சிறிய மச்சம்
கவாபத்தாவின் “The Mole” சிறுகதையில் கணவனைப் பிரிந்து வாழும் சயோகோ என்ற இளம் பெண் தனது மச்சத்தைப் பற்றிய நினைவுகளைக் கடிதமாக எழுதுகிறாள்.

நான் மச்சத்தைப் பற்றி ஒரு கனவு கண்டேன் எனக் கதை துவங்குகிறது

ஒருவர் ஏன் மச்சத்தைக் கனவு காண வேண்டும். என்ன கனவாக இருக்கும் என்று யோசிக்கையில் கதை கனவைப் பற்றியதாக இல்லாமல் மச்சம் உள்ள பெண் அதை எப்படி உணருகிறாள் என்பதைப் பற்றியதாக விரிவு கொள்கிறது.
தனது தோள்பட்டைக்கு மேல் வலது பக்கத்தில் உள்ள அந்த மச்சத்தைச் சதா தடவி கொண்டேயிருப்பது அவளது பழக்கம். சிறுவயதில் இருந்து தொடரும் இந்தப் பழக்கத்தை அவளது அம்மா கண்டித்திருக்கிறாள். ஆனால் அவளால் அதைக் கைவிட முடியவில்லை.
அந்த மச்சத்தைத் தொடுவதன் மூலம் அவள் தனது பால்ய நாட்களுக்குத் திரும்புவது போல உணருகிறாள்.
திருமணத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை அவளது கணவன் கண்டிக்கிறான். இந்தச் சிறிய விஷயம் காரணமாக அவர்களுக்குள் சண்டை வருகிறது.
அவனது கோபம் அவளுக்குத் திருமண வாழ்க்கை என்பது சுதந்திரமனதானதில்லை. தன் விருப்பத்திற்கு அங்கே இடமில்லை என்று எண்ணச் செய்கிறது. ஆகவே தன்னைத் திட்டும் கணவனை வெறுக்கிறாள். நேசிப்பவர்களின் கோபம் நம்மை அதிகம் வருத்தமடையச் செய்கிறது என்று கதையில் கவாபத்தா சொல்கிறார்.
அவளது இந்தப் பழக்கத்தின் மீதான கணவனின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒரு நாள் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறான். அதை அவளால் ஏற்க முடியவில்லை. மணஉறவில் விரிசல் ஏற்படுகிறது. கணவனைப் பிரிந்து செல்கிறாள்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு கடிதம் எழுதுகிறாள். அதில் தனது கடந்த செயலை மறுபரிசீலனை செய்து கொள்கிறாள். ஆனால் மச்சத்தைத் தடவும் பழக்கத்தைத் தவறாக அவள் நினைக்கவேயில்லை. அது ஒரு சிறிய மகிழ்ச்சி. சுதந்திரம். அதை ஏன் தடுக்க நினைக்கிறார்கள் என்றே நினைக்கிறாள்.
அவளது மச்சம் குறித்து அவனுக்குக் குறை எதுவுமில்லை. மாறாக இந்தச் சிறிய பழக்கத்தை ஏன் மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் என்று தான் எரிசசல் அடைகிறான்.
திருமணம் என்பது பழக்கத்தைக் கைவிடவும் மாற்றிக் கொள்ளவும் வேண்டிய பந்தம். இதில் ஆண் பெண் இருவரும் பாதிக்கபடுகிறார்கள். ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோபம் அடைகிறார்கள். கட்டாயத்தால் மாற்றிக் கொண்டபின்பும் அதைப் பற்றி மனக்குறை கொண்டிருக்கிறார்கள்.

கதையில் வரும் சயோகோவிற்கு அந்த மச்சம் அவளது தன்னுணர்வின் அடையாளம் போலிருக்கிறது. அவள் மச்சத்தைத் தொடும்போது மீண்டும் ஒரு குழந்தையாக மாறுவது போல் உணர்கிறாள் , அவளுடைய கணவனிடமிருந்து அதே அன்பு அவளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை. கணவன் தனது மச்சத்தை தொட வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். அதை அவன் வெறுப்பது தன்னை வெறுப்பதாகவே நினைக்கிறாள்.
உடலைப் பற்றிய கவனமும் குற்றவுணர்வும் ஆண்களிடம் ஒருவிதமாகவும் பெண்களிடம் ஒருவிதமாகவும் வெளிப்படுகின்றன. தனது உடலின் குறையாக எதையோ ஒன்றை பெண் நினைக்கிறாள். அதைப் பற்றிச் சதா கவலை கொள்கிறாள். அதைப் பற்றிய பிறரது பேச்சினை கோவம் கொள்கிறாள்.
தனது அன்பை வெளிப்படுத்த தெரியாத ஒரு இளம் பெண்ணின் வெளிப்பாடாக மச்சத்தைத் தொடுதலைப் புரிந்து கொள்ளலாம்
கதையில் மச்சம் என்பது புரிந்து கொள்ள முடியாத, ஒரு மொழியாக மாறிவிடுகிறது.. குடும்ப உறவில் விரிசல் ஏற்படுத்த இது போன்ற சிறிய விஷயங்கள் கூடக் காரணமாகிவிடுகின்றன . அவளது தீர்க்கப்படாத வருத்தங்கள் தான் கடிதமாக மாறுகிறது.
யாசுனாரி கவாபத்தாவிற்கு இப்படி ஒரு மச்சம் இருந்திருக்கிறது. அதை அவர் மறைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். அவரது புனைவில் இப்படி மச்சம் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
நீர்வண்ண ஓவியம் போல கதையை எழுதியிருக்கிறார் கவாபத்தா. இந்தக் கதையை வாசிக்கும் போது இதில் என்ன இருக்கிறது என்றே ஒருவர் நினைக்க கூடும். ஆனால் சற்று யோசிக்கும் போது இது மச்சம் பற்றிய கதையில்லை. மாற்றிக் கொள்ள முடியாத பழக்கம் பற்றியது. தனக்கு மகிழ்ச்சி தருவது ஏன் பிறருக்கு வெறுப்பளிக்கிறது என்பதைப் பற்றியது எனப் புரியும். பெரிய லென்ஸ் ஓன்றின் மூலம் மச்சத்தைக் காணுவதைப் போன்ற அனுபவத்தைக் கதை தருகிறது. நாம் காணுவது மச்சத்தை மட்டுமில்லை. திருமண உறவின் புதிரை. அதன் மிஞ்சியிருக்கும் நினைவுகளை.
***
‘’
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
