கவிஞனின் நாட்கள்

 “Every man has his secret sorrows which the world knows not; and, oftentimes we call a man cold when he is only sad.”

என்ற லாங்ஃபெலோவின் மேற்கோளுடன் I Heard the Bells படம் துவங்குகிறது. படத்தை ஜோசுவா என்க் இயக்கியுள்ளார்.

அமெரிக்கக் கவிஞரான ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோவின் வாழ்க்கையை விவரிக்கும் இத் திரைப்படம் உள்நாட்டு போருக்கு சற்று முன் மற்றும் போரின் போது அவரது வாழ்க்கையின் கதையைச் சொல்கிறது,

படம் 1860களில் நியூ இங்கிலாந்தில் நிகழ்கிறது. ஹென்றி லாங்ஃபெலோ அடிமைத்தனத்திற்கு எதிராகக் கவிதைகள் எழுதியவர். படத்தின் ஒரு காட்சியில் கறுப்பின இளைஞன் அவரது கவிதையை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வாசிக்கிறான். லாங்ஃபெலோவின் கவிதை மக்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கான சாட்சியம் போல அக்காட்சி விளங்குகிறது.

1860 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலிருந்து படம் துவங்குகிறது. ஹென்றி லாங்ஃபெலோவின் மனைவி, அவரது ஆறு குழந்தைகள் அறிமுகமாகிறார்கள். அவர் வசதியான வாழ்க்கையைக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. அனைவரும் ஒன்றாகத் தேவலாயம் செல்கிறார்கள். விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அர்ப்பணிப்புமிக்க கணவர் மற்றும் தந்தையாக லாங்ஃபெலோ எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதாகக் காட்சிகள் விரிகின்றன.

ஜூலை 9, 1861 இல், ஹென்றியின் மனைவி ஃபேனியின் அலங்கார உடையில் தீப்பற்றிக் கொள்கிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய ஃபேனி உதவிக்காக லாங்ஃபெலோவை அழைக்கிறாள். ஆனால் வேறு அறையில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்ததால் உடனே கவனிக்கவில்லை. இதற்குள் தீயால் பலத்த காயமடைகிறாள். பின்பு அவளைக் காப்பாற்ற முயன்ற லாங்ஃபெலோ தானும் காயம்படுகிறார். பலத்த தீக்காயங்களால் அவரது மனைவி இறந்துவிடுகிறாள்.

மனைவியைத் தான் எப்படியாவது காப்பாற்றியிருக்க வேண்டும் என்ற குற்றவுணர்வு கொள்வதோடு ஏன் கடவுள் தன்னைத் தண்டித்தார் என்று கோபமும் அடைகிறார்

தனது சந்தோஷத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்த மனைவியின் இழப்பிற்குப் பிறகு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறார். அவரது கடவுள் நம்பிக்கை போய்விடுகிறது. வாழ்க்கையில் பிடிப்பில்லை. பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழுகிறார். இலக்கியச் சந்திப்பு. விருந்து, கொண்டாட்டம் என எதிலும் கலந்து கொள்வதில்லை. பிள்ளைகள் வளருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டபடி இருக்கிறார் லாங்ஃபெலோ.

அவரது மூத்தமகன் சார்லி உள்நாட்டுப் போரில் கலந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே ராணுவத்தில் சேர முனைகிறான். இதனை ஏற்க மறுக்கிறார் லாங்ஃபெலோ . அவரது ஒப்புதல் இல்லாமல் ராணுவத்தில் சேர முடியாது என்பதால் சார்லி கோவித்துக் கொள்கிறான். இதனால் வீட்டின் நிம்மதி பறிபோகிறது.

சார்லி தன்னுடைய தந்தையின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். ராணுவத்திலிருந்த போதும் சார்லி போரில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார் லாங்ஃபெலோ. அவனுக்குப் பதவி உயர்வு அளிக்கபட்டு போர்முனைக்குச் செல்ல தேவையற்ற நிலையை உருவாக்குகிறார். அதைச் சார்லி ஏற்க மறுக்கிறான். வர்ஜீனியாவில் நடைபெற்ற சண்டையின் போது சார்லி சுடப்பட்டுப் படுகாயமடைகிறான்.

போர் முனையில் காயம்பட்டு வீழ்ந்த மகனைப் பற்றி அறிந்த லாங்ஃபெலோ துடித்துப் போகிறார். எப்படியாவது மகனை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயணம் மேற்கொள்கிறார், யுத்தகளத்தில் மகனைத் தேடுகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு இடத்தில் காயம்பட்டு கிடந்த மகனைக் கண்டுபிடிக்கிறார். அவனை மீட்டு வந்து சிகிட்சை அளித்துக் காப்பாற்றுகிறார்.

சார்லி தனது காயங்களிலிருந்து மீண்டு வரும்போது தனது கோபத்தையும் வருத்தத்தையும் தந்தையிடம் வெளிப்படுத்துகிறான்.

தனது மகன் உயிர் பிழைத்ததற்குக் கடவுள் நம்பிக்கையே காரணம் என நம்பிய லாங்ஃபெலோ 1863 இல் கிறிஸ்துமஸ் தினத்தில் Christmas Bells என்ற கவிதையை எழுதுகிறார். அந்தக் கவிதை புகழ்பெறுகிறது.

லாங்ஃபெலோவின் வாழ்க்கையில் நடந்த சோகம் மற்றும் பிள்ளைகளின் மீது அவர் கொண்டிருந்த பாசம் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது. உடை அலங்காரம் மற்றும் அரங்க அமைப்பு அந்தக் காலத்தினைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஸ்டீவ் பக்வால்டரின் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.

“உலகத்தை மாற்ற எங்களுக்குக் கவிஞர்கள் தேவை” என்று ஃபேனி ஒரு காட்சியில் தனது கணவரிடம் கூறுகிறார். அப்படிப்பட்ட கவிஞர் ஏன் கவிதை எழுதுவதை நிறுத்தினார் என்பதையே படம் ஆராய்கிறது.

படத்தில் கவிஞன் லாங்ஃபெலோவை விடவும் தந்தையான லாங்ஃபெலோவை தான் அதிகம் காணுகிறோம். தேசபக்தி, குடும்பம் மற்றும் கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களை வலியுற்றுத்துவதற்காகத் தயாரிக்கபட்ட படம் என்பதால் லாங்ஃபெலோவின் கவிதையுலகம் முதன்மையாகச் சித்தரிக்கபடவில்லை. ஆயினும் நாம் லாங்ஃபெலோ எனும் கவிஞனைப் புரிந்து கொள்ளப் படம் நிறையவே உதவி செய்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2024 04:16
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.