நுண்ணோக்கியும் தொலைநோக்கியும்

கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பான தேதியற்ற மத்தியானம் குறித்த தனது வாசிப்பனுபவத்தை மதார் பகிர்ந்துள்ளார். கவிதைகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேவதச்சனின் கவிதைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ள விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. மதாருக்கு என் வாழ்த்துகள்

தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேவதச்சனின் இந்தத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

••

தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் – மதார்

தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைக் கூறலாம். ஆதியில் ஆரம்பித்து அந்தம் வரை நீண்டு செல்லும் கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. உலகின் ஒரு முனையில் சேலையைக் கட்டி மறுமுனைக்குச் சென்று கொண்டே இருக்கும் பெண்ணின் படிமம் தேவதச்சனின் ஒரு கவிதையில் வரும். அதே போல இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் அந்த முடிவை நோக்கி நீண்டு செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன.

தோல்

படிப்பு முடிந்ததும் முதலில்

பள்ளிக் கூடம்

என்னுடையதில்லை

என்றானது

சிறிதான என் சட்டைகள்

என்னுடையவை இல்லாமல் ஆயின

இடமாற்றல் உத்தவரவு வந்த அன்று

அமர்ந்திருந்த நாற்காலி

என்னுடையதில்லாமல் போனது

பெரியவர்கள் ஆனதும்

 என் மகனும் மகளும் என்னுடையவர்கள் அல்லாமல் போனார்கள் ஓட்டுப் போட்டு

முடிந்ததும்

அரசு என்னுடையதில்லாமல் ஆனது

விலைகள் மிக உயர்ந்து

காலப்பழங்கள் கீரைகள்

எனக்கானதாக இல்லாமல் ஆயின

பூட்டுப்போட்ட பூங்காக்கள்

டிக்கெட் வாங்கும் கோயில்கள்

பாலத்துச் சுவர்கள் எனதில்லாமல் போய்விட்டன

 கட்டணங்கள் மிக உயர்ந்து,

உயரமான ஆஸ்பத்திரிகளும் ஹோட்டல்களும் என்னுடையவை ஆகாமல் போயிவிட்டன

என்றாலும் எப்போதும்

என்னுடையதல்லாத

மேகங்கள்

என் தோலைப் போல

கூட இருக்கின்றன

இதே போல இந்தத் தொகுப்பில் வரும் “நான் ஒரு முட்டாளு” கவிதையும் தனிமனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பேசுகிறது. ஆனால் கவிதை நேரடியாக அதைக் கூறாமல் வாழ்வின் பல்வேறு தளங்களைத் தொட்டுத் தொட்டுச் சொல்லி கடைசியாக சொல்ல வருவதைச் சொல்கிறது, சொல்ல வராததையும் சொல்கிறது அல்லது வாசகனின் வாசிப்புக்கு விட்டுவைக்கிறது. சமீபத்தில் வெளியான அகழ் இதழில் தேவதச்சன் அவரது கவிதைகளில் இயற்கை குறித்தான ஒரு கேள்விக்கு பின்வரும் பதிலைச் சொல்கிறார் :

“ஒருமுறை என் அம்மாவுக்கு உடல் நிலை மோசமானபோது அவரை அவசர ஊர்தியில் கொண்டு போனோம். நள்ளிரவு வேளை. நான்கு வழிச்சாலையில் வண்டி செல்லும்போது ஜன்னல் வழியே பார்த்தால் நிலவு அவ்வளவு அழகாய் காட்சி அளிக்கிறது. என் அம்மாவை பார்த்தால் லேசாக ரத்தம் கசிய படுத்திருக்கிறார். மறுபுறமோ நிலவு தெரிகிறது. எனக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. எதுவுமே புரியாத தருணமாக இருந்தது. நிலை குலைந்து போய்விட்டேன். இப்படி அசாதாரணமான நேரத்தில் நம்மை இயற்கை தொடுவதையே கவிதையிலும் எதிர்பார்க்கிறேன்”

அவரது பதிலைப் போலவே அவரது கவிதைகளில் அவரது இயற்கை அமைகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள இன்னொரு அம்சம் முன்பின் தெரியாத நபரிடமிருந்து தனிமனிதன் ஒன்றை அடையும் தருணம். அது இந்தத் தொகுப்பு நெடுக பல கவிதைகளில் வருகிறது. தெருவில் யாரோ ஒரு பெண் கைக்குழந்தையை ஏந்தி மகிழ்வாய்ச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் சைக்கிளோட்டும் சிறுமியைப் பார்க்கும்போது இப்படி வெறுமனே நல்ல காட்சிகளை நம் கண்கள் வெறுமனே பார்ப்பது மட்டுமே நமது ஆழமான காயங்களை குணப்படுத்துகிறது என்கிறார் தேவதச்சன். இந்தத் தொகுப்பில் கீறல் விழுந்த மேஜை என்று ஒரு கவிதை வருகிறது.

கீறல் விழுந்த மேஜை

தெரு முனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சில நாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிற மேஜையும்

வர்ணம் இழந்த பிளாஸ்டிக்

வாளியும்

அங்கு இல்லை

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்திரத்தின்

மலர்ச்சரத்தை

“நிரந்தரத்தின் மலர்ச்சரம்” என்ற சொல் அழகானது. அவள் இல்லாது போகும்போது தான் அவள் இருந்தபோது இருந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இதே தொகுப்பில் வரும் “பிரியா விடை”, ” தேநீர் கடை” போன்ற கவிதைகளும் இதே போல இன்னொருவர் நமக்கு அளிக்கும் ஏதோ ஒன்றை அற்புதமாக உணர்த்துகிறது.

தேவதச்சனின் கவிதைத் தொகுப்புகளில் எப்போதும் புதிது போல் கவிதைகள் இருக்கும். அப்படி இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை “லாவா கற்கள்”

லாவா கற்கள்

ரோடு

போடப் போகிறார்கள்

பழைய சாலையை

நேற்று இரவே

எந்திரம்

கொண்டு

கொத்திப் போட்டு

விட்டார்கள்.

சாலை

இப்பொழுது தான்

ஆறிய லாவா கற்கள் போல்

குதறிக் கிடக்கிறது

மூன்று இளைஞர்கள்

அதன்மேல்

தட்டுத்தடுமாறி

சைக்கிளில்

சென்றபடி இருக்கிறார்கள்

ஒருவன் சொன்னான்:

செம யாக இருக்கிறது.

ஆம் என்றான் இன்னொருவன்

அவர்களது சைக்கிள்

கடக் கடக் என்று

போய்க் கொண்டிருக்கிறது

புவியின்

எப்போதும் உள்ள முதல் நாளில்

இந்தக் கவிதை படித்ததும் புத்துணர்வை அளித்தது. இந்தக் கவிதை காட்டும் காட்சியே புதியதாக இருந்தது. இந்தக் கவிதையிலும் யாரென்றறியாத மூன்று இளைஞர்கள் நமக்கு மகிழ்வை வழங்கிவிடுகிறார்கள், நிரந்தரத்தின் மலர்ச்சரம் போல. இந்தக் கவிதையில் “செம யாக இருக்கிறது” என்பதும் இந்தக் கவிதைக்கு செம யாக இருக்கிறது.

Decision to leave என்ற கொரிய படத்தில் நவீன மொபைல் app களை வைத்தே கதையின் முக்கியமான சில காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமைத்திருப்பார்கள். துளியும் செயற்கைத் தனம் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கவிதையில் வரும் தற்கால வார்த்தையான “செம” என்பதும் இந்தக் கவிதைக்குள் சரியாகப் பொருந்தி அமைகிறது, துருத்தி நிற்கவில்லை. முடிவில் பூமியின் முதல் நாள் எனும் போது பூமியின் முதல் நாளுக்கு இந்தக் கவிதை நம்மை அழைத்துச் செல்லவில்லை. காலத்தையே தொலைத்து திகைப்பில் நிற்க வைத்துவிடுகிறது. அது இந்தக் கவிதையின் இன்னுமொரு அழகு. இந்தத் தொகுப்பில் வரும் இன்னொரு கவிதையான “தெரிதல்” நமக்கு அளிப்பதும் இன்னுமொரு ஆழமான திகைப்பைத்தான்.

தெரிதல்

எனக்குத் தெரியாதவர்கள் இறப்பதில்லை; பிறப்பதும் இல்லை.

தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய்

இறந்து போகிறார்கள்.

நானும் ஒரு நாள் இறந்துபோவேன்…

எனக்கு நான்

நன்கு தெரிந்தவன் தானே!

இந்தத் தொகுப்பில் வரும் “ஒரு நாவலும் காற்றும்” என்ற கவிதையும் நுட்பமானது.

ஒரு நாவலும் காற்றும்

பொன்னியின் செல்வன்

நாவலை

மூன்றாவது முறையாக

படித்துக்

கொண்டிருக்கிறாள்

முதன்முதலாக,

பள்ளி விடுமுறையில்

மாமா வீட்டிற்கு

செல்கையில்

படித்தாள்

இரண்டாவது முறை

பணியிடம் மாற்றலாகி

கர்நாடகாவில்

அடுக்கு மாடிக்

கட்டடத்தில்

படித்தாள்

மூன்றாவது முறை

கணவனை இழந்து

சிறு நகரத்தில்

சிறு வீட்டில்,

நான்காவது பாகம்

வரை முடித்து விட்டாள்

இப்போது

முதல் மூன்று பாகங்களை சட்டை தைக்கும்

டெய்லர் தோழிக்கு

கொண்டு செல்கிறாள் மலை வரக் கூடும்

என்பது போல் காற்று

ஜிலு ஜிலு வென்று வீசத்தொடங்குகிறது

இதில் ஜிலு ஜிலு வென்று வீசத் தொடங்கும் காற்று நம் பால்யத்தை, எதையும் துவங்கும்போது இருக்கும் அப்பாவித்தனத்தை உணர்த்துகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் நாவலின் பாகங்களை பயன்படுத்தியிருப்பது இந்தக் கவிதைக்கு புதுமையையும் சேர்க்கிறது.

***

நூல் : தேதியற்ற மத்தியானம் – தேவதச்சன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

நன்றி:

கவிதைகள் இணையதளம்.https://www.kavithaigal.in/.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2024 04:52
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.