பிரிவின் மஞ்சள் நிறம்
ஆயில் பெயிண்டிங் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் THE PEASANTS. இந்தப் படத்திற்காக 40,000 கையால் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் (Władysław Reymont ) நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் ஹக் வெல்ச்மேன், ஓவிய மேற்பார்வையாளர் பிஸ்கெர்கா பெட்ரோவிச்.
ஓவியர் வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கையைப் பற்றிய Loving Vincent திரைப்படத்தை இயக்கியவர் ஹக் வெல்ச்மேன். அதைவிடவும் சிறப்பாக இப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

நடிகர்களைக் கொண்டு காட்சிகளை நேரடியாகப் படமாக்கப்பட்ட பின்பு அதே பிரேம்களைத் தனித்தனி ஓவியமாக வரைவதே ஆயில் பெயிண்டிங் அனிமேஷனாகும்.
ஒரு பிரேமினை வரைவதற்குக் குறைந்தது 5 மணி நேரமாகும்.
போலந்து, செர்பியா, லிதுவேனியா மற்றும் உக்ரைனில் உள்ள நான்கு அனிமேஷன் ஸ்டுடியோக்களில் ஏறக்குறைய 100 ஓவிய அனிமேட்டர்கள் இதில் பணியாற்றியிருக்கிறார்கள்.
கொரோனா மற்றும் உக்ரேன் போர் காரணமாக நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆயினும் இடைவிடாத உழைப்பின் காரணமாகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

படம் நான்கு பருவகாலங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வண்ணங்கள். காட்சிக் கோணங்கள். உடைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் மாறுகின்றன. போலந்தின் புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டு படத்தின் காட்சிகளை வரைந்திருக்கிறார்கள். திரையில் புகழ்பெற்ற ஓவியங்கள் உயிர்பெற்று இயங்குவதைக் காணுவது பரவசமளிக்கிறது
போலந்து கிராமமான லிப்ஸில் கதை நிகழ்கிறது. ஜக்னா என்ற இளம்பெண் மீது இருவர் ஆசைப்படுகிறார்கள். ஆன்டெக் என்ற திருமணமான விவசாயியை ஜக்னா காதலிக்கிறாள். கிராமத்தின் பணக்கார விவசாயியான ஆன்டெக்கின் தந்தை போரினா அவளை அடைய விரும்புகிறார். இதற்காக ஜக்னாவிற்கு மூன்று ஏக்கர் நிலம் பரிசாக அளிப்பதாக அவளது அம்மாவிடம் வாக்குறுதி அளிக்கிறார்.

ஜக்னாவிற்கு விருப்பம் இல்லாத போதும் அம்மாவின் கட்டாயத்தால் திருமணம் நடைபெறுகிறது.
இதனை விரும்பாத ஆன்டெக் தந்தையோடு சண்டையிடுகிறான். அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார் தந்தை.
திருமணத்திற்குப் பிறகும் ஆன்டெக் மீதான காதலை ஜக்னா தொடருகிறாள். போரினா இதனைக் கண்டிக்கிறார். ஆயினும் ரகசியமாக அவர்களின் உறவு தொடருகிறது.
இந்த நிலையில் மரம்வெட்டுவதில் ஏற்படும் பிரச்சனையின் போது போரினா வெளியாட்களால் தாக்கப்படுகிறார். அவரை ஆன்டெக் காப்பாற்றுகிறான். இந்தச் சண்டையில் தந்தையைத் தாக்க முயன்றவனை ஆன்டெக் கொன்றுவிடுகிறான். அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
காயம்பட்ட போரினா படுக்கையில் நாட்களைக் கழிக்கிறார். அவர் தனது சொத்து முழுவதையும் மகளுக்கு அளித்துவிட்டு ஜக்னாவை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார். ஆன்டெக் சிறையிலிருந்து திரும்பி வருகிறான். ஜக்னாவோடு ஒன்று சேருகிறான். ஆனால் ஊர்மக்கள் அதை விரும்பவில்லை. ஜக்னாவை ஊரைவிட்டுத் துரத்த முடிவு செய்கிறார்கள். இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளே படத்தின் கடைசிப்பகுதி.

ஜக்னாவைச் சுற்றியே கதை நடக்கிறது. போலந்து கிராமங்களின் பேரழகான இயற்கைக் காட்சிகளும், விவசாயக்குடும்பங்களின் வாழ்க்கை, சடங்குகள். விழாக்களைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
குறிப்பாக ஜக்னாவின் திருமணத்தின் போது நடைபெறும் நடனக்காட்சி அபாரம். அது போலவே மதுவிடுதியில் ஆன்டெக்கோடு ஜக்னா நடனமாடும் காட்சி. அறுவடை நடப்பது, பனிக்காலத்தின் வருகை, ஜக்னா செய்யும் காகிதபறவைகள். அன்டக்கின் மனைவி ஹன்கா பசித்த தனது குழந்தைகள் பற்றிப் பேசுவது, குளிர்காலப் புயல் வருவது போல அழகான, மறக்க முடியாத காட்சிகள் உள்ளன.

போலந்து ஓவியர் ஜோசப் மரியன் செலோமோன்ஸ்கி, ஜீன்-பிரான்காயிஸ் மில்லட் மற்றும் பிரெஞ்சு இயற்கை ஓவியர் Jules Breton, வரைந்த ஓவியங்களை அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பிரெட்டனின் காலிங் இன் தி க்ளீனர்ஸ் ஓவியம் திரையில் உயிர்பெற்று விரிவது அபாரமானது.
பருவ காலம் மாறுவது படத்தில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கோடையின் வருகை. அதன் மஞ்சள் வண்ணம். காட்சிக்கோணங்கள் மாறுவது சிறப்பாக உள்ளது. இது போன்ற ஆயில்பெண்டிங் அனிமேஷன் உருவாக்கத்தில் குளோசப் காட்சிகளைத் துல்லியமாக, வெகு கவனமாக வரைய வேண்டும். படத்தினை இதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட THE PEASANTS. முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது. சினிமாவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான சாட்சியமாக உள்ளது.
ஜக்னாவின் அம்மா ஒரு காட்சியில் மகளிடம் சொல்கிறார்
“காதல் சில காலத்தின் பின்பு மறைந்துவிடும். ஆனால் நிலம் அப்படியில்லை. அது என்றைக்கும் அப்படியே இருக்கும்“
இது போலவே ஜக்னாவை காதலிக்கும் ஆன்டெக் அவளைப் புனித நிலம் என்றே அழைக்கிறான்.
ஒரு காட்சியில் அவர்கள் வைக்கோலுக்குள் ஒளிந்து கொண்டு காதலிக்கிறார்கள். அதை அறிந்த போரினா வைக்கோற்போருக்கு தீயிட்டுக் கொளுத்துகிறார், சுற்றிலும் எரியும் நெருப்பை மறந்து காதலர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள். ஜக்னாவின் வண்ணமாகச் சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்துள்ளது தனிச்சிறப்பு.

படத்தைக் காணும் போது தாமஸ் ஹார்டி எழுதிய Tess of the d’Urbervilles நாவல் நினைவிற்கு வந்தது. இதே போன்ற கதைக்களன் கொண்ட நாவலது. 1979ல் ரோமன் போலன்ஸ்கி அதைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.
1924 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் The peasants என்ற அவரது நாவல் நான்கு-தொகுதிகளுடன் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் திரை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
