வளைந்து செல்லும் வாக்கியங்கள்
சொல்வனம் இதழில் நம்பி கிருஷ்ணன் மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time” என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் ப்ரூஸ்டினை இதைவிடச் சிறப்பாக எவராலும் அறிமுகம் செய்துவிட முடியாது. அபாரமான கட்டுரை. தலைசிறந்த பேராசிரியர் வகுப்பில் உரையாற்றுவதைப் போலத் தனது வாசிப்பின் ஆழத்தை, ஞானத்தைக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் தமிழுக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன்.

மார்சல் ப்ரூஸ்டின் பெயரை எனது ஆங்கிலப் பேராசிரியர் ஜோசப் வகுப்பறையில் சொன்ன நாள் நினைவிலிருக்கிறது. அப்படி ஒருவரை ஆங்கில இலக்கியம் படிக்கும் எவரும் கேள்விபட்டதேயில்லை. ஆனால் ஜோசப் தனது வகுப்பில் வாசிக்க வேண்டிய சிறந்த எழுத்தாளர்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வைப்பார். அப்படி ப்ரூட்ஸை இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் என்று வியந்து சொல்லியதோடு அவரைப் படிப்பது எளிதானதில்லை. காலத்தின் அடுக்குகளில் சுழன்று கொண்டேயிருக்கும் தன்னிச்சையான நினைவாற்றல் கொண்ட எழுத்து அவருடையது. தோல்வியுற்ற காதலைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ப்ரூஸ்ட் பகலில் உறங்கி இரவு முழுவதும் எழுதக் கூடியவர். நோயாளியாக நான்கு ஆண்டுகள் படுக்கையிலே கிடந்தார். நினைவின் சஞ்சாரத்தை அவரை விடச் சிறப்பாக எழுதிவிட முடியாது என்று அறிமுகம் செய்தார்.
அந்த நாட்களில் நான் ரஷ்ய எழுத்தாளர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தேன். ஆகவே ப்ரூஸ்டினை வாசிக்கத் தோணவில்லை. அதன் சில ஆண்டுகளுக்குப் பின்பு டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் Swann in Love திரைப்படத்தைப் பார்த்தேன். அது மார்சல் ப்ரூஸ்டின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது. அந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆகவே ப்ரூஸ்டினைப் படிப்பது என்று முடிவு செய்து, டெல்லியின் பழைய புத்தகக் கடைகளில் தேடி அவரது In Search of Lost Time தொகுதி ஒன்றினை வாங்கினேன். அது தான் படத்தின் கதை.
ப்ரூஸ்டின் மொழி நடை வாசிக்கச் சிரமமாக இருந்தது. வெட்டுக்கிளி தாவிச் செல்வது போல ஆங்காங்கே சில பக்கங்களைப் படித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. Time Regained திரைப்படத்தை இரண்டாயிரத்தில் பார்த்தபோது ப்ரூஸ்டினை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஆர்வத்தில் மும்பை பழைய புத்தகக் கடைகளில் தேடி மார்சல் ப்ரூஸ்டின் ஆறு தொகுதிகளையும் வாங்கினேன். இன்று வரை எதையும் முழுமையாகப் படிக்கவில்லை.
பிரெஞ்சு இலக்கியத்தில் பால்சாக், பிளாபெர், அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ,மார்க்ரெட் யூரிசனார் போன்றவர்களே எனது விருப்பத்திற்குரியவர்கள். ஆகவே மார்சல் ப்ரூஸ்டின் மேதமையை அறிந்திருந்தாலும் அவரை விரும்பிப் படிக்கவில்லை.

நேற்று நம்பி கிருஷ்ணனின் கட்டுரையைப் படித்து முடித்த போது உடனே மார்சல் ப்ரூஸ்டினை படிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. மார்சல் ப்ரூஸ்டின் வாழ்க்கை, அவரது நாவல்வரிசை, அவரைப் பற்றிய புத்தகங்கள். திரைப்படங்கள், அவரை நம்பி படிக்க முனைந்த அனுபவம் என யாவும் இந்த ஒரே கட்டுரையில் இணைத்து எழுதப்பட்டிருக்கிறது.
மலையேற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் ஒவ்வொரு சிகரமாக ஏறுவார்கள். அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொரு சிகரத்தின் உச்சியினைத் தொடும் போதும் அளவற்ற ஆனந்தம் கொள்வார்கள். அது போன்ற ஒரு வாசிப்பு முறையை நம்பி கிருஷ்ணன் கொண்டிருக்கிறார். வாசிக்கக் கடினமான இலக்கியவாதிகளை அவர் ஆழ்ந்து படித்து எளிமையாக, நுட்பமாக அறிமுகம் செய்து வைக்கிறார்.
அவரது மொழிநடை பாதரசம் போல வசீகரமானது. புதிய தமிழ்சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இந்தக் கட்டுரையில் மலைச்சாலையைப் போல் வளைந்து செல்லும் வாக்கியங்களை எழுதியவர் ப்ரூஸ்ட் என்று ஒருவரியை எழுதியிருக்கிறார். ப்ரூஸ்டினை வாசிக்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன். நம்பியால் துல்லியமாக ப்ரூஸ்டின் மொழியை, அகஉணர்வுகளைச் சொல்லிவிட முடிகிறது.

டி.எஸ். எலியட் பற்றிய அவரது புத்தகம் படித்தபோது வியந்து போனேன். சமீபத்தில் அவரது கட்டுரைகளின் தொகுப்பு நரி முள்ளெலி டூயட் வெளியாகியுள்ளது. சர்வதேச இலக்கியம். சினிமா, கவிதை, குறித்து எழுதப்பட்ட சிறந்த தொகுப்பு.
பனிச்சறுக்கு விளையாட்டினை ஒருவருக்குக் கற்றுத் தருவது எளிதில்லை. அதுவும் உறைபனியே இல்லாத நிலத்தில் வசிப்பவருக்குச் சொல்லித்தருவது என்றால் எவ்வளவு சிரமம் என்று எண்ணிப்பாருங்கள். அப்படியான முயற்சி தான் ப்ரூஸ்ட் பற்றிய கட்டுரை.
நம்பியால் எங்கேயிருப்பவருக்கும் எளிதாகப் பனிச்சறுக்கு கற்றுதந்துவிட முடிகிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். தொடர்ந்து உலக இலக்கியத்தினைச் சிறப்பாக அறிமுகம் செய்துவரும் சொல்வனம் இதழுக்கு எனது வாழ்த்துகள்.
இணைப்பு
மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
