குற்றமுகங்கள் -8 லாந்தம் எனும் இரட்டை தழும்பன்

1838ம் ஆண்டின் கிறிஸ்துமஸிற்கு முந்திய நாள் காலையில் ஜோசப் லாந்தம் ஹோல்போர்னின் கேரி தெருவில் இருந்த தி செவன் ஸ்டார்ஸ் பப்பிற்குக் குடிப்பதற்காகச் சென்றான். அப்போது அவனுக்கு வயது முப்பத்திரெண்டு.

அவன் குட்டையாகவும், தடிமனாகவும், செம்பட்டை தாடியுடனும், சதைப்பற்றுள்ள முகத்துடனும் இருந்தான். லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிய ஒரே பப் அதுவே.

அந்த மதுவிடுதி போட்டிகளுக்குப் பெயர் போனது. குடிகாரர்களின் புதைகுழி என்று அதனை அழைத்தார்கள்.

ஜோசப் லாந்தம் நாய்களுக்கான கழுத்துபட்டிகளை விற்கும் தெருவோர விற்பனையாளன். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் குடிப்பதிலே செலவழித்துவிடுவான். அவனுக்கு ஆறு குழந்தைகள் இருந்தார்கள். அவரது மனைவி கிளாராவுக்குக் கண்பார்வை கிடையாது. அவனை விடவும் ஐந்து வயது மூத்தவள். அவளது அண்ணன் துணிகளுக்குச் சாயமிடும் பட்டறை வைத்திருந்தார். சாயமிட்ட துணிகளை அலசிப் போடும் வேலையைக் கிளாரா செய்து வந்தாள். கிளாராவின் அண்ணன் உதவியால் தான் லாந்தமின் குடும்பம் நடந்து வந்தது.

ஜோசப் லாந்தம் சேணம் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவன். ஆகவே சிறுவயதிலே தோல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தான். பதினாறு வயதில் அவனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. தினந்தோறும் மயங்கி விழும் வரை குடிப்பான். ஓட்டகச்சிவிங்கிகள் நின்று கொண்டு உறங்குவதைப் போதை மிகுதியில் விளக்குக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு லாந்தம் உறங்கிவிடுவதுண்டு.

ஐரீஷ் மதுவிடுதிகளில் பியர் குடிக்கும் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் எப்போதும் லாந்தம் தான் வெல்லுவான்.

மணற்கடிகாரத்தினுள் மேலிருந்து கீழாக விழுந்து கொண்டிருக்கும் மணல்துகளின் விதியைப் போன்றதே அவனது வாழ்க்கை.

ஒரு நாள் குடிச்சண்டை ஒன்றில் அவனது இடது புருவத்தில் ஒருவன் கத்தியால் வெட்டினான். அந்தக் காயம் ஆழமானது. பெரிய வடுவை உருவாக்கியது. லாந்தம் தனது புருவத்தைத் துண்டித்த ஆளுடன் சமரசம் செய்து கொண்டு அவனது தயவிலே குடிக்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் போதை மிகுதியில் ஒரு பாட்டில் மதுவிற்காகத் தனது வலது புருவத்தையும் வெட்டிக் கொள்ள லாந்தம் சம்மதம் தெரிவித்தான்.

இடது புருவத்தைத் துண்டித்தவனே வலது புருவத்தினையும் குறுவாளால் வெட்டினான். தனது காயத்தை மறந்து போட்டியில் வென்ற மதுவை லாந்தம் ஆசையாகக் குடித்துவிட்டு நடனமாடினான்.

போதை முற்றியபடி பின்னிரவில் அவன் தனது வீட்டுக்கதவை தட்டும் போது அவனது மனைவி “ஒரு நாள் நீ காற்றில் மறைந்து போய்விடுவாய்“ என்று சபித்தபடியே கதவை திறந்துவிடுவாள். அவளது பருத்த கைகளைப் பற்றிக் கொண்டு “பொன்னிற அழகியே“ என்று முத்தமிட முயலுவான். அவளோ “தொடாதே பன்றியே“ என்றபடியே அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்லுவாள்.

கிறிஸ்துமஸிற்கு முந்திய தினம் ஆப்பிரிக்கப் பயணி ஒருவனுக்கும் அவனுக்கும் மதுவிடுதியில் போட்டி உருவானது. அந்த ஆப்பிரிக்கப் பயணியை விடத் தன்னால் அதிகம் குடிக்க முடியும் என்பதை லாந்தம் நிரூபித்துக் காட்டினான். நான்கு வெள்ளிக்காசுகள் அவன் கையில் கிடைத்தன. தனது பிள்ளைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என நாணயங்களைத் தனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ஆனால் அன்று அவன் வீடு திரும்பவில்லை.

மிதமிஞ்சிய போதையில் விளக்குகம்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டபடி உறங்கிப் போனான். அவனை எப்படிக் கப்பலுக்குக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் லாந்தம் கண்விழித்த போது கிழக்கந்திய கம்பெனியின் சார்பில் இந்தியாவிற்குச் செல்லும் சிசிலியா கப்பலில் இருந்தான். போதையில் அது கனவா அல்லது நிஜமா எனப் புரியவில்லை. எழுந்து கொள்ள முயன்ற போது தனது கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதனை உதற முடியவில்லை. அவனைப் போலவே சிலர் அந்த இருட்டறையில் கட்டிப்போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. எங்கே கொண்டு செல்கிறார்கள் எனப் புரியாமல் குழப்பம் அடைந்தான்.

தனது கோபத்தை வெளிப்படுத்தப் பலமாகக் கூச்சலிட்டான். யாரும் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை

இரவில் ஒரு கிழவன் மரத்தாலான தள்ளுவண்டி ஒன்றை உருட்டியபடி அவர்களை நோக்கி வந்தான். தேவதை கதைகளில் அது போன்ற உருவம் குகையில் வசிப்பதாக லாந்தம் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறான். கிழவனின் மூக்குக் கிழிபட்டிருந்தது. கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். தள்ளுவண்டியிலிருந்து உலர்ந்த ரொட்டிதுண்டுகளில் ஒன்றையும் ஒரு குவளை மதுவையும் லாந்தமிற்குக் கொடுத்தான். பெரும்பசியும் நாவறட்சியும் கொண்டிருந்த லாந்தம் அந்த மதுவை குடித்துத் தீர்த்துவிட்டு இன்னும் வேண்டுமென்றான். கிழவன் அக்குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.

“இந்தக் கப்பல் எங்கே போகிறது“ எனக் கிழவனிடம் லாந்தம் கேட்டான்

“இந்தியா.“

“அது எங்கேயிருக்கிறது“

“எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே கோழிகள் பொன்முட்டையிடும் என்கிறார்கள்“.

“அது நிஜம் தான் என்றால் அந்தத் தங்க முட்டைகளைத் திருடிக் கொண்டு விடுவேன்“

“உன்னால் ஒருபோதும் வீடு திரும்ப முடியாது. குருட்டுவிதியால் உன் வாழ்க்கை எழுதப்பட்டுவிட்டது“ என்றபடி அந்தக் கிழவன் தனது மரவண்டியை தள்ளிக் கொண்டு சென்றான்.

பிடிக்காத பயணத்தில் தொலைவு நீண்டுவிடுகிறது. திடீரெனத் தனது வீடு நட்சத்திரங்களுக்கு அப்பால் எங்கோ மறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கல்கத்தா துறைமுகத்திற்குச் சிசிலியா கப்பல் வந்து நின்றபோது தொலைவில் தெரியும் கட்டிடங்களையும் எண்ணிக்கையற்ற காகங்களையும் ஒரே நேரத்தில் லாந்தம் பார்த்தான். அத்தனை காகங்களையும் கொல்ல வேண்டும் போலிருந்தது. துறைமுகத்தில் அவனது பெயரையும் அங்க அடையாளங்களையும் பதிவேட்டில் குறித்துக் கொண்டார்கள்.

இந்தியாவிலிருந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்குத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் அவனைப் போலப் பலரையும் இங்கிலாந்திலிருந்து கடத்திக் கொண்டு சிப்பாயாக மாற்றுகிறார்கள் என்பதை லாந்தம் தெரிந்து கொண்டான்.

இனி இங்கிலாந்து திரும்பிச் செல்வது எளிதானதில்லை. அதற்குப் பதிலாகச் சிப்பாயாக மாறி தங்க முட்டையிடும் கோழிகளை வேட்டையாடலாம் என முடிவு செய்து கொண்டான்.

லாந்தம் கல்கத்தாவின் இரண்டாவது ராணுவ பிரிவில் சேர்க்கப்பட்டான். சிப்பாய்களுக்கு அளிக்கபடும் கடுமையான உடற்பயிற்சிகளை அவனால் செய்ய முடியவில்லை. ராணுவ கட்டுபாடும் தண்டனைகளும் அவனை ஆத்திரப்படுத்தின. ராணுவத்திலிருந்து தப்பியோட முயன்று பிடிபட்ட போது அடியும் உதையும் கிடைத்தது. பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாகியது. வயிறு அவனது மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டது. எட்டுமாதப் பயிற்சிக்கு பின்பு அவன் சிட்டகாங் காலாட்படையின் பணிக்கு அனுப்பி வைக்கபட்டான்.

குல்னா என்ற வங்காளியின் நட்பு அங்கே தான் கிடைத்தது. அவன் தான் லாந்தமை குற்றம் செய்யத் தூண்டியவன். இருவரும் இணைந்து சிப்பாய்களுக்கான போர்வை, சோப் மற்றும் உணவுப் பொருட்களைத் திருடி விற்றார்கள். கிடைத்த பணத்தைக் கொண்டு சூதாடினார்கள். குடித்தார்கள். ஒரு நாள் அவர்கள் கண்டுபிடிக்கபட்டதோடு உயிரோடு புதைக்கும்படியாகத் தண்டனை விதிக்கபட்டார்கள்.

இருவரையும் ஆற்றோரப்பகுதியில் தலைமட்டும் வெளியே தெரிய மணலில் புதைத்தார்கள். லாந்தம் ஒரு நாயால் காப்பாற்றபட்டான் என்றார்கள். அதன்பிறகு அவனது வாழ்க்கை திசைமாறியது.

தன்னைப் போலவே இந்தியாவிற்கு ஏமாற்றி அழைத்துவரப்பட்ட சிப்பாய்கள் பலரையும் லாந்தம் ஒன்று சேர்ந்தான். அவர்கள் ஒரு குற்றகும்பலாக உருவெடுத்தார்கள்.

லாந்தனும் அவனது கும்பலும் தபால் அலுவலங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். அந்த நாட்களில் தபால் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு வசதி குறைவாக இருந்தது. ஆனால் சிப்பாய்களுக்கான சம்பளம் மற்றும் கட்டுமானங்களுக்கான பொருட்கள் வாங்குவதற்கான பணம் தபால் மூலமே அனுப்பி வைக்கபட்டது. ஆகவே லாந்தமும் அவனது கும்பலும் தபால் அலுவலகத்தை எளிதாகக் கொள்ளையிட்டுப் பணத்தை அள்ளிச் சென்றார்கள்.

லாந்தம் ஒவ்வொரு கொள்ளையின் போதும் அங்கிருந்த தபால்கள் எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்தினான். அதில் சில ராணுவ அதிகாரிகள் லண்டனில் வாழும் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதங்கள். அவற்றை எரிப்பதன் மூலம் தன்னைப் போலவே அவர்களும் மனைவி பிள்ளைகளிடமிருந்து துண்டிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுவே அவர்களுக்குத் தரும் தண்டனையாகக் கருதினான்.

தபால் அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கபட்ட பணத்தில் லாந்தம் தெருநாய்களுக்கு உணவளித்தான். நூறு நாய்கள் கொண்ட பெரிய நாய்கூட்டத்தையே உருவாக்கினான் என்றார்கள். நாய்களின் கால்களில் சலங்கை கட்டியிருந்தான். அவை மணியோசையுடன் தெருவில் அலைந்தன என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்

ஜாதவ்பூர் தபால் அலுவலகக் கொள்ளையிடச் சென்ற போது லாந்தம் பிடிபட்டான். அவனுடன் இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டார்கள். தான் அதுவரை கொள்ளையடித்த பணத்தைப் புதைமேடு ஒன்றினுள் புதைத்து வைத்துள்ளதாகச் சொல்லி காவலர்களைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றான். அவன் சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. உடைந்த கபாலம் மட்டுமே கிடைத்தது. அவனை மிரட்டிக் கேட்டதும் போதையில் அந்தப் பணத்தை எங்கே புதைத்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தான் லாந்தம்.

விசாரணை தேவையில்லை எனக் கர்னல் ஜேம்ஸ் முடிவு செய்து அங்கேயே அவர்களைத் தூக்கிலிட ஆணையிட்டார். தூக்கிலிடுவதற்கு முன்பாக அவன் குடிப்பதற்கு ஒரு குவளை மது வேண்டும் என்று கேட்டான். அவனது கோரிக்கையைக் கர்னல் ஏற்கவில்லை.

ஆறு வேப்பமரங்களில் ஆளுக்கு ஒருவராகத் தூக்கிலிட நிறுத்தப்பட்டார்கள். தூக்குகயிறு கிடைக்கவில்லை என்பதால் காளை மாடுகளைக் கட்டும் கயிற்றைப் பயன்படுத்தினார்கள்.

தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டும் போது லாந்தம் “தங்க முட்டையிடும் கோழி உண்மையில் இருக்கிறதா“ என்று கேட்டான்.

“நீ செத்து பாதாள லோகத்திற்குப் போ. அங்கே அந்தக் கோழியைக் காண முடியும்“ என்று தூக்கிலிடுபவன் கேலியாகச் சொன்னான்

லாந்தம் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கில் போடும் போது நின்றபடியே உறங்கிவிட்டான் என்றார்கள். ஒருவேளை லாந்தம் தனது கனவில் தங்க முட்டையிடும் கோழியைத் துரத்திக் கொண்டிருக்கக் கூடும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2025 02:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.