க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும்
க.நா.சுவைப் போல உலக இலக்கியங்களைத் தேடித்தேடி படித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரைக் காண முடியாது. சர்வதேச படைப்பாளிகளை முறையாக அறிமுகம் செய்ததோடு அவர்களின் முக்கிய நாவல்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்.

இவ்வளவு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்ட க.நா.சு ஏன் ரஷ்ய இலக்கியங்கள் எதையும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவை பிடிக்கவில்லையா. அல்லது பலரும் மொழிபெயர்ப்புச் செய்கிறார்களே நாம் வேறு எதற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என நினைத்தாரா என்று தெரியவில்லை.
இவ்வளவிற்கும் க.நா.சுவின் காலத்தில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. டால்ஸ்டாயின் நாவல்கள் சிறுகதைகள். கட்டுரைகள். ஆன்டன் செகாவ் சிறுகதைகள். மாக்சிம் கார்க்கி கதைகள், துர்கனேவ் நாவல்கள், புஷ்கின் கவிதைகள் என நிறைய ரஷ்ய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
புதுமைப்பித்தன் அலெக்சாண்டர் குப்ரினை மொழியாக்கம் செய்திருக்கிறார். வல்லிக்கண்ணன் மாக்சிம் கார்க்கியை, டால்ஸ்டாயை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். ராமநாதன். பாஸ்கரன் மற்றும் தொமுசி ரகுநாதன் எனப் பலரும் ஆங்கிலம் வழியாக ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள்.
மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம் மற்றும் முன்னேற்ற பதிப்பகம் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்வதற்கு முன்பாகவே இவர்கள் மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார் என்பது முக்கியமானது.
ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம். முகமது ஷெரிபு நா. தர்மராஜன். போன்றவர்கள் அரசின் அழைப்பில் ரஷ்யாவிற்குச் சென்று தங்கி நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். அந்த நினைவுகளை எவரும் விரிவாகப் பதிவு செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது

டால்ஸ்டாயின் புகழ்பெற்ற war and peace நாவலை தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் தமிழில் போரும் வாழ்வும் என மொழியாக்கம் செய்திருக்கிறார். 1957ல் இந்த நாவல் சக்தி கோவிந்தனால் வெளியிடப்பட்டிருக்கிறது. இது மிகச்சிறப்பான மொழிபெயர்ப்பு.
இந்த மொழிபெயர்ப்பு எப்படி உருவானது என்பதைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பொன் தனசேகரன் எழுதிய. டி.எஸ். சொக்கலிங்கம் நூலில் அறிந்து கொள்ள முடிகிறது.

Louise Maude and Alymer Maude ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த War and Peace நூலை ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய விரும்பிய சக்தி வை. கோவிந்தன் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்திடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றார்.
மிகப் பெரிய நாவல் என்பதால் யாரை மொழிபெயர்ப்புச் செய்யச் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அப்போது டி.எஸ். சொக்கலிங்கத்தின் நினைவு வந்த்து. உடனே பொறுப்பை அவரிடம் பொறுப்பு ஒப்படைத்தார்.
••

இங்கிலாந்தைச் சேர்ந்த அய்ல்மர் மௌட் மற்றும் லூயிஸா இருவரும் இணைந்து டால்ஸ்டாயின் முக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். 1890களில் இந்த மொழிபெயர்ப்புகள் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கின்றன.
மதகுருவின் மகனான அய்ல்மர் மௌட் 1874ம் ஆண்டுத் தனது பதினாறாவது வயதில் ரஷ்யாவிற்குச் சென்றார். சில ஆண்டுகள் மாஸ்கோவில் கல்வி பயின்றார். பின்பு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மாஸ்கோவில் வசித்த பிரிட்டிஷ் நகைக்கடைக்காரரின் மகளான லூயிஸாவை திருமணம் செய்து கொண்ட மௌட் வணிகத்தில் ஈடுபடத் துவங்கினார். மாஸ்கோவிலிருந்த அவர்களின் பல்பொருள் அங்காடி மிகவும் புகழ்பெற்றது.
லூயிஸாவும் இருமொழிப்புலமை கொண்டவர். அவரது சகோதரி மேரி டால்ஸ்டாயின் தொடர்கதைகளுக்கு ஒவியம் வரைந்திருக்கிறார். டால்ஸ்டாயின் பண்ணைக்குச் சென்று தங்குவதுடன அவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் அய்ல்மர் மௌட். லூயிஸாவிற்கு டால்ஸ்டாய் படைப்புகள் மீது இருந்த தீராத ஆசையைத் தொடர்ந்து அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்த்து
வணிக வெற்றியின் காரணமாக ஏராளமான பணம் சம்பாதித்த மௌட் இங்கிலாந்து திரும்பி சில காலம் அங்கே வசித்திருக்கிறார். ரஷ்ய புரட்சியின் காரணமாக அவரது சொத்துகள் பறிபோயின. ஆயினும் புரட்சிக்குப் பின்பாகவும் அவர் ரஷ்யாவோடு இருந்த தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை.
டூகோபார் இன மக்களுக்கு உதவி செய்யும்படி டால்ஸ்டாய் அவருக்குக் கட்டளை இடவே புலம் பெயர்ந்த அவர்களுடன் தானும் கனடாவிற்குச் சென்றிருக்கிறார். டூகோபார்களைப் பற்றிய நேரடி அனுபவத்தை அய்ல்மர் விரிவான நூலாக எழுதியிருக்கிறார்.
••

தனது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் டி.எஸ். சொக்கலிங்கம். ஆஷ் கொலை வழக்கில் சொக்கலிங்கத்தின் சகோதரர் கைது செய்யப்பட்ட காரணத்தால் அவரது படிப்பை பாதியில் விட நேர்ந்தது. சில காலம் குடும்பத் தொழிலான மளிகை கடையை மேற்பார்வை செய்து வந்தார். 1917ல் சுதந்திர தாகம் கொண்டு காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். அவருடைய அம்மா நேரில் வந்து காந்தியிடம் பேசி தன்னுடைய பிள்ளையை ஊருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனார்
தமிழ்நாடு இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய சொக்கலிங்கம் 1934ல் தினமணி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மணிக்கொடி இதழை உருவாக்கிய நவீன தமிழ் இலக்கியத்திற்கு விதை போட்டவர் இவரே. இவரது நவயுகப் பிரசுராலயம் மூலம் புதுமைபித்தன் சிறுகதைகளை வெளியிட்டார்.
டால்ஸ்டாயின் நாவல்கள் குறித்த அறிமுகத்தைச் சொக்கலிங்கத்திற்கு ஏற்படுத்தியவர் க.நா.சு. அதைப்பற்றிய குறிப்பு ஒன்றும் இந்த நூலில் காணப்படுகிறது.
“டால்ஸ்டாயின் போரும் அமைதியும் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் பற்றிச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார் சொக்கலிங்கம்“ என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.
பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட டி.எஸ். சொக்கலிங்கம் ஆங்கிலத்தில் எவ்வளவு புலமை கொண்டிருந்தார் என்பதற்கும். டால்ஸ்டாயை எவ்வளவு ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கும் இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாட்சியம்.
இவ்வளவு ஆசையாக டால்ஸ்டாயை, தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடிய க.நா.சு ஏன் அவர்களது எந்தப் படைப்பையும் மொழியாக்கவில்லை என்பது வியப்பானதே.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

