ஹெர்சாக் சொல்கிறார்

தாமஸ் வான் ஸ்டெய்னேக்கர் இயக்கிய Werner Herzog: Radical Dreamer படத்தின் துவக்கத்தில் தன்னை A good soldier of cinema என ஹெர்சாக் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

ஆம். போர்வீரனின் துணிச்சலும் தியாகமும் கொண்டவர் தான் வெர்னர் ஹெர்சாக். பதினாறு வயதில் துவங்கிய அவரது சினிமாக் கனவு நிறைய போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்கச் செய்தது. அவற்றை வெற்றிகரமாக வென்று காட்டி சாதனைகளை நிகழ்த்தியவர் ஹெர்சாக். இன்று சர்வதேச சினிமாவில் அவரது பெயர் ஒரு அடையாளம். நிகரற்ற திரைக்கலைஞராகக் கொண்டாடப்படுகிறார்.

இந்த ஆவணப்படத்தில் ஹெர்சாக் சச்ராங்கில் (Sachrang) அவர்கள் வசித்த பழைய வீட்டைக் காணச் செல்கிறார். அழகான மலைக்கிராமம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவர்கள் வசித்த ஸ்டிபெடிக் நகரம் அழிக்கப்பட்டது. ஆகவே ஹெர்சாக்கின் அம்மா ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள சச்ராங்கில் தஞ்சம் புகுந்தார்.

இப்போது அந்த பழைய வீடு உருமாறியிருக்கிறது. பூட்டப்பட்ட வீட்டினை. கண்ணாடி வழியாகப் பார்க்கிறார். அவரது நினைவின் கதவுகள் திறந்து கொள்கின்றன. தான் சிறுவனாக இருந்த போது அந்த வீடு எப்படியிருந்தது என்பதை விவரிக்கிறார். வீட்டிற்குள் போய்ப் பார்க்கலாமா என்று கேட்கிறார்கள். வேண்டாம் என மறுத்துவிடுகிறார். ஏதோ பழைய நினைவுகள் பீறிட அவரது கண்கள் கலங்கி விடுகின்றன.

அவருக்கு விருப்பமான அருவியைக் காணச் செல்கிறார்கள். வழிந்தோடும் காட்டருவியைப் பார்த்து மகிழும் ஹெர்சாக் அது நான் தான் என்று சொல்கிறார். அது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமில்லை. சில இடங்களை நாமாகவே உணருகிறோம். அதைத் தான் ஹெர்சாக் சொல்கிறார்.

அந்த அருவிக்குத் தண்ணீர் எங்கேயிருந்து வருகிறது என்று உடன் வந்த பெண் கேட்கிறார். தான் அதைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த மர்மம் அப்படியே நீடிக்கட்டும் என்கிறார்.

ஹெர்சாக்கின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. நதிமூலம் காண வேண்டாம் என்பது தான் நமது மரபு. சில மர்மங்கள் நீடித்திருப்பதே நல்லது.

அந்த அருவியைப் போலவே தன் போக்கில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறார் ஹெர்சாக்.

படத்தின் இறுதிக்காட்சியில் இந்த ஆண்டு இரண்டு புத்தகங்கள் எழுதிமுடித்திருக்கிறேன். புதிதாக ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் குரலில் வெளிப்படும் சந்தோஷம் தான் அவரை இன்றும் இளமையாக வைத்திருக்கிறது

இளவயதின் ஹெர்சாக்கை விடவும் இப்போதுள்ள ஹெர்சாக்கின் தோற்றம். அதில் வெளிப்படும் கனிவு. ஞானம் பிடித்திருக்கிறது.

இளமையான ஹெர்சாக் நெருப்பைப் போன்றிருக்கிறார். சாத்தியமற்ற கனவுகளைச் சாத்தியமாக்கும் போராட்ட குணமும், அதற்காக உயிரையும் இழக்க முற்படும் தைரியமும் கொண்டிருக்கிறார்.

அவரது திரையுலகப் பயணத்தினையும் அதில் அடைந்துள்ள வெற்றிகளையும் காணும் போது ஹெர்சாக்கை தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

பெரிய கனவுகள் இல்லாத வாழ்க்கை என்பது அர்த்தமற்றது. ஒரு போதும் சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும் கனவுகளை நனவாக்கிக் காட்டுவதே வாழ்வின் உண்மையான சவால். அதை ஹெர்சாக் விரும்பி ஏற்றிருக்கிறார். வென்று காட்டியிருக்கிறார்.

உலகின் குரலை விடவும் தனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலையே அவர் தொடர்ந்து கேட்கிறார். நம்புகிறார். மனசாட்சியின் வழிகாட்டுதலில் நடந்து செல்கிறார்.

படத்தின் இன்னொரு காட்சியில் “Even Dwarfs Started Small” படம் எடுத்த இடத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பு வந்து நிற்கிறார். ஆயினும் அவரது நினைவில் படப்பிடிப்பு நாட்களில் நடந்தவை துல்லியமாக வெளிப்படுகின்றன.

இது போலவே Aguirre, Wrath of god படம் உருவான விதம். படப்பிடிப்பில் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் விவரிக்கும் போது ஹெர்சாக் தனது கனவைச் சாத்தியமாக்க எவ்வளவு போராடியிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாகக் கிளாஸ் கின்ஸ்கியோடு அவருக்குள்ள நட்பு மற்றும் மோதலை கூடப் புன்னகையோடு தான் வெளிப்படுத்துகிறார்

பெருவியன் மலையின் மீது ஒரு நீராவிக் கப்பலைக் கொண்டு செல்வதைப் பற்றிப் படம் எடுப்பதாக ஒருவர் கனவு காணுகிறார் என்றால் அது எளிய விஷயமா என்ன. சினிமாவின் மீது ஹெர்சாக்கிற்குள்ள பித்து தான் இது போன்ற அசாதாரணப் படங்களை உருவாக்க செய்திருக்கிறது.

ஹெர்சாக்கின் சகோதரரும் அவரது தயாரிப்பாளருமான லக்கி ஸ்டிபெட்டிக்கின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. நிதானமாக, தனது பங்களிப்பை அவர் விவரிக்கும் விதம் அழகானது.

நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த தனது வழிகாட்டியான லோட்டே ஈஸ்னரைப் பார்க்க முனிச்சிலிருந்து பாரீஸுக்கு ஹெர்சாக் ஒரு பாதயாத்திரையை மேற்கொண்டார் அந்த யாத்திரையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது குறித்து முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

இந்த ஆவணப்படத்தில் லோட்டே ஈஸ்னரைப் பற்றி ஹெர்சாக் குறிப்பிடுவதுடன் அந்தப் பயணத்தில் எழுதிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்..

ஜெர்மானியத் திரையுலகில் புதிய அலை எப்படி உருவானது என்பது குறித்தும். ஹெர்சாக் படங்களின் அழகியல் குறித்தும் படம் விரிவாகப் பேசுகிறது.

நடிகர்கள் கிறிஸ்டியன் பேல், நிக்கோல் கிட்மேன், இயக்குநர் விம் வெண்டர்ஸ், இயக்குநர் வோல்கர் ஸ்க்லான்டோர்ஃப், நேர்காணல்கள் ஹெர்சாக்கின் சினிமா குறித்த நேர்மையான பார்வையினை முன்வைக்கின்றது.

தனது கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கி பார்க்கும் ஹெர்சாக் சுயபுலம்பல் எதுவும் இல்லாமல், தன்னைப் பற்றிய பெருமிதங்கள் எதையும் சொல்லாமல் தனக்கு விருப்பமான வேலையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்வதாகச் சொல்லும் போது அவர் மீதான மதிப்பு மிகவும் அதிகமாகிறது.

ஹெர்சாக்கிற்குள் ஒரு சிறுவன் துடிப்போடு இருக்கிறான். அவனது ஆசைகளும் ஆர்வமுமே அவரை வழிநடத்துகிறது. படத்தின் ஒரு காட்சியில் ஹெர்சாக் கடற்கரையில் கிடக்கும் வட்டவடிவமான கற்களை ஆசையாகப் பொறுக்கி கையில் வைத்துக் கொள்கிறார். அப்போது நாம் காண்பது அந்தச் சிறுவனையே.

ஹெர்சாக் நடத்தும் திரைப்பள்ளி. இளம் இயக்குநர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள். நடிகர்களைக் கையாளுவதில் அவர் காட்டும் தனித்துவம், அவரது ஆவணப்படங்களின் உருவாக்கம். அமெரிக்க வாழ்க்கை என இந்த ஆவணப்படம் ஹெர்சாக்கையும் அவரது திரை பங்களிப்பையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2024 00:43
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.