தூதுவன்

காஃப்காவின் அரசனின் தூதுவன் என்ற குறுங்கதையில் சாவுப்படுக்கையில் உள்ள மன்னர் ஒரு ரகசிய செய்தியை தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை வரவழைக்கிறார். அவனை அருகில் மண்டியிடச்செய்து காதோடு காதாகச் செய்தியைச் சொல்கிறார்

அவன் தான் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறானா என மன்னர் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிறார்.

அந்த அறையிலிருந்து தூதுவன் வெளியேறுவதற்குள் மன்னர் இறந்துவிடுகிறார்.

ரகசிய செய்தியோடு தூதுவன் தனது பயணத்தைத் துவங்குகிறான். அரண்மனையில் திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வெளியேறி போக முடியவில்லை. முட்டிமோதி தனக்கான வழியை ஏற்படுத்தி வெளியே போக முயலுகிறான். அவனது அடையாள முத்திரையைக் காட்டி வழியை உண்டாக்கி கொள்கிறான். ஆனால் முடிவில்லாத மக்களின் கூட்டத்திலிருந்து அவனால் வெளியேறி போக முடியவில்லை.

முடிவில்லாத அறைகள். முடிவில்லாத மக்கள் கூட்டம் எனத் தடை நீண்டு போய்க் கொண்டேயிருக்கிறது.

தூதுவன் தனது பலத்தைப் பயன்படுத்தி அரண்மணையின் ஒவ்வொரு அறையாகக் கடந்து வெளியேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் கடைசி வழியை அடைய முடியவில்லை

இந்த வெளியேறும் பயணம் முடியவேயில்லை. ஆண்டுகளாக அவன் வெளியேறி போய்க் கொண்டேயிருக்கிறான். முக்கியமான செய்தியோடு செல்லும் அவன் தனக்கான பாதையைக் கண்டுபிடிக்கப் போராடுகிறான். அந்தப் பயணம் கடைசி வரை முடிவு பெறாமல் நீள்கிறது.

பேரரசர் சொன்ன ரகசிய செய்தி என்ன.

முடிவில்லாத தடைகளைத் தாண்டி அவன் யாருக்காக அந்தசெய்தியை கொண்டு செல்கிறான்.

எதுவும் கதையில் விளக்கபடவில்லை. ஆனால் புதிர்பாதை ஒன்றில் சிக்கிக் கொண்டுவிட்ட அந்தத் தூதுவனை நம் காலத்தின் மனிதனாகக் காஃப்கா அடையாளப்படுத்துகிறார்

அந்தப் பேரரசர் இடத்தில் கடவுளை வைத்துக் கொள்வோம் என்றால் கதை இன்னொரு விதமாகப் புரிய கூடும்.

அந்தத் தூதுவனுக்குப் பெயர் கிடையாது. மன்னருக்கும் பெயர் கிடையாது. காலம் உருண்டோடும் வரியில் தான் கதை தனது இறகை விரிக்கத் துவங்குகிறது. முடிவில்லாத பயணம் குறியீட்டுதன்மையை அடைகிறது.

மன்னர்கள் இல்லாத காலத்திலும் தூதுவர்கள் தனது பணியைத் தொடருகிறார்கள். இன்று நாம் யாரோ ஒருவரின் தூதுவராக மாறிக் கொண்டிருக்கிறோம். அல்லது செயல்படுகிறோம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2024 04:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.