பெயர் மறந்த மனிதன்

புகழ்பெற்ற ஸ்பானிஷ் இயக்குநரான விக்டர் எரிஸ் தனது ஐம்பது ஆண்டுகாலத் திரைவாழ்க்கையில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

அவர் கேன்ஸ் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றவர். 31 வருஷங்களுக்குப் பிறகு விக்டர் எரிஸ் தனது புதிய திரைப்படமான Close Your Eyesயை வெளியிட்டிருக்கிறார். இப்போது அவரது வயது 83.

சினிமாவால் நமது நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். அது ஒரு வகை அருமருந்து எனக்கூறும் எரிஸ் இதையே தனது படத்தின் மையக்கருவாகவும் கொண்டிருக்கிறார்.

இதுவும் ஒருவகை துப்பறியும் படமே. ஆனால் இங்கே குற்றத்திற்கு பதிலாக மறந்து போன நினைவுகளை ஒருவர் தேடியலைகிறார்.

இயக்குநர் மிகைல் கேரே மாட்ரிட்டில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக அழைக்கபடுகிறார். அவரது இரண்டாவது படமான The Farewell Gaze ல் நடித்த நடிகரும்,நெருக்கமான நண்பருமான ஜூலியோ அரேனாஸ் ஒரு நாள் படப்பிடிப்பின் போது காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்ற தகவல் கிடைக்கவேயில்லை. இதனால் படம் பாதியில் நின்று போகிறது.

அதன்பிறகு வேறு திரைப்பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மிகைல் கேரேவும் திரைத்துறையை விட்டு விலகி விடுகிறார். தற்போது ஸ்பானிய கடற்கரைக் கிராமம் ஒன்றில் தனியே வாழ்ந்து வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் காணாமல் போன நடிகர் ஜூலியோ அரேனாஸ் பற்றிய உண்மையைக் கண்டறியும் நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது. பணத்தேவைக்காக அதில் கலந்து கொள்ளச் சம்மதிக்கிறார் கேரே

இடைவெட்டாக மிகைல் கேரே எடுத்த திரைப்படத்தின் காட்சிகள் வந்து போகின்றன. 1940 களில் பிரான்சின் கிராமப்புறத்தில் வசிக்கும் பணக்கார யூதரான லெவி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப்பிரிந்து போய்த் தற்போது சீனாவில் வசிக்கும் தனது மகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியை ஜூலியோ அரேனாஸிடம் ஒப்படைக்கிறார். கேரே எடுத்த படத்தின் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக உருவாக்கபட்டுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தன்னுடன் ஜூலியோ அரேனாஸ் கப்பற்படையில் வேலை செய்த நாட்களையும், பிராங்கோ ஆட்சிக்கு எதிராகப் போராடி சிறையில் அடைக்கபட்ட நிகழ்வினையும் பகிர்ந்து கொள்கிறார்.

நேர்காணல் செய்பவர் அவர்களது பழைய புகைப்படம் ஒன்றைக் காட்டி விளக்கம் கேட்கிறார். உணர்ச்சிவசப்படும் கேரே அந்தக் கால்பந்தாட்ட புகைப்படம் பற்றி நினைவு கொள்கிறார்.

ஜூலியோ அரேனாஸ் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா, அல்லது எங்காவது ரகசியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாரா என்று நேர்காணல் செய்யும் பெண் கேட்கிறார். இத்தனை ஆண்டுகளாக அது தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி நான் யூகிக்க விரும்பவில்லை என்கிறார் கேரே.

நிகழ்ச்சியின் முடிவில் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஜூலியோ அரேனாஸின் மகளைத் தங்களின் நிகழ்ச்சிக்கு அழைத்து வர முடியுமா என்று கேட்கிறார்

அவளுடன் தனக்குத் தொடர்பு இல்லை எனக் கேரே மறுக்கும் போது, தன்னிடம் தொலைபேசி எண் இருப்பதாகத் தருகிறார்.

அன்றிரவு தனது திரைப்படங்களின் எடிட்டரான மேக்ஸைக் காணச் செல்கிறார் கேரே. படத்தின் மிகச்சிறந்த கதாபாத்திரம் மேக்ஸ். தன்னைச் சுற்றி சினிமா படப்பெட்டிகளுடன் வாழ்ந்து வரும் அவர் சினிமா டிஜிட்டல் மயமாகிவிட்டதை நினைத்து வருந்துகிறார். அவர்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உரிமையோடு மேக்ஸ் கேரேவைக் கண்டிக்கும் விதமும் அவரது சிரிப்பும் மறக்கமுடியாதது. சினிமாவை விட்டு ஒதுங்கி வாழும் இருவரும் இன்றும் அதே நட்புடன் அதே அன்போடு இருப்பது அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஜூலியோ அரேனாஸ் பல்வேறு பெண்களுடன் காதல் கொண்டிருந்ததையும். அவனது சொந்த வாழ்க்கையின் பிரச்சனைகளையும் பேசிக் கொள்கிறார்கள்.

மறுநாள் ஜூலியோ அரேனாஸின் மகள் அனா அரேனாஸைக் காண அவள் பணியாற்றும் அருங்காட்சியகத்திற்குச் செல்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்கிறார். தனது தந்தை காணாமல் போனபோது தனக்கு ஒரு வயது என்றும் அவரது முகம் நினைவில் இல்லை. ஆனால் குரல் அப்படியே மனதிலிருக்கிறது என்கிறார் அனா.

முன்னாள் காதலி லோலாவை சந்திக்கும் காட்சியும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவளுக்குப் பரிசாக அளித்த தனது புத்தகம் ஒன்றை பழைய புத்தகக் கடையில் கண்டெடுக்கும் கேரே அதை அவளிடமே மறுபடியும் ஒப்படைக்கிறார். அப்போது அவள் அடையும் மகிழ்ச்சி அலாதியானது. அவருக்கு விருப்பமான பாடலை லோலா இசைத்துக் காட்டும் விதமும் பிரிந்து வாழ்ந்த போதும் அவர்களுக்குள் இருக்கும் காதலும் சிறப்பானது

காணாமல் போன நடிகரைக் கண்டறியும் முயற்சியின் ஊடாக இழந்து போன தனது உறவுகளை, திரையுலக வாழ்க்கையைக் கேரே மீண்டும் கண்டறிகிறார். இந்த முறை அவர் திரைப்படத்தை இயக்கவில்லை. ஆனால் அதைத் தனது வாழ்க்கையாக உருமாற்றுகிறார்.

இரவில் இளம் நண்பர்களுடன் குடித்தபடியே அவர் கிதார் இசைத்துப் பாடும் போது இன்னும் உற்சாகமான கலைஞராகவே இருப்பதைக் காண முடிகிறது. கடற்கரை கிராமத்தில் ஒரு நாயுடன் வசிக்கும் மிகைலின் பகலிரவுகள் அவர் தீராத தனிமையிலிருப்பதைக் காட்டுகின்றன.

இத்தனை ஆண்டுகளாக யாரும் கண்டறிய முடியாமல் போன ஜூலியோ அரேனாஸ் பற்றிய உண்மை வெளிப்பட்டபிறகு படத்தின் வேகம் அதிகமாகிறது.

நினைவுகள் அழிந்தாலும் சில செயல்களை, அடிப்படை உணர்வுகளை நாம் இழப்பதில்லை என்பதை ஜூலியோ அரேனாஸ் அடையாளப்படுத்துகிறார். படத்தின் இறுதிக்காட்சி அபாரமானது.

படம் இரண்டு வகை நினைவுகளைப் பேசுகிறது. ஒன்று திரைப்படத்தின் நினைவு மற்றது திரைக்கலைஞரின் நினைவு. இரண்டும் பிரிக்க முடியாதது. காணாமல் போன நடிகரின் கதை என்பது ஒரு குறியீடு. காலமாற்றத்தில் சினிமா அடைந்துள்ள வளர்ச்சி இது போன்ற நல்ல கலைஞர்கள் பலரை அடையாளமற்றுச் செய்துவிட்டது. அவர்கள் தானாக விலகியோ, ஒதுக்கி வைக்கபட்டோ, புறக்கணிக்கபட்டோ அவலநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தக் கதையைத் தான் எரிஸ் பேசுகிறார்.

பாதியில் முடிந்த படம், பாதியில் முடிந்த திரைவாழ்வு இரண்டு வேறில்லை தானே,

தனது தந்தையைக் காணுவதற்காக இரவில் அவரது அறைக்குத் தனியே செல்லும் அனா அரேனாஸின் முகத்தில் வெளிப்படும் தவிப்பு மிகவும் உண்மையானது. வெளிப்படுத்தமுடியாத அன்பை அவள் கண்களிலே காட்டுகிறாள்.

பிரிவு என்பது தான் படத்தின் மையக்குறியீடு. அது கேரே இயக்கும் படத்தின் கருவாகவும் இருக்கிறது. காணாமல் போன நடிகரின் வாழ்க்கையாகவும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகச் சினிமாவை பிரிந்து வாழும் கேரேவின் கதையாகவும் இருக்கிறது. பிரிவு என்பது ஒரு புதிர்வட்டம். ஏன். எப்படி நடந்தது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாத சுழலது. சொல்லப்படாத அவர்களின் கடந்தகால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் படத்தில் வெளிப்படுகிறது.

சினிமாவின் மேஜிக் என்பது அது தரும் பரவசம் மட்டுமில்லை. மாறாக அது நம் நினைவுகளை மீட்டும் இசைக்கருவி போன்றது என்பதை எரிஸ் படத்தில் சிறப்பாக உணர்த்துகிறார்.

படத்தின் கடைசிக்காட்சி சினிமா தியேட்டரில் வயதானவர்களுடன் நிறைவு பெறுகிறது, அவர்கள் யாவரும் தாங்கள் இழந்ததை மீண்டும் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவது தான் கலையின் வெற்றி.

Cinema Paradiso வரிசையில் இன்னொரு தரமான கலைப்படைப்பு.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2024 06:38
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.