எழுத்தே வாழ்க்கை

எஸ். ராவின் புத்தகத்தினூடே ஒரு பயணம் :

G. கோபி

எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற வரலாற்றுக் கட்டுரைகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை. மேலும் துணையெழுத்து, இலக்கற்ற பயணி, ரயில் நிலையங்களின் தோழமை, வீட்டில்லாத புத்தகங்கள், தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைக்களும் வாசிப்பதற்கு அரிய தகவல்களும் வித்தியாசமான அனுபவங்களும் கொண்டவை.

எஸ். ராவின் புத்தகங்கள் போன்றே உரைகளும் கேட்பதற்கு அரிய பல இனிய தகவல்களையும் இலக்கியத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தியவை. அவரது உலக இலக்கியக் கட்டுரைகள், மூத்த எழுத்தாளர்களின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அவர் தொடர்ந்து உரையாற்றியும் இணையத்திலும் எழுதியும் வருகிறார். அது மட்டுமில்லாமில் சிறுவர்களுக்காக அவர் எழுதிய புத்தகங்களுள் சிரிக்கும் வகுப்பறை, ஆலீஸின் அற்புத உலகம் மொழி பெயர்ப்பு நூல் , குட்டி இளவரசன் நாவல் பற்றிய இலக்கிய உரை போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் உளவியலையும் வாழ்க்கையின் நெருக்கடியையும் விவரிக்கக் கூடியது.

எனக்குத் தனிப்பட்ட முறையில் நிமித்தம் நாவல் மிக நெருக்கமானது. பல தடவை வாசித்திருக்கிறேன். சிறுவயதில் அப்பாவின் பாசமும் அன்பும் கிடைக்காத சிறுவனின் அகவுலகை எழுதியிருப்பார். அப்படியான சிறுவர்களைப் பள்ளியிலும் அன்றாட வாழக்கையிலும் சந்தித்திருக்கிறேன். ஆனால் இலக்கியத்தில் அதை இவ்வளவு ஆழமாகச் சொன்னது முக்கியமான பணி.

சிறுகதைகளில் தாவரங்களின் உரையாடல், சிவப்பு மச்சம், பெயரில்லாத ஊரின் பகல்வேளை, பதினெட்டாம் நூற்றாட்டாண்டின் மழை, நடந்து செல்லும் நீருற்று, காந்தியை சுமப்பவர்கள், அதிகதைகள் மற்றும் பௌத்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகளும் முக்கியமானவை மற்றும் நெருக்கமானவை. உறுபசியும், இடக்கை, சஞ்சாரம் என்னை மிகவும் பாதித்த நாவல்கள் .

இலக்கியம் பேச துணைஇல்லாமல் நண்பர்களில்லாமல் நான் சென்னையில் அறையில் அடைந்து கிடந்த நாட்களில் எஸ். ரா அவர்களின் வாசகபர்வம், இலக்கற்ற பயணி போன்ற புத்தகங்களை வாசித்து ஆறுதல் அடைந்திருக்கிறேன். புத்தகம் வாங்கி வாசிக்க முடியாத காசில்லாத தருணங்களில் வேலை கிடைக்காத நாட்களில், தஸ்தவேஸ்கி பற்றிய எஸ். ரா ஆற்றிய உரையைக் கேட்டது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் முக்கியமான வரலாற்று நிகழ்வாக அமையுமென வாழ்த்துகிறேன்.

வாழ்வின் மீதான குழப்பங்கள், பதற்றம், மனதின் வெறுமை, கசப்பு ஏற்படும் தருணங்களில் எஸ். ராவின் இலக்கிய உரைகள் கேட்பது நம்பிக்கை ஊட்டுபவையாக அமைந்தது. உலக இலக்கியத்தைப் பற்றித் தமிழ் இலக்கிய வாசகர்களுக்குத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவது பெரும் பணி. இதன் மூலம் நிறையப் புத்தகங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.

எழுத்தே வாழ்க்கை புத்தகத்தில் எஸ். ரா அவர்களின் வாழ்க்கை நினைவுகளைக் குறித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. பள்ளி வாழ்க்கை, காதல் நினைவுகள், இலக்கியத்திற்காகச் சுற்றி அலைதல், புத்தகங்கள் மீதான காதல் என்று வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாகவுள்ளது.

எஸ். ராவின் புனைவுலகம் தத்துவம் மற்றும் எளிய மனிதர்களின் உளவியல், நெருக்கடிகள் பிரச்சனைகள் மற்றும் பால்ய கால நினைவுகளையும் கொண்டது. குறிப்பாகப் பால்ய வயது நாட்களில் நாம் பார்த்த வெயில் ஒரு முக்கியக் கதாபாத்திரம். கவித்துவமான உரைநடையில் வாழ்வின் நினைவுகளின் கதை கூறும் வரலாற்று பின்னணியைக் கொண்ட பின் நவீனத்துவ எழுத்துக்களைக் கொண்டது. என்பது எனது தனிப்பட்ட பார்வை.

புதிய புதிய கதை கூறும் முறைகளைத் தனது எழுத்தில் கையாண்டு பல மாற்றங்களையும் செய்திருப்பது சிறப்பானது.

சாமானிய மனிதர்களின் வாழ்வை அவர்கிளைக்கப்படும் அநீதி அதிகாரத்தால் சுரண்டப்படும் அவல வாழ்க்கை குறிப்பாக ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வை, மறை க்கப்பட்ட வரலாற்று உண்மைகள், பண்பாட்டு சிறப்புகளை வாழ்வின் மீட்டெடுப்பு, சிறார்கள் அடையும் நெருக்கடிகள் உளவியல் பாதிப்புகளைத் தொடர்ந்து தனது படைப்புகளில் எழுதி வருகிறார்.

சிறுவயதில் விரும்பியது கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட கசப்பை அனுபவித்த பால்ய காலத்தைக் கொண்ட சிறுவர்களின் கதையை நிமித்தம் நாவலில் நுட்பமாக விவரித்திருப்பார். பயணத்தின் வழியாக வாழ்வை புரிந்து கொண்ட எஸ். ரா, மனிதனுக்கு வீடுதான் முக்கியமான அங்கம். ஒரு மனிதனை வீடும் குடும்ப உறவுகளும் புரிந்து கொண்டாலே அவன் வாழ்க்கை மேம்படும் என்கிறார்.

கலைகளின் அவசியத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அவருடைய எழுத்துக்கள் ஓவியம் சிற்பக் கலை, பண்பாட்டு விழுமியங்கள், தொல் சான்றுகள் சங்க இலக்கியப் படைப்புகளின் மீதான அவருடைய பார்வை எனத் தமிழ் பண்பாட்டு வெளியை அதன் இலக்கியத் தளத்தில் வளர்ச்சியடைய வைத்தது சிறப்பான பணி.

எஸ். ராவின் புத்தகங்கள் எதைப் பேசுகின்றன? அவரைத் தெரிந்து கொள்வதின் வழியாக நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம்? அவர் ஏன் இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? புத்தகங்கள் எழுதி இலக்கியம் சார்ந்து மட்டுமே பொருளாதார நெருக்கடி நிறைந்த வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்? பயணம் செய்வதால் ஏற்படும் அனுபவங்கள் வழியாக வாழ்வின் மகத்துவம் என்ன? எஸ். ரா எழுதும் வரலாறு எதைப் பேசுகிறது? என்ற பல கேள்விகளை எழுத்தே வாழ்க்கை புத்தகம் எழுப்புகிறது.

பயணம் செய்வதால் நாம் அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறோம். நம்முடன் பயணம் செய்கிறவர்களும் நாமும் ஒரு சக பயணிகளே. பயணம் மனிதர்களுக்கிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உண்டாக்குகிறது என்று எஸ். ரா சொல்கிறார். இலக்கியம் புத்தகம் வாசிப்பு இரண்டிற்க்காகவும் எஸ். ரா மேற்கொண்ட வாழ்வும் மிகுந்த அலைச்சலும் சிரமங்களும் நிறைந்தவொன்று.

புத்தகம் எழுதி வெளியிடுவதற்க்காக பணமில்லாமல் நண்பர்கள் உதவியோடு புத்தகம் எழுதி வெளியிட்ட சம்பவத்தை வாசித்தேன். தமிழ் சூழலில் அறிமுக எழுத்தாளர் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட எத்தகைய சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் எழுதிய புத்தகங்களை ஒவ்வொரு பதிப்பகமாகச் சுமந்து கொண்டு தானே விற்பது சவாலான பணி. எழுத்தே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்வது எவ்வளவு சிரமமானது என்று தெரிந்தும் இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் தன்னை அர்ப்பணித்து வாழ்வது அவர் கொண்டுள்ள நம்பிக்கையையும் மன உறுதியையும் காட்டுகிறது. இலக்கியம் வாசிப்பது வழியாகச் சொந்த வாழ்வின் துயரங்களைக் கடந்து போகிறோம். புத்தகம் நமது சிந்தனையையும் ஆளுமையையும் தூண்டுவதின் வழியாக வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளைப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறனையும் வளர்க்கிறது. மேலும் தன்னயறியாத குழப்பங்களைத் தெளிவு படுத்தி நமது நிறை குறைகளை நாமே சுயமாகப் பகுப்பாய்வு

செய்து சுய சார்புள்ள மனிதனாக வாழ உதவுகின்றன. வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது என்று எழுத்தாளர் கி. ரா சொல்வது உண்மைதான்.

கூட்ஸ் வண்டியில் எஸ். ரா பயணித்த அனுபவத்தை வாசிக்கையில் மிகச் சுவாரஸ்யமாகஇருந்தது. நானும் பள்ளி வயதில் ஊருக்கு போகும் போது கடந்து சொல்லும் கூட்ஸ் வண்டியை பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கடைசிப் பேட்டியில் வண்டி ஓட்டுநர் பச்சை கொடி ஆட்டியபடி போவார். ஆள் துணையே இல்லாமல் எப்படிப் போகிறார் என்று யோசிப்பேன். ஆனால் ஒருவர் அதில் பயணம் செய்திருப்பது வினோதமானது. அந்த நினைவுகளின் வழியாக நாமும் அந்த அனுபவத்திற்கு உட்படுகிறோம். கூட்ஸ் வண்டி ஓட்டுநர்கள் தனிமையும் பணிச் சுமை வெறுமையும் சொல்லப்படுகிறது.

ஜப்பான் பயணம் பல அரிய தகவல்களை எடுத்துரைக்கிறது. இரண்டாம் உலகப் போர் குறித்தும் ஹிரோஷிமா நாகசாஹியில் நிகழ்ந்த அணு குண்டு சோதனையும் அதன் சூழல் பற்றி விவிரிக்கிறது. லிட்டில் பாய் எனப்படும் அந்தப் பெயர் கொண்ட அணுகுண்டு வெடித்து ஹிரோசிமா தரைமட்டமானது. பள்ளி பாடப் புத்தகத்தில் உரைநடையில் பாடமாக அந்தச் சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஜப்பான் மீது அணு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் உள்ள வரலாறு பற்றிப் பேசுகிறது அந்தக் குறிப்புகள். ஜப்பானின் வன்முறை வெறியாட்டமும் அமெரிக்கவின் ஈவு இரக்கமற்ற செயலும் இதற்க்கிடையே எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டனர் என்ற வரலாற்று நிகழ்வு மறக்க முடியாது. அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு எப்படி முன்னேறினார்கள் என்பது பிரமிப்பாகயிருந்தது. ஜப்பான் மக்கள் வாழ்வில் அந்த நினைவு எப்படி உறைந்து போயுள்ளது. காலம்தான் தீர்வு தரும். மனிதர்கள் கடந்து போய்க்கொண்டே இருப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும். ஜப்பான் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகிறார். அவர்கள் ஒருவொருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். பொது இடங்களில் அமைதியாக நடந்து கொள்கிறார்கள். புத்தகம் வாசிப்பதிலும் ருசியான உணவு முறைகளிலும் நாட்டம் கொண்டவர்கள் என்றாலும் அங்கே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது முரணாகவுள்ளது.

காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் எழுதுவதாக எஸ். ரா தெரிவித்தார். எதையும் திட்டமிட்டு செய்யும் எஸ். ரா அதை 90 சதவீதம் பின்பற்றுவதாகச் சொன்னது நேரத்தை திட்டமிடுதல் பற்றிய அவசியத்தைத் தெளிவு படுத்தியது.

எழுத்தாளர் என்பவர் யார்? சமூக வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் அவருடைய பங்கென்ன? என்று சிந்தித்தால் நேரிடையாக, நீதிப் போராட்டம், சமூக முன்னேற்றம் அரசியல் புரட்சி என்று எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ஆனால் தனிமனித அவலங்களை உளவியல் பிரச்சனைகளை அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆவணபடுத்தவும் இலக்கியத் தளத்தில் பதிவு செய்யவும் எல்லாக் காலக் கட்டத்திலும் தேவையிருக்கிறது. எஸ். ரா வை அந்த மாதிரி வகைப்படுத்தலாம் . புனைவின் வழியே அரசியல் அதிகாரத்துவத்தை இடக்கை போன்ற நாவல் விவரித்தாலும், நிமித்தம், சஞ்சாரம், நெடுங்குருதி போன்ற நாவல்கள் தனிமனித நெருக்கடிகளை எளிய தத்துவார்த்த உரைநடையில் பதிவு செய்துள்ளது. அதுவும் வரலாற்றினைப் புனைவின் வழியே சொல்லமுற்படுவது இலக்கியத்தில் முக்கியமான பணி.

அனைத்தையும் விடக் குடும்பம் தான் ஒரு மனிதனின் வாழ்வில் பெரும் பங்காற்றுகிறது. பெரும் ஆளுமைகள், சாதனையாளர்கள் உருவாகக் குடும்ப ஆதரவு முக்கியம். எஸ். ராவின் குடும்பத்தைப் பற்றிய அத்தியாயத்தில் எழுத்து சார்ந்தும் புத்தகம் பயணம் சார்ந்தும் குடும்ப உறவுகள் பெற்றோர்கள் தந்த சுதந்திரமும் அவர் முன்னேற எப்படி உதவியது என்ற ஊக்கமும் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஆனால் அதே நேரம் மகத்தான படைப்பாளி உருவாவதை அவனைத் தவிர யாராலும் தடுக்க முடியாது என்று இலக்கிய உரை ஒன்றில் எஸ். ரா சொல்கிறார் .

கல்வி வியாபாரமும் விளம்பரமயமானதுமாக மாறி வருகிற பிம்பம் நிலவினாலும் ஒரு புறம் மார்க் மட்டுமே கல்வி கற்றலின் அளவீடாகக் கட்டமைக்கப்படுவது தவறான அணுகுமுறை. அதிலிருந்து மாறுபட்டு விரும்பிய கனவிற்காகவும் தனிமனித ஆளுமையை வளர்க்கும் விதமாக எழுத்தே வாழ்க்கை என்ற புத்தகம் எஸ். ராவின் வாழ்வை விவரிக்கிறது. குடும்பமும் பள்ளியும் எழுத்தாளனின் வாழ்வில் எப்படிப் பங்காற்றியுள்ளது என்பதற்கு எழுத்தே வாழ்க்கை ஒரு நல்ல சான்று.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2024 23:39
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.