புதுச்சேரியில்
ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார்.

மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்..

வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். தமிழர்களின் மரபு அறிவியல், பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ந்து விரிவான நூல் எழுதியிருக்கிறார்.





அடிமை வணிகம், அச்சுப்பண்பாடு, இலக்கணம், இதழ்களின் தோற்றம். காலனிய நாட்குறிப்புகளை பதிப்பித்தல் என்று பரந்த தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அவ்வகையில் தமிழக வரலாற்றை சர்வதேச அளவில் கவனப்படுத்தி வருகிறார் . அவருடன் பேசிக் கொண்டிருந்தது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
அவரது 17 நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சீனு தமிழ்மணி இதில் சில நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அபூர்வமான அந்த சந்திப்பிற்கு உதவிய சீனு தமிழ்மணிக்கு நன்றி.



அன்று மதியம் மொழிபெயர்ப்பாளர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பிரெஞ்சு மொழித்துறை தலைவராக புதுவைப் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பிற்கான ரோமன் ரோலந்து விருதை பிரான்ஸ் அரசிடம் பெற்றிருக்கிறார். அவர் தனது நூல்களை எனக்கு அளித்தார்.
அவரது மொழிபெயர்ப்பில் வெளியான அப்பாவின் துப்பாக்கி – ஹினர் சலீம், சூறாவளி – லெகிளெஸியோ உல்லாசத்திருமணம் – தாஹர் பென் ஜீலோவ்ன் நூல்களை முன்பே படித்திருக்கிறேன். சிறப்பான மொழியாக்கங்கள்.

வெள்ளிக்கிழமை காலை நண்பரும் புகைப்படக்கலைஞருமானஇளவேனில் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்தார். புதுவை வீதிகள் காலை நேரத்தில் அவ்வளவு அழகாக இருக்கின்றன. நடந்து சுற்றி நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். இளவேனிலுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.



S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
