ஏழு பாடல்கள்
Attenborough’s Wonder of Song என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

இதில் பிபிசியைச் சேர்ந்த டேவிட் அட்டன்பரோ தனக்குப் பிடித்தமான இயற்கையின் ஏழு பாடல்களை அறிமுகப்படுத்துகிறார்.

குறிப்பாக Indri Lemur,எனும் குரங்கின் பாடல். பறவைகளான Great Tit, Nightingale, Lyrebird, Fairy Wren, . Hawaiian ʻŌʻō பாடல் மற்றும் Humpback Whale எனப்படும் திமிங்கிலம் ஆழ்கடலில் ஏற்படும் ஓசை உள்ளிட்ட ஏழு பாடல்களை விவரிக்கிறார்.
அத்தோடு பறவைகள் ஏன் பாடுகின்றன. அதன் குரலின் இனிமைக்கு என்ன காரணம். ஆண் பறவைகள் மட்டும் தான் பாடுமா என்ற கேள்விகளுக்கும் விடையளிக்கிறார்.
இன்னொரு வகையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அட்டன்பரோ தனது இளமைக்கால நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் அட்டன்பரோ இங்கிலாந்தில், கடந்த 60 ஆண்டுகளில் 38 மில்லியன் பறவைகள் வானிலிருந்து மறைந்துவிட்டதாகச் சொல்கிறார். காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விடச் சீரழிவு இதற்கான முக்கியக் காரணிகளாகும்.

ஒரு காலத்தில் லண்டன் நகரைச் சுற்றிக் கேட்டுக் கொண்டிருந்த நைட்டிங்கேலின் பாடலை இப்போது கேட்க முடியவில்லை. நைட்டிங்கேலின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது எனும் அட்டன்பரோ கீட்ஸின் Ode to a Nightingale கவிதையை வாசித்துக் காட்டி, அந்தப் பாடலை கீட்ஸ் ஹாம்ப்ஸ்டெட்டில் உள்ள ஸ்பானியார்ட்ஸ் தோட்டத்தில் எழுதினார் என விவரிக்கிறார். இன்று அந்தத் தோட்டமும் இல்லை. நைட்டிங்கேலின் பாடலும் இல்லை. லண்டன் மாநகரம் மிகப்பெரிய காங்கிரீட் காடாகிவிட்டது என்ற உண்மையை உணரவைக்கிறார்.
இன்றுள்ளது போல அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத 1960களில் இளைஞரான டேவிட் அட்டன்பரோ, மடகாஸ்கர் காடுகளுக்குள் பெரிய டேப்ரிக்கார்டர் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அபூர்வ வகைக் குரங்கினமான இந்திரியின் குரலைப் பதிவு செய்யச் செல்கிறார்.
இந்த வகைக் குரங்குகள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் செலவிடுகின்றன. இந்திரியின் குரலைக் கேட்டு அதைப் பதிவு செய்கிறார். ஆனால் எங்கேயிருந்து அது குரல் கொடுக்கிறது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் பதிவு செய்த அதன் குரலை ஒலிக்கவிடும் போது அது எதிராளி வந்துவிட்டதாக வந்துவிட்டதாக நினைத்து பதில் குரல் கொடுக்கிறது. இப்போது அதை அடையாளம் கண்டு படம் எடுக்கிறார் அட்டன்பரோ. இதன் பாடல் பாதுகாப்பு உணர்வு மற்றும் எதிராளிக்கு விடப்படும் எச்சரிக்கை என்பதையும் புரிந்து கொள்கிறார்.
ஒரு பறவை ஏன் பாடுகிறது என்பதற்கு இணையைத் தேர்வு செய்ய என்று பொதுவாகச் சொல்வார்கள். அதுவும் உண்மை தான். ஆனால் பறவைகளின் பாடல் என்பது அது சிறந்த தந்தையாக இருக்க முடியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்கான அடையாளம். எதிரிக்கான எச்சரிக்கை. தனது எல்லையை அடையாளப்படுத்தும் அறிவிப்பு. பெண் பறவையை வசீகரிக்கும் தந்திரம் என்று பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் டேவிட் அட்டன்பரோ.
முதன்முறையாக நைட்டிங்கேலின் குரலைப் பதிவு செய்து அத்துடன் செல்லோ இசையை இணைத்து வெளியிடப்பட்ட பிபிசியின் நிகழ்ச்சியைப் பற்றி நினைவு கொள்ளும் அட்டன்பரோ அந்தக் குரல் மக்களை எப்படி மயக்கியது என்பதை விவரிக்கிறார்.

படத்தின் ஒரு பகுதியாக ஆழ்கடலில் திமிங்கலம் எழுப்பும் ஓசையைப் பதிவு செய்து காட்டுகிறார்கள். கடற்கன்னிகளின் சங்கீதம் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்ட இந்த விநோத சங்கீதம் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகிறது. எதற்காக திமிங்கலம் இப்படி குரல் எழுப்புகிறது என்று புரியவில்லை. ஆனால் கடலின் ரகசியங்களை நான் முழுமையாக அறிந்தவன் என்று சொல்வது போல அதன் முணுமுணுப்பு, தவிப்பு இசையாக வெளிப்படுகிறது.
1970 ஆம் ஆண்டில் திமிங்கல இசையைப் பதிவு செய்து வெளியிட்டார்கள். இதன் காரணமாக உலகெங்கும் திமிங்கல வேட்டையைத் தடுக்கும் “சேவ் தி வேல்ஸ்” இயக்கம் உருவானது.

ஆஸ்திரேலிய லைர்பேர்ட்யின் பாடலைப் பற்றிய பகுதி வியப்பளிக்கிறது. அதன் வியப்பூட்டும் தோற்றம் மற்றும் விதவிதமாகக் குரல் எழுப்பிப் பாடும் முறை ஆச்சரியமளிக்கிறது இந்தப் பறவைக்கு மிமிக்ரி செய்யும் திறமை இருக்கிறது, 125 விதமாக அது குரலை எழுப்பும் என்கிறார்.
அதுவும் பெண் பறவையை வசீகரிக்க புதிது புதிதாகப் பாடுகிறது. போட்டிக்கு இன்னொரு ஆண் பறவை வந்துவிட்டால் பெரிய கச்சேரியே நடக்கிறது. எப்படியாவது பெண் பறவையை வசீகரித்துவிட வேண்டும் என அது உச்சநிலையில் பாடுகிறது. அதன் முயற்சி பலிக்கவில்லை. கடைசியில் அது தந்திரம் செய்ய முடிவெடுக்கிறது. , பெரிய ஆபத்து தன் எல்லைக்கு வெளியே இருப்பதாக பெண் பறவையை நம்ப வைக்க குரல் எழுப்புகிறது. அதற்குப் பயந்து பெண் பறவை ஆண் பறவையை ஏற்றுக் கொள்கிறது.
தான் ஒரு நல்ல தந்தையாக இருப்பேன் என்பதற்குச் சான்றாகவே லைர்பேர்ட்டின் பாடல் உள்ளது என அட்டன்பரோ விவரிக்கும் போது பறவையின் பாடலுக்குள் அழகான காதல்கதை ஒளிந்திருப்பதை உணர முடிகிறது.
பேராசிரியை நவோமி லாங்மோர் பெண் பறவைகளும் பாடுவதை அடையாளம் கண்டு ஆராய்ந்து டார்வினின் நிலைப்பாடு சரியானதில்லை என்று விளக்குகிறார்.

ஹவாய்யைச் சேர்ந்த ஓ’ஓ பறவை தனது துணையை அழைக்கப் பாடுகிறது, அந்தக் குரலில் வெளிப்படும் சோகம் நம்முடைய மனதைத் தொடுகிறது. ஓ’ஓ பறவை இனம் இன்று முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன் குரலை மட்டும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
இயற்கை தனது கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை. திரும்பிப் பார்த்து ஏக்கம் கொள்வதில்லை. ஆனால் இயற்கையின் அதிசயங்களை இப்படி ஆவணப்படுத்தாமல் போனால் எதிர்கால தலைமுறைக்கு இயற்கை என்பதே தொட்டிச் செடியாக தான் மிஞ்சியிருக்கும்.
ஒராயிரம் பாடல்களை கொண்ட இயற்கையின் அழகினை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அதிலும் ஆசிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டும். பள்ளிதோறும் இதனை ஒளிபரப்புவது அவசியம். மாணவர்கள் தங்களின் பாடப்புத்தகங்களுக்கு வெளியே இது போன்ற ஆவணப்படங்களை காணும் போது தான் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலும் அதைப் பாதுகாப்பதற்கான புதிய ஆர்வமும் ஏற்படும்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
