புவனாவின் சமையலறை
குறுங்கதை
••

கண்ணாடி முன்னால் நின்றபடியே ஸ்ரீநாத் சப்தமாகச் சொல்வது கேட்டது.
“ நேரமாகிருச்சி.. லஞ்ச் பேக் பண்ணிட்டயா.. சாப்பிட டிபன் ரெடியா“
புவனா ரசம் வைப்பதற்காகக் கொத்தமல்லி தழைகளும் தக்காளியும் எடுத்து சமையல்மேடையின் மீது வைத்திருந்தாள். பத்து நிமிஷம் இருந்தால் ரசம் ரெடியாகிவிடும். ஆனால் நேரமாகிவிட்டது என அவசரப்படுத்துகிறார். ரசம் வைக்க வேண்டாம் என முடிவு செய்தபடியே லஞ்ச்பாக்ஸில் அவசரமாகச் சோறு, குழம்பு, முட்டைக்கோஸ் பொறியல். வெண்டைக்காய் பச்சடியை, எடுத்து வைத்தாள். மோரை பாட்டிலில் ஊற்றினாள்.
சாப்பிடுவதற்காக இட்லியும் தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து டேனிங் டேபிளில் கொண்டு போய் வைத்தாள். ஸ்ரீநாத் தட்டைக் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.
அலாரம் அடித்து நின்று போனது போலானது வீடு. டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தபடியே விரல்நுனியால் தேங்காய் சட்னியை தொட்டு ருசித்தாள். உப்பு குறைவாக இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி பதினாலு வருஷங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு. ஸ்ரீநாத் விடுமுறை நாளில் கூட குறித்த நேரத்தில் தான் சாப்பிடுவார். ஆகவே அவசரமில்லாமல் ஒரு நாள் கூட அவளால் சமைக்க முடியவில்லை. அடிப்பிடித்துக் கொண்ட குக்கரை கழுவும் போது தனது வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதோ என அவளுக்குத் தோன்றும்.
ஸ்ரீநாத் படிப்பதற்காக வாங்கி வெறுமனே புரட்டிவிட்டு போட்ட தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேப்பர் படித்தாள். இனிமேல் தான் குளிக்க வேண்டும்.
பத்தரை மணிக்கு தான் டிபன் சாப்பிடுவாள். மதிய உணவைச் சாப்பிட மூன்று மணியாகிவிடும். அதுவும் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள். சில சமயம் ஜன்னலோரமாகத் தரையிலே படுத்து பகல் உறக்கம் கொள்வதும் உண்டு.
அன்றைய மாலையில் இரவுக்கான சப்பாத்தி செய்வதற்காகக் கோதுமை மாவு எடுக்கப் போகும் போது தக்காளியும் கொத்துமல்லியும் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே இருப்பதைக் கவனித்தாள். கழுவிய ஈரம் கூட மாறாமல் புதிதாக இருப்பது எப்படி என யோசித்தபடியே அதைச் சமையல் மேடையிலே விட்டுவைத்தாள். அன்றிலிருந்து அவளது சமையலறையினுள் ஒரு மாற்றம் உருவானது.
கீரையோ, காய்கறியோ எதுவும் சமையலறைக்குள் வந்துவிட்டால் வாடுவதில்லை. பழங்கள் கெட்டுப் போகாமல் இருந்தன. கறிவேப்பிலை வாடவில்லை. தோசை மாவு கெட்டுப்போகவில்லை. கேரட் நிறம் இழக்கவில்லை. தனது பிரிட்ஜில் இருந்த பொருட்கள் அத்தனையும் வெளியே எடுத்து போட்டுவைத்தாள். எதுவும் கெடவில்லை. எதுவும் அழுகிப்போகவில்லை. இந்த உலகிலிருந்து சமையலறை துண்டிக்கப்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது.
தனது சமையலறை இப்படி மாறிப்போனதை நினைத்துப் புவனா சந்தோஷம் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தின் அடுத்த நிலையைப் போல அவளுக்குச் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பாடிக் கொண்டிருப்பது கேட்கத் துவங்கியது.
டம்ளரின் பாடலும் கரண்டியின் பாடலும் வேறு வேறாக ஒலித்தன. கண்ணாடி பாட்டில்கள் கனத்த குரலில் பாடின. வெட்டுக்கத்தியின் குரல் விநோதமாகயிருந்தது. மாபெரும் இசைக்கூடம் ஒன்றினுள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.
வீட்டின் சமையலறை அற்புதத்தின் நிகழ்வெளியாக மாறிவிட்டதை ஸ்ரீநாத்திடம் சொன்ன போது அவன் கோபித்துக் கொண்டான். இதெல்லாம் அவளது பகற்கனவு எனத் திட்டினான். அத்தோடு இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என எச்சரிக்கையும் செய்தான். புவனா தலையாட்டிக் கொண்டான்.
ஒவ்வொரு நாளும் சமையலறைக்குள் நுழைந்தவுடன் அவள் பரவசமடைந்தாள். தேநீர்குவளையுடன் சேர்ந்து பாடினாள். தண்ணீர் பானையின் சங்கீதத்தைக் கேட்டு ரசித்தாள். வெண்கல ஸ்பூனின் உரத்த குரல் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதன் பிந்திய நாட்களில் தன்னிடம் ஒரு மாற்றம் உருவாகிவருவதை உணர்ந்தாள். சமையல் அறைக்கு வெளியே ஒரு வயதிலும் சமையலறைக்குள் இன்னொரு வயதிலும் இருப்பது போன்ற உணர்வது. அது நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு அவளுக்குச் சந்தோஷத்தையும் தந்தது. சங்கடத்தையும் தந்தது. சமையலறைப் பொருட்களைப் போலத் தானும் மாறாத இளமையுடன் இருக்க முடியுமா என ஏங்கினாள். அந்த ஏக்கம் வாடாத கீரைகளை, அழுகாத பழங்களைத் தொடும் போது வளர்ந்தது.
இந்த ஏக்கம் முற்றிய ஒரு நாளில் ஹோல்டரில் வைத்திருந்த ஒரு முட்டை தவறி தரையில் விழுந்து உடைந்து போனது. குனிந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய போது பச்சைக்காய்கறிகள் அவள் கண்முன்னால் வாட ஆரம்பித்தன. அவசரமாகத் தண்டுக்கீரை வாடிப்போனது. கறிவேப்பிலையின் இலைகள் உதிர்ந்து போயின. பாத்திரங்கள் வாய் மூடி மௌனமாகின.
வாடிக் கொண்டிருக்கும் காய்கறிகள் பழங்களிடம் என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள். பதிலற்ற மௌனம் சமையலறையில் நிரம்பியது.
அடுத்த நாளில் அது வழக்கமான சமையலறையாக மாறியது. புவனா அதைப் பற்றி ஸ்ரீநாத்திடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை
•
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

