ளிட்ட தோழமைகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
புத்தகங்களை அழகாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். நூல் வடிவமைப்பில் உதவிய குரு, தேசாந்திரி பதிப்பக அரங்கினை நிர்வாகம் செய்த மேலாளர் அன்புகரன். அரங்க உதவியாளர்களாகப் பணியாற்றிய மணிகண்டன், கண்ணகி, சிவரஞ்சனி அருண்பிரசாத். ஒட்டுநர் பச்சையப்பன், எல்லா நாட்களும் உடனிருந்து உதவிய நண்பர் சண்முகம், கபிலா காமராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
தேசாந்திரி பதிப்பகத்தின் நிர்வாகப் பொறுப்பைச் சிறப்பாக நடத்தி வரும் அன்பு மகன் ஹரி பிரசாத்திற்கு பாராட்டுகள்.

இந்த ஆண்டுப் புதிய நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது. நாம் சேர்ந்து பயணிப்போம். இலக்கியம் வளர்ப்போம்.
நன்றி நண்பர்களே.
January 17, 2024
தேதியற்ற மத்தியானம்
கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பு தேதியற்ற மத்தியானம் தேசாந்திரி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.

January 15, 2024
காலம் இதழில்
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இலக்கிய இதழில் ஓவியம் சார்ந்த எனது இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. முதற்குறுங்கதையின் தலைப்பு வெர்மீரின் பால். இதழில் அச்சுப்பிழையாக வெர்மின் பால் என வந்துள்ளது.
இரண்டாவது கதை வான்கோவின் உருளைகிழங்கு உண்பவர்கள் ஓவியம் குறித்தது. தலைப்பு : பசியின் வெளிச்சம்.


S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
