கவிதையினுள் மறைந்த கதை.
இந்திய ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டர் (Meena Alexander) ஒரு நேர்காணலில் தான் கதைகள் எழுத விரும்புகிறேன். ஆனால் அதைக் கவிதையாக எழுதிவிடுகிறேன் என்கிறார். அதே நேர்காணலின் இன்னொரு பதிலில் எனது கவிதையில் உப்புத் தண்ணீரில் கரைந்திருப்பது போலக் கதை கலந்திருக்கிறது என்றொரு விளக்கத்தையும் சொல்கிறார்.

கதை எனச் சிறுகதையாசிரியர்கள் சொல்வதும் மீனா அலெக்சாண்டர் சொல்வதும் ஒன்று தானா.
கதை என்று சொல்லப்படுவது நிகழ்வுகளா. அல்லது அனுபவங்களின் திரட்சியா. இது தான் கதை என்று எவராலும் வரையறை செய்ய முடியவில்லை. மாறாக இவையெல்லாம் இணைந்து கதையை உருவாக்குகிறது என்று அதன் கச்சாப்பொருட்களை விவரிக்கிறார்கள்.
கவிதைகளில் கதை ஒளிந்திருப்பதை நானும் அறிவேன்.
இன்றுள்ள பெரும்பான்மை சிறுகதையாசிரியர்கள் கவித்துவமாக எழுதுவதற்கே விரும்புகிறார்கள். அவர்களுக்கு வெறும் கதை போதுமானதாகயில்லை. கவிதையின் மொழியில் கதைகள் எழுதவே விரும்புகிறார்கள். இதற்கு எதிர்நிலையாகக் கவிஞர்களோ கவிதையை நேரடியாக, உரைநடை போலக் கதாபாத்திரங்களுடன் எழுத முற்படுகிறார்கள்.
ஜென்கவிதைகளையும் ஜென் கதைகளையும் வாசிக்கும் போது இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களைப் போலவே இருக்கின்றன. ஜென் கதைகளில் வரும் குருவிற்குப் பெரும்பாலும் பெயர் கிடையாது
ஜென் கதைகளில் குற்றத்திற்கு இடமில்லை. ஆகவே கதை எடையற்றதாக இருக்கிறது. குற்றம் தான் கதைக்கு எடையை, வேகத்தை உருவாக்க கூடியது. ஜென் கதைகளில் சிறுவர்களில்லை. ஜென்னில் வயது என்பது ஒரு கற்பிதமே. ஆகவே சிறுவனைப் போலக் குரு நடந்து கொள்கிறார். பைனாக்குலர் மூலம் தொலைதூரத்தில் ஒளிரும் நிலவை அண்மையில் காண்பதைப் போன்ற அனுபவத்தையே ஜென் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. சில நேரம் தொலைநோக்கி போலவும் சில நேரம் நுண்ணோக்கி போலவும் செயல்படுகிறது.
கவிஞர் தேவதச்சனுடன் உரையாடும் போது அவர் கவிதையின் நுட்பங்களை விடவும் கதையின் அழகியல் மற்றும் நுட்பங்களைக் குறித்தே அதிகம் உரையாடுவார். விவரிப்பார். அவரது கவிதையினுள்ளும் கதையிருக்கிறது. அன்றாட நிகழ்வுகளை அவர் கோர்த்து கதையாக்குவதில்லை மாறாக அவற்றை ஆழ்ந்து அவதானித்து இந்த நிகழ்வுகள் நடைபெறும் காலம் மற்றும் இடம் குறித்த பார்வையை முன்வைக்கிறார்.

மீனா அலெக்சாண்டரின் ஆங்கிலக் கவிதைகள் தனித்துவமானவை. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மீனா லண்டனில் படித்திருக்கிறார். அவரது தந்தை ஜார்ஜ் அலெக்சாண்டர் சூடானில் வானிலை நிபுணராகப் பணியாற்றியவர். ஆகவே சூடானில் சில காலம் வசித்திருக்கிறார். பதினைந்து வயதில் மேரி எலிசபெத் என்ற தனது பெயரை மீனா என்று மாற்றிக்கொண்டார்
டெல்லியிலும் ஹைதராபாத்திலும் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மீனா தனது 67வது வயதில் அமெரிக்காவில் காலமானார்
அவரது கவிதை ஒன்றில் அம்மாவிற்குத் தெரியாமல் மகள் பரணில் வைத்திருந்த தேனைத் திருடி அடிவாங்குகிறார். அது கதைக்கான கரு. அதைக் கவிதையில் வெளிப்படுத்தும் போது தேனும் அடிவாங்குவதும் எதிரெதிர் விஷயங்களாக மாறிவிடுகின்றன.
நினைவில் உறைந்து போனவிஷயங்களைக் கதையாக்கும் போது நினைவு புனைவுடன் இணைந்து உருமாற்றம் கொண்டுவிடுகிறது. அதே நினைவுகள் கவிதையில் வெளிப்படும் போது உணர்வு எழுச்சிகளே முதன்மையாக இருக்கின்றன.

ஜப்பானிய கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மீனா அலெக்சாண்டர் அவரது ஜப்பானிய கவிதை வாசிப்பு அனுபவத்தைத் தனது கவிதையின் பகுதியாக மாற்றிவிடுகிறார். புத்தகம், பயணம் இரண்டும் அவரது கவிதைகளில் தொடர்ந்து குறியீடாக இடம்பெறுகிறது.
நவீன ஓவியவகையான கொலாஜ் போல இவரது கவிதைகளில் வேறுவேறு நகரங்கள், வரலாற்று நிகழ்வுகள். சந்தித்த மனிதர்கள். மறக்க முடியாத நினைவுகள் ஒன்றிணைகின்றன. பல்வேறு பண்பாடுகளின் துண்டினை தனது கவிதையில் ஒன்றிணைக்கிறார் என்கிறார்கள்.
கவிதைகள் எழுதுவது எனக்கான தங்குமிடத்தை உருவாக்கும் முயற்சியாகும். இல்லையெனில், நான் எங்கும் இருக்க முடியாது என்று உணர்ந்தேன். வார்த்தைகளால் வசிப்பிடத்தை உருவாக்கும் பழக்கம் எனக்கிருந்தது. அந்த வகையில் கவிதைகளே எனது வசிப்பிடம். என்கிறார் மீனா அலெக்சாண்டர்
பம்பாய் துறைமுகத்தில் அலைகள் இருட்டாக இருந்தன என்று காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். எழுதுவது என்பதே சத்திய சோதனை என்றொரு கவிதை வரியை மீனா அலெக்சாண்டர் எழுதியிருக்கிறார்.
பாஷோ எங்கே போனார்?
அவர் ஒரு மேகத்திற்குள் நுழைந்து, மறுபுறம் வெளியே வந்தார்:
••
என் ஆசை மேகம் போல அமைதியாக இருக்கிறது
என்பது போன்ற அழகாக வரிகளை கொண்டிருக்கிறது மீனாவின் கவிதைகள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

