எழுத்தின் சிறகுகள்.

Shadows in the Sun 2005ல் வெளியான திரைப்படம். பிராட் மிர்மன் இயக்கியுள்ளார்

லண்டனில் வசிக்கும் ஜெர்மி டெய்லர் பதிப்பகம் ஒன்றில் எடிட்டராக வேலை செய்கிறான். ஒரு நாள் பதிப்பக உரிமையாளர் அவனிடம் “நீ வெல்டன் பாரிஷைப் படித்திருக்கிறாயா“ என்று கேட்கிறார்.

“மிகவும் நல்ல எழுத்தாளர். அவரது Shadow Dancer நாவலை விரும்பி படித்திருக்கிறேன். அவர் எழுத்துலகை விட்டு விலகி இத்தாலியின் கிராமப்புறம் ஒன்றில் வசிக்கிறார், யாரையும் சந்திப்பதில்லை “ என்கிறான் ஜெர்மி.

“நீ அவரைச் சந்தித்துப் பேசி எப்படியாவது நமது பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்“ என்று உரிமையாளர் கட்டளையிடுகிறார்

தனது விருப்பத்திற்குரிய எழுத்தாளரைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்கிறான் ஜெர்மி. இயற்கையின் தங்கரேகைகள் ஒளிரும் சின்னஞ்சிறிய இத்தாலிய கிராமம். அங்கே ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறான். வெல்டன் பாரிஷ் பற்றி யாரிடம் கேட்டாலும், தெரியவில்லை என்கிறார்கள். முடிவில் ஒரு நாள் தபால்காரனைப் பின்தொடர்ந்து வெல்டன் வீட்டினைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

வெல்டனின் மகள் இசபெல்லா தனது தந்தைக்குப் பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பக எடிட்டர்களைப் பிடிக்காது. போய்விடுங்கள் என எச்சரிக்கை செய்கிறாள். அதையும் மீறி அவரைச் சந்திக்கச் செல்கிறான்.

வெல்டன் மனநலம் பாதிக்கபட்டவரைப் போல நடிக்கிறார். அதை உண்மை என்று நம்பி தனது அறைக்குத் திரும்பிவிடுகிறான். அன்றிரவு இது வெல்டனின் நாடகம் என்பது புரிகிறது. ஊரே அவரை நேசிக்கிறது. வெளியாட்களுக்கு அவரது இருப்பைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறது எனப் புரிந்து கொண்டு வெல்டனின் மகளின் உதவியோடு மீண்டும் அவரைச் சந்திக்கிறான். இந்த முறை அவர் நாயை ஏவிவிட்டு அவனைத் துரத்துகிறார்

அவமானத்துடன் அறைக்குத் திரும்புகிறான் ஜெர்மி. எதனால் வெல்டன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்துப் பலரிடம் விசாரிக்கிறான்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெல்டனின் மனைவி இறந்து போனார். அதிலிருந்து அவர் எதையும் எழுதுவதில்லை என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

திரும்பவும் வெல்டனைச் சந்தித்து அவருடன் நட்பாக மது அருந்துகிறான். இந்த முறையும் அவன் அவமானப்படுத்தபடுகிறான். ஜெர்மி உடனடியாக ஊரைவிட்டு போக வேண்டும் என்று வெல்டன் கட்டளையிடுகிறார். ஆனால் ஜெர்மி தனது விடாப்பிடியான முயற்சியால் வெல்டனின் அன்பைப் பெறுகிறான்.

இளம் எழுத்தாளரான ஜெர்மிக்கு வெல்டன் எழுத்தின் ரகசியங்களைப் போதிக்கிறார். அவை படத்தின் மிக அழகான காட்சிகள்

ஒரு எழுத்தாளன் தன் கண்முன்னே இருக்கும் காட்சியை எப்படி எழுத்தில் பதிவு செய்வது என்பதற்குச் சூரிய அஸ்தமனம் பற்றி வெல்டன் விவரிப்பது சிறப்பான பயிற்சிப் பாடம்.

வெல்டனும் ஜெர்மியும் எப்படி எழுதுவது என்பது குறித்து உரையாடும் காட்சிகள் யாவும் சிறப்பாக உள்ளன. அவற்றைத் தனியே தொகுத்தால் எழுத்தின் ஆரம்பப் பாடங்களாகக் கொள்ளலாம்.

ஒரு காட்சியில் லேப்டாப்பில் எழுதிக் கொண்டிருக்கும் ஜெர்மிக்கு ஒரு டைப்ரைட்டரைத் தந்து இதில் எழுது என்கிறார் வெல்டன். கம்ப்யூட்டரில் எழுதுவது எளிதானது என்கிறான் ஜெர்மி. எழுதுவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார் வெல்டன். அப்போது அவர் சொல்லும் அறிவுரை இதுவே.

“Typewriters make you think about the words you choose more carefully, because you can’t erase them with the push of a button.“

அது போலவே ஜெர்மியின் கையெழுத்துப்பிரதியை வாசித்து விட்டு வெல்டன் அதை இன்னொரு முறை அப்படியே திருத்தி எழுது என்கிறார். ஜெர்மி தான் எழுதிய பக்கங்களை நெருப்பில் போட்டுவிட்டுப் புதிதாக எழுத முயற்சிக்கிறான். எளிதாக எழுத முடியவில்லை. ஏற்கனவே எழுதிய பக்கங்களை அப்படியே திரும்ப எழுத முடியாது என்பதை உணருகிறான்.. புதிதாக அதே விஷயத்தை எழுதும் போது புதிய மொழியும் பார்வையும் கிடைப்பதை அறிந்து கொள்கிறான்.

அவனும் வெல்டனும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். குடிக்கிறார்கள். பாதிரியாருடன் ஜெர்மி இனிய நட்பு கொள்கிறான். வெல்டனை உன்னால் எழுத வைக்க முடியும் என்று அவர் உற்சாகப்படுத்துகிறார்.

தோல்வி பயத்தை மறைக்கவே வெல்டன் தனது மனைவியின் மரணத்தினைக் காரணமாகச் சொல்கிறார் என ஜெர்மி உணருகிறான். இது குறித்து அவருடன் உரையாடுகிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. வெல்டன் கோவித்துக் கொள்கிறார். ஆனால் அவன் சொன்னது சரி தானே என யோசிக்கிறார். வெல்டன் மீண்டும் எழுதத் துவங்கினாரா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.

எழுத்துலகைக் விட்டு ஒதுங்கி, தனித்து வாழும் எழுத்தாளனைத் தேடிச் செல்லும் கதைகள் ஹாலிவுட் சினிமாவில் நிறையவே வந்திருக்கிறது. அப்படி ஒரு படமாகவே இதுவும் துவங்குகிறது. ஆனால் இத்தாலிய கிராமப்புற வாழ்க்கை. அதன் வேறுபட்ட மனிதர்கள். வெல்டனின் நட்பு வட்டம். இசபெல்லாவின் காதல் வாழ்க்கை எனக் கொஞ்சம் கொஞ்சமாக படம் அழகு கொள்கிறது. அதிலும் ஜெர்மி- இசபெல்லாவின் காதல் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன, இசபெல்லாவிடம் ஜெர்மி இத்தாலிய மொழி கற்பது, பண்டிகை நாளில் அவர்கள் நடனமாடுவதும். ஜெர்மி முதன் முறையாகக் குதிரைப் பயணம் செய்வது, இசபெல்லா குதிரையில் ரயிலைத் தொடர்ந்து வரும் காட்சி போன்றவை அழகானவை.

இவை வெல்டனின் வசனங்கள்.

Anyone can use words. It’s called talking. But writers arrange them in a way so that they take on a beauty in their form. Think of words as colors, and paper as a canvas
••
Time is a precious thing, Jeremy. And the years teach much which the days never knew
••
••
Everybody needs a little lunacy. It’s what frees us from the pain of this world

டஸ்கனியின் அழகான நிலப்பரப்பு. வெல்டன் பாரிஷாக நடித்துள்ள Harvey Keitelன் சிறப்பான நடிப்பு, சில காட்சிகளின் உண்மையான உரையாடல்கள், இவை தவிர்த்தால் படம் முன்கூட்டியே யூகிக்க முடிந்த காட்சிகளுடன், அசட்டு நகைச்சுவையுடன் உருவாக்கபட்டுள்ளது.

இந்தப் படத்தின் சில காட்சிகளில் வெல்டன் நடந்து கொள்வது ஜோர்பாவை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக ஜோர்பாவின் காதல் மற்றும் அவனது கிறுக்குத்தனங்களை வெல்டனிடமும் காண முடிகிறது. ஆனால் ஜோர்பாவின் ஞானம் வெல்டனிடம் இல்லை.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2024 23:41
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.