எமர்சன் / சிறிய அறிமுகம்.

அமெரிக்கக் கவிஞர், இயற்கையியலாளர் ரால்ப் வால்டோ எமர்சன் பற்றிச் சிறப்புரை  நிகழ்த்த இருப்பதாக அறிவித்த நாளிலிருந்து பலரும் அவரைப் பற்றி ஏன் இப்போது சிறப்புரை ஆற்றுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்

இன்றைய வாசகர்கள் பலருக்கும் ரால்ப் வால்டோ எமர்சன் அறிமுகமாகியிருக்கவில்லை.  அவர் 200 வருஷங்களுக்கு முற்பட்டவர். எமர்சனின் முக்கியப் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

வி.ஆர்.எம் செட்டியார் மொழியாக்கம் செய்த விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்) மற்றும் அறிமுகநூலான எமர்ஸன் சிந்தனைகள் ஜெயமோகன் மொழியாக்கம் செய்த இயற்கையை அறிதல் என்ற நூலும் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது.

ஆனால் ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய படைப்புகள் 9 தொகுதிகளாக 4000 பக்கங்களும் மேலாக உள்ளன.

எமர்சனின் உரைகள் மற்றும் கட்டுரைகள் இன்றும் பேசுபொருளாக இருக்கின்றன. எமர்சனின் வழிகாட்டுதலிலே தோரூ உருவானார். வேர்ட்ஸ்வொர்த். கால்ட்ரிஜ், விட்மன் போன்ற கவிஞர்கள் அவரது தோழர்களாக இருந்தார்கள்.

எமர்சன் முன்வைத்த ஆழ்நிலைவாதம் மற்றும் தத்துவப் பார்வைகள் குறித்துப் போர்ஹெஸ் விரிவாக எழுதியிருக்கிறார். அவர் அமெரிக்காவின் நிகரற்ற கவி என்றே எமர்சனை மதிப்பீடு செய்கிறார்

எனது கல்லூரி நாட்களில் எமர்சனை வாசித்தேன். அவரை விடவும் தோரூவிடம் அதிக நெருக்கம் கொண்டேன். அமெரிக்கா சென்ற போது தோரூ வசித்த வால்டனுக்குச் சென்று வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக எமர்சனைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் முன்வைக்கும் கருத்துகள். அவரது மொழிநடை மற்றும் கலை குறித்த பார்வை எனக்கு நெருக்கமாக உள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் மேலி ஆலிவர் எமர்சன் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் எமர்சனின் முக்கிய அம்சம் அவர் இயற்கை மற்றும் சமூகப், பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் ஆராய்கிறார்: எளிய ஆலோசனைகளை வழங்குகிறார் – நாமே விஷயங்களைத் தேடச் சொல்கிறார். அவர் பிடிவாதமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நாம் எதையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்பதே என்கிறார் மேலி ஆலிவர்

நான் ஜென் வழியாக இயற்கை பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்திக் கொண்டவன். ஆகவே அந்த நோக்கில் எமர்சனை வாசிப்பது என அவரது முக்கியப்படைப்புகளை ஒருசேரப் படித்தேன்

எமர்சன் தனது காலகட்டத்தின் குரலாகவும் விளங்கியிருக்கிறார். ஒட்டுமொத்த மனிதவாழ்வு மற்றும் இயற்கை குறித்த ஆழ்ந்த தேடலில், ஆய்வில் ஈடுபட்டவராகவும் இருந்திருக்கிறார்

எமர்சன் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை அவரது சில பதில்கள் எனக்கு ஏற்புடையதில்லை. ஆனால் இயற்கையியலாளர். சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியவர். அறிவார்ந்த கவிதைகள் எழுதியவர். ஆன்மவிடுதலைப் பற்றிப் பேசியவர் என்ற அவரது பன்முகத்தன்மை என்னைக் கவர்ந்தது.

எமர்சன் ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியை இன்றும் அமெரிக்காவில் காண முடிகிறது.

எமர்சனின் படைப்புகள் இயற்கை, சமயம், கலை, காலம், சுதந்திரம், மனித மதிப்பீடுகள் மற்றும் வாழ்வில் சுகதுக்கங்களை எதிர்கொள்வது. போன்றவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.

இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நாம் ஏன் கவித்துவ உணர்வு கொள்கிறோம் என்று கேட்கிறார் எமர்சன்.. பெரும்பாலான மக்கள் சூரியனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. சூரியன் குழந்தைகளின் கண்களில் மட்டுமின்றி இதயத்திலும் ஒளிர்கிறான் என்கிறார் எமர்சன். இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு அகவுணர்வும் புறவுணர்வும் சரியாகப் பொருந்திப் போக வேண்டும் என்கிறார்.

நேற்று மகிழ்ச்சியைத் தந்த காட்சி இன்றைக்கு ஏன் மனச்சோர்வை உருவாக்குகிறது. அப்படியானால் வெளியே காணும் இயற்கைக் காட்சிகள் தன்னளவில் மகிழ்ச்சியை உருவாக்கவில்லையா. மனிதன் தான் அப்படி உணருகிறானா என்று எமர்சன் ஆராய்கிறார்.

பண்டைய கிரேக்கர்கள் உலகத்தை {kosmos}, அழகு என்று அழைத்தனர். இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அதன் அழகு தான் முதன்மையாகப் பேசப்படுகிறது. இயற்கை என்பதன் வரையறை என்ன. அழகு என்பது நிரந்தரமானதா எனக் கேட்கிறார் எமர்சன்

ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திரங்கள் தோன்றும் என்றால் மனிதர்கள் அதை இவ்வளவு விரும்புவார்களா என்று கேட்கிறார் எமர்சன்.

கட்டிடக்கலை என்பது இசையின் உறைந்தவடிவம் என்ற கதேயி.ன் கருத்தாக்கத்தைச் சுட்டிக்காட்டும் எமர்சன், கட்டிடக் கலைஞர் ஒரு இசைக்கலைஞராக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்

கவிதை மற்றும் கலைகள் பற்றிய எமர்சனின் பார்வை தனித்துவமானது. மொழியின் ஒவ்வொரு சொல்லும் கவிதையே. அகராதியை வாசிக்கும் போது அதை உணர முடியும் என்கிறார்.

டார்வினுக்கு முன்பாகவே எமர்சன் பரிணாமக்கோட்பாடு பற்றிப் பேசியிருக்கிறார். அறிவியல்பூர்வமாகச் சிந்தனை செய்திருக்கிறார். அடிமை வணிகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். மனித வாழ்வில் மதம் மற்றும் கடவுளின் பங்கு பற்றி  விவாதித்திருக்கிறார்.

எமர்சன் பற்றிய எனது உரை இயற்கை பற்றிய நமது பார்வை எப்படி காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதையும், கலையின் நோக்கம் மற்றும் செயல்பாடு இன்று எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் மையமாகக் கொண்டு ஹெராக்ளிடஸ் ஷேக்ஸ்பியர், தோரூ, கவிஞர் வேட்ர்ஸ்வொர்த் கவிஞர் மேரி ஆலிவர், தத்துவ அறிஞர் பியுங்-சுல் ஹான். ஜப்பானிய கலைஞர் ரிக்யூ மற்றும் ஒவியர் வான்கோ வழியான தேடலாக அமையும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 07:15
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.