S. Ramakrishnan's Blog, page 41
March 8, 2024
எழுத்தின் சிறகுகள்.
Shadows in the Sun 2005ல் வெளியான திரைப்படம். பிராட் மிர்மன் இயக்கியுள்ளார்

லண்டனில் வசிக்கும் ஜெர்மி டெய்லர் பதிப்பகம் ஒன்றில் எடிட்டராக வேலை செய்கிறான். ஒரு நாள் பதிப்பக உரிமையாளர் அவனிடம் “நீ வெல்டன் பாரிஷைப் படித்திருக்கிறாயா“ என்று கேட்கிறார்.
“மிகவும் நல்ல எழுத்தாளர். அவரது Shadow Dancer நாவலை விரும்பி படித்திருக்கிறேன். அவர் எழுத்துலகை விட்டு விலகி இத்தாலியின் கிராமப்புறம் ஒன்றில் வசிக்கிறார், யாரையும் சந்திப்பதில்லை “ என்கிறான் ஜெர்மி.
“நீ அவரைச் சந்தித்துப் பேசி எப்படியாவது நமது பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்“ என்று உரிமையாளர் கட்டளையிடுகிறார்
தனது விருப்பத்திற்குரிய எழுத்தாளரைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்கிறான் ஜெர்மி. இயற்கையின் தங்கரேகைகள் ஒளிரும் சின்னஞ்சிறிய இத்தாலிய கிராமம். அங்கே ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறான். வெல்டன் பாரிஷ் பற்றி யாரிடம் கேட்டாலும், தெரியவில்லை என்கிறார்கள். முடிவில் ஒரு நாள் தபால்காரனைப் பின்தொடர்ந்து வெல்டன் வீட்டினைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

வெல்டனின் மகள் இசபெல்லா தனது தந்தைக்குப் பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பக எடிட்டர்களைப் பிடிக்காது. போய்விடுங்கள் என எச்சரிக்கை செய்கிறாள். அதையும் மீறி அவரைச் சந்திக்கச் செல்கிறான்.
வெல்டன் மனநலம் பாதிக்கபட்டவரைப் போல நடிக்கிறார். அதை உண்மை என்று நம்பி தனது அறைக்குத் திரும்பிவிடுகிறான். அன்றிரவு இது வெல்டனின் நாடகம் என்பது புரிகிறது. ஊரே அவரை நேசிக்கிறது. வெளியாட்களுக்கு அவரது இருப்பைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறது எனப் புரிந்து கொண்டு வெல்டனின் மகளின் உதவியோடு மீண்டும் அவரைச் சந்திக்கிறான். இந்த முறை அவர் நாயை ஏவிவிட்டு அவனைத் துரத்துகிறார்
அவமானத்துடன் அறைக்குத் திரும்புகிறான் ஜெர்மி. எதனால் வெல்டன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்துப் பலரிடம் விசாரிக்கிறான்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெல்டனின் மனைவி இறந்து போனார். அதிலிருந்து அவர் எதையும் எழுதுவதில்லை என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.
திரும்பவும் வெல்டனைச் சந்தித்து அவருடன் நட்பாக மது அருந்துகிறான். இந்த முறையும் அவன் அவமானப்படுத்தபடுகிறான். ஜெர்மி உடனடியாக ஊரைவிட்டு போக வேண்டும் என்று வெல்டன் கட்டளையிடுகிறார். ஆனால் ஜெர்மி தனது விடாப்பிடியான முயற்சியால் வெல்டனின் அன்பைப் பெறுகிறான்.

இளம் எழுத்தாளரான ஜெர்மிக்கு வெல்டன் எழுத்தின் ரகசியங்களைப் போதிக்கிறார். அவை படத்தின் மிக அழகான காட்சிகள்
ஒரு எழுத்தாளன் தன் கண்முன்னே இருக்கும் காட்சியை எப்படி எழுத்தில் பதிவு செய்வது என்பதற்குச் சூரிய அஸ்தமனம் பற்றி வெல்டன் விவரிப்பது சிறப்பான பயிற்சிப் பாடம்.
வெல்டனும் ஜெர்மியும் எப்படி எழுதுவது என்பது குறித்து உரையாடும் காட்சிகள் யாவும் சிறப்பாக உள்ளன. அவற்றைத் தனியே தொகுத்தால் எழுத்தின் ஆரம்பப் பாடங்களாகக் கொள்ளலாம்.
ஒரு காட்சியில் லேப்டாப்பில் எழுதிக் கொண்டிருக்கும் ஜெர்மிக்கு ஒரு டைப்ரைட்டரைத் தந்து இதில் எழுது என்கிறார் வெல்டன். கம்ப்யூட்டரில் எழுதுவது எளிதானது என்கிறான் ஜெர்மி. எழுதுவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார் வெல்டன். அப்போது அவர் சொல்லும் அறிவுரை இதுவே.
“Typewriters make you think about the words you choose more carefully, because you can’t erase them with the push of a button.“
அது போலவே ஜெர்மியின் கையெழுத்துப்பிரதியை வாசித்து விட்டு வெல்டன் அதை இன்னொரு முறை அப்படியே திருத்தி எழுது என்கிறார். ஜெர்மி தான் எழுதிய பக்கங்களை நெருப்பில் போட்டுவிட்டுப் புதிதாக எழுத முயற்சிக்கிறான். எளிதாக எழுத முடியவில்லை. ஏற்கனவே எழுதிய பக்கங்களை அப்படியே திரும்ப எழுத முடியாது என்பதை உணருகிறான்.. புதிதாக அதே விஷயத்தை எழுதும் போது புதிய மொழியும் பார்வையும் கிடைப்பதை அறிந்து கொள்கிறான்.
அவனும் வெல்டனும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். குடிக்கிறார்கள். பாதிரியாருடன் ஜெர்மி இனிய நட்பு கொள்கிறான். வெல்டனை உன்னால் எழுத வைக்க முடியும் என்று அவர் உற்சாகப்படுத்துகிறார்.
தோல்வி பயத்தை மறைக்கவே வெல்டன் தனது மனைவியின் மரணத்தினைக் காரணமாகச் சொல்கிறார் என ஜெர்மி உணருகிறான். இது குறித்து அவருடன் உரையாடுகிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. வெல்டன் கோவித்துக் கொள்கிறார். ஆனால் அவன் சொன்னது சரி தானே என யோசிக்கிறார். வெல்டன் மீண்டும் எழுதத் துவங்கினாரா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
எழுத்துலகைக் விட்டு ஒதுங்கி, தனித்து வாழும் எழுத்தாளனைத் தேடிச் செல்லும் கதைகள் ஹாலிவுட் சினிமாவில் நிறையவே வந்திருக்கிறது. அப்படி ஒரு படமாகவே இதுவும் துவங்குகிறது. ஆனால் இத்தாலிய கிராமப்புற வாழ்க்கை. அதன் வேறுபட்ட மனிதர்கள். வெல்டனின் நட்பு வட்டம். இசபெல்லாவின் காதல் வாழ்க்கை எனக் கொஞ்சம் கொஞ்சமாக படம் அழகு கொள்கிறது. அதிலும் ஜெர்மி- இசபெல்லாவின் காதல் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன, இசபெல்லாவிடம் ஜெர்மி இத்தாலிய மொழி கற்பது, பண்டிகை நாளில் அவர்கள் நடனமாடுவதும். ஜெர்மி முதன் முறையாகக் குதிரைப் பயணம் செய்வது, இசபெல்லா குதிரையில் ரயிலைத் தொடர்ந்து வரும் காட்சி போன்றவை அழகானவை.
இவை வெல்டனின் வசனங்கள்.
Anyone can use words. It’s called talking. But writers arrange them in a way so that they take on a beauty in their form. Think of words as colors, and paper as a canvas
••
Time is a precious thing, Jeremy. And the years teach much which the days never knew
••
••
Everybody needs a little lunacy. It’s what frees us from the pain of this world
டஸ்கனியின் அழகான நிலப்பரப்பு. வெல்டன் பாரிஷாக நடித்துள்ள Harvey Keitelன் சிறப்பான நடிப்பு, சில காட்சிகளின் உண்மையான உரையாடல்கள், இவை தவிர்த்தால் படம் முன்கூட்டியே யூகிக்க முடிந்த காட்சிகளுடன், அசட்டு நகைச்சுவையுடன் உருவாக்கபட்டுள்ளது.

இந்தப் படத்தின் சில காட்சிகளில் வெல்டன் நடந்து கொள்வது ஜோர்பாவை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக ஜோர்பாவின் காதல் மற்றும் அவனது கிறுக்குத்தனங்களை வெல்டனிடமும் காண முடிகிறது. ஆனால் ஜோர்பாவின் ஞானம் வெல்டனிடம் இல்லை.
.
சாகித்ய அகாதமி விழா
சாகித்ய அகாதமியின் நிறுவன நாள் விழா மார்ச் 12 மாலை சென்னையிலுள்ள சாகித்ய அகாதமி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
இலக்கியத்தின் புதிய பாதைகள் என்ற தலைப்பில் சமகால உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியத்தின் புதிய போக்குகள் குறித்து உரையாயாற்றுகிறேன்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குணா பில்டிங்கின் இரண்டாம் தளத்தில் சாகித்ய அகாதமி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
March 7, 2024
ஒரு வரிக்கதை
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான அகஸ்டோ மான்டெரோசோ (Augusto Monterroso) ஒரேயொரு வரியில் கதை எழுதியிருக்கிறார்.

டைனோசர் என்ற அந்தக் கதை பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.
இதாலோ கால்வினோ அதனை நிகரற்ற கதை என்று புகழுகிறார். அந்தக் கதை குறித்துப் போர்ஹெஸ் தனது கட்டுரை ஒன்றிலும் வியந்து குறிப்பிடுகிறார்.

Cuando despertó, el dinosauro todavía estaba allí
(When he awoke, the dinosaur was still there )
என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது.
When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது.
என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள்.
லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது.
இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
it isn’t a short-story, it is actually a novel.
உண்மை தான். நாவலின் முதல் வாக்கியம் என்றே இதனைச் சொல்ல வேண்டும்.
உறக்கத்தில் கண்ட டைனோசர் விழித்த போது எதிரில் இருக்கிறது என்றொரு விளக்கத்தையும் படித்தேன். அப்படியும் நினைக்கலாம். டைனோசர் நம் காலத்தின் விலங்கில்லை. அது அழிந்து போன உயிரினம். அது எதிரே அமர்ந்திருப்பது இனப்படுகொலையின் சாட்சியம் போலவும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஹாலிவுட் சினிமாவில் டைனோசர் கொடூர உயிரினமாகச் சித்தரிக்கப்படுவதற்கு முன்பு வரை டைசோனர் குறித்த பிம்பம் வேறாக இருந்தது. குறிப்பாகப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரிய உயிரினமாக மட்டுமே கருதப்பட்டது. உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் டைனோசர் இனம் அழிவைச் சந்தித்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அகஸ்டோ மான்டெரோசோவின் கதையில் வரும் டைனோசர் வேட்டையாடக் காத்திருக்கிறது என்றே இன்றைய தலைமுறை புரிந்து கொள்வார்கள். சினிமா உருவாக்கிய தாக்கமது.
மான்டெரோசோவின் டைனோசரைப் போல நாம் விழித்து எழுந்திருக்கும் போதும் எதிர்பாராத சிக்கல் அல்லது அபாயம் நம் முன்னே அமர்ந்திருக்கக் கூடும். கதை என்பது வாசிப்பவனின் கற்பனையால் வளர்த்தெடுக்கபடுவது. அதற்கான சாத்தியங்களைக் கதை கொண்டிருக்கிறதா என்பதே முக்கியம்.
Gregory Samsa awoke one morning after a restless sleep to find himself in his bed, transformed into a monstrous insect. மான்டெரோசோவின் கதையை வாசிக்கும் போது எனக்குக் காஃப்காவின் உருமாற்றம் சிறுகதை நினைவிற்கு வந்து போனது.
தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.
ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.
மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள். அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.
அவரது HOW I GOT RID OF FIVE HUNDRED BOOKS என்ற கட்டுரையில் பழைய புத்தகக்கடைகளைப் பற்றியும் புத்தகங்களை வாங்கும் ஆசை பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். 1955 இல், அவர் பாப்லோ நெரூதாவை சந்திக்கச் சாண்டியாகோவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவரிடம் முப்பது நாற்பது புத்தகங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்து போனார். தனது சேமிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்துவிட்டதாகவும் தற்போது இந்தப் புத்தகங்கள் மட்டுமே போதும் என நினைப்பதாகவும் நெரூதா கூறினார். அங்கிருந்தவை துப்பறியும் நாவல்கள் மற்றும் நெரூதாவின் சொந்த படைப்புகளின் பல்வேறு மொழி மொழிபெயர்ப்புகள் மட்டுமே..
அகஸ்டோ மான்டெரோசோவின் இன்னொரு கட்டுரை இப்படித் துவங்குகிறது
Direct acquaintance with writers is harmful. “A poet,” said Keats, “is the least poetic thing in the world.”
லத்தீன் அமெரிக்கச் சிறுகதையுலகில் அகஸ்டோ மான்டெரோசோ தனித்துவமானவர். அவரது கதைகள் விசித்திரமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன கவிதைக்கு நெருக்கமான மொழி நடையில் எழுதப்பட்ட இக்கதைகளின் ஊடாக மெல்லிய பகடி வெளிப்படுகிறது. ஒரு வரிக்கதை ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பதோடு இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருவது வியப்பானதே.
••
March 6, 2024
நாளும் ஒரு கதை
கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் குறித்து இணைய வழியாக நடத்தப்படும் தொடர்நிகழ்வில் இன்றிரவு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன்.
நாளும் ஒரு கதை என இணைய வழியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இன்று அதன் 95வது நாள்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் அறம் தனுஷ்கோடி ராமசாமி இதனை நடத்தி வருகிறார்.
சிறப்பான இந்த முன்னெடுப்பிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
March 4, 2024
திரைப்பட விருது
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மோகன் குமார் எனது சிறுகதை புர்ராவைக் குறும்படமாக இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றுள்ளது.
சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ள மோகன் குமாருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
திவாகர் காட்டும் சென்னை
1993 ஆக இருக்கலாம். The Marriage of Maria Braun படம் திரையிடுவதைக் காணுவதற்காகச் சென்னை பிலிம்சேம்பர் சென்றிருந்தேன். அங்கே படம் பார்ப்பதற்காக வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் சதாசிவம் கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகரின் சிறுகதைகளை அறிமுகம் செய்து உரையாடினார்.
அரைமணி நேரத்திற்கும் மேலாகத் திவாகரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். திவாகர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்வதாகச் சொல்லி நாம் ஒரு நாள் சந்திப்போம் என்றார்.
சில ஆண்டுகளுக்குப் பின்பு எஸ்.திவாகரின் சிறுகதைகளை அந்தரத்தில் நின்ற நீர் என மொழியாக்கம் செய்து சதாசிவம் வெளியிட்டார். அந்த நூலை விரும்பி வாசித்தேன்.

திவாகரின் சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தன. காஃப்காவை நினைவுபடுத்து எழுத்துமுறை. குறிப்பாக மேஜிகல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட அவரது சிறுகதைகள் தனித்துவமாக இருந்தன.

திவாகர் சென்னையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அவரது பெரும்பான்மைச் சிறுகதைகள் சென்னையில் நடக்கின்றன.
1970 -80களின் சென்னை வாழ்க்கையைத் திவாகர் அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
சென்னைப் பற்றி தனது மகாமசானம் கதையில் புதுமைபித்தன் சொல்வது இன்றும் மாறவேயில்லை.
நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல , நாலைந்து பெரிய ரஸ்தாக்களும் , டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. எல்லாம். அவசரம் , அவசரம் , அவசரம்
அதே சென்னையின் பரபரப்பும். மக்கள் நெரிசலும், சினிமாவின் மினுமினுப்பும், சாக்கடை வழிந்தோடும் குறுகிய தெருக்களும், கூவம் ஆற்றின் துர்நாற்றமும், புறக்கணிக்கபட்ட குடிசைகளும், சிறுவணிகர்கள் மற்றும் நடைபாதை வாசிகளும், அரசியல் சினிமா கட்அவுட்களும் நடுத்தர வர்க்க அவலங்களும் திவாகரின் சிறுகதைகளில் பதிவாகியுள்ளன.
சதாசிவம் மறைந்துவிட்டார். திவாகரும் ஓய்வு பெற்றுக் கர்நாடகா சென்றுவிட்டார். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் தனது கதைகளின் வழியாகத் திவாகர் இன்றும் மதராஸில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது

சமீபத்தில் இதிகாசம் என்ற அவரது சிறுகதைகளின் தொகுப்பினை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்துள்ளார். இத் தொகுப்பிலுள்ள பெரும்பான்மைக் கதைகள் சென்னையை மையமாகக் கொண்டதே.
••
கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மதராஸை பின்புலமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பழைய மதராஸ் ராஜஸ்தானியின் பிரஜைகள் தானே அனைவரும். ஆகவே தென்னிந்திய எழுத்தாளர்களில் பலர் மதராஸில் கல்வி பயின்றிருக்கிறார்கள். வேலை பார்த்திருக்கிறார்கள். பத்திரிக்கை, சினிமா, இசை, நாடகப் பணிகளுக்காகச் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நினைவில் பதிந்துள்ள சென்னை வேறுவிதமானது. இது போன்ற மதராஸ் கதைகளைத் தொகுத்து தனி நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசை.
எஸ்.திவாகர் 1970களின் சென்னையை எழுதியிருக்கிறார். குறிப்பாகத் தி.நகர், பாண்டிபஜார், கோடம்பாக்கம். ராயப்பேட்டை. கோட்டூர்புரம், திருவல்லிக்கேணியைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
திவாகர் இந்தச் சிறுகதைகளை எழுதிய அதே காலகட்டத்தில் இதே தி.நகரை, மேற்குமாம்பலத்தை, பாண்டிபஜாரை தனது கதைகளில் எழுதியவர் அசோகமித்ரன்.
அசோகமித்ரனின் பாண்டிபஜார் பீடா சிறுகதையில் பாண்டிபஜாரின் சித்திரம் மறக்க முடியாதது. பாண்டிபஜார் என்பது சினிமா உலகின் குறியீடு. தி.நகரில் தான் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள், நடிகர்களின் வீடு, அலுவலகங்கள் இருந்தன. பாண்டிபஜாரின் புகழ்பெற்ற கீதா கபேயும், சினிமா கம்பெனிகளும், வாழ்ந்து கெட்ட மனிதர்களும் கதையில் இடம்பெறுகிறார்கள்.
அந்தக் கதையில் ஒருவர் தனது பழைய காரை ஆயிரம் ரூபாயிற்கு விற்கப் போவதாகச் சொல்கிறார். அது தான் அந்தக் காலத்தின் பணமதிப்பு.
வெங்கையா என்ற புகழ்பெற்ற சினிமா நடிகர் தனது வாய்ப்புகள் இழந்து போன காலத்தில் ரசிகர் ஒருவரைச் சந்தித்து உரையாடுவதே கதையின் மையம். இடைவெட்டாக அன்றைய தமிழ் தெலுங்கு திரைப்பட உலகையும் அதன் தயாரிப்பாளர்களையும் கிண்டல் செய்திருக்கிறார் அசோகமித்ரன்.
இந்தக் கதையில் சென்னையைப் பற்றி இப்படி ஒரு வரியை அசோகமித்ரன் எழுதியிருக்கிறார்.
இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் சினிமா என்றால் அவ்வளவு பைத்தியம்.
இதே வரியை திவாகரின் கதையிலும் காண முடிகிறது. அவரது சிறுகதை ஒன்றில் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியான நாட்கள் பதிவாகியிருக்கிறது. நகரம் முழுவதும் எம்.ஜி.ஆருக்காக வைக்கபட்டிருந்த விளம்பரங்கள். அவரது கட்அவுட் இரண்டு தென்னை மர உயரம் இருந்தது என்று திவாகர் எழுதுகிறார்.
அசோகமித்ரனின் கதைகளில் வரும் கதாபாத்திரம் போன்ற பெண்களே திவாகரிடமும் காணப்படுகிறார்கள். ஒரே வித்தியாசம் அசோகமித்ரன் கதைகளில் கொலை நடக்காது. குற்றத்திற்கு இடமேயில்லை.
திவாகரின் சிறுகதை ஒன்றில் அலமேலு என்ற இளம்பெண் கோடம்பாக்கத்தில் கத்தியால் குத்தப்படுகிறாள். கத்திக்குத்துபட்டு வீழ்ந்துகிடக்கும் பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவளது தந்தை ஒரு தத்துவப் பேராசிரியர். அவர்கள் வீட்டை திவாகர் கோட்டோவியம் போலத் துல்லியமாக விவரித்திருக்கிறார்.
முதிர்கன்னியான அலமேலுவின் ரகசிய காதல். அவள் தந்தையின் கண்டிப்பு. அவளது அம்மாவின் பாராயணங்கள். அலமேலு நடந்து செல்லும் கோடம்பாக்கம் ரயில் நிலையப் பாதை. அதை ஒட்டிய குடிசைகள். சென்னை வெயிலின் உக்கிரம். தூசி அடைந்து போன மரங்கள், எனக் கோடம்பாக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கத்திக்குத்துபட்டு மயங்கி கிடக்கும் அலமேலுவிற்கு உதவி செய்ய வரும் குடிசைவாசிகள். அவளை தூக்கிவிடும் மனிதன். அவனது நெருக்கம் தரும் இத்த்தை உணரும் அலமேலு, கத்தியை ரகசியமாகச் சாணத்தில் மறைக்கும் பெண். அலமேலுவின் பர்ஸைத் திருடிச் செல்லும் இன்னொரு பெண் என காட்சி நுணுக்கமாக விவரிக்கபடுகிறது.
இவர்கள் யாவரும் அசோகமித்ரனின் கதைகளில் வரக்கூடியவர்களே. ஆனால் சாதுவான அலுமேலு மீது கத்தி பாய்வதைப் பற்றி அசோகமித்ரானால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
திவாகர் அங்கே தான் வேறுபடுகிறார். நகரம் குற்றத்தின் விளைநிலம் என்பதை உணர்ந்திருக்கிறார். எதிர்பாராத விபத்து போலக் குற்றங்களும் சட்டென நிகழ்த்துவிடுகின்றன. சாமானியர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அலுமேலு ஏன் கத்தியால் குத்தப்படுகிறாள். உண்மையில் அந்தக் கத்தி என்பது குறியீடு தானா.
முதல்வரியிலே கதை நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. மயங்கிக் கொண்டிருக்கும் அலமேலுவின் கண்களில் தன்னைச் சுற்றிலும் குவிந்துள்ள மனித தலைகள் விநோதமாகத் தெரிகின்றன. சினிமாவில் கோணங்கள் மாறிமாறிக் காட்சி வேகமடைவது போன்ற எழுத்துமுறை திவாகருடையது.
இன்னொரு கதை ராயப்பேட்டையில் நடக்கிறது. மிருத்யுஞ்சயன் என்பவனைப் பற்றியது. அவன் ஒரு குறியீடே. மார்ச்சுவரியில் வேலை செய்யும் இளைஞன், தனக்கு வந்த பிணத்தைக் குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத் தேடுதலை மேற்கொள்கிறான்
மிருத்யுஞ்சயனுடன் நெருக்கமாகப் பழகி வயிற்றில் பிள்ளையைச் சுமந்த இளம்பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்கும் போது அதிக உதிரப்போக்காகி இறந்துவிடுகிறாள். மிருத்யுஞ்சன் யார். அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பதன் வழியே திவாகர் மரணத்தை விசாரணை செய்கிறார். மதராஸின் பொதுமருத்துவமனை, ராயப்பேட்டை ஒண்டுக்குடித்தன வீடுகள். காதலுக்கும் மரணத்திற்குமான ஊசலாட்டம் எனக் கதை சுழற்புதிர்பாதையில் நடப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கிராமவாழ்க்கை பிடிக்காமல் நகரத்திற்கு வரும் முதியவர்கள் பற்றிய கதையில் தம்பதிகள் கிராமத்தில் வசித்த போது நகர வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறார்கள். பணம் சேர்த்து நகரில் ஒரு வீடு வாங்குகிறார்கள். நகர இன்பங்களைத் தேடித்தேடி அனுபவிக்கிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் அவர்கள் அங்கே வசிப்பவர்களின் விசித்திர நடத்தையால் பாதிக்கபடுகிறார்கள். அவர்களை அன்போடு அழைக்கும் இளைஞன் நடந்து கொள்ளும் முறை ஒரு சான்று.
குடியிருப்பில் வசிக்கும் நீதிபதியின் மனைவி அனைவரையும் அதிகாரம் செய்கிறாள். அவளைப் பற்றி வாசிக்கும் போது பால்சாக்கின் கதை நினைவிற்கு வருகிறது.
ஒரு மழை நாளில் அவர்கள் நீதிபதியின் மனைவியைச் சந்திக்கச் செல்கிறார்கள். அவள் அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அத்தனை பேரையும் திருடர்கள் என்று திட்டுகிறாள். அத்தோடு முகத்திற்கு நேராக இது போலத் தன்னைத் தேடி வந்து தொல்லை செய்யக்கூடாது என்று அவர்களிடம் எச்சரிக்கை செய்கிறாள்.
நகர வாழ்க்கையில் அவர்களால் யாரையும் நம்ப முடியவில்லை. யாருடனும் நட்பாக இருக்க முடியவில்லை. ஆனாலும் நகரம் அவர்களுக்குப் பிடித்தேயிருக்கிறது. அதற்குக் காரணம் கிராமம் ஏற்படுத்திய தனிமை. அந்தத் தனிமை அவர்களை உறையச் செய்துவிட்டிருக்கிறது. இது போலவே இன்னொரு கதையில் ஒரு கதாபாத்திரம் சிற்றூர்களின் தனிமையை தாங்க முடியாது என்கிறான்.
ஒரு நாள் முதியவர்கள் மிருக காட்சி சாலையைக் காணச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையும் அது போன்ற கூண்டிற்குள் அடைபட்டதே என்பதை உணருகிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டே வீடு திரும்பும் காட்சி அழகானது.
கதையின் முடிவில் கிராமத்திலிருந்து வரும் போஸ்ட் மாஸ்டரை சந்திக்கிறார்கள். வீட்டிற்கு அழைத்துப் போகிறார்கள்.தங்களின் கிராமம் எப்படி உள்ளது என்பதைப் பற்றி விசாரிக்கிறார்கள். நீங்கள் நகரில் சந்தோஷமாக இருக்கிறீர்களா என அவர் கேட்டதற்குத் தயக்கத்துடன் தலையாட்டுகிறார்கள்.
திவாகரின் இந்தக் கதையில் மதராஸ் என்ற பெயரில்லை. ஒருவேளை பெங்களூராக, மும்பையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது மதராஸிற்கும் பொருந்த கூடியதே.
அவரது கதை ஒன்றில் எதற்காக இந்த நகரத்திற்கு வந்தோம் என நினைத்து வருந்தும் ஒரு பெண்ணைக் காண முடிகிறது. இதே வருத்தம் அசோகமித்ரன் சிறுகதைகளில் வரும் பெண்களிடமும் உள்ளது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்துவதில்லை. அதற்காகப் புலம்புவதில்லை. மாறாக நகர வாழ்க்கையின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வெல்லவே முற்படுகிறார்கள்.
விடிவதற்கு முன் என்ற அசோகமித்ரன் சிறுகதை சென்னையின் தண்ணீர் பஞ்சம் பற்றியது. இதில் விடிவதற்கு முன்பாகத் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாளி குடத்தோடு அலையும் பெண்களின் அவலம் பற்றி அசோகமித்ரன் எழுதியிருக்கிறார். ஒரு குடம் தண்ணீர் வேண்டி பங்கஜம் படும் அவமானங்களைக் காணும் போது நகரவாழ்வென்பது வெறும் பொய்கனவு என்பது புரிகிறது.
தெருவில் அப்போதுதான் யாரோ கைவண்டியில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிந்திய தண்ணீர் தெரு நடுவில் பட்டையாகக் கோடிட்டிருந்தது.
என்ற அசோகமித்ரனின் வரியை ஒருவரால் கற்பனையாக எழுதிவிட முடியாது. அனுபவத்தின் உண்மையும் கலைநேர்த்தியும் ஒன்று கூடிய எழுத்து அசோகமித்ரனுடையது.
எஸ்.திவாகரிடமும் இதே இரண்டு சரடுகள் காணப்படுகின்றன. அவர் தனது வாழ்பனுபவத்தையும் கற்பனையினையும் இணைத்து எழுதும் போது புதிய கதைகள் பிறக்கின்றன. நாடகீயமான தருணங்களைக் கூடத் திவாகர் உணர்ச்சி கொந்தளிப்புகள் இன்றி நிதானமாக, குரலை உயர்த்தாமல் எழுதுகிறார்.
திவாகர் காட்டும் மதராஸின் சித்திரம் ஒளிவுமறைவில்லாதது. இருளும் ஒளியும் கலந்தது. வீடு தான் அவரது மையவெளி. அங்கே ஒருவரையொருவர் அடக்கியாண்டு கொண்டு தனக்கான மீட்சியில்லாமல் வாழுகிறார்கள். நகரில் யாரும் சந்தோஷமாக இல்லை, ஆனால் எவரும் நகரைவிட்டு வெளியேறிப் போகமாட்டார்கள். நகரம் என்பது ஒரு சிலந்திவலை. அதில் சிக்கிக் கொண்டவர்கள் தாங்களே சிலந்தியாகி விடுகிறார்கள். பின்பு அதிலிருந்து மீள முடியாது என்பதையே அவரது கதைகள் உணர்த்துகின்றன.
சர்வதேச இலக்கியங்களைத் தொடர்ந்து கன்னடத்தில் அறிமுகப்படுத்தி வரும் திவாகர் நிறைய மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக உலகின் மிகச்சிறந்த குறுங்கதைகளை அவர் தொகுத்து மொழிபெயர்த்திருக்கிறார். நோபல் பரிசு பெற்ற கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்தச் சிறுகதைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள கே.நல்லதம்பி திவாகர் தொகுத்துள்ள உலகின் மிகச்சிறிய கதைகளின் தொகுப்பையும் தமிழுக்கு கொண்டு வர வேண்டும்.
.
March 1, 2024
கதைகளின் வரைபடம்
லிடியா டேவிஸ் சிறந்த சிறுகதையாசிரியர். குறிப்பாக அவரது குறுங்கதைகள் புகழ் பெற்றவை. மேடம்பவாரி உள்ளிட்ட சில நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்பு Essays One,

இதில் அவரது எழுத்துலகப் பிரவேசம் மற்றும் அவருக்கு விருப்பமான எழுத்தாளர்கள். கதைகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். லிடியாவின் உரைநடை பனிச்சறுக்கு செல்வது போலச் சறுக்கிக் கொண்டு போவது. அவர் தாவிச்செல்லும் புள்ளிகள் வியப்பளிக்கக் கூடியவை.
கல்லூரி நாட்களிலே அவருக்குச் சிறுகதை ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதுவும் நியூ யார்க்கர் இதழில் தனது கதை வெளியாக வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணம் அவரை எப்படி எழுதுவதில் தீவிரமாகச் செயல்பட வைத்தது. எப்படி அவரது கதைகள் நியூயார்க்கரில் வெளியாகின என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
ஆரம்பக் காலத்தில் சாமுவேல் பெக்கட்டின் எழுத்துகள் வாசிக்கச் சிரமமாக இருந்தன. ஆனாலும் பெக்கட் சொற்களைத் தேர்வு செய்யும் விதமும் அவரது செறிவான மொழிநடையும் பிடிக்கத் துவங்கின எனும் லிடியா அவரிடம் தான் நிறையக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.
அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர் ஐசக் பேபல். அவரது சிறுகதைகள் கச்சிதமாக எழுதப்பட்டவை. அவற்றின் துல்லியம் வியப்பூட்டக்கூடியது எனும் லிடியா Red Cavalry தொகுப்பை மிகவும் பாராட்டுகிறார்

Writers working in very short forms are usually poets என்கிறார் லிடியா டேவிஸ். அதற்கு முக்கியக் காரணம் கவிஞர்கள் சொற்களின் மீது அதிகக் கவனம் கொண்டவர்கள். உரைநடை எழுத்தாளரோ வாக்கியங்களின் மீது தான் அதிகக் கவனம் கொள்வார். அதுவும் நீண்ட வாக்கியங்களை எழுதுவதில் ஆசை கொண்டிருப்பார். துல்லியமாகக் காட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் நுணுக்கமாக எழுதிச் செல்வார். குறுங்கதைகளுக்குக் கச்சிதமான சொற்தேர்வு முக்கியம். ஆகவே கவிஞர்கள் அதைச் சிறப்பாகச் செய்கிறார்கள் எனலாம். ஆனாலும் அதைப் பொதுமைப்படுத்த முடியாது. கவாபத்தா, காப்ஃகா போன்ற கதாசிரியர்கள் குறுங்கதைகளில் நிகழ்த்திய அற்புதம் நிகரற்றதே.
தனது குறுங்கதை ஒன்றை எப்படி எடிட் செய்து அதன் இறுதிவடிவத்தைக் கொண்டு வருகிறார் என்பதைப் பற்றிய அவரது கட்டுரை எளிய பாடம் போலவேயிருக்கிறது.
தமிழில் கடந்த சில ஆண்டுகளாக நிறையக் குறுங்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக வாசித்து அதன் வடிவம் மற்றும் தனித்துவங்கள், நிறைகுறை பற்றி இதுவரை யாரும் விமர்சனம் எழுதவில்லை. மேலும் இந்த வடிவம் குறித்த விவாதங்கள் முன்னெடுக்கபடவில்லை.
கவிதைக்கும் கதைக்கும் இடையில் உள்ள இலக்கிய வடிவமாக இதனைக் காணுகிறேன். கண்ணாடிச் சிற்பங்கள் செய்வது போல குறுங்கதைகள் எழுதுவது சவாலான வேலை.
லிடியா டேவிஸ் தனக்குக் குறுங்கதைகள் எழுதுவதில் ஆர்வம் எப்படி உருவானது. இதற்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்கள். அவர்களின் குறுங்கதைகள். அது ஏன் முக்கியமானது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் விரிவாகவே எழுதியிருக்கிறார். குறிப்பாகச் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி குறித்த அவரது புரிதல் சிறப்பானது.
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது நாம் படிக்க வேண்டிய ஐம்பது எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகங்கள் பற்றி அறிந்து கொண்டுவிடுகிறோம். அவற்றை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் லிடியா ஏற்படுத்திவிடுகிறார். இது போலவே அவருக்கு ஆதர்சனமான படைப்பாளிகளை எவ்வளவு தீவிரமாக வாசித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்கிறோம். கதைகளைப் போலவே அவரது கட்டுரைகளும் அளவில் சிறியது. கச்சிதமானது.
••
February 28, 2024
கவிஞனின் நாட்கள்
“Every man has his secret sorrows which the world knows not; and, oftentimes we call a man cold when he is only sad.”

என்ற லாங்ஃபெலோவின் மேற்கோளுடன் I Heard the Bells படம் துவங்குகிறது. படத்தை ஜோசுவா என்க் இயக்கியுள்ளார்.
அமெரிக்கக் கவிஞரான ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோவின் வாழ்க்கையை விவரிக்கும் இத் திரைப்படம் உள்நாட்டு போருக்கு சற்று முன் மற்றும் போரின் போது அவரது வாழ்க்கையின் கதையைச் சொல்கிறது,

படம் 1860களில் நியூ இங்கிலாந்தில் நிகழ்கிறது. ஹென்றி லாங்ஃபெலோ அடிமைத்தனத்திற்கு எதிராகக் கவிதைகள் எழுதியவர். படத்தின் ஒரு காட்சியில் கறுப்பின இளைஞன் அவரது கவிதையை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வாசிக்கிறான். லாங்ஃபெலோவின் கவிதை மக்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கான சாட்சியம் போல அக்காட்சி விளங்குகிறது.
1860 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலிருந்து படம் துவங்குகிறது. ஹென்றி லாங்ஃபெலோவின் மனைவி, அவரது ஆறு குழந்தைகள் அறிமுகமாகிறார்கள். அவர் வசதியான வாழ்க்கையைக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. அனைவரும் ஒன்றாகத் தேவலாயம் செல்கிறார்கள். விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அர்ப்பணிப்புமிக்க கணவர் மற்றும் தந்தையாக லாங்ஃபெலோ எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதாகக் காட்சிகள் விரிகின்றன.
ஜூலை 9, 1861 இல், ஹென்றியின் மனைவி ஃபேனியின் அலங்கார உடையில் தீப்பற்றிக் கொள்கிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய ஃபேனி உதவிக்காக லாங்ஃபெலோவை அழைக்கிறாள். ஆனால் வேறு அறையில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்ததால் உடனே கவனிக்கவில்லை. இதற்குள் தீயால் பலத்த காயமடைகிறாள். பின்பு அவளைக் காப்பாற்ற முயன்ற லாங்ஃபெலோ தானும் காயம்படுகிறார். பலத்த தீக்காயங்களால் அவரது மனைவி இறந்துவிடுகிறாள்.

மனைவியைத் தான் எப்படியாவது காப்பாற்றியிருக்க வேண்டும் என்ற குற்றவுணர்வு கொள்வதோடு ஏன் கடவுள் தன்னைத் தண்டித்தார் என்று கோபமும் அடைகிறார்
தனது சந்தோஷத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்த மனைவியின் இழப்பிற்குப் பிறகு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறார். அவரது கடவுள் நம்பிக்கை போய்விடுகிறது. வாழ்க்கையில் பிடிப்பில்லை. பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழுகிறார். இலக்கியச் சந்திப்பு. விருந்து, கொண்டாட்டம் என எதிலும் கலந்து கொள்வதில்லை. பிள்ளைகள் வளருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டபடி இருக்கிறார் லாங்ஃபெலோ.
அவரது மூத்தமகன் சார்லி உள்நாட்டுப் போரில் கலந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே ராணுவத்தில் சேர முனைகிறான். இதனை ஏற்க மறுக்கிறார் லாங்ஃபெலோ . அவரது ஒப்புதல் இல்லாமல் ராணுவத்தில் சேர முடியாது என்பதால் சார்லி கோவித்துக் கொள்கிறான். இதனால் வீட்டின் நிம்மதி பறிபோகிறது.

சார்லி தன்னுடைய தந்தையின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். ராணுவத்திலிருந்த போதும் சார்லி போரில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார் லாங்ஃபெலோ. அவனுக்குப் பதவி உயர்வு அளிக்கபட்டு போர்முனைக்குச் செல்ல தேவையற்ற நிலையை உருவாக்குகிறார். அதைச் சார்லி ஏற்க மறுக்கிறான். வர்ஜீனியாவில் நடைபெற்ற சண்டையின் போது சார்லி சுடப்பட்டுப் படுகாயமடைகிறான்.
போர் முனையில் காயம்பட்டு வீழ்ந்த மகனைப் பற்றி அறிந்த லாங்ஃபெலோ துடித்துப் போகிறார். எப்படியாவது மகனை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயணம் மேற்கொள்கிறார், யுத்தகளத்தில் மகனைத் தேடுகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு இடத்தில் காயம்பட்டு கிடந்த மகனைக் கண்டுபிடிக்கிறார். அவனை மீட்டு வந்து சிகிட்சை அளித்துக் காப்பாற்றுகிறார்.
சார்லி தனது காயங்களிலிருந்து மீண்டு வரும்போது தனது கோபத்தையும் வருத்தத்தையும் தந்தையிடம் வெளிப்படுத்துகிறான்.

தனது மகன் உயிர் பிழைத்ததற்குக் கடவுள் நம்பிக்கையே காரணம் என நம்பிய லாங்ஃபெலோ 1863 இல் கிறிஸ்துமஸ் தினத்தில் Christmas Bells என்ற கவிதையை எழுதுகிறார். அந்தக் கவிதை புகழ்பெறுகிறது.
லாங்ஃபெலோவின் வாழ்க்கையில் நடந்த சோகம் மற்றும் பிள்ளைகளின் மீது அவர் கொண்டிருந்த பாசம் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது. உடை அலங்காரம் மற்றும் அரங்க அமைப்பு அந்தக் காலத்தினைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஸ்டீவ் பக்வால்டரின் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.
“உலகத்தை மாற்ற எங்களுக்குக் கவிஞர்கள் தேவை” என்று ஃபேனி ஒரு காட்சியில் தனது கணவரிடம் கூறுகிறார். அப்படிப்பட்ட கவிஞர் ஏன் கவிதை எழுதுவதை நிறுத்தினார் என்பதையே படம் ஆராய்கிறது.
படத்தில் கவிஞன் லாங்ஃபெலோவை விடவும் தந்தையான லாங்ஃபெலோவை தான் அதிகம் காணுகிறோம். தேசபக்தி, குடும்பம் மற்றும் கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களை வலியுற்றுத்துவதற்காகத் தயாரிக்கபட்ட படம் என்பதால் லாங்ஃபெலோவின் கவிதையுலகம் முதன்மையாகச் சித்தரிக்கபடவில்லை. ஆயினும் நாம் லாங்ஃபெலோ எனும் கவிஞனைப் புரிந்து கொள்ளப் படம் நிறையவே உதவி செய்கிறது.
இந்து தமிழ் விழாவில்
இந்து தமிழ் நாளிதழ் தமிழகமெங்கும் வாசிப்புத் திருவிழாவை நடத்தி வருகிறது.
சென்னை வாசிப்புத் திருவிழா மார்ச் 2 காலை பத்து மணிக்கு பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
February 27, 2024
நுண்ணோக்கியும் தொலைநோக்கியும்
கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பான தேதியற்ற மத்தியானம் குறித்த தனது வாசிப்பனுபவத்தை மதார் பகிர்ந்துள்ளார். கவிதைகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேவதச்சனின் கவிதைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ள விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. மதாருக்கு என் வாழ்த்துகள்
தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேவதச்சனின் இந்தத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


••
தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் – மதார்

தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைக் கூறலாம். ஆதியில் ஆரம்பித்து அந்தம் வரை நீண்டு செல்லும் கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. உலகின் ஒரு முனையில் சேலையைக் கட்டி மறுமுனைக்குச் சென்று கொண்டே இருக்கும் பெண்ணின் படிமம் தேவதச்சனின் ஒரு கவிதையில் வரும். அதே போல இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் அந்த முடிவை நோக்கி நீண்டு செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன.
தோல்
படிப்பு முடிந்ததும் முதலில்
பள்ளிக் கூடம்
என்னுடையதில்லை
என்றானது
சிறிதான என் சட்டைகள்
என்னுடையவை இல்லாமல் ஆயின
இடமாற்றல் உத்தவரவு வந்த அன்று
அமர்ந்திருந்த நாற்காலி
என்னுடையதில்லாமல் போனது
பெரியவர்கள் ஆனதும்
என் மகனும் மகளும் என்னுடையவர்கள் அல்லாமல் போனார்கள் ஓட்டுப் போட்டு
முடிந்ததும்
அரசு என்னுடையதில்லாமல் ஆனது
விலைகள் மிக உயர்ந்து
காலப்பழங்கள் கீரைகள்
எனக்கானதாக இல்லாமல் ஆயின
பூட்டுப்போட்ட பூங்காக்கள்
டிக்கெட் வாங்கும் கோயில்கள்
பாலத்துச் சுவர்கள் எனதில்லாமல் போய்விட்டன
கட்டணங்கள் மிக உயர்ந்து,
உயரமான ஆஸ்பத்திரிகளும் ஹோட்டல்களும் என்னுடையவை ஆகாமல் போயிவிட்டன
என்றாலும் எப்போதும்
என்னுடையதல்லாத
மேகங்கள்
என் தோலைப் போல
கூட இருக்கின்றன
இதே போல இந்தத் தொகுப்பில் வரும் “நான் ஒரு முட்டாளு” கவிதையும் தனிமனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பேசுகிறது. ஆனால் கவிதை நேரடியாக அதைக் கூறாமல் வாழ்வின் பல்வேறு தளங்களைத் தொட்டுத் தொட்டுச் சொல்லி கடைசியாக சொல்ல வருவதைச் சொல்கிறது, சொல்ல வராததையும் சொல்கிறது அல்லது வாசகனின் வாசிப்புக்கு விட்டுவைக்கிறது. சமீபத்தில் வெளியான அகழ் இதழில் தேவதச்சன் அவரது கவிதைகளில் இயற்கை குறித்தான ஒரு கேள்விக்கு பின்வரும் பதிலைச் சொல்கிறார் :
“ஒருமுறை என் அம்மாவுக்கு உடல் நிலை மோசமானபோது அவரை அவசர ஊர்தியில் கொண்டு போனோம். நள்ளிரவு வேளை. நான்கு வழிச்சாலையில் வண்டி செல்லும்போது ஜன்னல் வழியே பார்த்தால் நிலவு அவ்வளவு அழகாய் காட்சி அளிக்கிறது. என் அம்மாவை பார்த்தால் லேசாக ரத்தம் கசிய படுத்திருக்கிறார். மறுபுறமோ நிலவு தெரிகிறது. எனக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. எதுவுமே புரியாத தருணமாக இருந்தது. நிலை குலைந்து போய்விட்டேன். இப்படி அசாதாரணமான நேரத்தில் நம்மை இயற்கை தொடுவதையே கவிதையிலும் எதிர்பார்க்கிறேன்”
அவரது பதிலைப் போலவே அவரது கவிதைகளில் அவரது இயற்கை அமைகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள இன்னொரு அம்சம் முன்பின் தெரியாத நபரிடமிருந்து தனிமனிதன் ஒன்றை அடையும் தருணம். அது இந்தத் தொகுப்பு நெடுக பல கவிதைகளில் வருகிறது. தெருவில் யாரோ ஒரு பெண் கைக்குழந்தையை ஏந்தி மகிழ்வாய்ச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் சைக்கிளோட்டும் சிறுமியைப் பார்க்கும்போது இப்படி வெறுமனே நல்ல காட்சிகளை நம் கண்கள் வெறுமனே பார்ப்பது மட்டுமே நமது ஆழமான காயங்களை குணப்படுத்துகிறது என்கிறார் தேவதச்சன். இந்தத் தொகுப்பில் கீறல் விழுந்த மேஜை என்று ஒரு கவிதை வருகிறது.
கீறல் விழுந்த மேஜை
தெரு முனையில்
பூ விற்கும்
பூக்கார மூதாட்டி
சில நாளாய்
அங்கு இல்லை
அவள் அமர்ந்திருக்கும்
உடைந்த நாற்காலியும்
கீறல் விழுந்த நீலநிற மேஜையும்
வர்ணம் இழந்த பிளாஸ்டிக்
வாளியும்
அங்கு இல்லை
இனி
எங்கு போய் வாங்குவேன்
நிரந்திரத்தின்
மலர்ச்சரத்தை
“நிரந்தரத்தின் மலர்ச்சரம்” என்ற சொல் அழகானது. அவள் இல்லாது போகும்போது தான் அவள் இருந்தபோது இருந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இதே தொகுப்பில் வரும் “பிரியா விடை”, ” தேநீர் கடை” போன்ற கவிதைகளும் இதே போல இன்னொருவர் நமக்கு அளிக்கும் ஏதோ ஒன்றை அற்புதமாக உணர்த்துகிறது.
தேவதச்சனின் கவிதைத் தொகுப்புகளில் எப்போதும் புதிது போல் கவிதைகள் இருக்கும். அப்படி இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை “லாவா கற்கள்”
லாவா கற்கள்
ரோடு
போடப் போகிறார்கள்
பழைய சாலையை
நேற்று இரவே
எந்திரம்
கொண்டு
கொத்திப் போட்டு
விட்டார்கள்.
சாலை
இப்பொழுது தான்
ஆறிய லாவா கற்கள் போல்
குதறிக் கிடக்கிறது
மூன்று இளைஞர்கள்
அதன்மேல்
தட்டுத்தடுமாறி
சைக்கிளில்
சென்றபடி இருக்கிறார்கள்
ஒருவன் சொன்னான்:
செம யாக இருக்கிறது.
ஆம் என்றான் இன்னொருவன்
அவர்களது சைக்கிள்
கடக் கடக் என்று
போய்க் கொண்டிருக்கிறது
புவியின்
எப்போதும் உள்ள முதல் நாளில்
இந்தக் கவிதை படித்ததும் புத்துணர்வை அளித்தது. இந்தக் கவிதை காட்டும் காட்சியே புதியதாக இருந்தது. இந்தக் கவிதையிலும் யாரென்றறியாத மூன்று இளைஞர்கள் நமக்கு மகிழ்வை வழங்கிவிடுகிறார்கள், நிரந்தரத்தின் மலர்ச்சரம் போல. இந்தக் கவிதையில் “செம யாக இருக்கிறது” என்பதும் இந்தக் கவிதைக்கு செம யாக இருக்கிறது.
Decision to leave என்ற கொரிய படத்தில் நவீன மொபைல் app களை வைத்தே கதையின் முக்கியமான சில காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமைத்திருப்பார்கள். துளியும் செயற்கைத் தனம் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கவிதையில் வரும் தற்கால வார்த்தையான “செம” என்பதும் இந்தக் கவிதைக்குள் சரியாகப் பொருந்தி அமைகிறது, துருத்தி நிற்கவில்லை. முடிவில் பூமியின் முதல் நாள் எனும் போது பூமியின் முதல் நாளுக்கு இந்தக் கவிதை நம்மை அழைத்துச் செல்லவில்லை. காலத்தையே தொலைத்து திகைப்பில் நிற்க வைத்துவிடுகிறது. அது இந்தக் கவிதையின் இன்னுமொரு அழகு. இந்தத் தொகுப்பில் வரும் இன்னொரு கவிதையான “தெரிதல்” நமக்கு அளிப்பதும் இன்னுமொரு ஆழமான திகைப்பைத்தான்.
தெரிதல்
எனக்குத் தெரியாதவர்கள் இறப்பதில்லை; பிறப்பதும் இல்லை.
தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய்
இறந்து போகிறார்கள்.
நானும் ஒரு நாள் இறந்துபோவேன்…
எனக்கு நான்
நன்கு தெரிந்தவன் தானே!
இந்தத் தொகுப்பில் வரும் “ஒரு நாவலும் காற்றும்” என்ற கவிதையும் நுட்பமானது.
ஒரு நாவலும் காற்றும்
பொன்னியின் செல்வன்
நாவலை
மூன்றாவது முறையாக
படித்துக்
கொண்டிருக்கிறாள்
முதன்முதலாக,
பள்ளி விடுமுறையில்
மாமா வீட்டிற்கு
செல்கையில்
படித்தாள்
இரண்டாவது முறை
பணியிடம் மாற்றலாகி
கர்நாடகாவில்
அடுக்கு மாடிக்
கட்டடத்தில்
படித்தாள்
மூன்றாவது முறை
கணவனை இழந்து
சிறு நகரத்தில்
சிறு வீட்டில்,
நான்காவது பாகம்
வரை முடித்து விட்டாள்
இப்போது
முதல் மூன்று பாகங்களை சட்டை தைக்கும்
டெய்லர் தோழிக்கு
கொண்டு செல்கிறாள் மலை வரக் கூடும்
என்பது போல் காற்று
ஜிலு ஜிலு வென்று வீசத்தொடங்குகிறது
இதில் ஜிலு ஜிலு வென்று வீசத் தொடங்கும் காற்று நம் பால்யத்தை, எதையும் துவங்கும்போது இருக்கும் அப்பாவித்தனத்தை உணர்த்துகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் நாவலின் பாகங்களை பயன்படுத்தியிருப்பது இந்தக் கவிதைக்கு புதுமையையும் சேர்க்கிறது.
***
நூல் : தேதியற்ற மத்தியானம் – தேவதச்சன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
நன்றி:
கவிதைகள் இணையதளம்.https://www.kavithaigal.in/.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

