அரசனின் தனிமை
நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்ட்ரா திரைப்படம் மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஒன்று ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னர் நிக்கோலஸ் II ன் திருமணம் மற்றும் அரசாட்சியைப் பற்றியது. இரண்டாவது லெனின் ரஷ்யப்புரட்சியை உருவாக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. மூன்றாவது இளவரசனின் நோயை குணப்படுத்துவதாக அரண்மனைக்கு வந்து அலெக்சாண்ட்ராவின் அன்பை பெற்று ரஷ்ய அரசை ஆட்டுவைத்த மதகுரு ரஸ்புடின் பற்றியது.
இந்த மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட சரடுகள். இவை இணைந்து கதைப்பின்னலை உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் தயாரிப்பில் உருவான படம் என்பதால் ரஷ்யாவின் மீதான வெறுப்பு ரகசியமாக மறைந்திருப்பதை உணர முடிகிறது. இப்படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது.
1971 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஃபிராங்க்ளின் ஜே. ஷாஃப்னர் இயக்கியுள்ளார்.

ரஷ்யாவின் ஜார் நிக்கோலஸ் II ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ராவைத் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவள் ஒரு புராட்டஸ்டன்ட். இந்தத் திருமணம் நிக்கோலஸின் அன்னைக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு அலெக்ஸாண்ட்ரா ஆர்வத்துடன் ரஷ்ய மொழியைக் கற்கத் தொடங்கினாள், காலப்போக்கில் அவள் நன்றாக ரஷ்ய மொழி பேச கற்றுக்கொண்டாள்.
எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை அரண்மனையிலும் நடந்தது. ஜெர்மானிய பழக்கவழக்கங்களை அரண்மனையில் கொண்டுவந்துவிட்டாள் என்று மாமியார் குற்றம் சாட்டினார். தன்னை அரண்மனையில் எவரும் மதிப்பதில்லை என்று அலெக்ஸாண்ட்ரா ஃபெத்ரோவ்னா குற்றம் சாட்டினார். அலெக்ஸாண்ட்ராவை ரஷ்ய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நிக்கோலஸின் அன்னை உறுதியாக நம்பினார்
இந்த இருவருக்கும் இடையில் ஜார் மன்னர் சிக்கிக் கொண்டிருந்தார். குடும்ப விவகாரங்கள் ஒரு தேசத்தின் தலைவிதியை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதற்கு ஜார் மன்னரின் கதை ஒரு உதாரணம்.

ஜார் மன்னரின் பிடிவாதம். மற்றும் நிர்வாகத்திறமையின்மை ஏற்படுத்திய நெருக்கடிகள். குழப்பங்கள், ரஷ்யாவை வீழ்ச்சியில் தள்ளின. மக்கள் வறுமையில் அவதிப்பட்டார்கள்.
ருஸ்ஸோ-ஜப்பானியப் போரில் தொடர்ந்து சண்டையிடுவதால் ராணுவ வீர்ர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். இனியும் சண்டை வேண்டாம் என்று மன்னரிடம் ஆலோசகர் கவுண்ட் செர்ஜியஸ் சொல்கிறார்.
மன்னரோ தனக்குப் பெருமையும் கௌரவமும் வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து சண்டையிடச் சொல்கிறார். இதில் லட்சக்கணக்கான ராணுவ வீர்ர்கள் இறந்து போகிறார்கள்.
நிக்கோலஸின் மாமா, நிக்கோலாஷா என்ற புனைப்பெயர் கொண்ட கிராண்ட் டியூக் நிக்கோலஸ், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் வைக்கிறார். மேலும் ரஷ்ய மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக ஏங்குகிறார்கள். அதை அனுமதிக்க வேண்டியது மன்னரின் கடமை என்கிறார். இதே கருத்தை ஜார் மன்னரின் அன்னையும் சொல்கிறார். ஆனால் ஜார் அதனை ஏற்கவில்லை.
1904 ஆம் ஆண்டில், அலெக்சாண்ட்ரா தனது மகன் அலெக்ஸியைப் பெற்றெடுத்தார். அவனுக்குப் பிறப்பிலே ஹீமோபிலியா (ரத்தக்கசிவு நோய் ) இருப்பதைக் கண்டறிகிறார்கள். உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் கூட ரத்தப்பெருக்கு அதிகமாகி விடுகிறது. ஆகவே அவனது உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ரஷ்யாவின் மாமன்னராக இருந்தாலும் மகனின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் முன்னால் மன்றாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அலெக்சியின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று அரண்மனைக்கு வருகிறார் மதரு கிரிகோரி ரஸ்புடின். இதற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கிறார். அலெக்ஸின் உடல் நலம் தேறுகிறது. இந்த அற்புதத்தைக் கண்ட அலெக்ஸாண்ட்ரா தனது குருவாக ரஸ்புடினை ஏற்றுக் கொள்கிறாள்.
மிதமிஞ்சிய குடி, விருந்து, பெண்கள் என உல்லாசமான வாழ்க்கையை அனுபவிக்கும் ரஸ்புடின் அரண்மனை விவகாரங்களில் தலையிடுகிறான். ராணியைப் பதுமையைப் போல ஆட்டி வைக்கிறான். இதை ஜார் மன்னர் விரும்பாத போதும் ராணியின் பொருட்டு அனுமதிக்கிறார்.
ஃபாதர் ஜார்ஜி கபோன் போராடும் மக்களைக் குளிர்கால அரண்மனையை நோக்கி அழைத்து வருகிறார். அமைதியான வழியில் போராட முயன்ற மக்களின் மீது காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட அந்த நிகழ்வை ஜார் மன்னர் அறிந்திருக்கவேயில்லை என்று படத்தில் காட்டுகிறார்கள்.
குளிர்கால அரண்மனையை நோக்கி மக்கள் திரண்டு வரும் காட்சி படத்தில் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் இயக்குநர் டேவிட் லீனின் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆகவே சில காட்சிகள் டேவிட் லீன் படத்திலிருப்பது போலவே உருவாக்கபட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்தக் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட லெனின் தனது தோழர்களுடன் புரட்சிக்கான திட்டமிடுதலை மேற்கொள்கிறார். படத்தில் டிராட்ஸ்கிக்கும் லெனினுக்குமான கருத்துவேறுபாடுகளும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் நடைபெறும் நிகழ்வுகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளன.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிக்கோலஸ் தனது குடும்பத்துடன் லிவாடியா அரண்மனையில் விடுமுறையைக் கழிக்கிறார். அப்போது அலெக்ஸி விளையாட்டுச்சிறுவன். அவன் உயரமான இடத்தில் ஏறி நிற்பதைக் கண்ட மன்னர் எங்கே கிழே விழுந்து மறுபடி ரத்தக்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து சப்தமிடுகிறார். அலெக்ஸியை பாதுகாப்பாகக் கிழே இறங்க வைக்கிறார்கள்.

ரஸ்புடினின் நடவடிக்கைகள் பற்றிய ரகசிய அறிக்கையை ஜார் மன்னர் வாசிக்கிறார். அவரை அரண்மனையை விட்டுத் துரத்திவிடும்படியாக உத்தரவிடுகிறார். அதன்படி ரஸ்புடினை மிரட்டி அரண்மனையை விட்டு வெளியே துரத்துகிறார்கள். அவன் தனது சொந்த ஊரான சைபீரியாவிற்குப் புறப்படுகிறான்.
எதிர்பாராத விதமாக மீண்டும் அலெக்ஸிக்கு இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இப்போது ரஸ்புடினால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று அலெக்ஸாண்ட்ரா நம்புகிறார். உடனடியாக ரஸ்புடினை திரும்ப அழைத்து வரும்படி உத்தரவிடுகிறாள். ஆனால் அதை ஜார் மன்னர் விரும்பவில்லை.
1913 ஆம் ஆண்டு ரோமானோவ் குடும்பத்தின் முந்நூறு ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாட்ட ரஷ்யா முழுவதும் மன்னரும் ராணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். வழிமுழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.
முதலாம் உலகப் போர் தொடங்கும் போது , ஜெர்மன் எல்லையில் இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தை முழுமையாக அணிதிரட்டும்படியாக ஜார் கட்டளையிடுகிறார். குடும்ப ரீதியாக ஜெர்மனி அரசு உறவு கொண்டது என்பதால் நட்புக்கரம் நீட்டுகிறார். ஆனால் ஜெர்மனி போரைப் பிரகடனம் செய்வதன் மூலம் பதிலடி கொடுக்கிறது. ராணி அலெக்சாண்ட்ராவை ஒரு ஜெர்மன் உளவாளி என்று பொதுமக்கள் நம்புவதாக ராணியின் அன்னை தெரிவிக்கிறார்.

அலெக்ஸாண்ட்ராவை தனது பிடியில் வைத்துக் கொண்ட ரஸ்புடின் சுகபோகங்களை அனுபவிக்கிறான். ரஸ்புடினின் மோசமான செயல்களைப் பற்றி அறிந்த கிராண்ட் டியூக் டிமிட்ரி மற்றும் இளவரசர் பெலிக்ஸ் யூசுபோவ் இணைந்து மதுவில் விஷம் கலந்து ரஸ்புடினை குடிக்க வைத்து கொலை செய்கிறார்கள். இந்த மரணம் அலெக்ஸாண்ட்ராவின் மனநிலையைப் பாதிக்கிறது. 1917ல் ரஷ்யப்புரட்சி நடைபெறுகிறது. ஜார் ஆட்சி வீழ்கிறது.
ஜார் மன்னர் தனது குடும்பத்துடன் சைபீரியாவில் உள்ள டோபோல்ஸ்கிற்கு நாடுகடத்தப்படுகிறார் அவர் இங்கிலாந்திடம் அரசியல் தஞ்சம் வேண்டுகிறார். ஜார் மன்னரும் அவரது மகள்களும் டன்ட்ராவில் ஒரு விவசாயி வீட்டில் எளிய வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். வெளியே காவல் இருக்கும் வீர்ர்கள் இளரவசியைக் கேலி செய்கிறார்கள். இதைத் தடுக்க முயன்ற அலெக்ஸியை தாக்குகிறார்கள். ஜார் மன்னர் மற்றும் அரச குடும்பத்திற்கு என்ன ஆனது என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
ஜார் மன்னர் நல்லவர் போலவும் பராம்பரிய பெருமையைக் காப்பாற்றவே தவறான செயல்களை மேற்கொண்டது போலவும் படம் சித்தரிக்கிறது. அது உண்மையில்லை. வரலாறு சித்தரிக்கும் ஜாரின் கதை வேறுவிதமானது. அது போலவே ரஷ்யப்புரட்சியைத் தற்செயல் விளைவு போலவே படம் சித்தரிக்கிறது. அதுவும் உண்மையில்லை.
ஆடம்பரமான வாழ்க்கையை அரண்மனையில் வாழ்ந்த போதும் மன்னரும் அவரது குடும்பமும் உண்மையான அன்பு கிடைக்காமல் ஏங்குகிறார்கள். அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை. படத்தின் முடிவில் அவர்கள் எளிய விவசாய குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நாட்களில் தான் பரஸ்பர அன்பை உணருகிறார்கள்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஜார் மன்னரிடம் அவரது தவறான முடிவுகளால் எவ்வளவு பேர் இறந்து போனார்கள் தெரியுமா என்று விசாரணை அதிகாரி கேட்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தான் செய்த குற்றங்களைப் பற்றி எதுவும் அறிந்திராமல் இருப்பது மோசமானது. ஏழு மில்லியன் மக்களைக் கொன்றிருக்கிறீர்கள். அது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் என்று கூறி அவருக்குத் தண்டனை விதிக்கிறார்கள்.
அரண்மனை விருந்தில் தன்னை அவமதிக்கிறார்கள் என்று உணர்ந்த அலெக்சாண்ட்ரா தனியே அமர்ந்திருக்கும் காட்சியும், மகன் பிழைத்துக் கொண்டான் என்பதை அறிந்து அவனைக் காண வரும் ஜார் மன்னரின் காட்சியும். அரண்மனை வாழ்க்கை இழந்த நிலையில் இளவரசிகள் சைபீரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சியும் மறக்க முடியாதவை.
அலெக்ஸாண்ட்ராவாக ஜேனட் சுஸ்மான் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த வேஷத்தில் முதலில் ஆட்ரி ஹெப்பன் நடிப்பதாக இருந்தது என்கிறார்கள். ஆட்ரியிடம் காணப்படும் வெகுளித்தனம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது.
A strong man has no need of power, and a weak man is destroyed by it. என்று ஒரு காட்சியில் ஜார் மன்னர் சொல்கிறார். அது அவருக்கே பொருந்தமானது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

